Advertisement

அத்தியாயம் -3

ஆதவன் தன் பணியை துவங்க செங்கதிர்களை பரப்பும் அதிகாலை வேலை. பறவைகள் அனைத்தும் இரை தேடி செல்ல, சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் சிலர்.

அமைதியாக இருந்த அந்த வீட்டில் மீனாட்சி தன் மென்மையான குரலில் கந்த சஷ்டி கவசம் பாட, மருமகள் குரல் கேட்டு எழுந்து வந்தார் லதா.

கண்மூடி மனமுருகி பாடி கொண்டிருந்தவள் சண்முகா சரணம்……. என்று முடிக்கும்போது அவளையே மலைத்து போய் பார்த்திருந்தார் அவளது மாமியார்.

“என்னங்க அத்தை ஏன் என்னை இப்படி பார்க்குறீங்க?” என்ற கேள்வியோடு நெற்றியில் திருநீறு வைத்து கொண்டே வந்தவளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தவர் அழகா பாடுனடா. உன் குரல் வலம் சூப்பர்” என்க,

அவருக்கு மென்மையான சிரிப்பை பதிலாக தந்தவள் காபி போட்டு எடுத்து வந்து கொடுக்க, ஜெகனும் அப்போது அங்கு வந்து சேர்ந்தார்.

“அடடே இந்த வீட்டு மகாராணிக்கு கைக்கு வருதே காபி. ராஜ வாழ்க்கைதான் போல லட்டு…..” என்று மனைவியை கிண்டல் அடிக்க, கணவனின் செல்ல அழைப்பில் எப்போதும் போல் இப்போதும் முகம் சிவந்தவர் “மருமக முன்னாடி என்ன பேச்சுங்க இது” என்று கோபம் போல் அதட்ட,

“என் பொண்டாட்டி நான் எப்படி வேணா கூப்பிடுவேன். எவன் என்னை என்ன கேட்க போறான்” என்க,

தலையில் அடித்து கொண்டவர் உங்ககிட்ட பேசறதுக்கு செவுத்துல முட்டிக்கலாம்” என்று செல்லமாக சலித்து கொண்டு காபி குடிக்க போக, அதற்குள் அவர் கையில் இருந்த காபியை பிடிங்கிய ஜெகன். தான் குடித்துவிட்டு “பேஷ்…. பேஷ்…. நொம்ப நன்னா இருக்கு பில்டர் காபியா….” என்று மீனாட்சியை பார்த்து கேட்க,

தன் காபி பறிபோன கடுப்பில் இருந்த லதாவோ கணவனின் இடையில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு “இது ப்ரூடா அம்பி…” என்று சொல்லி சிரிக்க,

“என்னையவா கிள்ளுன உன்னை……” என்று மனைவியை அடிக்க துரத்த, லதாவோ கணவனுக்கு போக்கு காட்டி அங்கிருந்த சோபாவையே வட்டம் அடித்து கொண்டிருந்தார்.

இளமையில் அன்பை செலுத்துவது காதல் அல்ல, முதுமையிலும் அன்பு மாறாமல் இருப்பதே உண்மையான காதல். காதலின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் வாழ்க்கையில் அறிந்து கொள்ளலாம்.

தாய், தந்தையின் சத்தத்தில் எழுந்து வந்த சத்யா அவர்களின் விளையாட்டை கண்டு கடுப்பாகி “ஸ்டாப் இட்….” என்று கத்த,

“எவ…. அவ……” என்றவாறு திரும்பிய ஜெகன் ‘இவனா……’ என்பது போல் பார்க்க,

லதாவோ அந்த கேப்பில் அங்கிருந்த காபியை எடுத்து குடித்துவிட்டு “அய்ய…. ஆறி போச்சு. எல்லாம் உங்களாலதான்” என்று சொன்னாலும் முழுவதையும் குடித்து முடித்தே சோபாவில் சென்று அமர்ந்தார்.

காபி பறி போன கோபத்தில் மகனை முறைத்த ஜெகன் “இப்போ உன்னை யாருடா இங்க வர சொன்னது. பெரிய இவன் மாதிரி வந்துட்டான் பஞ்சாயத்து பண்ண” என்க,

தந்தையை முறைத்த சத்யா “ஹலோ தகப்பா நேத்து கல்யாணம் ஆனது எனக்கு. இங்க புது மாப்பிள்ளை நானு. நீங்க ரெண்டு பேரும் என்னவோ புது மணமக்கள் மாதிரி குதிச்சு விளையாடிட்டு இருக்கீங்க. வயசாகிடுச்சுனு உங்களுக்கு கொஞ்சமாவது நியாபகம் இருக்கா?”.

“யாருக்குடா வயசாகிடுச்சு. நான் நினைச்சா இப்போ கூட உனக்கு ஒரு தம்பியோ, தங்கச்சியோ ரெடி பண்ண முடியும் பாக்குறியா” என்று போட்டிருந்த டி ஷர்ட் கையை மடித்து கொண்டு வந்தவரை உக்கிரமாக முறைத்த லதா “என்ன பேச்சு பேசுறீங்க. புள்ள இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்ட கதையால்ல இருக்கு” ,

சத்யா, “அப்படி சொல்லுங்கம்மா. இன்னொருவாட்டி என் தகப்பன் காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க கிழவன்னு” என்று சொல்லி சிரிக்க,

ஜெகனோ “இப்படியே பேசிட்டு இருடா மகனே நாளைக்கு உனக்கு ஒரு சித்திய கூட்டிட்டு வந்து, அவ பெத்து போடற உன் தம்பி பாப்பாக்கோ , தங்கச்சி பாப்பாக்கோ உன்னை கழுவி விட வைக்கல நான் எங்கப்பன் இராமசாமி புள்ள ஜெகன் இல்லடா” என்று மார்தட்ட

லதாவோ நக்கலாக “ம்கூம்….. அப்புடியே இவரு வத வத வதன்னு பெத்து போட்டுட்டாலும்” என்றுவிட்டு காதை தேய்த்து கொண்டே “பாக்கறதுதான் பாக்குறீங்க நல்லா வேலை பாக்குற புள்ளைய பாருங்க, அவ தலைல வீட்டு வேலை எல்லாம் கட்டிட்டு நான் காசி, கும்பகோணம்னு கோவில்கோவிலா போவேன்”,

மீனாட்சி, ‘என்ன இவங்க இப்படி எல்லாம் பேசிக்கறாங்க’ என்று அவர்கள் குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் கணவனின் குடும்பத்தை பார்த்து விழித்து கொண்டிருந்தாள்.

அவளது தாய், தந்தை சாதாரணமாக பேசியே அவள் பார்த்தது இல்லை. அவ்வளவு ஏன் அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சே இருந்தது இல்லை. தந்தை எதாவது சொல்லுவார் அவள் தாய் சரிங்க…சரிங்க என்று சொல்வார். இதுதான் அவர்களுக்கு இடையிலான பேச்சு ஆனால் லதா, ஜெகன் இருவரும் பேசுவதையும் விளையாடுவதையும் கண்டு இப்படியெல்லாம் ஆண்கள் பேசுவார்களா என்று வாயடைத்து போய் நின்றிருந்தாள்.

லதாவிற்கு ஏதோ பதில் சொல்ல வந்த ஜெகனை தடுத்த சத்யா “அடடா நிப்பாட்டுங்க. ஒரு காபிக்கு இந்த அக்கப்போரா? கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா? சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு அங்க பாருங்க உங்க சேட்டையை பார்த்து,என் பொண்டாட்டி மந்திரிச்சு விட்ட மாதிரி நிக்கிறா.

முதல்ல அவள போய் சரி பண்றேன். அப்புறம் உங்ககிட்ட வரேன்” என்றுவிட்டு மனைவி அருகில் சென்றான்.

“மீனு…. மீனுக்குட்டி……” என்று அழைத்தவன் குரலுக்கு, அவளிடம் பதில் இல்லை.

“இதே லெவல்ல கூப்பிட்டு இருந்தேனா உன் பொண்டாட்டி பார்க்கற பார்வைக்கு, நாளைக்கு கூட என்னன்னு கேட்க மாட்டா. சத்தமா கூப்பிடுடா லூசு பயலே” என்று ஜெகன் கூற,

“தகப்பா…..” என்று பல்லை கடித்தவன்
மனைவி அருகில் சென்று “அடியே மீனு குட்டி….” என்று காதில் கத்த,

காதில் ‘ங்கொய்….’ என்ற சத்தம் எழ “ஆஆஆ……” என்ற அலறலுடன் கையில் இருந்த காப்பியை கீழே போட்டு, காதை தேய்த்தவாறே ‘யார் அது இப்படி கத்தியது என்பது போல் பார்க்க, அவள் கணவன்தான் முறைத்து கொண்டு நின்றிருந்தான்.

‘என்ன இப்போ எதுக்கு இவரு இப்படி முறைக்கறாரு’ என்று யோசித்தவாறு தன் பார்வையை திருப்ப, அவளது மாமனார், மாமியார் இருவரும் கூட அவளைதான் பார்த்து கொண்டு இருந்தனர்.

சத்யா, “என்ன பொண்டாட்டி பயங்கர யோசனைல இருக்க போல? எந்த கோட்டைய பிடிக்க போற?”.

ஜெகன், “அது…மாமாக்கு ஏத்த பொண்ணு நம்ம ஊர்ல இருக்கான்னு யோசிச்சுட்டு இருந்திருக்கும். இல்லடாமா….”

“அ…. அ…அது…. அது வந்துங்க…. மாமா…” என்று இழுத்து, என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் விழிக்க,

சத்யாவோ நாளைக்கு சாகப்போற ஆயாவா இருந்தாலும் பரவால்ல அவருக்கு பொண்ணு பத்தின டீடெயில்ஸ் சொல்லிடு என்று கடுப்படிக்க,

‘டேய் என்ன விட்டுடுங்கடா நானே பாவம் அப்பாவி…அப்புராணி புள்ள. உங்க டைம் பாஸ்க்கு நான்தான் எல் ஈ டி டிவியா என்னை விட்டுடுங்கடா அப்பா. என்னால முடியல’ என்று மனதில் புலம்பி கொண்டு,

“அ…. அ…. அது…வ…வந்து…. வந்துங்க….”என்று வார்த்தைகளை மென்று விழுங்க,

ஆணவனோ “நைட்ல இருந்து வந்துட்டுதான் இருக்க. எப்போ வந்து சேர போற?” என்று ஹஸ்கி குரலில் கேட்க, அதில் விதிர்த்து போனவள் கண்களை சாசர் போல் விரித்து பார்க்க, அந்த மருண்ட மான் விழியில் ஆணவன் சொக்கிதான் போனான்.

மனைவியின் விழி அழகில் மயங்கியவன் இருக்கும் இடம் மறந்து பெண்ணவள் முகம் நோக்கி குனிய,

“ம்கூம்……டேய் மகனே நாங்களும் இங்கதான் இருக்கோம். ஃப்ரி ஷோ காட்டிறாத” என்ற தந்தையின் குரலில் தன்னிலை அடைந்தவன் காது மடல்கள் சிவந்து போனது.

மீனு அங்கிருந்தவர்களை எதிர்கொள்ள முடியாமல் கிட்சன் நோக்கி ஓடிவிட, சத்யாவோ தன் பின்னந்தலையை கோதி கொண்டே தன் அறை நோக்கி வேகமாக செல்ல, தாய், தந்தையின் சிரிப்பு சத்தம் அவனை துரத்தியது.

லதா, ஜெகன் இருவரும் மகன் வாழ துவங்கிவிட்டான் என்ற எண்ணத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

கிட்சனில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளே தோன்றிய பட படப்போடு மீனா பத்திரங்களை உருட்டி கொண்டிருக்க, அப்போது லதா உள்ளே வந்தார்.

மாமியாரை பார்க்கும் தைரியம் அற்றவளாக “அ…. அத்த டிபன் என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா….” என்றவளின் மனநிலையை புரிந்து கொண்டவர்,

மருமகளை சாதாரணம் ஆக்கும் பொருட்டு சமையலைபற்றி பேச, அதில் ஒருவழியாக ஆசுவாசம் ஆனவள் வேளைகளில் மூழ்க துவங்கினாள்.

அதன் பின் நேரம் வேகமாக செல்ல, திருமணமான அடுத்த நாளே ஆபிசிற்கு செல்ல தயாராகி வந்தான் சத்யா.

ஜெகன், “என்னடா கிளம்பிட்ட”.
சத்யா, “ம்ம்ம்…. இயர் எண்ட் வருதுல சீக்கிரம் வேலைய முடிக்கணும்”.

“டேய் மகனே உன் கடமை உணர்ச்சி கண்டு எனக்கு கண்ணு வேர்க்குதுடா”.

“வேர்க்கும்…. வேர்க்கும்…” என்றவாறு, டைனிங் டேபிளில் அமர்ந்தவன் “ம்மா…. சாப்பாடு…” என்று குரல் கொடுக்க, அவனவள்தான் வந்தாள் .

கணவன் கிளம்பி நிற்பதை பார்த்து மீனா முகம் மாறி நிற்க, அவனுக்கான உணவுடன் வந்து சேர்ந்தார் லதா.

Advertisement