கார்த்திகேயனை திருமணம் செய்ய கயல்விழியை அன்று தடுத்தது எது? இன்று தடுப்பது எது?
தனக்கு ஒரே ஆறுதல் கார்த்திகேயன் என்பதை கயல்விழி புரிந்து கொண்டாலும் அவனிடம் தஞ்சம் அடைய அவள் ஒரு பொழுதும் விரும்பவில்லை. அது அவளுக்கு நடந்த கொடுமையை கார்த்திகேயன் அறிந்து கொள்ள கூடாது என்பதினால் தான். அதை அவன் அறிந்து கொண்டால் மனதளவில் ரொம்பவே காயப்பட்டு போவான் என்பதினால்.
கயல்விழிக்கு ஒன்றென்றால் கார்த்திகேயன் துடிப்பது போல், அவனுக்கு ஒன்று என்றால் கயல்விழி துடிக்க மாட்டாளா?
ஒரு காலமும் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைத்த அவனது பெற்றோர்கள் அவன் மருத்துவமனையில் காயம் பட்டிருக்கும் பொழுது திருமணத்துக்கு சம்மதம் சொல்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அது என்னவென்று கயல்விழி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது விக்னேஷிடம் கேட்டாள்.
கார்த்திகேயனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து இருக்குமோ என்ற அச்சம் கயல்விழியின் மனதுக்குள் இருந்தாலும் அதை அவள் வாய் விட்டு கேட்டிருக்கவில்லை.
கார்த்திகேயன் நடிப்பதை புரிந்து கொள்ளா விடில் விக்னேஷும் “தெரியல” “விசாரிக்கணும்” என்றெல்லாம் கூறியிருப்பானோ, என்னவோ. கார்த்திகேயன் நடிப்பதை புரிந்து கொண்டபின் கயல்விழியிடம் பொய் சொல்லவும் அவனால் முடியவில்லை. “ஆமாம்” என்று கூறி அவளை கஷ்டப்படுத்தவும் விரும்பவில்லை.
“அப்படி எதுவும் இருக்காது கயல் பையன பிரிஞ்சி ரொம்ப நாள் இருந்திட்டாங்க இல்ல. காயத்தோட பார்த்ததும் கதி கலங்கிட்டாங்க போல. பையன் கல்யாணத்தையும் பார்க்கணும் இல்ல. எத்தனை நாளைக்கு தான் பிடிவாதம் பிடிப்பாங்க? அவங்களுக்கும் வயசாகுது இல்ல. அதான் பட்டுன்னு கல்யாணத்துக்கு சம்மதிசிட்டாங்க” என்றான் விக்னேஷ்.
ஒருவேளை அவ்வாறாக கூட இருக்கலாம் தான்தான் வீணாக கவலை கொள்வதாக நினைத்தாள் கயல்விழி.
“ஆனா அடிபட்டதுல சாருக்கு மூளை குழம்பி போய் பழசு எல்லாம் சட்டு சட்டுனு மறந்து போகுதில்ல. அப்படி இருந்தும் உன்ன மறக்காமல லவ் டார்ச்சர் பண்ணுறாரே. நீ மட்டும் கல்யாணத்துக்கு நோ சொன்னா என்ன ஆவாரு. நீ எப்படி நோ சொல்லுவ? அவரு தான் உன் கழுத்துல பொசுக்குன்னு தாலிய போட்டுட்டாரே” யோசிப்பது போல் கிண்டல் செய்யலானான் விக்னேஷ்.
விக்னேஷ் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று நேரடியாக கேட்டிருந்தானே ஒழிய காதலிக்கிறேன் என்று பிதற்றியதில்லை. அவன் கேட்டான் இவள் மறுத்து விட்டாள். இவளை பொறுத்தவரையில் இவளுடைய நிலையை அறிந்து விக்னேஷ் கேட்டான் அங்கே நட்பு என்ற ஒன்று தான் இருக்கிறது. மறுத்த பின் அவன் காத்திருந்தானே ஒழிய தொந்தரவு செய்யவில்லையே. அதனால் விக்னேஷின் காதல் கயல்விழிக்கு புரியவேயில்லை. அவள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவுமில்லை என்பது தான் உண்மை.
அதனால் இன்று விக்னேஷ் தன் மனதை மறைத்துக் கொண்டு கார்த்திகேயன் மற்றும் கயல்விழியின் காதல் கதையை பேசிய பொழுது கயல்விழி அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் சிந்தனை முழுக்க கார்த்திகேயன் ஆட்கொண்டிருந்தான்.
தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக வேறொருவனை திருமணம் செய்தேன் என்று கயல்விழி கூறினாலும், உன் பெற்றோரின் சம்மதம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறினாலும் கார்த்திகேயனை விட்டு வேறொருவனை திருமணம் செய்தது தவறு. அவனது கோபம் நியாயமானது. அவன் காதல் உன்னதமானது. அதனால் தான் இந்த நிலையிலும் அவன் தன்னை மறக்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவனை விட்டு விலகி நின்றால் அது தன்னுடைய முட்டாள் தனம் என்று நன்றாகவே புரிந்து கொண்டாள் கயல்விழி.
கார்த்திகேயன் தாலியை அணிவிப்பான் என்று யாருமே எதிர்பார்த்திராத பொழுது கயல்விழி மட்டும் எதிர்பார்த்திருப்பாளா? கார்த்திகேயன் நினைத்தது போல் அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று அச்சத்தில் தான் கயல்விழி அமைதியாக இருந்தாள். அவள் இருக்கும் மனநிலையில் அதை கழட்டி அவன் முகத்திலேயே விட்டெறிந்திருப்பாள்.
அவனுக்காக அமைதி காத்தாலும், தன்னுடைய நிலையில் தன்னால் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முடியுமா? என்று கேள்வி அவளுள் தேங்கி நின்றது. உள்ளத்தில் ஊடுருவிய அச்சம் உடலெங்கும் பரவி உடலே குளிர் எடுத்தது. அந்த ஏசி அறையிலும் அவளுக்கு வியர்க்களானது.
தான் எதிர்பார்த்த அவனுடைய பெற்றோரின் திருமணத்திற்கான சம்மதம் கிடைத்த பட்சத்தில், மேலும் திருமணத்துக்கு மறுத்தால் கார்த்திகேயன் தன்னை குடைந்து எடுப்பான் என்று அறிந்தபடியால் மறுக்க முடியாமல், வேறு வழியில்லாமல், வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று கயல்விழி திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள். அச்சத்தையும் மீறி தன் மனதை அவள் அவ்வாறுதான் சமாதானப்படுத்திக் கொண்டாள். அவன் மீது இருக்கும் காதல் அவளை அவ்வாறு தான் சமாதானப்படுத்தி இருந்தது.
தான் எடுத்த முடிவு சரியா? தவறா? தன்னிலையில் மீண்டும் குழம்பியவள் கார்த்திகேயனின் பெற்றோர் திருமணத்துக்கு வரவில்லை என்றால் மறுத்து விடலாம் என்று தான் பார்த்திருந்தாள். அவள் நிலையில் அவள் குழம்பித் தவிக்க, அவன் மீது வைத்திருந்த காதலோ அவளை அவன் பால் இழுத்து வந்திருந்தது. அவனுடைய பெற்றோர்தான் வந்து சேர்ந்திருந்தார்களே அவளுக்கு மறுக்க காரணமும் இருக்கவில்லை.
இதோ இப்பொழுது சட்டபடியாகவும் அவன் மனைவியாகிய அவனோடு அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள் கயல்விழி.
ஆண்-: வங்கக் கடல்
ஆழமென்ன வல்லவா்கள்
கண்டதுண்டு அன்புக்கடல்
ஆழம் யாரும் கண்டதில்லையே
பெண்-: என்னுடைய நாயகனே
ஊா் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த
வானம் எல்லையே
ஆண்-: எனக்கென வந்த
தேவதையே சரிபாதி
நீயல்லவா
பெண்-: நடக்கையில் உந்தன்
கூடவரும் நிழல் போலே
நானல்லவா
ஆண்-: கண்ணன் கொண்ட
ராதையென ராமன் கொண்ட
சீதையென மடி சோ்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே
பெண்-: நன்றி சொல்ல
உனக்கு வார்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
ஆண்-: என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற
பெண்-: நெடுங்காலம் நான்
புரிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
ஆண்-: திருக்கோயில் வீடு
என்று விளக்கேத்த நீயும் வந்த
கார்த்திகேயன் கயல்விழியே திருமணம் செய்து கொண்டு வந்ததை பார்த்த அவனுடைய ஊழியர்கள் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்த்திருந்தனர். அவனிடம் எந்த கேள்வியையும் அவர்கள் கேட்பதில்லை. கேட்கவும் முடியாது. அவர்களின் பார்வையோ திருவிடம் தான் இருந்தது.
“என்ன பார்த்தா மட்டும் எனக்கென்ன தெரியும்?” என்ற பார்வையோடு அவனும் வேலைகளை பார்கலானான்.
காமினியின் வழக்கு என்று நீதிமன்றத்துக்கு வரும் என்று அறிந்து கொண்ட பின் அதற்கு மறுநாள் பதிவுத் திருமணத்திற்கான ஏற்பாட்டை வெற்றிமாறன் மூலமே ஏற்பாடு செய்து கொண்டிருந்தானே ஒழிய யாரிடமும், எதையுமே பகிராதவன், திருவிடம் காரியாலயத்தில் தான் வைத்திருந்த பையை எடுத்து வருமாறுதான் கூறியிருந்தான்.
திருவுக்கும் தான் கார்த்திகேயன்-கயல்விழியின் திருமணம் அதிர்ச்சியை கொடுத்தது. கேட்டால் மட்டும் அவன் சொல்லவா போகிறான் என்று அமைதியாக அனைவருக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.
எல்லாம் தெரிந்த விக்னேஷோ கயல்விழியையும் கார்த்திகேயன் கவனித்துக் கொள்வதிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்.
நேற்று முழு நாளும் மருத்துவமணையில் இருந்ததால் எந்த வேலையையும் பார்க்க முடியவில்லையென்று காரியாலயம் வந்த உடனே துணியை கூட மாற்றாமல் வேலையை பார்க்க ஆரம்பித்தவனோ “டேய் என் கல்யாணத்த சாக்கா வச்சிக்கிட்டு ஐஸ் அடிக்க பாக்குறியா? வேலை இருக்கு. முதல்ல போய் வேலையை பாரு” மிரட்டும் தொனியில் பழையபடி விக்னேஷை மிரட்டலானான் கார்த்திகேயன்.
விக்னேஷ் கயல்விழியை மட்டுமல்ல தன்னையும் நன்றாக புரிந்து கொண்டான் என்றதும் அவனோடு நன்றாகவே ஒட்டிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அதை பார்த்து வயிறெரிந்த ஒரே ஜீவன் திரு தான்.
என்ன? ஏது? எதற்கு? என்று கூறாமல் விக்னேஷ் சாதாரணமாகத்தான் கூறினான்.
வெட்கப்பட வேண்டிய கயல்விழியும் அங்குதான் இருந்தாள். விக்னேஷின் அப்பேச்சுக்கே மிரண்டு விட்டாள். அச்சத்தோடு அவள் கார்த்திகேயனை பார்த்தாள். அவனுக்குத்தான் அந்த சிந்தனையே இல்லையே.
விக்னேஷ் சொன்னது கார்த்திகேயனுக்கு புரிந்தாலும் அவளை பாராமலேயே “அதெல்லாம் கயல் பார்த்துப்பா. நீ நான் உனக்கு கொடுத்த வேலையை பாரு” என்றான் கார்த்திகேயன்.
எச்சில் கூட்டி விழுங்கிய கயல்விழியோ இதை எப்படி மறந்தேன் காதலனான கார்த்திகேயன் அலைபேசியில் உரையாடும் பொழுதே அவன் ஆசைகளை சொல்லி இருக்கின்றான். இன்று கணவனானவனின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறு இருக்கும் என்று அவன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? எத்தனை வருட காதல்? பிரிந்திருந்த காதலி வேறு. அவனிடம் இன்று வேண்டாம் என்று மறுக்க முடியுமா? எத்தனை நாட்கள் மறுக்க முடியும்? முற்றாக குழம்பிய கயல்விழியோ வேலை ஓடாமல் சிந்தனையில் அமர்ந்திருந்தாள்.
கார்த்திகேயனுக்கு அவளை கவனிக்க நேரமில்லாமல் வேலை இழுத்துக் கொண்டிருக்கவே “வீட்டுக்கு செல்லலாம் சாத்திர, சம்பிரதாயங்கள் எல்லாம் செய்ய வேண்டாமா?” என்று கேட்டது விக்னேஷ் தான்.
கயல்விழிக்காக அவளை திருமணம் செய்து கொண்டாலும், அவளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டோமே என்று சிறு கவலை இருக்கத்தான் செய்தது. அவள் தன்னை முழுமனதாக ஏற்றுக் கொண்டால் தானே சாத்திர சம்பிரதாயங்களை மனமகிழ்வோடு செய்வாள். அவளை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய கார்த்திகேயன் விரும்பவில்லை. அதனால் தான் விக்னேஷ் வீட்டு சாவியை கேட்ட பொழுது கூட கயல்விழி பார்த்துக் கொள்வாள் என்றான். அவளைப் பார்த்திருந்தால் அவள் நிலை அறிந்து, அக்கணமே அவளிடம் பேசி சமாதானப்படுத்தி இருப்பான்.
“என்ன விழி உன் புருஷன் இப்படி சொல்லுறாரு நீயாச்சும் சொல்லு” என்றான் விக்னேஷ்.
இன்று முதல் தன் வீடு தனக்கில்லை. கார்த்திகேயனோடு அவன் வீட்டிலல்லவா இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது கயல்விழிக்குள் அச்சம் பரவி மேனி நடுங்களானது. அதை முகத்தில் காட்டாது விக்னேஷை வெளிப்படையாக முறைத்தவள் “தாரா கேஸ் இன்னுமுமே இழுத்துக் கிட்டு இருக்கு. ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. இன்னும் எந்த முன்னேற்றமும் இல்ல. ராதா வேற போனுக்கு மேல போன் போட்டுக்கிட்டே இருக்கா. இன்னைக்காச்சும் என்ன வேலை பார்க்க விடுறியா” என்றாள்.
“புருஷனுக்கேத்த பொண்டாட்டி பா” என்று விட்டு விக்னேஷ் அவனது வேலையை பார்க்க சென்று விட்டான்.
காரியாலய நேரம் முடிவடைந்ததால் ஒவ்வொருவராக கிளம்பி கொண்டிருக்க விக்னேஷும் கயல்விழியிடமும், கார்திகேயனிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.
காரியாலயத்தை திரு தான் வெளியால் பூட்டிக் கொண்டு செல்வான். கார்த்திகேயன் வீட்டிலிருந்து வெளியே செல்வது என்றால் தனியாக மின்தூக்கி இருக்கிறது.
“கயல் டின்னருக்கு ஏதாவது சமைக்கிறியா? இல்ல வெளியில ஏதாச்சும் ஆர்டர் பண்ணவா?” தேவையற்ற மின்குமிழ்களை அனைத்தவாறே கேட்டான் கார்த்திகேயன்.
சில சமயம் அவன் வெளியே சென்று சாப்பிடுவான். சில சமயம் அவன் வரவழைத்து சாப்பிடுவான். இன்று தான் அவனுக்கு திருமணமாகி இருந்தாலும் கயல்விழியின் கையால் சாப்பிட வேண்டும் போல் இருக்கவே கேட்டிருந்தான்.
“சமைக்கவா?” என்று கேட்டவளின் கண்களுக்குள் கார்த்திகேயன் அவளை பின்னால் இருந்து கட்டிப்பிடிப்பது போல் காட்சிகள் தோன்றி மறைய “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீ வெளிய ஆர்டர் பண்ணுறியா” என்றவளோ அவனை பாராமலேயே கூறி இருந்தாள். அவள் முகம் பார்த்து இருந்தால் அவளது அச்சத்தை கார்த்திகேயன் கண்டு கொண்டிருப்பானோ என்னவோ, சரியென்று அவன் மாடி ஏறி வீட்டுக்குச் சென்று விட்டான்.
கார்த்திகேயன் சென்றபின் மூச்சை இழுத்து விட்டவள் வேலை செய்வதை தூக்கிப்போட்டு விட்டு அமைதியாக தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
தலையில் கட்டோடு இருப்பதால் உடல் கழுவி கார்த்திகேயன் உணவையும் ஆர்டர் செய்துவிட்டு கீழே வரும் பொழுது சத்தம் கேட்டு கயல்விழி வேலை பார்ப்பது போல் பாசாங்கு செய்யலானாள்.
“கயல் இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க மத்த வேலை நாளைக்கு பார்க்கலாமே” என்றான் கார்த்திகேயன்.
“இல்ல இன்னைக்கே முடிச்சிடனும்” அவளை நோக்கி அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவள் இதயம் படபடக்க, அவன் முகம் பார்க்கவே இல்லை பெண்ணவள்.
அவள் அச்சம் புரியாத கார்த்திகேயனோ “சரி அப்ப குளிச்சிட்டு இந்த டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு, சாப்பிட்டு வேலைய பாரு. காலைல போட்ட பட்டு சாரிலேயே இருக்கியே” என்றான்.
“இல்ல பரவால்ல” முகத்தில் அடித்தது போல் பதில் வந்தது அவளிடமிருந்து.
நெற்றி சுருக்கி அவளை பார்த்தவன் அப்பொழுது தான் அவளை கவனித்தான். அவள் முகத்தில் இருந்த பதட்டத்தை பார்த்து அவள் அச்சம் புரிய “கயல் எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு அதுக்குள்ள சாப்பாடு வந்துடும் நீயும் குளிச்சு பிரஷா இருக்கலாம். சரியா” என்றான்.
பட்டுப் புடவையை எப்பொழுது மாற்றுவது என்று காத்திருந்தவள் அவன் வெளியே செல்கிறான் என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டு தலையை பலமாக ஆட்டுவித்தாள்.
“சரி நீ வா. நீ வந்து பிரஷ்ஷாகு. நான் ஒரு ஆப் அன் ஹவர்ல வந்துடுறேன்” அவளின் பதிலையும் எதிர்பார்க்காமல் வீட்டுக்குச் செல்ல படி ஏறியவன் கயல்விழி வருகிறாளா என்றும் பார்த்துக் கொண்டான்.
வெளியே செல்கிறேன் என்றவன் மீண்டும் எதற்கு வீட்டுக்கு செல்கிறான் என்று பார்த்தவாறு எழுந்த கயல்விழி அங்கேயே நின்று கொள்ள, வீட்டிலிருந்து நேரடியாக வெளியே செல்ல மின்தூக்கி இருப்பதாக கூறிய கார்த்திகேயன் அவளை வீட்டுக்கு வருமாறு அழைத்தான்.
“ஓ அப்படியா?” என்று அவள் அவன் பின்னால் நடக்க, காதலனின் வீட்டில் யாருமற்ற நேரத்தில் காதலி வரும் பொழுது இதே பதை பதைபோடு தான் வருவாள். கணவனின் வீட்டுக்குமா? அன்று அப்படியொரு சந்தர்ப்பம் அமையவில்லை. இன்று அனுபவிக்கிறேன் என்று கார்த்திகேயனின் முகம் புன்னகையை பூசிக் கொண்டது. அவனின் முதுகை பார்த்து நடப்பவளுத்தான் அவன் புன்னகைப்பது தெரியவில்லையே. அன்று அவள் மயங்கிய பொழுது கார்த்திகேயனின் வீட்டுக்கு வந்தாலும் அவனது வீடு எப்படி இருந்தது என்று கூட அவள் கருத்தில் பதியவில்லை. இப்பொழுது கூட வீட்டை அலசும் எண்ணம் அவளுக்கு இல்லை. அமைதியாக அவனோடு நடந்தாள்.
அவளை உள்ளே அழைத்து வந்து கதவை பூட்டியவன், அவளுக்கு தேவையான அனைத்தும் அறையில் இருப்பதாக கூறிவிட்டு, மின்தூக்கியை நோக்கி நடந்தான்.
மின் தூக்கில் இருந்து கீழே வந்த கார்த்திகேயன் வெளியே எங்கும் செல்லவில்லை. உணவும் வந்து சேரவே, அதை பெற்றுக்கொண்டு வண்டியில் அமர்ந்து காத்திருந்தான். அவள் தன்னை பார்த்து அச்சப்படுவது அவனுக்கு வேதனையாக இருக்கவே கயல்விழிக்குள் இருக்கும் இந்த அச்சத்தை எவ்வாறு துரத்துவது என்று சிந்திக்கலானான். அரை மணி நேரம் கடந்த பின் கார்த்திகேயன் உணவோடு வீட்டுக்கு வந்து சேர, கயல்விழி குளித்துவிட்டு அவனுக்காக காத்திருந்தாள்.
முகத்தில் விழும் ஈர கூந்தலை காதோரம் ஒதுக்கியவாறு மென்னகை செய்தவளை பார்க்கையில் கார்த்திகேயனின் இதயமோ அவன் வசம் இல்லை. அவளை விட்டு விலகி இரு என்று புத்தி கூறினாலும், மனம் கேட்கவில்லை. மெதுவாக அவளை நோக்கி அவன் அடி எடுத்து வைக்க அவளது புன்னகையோ மெதுவாக சுருங்கி முகம் அச்சத்தின் சாயலை தத்தெடுத்துக் கொண்டது.
அவள் முகமாற்றத்தை பார்த்து மனம் நொந்தவன் உணவு பொட்டலத்தை அவள் கையில் கொடுத்தவாறு “வா சாப்பிடலாம் கயல்” என்றான்.
“கார்த்தி முதல்ல மாத்திரை போடு” கொஞ்சம் அக்கறையோடும், கொஞ்சம் அதட்டலோடும் தலைக்காயத்திற்கு மாத்திரைகளை கயல்விழி எடுத்துக் கொடுக்க இன் முகமாகவே முழுங்கினான்.
வாசலின் இடது பக்கத்தில் சாப்பாட்டறையுடன் கூடிய சமையலறையும், வலது பக்கத்தில் கழிவறையுடன் கூடிய படுக்கையறையும் இருந்தது. எல்லாம் அளவில் பெரியதாகத்தான் இருந்தது. வாசலில் வராண்டா போல் செருப்பு வைக்க ஒரு இடமும், அதன் வழியே நடந்தால் மின் தூக்கிக்குச் செல்ல வழியும் இருந்தது.
வீட்டை பார்த்து விட்டு ஏதேதோ பேசிய பின் கயல்விழி எல்லாவற்றையும் மறந்து அவனோடு சகஜமாக பேசிக் கொண்டிருந்தாள்.
சட்டென்று அவள் கையை பற்றிய கார்த்திகேயன் “எல்லா கஷ்டத்தையும் உன் மனசுக்குள்ளேயே வெச்சிருக்கணும் என்று பிடிவாதம் பிடிக்கிறியே எதுக்கு கயல்? எல்லாமே எனக்கு தெரியும். நீ சொல்லலனா எனக்கு தெரியாம போயிடுமா? உன்னை அப்படியே விட்டுடுவேனா? நீனா எனக்கு உசுருடி. உனக்கு ஒன்னுனா என்ன தேடி வந்திருக்க வேணா? உனக்கு ஒன்னுன்னா நான் சந்தோஷமா இருப்பேனா? நிம்மதியா இருப்பேனா? உன் கூட இருந்தா தாண்டி எனக்கு சந்தோசம். நீ என் கூட இருந்தா போதும்டி” என்றான்.
அவன் பேசப் பேச அதிர்ந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
ஏங்கி ஏங்கி அழும் அவள் கண்களை துடைத்து விட்டவன் “அதான் நீ என்கிட்ட வந்துட்டல்ல. இனிமே நீ அழக்கூடாது” என்றான்.
“இல்ல உன்ன விட்டு போனதால தான் எனக்கு இப்படியாகிருச்சு” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
அவளின் அச்சமே அவனுக்காகத்தான். அதையே அவன் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்தான். அதை அவள் எவ்வாறு உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. அதனால் கூட அவள் அழுதிருப்பாளோ என்னவோ.
இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பது விதி என்று அவளை சமாதானப்படுத்தாமல் “அப்படியா?” நாடியை தடவி யோசிப்பது போல் பாவனை செய்த கார்த்திகேயன் “அப்போ நான் உன்ன விட்டுட்டு போனா… எனக்கு என்ன ஆயிருக்கும்? கடவுளே நினைச்சு பார்க்கவே பயமா இருக்கே” என்று சத்தமாக சிரித்தான்.
அவன் சிரிக்கவும் அழுவதை நிறுத்தி புரியாமல் முழித்தாள் கயல்விழி.
“ஆண்களுக்கும் கற்பு இருக்குமா” என்றவனோ தன்னை பாதுகாத்துக் கொள்வது போல் ஆடையை சரி செய்து கொள்ள கயல்விழி அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.
விக்னேஷ் ஆயிரம் சமாதானம் கூறிய பின்பும் அவனிடம் கேள்வி கேட்பவள் இதோ கார்த்திகேயன் பேசிய பின்பு உடனே சமாதானமாகியிருந்தாள்.
“உனக்கு உனக்கு எப்ப தெரியும்? ஏன் என்கிட்ட சொல்லல” கயல்விழியின் குரலோ மெதுவாகத்தான் ஒலித்தது. அவளுக்கு தனக்கு நடந்ததை பற்றி பேசவே விருப்பமில்லை. ஆனால் கார்த்திகேயன் என்ன நினைக்கிறான் என்று அவள் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
“இங்க பாருங்க கயல், நம்ம லைஃப்ல சில விஷயங்கள் நடந்து இருக்கலாம் என்று ஆசைப்படுவோம். சில விஷயங்களை நடந்திருக்கக் கூடாது என்று நினைப்போம். ஆனா எது நடக்கணும், எது நடக்கக்கூடாது என்கிறது நம்ம கையில் இல்லை. இது நடக்கணுமோ அது நடந்து தான் தீரும். அது நம்மளால தடுத்து நிறுத்த முடியாது. புரியுதா? உனக்கு நடந்தது ஒரு விபத்து.
உனக்கு நடந்ததுக்கு நீ தான் முழு காரணம் என்று முட்டாள்தனமாக முடிவெடுத்து மூலையில் உட்காராம, நீ இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கிறது சந்தோஷம். ஆனா நீ நடந்த சம்பவத்திலிருந்து முற்றாக மீளல அதில் இருந்து நீ முற்றாக மீண்டு வரணும். நான் உனக்கு உறுதுணையாக இருக்கேன்” என்று புன்னகைத்தான்.
அவன் பேச்சில் கயல்விழிக்கு புது தெம்பே வந்தது அது அத்தோடு இருந்திருக்கலாம் “உண்மையிலேயே தலையில் அடிபட்டதால உனக்கு பெரிய காயம் ஒன்றும் இல்லையே” என்று கயல்விழி கேட்க திருதிருவென்று முழித்தான் கார்த்திகேயன்.