Advertisement

நதியின் ஜதி ஒன்றே! 25

கந்தன் திருஉருவ படத்திற்கு மாலையிட்டு நிமிர்ந்தார் சகுந்தலா. அவரின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.

உறவுகள் வந்தவண்ணம் இருக்க, வீட்டாட்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர்.

ஜீவிதா, அஜயின் மகனுக்கு அன்று பெயர் சூட்டும் விழா.

சகுந்தலா மகன், மருமகளை  தேடிகொண்டு அறைக்கு சென்றார். அங்கு ஜீவிதா முகத்தை தூக்கி வைத்து இருக்க, அஜய் அவளை கண்டுகொள்ளாமல் மகனை கொஞ்சி கொண்டிருந்தான்.

“கிளம்பிட்டீங்கன்னா கீழே வர வேண்டியது தானே. எல்லாம்  உங்களை தான் கேட்கிறாங்க” என்றபடி பேரனின் நெற்றியில் முத்தம் வைத்தார் சகுந்தலா.

“நாங்க ரெடி. உங்க மருமக தான் வம்பா உட்கார்ந்திருக்கா” என்றான் அஜய்.

“அஜு. நீங்க பேசாதீங்க” மனைவி உடனே பாய்ந்தாள்.

“நான் பேசாம. கிளம்புடி முதல்ல” என்றான் கணவன்.

“அத்தை அவரை என்கிட்ட பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க. அவரால் தான் எல்லாம் நடக்குது” என்று பொரிந்தாள்  மருமகள்.

“அவளை என்ன பண்ண அஜய்” சகுந்தலா மகனிடம் கேட்க, அவனோ “உண்மையை சொன்னேன்” என்று தோள் குலுக்கினான்.

“இப்போ அந்த உண்மையை சொல்றது ரொம்ப முக்கியமா அத்தை. உங்க மகன் ரொம்ப பேட்” என்றாள் மூக்குறிஞ்சியபடி.

“ஜீவிதா. முதல்ல எனக்கு விஷயத்தை சொல்லு” மாமியார் அதட்ட,

“அவ சொல்ல மாட்டா. கேடி. நானே சொல்றேன்” என்ற அஜய், தாரணி மகளுக்கு ஜியா என்ற பேர் வைத்ததிற்கான காரணத்தை சொன்னான்.

“அடிப்பாவி” சகுந்தலா மருமகளை முறைக்க,

“இப்போ என்ன? ஜியா மேல எனக்கு உரிமை இல்லையா. என்னோட பேபி அவ” என்றாள் ஜீவிதா ரோஷமாய்.

“அது சரி. இப்போ அதுல என்ன பிரச்சனை?” சகுந்தலா புரியாமல் கேட்க,

“இவர் அதை அக்காகிட்ட சொல்லி, அது சேனா மாமா வரைக்கும் போயிடுச்சு. அவர் இப்போ போன் பண்ணி, நம்ம லட்டு குட்டிக்கு அவர் தான் பேர் வைப்பேன்னு நிக்கிறார். ஜியாவுக்கு அவங்க அம்மா பேர் வைக்க நினைச்சாராம். அதை நான் தடுத்ததால, அவங்க அப்பா பேர் ‘கருப்பனை’ நம்ம லட்டுக்கு வைக்க போறாராம்” என்றாள் அழுகையுடன்.

சகுந்தலா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட, மருமகளோ, “அத்தை” என்றாள்.

“நீங்க நியாயமா கோவப்படணும். அந்த பேரை லட்டுவுக்கு வைச்சா அவன் பாவம் இல்லையா?” என்று கேட்டாள்.

“அவங்க கூடத்தான் பாவம். ஜியாக்கு எத்தனை பேர் அவங்க யோசிச்சிருப்பாங்க?” அஜய் கேட்க,

“ஏன் ஜியா பேருக்கு என்ன குறைச்சல்? அவங்க யோசிச்ச பேர் எல்லாம் நல்லாவே இல்லை” என்று முகம் சுளித்தாள்.

“சரி இப்போ அந்த பேருக்கு மட்டும் என்ன குறைச்சல்?” அஜய் கேட்க,

“அஜு கண்டிப்பா நான் உங்களோட சண்டை போட்டிடுவேன்” மனைவி கடுப்பானாள்.

“போட்டுக்கோ. ஆனா முன்ன சொன்னது போல நான் சேனா பெரியப்பாக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். அவர் வைக்கிற பேர் தான் பைனல்” என்றுவிட, ஜீவிதாவின் அழுகையே அதனால் தான்.

அவளுக்கு சேனாதிபதி சொன்னதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை, “அதெப்படி அவங்க பேர் வைக்க முடியும்? பாருங்க அஜு” என்று சாதாரணமாக சொல்ல,

அஜய் என்பவனோ “ஏன் வைக்க முடியாது, வைக்கட்டும், நான் பர்மிஷன் தரேன்” என்றல்லவா நிற்கிறான். அஜய் செய்தாலும் செய்வான் என்பதே ஜீவிதாவின் கலக்கம்.

சகுந்தலா மகனை பார்க்க, அவன் கண்ணடித்தான். புரிந்து கொண்டவர்,  மூவரையும் அழைத்து வந்தார்.

சேனாதிபதி வீட்டின் கார் வந்துவிட, ஜீவிதா இங்கு திகிலடைந்தாள். கல்யாணிடம் பேசலாம் என்றால் அவனை சேனாதிபதி பிடித்து வைத்து கொண்டார்.

ஜுனியர் கஷ்டப்பட்டால் சீனியருக்கு தான் தாங்காதே!

அஜய், ஜீவிதா மகனோடு கீழிறங்கி வந்தனர். விருந்தினர்களை வரவேற்று முடிக்க, “என்னம்மா என் சின்ன மருமகளே?” என்று ஆர்பாட்டமாய் வந்தார் சேனாதிபதி.

ஜீவிதா அவரை உர்ரென்று பார்த்து நிற்க, “ஜீவிதா?” என்று பலராம் மகளை கண்டிப்புடன் பார்த்தார்.

“வாங்க மாமா” என்றாள் பெண் அதில்.

“மருமக கோவமா கூப்பிடுறது போல தெரியுதே சம்மந்தி” என்று பலராமிடம் முறையிட்டார் அவர்.

அவர் “ஜீவிதா” என்று ஆரம்பிக்கும் முன், “மாமா. மாமா. வாங்க, உட்காருங்க, ஜுஸ் குடிங்க” என்று அவர் கைபிடித்து சேரில் அமர வைத்தாள்.

“ஜீவிதா இதென்ன பழக்கம்?” பலராம் அதற்கும் மகளிடம் கோவப்பட்டார்.

காமாட்சி தான், “விடுங்கண்ணா அவங்களுக்குள்ள ஏதோ விளையாட்டு” என்றவர், “மாமா” என்றழைத்தார் கணவரை.

“கண்ணு. என் மருமககிட்ட நான் விளையாடுறதுக்கு அவர் கோவப்பட்டா நான் என்ன பண்ணுவேன்” என்றார் அப்பாவியாக.

பலராம் போங்கய்யா போங்க உங்களோட இதே தான் என்று மொத்தமாய் எல்லோரையும் முறைத்து சென்றார்.

சங்கர் சிரித்தவர், “அவங்க வேலை தான் தெரியுமே, நீங்க என்னோட வாங்க” என்று பலராமை அவருடன் வைத்து கொண்டார்.

சேனாதிபதி, “அப்புறம் அஜய், பேர் வைச்சுடலாமா?” என்று கேட்டார்.

எவ்வளவு அவசரம் பாரு? கல்யாணை பாவமாக பார்த்த ஜீவிதா, “இதெல்லாம் என்னன்னு கேட்க மாட்டிங்களா சீனியர்?” என்று கேட்டாள்.

“ஜீவிம்மா அது?” என்று அவன் சொல்ல வர,

“டேய்ண்ணா அண்ணி உன்னை கூப்பிடுறாங்க” என்று ஆனந்தன் அவனை தள்ளி கொண்டு சென்றான்.

“சின்ன மருமகளே. ஏன்ம்மா உனக்கு அந்த பேர் பிடிக்கலையா?” சேனாதிபதி கேட்க,

ஜீவிதா வேகமாக “ஆமா மாமா” என்றாள்.

“என் அப்பா பேருக்கு என்னம்மா குறைச்சல்? நீ இப்படி சொல்வன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை” என்றார் வருத்தத்துடன்.

“மாமா அது. அப்படி இல்லை” ஜீவிதா திணற,

“எங்க குலசாமி பேர் கருப்பன், அது தான் என் அப்பாக்கு வைச்சது. அந்த பேரை போய் பிடிக்கலைன்னு சொல்லிட்டியே. போச்சு. எங்க குலசாமிக்கு வேற பொசுக்குன்னு கோவம் வந்திடும்” என்று மேலும் சொல்ல,

ஜீவிதா கொஞ்சம் அரண்டு தான் போனாள். “சாமி குத்தம் ஏதும் ஆகிடுமா மாமா” என்று தாரணி வர, உடன் எல்லோரும்.

எதே சாமி குத்தமா? சாமி சாரி சாமி என்று மனதில் அவசரமாக வேண்டிக்கொண்டாள்.

அதில் எல்லோருக்கும் அப்படி ஒரு சிரிப்பு, கட்டுப்படுத்த சேனாதிபதி சத்தமாக சிரித்துவிட்டார்.

கல்பனா மகளின் தலையில் நச்சென ஒரு அடி போட்டு, “எங்களை என்ன பாடுபடுத்திட்டு, இப்போ இவ மகன்னு வரவும் பதட்டத்தை பாரு” என்றார்.

“ம்மா” என்று ஜீவிதா தலையை தேய்க்கும் முன், அஜய் அவள் தலையை வருடி கொடுத்து மனைவியை தோளோடு அணைத்து கொண்டான்.

“இதெல்லாம் சும்மாடி” என்றான்.

“அதுகூட தெரியலை. என் நண்பன்னா மட்டும் அஜு, அஜுன்னு படுத்த வேண்டியது” என்று ஆனந்தன் வேறு கலாய்த்தான்.

‘மானம் போச்சு’ ஜீவிதா எல்லோரையும் முறைத்து சென்றாள்.

நல்ல நேரம் நெருங்கவும், அவ்வீட்டின் இளவரசனை தொட்டியில் இட்டனர். சங்கருக்கு அந்த நொடிகள் எல்லாம் பொக்கிஷமே. இதெல்லாம் பார்க்க முடியுமோ, முடியாதோ என்றிருந்தவர் ஆகிற்றே.

நெகிழ்ச்சியுடன் பேரனின் சுண்டு விரல் கோர்த்து பிடித்து முத்தமிட்டார். அவரின் பேரனோ தாத்தா விரலை விடாமல், தன்னுடன் கொண்டான்.

அதில் சங்கருக்கு இன்னும் கூடிப்போனது. “வைச்சுக்கோடா. தாத்தா விரலை பிடிச்சுக்கோ” என்று அங்கேயே அப்படியே நின்று கொண்டார்.

அஜய்க்கு அப்பாவை அப்படி பார்க்க கொள்ளை ஆனந்தம். ‘என் அப்பா, நான், என் மகன்!’ மூவரையும் சேர்த்து ஒரு புகைப்படமும் எடுத்து கொண்டான்.

ஜீவிதா என்ன நம்மளை விட்டுட்டார் என்று பார்க்க, “போடி” என்றான் கணவன் உதட்டசைத்து.

‘போயா. பேட் அஜு’ மனைவியும் முகம் திருப்பி கொண்டாள்.

சடங்குகள் முடியவும் குழந்தை காதில் பேர் சொல்ல சொன்னார்கள். எல்லாம் ஜீவிதாவை பார்க்க, பளிச்சென சிரித்தவள் பெரிய மாமனார் காதில் சொன்னாள்.

MP பெரியப்பா திருப்தியாக புன்னகைத்து கொண்டவர், குலதெய்வ பெயர் சொல்லி, அதன் பின் ‘அபிஜித்’ என்று பேரன் காதில் மூன்று முறை சொன்னார்.

தொடர்ந்து சங்கர் தம்பதி சொல்ல, அடுத்து அஜய், ஜீவிதா சொன்னார்கள். “அபிஜித்” என்று உறவுகளுக்கு சத்தமாக சொன்னன் அஜய்.

Advertisement