விக்ரம் குதூகலமாக விசிலடித்தவாறு ரகுராமை அழைத்து “டேய் மச்சான்… நான் என் கனவுக்கன்னிய பார்த்துட்டேன்” ரகுராம் ஹலோ என்று கூற முன்பே கூச்சலிடலானான்.
“உன் கனவுல வந்த பொண்ண நான் பார்காமலையே அது பாரதி என்று எனக்குத் தெரியாதா?” தனக்குள் முணுமுணுத்தவன் “நிஜமாவா வாழ்த்துக்கள்” அது பாரதி தான் என்று அறிந்திருந்தமையால் ரகுராமின் வார்த்தைகள் சாதாரணமாகவே வந்திருந்தன.
குதூகலமாக இருந்த விக்ரமுக்கு நண்பனின் வார்த்தைகள் மீது சந்தேகம் வரவில்லை. சாதாரணமான மனநிலையில் இருந்திருந்தால் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு குடைந்திருக்க மாட்டானா?
விக்ரமின் கனவில் வந்த பெண் யார் என்று அறியும் ஆர்வம் ரகுராமுக்கு இருந்திருந்தால் “டேய் யார்டா அது? எப்போ பார்த்த? எங்க பார்த்த? என்ன நடந்தது என்று” நண்பனின் குதூகலத்தில் ஐக்கியமாகி இருக்க மாட்டானா?
பாரதியை ஆஸ்ரேலியாவில் சந்தித்த பொழுது அவளே வந்து அன்பாக பேசியதும் “உனக்கு என் மேல கோபம் இல்லையா?” என்ற வார்த்தை தான் ரகுராமின் வாயிலிருந்து வந்திருந்தது.
“எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல ராம். நடந்த சம்பவத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று எனக்கு நல்லாவே தெரியும். நடந்ததை பற்றி பேச எனக்கு இஷ்டமில்லை” என்ற பாரதிக்கு விக்ரமின் பெயரை கூட சொல்ல விருப்பமில்லை என்பதை ரகுராம் நன்கு புரிந்துகொண்டான்.
“அன்னைக்கி நான் விக்ரம் கூட இருந்திருந்தா அவனை அப்படி பேச விட்டிருக்க மாட்டேன்” அன்று அவனுக்கு நண்பன் மேல் கோபம் இருந்தது உண்மை. ஆனால் நடந்த அனைத்தையும் நினைக்கும் பொழுது இன்று துளியேனும் விக்ரமின் மேல் கோபம்கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை.
விக்ரமோடு பாரதி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ரகுராமுக்கு எப்பொழுதும் தோன்றுவது தான். அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாமல், பாரதியை பற்றி விக்ரமிடம் கூறக் கூட முடியாமல் ரகுராம் எத்தனை இரவுகள் அழுதிருப்பானோ அவனே அறியான். அவளை பார்த்த உடன் விக்ரமை பற்றி பேசாமல் இருப்பானா? அவளுக்கு விருப்பம் இல்லையென்று மறைமுகமாக கூறிய பின்னும் “விக்ரம மறந்துட்டியா? மன்னிச்சிட்டியா? அவனை பத்தி கேட்கவே இல்ல” கேட்டுவிட்டான்.
“எனக்கு அவனை பத்தி எதுவும் தெரிஞ்சிக்க வேணாம்” கோபம் எட்டிப் பார்த்ததை அவள் முகம் அப்பட்டமாக காட்டிக் கொடுத்திருந்தது.
அவன் பேசியதற்கும், பேசியவைகளுக்கும் இவள் இத்தனை வருடங்களாக கோபமாக இருப்பது நியாயம் தான்.
“அன்னைக்கு அவன் ஏன் அப்படி பேசினான்னு அவன் சட்டையை பிடிச்சு கேட்க மாட்டியா?”
“நான் எதுக்கு அவன் கிட்ட கேட்கணும்? அவன் உயிர் நண்பன் உங்களுக்கு தெரியாதா? நீங்களே சொல்லுங்க” பாரதியும் விடாப்பிடியாக நின்றாள்.
“அட இதுங்கள சேர்த்து வைக்கலாம்னு பார்த்தா இவ பிடிகொடுக்க மாட்டேங்குறாளே” நொந்தவனாக “ஆமா… என்கிட்ட சொல்லிட்டுதான் எல்லாம் செய்யிறான் பாரு? முணுமுணுத்தவன் “அன்னைக்கு அழுதுகிட்டிருந்த பாரதி நீ இல்லையே. போ… போய் அவன்கிட்டயே கேளு. நல்லா சட்டையை பிடிச்சு கேளு”
விக்ரமின் தற்போதைய நிலையை இவளிடம் கூறினால் கைகொட்டி சிரிப்பாளோ? அழுது கரைவாளோ? உண்மையை கூறி அனுதாபத்தில் இவள் விக்ரமை ஏற்றுக்கொள்ள கூடாது. இவளை தவிர விக்ரமை உண்மையாக காதலிக்க யாராலையும் முடியாது. மீண்டும் அவனை பார்த்தால் மட்டும் தான் இவள் அவனை புரிந்துகொள்வாள். அவன் காதல் இவள் கோபத்தை துடைத்தெறிந்து விடும். மனக்கசப்போடு தவறான புரிதலும் விலகி விடும் என்று தோணவே அவளை உசுப்பேற்ற முயன்றான்.
“அது எனக்குத் தேவையே இல்ல. என் வாழ்க்கைல திரும்ப அவனை பார்க்கவே கூடாது என்று நினைக்கிறேன்” என்றாள்.
“ஓகே உன் இஷ்டம். தன்மானம் இருந்தா சட்டையை பிடிச்சி கேட்டிருப்ப. நான்தான் உன்ன தப்பா நினைச்சிட்டேன். அன்னைக்கி போலவே நீ இன்னைக்கும் ஒரு கோழை தான்” அவளை கோபப்படுத்தினால் நிச்சயமாக அவள் விக்ரமை தேடி வருவாள் என்றறிந்தே பேசினான்.
அது மட்டுமா? விக்ரமை வைத்தே பாரதிக்கு தங்கள் கம்பனியில் வந்து வேலை பார்க்குமாறு மெயில் வேறு அனுப்ப வைத்தான்.
இத்தனை வருடங்களாக யாரும் அவளிடம் விக்ரமை பற்றி பேசியிருக்கவில்லை. ரகுராம் வந்து பேசிய பின் கடந்த கால ஞாபகங்கள் தட்டி எழுப்பப்பட்டிருக்க, விக்ரமை பற்றி ஆன்லைனில் தேடிப்பார்களானாள். விக்ரமை புகைப்படத்தில் பார்த்த பின் தான் பாரதி அவனை காண செல்லலாமென்று முடிவெடுத்தாள்.
காயப்பட்டிருக்கும் அவள் மனம் அவன் மீதிருக்கும் காதலை உணராமல் “நான் மட்டும் நடந்ததை நினைச்சுகிட்டு இத்தனை வருஷமா சோகமாக இருக்கேன். அவன் சிரிச்சுக்கிட்டு இருக்கான். நானும் சந்தோஷமாகத்தான் இருக்கேன்னு அவனுக்கு தெரிய வேணாம்?” என்று தனக்கே காரணத்தை கூறி சமாதானப்படுத்திக் கொண்டு தான் விக்ரமிடம் வேலை பார்க்க வந்திருந்தாள் பாரதி.
வந்தவள் வந்த உடனே ரகுராம் கூறியது போல் விக்ரமின் சட்டையை பிடித்து கேட்டிருந்தால் விக்ரமின் நிலை அவளுக்கு தெரிந்திருக்கும். சட்டையை பிடித்தென்ன யாரையும் முகத்துக்கு நேராக திட்டும் ரகம் அல்லவே பாரதி. பின்னர் எதற்காக பாரதி விக்ரமின் இடத்தில் அவனோடு வேலை பார்க்க சம்மதித்திருந்தாள்?
அன்று நடந்ததை மீண்டும் பேச என்ன? நினைக்கக் கூட விரும்பாதவள் அவனை தேடி வந்ததன் காரணம் சண்டை போடவோ, அன்று அவ்வாறு ஏன் பேசினாய் என்று காரணம் கேட்கவோ அல்ல.
அவன் அவளை குற்றம் மட்டும் சாட்டவில்லை. கேவலமான ஒரு வாழ்க்கையை தான் வாழ்வாய் என்று சாபமிடாத குறையாக பேசிவிட்டானே.
“பார்… பார்… நீ நினைத்ததற்கு மாறாகவே நான் என் வாழ்வில் சாதித்து விட்டேன். அதுவும் நீ இருக்கும் துறையில். நீயாகவே வந்து என்னை வேலைக்கு அழைத்திருக்கிறாய். இது தான் என் வெற்றி என்று அவனுக்கு பறை சாற்ற வேண்டியே கிளம்பி வந்திருந்தாள்.
அவனிடம் வேலை பார்க்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. அவளை பார்த்த உடன் கோபத்தில் அவன் முகம் சிவந்து கத்தி அவளை வெளியேற்ற முயல்வான். அப்பொழுது அவனை மனதில் உள்ள ஆத்திரம் தீர பேசி விட்டு அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பது தான் அவள் திட்டம்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பது உண்மை என்பதை நிரூபிக்க வேண்டியே விக்ரம் பாரதியிடம் அவள் நினைத்ததற்கு மாறாக நடந்து கொண்டிருக்க, அவன் நடிப்பதை நிரூபிக்க அவனிடம் வேலை செய்ய முடிவெடுத்ததோடு அவன் முகத்திரையையும் கிழிக்க எண்ணினாள் பாரதி.
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன் இளமை
இளமை பாதித்தேன் கொள்ளை
கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே
“நேத்து நீங்க டயடா இருப்பீங்க என்று எக்ரிமெண்ட்டை பத்தி பேசல. இன்னைக்கி பேசலாமா?” எப்பொழுது பாரதி வருவாள் என்று கழுகுக் கண்ணால் காத்திருந்தவன் அவள் உள்ளே நுழைந்ததும் ஓடிச்சென்று பேசலானான்.
பேசி முடித்து விட்டு இடுப்பில் கைவைத்தவாறே ஆழமாக மூச்செடுப்பவனை வித்தியாசமாக பார்த்த பாரதி “ஓஹ் சுவர்” என்று அவனோடு மின்தூக்கியினுள் நுழைந்தாள்.
“ரெண்டு நிமிஷம் வைட் பண்ணியிருந்தா லிப்ட்டுலையே வந்திருக்கலாம். அத விட்டுட்டு சின்ன பையன் போல நாலு மாடி படிகல்ல ஓடாத குறையாக இறங்கி வந்தது மட்டுமில்லாம, தாவி உருண்டு இவ முன்னாடி மூச்சு வாங்க நின்னேன். என்ன நினைக்கிறாளோ” கம்பனிக்குள் கெத்தாக, நேரான பார்வையோடு, எல்லோரும் மதிக்கும்படி நடந்து வரும் தான் தானா பாரதியை கண்டதும் இப்படி ஓடி வந்தேன் என்று நினைக்கையில் விக்ரமுக்கே ஆச்சரியமாக இருந்ததோடு அசிங்கமாகவும் இருந்தது.
மின்தூக்கியிலிருந்து வெளியே வரும் வரையில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெளியே வரும் பொழுது விக்ரம் தன்னை நிலைப்படுத்தியிருந்தான்.
பாரதியை அமரும்படி கூறியவாறே ஒப்பந்த ஆவணத்தை கொடுத்தவன், அவளுக்கு அருந்த தேநீர் தயாரித்ததோடு தேநீரோடு அவளுக்கு பிடித்தமான சாக்லட் கேக்கும் பரிமாறினான்.
ஆவணத்தை படித்தவளுக்கு அதில் எந்த சிக்கலும் இருப்பதாக தெரியாததால் கையொப்பமிட்டு விக்ரமின் கையில் கொடுத்தாள்.
ஆவணத்தை கையில் வாங்கியவாறே தேநீரை அருந்தும்படி கண்களாளேயே கூறினான் விக்ரம்.
தேநீரோடு இருந்த கேக்கை பார்த்த பாரதி “எனக்கு என்ன பிடிக்கும் என்று இவன் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கின்றானா?” ஒரு நொடி அவனை ஆச்சரியமாக பார்த்தவள் மீண்டும் அவன் அவளை ஏமாற்ற திட்டம் தீட்டுவதாக எண்ணி அலட்ச்சியமாக புன்னகைத்தவாறே “நான் கேக் சாப்பிட மாட்டேன் மிஸ்டர் விக்ரம். அதுவும் சாக்லேட் கேக் என்றா எனக்கு சுத்தமாக பிடிக்காது” வாந்தி வருவது போல் பாவனை செய்தவாறே தேநீரை அருந்தலானாள்.
“ஓஹ்…” இனிமேல் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன் என்பது போல் அவளை பார்த்தவன் “என்ன விக்ரம் என்றே கூப்பிடலாம். எதுக்கு மிஸ்டர்” அவளது “மிஸ்டர்” என்ற அழைப்பு அவன் நெஞ்சில் முள்ளாய் குத்தி கவலைகொள்ள செய்ததோடு, அவள் அவனுக்கு நெருக்கமானவளாக இருக்க வேண்டும் என்ற ஆவல் எட்டிப் பார்த்திருக்க புன்னகை முகமாக கூறினான்.
“என்ன இவன் நான் எனக்கு பிடித்தமான ஒன்றை பிடிக்கவில்லையென்று கூறியும் காரணம் கேட்க மாட்டேன் என்று கண்டு கொள்ளாமல் இருக்கின்றானே. தன்னை காதலித்த விக்ரமாக இருந்திருந்தால் காரணம் கேட்டதோடு என்ன பிரச்சினை என்று கேட்டு குடைந்திருப்பான். இவன் அவனில்லை. என்னை தெரியாதது போலவே நடிக்கிறான். ஏன்?” என்ற கேள்வி பாரதிக்குள் எழுந்தாலும் விக்ரமால் பாதிக்கப்பட்ட அவள் மனம் வேறு எதையும் சிந்திக்க விடவில்லை.
“வேறு எதற்காக அன்று என்னை காதலித்து ஏமாற்றியது போல் மீண்டும் முயற்சிக்கின்றான். நான் அன்றிருந்த பாரதியல்ல. உன் பேச்சில் மயங்கி நாடகத்தில் பங்கேற்க” என்று நினைத்தவள் அவன் அவளை தன்னுடைய பெயரை சொல்லி அழைக்கலாமே என்று கூறியும்
“மிஸ்டர் விக்ரம் நாம வேலையை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.
அவளின் “மிஸ்டர் விக்ரம்” என்ற அழைப்பில் சோகமானவன் அதை முகத்தில் காட்டாது சரியென்று தலையாட்டியதோடு வேலையில் மும்முரம் காட்டலானான்.
பாரதி ஒரு தடவை விக்ரமின் கனவில் வந்த பொழுது அவன் அவளுக்கு சாக்லட் கேக் வாங்கி ஊட்டியும் விட்டிருந்தான். அவளுக்கு பிடிக்கும் என்று தான் வாங்கி வைத்திருந்தான். அவளுக்கு பிடித்திருக்கு என்று கூறியிருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருப்பான். தான் காணும் கனவுகளுக்கும் நிஜத்துக்கும் சம்பந்தம் இருக்குமா என்று சந்தேகப்பட்டிருப்பான். பாரதி பிடிக்கவில்லை என்று கூறியதால் யோசிக்காமல் விட்டு விட்டான்.
“நீ என் கனவில் வந்தவள். நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூற எத்தனை நொடிகள் எடுக்கும். கூறினால் மட்டும் பாரதி அவனை நம்புவாளா? உடனே ஏற்றுக்கொள்வாளா? நிச்சயமாக இல்லை. மெதுவாகத்தான் தனது அன்பை அவளுக்கு புரிய வைக்க வேண்டும். அவளை அச்சப்படுத்தக் கூடாது என்றே அமைதியாக வேலை பார்கலானான்.
ஆனால் அவன் கண்கள் அவனையறியாமலேயே அவளை காதலாக பார்த்து வைத்ததோடு இதழ்கள் ரகசியமாக புன்னகைத்தும் கொண்டன.
வாரத்தில் எத்தனை
நாள் பார்ப்பது
அன்றாடம் வந்து
பார்க்க ஏங்குது
வாராமல் போகும்
நாட்கள் வீணே என
வம்பாக சண்டை
போட வைக்குது
சொல்லப் போனால்
என் நாட்களை வண்ணம் பூசி
தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய்
வந்தவளும் நீதான்
எத்தனை நாள்
எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று
எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல்
உள்ளே ஓடுது
கண் மூடி கண் மூடி
காதோரம் பாடுது
“ஹாய்” என்றவாறே உள்ளே வந்தான் ரகுராம்.
“ஹாய் ராம்” அமர்ந்தவாறே கையசைத்தாள் பாரதி.
“தான் இருவரையும் அறிமுகப்படுத்த முன் இருவரும் சந்தித்துக் கொண்டார்களா? எப்பொழுது? நேற்று ஷூட்டிங் இருப்பதாக ரகு வெளியே சென்றானே. ஆமா அதென்ன என்ன மட்டும் “மிஸ்டர் விக்ரம்” என்று கூப்பிடுறா. இவன மட்டும் செல்லமா “ராம்” என்று கூப்பிடுறா” நண்பனை கொலைவெறியோடு முறைத்தான் விக்ரம்.
பாரதியிடம் தனக்கில்லாத நெருக்கம் இவனுக்கு எப்படி வந்தது என்ற பொறாமை எட்டிப் பார்த்திருக்கவே விக்ரம் இவ்வாறு யோசித்தான். முன்னே பின்னே அறியாதவனான ரகுராமை எழுந்து நின்று தானே வரவேற்றிருப்பாள் என்ற சந்தேகம் வந்திருந்தால் “உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே தெரியுமா? எப்படி” என்று தானே கேட்டிருப்பான்.
அவன் அவ்வாறு கேட்டிருந்தால் விக்ரம் ஏன் இவ்வாறு கேட்கிறான் என்று பாரதி அதிர்ச்சியாக அவனிடமே கேட்டிருக்க மாட்டாளா? அவனுக்கு என்ன ஆயிற்று, அவன் நிலை என்ன என்ற உண்மை இப்பொழுதே அறிந்துகொண்டிருப்பாளே!
அவள் மீது அவன் வைத்திருக்கும் கண்மூடித்தனமான காதல் அவனை யோசிக்க விடாமல் செய்ததோடு, அவள் உண்மையை அறிந்துகொள்ள தடுக்க வேறு செய்திருந்தது. அவள் உண்மையை அறியும் நேரம் வரும் முன் விக்ரம் என்ன என்ன இன்னல்களை சந்திக்க இருப்பானோ?
விக்ரமின் முகத்தைப் பார்த்தே அவன் பொறாமையின் உச்சத்தில் இருப்பது ரகுராமுக்குப் புரிந்தது. நேற்று அலைபேசியில் பாரதியின் புகழ் பாட ஆரம்பித்தவன் இரவு அவனை தூங்க விடாது அவளைப் பற்றி மட்டும் தானே பேசினான். அதுவும் அவள் அவனைத் “மிஸ்டர்” என்று அழைத்துத் தூர நிறுத்துவதாகக் குறை வேறு. அவளுக்கு அவன் மீது கோபம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் தான் அவள் உன்னைத் தூர நிறுத்தி வைக்கிறாள் என்று அவனிடம் சொல்லவா முடியுமா? அல்லது. நேற்று முழுக்க உன்னைப் பற்றித் தான் இவன் பேசினான் என்று பாரதியிடம் கூறி அவனைச் சமாதானப்படுத்தத்தான் முடியுமா?” விழிபிதுங்கலானான் ரகுராம்.
“எக்ரிமண்ட் சைன் பண்ணியாச்சா?” பட்டும்படாமலும் பேசியவன் அமர்ந்தவாறே “இனிமேல் என் ட்ரெஸ் எல்லாம் உன் பொறுப்பு” பாரதியை பார்த்து புன்னகைத்தான்.
ரகுராம் பாரதியை ஒருமையில் அழைத்ததும் மேலும் அவனை முறைத்த விக்ரம், பாரதியிடம் திரும்பி. “நீங்க உங்க கேபினுக்கு போங்க. இல்ல நானே வந்து விடட்டுமா?” அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் கேட்டான்.
அவளை அனுதினம் ரசிக்கவெனவே அவனறையின் அருகிலையே அவளுக்கான அறையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். கண்ணாடியிலான அறை வேறு.
இவன் அறை வாயிலிருந்து பத்தடி எடுத்து வைத்தால் அவளது அறையின் கதவு வந்துவிடும். எதற்காக இவன் இவ்வளவு நடிக்கிறான் என்று பாரதி எண்ணியவாறே “அவசியமில்லை மிஸ்டர் விக்ரம். நானே போகிறேன்” என்று எழுந்து கொண்டு ரகுராமை பார்த்து “நாம இன்னொரு நாள் பேசலாம். பை தி வே ஆல் தி பெஸ்ட் போர் யுவர் ரிலேஷன்ஷிப்” என்று நக்கலாக கூறிவிட்டு விடைபெறறாள்.
விக்ரம் பரப்பி விட்ட செய்தியால் அவள் தங்களை கிண்டல் செய்கிறாள் என்று புரிய ராம் புன்னகைக்கலானான்.
ரகுராமை “ராம்” என்று தான் பாரதி எப்பொழுதும் அழைப்பாள். அவள் இங்கு வேலைக்கு சேர்ந்ததை விக்ரம் கூறியிருப்பான் என்று அறிந்திருந்தமையால் வளமை போல் அவள் அவனோடு பேசினாள். வேலைக்கு சேர மாட்டேன் என்றவள் வந்ததன் காரணத்தை அவன் கேட்பான் என்றும் பாரதி எதிர்பார்த்தாள். இருவரையும் பேச விடாது விக்ரம் வேலையை காரணம் காட்டி அவளை அனுப்பியது அவளுக்கு வித்தியாசமானது தெரியவில்லை. அவன் ஒரு காரியவாதி. அவன் வேலை அவனுக்கு முக்கியம் என்று தான் எண்ணினாள். அதுவும் விக்ரமை முன்னால் வைத்துக் கொண்டு ரகுராமிடம் பேசத்தான் முடியுமா?
“டேய் அவ ஏன் ஆளு. என்னோட எல்லாத்தையும் பங்கு போடுறது போல லவ்லயும் பங்கு போட பாக்குறியா? நான் ப்ரேக்கட் போட்டா நீ பாக்கட்ல போட்டுக்க பாக்குறியா?” பொறாமையில் கொதித்தான் விக்ரம்.
“இதோ பாருடா ரோமியோ அவதாரம் எடுத்துட்டான்” விக்ரமின் வார்த்தைகள் கோபத்தில் வந்ததல்ல பொறாமையில் வந்தது என்று அறிந்தமையால் உள்ளுக்குள் சிரித்த ரகுராம்
“அட மரமாண்ட அவ கிண்டல் பண்ணிட்டு போனது உனக்கு புரியலையா? நீ பண்ணி வச்ச காரியம் தான் உனக்கு ஆப்பு மாமு. அவ நாம ரெண்டு பேரும் கபல் என்று நினைக்கிறா. இது நீ அவளை லவ் பண்ணுறது எப்படி சொல்லுவ? நானாச்சும் நமக்குள்ள அப்படி எதுவும் இல்லனு புரியவைக்க வேணாமா? அதுவும் எனக்கு பொண்ணுங்கதான் பிடிக்கும் என்று அவ தெரிஞ்சிக்கிறது ரொம்ப… முக்கியம்” எதோ ரகுராமுக்கும் பாரதியை பிடித்திருக்கிறது என்பதை போலவே பேசி நண்பனை வெறுப்பேத்தினான்.
தனக்கு பாரதியை எவ்வளவு பிடிக்கும். அவளை நேசித்ததை அறிந்த பின்னும் ரகுராம் இப்படி பேசுகிறான் என்றால் வேறு எதற்காக இருக்கும் என்று கூட புரியாமல் இருக்க விக்ரம் ஒன்றும் குழந்தையல்லவே “என்ன பழிவாங்கப் பாக்குறியா?” விக்ரம் ரகுராமை கொலைவெறியோடு முறைத்தான்.
“உன்ன பழிவாங்க முடியுமா ராசா? உனக்கு ஒன்னுனா உன் தொங்கச்சி பத்ரகாளி அவதாம் எடுப்பாளே” மோகனாவை நினைத்து உடல் நடுங்கியவன், தலையை சிலுப்பினான்.
“ஆமா அவ வேற நாளைக்கு வர்றதா சொன்னா…” பாரதியின் மேல் இருந்த காதல் மயக்கத்தில் மோகனாவை மறந்து தான் போய் இருந்தான் விக்ரம்.
“நாளைக்கா?” அதிர்ச்சியில் வாயை பிளந்தான் ரகுராம்.
“நீதான் ஏர்போர்ட் போகணும்”
அந்த பிசாச நான் போய் கூட்டிட்டு வரணுமா” என்று மனதில் நினைத்தவன் “நானா….? என்னால முடியாது. நான் போனா என்ன சுத்தி கூட்டம் கூடும்” ஏதாவது காரணம் கூறி மறுக்க வேண்டும். இருக்கவே இருக்கே அவன் ஸ்டர்டம். அதையே கூறி கழண்டு கொண்டான் ரகுராம்.