Advertisement

“என்ன கண்ணா இன்னைக்கே கிளம்பணுமா. ஒரு வாரம் மருமக பொண்ண வெளிய எங்கயாவது கூட்டிட்டு போயிட்டு வந்துட்டு அப்புறம் போடா” என்க,

சத்யாவோ, “ம்மா…. என்ன இப்படி சொல்றீங்க. நான் முன்னாடியே சொன்னேன்ல இயர் எண்ட் வேலை இருக்கு. இன்னும் கொஞ்சம் நாள் கடந்து கல்யாணம் வச்சுக்கலாம்னு நீங்கதான் கேட்கல.

வேலை முடியட்டும் அப்புறம் ஒரு மாசம் ஜாலியா ஹனிமூன் போயிட்டு வரோம். அதுவரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க”.

ஜெகன், “டேய் மகனே நீ சொல்றது சரிதான். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும் இல்லையா. ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தாதானே நல்லா இருக்கும். கோயம்புத்தூர்ல இருந்துகிட்டு எங்கயும் இப்போ போக மாட்டேன்னு சொன்னா என்னடா அர்த்தம்.

பக்கத்துல இருக்கு கேரளா அங்க போயிட்டு வாங்க இல்லையா அட்லீஸ்ட் ஊட்டிக்காவது போயிட்டு வாங்கடா”

“ப்பா……”
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் சாட்டர் டே, சண்டே ரெண்டு நாள் மட்டுமாவது போயிட்டு வாங்க. நீங்க தங்கறதுக்கான எல்லா ஏற்பாடும் நான் ரெடி பண்றேன்” என்றுவிட்டு ஜெகன் எழுந்து சென்றுவிட,

தந்தை செல்வதை பார்த்தவன் மனைவியை பார்க்க அவளோ பூச்சாண்டிகிட்ட புடிச்சு குடுக்க போறேன்னு சொன்னா குழந்தைகள் விழிக்குமே அது போல் விழித்து கொண்டு நின்றாள். அதை கண்டு கடுப்பானவன் “மீனு என்னோட பைல் ஒன்னு பெட் மேல வச்சிட்டு வந்துட்டேன் போய் எடுத்துட்டு வா” என்று கூற,

‘சரி’ என்னும் விதமாக தலையசைத்து அவர்கள் அறை நோக்கி செல்ல,

சத்யாவும் விரைவாக சாப்பிட்டு முடித்தவன் கை அலம்பிவிட்டு அறைக்குள் சென்றான்.

மீனுவோ ‘இங்கதானே வச்சேன்னு சொன்னாரு காணோம்’ என்று தனக்குள் பேசி கொண்டிருக்க, அவள் பின் பக்கம் வந்து நின்றவனின் ஈர கரம் புடவை அணிந்திருந்த அவளது வெற்றிடையில் அழுத்தமாக பதிய பெண்ணவளோ விக்கித்து போய் நின்றாள்.

சிலையாக நின்றவளின் காது மடல் ஓரம் குனிந்தவன் “ஹே மீனு குட்டி. அப்பா ஊட்டி போயிட்டு வாங்கன்னு சொன்னதுக்கு எதுக்குடி அப்படி முழிச்ச. என்னை பார்த்தா உனக்கு பேய் மாதிரி இருக்கா” என்க, அவளிடம் பதில் இல்லை.

புருவம் சுருக்கியவன் அவள் முகத்தை பார்க்க அவளோ மன்னவன் தொடுகையில் திகைத்து அப்படியே நின்றிருந்தாள்.

மனையாளின் கவனம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவன் கரங்கள் இடையை அழுத்தமாக பிடித்து கிள்ள,

“ஆஆஆஆ……” என்ற அலறலோடு தன்னிலை அடைத்தவள் ஆணவனைவிட்டு விலகி நிற்க,

“என்ன மேடம் பயங்கர யோசனை என்று கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்று தலையாசைத்தாள். அவளை கூர்மையாக பார்த்தவன் “நிஜம்மா ஒன்னும் இல்ல” என்று கேட்க,
அவளும் ‘ஆம்’ என்னும் விதமாக தலையசைத்தாள். அதை நம்பாதவன் “பாரு மீனம்மா எதா இருந்தாலும் நீ வாய திறந்து சொன்னாதான் எனக்கு தெரியும். மனசுலயே வச்சுட்டு இருந்தா நான் என்ன உள்ள புகுந்தா பார்க்க முடியும்” என்க,அவளோ திரு திருவென விழித்து கொண்டிருந்தாள்.

“சரி அப்பா ஊட்டிக்கு போக சொன்னப்ப நீ ஏன் அப்படி விழிச்ச”.

“ஹா…. அ…. அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க பெரியவங்க இல்லாம நாம மட்டுமானு……”

“எதே பெரியவங்களையும் கூட்டிட்டு போகணுமா. அம்மா தாயே அவங்க போக சொன்னது ஹனிமூனுக்கு அதுக்கு நாம ரெண்டு பேர்தான் போகணும்” என்று கூறி கொண்டிருக்கும்போதே லதா அழைக்கும் சத்தம் கேட்க,

“சரி இயர் எண்ட்ங்கறதால கொஞ்ச நாளைக்கு டைட் ஒர்க் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அப்புறம் ஃப்ரி ஆகிடுவேன். இப்போதைக்கு வேணா அப்பா சொன்ன மாதிரி சாட்டர்டே, சன்டே ஊட்டிக்கு போயிட்டு வரலாம். லேட் ஆகிடுச்சு பாய்” என்றுவிட்டு ஓடிவிட்டான்.

கணவன் கிளம்பியதும் சற்று நேரம் அப்படியே நின்றவளின் இடை அவனவளின் தொடுகையை அப்போதும் உணர்ந்தது. அதில் அவள் முதுகு தண்டில் சில்லென்ற உணர்வு எழ, வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு.

தன்னை மறந்து நின்றவள் போன் மணி அடிக்கும் சத்தத்தில் தன்னிலை அடைந்து அதை எடுத்து பார்க்க, சத்யாதான் அழைத்தான். அதை ஆன் செய்தவள் காதில் வைக்க,

“ஹே…. மீனுக்குட்டி மாமாவ நினைச்சு கனவு கண்டுட்டு இருக்காம போய் சாப்பிடு. மீதி கனவ நைட் நான் வந்தவுடன் சேர்ந்து காணலாம். எங்க இப்போ மாமாக்கு ஒரு ஹஸ்கி லவ் சொல்லு பார்க்கலாம்”

“ஹஸ்கி லவ்வா…. அப்படினா….”

“சுத்தம். இதுகூட தெரியாதா பரவால்ல விடு. மாமா சொல்லி தரேன். கொஞ்சம் கஷ்டமான வேலை அதுக்கு குரு தட்சணையும் அதிகம் பார்த்துக்கோ” என்றவன் மேலும் ஹஸ்கி குரலில் “லவ் யூடி என் பொண்டாட்டி மீனு குட்டி” என்று மயக்கும் குரலில் கூறி போனை கட் செய்துவிட்டான்.

கணவனின் சேட்டையில் அவள் சிவந்த அதரங்கள் மென் சிரிப்பை வெளிப்படுத்த ‘சரியான வாலா இருப்பாரு போல’ என்று எண்ணி கொண்டு இருக்கும்போதுதான் அவளுக்கு தன் தாயிடம் பேசவில்லை என்பது நினைவு வந்தது. உடனே அவரை போனில் அழைத்தவள் பேச துவங்கினாள்.

பத்தொன்பது வருடம் தாயின் சிறகுக்குள்ளே வளர்ந்தவள் முதல் முறை தன் சொந்தத்தைவிடுத்து வந்திருக்கிறாள். ஒரு நாள் பிரிவு பல நாள் ஏக்கத்தை கொடுக்க கண்ணீருடன் பேசி கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் திரும்ப லதாதான் அவளை அழைக்க வந்திருந்தார்.

மீனா அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அவள் அருகில் சென்ற லதா, மருமகளின் கண்ணீரைத் துடைத்து, பேசிவிட்டு சாப்பிட வருமாறு சைகை செய்துவிட்டு சென்றுவிட்டார்.அவரது செயல் மீனாவிற்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

ஊரில் மாமியார் மருமகள் சண்டைகளை பார்த்தும், கேட்டும் வளர்ந்தவளுக்கு, மாமியாரை பற்றிய பயம் மனதில் இருக்கதான் செய்தது.ஆனால் தன் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக இருக்கும் இந்த குடும்பத்தை என்னவென்று நினைப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

பின் தாயின் சத்தத்தில் கவனம் கலைந்தவள் அவருடன் சற்று நேரம் பேசிவிட்டு மாமியாரை தேடி சென்றாள். அவளை வரவேற்ற லதா அவளுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு பரிமாற, அதே நேரம் ஜெகனும் அங்கு வந்தார்.

மாமனாரை பார்த்தவுடன் எழ முயன்றவளின் கைகளை பிடித்து அமர வைத்த லதா “மரியாதை மனசுல இருந்தா போதும். உட்கார்ந்து சாப்பிடு” என்றுவிட்டு, கணவரையும் அமர சொல்ல, மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்து கொண்டும் திருமணத்திற்கு வந்தவர்கள்பற்றிய கருத்தை பகிர்ந்து கொண்டும் சாப்பிட்டு முடித்தனர்.

அதன் பின் சமையலறை சுத்தம் செய்ய உதவ சென்றவளை வேண்டாம் என்று மறுத்த லதா, ஓய்வு எடுக்குமாறு சொல்லிவிட அவளுக்கு அவர்கள் நடந்து கொள்வது ஆச்சரியமாக இருந்தது.

சின்ன சின்ன விஷயங்களில் இருந்து கூட தன் குடும்பத்திலிருந்து மாறுபட்டு இருக்கும் இவர்கள் குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்ள மீனா மிகவும் சிரமப்பட்டு தான் போனாள்.

பள்ளி, கல்லூரி, எழுதுவது, வரைவது என்று நேரம் இல்லாமல் சுத்தி கொண்டு இருந்தவளுக்கு இப்போது வீட்டில் சும்மா இருப்பது போர் அடிக்க அந்த அறையை சுற்றி சுற்றி வந்தாள்.

மாலை நேரம் மாமியார் மாமனாருடன் வாக்கிங் கிளம்பியவள் அந்த ஊரை ரசித்து பார்க்க துவங்கினாள்.

கிராமத்தில் பச்சை பசேல் என்று பயிர்களை பார்த்து பழகியவளுக்கு, தீப்பெட்டி போல் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இருக்கும் கட்டிடங்களை பார்க்கும்போது வியப்பாக இருந்தது.

வயதானவர்கள்,ஆண்கள், பெண்கள் என அனைவரும் வாக்கிங் செல்வதை விழி விரித்து பார்த்து கொண்டு சென்றாள்.

அதன் பின் வீட்டிற்கு வந்து ஒரு காபி குடித்துவிட்டு, பால்கனியில் இருந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

இரவு தாமதமாகவே சத்யா வீட்டிற்கு வந்தான். சோர்ந்து போய் இரவு வருபவன் காலை சீக்கிரமாகவே ஆபிஸ்க்கு கிளம்பிவிடுவான். இடையில் தாய், தந்தை அறியாமல் மனைவியின் இடையில் கிள்ளுவது, முத்தமிடுவது, அவள் கையில் எதாவது பொருள் வைத்திருப்பதை கண்டால் அதை கீழே தட்டிவிட்டு “பார்த்து வர கூடாதாடா” என்று கரிசனை போல் பேசி அவளிடம் வம்பிழுத்து,அதற்கு அவள் விழிப்பதை கண்டு ரசித்து சிரிப்பது என அவனது செல்ல சீண்டல்களில் நாட்கள் அழகாக செல்ல துவங்கியது.

மறுவீட்டு அழைப்பிற்கு செல்லவில்லை என்ற சென்னப்பனின் முணு முணுப்பை வேலை என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கினான் சத்யா.

அதோ இதோ என்று அவர்கள் ஊட்டிக்கு செல்லும் நாளும் வந்தது.

ஊரை சுற்றி பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் தோன்றாமல் சத்யாவுடன் ஊட்டி ட்ரெயினில் ஏறினாள் அவன் மனையாள்.

மனதை மயக்கும் ஊட்டியின் இயற்கையில் மங்கை மயங்குவாளா இல்லை மன்னவனிடம் மயங்குவாளா காத்திருப்போம்.

நேசம் மறப்பாள்……

Advertisement