Advertisement

நல்ல பேர் என்று எல்லாம் சொல்ல, “ஜி பேமிலியா நீங்க” என்றான் ஆனந்தன்.

ஜீவிதா அவனை பார்த்து நொடித்து செல்ல, அஜய் சிரித்து நண்பன் தோளை கட்டிக்கொண்டான். தொடர்ந்து உணவு பரிமாற, ஜீவிதா மகனுடன் அறைக்கு சென்றுவிட்டாள்.

அபிஜித் பிறந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்க, அவனை பெரிதாக யார் கையிலும் கொடுக்கவில்லை.

திருப்தியாக பங்க்ஷன் முடிய, அடுத்ததாக இன்னொரு விழாவும் வந்தது. ஆனந்தனின் திருமண வைபோகம்!

ஆர்த்தி அவனுக்கு பார்த்திருக்கும் பெண். ம்ஹூம். இவன் பிடித்து கொண்ட பெண் அவள். சேனாதிபதியின் மகனாக அவன் நின்ற நாள் அது.

விடுமுறைக்காக ஊருக்கு வந்த நேரம்,  சேனாதிபதி “ஒரு பஞ்சாயத்து, என்கூட வா” என்று மகனை அழைக்க, அவனோ அவரை சந்தேகமாக பார்த்து மறுத்தான்.

“எப்படியும் என்னை சிக்க வைக்க தான் பார்ப்பீங்க. நான் வரலை போங்க” என்றுவிட்டான்.

“மகனே என் பேச்சை கேட்டு வா மகனே” சேனாதிபதி திரும்ப அழைக்க,

“முடியாது தந்தையே. நீங்க கிளம்புங்க” என்று அறைக்கு சென்றுவிட்டான் ஆனந்தன்.

சேனாதிபதி நொடி நின்று கிளம்ப, “என்ன மாமா?” என்று கேட்டார் காமாட்சி.

“வந்து சொல்றேன் கண்ணு” அவர் வாடிய முகத்துடன் கிளம்பிவிட்டார்.

கணவரின் வாடிய முகம் மனைவிக்கு தாங்கவில்லை. சொந்தத்தில் ஒரு பஞ்சாயத்து என்பது வரை தெரியும். மேற்கொண்டு விசாரித்திருக்கவில்லை.

கணவரின் வலது கையிடம் கேட்க நினைத்து, மகனை தேடி கொண்டு சென்றார். “அப்பா கூப்பிட்டா கூட போறதுக்கு என்னடா உனக்கு?” என்று அதட்டலிட்டார்.

“அவர் கண்டிப்பா காரணம் இல்லாம என்னை கூப்பிட மாட்டார். பலியாடு நான் இல்லை காமாட்சி கண்ணு” மகன் ஆயாக படுத்து காலாட்டினான்.

“டேய் தம்பி அப்பா முகமே சரியில்லை. கூட போடா” அம்மா சொல்ல, மகன் புருவம் சுளித்தான். என்ன பஞ்சாயத்து என்று அம்மாவிடம் கேட்க, அவருக்கும் தெரியவில்லை.

ஆனந்தன் உடனே கிளம்பிவிட்டான். பஞ்சாயத்து நடக்குமிடம் விசாரித்து சென்ற நேரம், அங்கு ஒருவன் எகிறி எகிறி பேசி கொண்டிருந்தான்.

“மாமா பொண்ணை கட்டுறது அப்படியென்ன பெரிய குத்தம்ன்னு பேசிட்டிருக்கீங்க?”

“அது யாரா இருந்தாலும் பொண்ணுக்கு இஷ்டம் இல்லைன்னா என்ன பண்ண முடியும்?” ஒருவர் கேட்க,

“இரண்டாந்தரமா கட்டிக்கிட்டு போக கூட பொண்ணை கேட்டுகிட்டு இருப்பீங்களா?” அவர் நக்கலாக கேட்டார்.

“தம்பி இது எங்க பழக்கம். பொண்ணு கேட்டுகிட்டு தான் செய்வோம்” சேனாதிபதி அழுத்தமாக சொன்னார்.

“அது முதல் கல்யாணம் கட்டிக்க சரி. இது இரண்டாந்தரம் தானே”

“பார்த்து பேசுங்க” சேனாதிபதியின் வலது கை எச்சரித்தார்.

“நான் வரைமுறை இல்லாம எதுவும் பேசல. இருக்கிறது தான் சொன்னேன். டேய் இங்க வாடா. இவன் தான் மாப்பிள்ளை. இவனுக்கு என்ன குறை. இத்தனைக்கும் எங்க வீட்டு பையனுக்கு இது முதல் கல்யாணம். அவனே சரி சொல்லலை. நீங்க என்னடான்னா பொண்ணு கேட்கணும், ஆட்டுக்குட்டியை கேட்கணும்ன்னு”

“ஆட்டுக்குட்டியை கேட்டு அது சம்மதம் சொல்லாமலா தலை எடுக்கிறீங்க” ஒரு பெண் குரல் உயர்ந்து வந்தது.

ஆனந்தன் அந்த பெண்ணை பார்த்தான். ‘யப்பா’ என்றான் தன்னாலே. அவ்வளவு அழகு. உடன் ஓர் நிமிர்வும்.

“ஆர்த்தி. நீ பேசாத கண்ணு. பெரியவங்க பேசிக்குவாங்க” அவளின் அம்மா மகளை அடக்கினார்.

“இங்க ஒரு கண்ணுவா?” ஆனந்தன் புன்னகைத்து அப்பாவை பார்க்க, அவரோ ஆர்த்தியை மிக பெருமையாக பார்த்திருந்தார்.

மீசையை முறுக்கும் அவரின் செயலில் மகனின் புருவம் மேலேறியது. எப்போவும் எங்களை பார்த்து மட்டும் தானே இப்படி பண்ணுவார். இந்த பொண்ணு அப்பாக்கு என்ன ஸ்பெஷல்?

“ஆர்த்தி பேசட்டும். நீ பேசும்மா” என்றார் சேனாதிபதி.

“என்னங்க பஞ்சாயத்துன்னு பொம்பிளை பிள்ளையை எல்லாம் பேச வைக்கிறீங்க. ஏன் இங்க இருக்கிற எந்த ஆம்பிளைக்கும் பேச வராதோ?” எதிரணியில் ஒருவன் எகத்தாளமாக பேசினான்.

“ஏய்” என்று ஒட்டு மொத்த கூட்டமும் கர்ஜித்ததோடு, சேனாதிபதியின் வலது கை பேசியவனின் வாயையும்  உடைத்திருந்தார்.

“மேல கை வைக்கிற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க. ஏதோ எங்க மாமா கட்டிக்கொடுத்த பையன் அல்பாயுசுல போயிட்டான். ஆர்த்தி தனியா ஏன் கஷ்டப்படணும்ன்னு பொண்ணு கேட்டு வந்தா அடாவடி பண்றீங்க” என்றார் ஒருவர்.

“நீங்க சொல்றது சரி தான் மச்சான். ஆனா நீங்க ஏதோ ஆர்த்திக்கு வாழ்க்கை கொடுக்கிறது போல பேசுறது தான் எங்களுக்கு செட் ஆகலை” என்றார் பெண்ணின் அப்பா.

“அப்படி இல்லை. ஆனா அப்படி இருந்தாலும், அதுல தப்பு ஒன்னுமில்லையே” என்றார் எதிரில் இருந்தவர்.

“தப்பு தாங்க” என்றாள் ஆர்த்தி.

“நீ பேசாதம்மா. உனக்கு நல்லது கெட்டது தெரியாது”

“நல்லது கெட்டது தெரியாத எனக்கு நீங்க மாப்பிள்ளை கொடுக்க வேணாம் மாமா. ஓட்டிட்டு போங்க உங்க பிள்ளையை”

“ஹாஹா” ஆனந்தன் சிரித்துவிட்டான்.

எல்லாம் இவனை திரும்பி பார்க்க, சேனாதிபதிக்கு கண்களில் ஒளி. இங்க வா என்று கையசைத்து மகனை தன் பக்கத்தில் நிறுத்தி கொண்டார்.

ஆர்த்தி அவனை வித்தியாசமாக பார்த்து திரும்பினாள். “என்ன ஓட்டிட்டு போன்னு எல்லாம் சொல்ற. தப்பு ஆர்த்தி” மாப்பிள்ளையாகப்பட்டவன் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வந்தான்.

அவனுக்கு ஆர்த்தியின் அழகின் மேல் எப்போதுமே ஓர் விருப்பம். அப்பா மூலமாக பொண்ணும் கேட்டு அவர் மறுத்துவிட்டார். அவனின் குணம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என்பதால். இப்போது ஆர்த்தியின் கணவன் இறக்கவும், மாப்பிள்ளை ஆக வந்துவிட்டான்.

ஆர்த்தி அவனை வெறுப்பாக பார்த்தாள். அவனிடம் பேச அவளுக்கு துளி கூட விருப்பமில்லை. ஒவ்வாத உணர்வே அவனிடம் அவளுக்கு.

இவர்களோ விடாமல் துரத்தி பஞ்சாயத்து வரை வந்துவிட, ஆர்த்தியின் பொறுமை கரைந்து போனது. தனக்காக நான் தான் பேச வேண்டும் என்று இறங்கிவிட்டாள்.

சேனாதிபதி தூரத்து உறவு முறையில் அவளுக்கு மாமா தான். அவரின் முழு ஆதரவும் அவளுக்கு உண்டு என்பதில் பெண்ணுக்கு தைரியம் அதிகமே.

“எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லியும் நீங்க எல்லாம் என்னை கட்டாயப்படுறத்துறது தப்பு. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க” என்றுவிட்டாள் முடிவாக.

“கல்யாணம் வேணாமா? நான் வேணாமா?” திடீர் மாப்பிள்ளை கேட்டான்.

“நீ வேணாம் தான்” ஆர்த்தியும் சொல்லிவிட்டாள்.

“அப்போ கல்யாணம் பண்ணிப்ப? அப்புறம் எதுக்கு இந்த நல்லவ வேஷம்”

“தம்பி பார்த்து பேசு” சேனாதிபதி எழுந்துவிட்டார். “எங்க வீட்டு பொண்ணுக்கு விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காது. நீங்க பஞ்சாயத்து வைக்க சொல்லி ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டீங்க. நாங்களும் வைச்சுட்டோம். இப்போ தான் முடிவு தெரிஞ்சிருச்சு இல்லை கிளம்புங்க” என்றார்.

“என்ன முடிவு தெரிஞ்சிடுச்சு. அவ என்னை தான் வேணாம்ன்னு சொல்லியிருக்கா, நான் இல்லாம அவ வேற யாரை கட்டுறான்னு எனக்கு தெரிஞ்சாகணும்”

“அது உனக்கு அனாவசியம்”

“அதை நீங்க சொல்ல கூடாது. எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்?”

“அவங்க சரி சொன்னா நான் தான் அவங்க மாப்பிள்ளை” என்றான் ஆனந்தன்.

சேனாதிபதிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. மகனே என்று அவனை பாய்ந்து கட்டி கொண்டார். மற்ற எல்லோரும் இவனை அதிர்ந்து பார்க்க, ஆர்த்தி என்பவளோ அவனை ஒரு மாதிரி பார்த்தாள்.

ஆனந்தன் அவளின் பார்வையை நேர்கொண்டு எதிர்கொண்டான். என்கிட்ட எந்த ஒளிவு மறைவும் இல்லை என்பதாய் நிமிர்ந்து நின்றான்.

அப்பாவின் ஆசை என்பதை தாண்டி ஆனந்தனுக்கு ஆர்த்தி மேல் ஒரு ஈர்ப்பு வந்தது நிச்சயம். அதனாலே தன் மனதை சொல்லிவிட்டான்.

நொடியில் ஈர்த்து கொள்வதே காந்தத்தின் இயல்பு. ஆர்த்தி இவனின் காந்தம் ஆகிவிட்டாள்.

சேனாதிபதிக்கு அதன் பின் யாரும் சொல்ல வேண்டுமா என்ன? ஆர்த்தியை அவருக்கு பிடிக்கும். அவளின் நேர்மை, தைரியம் மனிதருக்கு அவ்வளவு இஷ்டம்.

அவளின் தற்போதைய நிலை எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. அதையே மகனும் நினைக்க, மனிதருக்கு கொண்டாட்டம் தான்.

எல்லோரையும் ஒத்துக்கொள்ள வைத்து, மூன்று மாதத்தில் முகூர்த்தம் வைத்துவிட்டார்.

Advertisement