Advertisement

நஞ்சினாலான அமுதன்!

6

இரவு இரயிலில் கிருபா ஊர் வந்து சேர்ந்துவிட்டாள். பெரியவர்கள் யாரும் வரவில்லை. இவள் கடையை பார்க்க வேண்டும்.. வேலை இருக்கவும் தாமதிக்காமல் வந்து சேர்ந்தாள்.

காலையில் சற்று நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு.. எப்போதும் போல கடைக்கு கிளம்பினாள், கிருபாகரி.

சென்னையில், ஈசன் இரவிலிருந்து யோசனையிலிருந்தான். உறக்கம் வரவில்லை.. தாத்தா சொல்லுவது போல கூட்டிக் கொண்டு போனால் சரியாக வருமா.. இல்லை இங்கேயே அப்பாவை நாமே பார்த்துக் கொள்ளலாமா? என யோசனையில் அமர்ந்தே இருந்தான் அப்பாவின் அருகே.

சங்கர் விழித்தவர்.. மகனை பார்த்தார்.. “ஏன் ஈசா.. தூங்கலை” என்றார்.

ஈசன் “ம்.. தூங்கனும் பா.. தண்ணீர் குடிக்கிறீங்களா” என்றான்.

சங்கர் சரி என்றார்.. தண்ணீர் கொடுத்தான். சங்கர் “என்ன ப்பா.. என்ன யோசனை” என்றார்.

ஈசன் ஒன்றுமில்லை என தலையசைத்தான்.

சங்கர் “எப்படி.. அப்பா வந்தார்.. நீ கூப்பிட்டியா” என்றார்.

ஈசன் பயந்தான் முதலில்.. அப்பாவிடம் கேஸ் கொடுத்தேன் என எப்படி சொல்லுவது என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தான் பதில் சொல்லாமல்.

சங்கர் தெளிவான மனநிலையில் இருந்தார் போல.. “ம் ஷண்முகம் கண்டிப்பா ஏதும் சொல்லியிருக்க மாட்டான். நீதான் எதோ.. எனக்கு முடியலைன்னு சொல்லியிருப்ப தாத்தாகிட்ட.. எப்படி போய் பார்த்த ஈசா” என்றார்.

ஈசன் “அப்பா, அதெல்லாம் எதுக்கு. நீங்க சந்தோஷமா இருக்கீங்கதானே.. அவங்க உங்களை நல்லா பார்த்துகிறாங்க தானே..” என்றான்.

சங்கர் “ம்.. சந்தோஷமா இருக்கேன், அதைவிட நிம்மதியா இருக்கேன்.. எனக்கு பிறகு.. என் பசங்களுக்கு யாருமில்லாமல் போகிடுமோ.. என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் ஆகும்ன்னு நினைச்சி வருத்தம் இருந்தது..” என்றார்.

ஈசன் குறிக்கிட்டு “அப்படி எல்லாம் இல்லை ப்பா. நீங்க உங்களுக்கு ஒண்ணுமில்லை ப்பா..” என்றான்.

தந்தை குறுக்கிட்டார் “டேய்.. எனக்கும் தெரியும் டா. எனக்கு.. என்னமோ தோணுது.. கொஞ்சநாள்தான் நான் இருப்பேன்னு. அதனால், அடிக்கடி பயம் இருந்தது.. பிள்ளைகள் என்ன செய்வார்கள்ன்னு.. இப்போ நிம்மதியா போவேன். என் அப்பா வந்துட்டார். அவர் பார்த்துப்பார்.” என்றார் திடமான குரலில்.

ஈசன் “ஏன் அப்பா.. இப்படி எல்லாம்” என்றான்.

சங்கர் “சொல்லறதை கேளு டா,” என முன்போல தோரணையாக இல்லையென்றாலும், அந்த  குரல்.. தழுதழுத்தது.

ஈசன், அமைதியாக தொண்டையடைக்க அமர்ந்திருந்தான்.

சங்கர் “தாத்தா பாட்டி கூட நீ பேசுறீயா” என்றார்.

ஈசன் “ஏன் அப்பா.. பேசுறேன்” என்றான்.

சங்கர் “தாத்தா சொல்றபடி கேளு.. யார் உன்னை எது சொன்னாலும். நீ நம்பிடாத. தாத்தாவை பார்த்துக்கோ.. அவருக்கு முடியலை” என்றவர்க்கு.. இப்போது மூச்சு வாங்க தொடங்கியது. 

ஈசன் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்தான் தந்தைக்கு. சங்கரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஈசன் தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டான் “அப்பா, குட்டிம்மா கிட்ட நீங்க அட்மிட் ஆனதை சொல்லலை ப்பா..” என்றான்.

சங்கர் அதிர்ந்தார்.

ஈசன் “அவகிட்ட எப்படி ப்பா, சொல்லுவேன்.. எனக்கு தெரியலையே..” என அவரின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டான்.

சங்கர் லேசாக மயக்க நிலையில் கேட்டுக் கொண்டார்.. அப்படியே கண் மூடி உறங்க தொடங்கிவிட்டார். நினைவு தப்பிபோகிற்று.

ஈசன் தந்தையின் பேச்சு சத்தம் இல்லாமல் போகவும் நிமிர்ந்து பார்த்தான்.. ஏதாவது ஆகிற்றோ என.. ecg மானிட்டரை பார்த்தான். நிம்மதி வந்தது.. கொடுமையான நிமிடங்கள் மருத்தவனையில் இது போன்ற நிகழ்வுகள், எல்லோருக்கும்.

ஈசன் “எப்படி ப்பா, சொல்லுவேன்.. என்னால அப்பாவை பார்த்துக்க முடியலைன்னு, எப்படி அப்பா.. சொல்லுவேன்” என கண்ணீர் விட்டு அழ தொடங்கினான்.

எவ்வளவு நேரம் அப்படி புலம்பினானோ.. அந்த பெட்டில் சாய்ந்து தானும் உறங்க தொடங்கியிருந்தான்.

அதிகாலையில், நர்ஸ் வந்து யூரின் பேக்.. செக் செய்தார். அந்த சத்தத்தில் எழுந்துதான், சற்று தள்ளி இருந்த பெட்டில் படுத்து உறங்கினான், ஈசன்.

காலையில் தாத்தா வந்து சேர்ந்தார். கிருபா டாக்ஸி புக் செய்து கொடுத்தாள், ஊரிலிருந்தே.

காலை உணவு மகனுக்கு மட்டும் எடுத்து வந்திருந்தார். தானே ஊட்ட முனைந்தார். ஈசன் அவருக்கு முடியாது என தானே வாங்கி அப்பாவிற்கு அந்த இட்லிகளை ஊட்ட தொடங்கினான்.

சங்கருக்கு இன்று சற்று முடியவில்லை போல.. உறங்கிக் கொண்டே  இருந்தார்.

தாத்தா, சங்கருக்கு துணையாக அறையிலேயே அமர்ந்துக் கொண்டார்.

ஈசனின் அலுவகலத்தில் வேலை செய்பவர்கள் இப்போது.. சங்கரை பார்க்க வந்திருந்தனர்.

ஈசன், பேசிக் கொண்டிருந்தான்.. தந்தை உறங்குவதால்.

சற்று நேரம் சென்று அவர்களும் சங்கரை நலம் விசாரித்து கிளம்பினர்.

மதியமாக கோக்கிலாவும்.. பாட்டியும் வந்தனர். 

சங்கர்க்கு, என்னமோ இன்று நினைவு வரவேயில்லை. பேசவேயில்லை.. அன்னையிடம் கூட. ஈசனுக்கும் தாத்தாக்கும் உள்ளே பயம் பற்ற தொடங்கியது.

மருத்துவர்கள் “ஒன்றுமில்லை.. அசதி” என சொல்லி சென்றனர்.

பாட்டிக்கு மகன் கண் விழித்து பார்க்கவில்லை எனவும். புலம்பிக் கொண்டே அமர்ந்திருந்தார்.. மகனின் அருகில்.

நர்ஸ் வந்தவர்கள் எல்லோரும்.. சங்கரை பரிசோதித்துவிட்டு.. “நல்லா இருக்கார்… தூங்கறார். பாட்டி, நீங்களும் தூங்குங்க..” என சொல்லி சென்றனர்.

ஈசன் பயத்தில் அமர்ந்திருந்தான்.. இன்னும் தங்கையிடம் சொல்லவில்லையே என.

மனதை தேற்றிக் கொண்டு தங்கைக்கு அழைத்தான் ஈசன் “சஹா” என்றான்.

சஹானா, வேலையில் இருந்தாள் “ஏன்.. சொல்லு அர்ஜெண்டா” என்றாள். எப்போதும் இப்படி கேட்டுக்கும் போதும் “நீ முடிச்சிட்டு கூப்பிடு” என வைத்திடுவான் அண்ணன். இப்போது “ஆமாம், சஹா” என்றான்.

சஹானா “சொல்லு ண்ணா.. என்ன, சீக்கிரம் சொல்லு.. லீடு கூப்பிடுறார்.. மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சி.. போகணும்” என்றாள்.

ஈசன் “அப்பாக்கு லேசாக நைட் உடம்பு முடியலை.. ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்திருக்கேன்.” என சொல்ல சொல்ல.. சஹானா அப்பாவை விசாரிக்க தொடங்கினாள்.

ஈசன் எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான். பின் “ப்ளைட்டில் டிக்கெட் போடுறேன்.. நீ கிளம்பி வாடா சஹா” என்ற பின்தான் அழைப்பை வைத்தான்.

சஹானாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணன் சொன்னதை அலுவகத்தில் சொல்லிவிட்டு, தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து உடைகள் எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்தாள்.

மதியம் சங்கர் உண்பதற்கு எழுந்துக் கொள்ளவில்லை. ஐந்து மணிக்கு மேல்தான் எழுந்தார். கோக்கிலாதான் உணவு கொடுத்தார். 

பாட்டி அப்போதுதான் சற்று படுத்து உறங்கினார். தாத்தா வீட்டிற்கு கிளம்பியிருந்தார். இன்னும் உண்ணவில்லை பாட்டி.. தாத்தாவும் சொல்லி பார்த்துவிட்டு.. கிளம்பியிருந்தார்.

ஏனோ உறவுகள் எல்லாம் தளர்ந்து போகிற்று. எல்லோரும் இயல்புநிலை மாறி போகினர். கடமைக்காக உண்பது.. உறங்குவது.. என இயந்திர கதியில் நடந்தது. ஈசன், கோக்கிலா பாட்டி என யாரும் உண்ணவில்லையே.

கிருபா, மாலையில் தாத்தாவிற்கு அழைத்து பேசினாள். தாத்தா காலையில் நடந்தவைகளை சொன்னார் “என்னமோ ம்மா, ஐந்து மணிக்குதான் எழுந்து சாப்பிட்டிருக்கான். நாளைக்குதான் டாக்டர் கிட்ட பேசனும்.. சங்கரை கூட்டிட்டு போலாமா என..” என்றார் தளர்ந்த குரலில்.

கிருபா “பொறுமையாக கேளுங்க தாத்தா. அப்புறம், சண்முகம் மாமா.. ஏதும் சொல்லலையே” என்றாள்.

தாத்தா “அவன் என்னை பார்க்கவேயில்லை, ஏதும் கேட்பதும் இல்லை டா. அதெல்லாம் நீ கவலை படாதே. எப்படி கேட்ப்பான் என்கிட்டே. “ என்றார்.

கிருபா அமைதியாக இருந்தாள்.

தாத்தா “கடையிலிருந்து நேரமாக வீட்டுக்கு போய்டு மா கிருபா.. கண்ணாம்மா இருக்காங்கல்லா.. கூடவே வைச்சிக்கோ.. தனியா இருக்காத.. நான் சீக்கிரம் வந்திடுறேன்” என்றார்.

கிருபாவும் கேட்டுக் கொண்டு அழைப்பை துண்டித்தாள்.

இரவு உண்ணும் போது மீனாட்சி விசாரித்தார் சங்கர் பற்றி..தன் மாமானாரிடம் விசாரித்தாள்.

தாத்தா “சங்கரை ஊருக்கு கூட்டி போகலாம்ன்னு இருக்கோம்” என்று கூறிவிட்டார். 

மீனாட்சி “மாமா, அவரை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே மாமா” என்றாள்.

அருணாசலம் சலனமே இல்லாமல் “என்னான்னு கேட்கணும் ம்மா..” என்றார்.

மீனாட்சிக்கு பதில் சொல்ல முடியவில்லை.

அருணாசலம் “அவனும் என் மகன் ம்மா.. நான் யார்கிட்ட கேட்கணும்.” என்றார்.

மீனாட்சிக்கு பதில் சொல்ல முடியவில்லை. உணவு பரிமாறிவிட்டு அமைதியாகினார்.

இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் சஹானா, மருத்துவமனைக்கு வந்தாள். அரக்கபரக்க.. அண்ணனுக்கு அழைத்தாள் பெண்.. ஈசனும் தங்கையை பார்த்துவிட்டு.. ரிசெப்ஷன்னிலிருந்து கை அசைத்தான்.

கண்கள் சிவந்து.. நடந்தே வந்தவள் போல கலைத்து ஓய்ந்து அண்ணனை கண்டவுடன் “அப்பா எங்க ண்ணா” என அழுதாள்.

ஈசன் “வா சஹா.. நீ டென்ஷன் ஆக கூடாது. அப்பா பயந்துடுவார். நீ ரிலாக்ஸ்சாக பார்.. பேசு.. இப்படி டென்ஷன் ஆகாத” என்றான்.

ஈசன் அறைவாசலில் நின்று.. தங்கையை சமாதானம் செய்து அப்பாவின் உடல்நலம் பற்றியும்.. அவருக்கு நடக்கும் ட்ரீட்மென்ட் பற்றியும்  சொல்லி.. அவளை அழ வைத்து சமாதானம் செய்து என ஒரு மணி  நேரம் அவளை ஒருநிலை படுத்திதான், தந்தையை பார்க்க கூட்டி போனான்.

ஆனாலும் சஹானா தந்தையை பார்த்தும் கதறித்தான் அழுதாள். நாமெல்லாம் என்ன எந்திரமா.. சொல்லியதை செய்ய.. அதுவும் அப்பாவை ஆக்ஸிஜன் மாஸ்க்.. மருத்துவமனை உடைகள்.. யூரின் பாக் என.. பார்க்க உடையாத மகளின் மனது.  திடகாத்திரமான அப்பா.. என்னை தோள்களில் தாங்கிய அப்பா.. இப்போது கட்டிலோடு ஒன்றி.. தோள்கள் தளர்ந்து.. விரல்களில் நரம்புகள் புடைக்க.. முகம் வெளிறி.. கன்னமெல்லாம் ஒடுங்கி..  கண்களில் தேடலோடு தன்னையே பார்க்க.. பெண்ணவள்.. அமைதியாக “அப்பா.. அப்பா.. என்ன அப்பா இப்படி இருக்கீங்க.. என்ன ப்பா ஆச்சு..” என கதறினாள்.

ஈசனும் கண்களில் நீர் கோர்க்க நின்றுக் கொண்டான்.

சங்கர், மகளின் கைகளை பற்றிக் கொண்டு ஆறுதலாக தட்டி கொடுத்தார்.

சஹா தந்தையிடம் “சாப்பிட்டீங்களா அப்பா.. சாப்பிட முடியுதா.. என்ன அப்பா.. இத்தனை மிஷின்.. “ என அவரின் ஆக்சிஜன் மாஸ்க் எடுத்தாள்.

சங்கருக்கு, மகளின் அழுகையில் லேசாக பேச வரவில்லை.. மூச்சு வாங்கினார்.

ஈசன் வந்து மாஸ்க் போட்டு விட்டு “இரு சஹா.. கொஞ்சம் அமைதியா இரு” என்றான்.

சஹா, ஆவேசமாக எழுந்து அண்ணனின் சட்டையை பிடித்தாள் “என்ன டா செய்த அப்பாவை.. இப்படி ஆகிட்டார். உண்மையை சொல்லு.. அப்பாவை எப்போ, ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்த.. எப்போ தெரியும் அப்பாக்கு, கேன்சர்ன்னு” என்றாள்.

ஈசன் அப்பாவையும் பார்த்தான்.. தங்கையையும் பார்த்தான். என்ன செய்வதென திணறினான்.. தங்கையின் கைமேல் தன் கையை வைத்து “சஹா.. அமைதியா இரு.. அப்பா பார்க்கிறார்.. பாரு. நீ அப்பாவை பாரு.. நான் சொல்றேன்.. சஹா.. சஹா கையை எடு” என்றான் சமாதனமான குரலில்.

சஹா பாவம் அப்பாவை பார்த்த குழப்பத்தில் அண்ணனிடம் பாய்ந்தாள்.

மெதுவாக அவளின் கையை விளக்கி.. அவளை அமர வைத்து.. அப்பாவின் அருகே சென்று நின்றுக் கொண்டு.. “அப்பா அவள் இப்போதானே வந்தாள்.. டென்ஷன் அப்பா.. நீங்க சொல்லுங்க.. ரிலாக்ஸ் ஆகுங்க.. பொறுமையாக அவகிட்ட பேசுங்க..” என அவரின் நெஞ்சை நீவிவிட்டு.. பேசிக் கொண்டே அவரின் ஆக்சிஜன் மாஸ்க் எடுத்துவிட்டு தங்கையோடு பேச வைத்தான்.

சஹா கொஞ்சம் சமன்ப்பட்டாள். தந்தை நன்றாக பேசினார்.. பெண்ணிடம். ஏதேதோ பேசினார் இருவரும். என்ன இருந்தாலும் உண்மை மாறபோவதில்லையே. சஹானா கண்களில் நீர் வற்றவேயில்லை வந்துக் கொண்டே இருந்தது.. அனிச்சையாய்.

ஈசன் ஓரளவுக்கு மேல் முடியாமல் வெளியே வந்து அமர்ந்துக் கொண்டான்.

சங்கர் மட்டுமே உண்டிருந்தார். 

ஈசன் தங்கையோடு சென்று உண்ணலாம் என காத்திருந்தான்.

இப்போது கிருபாவின் எண்.. அவனின் போன் திரையில் மின்னியது. ஈசனுக்கு அந்த எண்.. எங்கோ பார்த்தது போல இருக்கு என தெரிகிறது, ஆனால் யாரென தெரியவில்லை. இந்த நேரத்தில் யார் அழைப்பது என தெரியாமல் அமர்ந்திருந்தான்.

கிருபா, அன்னைக்கு போன் செய்து.. பேசியிருந்தாள். இபோதுதான் அவர்கள் கிளம்புகிறார்கள் எனவும்.. “ஏன் ம்மா லேட் .. பாவம் பாட்டிக்கு பசிக்கும். கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்லாமில்ல” என்றாள்

கோக்கிலா “சங்கர், பாட்டியை விடவேயில்லை.. பேசிட்டே இருந்தான். கையை பிடிச்சிட்டே இருந்தான். எப்படி டி.. கிளம்புவது. தாத்தாவும் சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டாங்க. பாவம், தனியா இருப்பான். என்ன செய்வது. கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தோம்.. வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம்” என்றார்.

கிருபா “பாட்டிக்கு பசிக்கும்.. அதான். சரி பார்த்து போங்க. நான் GPAY செய்துடுறேன். இறங்கிட்டு கூப்பிடுங்க” என்றாள்.

கோக்கிலா “மாமாகிட்ட பேசு டி.. சந்தோஷபடுவான்” என்றார்.

சரி என கேட்டுக் கொண்டு அழைப்பை வைத்தாள் பெண்.

ஈசனுக்கு அழைத்தாள் பெண். எப்படியும் எடுக்கமாட்டான் என தெரியும். இருந்தும் மாமாவிடம் ஒருவார்த்தை பேசினால் நன்றாக இருக்கும் என  தோன்ற.. தன்மானத்தை விட்டு விட்டு, அழைத்தாள்.

ஈசன் யோசனையோடு இரண்டாம் முறை அழைக்கும் போது எடுத்து “ஹலோ யாருங்க” என்றான்.

கிருபா “கிருபாங்க ஈசன்.” என்றாள்.

ஈசன் சலிப்பாக தலையை கோதிக் கொண்டு.. “சொல்லுங்க” என்றான்.

கிருபா “மாமா எப்படி இருக்காங்க” என்றாள்.

ஈசன் “ம்.. எப்போதும் போலதான்” என்றான். கூடவே “நேற்றுதானே போனீங்க, அதுக்குள்ளே ரொம்பதான் அக்கறை” என்றான்.

கிருபா “ம்.. மாமாகிட்ட பேசணும்” என்றாள்.

ஈசன் “மாமா இப்போ, பொண்ணு கூட பேசிகிட்டு இருக்கார். அதனால் அப்புறம் கூப்பிடுங்க” என்றான்.

கிருபா “ஓ.. உங்க தங்கச்சி வந்தாச்சா.. ஒரு வழியா சொல்லிட்டீங்க போல” என்றாள்.

ஈசன் “ம்.. தைரியம் இல்லைதான், எல்லோரும் என்னை எதோ குற்றவாளி போல பார்க்குறீங்க. அதான் சொல்லிட்டேன். இல்லைன்னா.. கண்டிப்பா அவளை கஷ்ட்டபடுத்திருக்க மாட்டேன்.” என்றான்.

கிருபா “மாமாவை விட யார் கஷ்ட்டப்பட போறா. நீங்க அப்படி யோசிக்க கூடாது. மாமாவின் நிம்மதிதானே முக்கியம். அவருக்கு பெண்ணை பார்த்ததும்  கண்டிப்பா சந்தோஷப்படுவார்.” என்றாள்.

ஈசன் “ம்.. எங்க, அழுகைதான் மிச்சம்.” என்றான்.

கிருபா “அப்புறம் என்ன சிரிக்கவா முடியும். எல்லாம் சரியாகிடும்” என்றாள்.

ஈசன் “என்ன அருள்வாக்கா.. அப்புறம் பேசுறேன்” என்றான்.

கிருபா “இருங்க.. மாமாகிட்ட கொடுங்க.. நான் பேசிட்டு தூங்கிடுறேன் ரொம்ப டயர்டா இருக்கு.. கொஞ்சம் கருணை காட்டுங்கள்” என்றாள்.

ஈசன் “ம்..” என உள்ளே சென்றான் போனோடு.

தந்தையிடம் “அப்பா.. கிருபா பேசுறாங்க” என்றான்.

சங்கர் பேசினார் நலம் விசாரித்தார்.  கிருபாவும் மாத்திரை சாப்பிடீங்களா.. தூங்கனும் என பேசிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் சங்கர் “கிருபா சஹா வந்திருக்கா.. நீ பேசு” என்றார்.

போனை பெண்ணிடம் நீட்டி சங்கர் “கிருபா டா, உனக்கு தெரியாதில்ல.. தாத்தா பாட்டி எல்லாம் இப்போ சொன்னேனே.. நம்ம அத்தையோட பொண்ணுதான் கிருபா, நல்லா பேசுவாள்.. பேசு” என சொல்லி நீட்டினார்.

சஹா அதிர்ந்தாள்.. 

ஈசன் போனை வாங்கி ஸ்பீக்கர்ரில் போட்டு “கிருபா, சஹா பேசுறா..” என்றான்.

கிருபா “எப்படி இருக்கீங்க சஹானா..” என்றாள் இயல்பான குரலில்.

சஹா “ம்.. நல்லா இருக்கேன். அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் சொல்லி கொண்டு இருந்தார். நீங்க வந்தீங்கன்னு.” என்றாள்.

கிருபா “சாப்பிட்டீங்களா.. ரொம்ப டயர்டா இருக்கீங்க போல குரல் ஒருமாதிரி இருக்கு. மாமா சரியாகிடுவார் சஹானா” என்றாள்.

சஹா “ம்.. “ என்றாள்.

சற்று நேரம் அமைதி.

ஈசன் போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான் “சரி, நீங்க நிம்மதியா தூங்குங்க” என்றான்.

கிருபா “ஏங்க இப்படி பேசுறீங்க” என்றான்.

ஈசன் “ஒண்ணுமில்ல.. “ என்றான்.

கிருபா “தங்கச்சியை கூட்டி போய் சாப்பிட வைங்க.. நீங்க சாப்பிட்டீங்களா” என்றாள்.

ஈசன் “இனிமேல்தான்” என்றான்.

கிருபா “போய் சாப்பிடுங்க.. எல்லாம் சரியாகிடும் ஈசன். ஆண்டவன் பார்த்துப்பார்.” என்றாள்.

ஈசன் “போதும் அருள்வாக்கு. இப்போது தூக்கம் வரலையா” என்றான்.

கிருபா “வருது வருது.. என் நம்பரை சேவ் செய்துக்கோங்க.. பைய்..” என்றவள்.. அழைப்பை தண்டித்தாள். 

எதோ பாட்டு கேட்டுக் கொண்டு உறங்க சென்றாள்.

ஈசன் உள்ளே வந்து தங்கையை அழைத்துக் கொண்டு உண்பதற்கு சென்றான். நர்ஸ் ஒருவரை சங்கரை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்றான்.

அண்ணன் தங்கை இருவரும் பேசிக் கொண்டே உண்டனர்.

இருவரும் அறைக்கு வந்தனர். 

சங்கர் உறங்கி இருந்தார்.

சஹா உறங்க முற்பட்டாள். ஆனால், அண்ணன் தங்கை இருவருக்கும் உறக்கம் வரவில்லை.

Advertisement