நதியின் ஜதி ஒன்றே 22 13617 நதியின் ஜதி ஒன்றே 22 அஜய் மனைவியின் விருப்பப்படி அவளை சென்னையிலே விட்டு, தான் மட்டும் ஊருக்கு கிளம்பிவிட்டான். ஜீவிதா தன் நாட்களுக்கு திரும்ப முயன்று கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்னமும் முயன்று கொண்டே தானிருக்கிறாள். மனம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது, கூடாது என்று மெல்ல மெல்ல உணரவும் செய்கிறாள். முன்பே அவளின் எல்லாம் அஜய்! இப்போது அஜயின் மனைவி வேறு ஆகிவிட்டாள். அவனோடு உரிமையாய், உறவாய் பதினைந்து நாட்கள் கூடவே வாழ்ந்திருக்கிறாள். அவனின் பிரிவு கசக்காமல் இருக்குமா? தன் கசப்பை சொல்லவும் முடியவில்லை. முழங்கவும் முடியவில்லை. அவளின் முடிவாகிற்று இதெல்லாம்! ஏதோ நினைத்து, எதிர்பார்த்து எல்லாவற்றிலும் ஏமாற்றம். கணவன் அங்கு சாதாரணமாக இருக்க, மனைவிக்கு தான் எக்கச்சக்க பொறுமல். இறங்கி போக முடியாமல் கௌரவ பிரச்சனை வேறு! ‘அஜு ரொம்ப பேட்‘ என்று அடிக்கடி சொல்லி கொள்கிறாள். நேரில், போனில் சொன்னால் அவன் பாய்ந்து விடுவான் என்ற அச்சம். இதோ வார இறுதியும் வந்துவிட்டது. அஜய் எப்போதும் போல் பேசி வைத்துவிட்டான். ‘ஊருக்கு வரியான்னு கேட்கவே இல்லை‘ ஜீவிதா இரவெல்லாம் அரைகுறை தூக்கத்திலே கழித்தாள். சகுந்தலா மறுநாள் காலையில் போன் செய்து, “வீக் எண்ட் தானே, ஊருக்கு வரலையா?” என்று கேட்டார். “வரலை” என்றாள் மருமகள் முகம் சுருக்கி. “ஏன் வரலை? இங்க எதுவும் உனக்கு வேலை இல்லையா?” “வேலையா? வேலைக்கு தான் என்னை கூப்பிடுறீங்களா? முடியாது. நான் வரலை. வந்தாலும் செய்ய மாட்டேன்” “நீ செய்யாம வேற யார் செய்ய? என் மகனுக்கு நீ தானே பொண்டாட்டி“ “அதை முதல்ல உங்க மகனுக்கு சொல்லுங்க” என்றாள் மூக்குறிஞ்சி. “அவனுக்கு தெரிய போய் தான் நீ உன் இஷ்டத்துக்கு மெட்ராஸ்ல போய் உட்கார்ந்திருக்க” என்றார் அவர் மாமியாராய். “அப்படின்னு அஜு உங்ககிட்ட சொன்னாரா?” ஜீவிதா கேட்க, “அவன் ஏன் சொல்லணும், நீ முதல்ல ஏன் ஊருக்கு வரலைன்னு சொல்லு. இந்த வாரம் நம்ம பக்கத்து கோவில்ல ஒரு வேண்டுதல் இருக்கு“ “வேண்டுதலா? எனக்கு தெரியாது அத்தை“ “இப்போ தெரிஞ்சு போச்சு இல்லை, கிளம்பி வா“ “அத்தை“ “என்ன பண்ணி வைச்ச?” “அஜு மேல இருந்த கோவத்துல ஆபிஸ் வரேன்னு சொல்லிட்டேன்” என்றாள். “ஜீவிதா. என்ன பண்ணிட்டிருக்க நீ? அஜய் மேல உனக்கு என்ன கோவம்?” அவர் கேட்க, மருமகள் அமைதியானாள். “ஜீவிதா. எனக்கு பதில் வந்தாகணும்“ “அத்தை“ “ஜீவிதா எனக்கு எதுவும் தெரியாமல் நீ என் மருமகள் ஆகலை. கொஞ்ச வருஷமா நீ எனக்கு எப்போ போன் பண்ணாலும் அதிகமா கேட்கிறது அஜயை தான். எங்களை எல்லாம் சும்மா பேருக்கு விசாரிச்சுட்டு அவன் பத்தி தான் அதிகமா பேசுவ. முதல்ல எனக்கு அது புரியாம போனாலும், பின்னாடி நல்லாவே புரிஞ்சுகிட்டேன்“ “அத்தை. நான். நான்” மருமகள் திணறினாள். “அது தப்புன்னு நான் சொல்லலை. எனக்கும் நீ மருமகளா வர ஆசை தான். ஆனா நீ விசாரிக்கிறதோட சரி. அஜய்கிட்டயோ, எங்ககிட்டேயோ உன் விருப்பத்தை சொல்றதாவே காணோம். அதுவே உன் மேல எனக்கு கோவம் தான். சரி இனியாவது எதாவது பண்ணுவ தான்னு, அன்னைக்கு முந்திரி காட்டுல வைச்சு, பொண்ணு வர போற விஷயத்தை உன்கிட்ட சொன்னதே” ஜீவிதாவிற்கு இது அதிர்ச்சி தான். “அத்தை” என்றாள். “சும்மா அத்தை, அத்தைன்னு சொல்லாம, என்ன பிரச்சனைன்னு சொல்லு. இல்லை உங்களுக்குள்ளே சரி பண்ண பாருங்க. இப்படி ஆளுக்கொரு பக்கம் நீங்க பிரிஞ்சிருக்க உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலை“ “ஆளுக்கொரு பக்கம் இருந்தா இப்போ என்ன? நான் அஜு வைஃப் தான்” என்றாள் பெண் வேகமாக. “அஜு வைஃப்க்கு கடமை, பொறுப்பு ஒன்னும் இல்லையா?” சகுந்தலா கேட்டார். “என்ன செய்யணும் சொல்லுங்க, நான் செய்றேன்” மருமகள் ரோஷத்துடன் சொல்ல, “என் மகன் கூட ஒழுங்கா வாழணும்” என்றார் மாமியார். “நான் என்ன வாழலை” இவள் குரல் தேய்ந்து போனது. “என்ன பேச வைக்காத ஜீவிதா. அஜய் முதல்லே உன்கிட்ட உன் வேலையை பத்தி பேசிட்டான்னு எனக்கு தெரியும். ஆனாலும் நீ அங்க போய் தான் வேலை பார்ப்பன்னு கிளம்பி போயிருக்க, சரி என்னவோ பண்ணட்டும்ன்னு விட்டா லீவுக்கு கூட ஊருக்கு வராம அங்கேயே உட்கார்ந்திருக்க, என்ன நினைச்சு இதெல்லாம் பண்ணிட்டிருக்க நீ? அப்போ என் மகன் கல்யாணம் பண்ணியும் தனியா இருக்கணுமா? இதுக்கு தான் நாங்க உனக்கு அவனை கட்டி வைச்சோமா?” “அத்தை” இவளுக்கு மூக்கு விடைத்ததுடன் கண்ணீரும் வந்தது. “என்ன நொத்தை. நான் உன் மாமியார். தெரிஞ்சுக்கோ. என் மகனை உனக்கு கட்டி வைக்கும் போது மட்டும் அத்தை உனக்கு இனிச்சாளா? இப்போ என் மகனுக்கு பேசவும் கோவம் வருதோ?” “அவர் என்னை ஊருக்கு கூப்பிடவே இல்லை” “உன் வீட்டுக்கு நீ வர அவன் ஏன் உன்னை கூப்பிடணும்?” “ஆஹ்“ “என்ன ஆஹ்? நாங்க தான் தப்பு. பேசாம உங்க மாமா பார்த்த பொண்ணையே அஜய்க்கு கல்யாணம்“ ஜீவிதா கேட்கவே செய்யாமல் போனை பட்டென வைத்துவிட்டாள். அலுவலகம் கிளம்பியவள், அப்படியே அமர்ந்துவிட்டாள். டென்ஷனில் விரல்கள் வேறு நடுங்கியது. அவ்வளவு கோவம். போன் எடுத்து கணவனுக்கு அழைக்க, “சொல்லு ஜீவிதா” என்றான் அவன். “அஜு” என்று ஆரம்பித்தவளுக்கு அதன் பின் முடியாமல் விசும்பல். அவளின் மனவுளைச்சலை மாமியார் இன்னும் கூட்டிவிட்டாரே! “ஜீவிதா என்னாச்சு” கணவனுக்கு புரியவில்லை. தூரத்தில் இருப்பதால் பதட்டம் வேறு. ரூமில் இருந்து ஹாலுக்கு வர, சகுந்தலா மகனை பார்த்து இமை சிமிட்டினார். அஜய் புரியாமல் அம்மாவை பார்க்க, “அஜு. அத்தை, அத்தை” என்று மனைவி அங்கு அழுகையில் திக்கினாள். “என்னம்மா” என்று இவன் அம்மாவிடம் கேட்க, “திட்டினேன்” என்று தோள் குலுக்கி சென்றார் அவர். “அம்மா எதாவது சொன்னாங்களா?” அஜய் மனைவியிடம் கேட்க, “நிறைய திட்டினாங்க. உங்களால தான்” என்று கணவனிடம் பாய்ந்தாள். “நான் என்ன பண்ணேன்?” “நீங்க எதுவும் பண்ணலை. ஏன் என்னை சென்னை போக விட்டீங்க” “நீ தானே கேட்ட?” “நான் கேட்டா, நீங்க வேணாம், முடியாது சொல்லணும். விட்டா போதும்ன்னு என்னை துரத்த கூடாது“ அஜய் மௌனம் சாதித்தான். “அஜு“ “அஜு அஜு“ “சரி நான் தான் கேட்டேன். நான் தான் தப்பு. போங்க” என்று போனை வைத்து அலுவலகம் கிளம்பிவிட்டாள். தவறு தன் பக்கம் தான் என்று பெண்ணுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவளின் எதிர்பார்ப்பு, ஏக்கம். என்ன செய்து அதை கட்டுப்படுத்த என்று தான் அவளுக்கு தெரியவில்லை. பிடித்து, போராடி அஜய் மனைவியாகிவிட்டாள். ஆனால் அதை முழுதும் அனுபவிக்க முடியாமல் ஓர் உறுத்தல். இன்னதென்று தெளிவாக தெரியாத ஒரு சஞ்சலம். அவளின் அஜு அவன். மிக மிக பிடித்தவனுடன் வாழும் வாழ்க்கை, அவளுக்கு பிடித்த பலாச்சுளை போல் மட்டுமே இருக்க வேண்டும். அதன் மேலான முள் அவளுக்கு வேண்டாம். அது உறுத்தாத, வலிக்காத முள்ளாக இருந்தாலும் வேண்டாம். அவளின் முடிவிலே நின்று கொண்டவளுக்கு, சகுந்தலாவின் பேச்சு பெரிய வருத்தம். ‘அதெப்படி பேச்சுக்கு கூட அந்த பொண்ணை அஜு கூட பேசலாம்‘ நாள் முழுதும் அவ்வளவு காந்தல். மாலை வேலை முடித்து வர, எதிரில் அவளின் அஜு. எதிர்பார்த்திருந்தாள். முக சிடுசிடுப்பு அப்படியே மறைந்து போனது. கணவனுடன் காரில் ஏறியவள், கோவத்தை காட்டும் விதமாக கண்களை மூடி சாய்ந்து கொண்டாள். அஜய் அவளை பார்த்து சிரித்தவன், தாரணி வீடு சென்றான். ஜியா இருவரையும் பார்க்கவும், ஆட்டம். குடும்பமாய் அமர்ந்து இரவு உணவு முடித்து, அறைக்கு வந்தனர். ஜீவிதா கணவனையே பார்த்திருக்க, அவன் இவளை கண்டு கொள்ளாமல் லேப்பில் இருந்தான். சில நிமிட பொறுமை பறந்து போக, அஜயின் லேப்பை மூடிவிட்டாள். “ம்ப்ச். என்ன ஜீவிதா” அஜய் அவளை பார்த்து உச்சு கொட்டினான். “வேலை பார்க்க தான் கடலூர்ல இருந்து கிளம்பி இங்க வந்திங்களா அஜு?” மனைவி கேட்க, “நீ தான் கோவமா இருக்கியே, தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு தான்” என்றவன், கைகளை தூக்கி சோம்பல் முறித்தான். “அத்தை என்னவெல்லாம் பேசினாங்க தெரியுமா அஜு” ஜீவிதா அவனை நெருங்கி அமர்ந்து படப்படத்தாள். “என்ன பேசினாங்க” அஜய் ஓய்வாக அமர்ந்து கதை கேட்டான். “அஜு நீங்க சீரியஸா கேட்கணும்“ “அப்போ படுத்துக்கட்டுமா?” குறுஞ்சிறுப்பு அவன் உதடுகளில். “அஜு என்னை டென்ஷன் பண்ண கூடாது. அத்தை பேசினது சரியில்லை. நீங்க அவங்ககிட்ட பேசுங்க“ “நீயே உன் அத்தைகிட்ட பேச வேண்டியது தானே“ ஜீவிதா முழித்தாள். அது முடியாமல் தானே கணவனிடம் கேட்கிறாள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு தான் பெண்ணிடம் பதில் இல்லையே? அஜய்க்கு நன்றாகவே புன்னகை விரிந்தது. “சிரிக்காதீங்க அஜு. உங்களால தான் அத்தை என்னை அப்படி திட்டிட்டாங்க” ஜீவிதா கண்கள் கலங்கினாள். “ஹேய் மக்கு. இப்போ என்ன? நான் அம்மாகிட்ட பேசுறேன். நீ ப்ரீயா விடு” என்றவன், அவளை தன் தோள் சாய்த்து கொண்டான். ஜீவிதா நன்றாகவே கணவனை ஒட்டி, அணைத்து கொண்டாள். ஒரு வார பிரிவிற்கு கணவனின் அணைப்பு, அருகாமை எல்லாம் அவ்வளவு தேவையிருந்தது. நகர்ந்து, அவன் நெஞ்சில் முகத்தை உரசியவள், அங்கேயே முகம் வைத்து கொண்டாள். “உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் அஜு” என்றாள். அஜய் அவள் தலையை வருடி கொடுக்க, இவள் முகத்தை அவனின் முகத்துக்கருகில் கொண்டு சென்றாள். அஜய் சிரித்தபடி அவளின் நெற்றி, கன்னத்தில் முத்தமிட்டான். ஜீவிதா திரும்ப நெஞ்சுக்கு வந்தவள், நிமிடம் சென்று திரும்ப அவன் முகத்துக்கருகில் சென்றாள். அஜய் அவள் கன்னங்களை பிடித்தவன், “இப்படியே இருந்துக்கோ” என்று முத்தத்தை தொடர்ந்தான். மனைவி மறுக்கவே இல்லை. அஜயும் நிறுத்தவில்லை. “எவ்வளவு கொடுத்தாலும் பத்த மாட்டேங்குது அஜு” என்றாள். “இன்னுமா? ஜாலியா வாங்குற உனக்கென்ன? எனக்கு தான் உதடு வலிக்கும்” என்றான் அஜய். “முத்தம் கொடுக்க கூட உதடு வலிக்குமா. நீங்க லேஸி அஜு” என்றாள் மனைவி. “அப்போ நீ கொடு” அஜய் சொல்ல, “மாட்டேன்” என்றாள் நொடியும் இல்லாமல். அஜய் இதென்ன என்று மனைவியை பார்த்தவனுக்கு அப்போது தான் புரியவும் செய்தது இவள் இதுவரை தனக்கு ஒரு முத்தம் கூட கொடுக்கவில்லை என்பது. “ஏன் கொடுக்க மாட்ட” கணவன் சீரியஸ் ஆகிவிட்டான். “கொடுக்கவே மாட்டேன்னு சொல்லலை. ஆனா கொடுக்க மாட்டேன் தான்” “வர வர நீ தெளிவா இல்லாம என்னை குழப்புற” “நான் உங்களை மாதிரி பப்பி முத்தம் எல்லாம் கொடுக்க மாட்டேன் அஜு” மனைவி சொல்லிவிட, “அடிப்பாவி” என்று பார்த்த கணவன், “அப்புறம் எதுக்கு அந்த பப்பி முத்தத்தையும் கேட்டு வாங்குற?” என்று கேட்டான். “அதாவது கிடைக்குதேன்னு தான் அஜு” மனைவி கண்ணடித்தாள். “நீ கொஞ்சம் இல்லை ரொம்பவே பேட் பொண்ணு” அஜய் அவள் மூக்கை பிடித்து கிள்ளினாள். “அஜு நீங்க அடிக்கடி என் ஹஸ்பண்ட்ங்கிறதையே மறந்துடுறீங்க. உங்ககிட்ட நான் பேடா இருந்தா தான் எல்லாம் குட்டா நடக்கும்” என்றாள் குறும்பாக. “இது கண்டிப்பா டபுள் மீனிங் தான். இப்படியெல்லாம் பேச சொல்லி உனக்கு யார் கத்து கொடுத்தா?” “நீங்க தான். முறைக்காதீங்க அஜு. உங்களை பிடிக்குது. சோ இந்த பேட் தாட் எல்லாம் தானா வருது. என் மேல் தப்பில்லை” என்றாள் அப்பாவியாய். “சோ மேடம்க்கு என்னை பிடிக்கிறதால தான் பேட் தாட் எல்லாம் வருது. பப்பி முத்தம் எல்லாம் கொடுக்க மாட்டேங்கிறீங்க, ரைட். அப்போ அடல்ட்டா மாறிடலாமா?” என்று கேட்டான். “எப்படி?” ஜீவிதாவிற்கு தானே ஒரு பதட்டம். “இந்த கேப் இல்லாம பில் பண்ணி விடு” என்றான் இருவரையும் உதடுகளையும் காட்டி. “நானா?” “நீயே தான். மேடம் தானே என் பொண்டாட்டி?” “நீங்களும் பண்ணலாம் அஜு“ “நீங்களும் பண்ணலாம் ஜீவிதா“ “அஜு” மனைவிக்கு வெட்கம் வேறு படுத்தியது. அஜய் அவளை நன்றாக தன்னோடு இறுக்கி கொண்டவன், “ம்ம்ம். நான் ரெடி. ஆரம்பி” என்றான். “அஜு இப்போ வேணாமே” பெண் முனங்கினாள். “ஆரம்பி ஜீவிதா“ “அஜு“ “கிட்ட வா ஜீவிதா“ “ம்ஹூம்“ “வாடி“ “அஜு” மனைவியின் கண்கள் விரிந்து போனது. “ம்ஹ்ம்” என்று இருவரின் உதடுகளையும் இன்ச் இடைவெளி விட்டு நிறுத்தினான். பேசவே பயம். நிச்சயம் உரசும். தயங்கி, தடுமாறி கணவனை பார்க்க, அவன் பார்வை விலகாமல் இவள் மேலே நின்றிருந்தது. “அஜு” என்றவளின் உதடுகள் நன்றாக அவனில் உரச, ஜீவிதா இமைகள் தானே மூடி கொண்டதுடன், இணைத்தும் கொண்டாள். அஜய் அவளை பார்த்தே இருக்க, ஒரு சிறு பிள்ளை முத்தம். “என்ன இது?” என்று ஆழ்குரலில் கேட்டான். ஜீவிதா கண்களை திறந்து கணவனை பார்க்க, “என்னடி பண்ற?” என்று நான்கு உதடுகளும் உரச கேட்டான். ஜீவிதா முகத்தை பின்னால் இழுத்து பதில் சொல்ல போக, “நோ” என்று அவள் பின் தலையை அழுத்தி பிடித்தான். அஜயின் கணவன் பரிமாணத்தில் மனைவிக்கு திகைப்பும், ஆனந்தமும்! “முத்தம் அஜு” பெண்ணும் உதடுகள் உரசவே சொன்னாள். “இது முத்தம்ன்னா, இப்போ நான் கொடுக்க போறதை என்ன சொல்லுவ?” என்று கேட்டவன், ஒரு ஆழ்ந்த முத்தத்தை அவளுக்கு கொடுத்தான். நான்கு உதடுகளும் தனி தனி கதை பேசி, பிரிய முடியாமல் பிரிந்து, திரும்ப இணைந்து, ஜோடி மாற்றி, மூச்சு வாங்கி, நிமிடங்களே நீடித்து போதா ஒரு முத்த போராட்டதை ஜீவிதா தான் முடித்து வைத்தாள். அஜய் அவளின் முக சிவப்பை, வெட்கத்தின் தத்தளிப்பை ரசனையாக பார்த்திருக்க, ஜீவிதா தாங்க முடியாமல் அவன் கண்களை தன் கைகள் கொண்டு மூடினாள். அஜய் புன்னகைத்தவன், “இதுக்கு பேர் என்னன்னு சொல்லு?” என்று கேட்டான். “அஜு” மனைவி சிணுங்கினாள். “என் அஜு, என் அஜுன்னு சொல்றவளுக்கு, அவளோட அஜுக்கு முத்தம் கொடுக்க தெரியாதா?” என்று கேட்டான். “முன்ன தெரியலைன்னாலும் இப்போ தெரியும். என் அஜு சொல்லி கொடுத்துட்டார்” மனைவி சிறு குரலில் சொன்னாள். “அப்போ தெரிஞ்சதை செய்யலாம் இல்லை” கணவன் நெஞ்சம் ஏற இறங்க கேட்டான். அவன் ஏக்கம், எதிர்பார்ப்பு மனைவியின் வெட்கத்தை போக்க, கணவன் கண்களில் இருந்து கைகளை எடுத்தாள். அஜய் அவளை பார்க்க, ஜீவிதாவும் அவனை கண்ணோடு கண் பார்த்தபடி உதடுகளை சேர்த்தாள். முத்தத்தின் ஆழம் நீண்ட போதும் இருவரும் பார்வையை விலக்கவில்லை. கண்களை மூடவும் இல்லை. ரசித்தனர். தன் இணையின் ரசனையை மற்றவர் அணு அணுவாக ரசித்தனர். முத்தத்தை கொண்டாடினர். நீட்டித்தனர். தூங்கா இரவில் முத்தத்தின் சத்தம் மட்டும் பேசியது. உடைகள் விடைபெறவில்லை. உடல்கள் இணையவில்லை. ஆனால் முத்தத்தின் வழியே ஒரு சங்கமம். திருப்தியாக அஜய் ஊருக்கு கிளம்ப, அடுத்த வாரமே ஜீவிதா பெட்டி படுக்கையுடன் கணவனை தேடி சென்றுவிட்டாள்.