சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பாரதி நேராக சென்றது V.A நிறுவனத்திற்கு. வண்டியில் ஏறி அமர்ந்தவளுக்கு அவளுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணை தான் ஞாபகத்தில் வந்தது.
“ஏன் பாரு ஆஸ்திரேலியால இல்லாத வேலையா? போயும் போயும் அந்த விக்ரம் கம்பனில தான் போய் வேலை பார்க்கணுமா? அதுவும் இந்தியால?” பாரு எனும் பாரதியை யோசனையாக ஏறிட்டான் கார்த்திகேயன்.
“மாமா நான் ஒரு ப்ரொபெஷனல் டிஷைனர். எனக்கு வேலை கொடுக்க பெரிய பெரிய கம்பனிங்க எல்லாம் தயாரா இருக்கும் பொழுது நான் ஏன் அவனுடைய கம்பனில வேலை செய்யணும் என்று முடிவு செஞ்சேன் என்று உனக்குத் தெரியாதா?” தனது மாமா கார்த்திகேயனை முறைக்காத குறையாக ஏறிட்டாள் பாரதி.
“உனக்கு அவன் மேல இன்னும் பீலிங்ஸ் இருக்கா? இத்தன வருஷமாகியும் உன்னால அவன மறக்க முடியலையா?” இத்தனை வருடங்களாக தன்னோடு இருப்பவளின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிய வேண்டியே கேட்டான் கார்த்திகேயன்.
“காதலிக்கிறேன்னு சொன்ன அடுத்த கணமே அத்தனை பேர் முன்னாடியும் என்ன அவமானப்படுத்தியவன இத்தனை வருஷமா நான் நினைக்கிறேன்னா அவன் என் நெஞ்சில ஒரு முள்ளா குத்திக்கிட்டு இருக்கான். அவன் எனக்கு கொடுத்த வலியையும், வேதனையையும் நான் அவனுக்கு திருப்பிக் கொடுக்க வேணாமா? அதுக்கு அவனே எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கானே. அத நான் சரியா பயன்படுத்திக்க வேணாமா? அது மட்டுமா இன்னும் என்னவெல்லாம் சொன்னான்” நடந்த சம்பவத்த்தை மறக்க முடியாமல் தவித்தவளின் இத்தனை வருடங்களாக மனதில் இருக்கும் வேதனையை வார்த்தைகளால் கொட்டி விட முடியுமா? நிதானமான மூச்சோடு பேசினாள் பாரதி.
“நீ அவனை பழிவாங்க நினைக்கிறது எனக்கு சரியா தோணல. நீ அவன் முன்னாடி போய் நின்னா மட்டும் அவன் உன்ன நம்பிடுவானா? மூவ் ஆனாகி நீ உன் வேலைய பாரேன். உனக்காக நாங்க இருக்கோம்” மடியில் துயில் கொண்டிருக்கும் தன் மகளின் தலையை கோதியவாறே கரிசனமாக அவளை பார்த்தான் கார்த்திகேயன்.
“நான் அவன பழிவாங்கணும் என்று நினைக்கல. என் அப்பா இறந்தது ஒரு விபத்து. அதுக்கு காரணம் அவங்க அப்பாவோட கம்பனி தரமில்லாத மெஷின்ஸ் யூஸ் பண்ணது. அத அவங்க ஏத்துக்காம, தனியா வேலை பார்த்தது எங்கப்பாவோட குத்தம் என்று சொன்னதுமில்லாம, மெஷின்ஷ பார்க்க வேண்டியது மேனேஜருடைய பொறுப்பு என்று அவரை பலியாடாக்கி தப்பிச்சிட்டாங்க. அது தெரிஞ்சும் நான் அவனை குத்தம் சொல்லலையே. அவன் அப்பா பண்ணதுக்கு இவன் எப்படி பொறுப்பாவான் என்று விட்டுக் கொடுத்து தானே போனேன். ஆனா அவன்…” தொண்டையடைக்கவே மூச்சை இழுத்து விட்டவள்
“எங்கப்பா இறக்கும் பொழுது எனக்கு அஞ்சி வயசு. எனக்கு எங்கப்பா முகம் கூட சரியா ஞாபகமில்ல. இதுல எங்கப்பா இறப்புக்கு பழிவாங்கத்தான் நான் அவன காதலிச்சேன்னு பொய்யா குற்றம் சாட்டி, அத்தனை பேர் முன்னாடியும் என்ன அவன் அவமானப்படுத்திட்டான். அவனுக்கு ஒரு காரியமாகனும் என்றா அவன் எந்த எல்லைக்கும் போவான். அவன மாதிரி ஒருத்தன இன்னும் நினைச்சுகிட்டு தான் உன் கூட இருக்கேன்னு நினைக்கிறீங்களா?”
“நீ அந்த விக்ரம எப்படியெல்லாம் காதலிச்ச என்று கூட இருந்த எனக்குத் தெரியாதா? திரும்ப அவன தேடிப் போனா உனக்கு வலியும், வேதனையும் கிட்டுமோ என்று தான் எனக்கு பயமா இருக்கு. ஆனாலும் நான் உன்ன தடுக்க மாட்டேன். உனக்கு தேவைபடும் போது நான் உன் கூட இருப்பேன். எதுவானாலும் உனக்காக நான் இருக்கேன்னு மட்டும் மறந்துடாத”
கார்த்திகேயனை “மாமா” என்று அழைத்தாலும் அவளுக்கு அவன் நண்பன் தான். அவளுடைய சுக, துக்கங்களில் பங்கு வகிப்பவன் அவன் மட்டும் தான்.
கார்த்திகேயனை நினைத்துப் புன்னகைத்தவளின் அலைபேசி அடிக்கவே இன்முகமாக அலைபேசியை ஏறிட, கார்த்திகேயனின் என் மின்னியத்தை பார்த்து இயக்கி காதில் வைத்தாள்.
“உனக்கு ஆயுசு நூறு மாமா. இப்போதான் உன்ன நினச்சேன்”
“தெரியும், தெரியும். நீ என்ன பத்தி மட்டும் தான் நினைப்ப. நான் போன் பண்ணது உனக்கு வீடு பார்த்துட்டேன். வேல வேல என்று ஆபீஸே கதியாகி அங்கேயே தூங்கிடாத. வீடு பெருக்க, சமைக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன். அட்ரெஸ் வாட்ஸ் ஆப் பன்னுறேன்” கார்த்திகேயன் மறுமுனையில் பேச அவனை தொந்தரவு செய்யலானாள் கவிபாரதி.
“அப்பா…. அப்பா… நானும் அம்மாகிட்ட பேசணும்”
“ஹே கவி…” என்று பாரதி குதூகலமாக அலைபேசியை கவியிடம் கார்த்திகேயன் கொடுத்திருக்க, கவியோடு ஐக்கியமானாள் பாரதி.
“என்னடா ரெண்டு நாளா ஒரு மாதிரியா இருக்க?” நண்பன் யோசனையாக இருப்பதை பார்த்த ரகுராம் கேட்டான்.
“கொஞ்ச நாளாவே என்னோட வலது கண் இமையும், இடது கண் இமையும் மாறி, மாறி துடிக்குது. எப்பவுமில்லாம எதுக்கு துடிக்குதுன்னு கூகுள்ல தேடிப்பார்த்தேன். இடது கண் இமை துடித்தால் உங்களை தேடி விரைவில் நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும். அதுவே உங்களின் வலது கண் இமை துடிக்கும் பட்சத்தில் உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் என்று போட்டிருந்தது” படு சீரியஸாக கூறலானான் விக்ரம்.
அவனது கண் இமைகள் மாறி, மாறி துடிக்கவே “பாரு, பாரு திரும்ப துடிக்குது” அசையாமல் நண்பனை அழைத்தான் விக்ரம்.
கண்களை விரித்து அவனை பார்த்த ரகுராமோ “ஆ துடிக்குது. அதுக்கு நீ சொன்ன ரீஸன் இல்ல. உனக்கு கண்ணுல எதோ பிரச்சினை. முதல்ல போய் நல்ல கண் டாக்டரப் பாரு. முப்பது வயசு தாண்டிருச்சுல்ல. இந்த மாதிரி பிரச்சினைகள் வரத்தான் செய்யும்” அறிவுரை கூறுவது போல் கிண்டல் செய்யலானான் ரகுராம்.
“உனக்கும் எனக்கும் ஒரே வயசுதான். உனக்கு வராத பிரச்சினை எனக்கு மட்டும் வருமா? எனக்கு எது வந்தாலும் அது உனக்கும் வரும். அதனால யோசிச்சு பேசு” சிரிக்காமல் சொன்னான் விக்ரம்.
“பேசிப் பேசியே காதுல ரெத்தம் வர வைக்கிற நீ கண்ணுளையே குத்தி இல்லாத வியாதிய வர வைச்சிடுவ போலயே. எனக்கு ஷூட்டிங்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்’
“எங்க கிளம்புற? இன்னக்கி அந்த டிசைனர் பாரதி வர்றதா சொன்னியே, எங்க அவங்க?”
“இந்நேரத்துக்கு வந்திருப்பாளே” ரகுராம் கைக்கடிகாரத்தை பார்க்க, விக்ரமின் பி.ஏ கதவை தட்டி பாரதி வந்திருப்பதாக தெரிவித்தான். பாரதி வந்து விட்டதால் ரகுராம் பாரதியை ஒருமையில் பேசியது விக்ரமின் கவனத்திற்கு வரவில்லை.
“இதோ வந்துட்டாங்கல்ல. நான் கிளம்புறேன்” என்ற ரகுராம் பாரதியை இப்பொழுது சந்திக்கக் கூடாதென்று விக்ரமின் அறையில் இருக்கும் இன்னொரு கதவின் வழியாக வெளியேறினான்.
உள்ளே வந்த பாரதியை இன்முகமாக வரவேற்ற விக்ரம் அவளுக்கு கைகுலுக்க கையை நீட்டியவாறே அவளை கூர்ந்து நோக்க, தன் கனவில் வருபவள் நேரில் நிற்கத்தான் தன் கண் இமைகள் துடித்தனவா? என்று கண்களை கசக்கி அவளை பார்த்து அதிர்ந்து சிலையானான்.
நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல்
இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா
சொல்
ஆடை மாற
ஜாடை மாற கூந்தல்
பாதம் யாவும் மாற
கண்களோ உன்
கண்களோ மாறவில்லை
கண்களோ என் கண்களோ
ஏமாற வில்லை
பொய் கூறவில்லை
பாரதிக்கு அவனை பார்த்து அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. ஆன்லைனில் விக்ரம் பரப்பி விட்ட செய்தியால் இத்தனை வருடங்கள் கழித்து அவளால் அவனை காண முடிந்ததன் விளைவாகத்தானே ரகுராம் ஆஸ்ரேலியா வந்த பொழுது பேசியதை பொருட்படுத்தாமல் இங்கு வேலைக்கு சேர்ந்திருந்தாள்.
சிறந்த டிசைனர் என்று பெயர் பெற்றாலும் பாரதியின் புகைப்படங்கள் எதுவும் ஊடகங்களில் வந்திருக்கவில்லை. பெயரை பார்த்தே விக்ரம் தன்னை வேலைக்கு எடுக்க மாட்டான் என்று எண்ணிய பாரதிக்கு அவன் அவளை பாராமலையே வேலையில் சேர்த்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவளை யார் என்றே தெரியாதது போல் அவன் பேசியதில் அவனுக்கு வீரியத்தை விட காரியம் தான் பெருசு என்று எண்ணினாள்.
“பக்கா பிசினஸ் மேன்” தான் என்று தன்னை பார்த்து அதிர்ந்து நின்றவனை முதல் முறை பார்ப்பது போல் பார்த்து வைத்தவள் அழகாக வணக்கம் வைத்தாள். கூடவே ஆன்லைனில் வந்த செய்தி வேறு ஞாபகத்தில் வரவே சிரிப்பை அடக்கலானாள். அது புன்னகையாக மலர்ந்து மேலும் அவள் அழகை கூட்டியிருந்தது.
எதிரே நிற்பவளின் அசைவுகள் கண்களுக்குள் நுழைந்தாலும் மூளையை எட்டவில்லை. அவள் புன்னகை முகம் மட்டும் மனதில் ஓவியமாக பதிய அவளையே பார்த்திருந்தான் விக்ரம்.
தன்னை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவன் கோபத்தில் துரத்தியடிப்பான் என்று எண்ணிய பாரதிக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
அவன் கண்கள் அவளை ரசனையாக பார்ப்பதை பிடிக்காமல் தொண்டையை கனைத்தவாறே அவன் பெயரை சொல்லி அழைத்தாள்.
அவள் குரலில் கரைந்து, தெளிந்தவன் அவளை அமரும்படி செய்கை செய்தவாறே “பாரதி…. அழகான பெயர். மிஸ்ஸா? மிஸிஸ்ஸா?” அதை அறிந்துகொள்ளாமல் மண்டை வெடிப்பது போல் இருக்க கேட்டே விட்டான்.
“எனக்கு இருபத்தி எட்டு வயசு மிஸ்டர் விக்ரம். இன்னும் நான் சிங்களாக இருப்பேன்னு நினைக்கிறீங்களா?” என்னோட பெர்சனல் லைப்பையும், ப்ரொபஷனல் லைப்பையும் நான் கன்பியூஸ் பண்ணிக்க மாட்டேன் டோன்ட் ஒர்ரி” என்னமோ அவளுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தால் வேலையை சரியாக செய்யமாட்டாள் என்று கேட்கிறானோ என்று எண்ணியவள், அவனை பார்க்க அவன் முகம் தெளிவில்லாமல் இருக்கவே “சந்தேகப்படுகிறானோ” என்று நினைத்து சத்தமாக சிரித்து விட்டு “நான் உங்க கம்பனில வேல பார்க்க வந்தேன். என்னோட பெர்சனல் லைப்பை பத்தி டிஸ்கஸ் பண்ண இல்ல. உங்களுக்கு என் கூட வேலை பார்க்க விருப்பமில்லை என்றா நான் இப்போவே கிளம்புறேன்” என்று எழுந்துகொண்டாள்.
இவனால் தான் பட்டதே போதும். தன்னுடைய குடும்பமும் அவதியுற வேண்டுமா? என்று ஒரு கணம் தோன்றினாலும் இவனால் அப்படி என்ன செய்து விட முடியும்? என்று கூட தோன்றியது.
காலேஜ் செல்லும் பொழுது அப்பாவித்தனமாக இவன் பின்னால் சுற்றிய பாரதி என்று எண்ணினால் அது இவன் தவறு. இவனிடம் திமிராகத்தான் பேச வேண்டும் என்று எண்ணியே அவ்வாறு பேசினாள்.
அது மட்டுமா? அவனுக்கு காரியம் தானே பெரிது. நிச்சயமாக அவன் வேலையை விட்டு செல்ல விடமாட்டான் என்ற திடமான நம்பிக்கையில் எழுந்து நின்றிருந்தாள்.
அவள் எண்ணியது போல் “ஓகே கூல். நாம வேலைய பத்தி மட்டுமே பேசலாம்” என்றவன் எழுந்து கொண்டதோடு தனது கம்பனியை பற்றி பேசியவாறே அங்கு வேலை செய்பவர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தி வைக்க அழைத்து சென்றான்.
அறிமுகப்படலமெல்லாம் சுமூகமாகத்தான் முடிந்தது. ஆனால் விக்ரமின் பார்வை மட்டும் பாரதியை விட்டு அகலவில்லை. தன் கனவில் வருபவள் நேரில் வந்து நின்றதன் அதிர்ச்சி, ஆச்சரியம் என்று வழமைக்கு மாறாகவே புன்னகைக்கலானான்.
“அளவா ஸ்மைல் பண்ணுற நம்ம பாஸுக்கு இப்படிக்கு கூட சிரிக்கத் தெரியுமா?” என்று வேலை பார்ப்பவர்கள் கூட புறணி பேசலாயினர்.
பாரதி தன் அருகில் இருப்பதால் தன்னிலையை மறந்தவன் அவர்களை கண்டு கொள்ளும் மனநிலையிலா இருப்பான்? மீண்டும் அவளை தன்னறைக்கு அழைத்து வந்தவன் “பாரதி உங்களுக்கும் சேர்த்து நான் லன்ச் அரேஞ் பண்ணியிருக்கேன் சாப்பிட்டே போகலாம்” என்றான்.
அவள் தான் மிஸ்ஸா? மிஸிஸ்ஸா என்று கூறவில்லையே! எதோ அவனுக்காக வேண்டியே அவள் பெயர் வைத்திருப்பது போல் உரிமையாக அவள் பெயரை கூறி அழைத்தான்.
விக்ரம் தன் பெயரை கூறி அழைத்ததும் பாரதிக்கு சினம் தலைக்கேறியது. “ரதி, ரதி” என்று தன்னை அழைப்பவன் இன்று “பாரதி” என்று முழுப்பெயரையும் கூறி அழைத்ததனால் வந்த கோபம் என்று கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நெஞ்சம் முழுவதும் அவன் மீது கோபத்தை நிரப்பி வைத்திருப்பவள் அவன் தனது முழுப்பெயரையும் கூறி அழைத்ததை ஆராய்ச்சி செய்வாளா? யோசிக்கக் கூட மாட்டாள். மாறாக அவன் மீது கோபம் மாட்டு தான் கொள்வாள்.
“நோ மிஸ்டர் விக்ரம். லோங் ட்ராவல் சோ ரொம்ப டயடாக இருக்கு. வீட்டுக்கு போய் ஒரு குளியலைப் போட்டு, தூங்கி எழுந்து தான் சாப்பிடணும்”
எத்தனை நாட்கள் அவனுக்கு ஊட்டி விட்டிருப்பாள்? அவன் ஊட்டியதை சாப்பிட்டிருப்பாள். இவன் கூட சேர்ந்து சாப்பிடுவதா? தன்னை பற்றி இவன் என்ன நினைக்கிறான்? அன்று அவன் அவ்வளவு பேசிய பின்னும் அவனிடமே வேலைக்கு வந்ததால் சுயமரியாதை அற்றவள் என்று எண்ணுகின்றானா? அதற்காகவே காரணங்கள் கூறி மறுத்தாள்.
“ஓகே நோ ப்ரோப்ளம் பாரதி. என் வண்டியிலையே உங்க வீட்டுக்கு போங்க. சாப்பாடும் எடுத்துக் கொண்டு போங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ப்ரெஷ்ஷா வேலைக்கு வாங்க”
அவளிடம் பேசியவாறே அவனது ஓட்டுனரை அழைத்தவன் அவள் மறுக்கும் முன் அவளுக்காக வாங்கிய உணவை கையில் கொடுத்து விட்டதோடு வண்டி வரை வந்து அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினான்.
என்ன நடந்தது என்று பாரதிக்கு ஒரு கணம் புரியவில்லை. அன்று போல் இன்றும் அவன் கரிசனமாக நடந்துகொள்கிறானே என்று கண்கள் நிரம்பி இதயம் வலிக்க அவனை பார்த்தவள் அமைதியாக வண்டியில் ஏறியிருந்தாள்.
அவன் விம்பம் மறைந்ததும் தான் பாரதியின் மூளை விழித்துக் கொண்டது.
“ஆமா இவன் சொன்ன உடனே நான் எதுக்கு மண்டைய ஆட்டினேன். திரும்ப அவன் என்ன ஆட்டிப்படைக்க நினைக்கிறானா?” தனக்குள் யோசித்தவள் “வண்டியை நிறுத்துங்க” என்று ஓட்டுனரை நோக்கினாள்.
“என்னம்மா வீட்டுக்கு போக முன்னாடி வேற எங்கயாச்சும் போகணுமா? எங்க போகணும் என்று சொல்லுங்க நானே கூட்டிட்டு போறேன். தம்பி உங்கள வீட்டுல விட்டுட்டு, உங்களுக்கு ஏதாச்சும் தேவையான்னு பார்த்து பண்ணிக் கொடுத்துட்டுத் தான் வரச் சொன்னாரு”
“இல்ல அது வந்து” எப்படி மறுப்பு தெரிவிக்கிறது என்று பாரதி யோசிக்க, ஓட்டுநர் மேலும் பேசலானார்.
“தம்பிய உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? நீங்களும் தம்பியும் ரொம்ப தெரிஞ்சவங்க போல” புன்னகையோடு கூறியவரின் பேச்சில் எந்த வில்லங்கமும் இருப்பதாக பாரதிக்கு தெரியவில்லை.
ஆனாலும் எதற்காக இவர் இப்படி கூறினார் என்று புரியாமல் “ஏன் கேட்குறீங்க?” கேட்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவளை அறியாமலே அவனை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்டிருந்தாள்.
“தம்பி இதுக்கு முன்னாடி எந்த பொண்ணையும் வண்டில ஏத்தினதே இல்ல. தம்பியோட வண்டில போற பெர்ஸ்ட் பொண்ணு நீங்கதான். ஒரு தடவ மம்தா மேடம் ஒரு பார்ட்டில வச்சி நல்லா குடிச்சிட்டு தம்பியோடதான் போவேன்னு வண்டிக்கு முன்னாடி நின்னு அலப்பறை பண்ணிச்சு. டாக்சியை வர வச்சி, என் கூட தான் வீட்டுக்கு அனுப்பி வச்சாரு. அதான்…” பாரதி பதில் ஏதும் பேசாதிருக்க, இதற்கு மேல் பாரதிக்கும், விக்ரமுக்கு என்ன உறவு என்று கேட்பது முறையல்லவே என்று அமைதியானார்.
பாரதி ஓட்டுனருக்கு எந்த பதிலும் கூறவில்லை. விக்ரமை பற்றி யோசனையில் விழுந்தாள்.
ஓட்டுனருக்கு நன்றி கூறி வீட்டுக்குள் வந்தவளுக்கு வீடு திருப்திகரமாக இருக்கவே உடனே கார்த்திகேயனுக்கு வாய்ஸ் மெஸேஜ் ஒன்றை தட்டி விட்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து விட்டு வந்தவள் வீடு வெறுமையாக இருப்பதை நன்கு உணர “செம்ம வீவோட வீடு இருந்தும் என்ன பிரயோஜனம்? அம்மா, அக்கா, மாமா, கவி யாருமே கூட இல்ல” தனக்குள் பேசியவாறே தேநீர் தயாரித்தவள் அருந்த அமர்ந்த உடன் அவளுக்கு விக்ரமின் ஞாபகம் வந்தது. கூடவே ஓட்டுநர் சொன்னதும்.
“அவன் தான் காரியக்காரன் ஆச்சே. திரும்ப என்ன ஏமாத்த டைவரிட்கிட்ட இப்படி பேசச் சொல்லி இருப்பான்” ஓட்டுநர் பேசும் பொழுது அவர் பேச்சில் பொய்யில்லை என்று அறிந்தும், நேரம் செல்ல செல்ல தனிமையில் இருந்தவளுக்கு விக்ரம் மீதிருந்த கோபம் தலைகேறவே உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் விக்ரம் நாடகமாடுவதாக அவனை திட்டித் தீர்க்கலானாள்.
இது எதுவும் தெரியாமல் விக்ரம் பாரதியை நினைத்து சிரிக்கலானான். “பாரதி…. அவளுக்கு கல்யாணமாகி இருக்குமோ? இல்ல இருக்காது. இருந்தா தாலி, குங்குமம், மெட்டி என்று ஏதாவது அடையாளம் இருந்திருக்குமே” அவளை அணு அணுவாக கவனித்ததன் விளைவாக அவன் கண்டு பிடித்ததை எண்ணி மார்தட்டிக் கொண்டான்.
அவன் மனமோ தங்களது துறையில் இருப்பவர்கள் சாத்திர, சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில்லையே என்று இடித்துரைக்க, “ஒருவேளை கல்யாணமாகி இருக்குமோ” என்று குழம்பி நின்றான்.
இருக்காது. இருக்காது. இருக்கவும் கூடாது. நாளை அவள் வந்த உடன் கேட்டுது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் சந்தோஷமாக ரகுராமை அழைக்கலானான்.