Advertisement

அத்தியாயம் -1

கோவை மாநகரை மாவட்டமாக கொண்ட சிறு கிராமம் அது.காரிருள் சூழ்ந்து இருக்கும் நடு இரவு வேலை “ஐயா அவிங்கள பிடிச்சுட்டு வந்துட்டோம்” என்றொருவன் சொல்ல,

வெள்ளை வேட்டி சட்டையும் பருத்த உடலும் முறுக்கிய மீசையுமாக இருந்த அந்த ஆள் “இழுத்துட்டு வாங்கடே இங்க. கழுதை. படிக்க அனுப்புனா, ஆளா புடிக்க போகுது**” என்று நான்கு காதில் வாங்க முடியாத அளவு கெட்ட வார்த்தையில் திட்ட,

உடல் முழுதும் புழுதியாக, இரத்தம் அங்கங்கு வெளியேற கண்ணில் மரண பயத்துடன் அவர் முன் வந்து நின்றனர் இருவர் .

“ஐயா…எங்கள விட்ருங்க. நாங்க எங்கயாவது கண் காணா ஊருக்கு போய் பொழச்சுக்கறோம். எங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க”என்று அந்த பெண் அவர் காலில் விழ,

அவரோ “ச்சீ….. நீயா ஒரு முடிவு எடுத்துக்கிட்டேனா இந்த ஊர்ல எனக்கென்ன மறுவாதி”

“ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க.எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அதுமட்டுமில்லாம இவரு எங்க ஆளுங்கதான். அப்புறமும் எதுக்கு எங்களை இப்படி இழுத்துட்டு வந்து இம்சை பண்றீங்க” என்று அழ,

அவள் முகத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டவர் “ராஸ்கல் என்ன திமிரா. பொட்ட கழுதை குரல் ஒசத்தி பேசுறியா. உன் அப்பன் உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி என்கிட்ட சொன்னான். நானும் உனக்கு ஒருத்தனை பார்த்து வச்சிட்டு நாளைக்கு கல்யாணம்னு ஊர் முழுக்க சொன்னதுக்கு அப்புறம் இந்த பயக்கூட ஓடி போனா. எனக்கும் என் பேச்சுக்கும் என்னல மரியாதை. நீ இவனை கல்யாணம் பண்ணுனாலும் சரி, இவன் புள்ளைய வயித்துல சுமந்துட்டு இருந்தாலும் சரி. நான் சொன்னதுதான் நடக்கும். நடக்கணும். எலே எவன்லே அங்க இங்க வாலே” என்று தனக்கு பின் நின்றிருந்தவனை அழைத்தார்.

“ஐயா……” என்று வந்து நின்றவனிடம்,

“இவ கழுத்துல இருக்கறதை அறுத்து போடு. அப்படியே இவ இழுத்துட்டு போனவன் காலை வெட்டி அவங்க வூட்டு முன்னாடி போடு. அப்பதான் இனி எவனும் என் பேச்சை மீறி நடக்கணும்னு நினைக்க கூட மாட்டாங்க” என்க,

அந்த பெண்ணோ “ஐயோ….. இந்த அக்ரமத்தை கேட்க யாருமே இல்லையா. வேண்டாம்…. எங்களை விட்ருங்க” என்று தலையில் அடித்து கொண்டு அழ, அதில் கல்லும் கரைந்து போகும், ஆனால் பெரிய மனிதனான சென்னப்பனோ திமிராக மீசையை திருகி “இந்த ஊர்ல எனக்கு எதிர நின்னு கேள்வி கேட்கற தைரியம் எவனுக்குலே இருக்கு. கேட்க ஆளு இல்லையாங்கற ” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அந்த ஆணை ஆட்கள் இழுத்து சென்று காலை வெட்ட, அவன் அலறல் சத்தத்தில் அந்த ஊரே நடுங்கியது.

“எலே முத்து….” என்றழைக்க, அடுத்த நொடி அவர் முன் வந்து நின்றான் அந்த பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளை முத்தையன் என்பவன்.

“இந்த தாலிய அந்த புள்ள கழுத்துல கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போல. கல்யாண சீரு காலைல வூட்ல இருந்து வரும்” என்று சொல்ல,

உயிராக காதலித்தவனின் கால்கள் வெட்டப்படுவதை கண்ணால் கண்ட அந்த பெண் உயிரில்லாத ஜடமாக அங்கேயே வெறித்து பார்த்து கொண்டிருக்க, அங்கு பெண்ணின் எண்ணத்திற்கும், மனதிற்கும் மதிப்பே இல்லாமல் போனது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு தன் வீட்டை நோக்கி சென்றான் பெரிய மனிதன் என்னும் போர்வையில் இருக்கும் அந்த மிருகம்

அந்த பெண்ணும் தாலி கட்டியவன் இழுத்த இழுப்பிற்கு நடை பிணமாக உடன் சென்றாள்.

புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை வேலை, அந்த கால மாடலில் கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீட்டில் சாம்பிராணி புகை சூழ்ந்து இருக்க, முருகன் சிலை முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் சொல்லி கொண்டிருந்தாள் அந்த பெண்.

மான் போன்ற கண்கள், எள்ளு பூ நாசி, இயற்கையாகவே சிவந்த இதழ்கள், மெல்லிய உடல் என்று பத்தொன்பது வயதான இவள்தான் நம் கதையின் நாயகி மீனாட்சி சென்னப்பனின் மகள்.

சென்னப்பன் -தனலட்சுமி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் மூத்தவள் மீனாட்சி இரண்டாவது இரட்டை குழந்தைகள் மகன் ஏழுமலை மகள் கண்ணம்மா.

மீனாட்சி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். அப்பா என்றால் மிகுந்த பயம். அவர் முன் வாயை திறக்கவே மாட்டாள். அம்மாவிடமும் சகோதரர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவள்.

மற்ற இருவரும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றனர். சென்னப்பன் வீட்டிலும் கண்டிப்பான தந்தைதான். அவரை ஒரு வார்த்தை சொன்னாள் அதற்கு எதிர் பேச்சு இல்லை.

கண் மூடி கடவுளை வணங்கிய மீனாட்சி கற்பூர ஆரத்தி காமித்து திருநீர் இட்டு கொண்டு வந்து தாய் கொடுத்த காபியை வாங்கி குடிக்க துவங்கினாள்.

தனம், “மீனா… ஏதோ எழுதணும் பெரிய வாத்தியார் எல்லாம் வருவாங்கன்னு சொன்னியே எல்லாம் எழுதிட்டியா. நல்லா படிக்கணும் கண்ணு”

“பொட்ட புள்ள படிச்சு என்ன ஆக போகுது. அது பெக்கற புள்ளைக்கு சொல்லி தர அளவு படிப்பறிவு இருந்தா போதும்” என்றவாறு உள்ளே வந்தார் சென்னப்பன்.

அவர் வந்தவுடன் இரு பெண்களும் அமைதியாகிவிட, “ஏய்…” என்க, அவர் முன் வந்து நின்றார் அவர் மனைவி.

“அடுத்த தெருல இருக்க முத்தய்யன்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு. அவங்களுக்கு குடுக்க வேண்டியதை குடுத்து அனுப்பு. அப்புறம் பெரிய புள்ளைய பார்க்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்க அதுக்கான ஏற்பாட்டை பாரு” என்று எழ,

தனமோ, “என்னங்க திடீர்னு சொல்றீங்க”

“ஏன் முன்னாடியே தெரிஞ்சா மட்டும் நீ என்ன பண்ண போற? போடி போய் வேலைய பாரு” என்றுவிட்டு அவர் அறை நோக்கி செல்ல,

தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னதில் இருந்து திகைத்து போய் இருந்த மீனா “அப்பா…. இப்போ என்னங்க அவசரம். படிப்பு முடிஞ்ச……” என்றவள் சொல்லும்போதே தாயின் கன்னத்தில் விழுந்த அரையில் வாயை மூடி கொண்டு தந்தையை கண்ணீரோடு பார்க்க,

“என்ன மீனாட்சி புது பழக்கம் எதிர்த்து பேசுற. நீ படிப்ப முடிக்கணும்னு அவசியம் இல்ல. எழுத படிக்க தெரிஞ்சா போதும்னு இப்போதானே சொன்னேன். உன்னை படிக்க வச்சது வேலைக்கு அனுப்ப இல்ல. சென்னப்பன் மவ படிக்காதவன்னு எவனும் சொல்லிட கூடாதுங்கறதுக்காகதான் புரிஞ்சுதா போ” என்றுவிட்டு அவர் அறைக்குள் சென்றுவிட,

மீனாட்சிக்கு அழுகை அழுகையாக வந்தது. படித்து முடித்து வேலைக்கு போக வேண்டும் என்பது அவளது பல நாள் கனவு. தந்தை சொல்வதை பார்த்தாள் படிப்பே கனவாகிவிடுமோ என்று பயந்தவள் தாயை பாவமாக பார்க்க, அவரும் அடி வாங்கிய கன்னத்தில் கை வைத்தவாறு அவளைதான் பார்த்து கொண்டிருந்தார்.

‘இவரே இப்படி இருக்கார். இவர் பார்க்கற மாப்பிள்ளை மட்டும் என்னை படிக்க வைக்கவா போறார்’ என்று அரண்டு போய் நின்றிருந்த அக்கா அருகில் வந்த உடன்பிறப்புகள் இரண்டும் அவளது இரு பக்கமும் நின்று கைகளை அழுத்தி ஆறுதல்படுத்த, அவளும் அவர்களை கண்ணீர் நிறைந்த விழிகளோடு பார்த்தாள்.

அழுகையோடு அவர்களை அணைத்து கொண்டவள் “எல்லாம் முடிஞ்சுது” என்றுவிட்டு தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.

அக்கா சென்றபின் உடன் பிறப்புகளும் சோகமான முகத்தோடு அவரவர் அறைக்குள் சென்றனர்.

அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடக்க, மாப்பிள்ளை வீட்டாரும் வந்துவிட்டனர். கண்ணம்மா மாப்பிள்ளையை பார்த்து வாயை பிளந்தாள்.

“எக்கோ மாமா செம்ம. வெள்ளையா அம்சமா இருக்காரு. என்ன கொஞ்சம் ஹைட்டா இருந்திருந்தா இன்னும் சூப்பரா இருப்பாரு. எனக்கு ஓகே” என்று சொல்ல,

தன் கனவு கனவாகவே போனதில் வேதனையில் இருந்த தெய்வா அவளை பார்த்து வலி நிறைந்த சிரிப்பை உதிர்த்து .

“உனக்கு ஓகேனா நீ கட்டிகோ. நான் வேணா அப்பாட்ட சொல்றேன்”

“நோ…. நோ…. நான்லாம் அவருக்கு செட் ஆக மாட்டேன். ஆளு பார்க்க ரொம்ப சாப்ட்டா இருக்காரு. எனக்கெல்லாம் ரக்கட் பாய்தான் வேணும்” என்று இளம் வயதுக்கே ஏற்ற துடிப்போடு பேச,

தங்கையின் பேச்சில் மனதில் இருந்த கஷ்டம் மறந்து மென்மையான சிரிப்பை உதிர்த்தவள், அவள் மூக்கை பிடித்து ஆட்டி “வாயாடி….” என்க, இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

தனம் மகளை அழைத்து செல்ல வர, உடன் வந்த கண்ணம்மாவை “நீ இங்கயே இரு. அவங்க போற வரை வெளிய வராத” என்றுவிட்டு செல்ல, அவளோ இதழை பிதுக்கி அழுவது போல் செய்ய,

“உன்ற அப்பாரு சொன்னாரு…” என்று சொல்ல, வாயில் எதையோ முணு முணுத்த கண்ணம்மா முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்துவிட்டாள்.

பச்சை பட்டுடுத்தி, தலை நிறைய பூ சூடி கையில் காபி டம்ளருடன் வந்தவள் தலை நிமிராமல் அனைவருக்கும் காபியை கொடுத்துவிட்டு செல்ல போக,அவளை நிறுத்தினார் மாப்பிள்ளையின் தாயார் லதா.

“என்னம்மா குனிஞ்சே இருக்க, நிமிர்ந்து என் மகனை பார்த்து, அவனை பிடிச்சிருக்கான்னு சொல்லு” என்க,

அவளோ எதிர்பார்ப்பும் இல்லை. ஏமாற்றமும் இல்லை என்ற நிலையில் அமைதியாக இருந்தாள்.

சென்னப்பன், “அதுக்கு என்னங்க தெரியும் சின்ன புள்ள. நாம பார்த்து பேசினா சரிதான்” என்றார்.

லதா, “என்ன சத்யா உனக்கு பொண்ண பிடிச்சிருக்கா” என்க, அவனோ “நான் பொண்ணுகிட்ட பேசணும்” என்றான். அதை கேட்டு சென்னப்பன் முகம் தன் பிடித்தமின்மையை அப்பட்டமாக காட்ட, அதை கண்டு மீனா பயந்து விழிக்க,

சத்யாவோ ‘நீ என்னவேணா பண்ணிக்கோ. ஆனா…. நான் பேசணும்’ என்ற முடிவுடன் எழுந்து அவர்கள் வீட்டின் பின் பக்கம் நோக்கி சென்றான்.

தனம் கையை பிசைந்தவாறு கணவனையும் சத்யாவின் முதுகையும் பார்த்து கொண்டிருக்க, எழுந்த கோபத்தை அடக்கிய சென்னப்பன் “ம்ம்….” என்பது போல் கண் காட்ட,

நிம்மதி பெரு மூச்சுவிட்டவர் மகளிடம் சென்று “பின்னாடி இருக்க மல்லியப்பூ பந்தல்கிட்ட நின்னு பேசு” என்க, மீனுவோ அவரை கலவரமாக பார்த்தாள்.

“பயப்படாத கண்ணு எங்க கண்ணு பார்வையிலேயேதான் இருப்ப. நான் இங்க இருந்து பார்த்துக்கறேன் போ” என்று சொல்ல, அவளும் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.

லதா, ஜெகன் தம்பதிகளின் ஒரே மகன் சத்ய தேவ் . சி ஏ முடித்துவிட்டு கோவை மாநகரத்தில் தனக்கென தனி ஆபிஸ் அமைத்து பார்த்து கொண்டு இருக்கிறான். துரு துருப்பானவன். ஒரே பையன் என்பதால் பெற்றோர் இருவரும் நண்பர்கள் போலவே பழகுவார்கள்.

பெற்றோர் இருவரும் பாங்கில் வேலை செய்வதால் பணத்திற்கு குறைவில்லாமல் இருந்தனர். இப்போது சத்யா கம்பெனி துவங்கவும் அவர்களது நிலை உயர்ந்துவிட்டது. அளவான அழகான குடும்பம் அவர்களது.

பெரிய பெரிய கடை, மால்கள், பள்ளி, கல்லூரி என பல நிறுவனங்களின் வருவாயை பார்த்து வருட கடைசியில் அரசாங்கத்திடம் கணக்கு காண்பித்து லட்ச கணக்கில் சம்பாதிப்பவன்.

இதயம் பட படவென அடிக்க கால்கள் நடுங்க சத்யாவின் அருகில் போய் நின்றாள் மீனாட்சி. அவளை பார்த்து மென்மையாக சிரித்தவன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தவன் பின் பெயரில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து “ உன் பேர் என்ன?” என்க,

அவளோ திரு திருவென விழித்து, தந்தை இருக்கும் பக்கமே திரும்பி திரும்பி பயத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

“அட என்னங்க ஆச்சு ஏன் இப்படி பயப்படுறீங்க. உங்க வீட்லதான் இருக்கோம்.நான் என்ன பண்ணிடுவேன்னு இப்படி பயப்படுறீங்க”.

“இ…. இ…இல்ல…. வ…. வந்து…” என்று எச்சில் கூட்டி விழுங்கியவள் “என்ன பேசணும் அதை சீக்கிரம் சொ…சொல்லுங்க…. நான் போகணும்”

“அட….. என்னமா உனக்கு திக்கு வாயா சொல்லவே இல்ல. பரவால்ல ஒன்னும் பிரச்சனை இல்ல இந்த கூலாங்கள் இருக்குல்ல…..” என்று குறும்பாக சொல்லி இழுக்க,

அவளோ ‘ஐயோ…. என்ற அப்பாரு கண்ணாலேயே என்னை எரிக்கறாரே. என்ன பேசணுமோ சீக்கிரம் பேசி தொலடா. பேசறேன்னு வந்துட்டு மூஞ்ச மூஞ்ச பார்த்துட்டு இருக்கான். அப்புறம் நீ பாட்டுக்கு கிளம்பி போய்டுவ. மாட்டுறது நான்தான் கும்மி எடுத்துருவாரு என்ற அப்பா தயவு செஞ்சு பட்டு பட்டுனு பேசிட்டு போடா.

அவரை பார்த்தாலே நடுங்குது. கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருதே.போற போக்க பார்த்தா நான் மயக்கம் போட்டு விழுந்துருவேன் போலயே’ என்று மனதுக்குள் புலம்பியவள் அவனை பாவமாக பார்த்து

“இல்ல…. இல்லங்க நான் நல்லா பேசுவேன். எங்க ஸ்கூல பேச்சு போட்டில எல்லாம் கலந்துகிட்டு பர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். நீங்க என்னமோ பேசணும்னு சொன்னிங்களே அதை கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க” என்று பட படப்புடன் சொன்னவளுக்கு பயத்தில் கண்கள் இருட்டி கொண்டு வந்தது. இருந்தாலும் சமாளித்துவிடலாம் என்று முயன்று நின்று கொண்டிருந்தாள்.

பெண்ணவள் முகத்தில் என்ன உணர்ந்தானோ அவளை ஆழ்ந்து பார்த்து “எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. உன் பேர் மீனாட்சினு சொன்னாங்க. என்ன படிச்சிருக்கற” என்றவன் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன் அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள்.

மயங்காமல் அவனிடம் தெளிவாக தன் படிப்பையும் வயதையும் சொல்லி இருந்தால், அவள் சந்திக்க இருக்கும் பெரும் பிரச்சனையில் இருந்து தப்பித்து இருப்பாள். விதி யாரை விட்டது.

மீனா மயங்கவும் வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளை அப்படியே கரங்களில் தாங்கி கொண்டான்.

மகளை கவனித்து கொண்டிருந்த தனமும் மயங்கவும் வேகமாக அவர்கள் அருகில் சென்று “விடுங்க நான் பார்த்துக்கறேன். காலைல சாப்பிடல அதான். வேற ஒன்னும் இல்ல. எலே மலை இங்க வாலே அக்காவ பிடி” என்று கத்த, சத்யா குழப்பமாக பார்த்தான்.

அவன் முகத்தை பார்த்த தனம் “இன்னைக்கு திங்க கிழமை சோமாவார விரதம் இருக்கா அதான்…” என்று இழுக்க, அவனும் புரிகிறது என்று தலையசைத்து உள்ளே சென்றுவிட்டான்.

லதா மகன் முகத்தை ஆர்வமாக பார்க்க அவனோ யோசனையான முகத்துடன் அமர்ந்து கொண்டான்.

சென்னப்பன், “கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்” என்று நேரடியாக கேட்க,

ஜெகன், “எங்களுக்கு ஒரே பையன். எல்லாருக்கும் சொல்லி சிறப்பா செய்யணும்.ரெண்டு மாசத்துக்கு அப்புறம் வச்சுக்கலாம். நமக்கும் ஈஸியா இருக்கும்” என்று சொல்ல,

சென்னப்பனும் தன் சம்மதத்தை தெரிவித்தார். அதன் பின் பொதுவாக சில விஷயம் பேசியவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டனர்.

மயக்கத்தில் இருந்த மீனா சற்று நேரத்திலேயே கண் விழித்துவிட்டாள். சென்னப்பன் மகளுக்கு பார்த்த முதல் வரனே அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியில் இருந்ததால் அப்படியே விட்டுவிட்டார். இல்லையேல் மகள் அனைவர் முன்னும் தன்னை கேவலப்படுத்திவிட்டாள் என்று வீட்டையே ஒரு வழி பண்ணியிருப்பார்.

காரில் சென்று கொண்டிருந்த சத்யாவிடம் லதா “என்ன மகனே பொண்ண பார்த்தவுடனே உன் கண்ணுல டால் அடிச்சுது. பேச போயிட்டு வரும்போது டல் அடிக்குது” என்க,

தாயை முறைத்தவன் “இந்த நேரத்துலயும் உங்களுக்கு ரைமிங் ரொம்ப அவசியமா”.

“இல்லையா பின்ன நான் மாமியார் ஆக போறேனாக்கும். என்னங்க எனக்கு எக்ஸைட்மண்டா இருக்குங்க. லதா மாமியார்…. வாவ்…. கேட்கவே செம்மயா இருக்கு இல்ல. இன்னைக்கே போய் எல்லா சீரியலையும் பார்க்க போறேன். மாமியார் எப்படி எப்படி மருமகளை கொடுமபடுத்தறாங்கன்னு கத்துக்கறேன்” என்றவரை,

தந்தையும், மகனும் ஒரு சேர பார்த்து ‘இது எல்லாம் உனக்கு தேவையா குமாரு….” என்க,

அவர்களை முறைத்தவர் “என்ன ஒரு கேவலமான வாய்ஸ் மாடுலேஷன் இது” என்று கேட்க,

இருவரும் கோரசாக “அதுக்கு எல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட” என்று சொல்லி சிரிக்க,

அவர்களை முறைக்க முயன்று தோற்ற லதாவும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க துவங்கினார்.

மீனாட்சியின் மிரண்ட விழிகளையும் பயந்த முகத்தையும் பற்றி யோசித்து கொண்டிருந்த சத்யா தாயின் பேச்சில் அதை அப்படியே விட்டுவிட்டான்.

வீட்டில் மீனா கண்ணீரோடு தனத்திடம் பேசி கொண்டிருந்தாள் “ம்மா…. ப்ளீஸ்மா அப்பாட்ட பேசுங்க ரெண்டு மாசத்துக்கு அப்புறம்தான் கல்யாணம்னு சொல்லிட்டாங்கல்ல, இன்னும் ஒரு வாரத்துல கமிஷன் இருக்குமா அதுவரை காலேஜ் போனா மட்டும் போதும்மா. எக்ஸாம் கூட முடிஞ்சுடுச்சுல்ல. பேசுங்கம்மா…” என்று கெஞ்ச, மற்ற இருவரும்கூட அக்காவுக்காக தாயிடம் கெஞ்ச துவங்கினர்.

தனமும் வெகு நேரம் கணவனிடம் பேச பயந்து முடியாது என்று மறுத்து பின் பிள்ளைகள் கெஞ்சலை கண்டு “சரி பேசுறேன்” என்றார்.

அதே போல் கணவனிடம் அவர் பேச, சற்று நேரம் யோசித்தவரும் “சரி போகட்டும். மாப்பிள்ளையும் படிச்சவரு அவருக்கு கீழ என் புள்ள இருக்க கூடாது. காலேசுக்கு போக சொல்லு” என்று விட, அப்போதுதான் நால்வருக்கும் நிம்மதியாக இருந்தது.

இந்த படிப்புதான் அவளுக்கு பின் நாளில் பெரிதாக உதவ போகிறது, என்று அறிந்திருப்பாளோ……

மறப்பாள்….. ..

Advertisement