தொடர்ந்த நாட்கள் பெரிதான மாற்றம் இல்லாமல் சென்றது. ஜீவிதாவிற்கு கல்லூரி வாழ்க்கை பழகியது. நண்பர்கள் கிடைக்க, கொஞ்சம் ஜாலியாகவும் இருந்தாள்.
நண்பர்களுக்கு இறுதி வருடம் என்பதால் மெனக்கெட்டு படித்தனர். ப்ரொஜெக்டில் நேரம் இழுத்தது. இருவருக்கும் மேற்படிப்பு செல்லும் எண்ணம் இல்லை.
தாரணிக்கு ஒரு வருடமாவது வேலை பார்க்க வேண்டும். சொந்த உழைப்பில், சுதந்திரமாக வெளியுலகம் காண ஆவல். அஜயிடம் சொல்லி கொண்டே இருப்பாள் பெண்.
அஜய், “செஞ்சுக்கலாம் விடு. நான் அத்தைகிட்ட பேசுறேன்” என்பான்.
புது கல்லூரியில் முதலில் சிரமப்பட்டாலும் அஜய் தேறிக்கொண்டான். சங்கர் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது. மிகவும் கவனமாக அவரை பார்த்து கொண்டனர்.
அந்த வருடத்தின் இறுதி தேர்வு நெருங்கியது. ஜீவிதா சொல்லி கொள்ளும்படி படிக்கவில்லை. தாரணி அவளின் ப்ரொஜெக்டில் கவனம் செலுத்த வேண்டியிருக்க, “நான் பார்த்துகிறேன். நீ பாரு” என்று அக்காவிடம் சொல்லிவிட்டாள்.
நிறைய குழப்பம். பயம். முதல் செமஸ்டரில் எல்லாம் பார்டர் பாஸ். இந்த முறை அச்சமே. நண்பர்கள் சொல்வது இவளுக்கு புரியவில்லை. கிரகிக்க திணறினாள். அஜயை மிகவும் தேடினாள் சின்னவள்.
அஜய் போனில் கேட்கும் போதெல்லாம், “நல்லா படிக்கிறேன். எல்லாம் புரியுது” என, அவனுக்கு நம்பிக்கை இல்லை.
“என் ப்ரெண்ட் உன்னோட டிபார்ட்மென்ட் தான். நான் அவன்கிட்ட சொல்றேன். உன்னை கைட் பண்ணுவான்” என்று திரும்ப கேட்க,
“அதெல்லாம் வேண்டாம்” என்றிருக்க, இப்போது அவனிடமும் உதவி கேட்க கலக்கம். நேரில் வந்து கொட்டுவான்.
எக்ஸாம் நெருங்க நெருங்க அஜயிடம் கேட்டுடலாமா என்று புரியாத பாடத்தை வைத்து யோசித்து கொண்டிருக்க, “ஹாய் மேடம்” என்று வந்தான் கல்யாண்.
“சொல்லுங்க சீனியர்” அளவான புன்னகையுடன் அவனை எதிர்கொண்டாள்.
ஒரேடியாக வெட்டிவிடாமல் அவளவில் சரியாக இருக்கும் சின்னவளை கல்யாண்க்கு பிடிக்கவே செய்தது. “என்ன முகம் டல்லடிக்குது” என்று கேட்க,
“எக்ஸாம் டென்ஷன் சீனியர்” என்றாள்.
“ஏன் போர்ஷன் கவர் பண்ண முடியலையா? என்ன சப்ஜெக்ட் இது?” என்று அவளிடம் இருக்கும் நோட்டை எடுத்தான்.
“என்னாச்சு புரியலையா?” என்று கேட்டான்.
ஜீவிதா ஆம் என்று தலையசைத்தவள், “கிளாஸ் டெஸ்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல” என்றாள்.
“நான் சொல்லி கொடுக்கவா?” என்று கேட்டான்.
ஜீவிதா முடியுமா என்பது போல பார்க்க, கல்யாண் நீட்டாக அவளுக்கு புரிய வைத்துவிட்டான்.
“எப்படி சீனியர்” ஜீவிதா மலர்ந்து போன முகத்துடன் கேட்க,
“எனக்கு டீச்சிங்ல விருப்பம் அதிகம்” என்றான் கல்யாண்.
“அஜுக்கு அப்புறம் நீங்க சொல்றது எனக்கு புரிஞ்சிருக்கு” என,
கல்யாண் உதடு சுளித்து கொண்டவன், “மீதி சப்ஜெக்ட்டுக்கும் நான் ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்க, ஜீவிதாவிற்கு நொடி சரி என்றே தோன்றிவிட்டது.
பின் தெளிந்து, “இல்லை வேண்டாம் சீனியர். ஐ கேன் மேனேஜ்” என்று மறுத்துவிட்டாள்.
“படிப்பு வேற, மத்தது வேற ஜீவிதா. என்னோட லிமிட் எனக்கு தெரியும். இது பியூரா உனக்காக மட்டும் தான். என்னை நம்பலாம்” என்றான்.
அவனிடம் உண்மை தெரிந்தது. குறைவான நாட்களே மிச்சம் இருக்க, “நான் நாளைக்கு சொல்லவா?” என்று கேட்டாள்.
“ஓகே. பட் உன்னோட எக்ஸாம் மைண்ட்ல வைச்சுட்டு யோசி” என்று எழுந்து கொண்டான்.
அன்றிரவு நண்பர்களிடம் சொல்ல, இருவரும் ஒரே நேரத்தில் அதெல்லாம் வேண்டாம் என்றனர். “அவர் நீங்க நினைக்கிற அளவு மோசம் இல்லை” என்றாள் ஜீவிதா.
“அவன் எப்படி இருந்தாலும் நமக்கென்ன? உனக்கு நான் என் பிரென்ட்கிட்ட சொல்றேன். டாட்.” என்றான் அஜய் வீடியோ காலில்.
“உங்க ப்ரெண்ட் பண்றதை இவர் பண்ணா என்ன? நானும் இந்த ஒன் இயரா அவரை பார்த்துட்டு தான் இருக்கேன். லவ் அவரோட பர்சனல். அதை வைச்சு ஏன் பார்க்கணும்?” ஜீவிதா கேட்க, நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“என்னடி பெர்சனல். என்ன பேசுற நீ?” தாரணி கோவம் கொள்ள,
“ஆமா உன்னை அவர் தொந்தரவு பண்றது இல்லை தானே. தள்ளி இருந்து அவர் பீலிங்ஸ் காட்டுறார். அவ்வளவு தான். பார்க்க கொஞ்சம் ரஃபா இருந்தாலும் அவர் அப்படி இல்லை”
“ஜீவி. நீ அவருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கு, பார்த்துக்கோ ” தாரணி சொல்ல,
“என்னோட சீனியர். எனக்கு சரியா தெரியுறார்” சின்னவள் அவள் கருத்தை சொன்னாள்.
“அஜய் இவளை பார்த்தியா”
“தாரு. இரு” என்ற அஜய், “உனக்கு கைட் பண்ண ஆள் வேணும். அவ்வளவு தானே. விடு” என்றான்.
“எனக்கு கல்யாண் சீனியர் கைட் பண்ணா பெட்டரா இருக்கும். நல்லா சொல்லி கொடுக்கிறார்” சின்னவள் அவளின் பிடியிலே நின்றாள்.
“நீயும் உன் ப்ரெண்ட் போல திட்டின அவ்வளவு தான் பார்த்துக்கோ” என்று அஜயை மிரட்டினாள் சின்னவள்.
அஜய் அமைதியாக அவளை பார்த்தே இருக்க, “சாரி” என்றாள்.
“ஆட்டக்காரி நீ முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ. நாம சில நேரத்துல நமக்கு வேண்டியவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ண வேண்டியிருக்கும். தாரணிக்கு பிடிக்கலைன்னா விடேன்”
“ஏன் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணலாம் இல்லை. நான் உங்களுக்கு வேண்டியவ இல்லையா?” சின்னவள் கேட்க,
“இவ நல்லா பேச கத்துக்கிட்டா அஜய்” தாரணி திரும்ப வந்து பேசினாள்.
“இப்போ பைனலா என்ன தான் சொல்ல வர?” அஜய் கேட்க,
“நான் கல்யாண் சீனியர்கிட்ட படிச்சுகிறேன். வெய்ட். அதனால உங்க ப்ரெண்டுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அதுக்கு நான் கியாரண்டி”
“உனக்கும் எந்த பிரச்சனையும் இருக்க கூடாதுன்னு தான் சொல்றோம்”
“எல்லோரையும் ஒரேடியா அப்படி சொல்லிட முடியாது. பார்க்கலாம். உன் இஷ்டம். தினமும் எனக்கு அப்டேட் கொடுக்கணும்” அஜய் முடித்துவிட்டான்.
“போயும் போயும் நீ எனக்கு தங்கச்சியா கிடைச்சிருக்கவே வேண்டாம்” என்று திட்டிவிட்ட தாரணி அதன்பின் தங்கையிடம் பேசவே இல்லை.
சின்னவளும், “அதேதான் உனக்கும். வேற நல்லா அக்காவை இந்தம்மா பெத்திருக்கலாம். சரியான சுநலவாதி நீ” என்று பதிலுக்கு கத்திவிட்டதோடு ஆளுக்கொரு திசையில் கல்லூரிக்குள் நுழைந்தனர்.
கல்யாண் எதிரில் வர, தாரணி அவனை நேருக்கு நேர் முறைத்து சென்றாள். அதில் அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சியே. பற்கள் தெரிய சிரிக்க, ஜீவிதா அவன் முன் உர்ரென்று நின்றாள்.
“சொல்லுங்க மேடம்” என்றான் கல்யாண்.
“அவ முறைக்கிறா. நீங்க சிரிக்கிறீங்க. ம்ஹூம். இது சரிப்பட்டு வராது. எனக்கு நீங்க சொல்லி கொடுக்கவே வேண்டாம். நான் பெயிலா கூட போயிக்கிறேன்” என்றாள்.
“ஹேய் இது வேறன்னு சொல்லியிருக்கேன் இல்லை. நீ சின்ன பிள்ளை. இதெல்லாம் உனக்கு புரியாது”
“எனக்கு புரியாது. ஆனா அஜுக்கு புரியும். பஸ் ஏறிவந்து என் மண்டையை உடைச்சிடுவான்”
“நீயே சொல்லு ஜீவிம்மா. லவ் பண்றது தப்பா? ப்ரெண்ட்ஸ் இரண்டு பேரும் என்னமோ பெரிய கொலைக்குத்தம் மாதிரி பண்றாங்க. நானே உன் அக்காவை என்னை பார்க்க வைக்க தலைகீழா நின்னு தண்ணீர் குடிச்சா, அஜய் மொத்தமா ஜோலி முடிக்கவே பார்க்கிறான்”
“அவன் ப்ரெண்டா இருந்தா லவ் பண்ண கூடாதா என்ன? அதுலயும் கடைசி நாள் என்கிட்ட வந்து, ‘நான் வேற காலேஜ் போறேன். என்னோட அப்சென்ஸ்ல நீங்க தாரணியை டிஸ்டர்ப் பண்ண கூடாது. லவ் டிராமா பண்ணி கார்னர் பண்ண கூடாது. அது ஜெனியூனிட்டி கிடையாது. அதுக்கு பேர் லவ் கிடையாது’ன்னு எனக்கு செக் வைச்சுட்டு போறான்”
“அஜு அப்படியா சொன்னான்?
“தப்பு தானே? அப்பறம் எப்படி என் லவ்வை நான் அவளுக்கு காட்டுறது?”
“லவ் காட்டணுமா? அது ஒரு பீல் இல்லையா?” சின்னவள் குழப்பமாக கேட்டாள்.
கல்யாண் முழித்ததோடு விழித்தும் கொண்டான். டேய் சின்ன பொண்ணுடா. அடக்கி வாசி. “சரி அது என்னமோ விடு. நீ சொல்லு. என்னாச்சு?” என்று கேட்டான்.
“ஆனா நீங்க பண்றது, பேசுறது எல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு சீனியர்” என்றாள் சின்னவள்.
“உன் அக்கா என்னை நேருக்கு நேர் பார்க்கவும் கொஞ்சம் கண்ட்ரோல் மிஸ் ஆகிட்டேன். இனி பாரு எப்படி ஸ்டெடியா நிக்கிறேன்னு”
“பார்த்தேன். மொத்த பல்லும் தெரிஞ்சது”
“ஜீவிமா அதை எல்லாம் சொல்லி மானத்தை வாங்க கூடாது. இனி புல் கண்ட்ரோல்ல இருப்பேன். நாம ஷெடியூல் போடலாம் வா. எக்ஸாம்ஸ் வருது இல்லை” என, இருவரும் படிப்பை பார்த்தனர்.