நதியின் ஜதி ஒன்றே! 15 1 12121 நதியின் ஜதி ஒன்றே 15 அஜய் வீட்டிற்க்கு ஜீவிதாவின் உறவுகள் எல்லாம் முன் தினமே கிளம்பிவிட்டனர். விடிந்தால் கட்டிட திறப்பு விழா. ஜீவிதாவிற்கு கடைசி நேர வேலை. முடிக்க வேண்டிய ப்ரொஜெக்டில் அவளும் இருந்தாள். விடுமுறை கிடைக்கவில்லை. வேலை சேர்ந்த புதிது என்பதால் கல்யாண், “ஒரு நாள் லீவ் கிடைச்சா போதும். விடு” என்றான். ஜீவிதாவிற்கு வருத்தம் தான், ஆனால் ஒரு நாள் கிடைப்பதே பெரிது என்பதால், முந்தின இரவு வரை வேலை பார்த்து கிளம்பினாள். கல்யாண் அவளுக்காக காத்திருந்தான். “ஆனந்தனுக்கும் விடுமுறை இல்லை. அவனும் இனி தான் கிளம்புவான். அவனுடனே ஜீவிதாவும் வரட்டும்” என்று வீட்டில் சொல்ல, ஜீவிதா முகம் பார்த்தான் கல்யாண். அவளுக்கு அதில் இஷ்டமில்லை என்பது புரிய, “நானே நின்னு இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்துடுறேன்” என்றுவிட்டான். ஆனந்தனின் PG படிப்பு செங்கல்பட்டு. அவனுக்கு சாதாரணமாகவே விடுமுறை எல்லாம் பெரிதாக கிடைத்து விடாது. அவன் வந்து இவர்களை பார்ப்பதை விட, குடும்பத்தினர் தான் அடிக்கடி சென்று அவனை பார்த்து வந்தனர். அஜய் அவனின் நெருங்கிய நண்பன் என்பதால், ஆனந்தன் கிளம்பி வந்தான். “நேரா கடலூர் போயிடு” என்று கல்யாண் சொல்ல, “எனக்கு ஷாப்பிங் இருக்கு” என்று சென்னை வந்தான். கடைசி நேர ஷாப்பிங். ஜீவிதாவிற்கு கடுப்பு. மணி அப்போதே இரவு பதினொன்று. “சீனியர் உங்க தம்பி எல்லாம் முடிச்சுட்டு தனியா வரட்டும். நாம கிளம்பலாம்” என்றாள். “டேய் அண்ணா மேடம் பேச்சை கேட்டு என்னை விட்டு கிளம்பிடாத. நான் குழந்தை புள்ள. தனியா வந்தா தொலைஞ்சிடுவேன்” என்றான் ஆனந்தன் பயந்தவனாக. “யாரு நீங்க. அதையும் பார்ப்போம். தொலைஞ்சா நல்லது தான். மொத்த சொத்தும் சீனியருக்கு வந்திடும்” என்றாள் பெண். “சொத்துக்காக குழந்தை பிள்ளையை தொலைக்க பிளான் பண்றீங்களா? டேய்ண்ணா உண்மையை சொல்லு, உன் மச்சினியோட சேர்ந்து பிளான் ஏதும் போட்டிருக்கியா?” “இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீங்க கிளம்பலை கண்டிப்பா உங்களை விட்டு கிளம்பிடுவோம்” என்றாள் பெண் எரிச்சலாக. “எப்போ இருந்து என் நண்பன் மேல் இவ்வளவு பாசம். அவன் கூட பேசாம சுத்தல்ல தானே விடுவ?” ஆனந்தன் கிண்டலாக கேட்க, பெண்ணுக்கு பொங்கிவிட்டது. “அஜுக்காக நீங்க என்கிட்ட கேள்வி கேட்பிங்களா? இது டூ டூ மச். என் அஜு அவர்! நீங்க இடையில வந்திங்க. மறந்திடாதீங்க” என்று சண்டைக்கு நின்றாள். “இடையில வந்தாலும் ஸ்ட்ராங்கா நிக்கிறோம். இவங்களை மாதிரி கண்ணாமூச்சி ஆடலை இல்லை“ “சீனியர் உங்க தம்பிய பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க“ “உண்மையை சொன்னா இப்படி தான் மூக்கு பீரங்கி மாதிரி விடைக்கும்“ “சீனியர்ர்ர்ர்“ “மாமா இல்லை நீ“ “டேய் நீ எந்த மீனிங்ல மாமா சொல்ற?” கல்யாண் சந்தேகமாக தம்பியிடம் கேட்டான். ஆனந்தன் தோள் குலுக்க, கல்யாண காண்டாகி அவன் முதுகிலே வைத்தான். உடன் ஜீவிதாவும் அவளின் ஹாண்ட் பேக்கிலே நன்றாக வலிக்கும் படி வைத்தாள். “ஆஆஹ். ண்ணா உன் ஜுனியர் என்னை வலிக்கவே அடிச்சுட்டா. ஒழுங்கு மரியாதையா எனக்கு குல்பி வாங்கி கொடுக்க சொல்லு” என்றான் ஆனந்தன் முதுகை தேய்த்தபடி. “சீனியர் இவர் கிளம்ப மாட்டார், வாங்க நாம போலாம்” என்று கல்யாண் கை பிடித்து நடக்க ஆரம்பித்தாள் பெண். “பாரேன் என்னை விட்டுட்டு போறதை. ஆமா கார் சாவி என்கிட்ட இருக்கே. எப்படி நடந்தே கடலூர் போக போறீங்களா?” ஆனந்தன் கேலியாக கேட்டான். “டேய் எப்போடா எடுத்த” கல்யாண் பேக்கெட்டை தேட, “இப்படி ஏதும் நீங்க பண்ணுவீங்கன்னு தான் உஷாரா முதல்லே எடுத்துட்டேன்” என்றவன், குல்பி சாப்பிட்ட பிறகே கார் எடுக்க விட்டான். இடையில் நிறுத்தி காபி, டீ குடித்து அதிகாலையில் தான் கடலூர் சென்று சேர்ந்தனர். “ஏன் இவ்வளவு லேட்?” என்று தாரணி மூவரையும் கேட்டாள். “உன் கொழுந்தன் தான் காரணம். அவரை கேளு” என்றவள் அஜயை தேடினாள். சகுந்தலா, “நீங்க முதல்ல குளிச்சிட்டு வாங்க” என்று மூவருக்கும் அறை காட்டி சென்றார். ஜீவிதா வேகமாக குளித்து புடவை உடுத்தி கொண்டாள். ஒரு குறுகுறுப்பு. காரணமே இல்லாமல். அஜு இதுக்கு முன்னாடி என்னை புடவையில் பார்த்திருக்காங்களா? இல்லை. ம்ப்ச். இன்னைக்கு பார்ப்பார் தானே. அப்படியாவது நான் வளர்ந்துட்டேன்னு அவருக்கு புரியுமா? ஒருவித எதிர்பார்ப்புடன் வெளியே வந்தாள். பூஜைக்கு மும்மரமாக ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. ஜீவிதாவை பார்த்த சகுந்தலா, “ஜீவி குட்டி வளர்ந்துட்டாளே. அழகா இருக்கமா” என்று திருஷ்டி எடுத்து சென்றார். கல்பனா, “இப்போவாவது புடவை கட்ட தோணுச்சே” என்று மகளுக்கு பூ வைத்து சென்றார். ஜியா நல்ல தூக்கத்தில் இருக்க, தாரணி தங்கை கழுத்துக்கு மெல்லிய சங்கிலியுடன் பெரிய செயின் ஒன்றை அணிவித்தாள். “யார் இந்த பியூட்டி” என்று ஆனந்தன் அவளை பார்த்து விசில் அடித்தான். ஜீவிதா முறைப்பில், “இப்போ தான் வரதா? இந்த வேலை எல்லாம் யார் செய்றது? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. உன் அஜு மேல இவ்வளவு தான் பாசமா?” என்று அவளை சீண்டினான். ‘லேட் பண்ணிட்டு பேச்சை பாரு’ ஜீவிதா கோவமாக பக்கத்தில் இருந்த டம்ளரை எடுத்து அவன் மேல் எறிந்தாள். ஆனந்தன் விலகி கொள்ள, அது கீழே விழுந்து சத்தம் எழுப்பியது. எல்லார் பார்வையும் இவர்கள் மேல் திரும்ப, ஜீவிதா சமாளிப்பாக சிரித்தபடி மெல்ல நழுவி வர, அவள் முன் அஜய். தேடியவன் கிடைத்துவிட, ஜீவிதா புன்னகை மிதமானது. அவனின் நாள் ஆயிற்றே இன்று. அவன் மனசு கஷ்டப்படும் படி நடந்து கொள்ள கூடாது. அஜய் கண்களுக்கோ பெண் புடவையில் வித்தியாசமாக தெரிந்தாள். ஓர் நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன், விலகி சென்றான். ஜீவிதா முகம் சுருங்கி போனது. “அவருக்காக தானே வந்தேன் அத்தை, என்னை கண்டுக்கவே இல்லை. தலை கூட அசைக்கலை” என்று சகுந்தலாவிடம் அவ்வளவு புலம்பல். “எனக்காக வரேன்னு என்கிட்ட சொன்ன” என்று சகுந்தலா சிரிப்புடன் கேட்டார். “ஆஹ். அதுவும் தான்” பெண் சமாளிக்க, “அவளை வேலை செய்ய விடுடி. வந்ததுல இருந்து வாய் தான் பேசுற. ஒன்னு கூட தொடலை” என்று கல்பனா மகளை திட்டினார். “நீங்க கொடுத்தா தானே செய்ய” என்றவள் தலையில் வேலை கட்ட ஆரம்பித்தார் கல்பனா. நிற்க விடாமல், அதை எடு, இதை கொடு என்று விரட்டி கொண்டே இருக்க, “ம்மோவ் போதும்” என்றாள் மகள் சோர்ந்து போய். “பாவம் அவளை விடு கல்பனா. இந்த காபி குடி ஜீவிதா” என்று காமாட்சி அவளுக்கு கொடுத்தார். சம்மந்தி சொல்வதால் கல்பனா விட்டுவிட்டார். ஜீவிதா காபியுடன் அமர்ந்து கொள்ள, அஜய் சரியாக வந்தான். “தாரு கெஸ்ட்க்கு பேன் திருப்பி வை. பாவம்” என்று கிண்டலாக சொல்ல, சின்னவளுக்கு ரோஷம் வந்துவிட்டது. காபியை கீழே வைத்துவிட, “தாரு இப்போ அந்த காபி காலியாகி இருக்கணும். பார்த்துக்கோ” என்றான் அஜய் கண்டிப்புடன். ஜீவிதா போ முடியாது என்று முகம் திருப்ப, “இப்படியே மூஞ்சை திருப்பினா ஊரை விட்டு கிளம்ப முடியாது. சொல்லி வை” என்று சென்றான். ஜீவிதா முணுமுணுத்து கொண்டே சென்றவள் எதிரில் சங்கர் வர, அவரிடம் நலம் விசாரித்தாள். சங்கரும் நல்ல முறையில் பேசி சென்றார். குறிப்பிட்ட நேரத்தில் பூஜை ஆரம்பமானது. சங்கர் குடும்பமாக மனையில் அமர்ந்தார். சகுந்தலா கணவருடன் சேர்ந்து கட்டிடத்தை திறந்து வைத்தார். அஜய் வளர்ச்சியில் அங்கிருந்த அத்தனை உள்ளங்களும் மகிழ்ந்தது. அவனை அணைத்து வாழ்த்தினர். ஜீவிதா எடுத்து வந்த கிப்டை கொடுக்கவில்லை. அஜய் அவள் வாழ்த்தை எதிர்பார்த்து அவளை பார்த்தான். ஆனந்தன் அஜயை அணைத்து வாழ்த்த, கல்யாணும் அணைத்து கொண்டான். கல்பனா, தாரணி, காமாட்சி எல்லாம் கிப்ட் கொடுத்தனர். சேனாதிபதி அவன் கட்டிடத்திற்கு தேவையான சோபா, டேபிள் உள்ளிட்ட சில பொருட்களை நேற்றிரவே இறக்கிவிட்டார். “ஏன் இதெல்லாம்?” அஜய் கேட்க, “உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய” என்றிருந்தார். “இது மட்டும் உங்க சம்மந்திக்கு தெரிஞ்சது இன்னும் தான் அஜயை பேசுவார்” என்றான் கல்யாண் அப்பாவிடம் தனியாக. “அவர் பேசினா அஜய் கண்டுக்கணுமே” என்றுவிட்டார் சேனாதிபதி. விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். அரசியல் தலைவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் அதிகம் வந்தனர். அஜயின் சொந்தங்கள் பார்த்து ஜீவிதாவிற்கு மலைப்பு தான். அவர்களின் பழக்க வழக்கம், தோற்றம், வசதி வாய்ப்பு எல்லாம் பெண்ணின் கண்ணில் பட்டு, கருத்தில் நிலைத்து, முகத்தை வாட வைத்தது.