“உன் அப்பாகிட்ட பேசு. அவரை முழு மனசோட சம்மதம் சொல்ல வை” என்று அஜய் கிளம்பிவிட்டான்.
ஜீவிதாவிற்கு தான் அப்படியான ஒன்று மிகவும் கடினமாக இருந்தது.
பிடிவாதம், அடம் எல்லாம் அவளுக்கு கை வந்த பாடு. எத்தனை நாள் என்றாலும் சுலபமாக சமாளிப்பாள்.
ஆனால் இந்த பொறுமை, பேச்சு வார்த்தை நடத்துவது எல்லாம் அவளின் பழக்கத்திற்கு அப்பாற்பட்டது ஆயிற்றே. மிகவும் திணறினாள் பெண்.
பலராம் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளிடம் ஏன் என்று கேட்க வேண்டுமே. பேச வேண்டுமே.
அமைதியாக அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தார். முழு ஓய்வு. தாரணியும் அப்பா வீட்டில் தான் இருந்தாள்.
ஒரு வாரம் விடுமுறை எடுத்து கொண்டார். ஜீவிதாவிற்கு உடனே சென்னை கிளம்ப வேண்டிய கட்டாயம். அலுவகத்தில் இருந்து தொடர் போன்.
கல்யாண்க்கு அவள் நிலை தெரியும் என்பதால், “இப்போ கிளம்பலாம். அப்புறம் மாமாகிட்ட பேசலாம்” என்றான்.
ஜீவிதா தயங்கி தான் அப்பாவிடம் சென்று நின்றாள். அவர் கேள்வியாக பார்க்க, “வேலைக்கு கிளம்பணும்ப்பா” என்றாள்.
“போ” என்பதாய் தலையசைத்துவிட்டார்.
அஜய் பற்றி பேச வேண்டும். ஆனால் என்ன பேசுவது, எதில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நின்றே இருக்க, அப்பாவும் மகளை ஏன் என்று கேட்டுக் கொள்ளவில்லை.
கல்பனா மகளின் நிலை பார்த்து, “என்னங்க” என்று ஆரம்பிக்க, பலராம் திரும்பி அப்படி ஒரு பார்வை.
இத்தனை வருட மண வாழ்க்கையில் தெரியாதா கணவனின் கோவம். பின் வாங்கிவிட்டார்.
ஜீவிதா முகம் வாடி போக, “உடனே நம்பிக்கை விடாத. அப்பாக்கு ஹெல்த் செட் ஆகட்டும். நாம பேசலாம்” என்றாள் தாரணி தங்கையிடம்.
“நீ பேசி வாங்கி கட்டிக்காத தாரணி, அவளே பார்த்துக்கட்டும்” என்றார் கல்பனா.
“ரொம்ப நல்ல அம்மாம்மா நீங்க. ஏன் எனக்காக நீங்க இரண்டு பேரும் நிக்க மாட்டிங்களா? ஒரு பார்வைக்கே அமைதியாகிட்டீங்க” என்று ஜீவிதா பொங்கி கொண்டு கேட்டாள்.
“நாங்க ஏன் பேசணும்? நீயே பேசு. அஜய் சொல்லிட்டு போயிருக்கான் இல்லை” என்றார் இப்போதே நல்ல மாமியாராய்.
“அஜு சொன்னா, நீங்க எல்லாம் ரொம்ப பண்றீங்க” என்று முனங்கி கொண்டே கல்யாணுடன் சென்னை கிளம்பினாள்.
ப்ரொஜெக்ட் வேலை நினைத்ததை விட இழுத்து கொண்டே சென்றது. நான்கு மாதம் என்பது ஆறு மாதமே ஆகிவிட்டது.
இரண்டு நாள் விடுமுறை கிடைத்தால் போதும் என்று ஊருக்கு ஓடி வருவாள். ஆனால் பேசி மட்டும் இருக்க மாட்டாள்.
பலராம் அவள் பேச வேண்டும் என்றாலே தயாராக அமர்ந்து விடுவார். அதிலே பெண்ணுக்கு திணறல். தந்தையின் நேர் பார்வையில், இவள் பார்வை தரைக்கு செல்லும்.
முயன்று பார்த்துவிட்டு தோல்வியுடன் கிளம்பிவிடுவாள்.
இந்த முறை ப்ரொஜெக்ட் முடிந்து சற்று ஓய்வாக வந்தாள். அப்பாவிடம் பேசியே ஆக வேண்டும் என்ற உறுதியும் கூட.
தைரியத்துடன் அவர் முன்னும் அமர்ந்தாள். “அஜு. எனக்கு அவரை பிடிக்கும்ப்பா” என்றாள்.
“திடீர்ன்னு எப்படி. அஜய் ஏதாவது” அவர் தெரிந்தே தான் கேட்டார். இத்தனை மாதங்களில் மெல்ல விசாரித்து தெரிந்து கொண்டிருந்தாரே.
ஜீவிதா தான் பதறி, “அவருக்கு இல்லை. எனக்கு தான் முதல்லப்பா” என்று சொல்லி விட்டாள்.
“அப்போ உனக்காக, நீ கேட்டன்னு தான் அஜய் உனக்கு ஓகே சொன்னானா?” என்று கேட்டார் தந்தை.
மகளுக்கு மறுக்க முடியவில்லை. அதானே உண்மை.
“இது சரியா ஜீவிதா?” என்று அவர் கேட்க, மகளுக்கு என்னமோ கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது.
“அஜய் வாழ்க்கை அவன் இஷ்டம். நீ அதுல உன் விருப்பத்தை வைச்சு நுழையுறது சரியில்லை” என்றுவிட்டார்.
“அந்தளவு என் பொண்ணு இல்லை. அவன் வாழ்க்கையை அவன் வாழட்டும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சு தரேன்” என்று அவர் மேலும் சொல்ல,
ஜீவிதா மறுப்பாக தலையசைத்து அறைக்கு சென்றுவிட்டாள். இதையே மற்ற யார் கேட்டிருந்தாலும் இந்தளவு பாதிக்க பட்டிருக்க மாட்டாள். ஏன் அஜயே கேட்ட போதும் சரிக்கு சரி தான் பதில் சொன்னாள்.
அப்பா. அவர் கேட்டது தான் குற்ற உணர்வை கொடுத்துவிட்டது. தொடர்ந்து சில வாரங்கள் அவள் தந்தையிடம் பேச முயற்சிக்கவே இல்லை.
மனதில் எந்நேரமும் ஏதோ பாரம், அழுத்தம், கனம். ஆள் வாடி வதங்கி போய்விட்டாள்.
நான் தான் தவறா?
விருப்பம் இல்லாதவர் பின் நான் வம்படியாக போகிறேன் என்பதாய் தந்தை கேட்டுவிட்டாரே?
ஊருக்கு வருவதையும் நிறுத்தி கொண்டாள். கல்யாண் வீட்டிற்கும் செல்வதில்லை. சகுந்தலாவிடமும் போன் பேசுவதில்லை.
அஜய் மேல் விருப்பம் என்று சொன்ன நாளில் இருந்து, அவரிடம் ஏதோ ஒரு விலகல். “நான் உங்ககிட்ட சொல்லலைன்னு என்மேல கோவமா அத்தை?” என்று கேட்டும் பார்த்துவிட்டாள்.
“நீ சொல்லி நான் தெரிஞ்சுக்கணும்ன்னு இல்லை ஜீவிதா. சரி வேறென்ன எனக்கு வேலை இருக்கு” என்று வைத்துவிட்டார். ஜீவிதா சில முறை முயன்று அமைதியாகிவிட்டாள்.
அஜய்க்கு அவன் தொழிலில் பின்னால் செல்லவே நேரம் சரியாக இருந்தது. இடையில் மன வருத்தம் கொண்ட அவன் உறவுகளையும் சரி கட்டி கொண்டான்.
நேரம் இருந்தாலும் ஜீவிதாவிற்கு பேசுவதில்லை. ஆனால் அவளை பற்றி நினைத்தான். அவளையே நினைத்தான்.
குழந்தையில் இருந்து இப்போது வரை அவளின் எல்லா முகமும் அவனுக்குள் ஓடும். இவ்வளவு ஞாபகம் வைச்சிருக்கேனா அவளை? அவனுக்கே ஆச்சரியம் தான்.
சங்கர் ஒரு முறை பேசினார். “உன்னோட விருப்பம் தான் உன் வாழ்க்கையா இருக்கணும் அஜய்” என்று.
அஜய்க்கு உடனே எந்த பதிலும் வரவில்லை. நொடி மௌனம் காத்து, “விருப்பம் இல்லாம போகாதுப்பா” என்று முடித்து கொண்டான்.
சங்கர்க்கு இன்னமும் பலராம் செய்தது உறுத்தாமல் இல்லை. அங்கு பெண் எடுக்க தான் வேண்டுமா?
“விடுப்பா. பலராம் தானே? எனக்கு உடம்பு முடியாம இருந்தப்போ அவர்கிட்ட தான் முதல்ல சொன்னேன். வீட்ல சொல்லிடுங்கன்னு ரொம்ப வற்புறுத்தினார். நான் தான் எல்லா வேலையும் முடிச்சுட்டு சொல்றேன்னு மறுத்திட்டேன்”
“ஆனாலும் அவருக்கு அப்படியே விட முடியல. என்மேல இருக்கிற அக்கறையில கல்பனா மூலம் உனக்கும், உன் அம்மாக்கும் சொல்லி உடனே ஹாஸ்பிடல் பார்க்க வைச்சுட்டார்”
“இப்படி நிறைய விஷயங்கள்.. எத்தனையோ முறை நாம ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்திருக்கோம். அதிலும் ஜீவிதா நான் பார்க்க வளர்ந்த பொண்ணு. அவளை வேணாம் சொல்லி வேற பொண்ணை பார்த்து கட்ட எனக்கும் மனசு வரணும் இல்லை” என்றார் தன்னை தானே சமாதானம் செய்தபடி.
அஜய்க்கு அவரின் வார்த்தைகள் மகிழ்ச்சியே. “தேங்க்ஸ்ப்பா” என்றான்.
“தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும். அவகிட்ட சொல்லி மட்டும் வைச்சிடு. சின்ன பிள்ளையில பண்ண மாதிரி வீட்லே சைரன் அடிக்க கூடாதுன்னு. எனக்கு சத்தம் அலர்ஜிபா” என்றார் சிரித்தபடி.
MP பெரியப்பா அடிக்கடி விசாரிப்பார். “எப்போ கல்யாண சாப்பாடு என்று”
அஜய் சீக்கிரம் என்றே ஒப்பேத்தினான். “என்ன சம்மந்தி கிராக்கி பண்றாரா, சொல்லு, பார்த்துக்கலாம்” என்று அவர் சரியாக கேட்டால், மழுப்பி விடுவான். இல்லை என்றால் நேரிலே போய் நிற்பார்.
இவர் மட்டுமில்லை சேனாதிபதி.. இவரை கட்டுப்படுத்துவதே காமாட்சிக்கு பெரும்பாடு. “நான் இல்லாம நீங்க சம்மந்தி வீட்டுக்கு போக கூடாது என்று”
“நலம் விசாரிக்க போறேன்னு திரும்ப அவரை ஹாஸ்பிடல் அனுப்பி வைச்சிடுவீங்க மாமா நீங்க”
“அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் கண்ணு. நல்லதா நாலு வார்த்தை புத்தி சொல்லிட்டு வருவேன்”