கட்டிலில் அமர்ந்து கொண்டு காயம் கண்ட கையை விரித்தும் சுருக்கியும் பார்த்து கொண்டிருந்தாள் சில்வியா.கண்ணில் இருந்து வற்றாத ஜீவநதி பெருகி கொண்டிருந்தது.
நேற்றைய தினம் வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்துப் பதறிப் போனார் சில்வியாவை பெற்ற தாய் மரியம்.
இருக்காதா பின்னே தந்தையின்றி உற்றார் துணையின்றி இரு குழந்தைகளை வீட்டு வேலை பார்த்து வளர்க்கும் பெண் அவர்.
கல்லூரிக்கு சென்ற மகள் கையில் கட்டோடு வந்ததைப் பார்த்துவுடன் பதறி விட்டார். ஒற்றையாக வளர்க்கும் தாய்க்கு இருக்கும் பயம் நியாயம் தானே,
நிலையில்லாமல் தவித்த அந்த தாயை பானு, நிலா, மற்றும் நித்யா மூவரும் தான் சமாதானம் செய்தனர்.
இரவெல்லாம் மகளுடன் கழித்து விட்டு. இன்று மனமே இல்லாமல் இளைய மகனை பள்ளிக்கு விடுமுறை எடுத்து துணைக்கு வைத்து விட்டு வேளைக்குச் சென்றிருக்கிறார் பாவம்.
தாயின் நிலை, காதலின் தவிப்பு, கையின் ரணம் என கண்ணில் நீருடன் இருக்கும் அக்காவை பார்த்த ஜோசப்.
மெதுவாக அவளை நெருங்கி அவளது கைப்பற்றிக் காயம் கண்ட இடத்தை மென்மையாக வருட அந்த அன்பில் உருகியவள் அவனது மடியில் முகம் புதைத்து கதறி விட்டாள்.
அன்பு கொண்ட இதயம் முட்டாளின் சொர்கம் போலும்.இதோ அன்பை கொண்டு காயம் கண்டு நிற்கிறாள்.எத்தகைய சுயநலம் கொண்ட அன்பு இது? பெற்றவள் நிலையை மறந்து…
தன்னைக் கட்டி கொண்டு அழுகும் தமக்கையை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான் ஜோசப் “அக்கா ஏன் அழகுற? வலிக்குதா?” கையை வருடியவாறு கேட்க.
“உங்க அக்காக்கு வலிக்காது டா அவ விஜயகாந்து தீவிர ரசிகை கண்ணு செவக்க செவக்க அந்தக் கிளாசை நொறுக்குனா பாரு… அட! அட! மாஸ்” என்றவாறே வந்தாள் நிலா அவள் பின்னில் நித்யா மற்றும் பானு.இன்று கல்லூரிக்கு விடுமுறை எடுத்துவிட்டு வந்திருந்தனர் போலும்.
தோழிகளைப் பார்க்கவும் எழுந்து அமர்ந்து கண்ணைத் துடைத்து கொண்டவள் குனிந்து அமர்ந்து கொள்ள அவளை நெருங்கிய வெண்ணிலா,
“நேத்து நீ இருந்த நிலைமைக்கு உன்னை ஒன்னும் பண்ண முடியல இல்லனா நாக்கை பிடுங்குற மாதிரி கேட்டு வச்சுருப்பேன்”
“எதுக்குடி இப்படி பண்ண?” நித்யா
“இல்ல தெரியாம?” சில்வியா சமாளிக்க முயல.
“உன் மூஞ்சி எங்களைப் பார்த்தா கிறுக்கு மாதிரியா தெரியுது? கீழ விழுந்து உடையறதுக்கும்.
கைக்குள்ள வச்சு உடைக்கிறதுக்கும் எங்களுக்கு வித்யாசம் தெரியும் சில்வி. அசிங்கமா பொய் பேசாத” வெண்ணிலா கோபமாகப் பேச அவளைத் தொடர்ந்து நித்யா.
“உங்கிட்ட இதை எதிர்பார்கலடி ஊமைச்சி மாதிரி இருந்துகிட்டு என்ன கோவம் வருது உனக்கு.
நான் கூட நீ தெரியாம பண்ணிட்ட போலன்னு யோசிச்சேன். நிலா சொன்னதும் தான் விஷயம் தெரிஞ்சுது” என்றதும் சிறு பதட்டம் தொற்ற.
“என்…? என்ன சொன்னா?”
“நான் உண்மை தான்மா சொன்னேன் உனக்கு மார்…” என்று ஆரம்பிக்கப் பாய்ந்து வந்து அவளது வாயை பொத்திய சில்வியா கலவரமாகத் தனது தம்பியை பார்க்க.
அவளது எண்ணம் புரிந்து பேச்சை நிறுத்தினாள் வெண்ணிலா.
“டேய் ஜோசப் ஸ்கூல் போகலையா” பேச்சை மாற்றும் பொருட்டுப் பானு சிறுவனைக் கேட்க.
“அவனுக்கு அந்தப் பொண்ணோட கல்யாணம் ஆனா என்னடி பண்ணுவ” என்று கேட்க.
“செத்து போவேன்” பட்டெனச் சில்வியா பதில் சொல்ல. அருகில் இருந்த தலையணை எடுத்து இன்னும் பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டாள் வெண்ணிலா.
“ஏய்! ஏய்! பாவம்டி அவளை விட்டுரு நிலா!…”
“நீ பேசாம இரு பானு பேச்சை பார்த்தியா? இப்படி பண்ணதுக்குத் தான் ஒருத்திய நம்ப விலக்கி வச்சோம் நியாபகம் இருக்கா.
இன்னைக்கு அவ நிலை என்ன? கண் முன்னே உதாரணமா நிக்கிறா. அப்படி இருந்தும் எப்படி பேசுறா பாரு” என்றதும் நித்யா நிலாவை பிடித்து அமர வைக்கச் சில்வியா அழுது கொண்டே இருந்தாள்.
“சில்வி என்ன வேலை இது? எத்தனை வருஷ நட்பு நம்ப. அவன் கிட்ட பேச என்ன தயக்கம் உனக்கு. நீ சொல்லாம அவனுக்கு எப்படி டி தெரியும் லூசு”நித்யா கடிந்து கொள்ள.
பானு சற்று நெருங்கி “எப்போ இருந்துடி இந்த அது”
“எது?”
“உன் காவிய காதல்”
“ரொம்ப முக்கியம்” நிலா முனக.
நிலா முனகியதை கேட்டவாறு தயங்கி “டென்த்” என்றால் சில்வியா.
“ஆத்தி!” என்று வாயில் கை வைத்து அதிர்ந்து நின்றனர் பெண்கள் மூவரும்.
பானு தான் முதலில் தெளிந்தது “சும்மாவா சொன்னாங்க ஊமை ஊரை கெடுக்கும் பெருச்சாளி பேரை கெடுக்கும்னு”
“உச்” சிறு சலிப்புடன் முகத்தை திருப்பி கொண்டாள் சில்வி.
“என்ன உச்சு கேட்குறால பதில் சொல்லு” என்றவள் பார்வை ஒரு முறை ஜோசப் பை தீண்டி சென்றது.
“அவர் வசதி அதான்… அதுவும் இல்லாம நல்ல படிப்பார்” என்றதும் பல்லை கடித்த நிலா.
“காரணம் சொல்லுது பாரு கேன.அப்புறம் என்ன டேஷுக்குக் காயம் பண்ணிட்டு உக்காந்திருக்க விட வேண்டியது தானே” நிலா பல்லை கடிக்க.
“அதெல்லாம் முடியாது” சில்வியா சற்று உரக்க கத்திவிட்டு தோழிகளைப் பார்த்து மீண்டும் கண் கலங்கி சாரி என்க. நிலா அவளது நிலை உணர்ந்து அனைத்து கொண்டாள்.
“சில்வியா விடு பார்த்துக்கலாம் இனி இது போல் முட்டாள் தனம் பண்ணாதே. உன்னை நம்பி தான் உங்க அம்மாவும் தம்பியும் இருக்காங்க. இதை நான் சொல்லி தான் தெரியனுமா? உனக்கே தெரிய வேண்டாமா?
“தப்புதான்” தனது குடும்பச் சூழ்நிலை தாய் தம்பியை எண்ணி மீண்டும் கண்ணீர் வந்தது.
“ப்ச் சும்மா சும்மா அழுகாதடி கண் மூடித்தனமான அன்பும் கொடிய விஷமும் ஒன்னு தான்” என்றாள் நித்யா எதையோ எண்ணி.
“சரி விடு சாப்பிட்டியா நீ?” இருக்கும் இறுக்கத்தைச் சற்று தளர்த்த எண்ணி நிலா கேட்க.
“ஹ்ம்ம்! ஆச்சு நீங்க? காலேஜ் போகல?”
“லீவு சொல்லியாச்சு இன்னைக்கு முழுக்க உன்கூடத் தான்”, பானு.
“பசங்க சாய்ங்காலம் வருவாங்கடி” நித்யா சொல்ல பெரும் தவிப்புடன்.
“வேணாம் வேணாம் நானே இரண்டு நாளுல காலேஜ் வருவேன்னு சொல்லிடுங்க” அவளது பதற்றம் எதனால் என்பதைக் கணித்த நிலா கோபமாக.
“அப்போ இனியும் நீ பேசுறதா இல்லை அப்படித்தானே” என்றதும் மௌனம் கொண்டது பெண்.
“அவளது மௌனம் எரிச்சலை கொடுக்க உன்னையெல்லாம் திருத்த முடியாது” என்றவள் தனது கை பேசியை எடுத்துக் கொண்டு கோபமாக வெளியில் செல்ல.
பானுவும், நித்யாவும் அவளைச் சமாதானம் செய்தனர்.நடப்பு என்னவென்று தெரியவில்லை என்றாலும் ஜோசப் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.
வெளியில் சென்ற நிலா கபிலனுக்கு அழைக்க அதற்காகவே காத்திருந்தவன் போல் “என்னாச்சு டி? என்ன சொல்லுறா? எப்படி இருக்கா?” என்றவன் போனை நண்பர்கள் கேட்கும் படி செய்து மர நிழலில் அமர்ந்து கொள்ள.
அவனைச் சுற்றி மார்ட்டின், ரஃபிக், ஆனந்து, ராஜு, அமர்ந்து கொண்டனர்.
“கபி நம்ப யோசிச்சது தான் சரி.மேடம் மார்டினை லவ் பண்ணுறாங்க அதுவும் பத்தாவது படிக்கும் போதே லவ் வாம் பைத்தியமா இருக்கா”
அதுவரை எதோ என்று சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் குழு நிலா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து மார்டினை பார்க்க.அவனோ அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றான் அவனது நிலை உணர்ந்து.
“அழுகாம எப்படி நிலா? ஒரே பொண்ணு அவங்க குடும்பச் சூழ்நிலை யாருமே துணை இல்லாம என்ன பண்ணுவாங்க. சொல்லு இந்த மூக்கி இப்படி பண்ணுவான்னு நமக்கே தெரியாதே” புலம்பினான் கபிலன்.
“சரி விடு கபி நீ மார்ட்டின் கிட்ட பேசு. நான் அந்த எருமையைப் பாக்குறேன்” என்றவள் போனை அணைக்க.
அதுவரை அதிர்ச்சியில் இருந்த மார்ட்டின் தனது பையை மாட்டி கொண்டு வேகமாக நடையை கட்ட அவனைத் தடுக்க முயன்ற ராஜூவை
“ராஜு விட்டுரு”
“என்னடா இது?”
“ஊமச்சி” ரஃபிக் சில்வியாவை எண்ணி முணு முணுக்க
“இவன் போற வேகத்தைப் பார்த்தா. அவ லவ் டவுட்டு தான் போல” என்ற ஆனந்தை முறைத்து வைத்தான் ராஜு.
“அந்தப் பொண்ணைச் சும்மா வச்சு கிண்டல் பண்ணத்துக்கே கை போச்சு. இவன் லவ் ஓகே பண்ணல அவ உயிர் போயிடும்” தோழியைச் சரியாகக் கணித்தவனாக ராஜு சொல்லு கபிலனுக்கும் அதே எண்ணம் தான்.
“அதுக்காக மார்ட்டின் லவ் பண்ண முடியுமா? அவனுக்குனு ஒரு பிடித்தம் இருக்குமே” ரஃபிக்.
“சரிதான் பார்ப்போம்” என்ற கபிலன் மார்டினை நோக்கி சென்றான்.
“வணக்கம் தோழர்! தோழிகளே! நான் உங்க ஸ்ரீ பேசுறேன். இன்னைக்குக் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழைனு ஒருவிதமான மனநிலையில் தான் வந்திருக்கேன்.ஏன்னா நான் இரண்டு நாள் என் ராட்சசிய சரியா பார்க்கல.
அந்த ஆதங்கத்தோட இன்றைய கவிதையைச் சொல்லி நம்ப நாளை செம ஸ்வீட்டா ஸ்டார்ட் பண்ணலாமா? இதோ என் அன்பு ராட்சசிக்கு.
“முகில் மறைத்த கார்மேகம் போல
இலை மறைத்த கனியை போல
உன்னை மறைத்து நின்று நாட்கள்
என் வானம் விடியலை தொலைத்தது”
கவிதை வரைந்தவன் கண் மூடி ஓர் நொடி தன்னவளுடன் லயித்து நின்று நிகழ்ச்சியைத் தொடங்கினான் ஸ்ரீ.
“இன்னைக்கு நம்பப் பேச போற தலைப்பு காதல் என்னடா? பழைய டாப்பிக்னு யோசிக்காதீங்க எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எத்தனை காவியங்கள் வந்தாலும்.
இந்த வார்த்தை மட்டும் இன்னும் புதுமையைத் தாங்கி தாங்க நிக்குது. இப்போ என்னோட பேச போற முதல் காலர் யாருனு பார்ப்போம்.
“ஹலோ!”
“ஹாய்! சொல்லுங்க”
“ஹாய் ஸ்ரீ! நான் ஸ்ரீஜா! பேசுறேன்”
“ஹாய் ஸ்ரீஜா சொல்லுங்க எங்கிருந்து பேசுறீங்க”
“சேலம்”
“சேலம் ஸ்ரீஜா சொல்லுங்க உங்க பார்வையில் காதல்னா என்ன?”
“அது ஒரு மில்டி குல்டி பீல் ங்க” என்றதும் ஓர் நொடி முழித்து பின்பு பக்கெனச் சிரித்த ஸ்ரீ.
“இது என்னங்க புது மொழியா இருக்கு”
“ஆமாங்க சொல்ல தெரியாத உணர்வை இது போலத் தான் சொல்லனும்”
“அது சரி நீங்க யாரையாவது லவ் பண்ணிறீங்களா ஸ்ரீ?”
“ஆமாம் என்னோட மாமா பையன் தூரத்து உறவு”
“ஓ! அதான் உறவை பக்கமா வச்சுக்கிட்டீங்களா?” ரகசிய குரலில் ஸ்ரீ கேட்க.
“இல்ல நெருக்கமா வச்சுக்கிட்டேன்” அவளும் அதே போலச் சொல்ல உரக்க சிரித்த ஸ்ரீ
“ரொம்ப வாலு போலவே நீங்க?”
“ரொம்ப இல்லங்க கொஞ்சமே கொஞ்சம்”
“அது சரி ஸ்ரீஜா தூரமா இருக்குற உங்க நெருங்குன உறவுக்காக முக்கியமா. உங்க காதலுக்காக இதோ ஒரு இனிமையான பாட்டு கேட்டு என்ஜாய் பண்ணுங்க”
இளையராஜா இசையில் சின்னக் குயில் சித்ரா பாடிய பாடல்.
நின்னுக்கோரி வர்ணம்,
வர்ணம் இசைத்திட என்னைத்தேடி,
வரணும் வரணும் ஒரு கிளி,
தனித்திருக்க உனக்கெனத்,
தவமிருக்க இரு விழி சிவந்திருக்க,
இதழ் மட்டும் வெளுத்திருக்க,
அழகிய ரகுவரனே அனுதினமும்…
வழமை போல் அவனுக்குப் பிடித்த வரியில் கண் மூடி கரைந்து நின்றான்.
பெண்ணல்ல வீணை
நான் நீதான் மீட்டு என்னென்ன
ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல
நேற்றல்ல காலம் தோறும்
உன்னோடு பின்னோடும் காதல்
நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம்
வாடிப்போன காரணம் கன்னித்தோகை
மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே
தீயாகக் கொதிக்குது..
காதில் மாட்டிய ஹெட் போனை கழட்டாமல் அவளும் அந்தப் பாடலில் கரைந்து போனால் மனம் மட்டும் முரண்டியது.
“ப்ச்… எங்கிருந்து வந்தானு தெரியல என் உயிரை வாங்க தினம் தினம் என்னைக் கொல்லுறதுக்கு மொத்தமா கொன்னுடு டா பாவி” என்றவள்
கண் மூடி நிலாவின் மேல் சாய்ந்து கொண்டாள் வழமை போல் புன்னகையை உதிர்த்து நின்றாள் தோழி.