Advertisement

மதியம் உணவோடு.. பாட்டியும் கோக்கிலாவும் வந்தனர்.

கிருபா, வரவேற்று பொதிகளை உள்ளே வைத்து வெளியே வந்து அமர்ந்துக் கொண்டாள்.

பாட்டி, மகனோடு  பேச தொடங்கினார். கோக்கிலா அங்கேயே அமர்ந்துக் கொண்டார்.

தாத்தாவும் வெளியே வந்தார்.. கிருபாவோடு நேராக ஆபீஸ் ரூம் சென்றனர். விவரங்கள் சொல்லி.. பில்லிங் பற்றி கேட்டுக் கொண்டு.. அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினர்.

அதன்பின் மருத்தவரை பார்க்க வேண்டும் என தாத்தா கேட்டுக் கொள்ள.. மருத்துவரை பார்த்து வந்தனர். கிருபாவும் தாத்தாவும்.

முழு விவரமும் அப்போதுதான் தெரிந்தது.. சரியாகிடும் என எண்ணி கேட்டவர்களுக்கு.. நேற்று ஈசனிடம் சொன்னதை.. இப்போது தாத்தாவிடம் மருத்துவர்கள் சொல்லவும்.. அழுத்தம் அதிகமாகியது தந்தைக்கு.

தாத்தா “நாங்க எங்க ஊருக்கு கூட்டிட்டு போலாமா” என்றார்.

மருத்துவர்கள் எங்கே என விசாரித்தனர். பின் “அதிக தூரம்.. கொஞ்சம் கஷ்ட்டம்தான். அவர் விருப்பும் பட்சத்தில் அதற்குண்டான வசதிகளை செய்து தருவோம். நீங்க பேசிவிட்டு சொல்லுங்க” என்றுவிட்டனர்.

மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்ததும் தாத்தா அப்படியே சற்று தூரத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டார். 

கிருபா “தாத்தா என்ன பண்ணுது” என்றாள்.

தாத்தா “முடியலை ம்மா.. என் மகனுக்கு இப்படி ஒரு நிலையா..” என சொல்லி கண்ணாடியை கழற்றி.. கண்களை துடைத்துக் கொண்டார்.

கிருபா “தாத்தா.. என்ன தாத்தா நீங்களே தைரியம் இழக்கலாமா..” என்றாள்.

தாத்தா “இன்னும் என்ன என்ன நான் பார்க்க வேண்டி இருக்கோ” என சொல்லியவர் கண்ணாடியை அணிந்துக் கொண்டு எழுந்து லிப்ட் நோக்கி சென்றார்.

இப்போது சங்கர் இருந்த அறைக்கு வந்தார்.

ஈசன் வெளியே அமர்ந்திருந்தான்.

உள்ளே சென்று.. மகனிடம் ஊருக்கு செல்லுவதாக சொல்லிக் கொண்டார். சங்கர்.. “அம்மா இருக்கட்டும் அப்பா” என்றார்.

எல்லோரும் பதில் சொல்லினர்.

 எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர். இன்று இரவு தாத்தாவும் கிருபாவும் ஊர் செல்லுகிறார்கள்.

தாத்தா வெளியே வந்தார். 

தாத்தா “ஈசனிடம், டாக்டர்ரை பார்த்தேன் ஈசா. எல்லாம் சொன்னார். நாம ஊருக்கு கூட்டிட்டு போய்டலாமா” என்றார் அக்கறையாக.

ஈசன் “அவர் இன்னும் கொஞ்சநாள் இருக்கட்டுமே.. ஊரில் என்ன வசதி இருக்கு” என்றான்.

கிருபாவிற்கு தோன்றியது.. வீடு கேட்க்கும் போது இதெல்லாம் தெரியாதா என. பேசாமல் இருந்தாள்.

தாத்தா “இல்லப்பா.. வலி வேதனை இல்லாமல் கொஞ்சநாள் நம்ம கூட இருப்பானோன்னு கேட்டேன்” என்றார்.

ஈசன் “நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

தாத்தா “என்ன வேணுமோ கேளுப்பா.. கூப்பிடு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அத்தையும் பாட்டியும் தினமும் வருவாங்க. நீ, வேலைக்கு போவதாக இருந்தால் பாருப்பா.. அப்புறம், சங்கரு பிள்ளையை தேடுறான் ப்பா.. பேரென்ன..” என்றார்.

கிருபா பதில் சொல்லவில்லை.

ஈசனே சற்று நேரம்  சென்று “சஹானா” என்றான்.

தாத்தா “வர சொல்லு ப்பா.. அப்பாவைவிட என்ன வேலை” என்றார்.

ஈசன் அமைதியாகவே இருந்தான்.

தாத்தா “வர சொல்லு பிள்ளையை. அவனும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கணுமே. குறையில்லாமல்  பார்த்துக்கோப்பா” என்றார்.

ஈசன்க்கு கோவம், இத்தனை சொல்லுகிறார்.. என எண்ணிக் கொண்டு,  நேராக தாத்தாவை பார்த்து “அந்த வீட்டை.. கொடுங்க, எங்க அப்பாக்கு” என்றான்..

தாத்தா “எனக்கு.. ஒரு பையனில்ல.. ரெண்டு மகன். அந்த வீடு ரெண்டு பேருக்கும்தான். நீ வா.. இரு.. போ.. எல்லா உரிமையும் இருக்கு. ஆனால், முழுதாக கொடுக்க முடியாதுப்பா. இப்போ இதெல்லாம் பேசணுமா” என்றார்.

ஈசன் “அப்புறம் எப்போ பேசுவது. எங்க அப்பா அம்மாக்கு நீங்க மரியாதையே கொடுக்கலை. அவங்க எவ்வளோ கஷ்ட்டபட்டாங்கன்னு எங்களுக்குத்தானே தெரியும்.. எனக்கு, அந்த வீடு.. அப்பா பேரில் இருப்பது.. மரியாதையை கொடுக்கும். அவருக்கு தன் சொந்த ஊரில் சொந்த வீட்டில் இருப்பது நிம்மதியான இறுதியை கொடுக்கும்ன்னு தோணுது.. அந்த வீட்டை பற்றி அப்பா நிறைய சொல்லி இருக்கார்.. அவருக்கு, அது ரொம்ப பிடிக்கும். அது மட்டும் கொடுங்க.. எனக்கு வேண்டாம்ன்னு எழுதி வேண்டுமானால் தரேன்.” என்றான்.

தாத்தா ஓய்ந்து போனார்.

கிருபாவும் ‘என்ன டா சொல்றான் இவன்’ என்தான் பார்த்திருந்தாள்.

தாத்தா “ஈசன் நீ சின்ன பையனில்ல.. இவ்வளவு பெரிய பிரச்சனைகளை பார்த்ததும் குழம்பிட்ட.. அது உன் அப்பன் வீடுதான். நீ வா..” என்றார்.

ஈசன் “அது எதோ ஒட்டிக் கொள்ள வந்தது போல இருக்காதா” என்றான்.

தாத்தா அதிர்ந்து போனார்.. “நீ தப்பு தப்பா பேசுற” என்றார்.

ஈசன் “ஷண்முகம் அப்படிதான் சொன்னார்” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

தாத்தாவிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. அவன், இன்னும் என்னவெல்லாம் பேசினான். இவன், இன்னும் எதிர்த்துக் கொண்டு  என்னவெல்லாம் செய்வானோ என தோன்ற அமைதியாக அமர்ந்தார்.

கிருபா “ஈசன், நீங்க உங்க அப்பாக்காகதானே கேட்க்குறீங்க தப்பில்லை. ஆனால், எழுதி கேட்பது தப்பு. நீங்க இந்த கேஸ் இல்லாமல் தாத்தாவை பார்த்திருந்தால்.. இந்நேரம் மாமா.. அங்கே இருந்திருப்பார். என்ன உரிமை உங்களுக்கு இல்லாமல் போகும் அங்கே.. ஏன் தாத்தா அப்படிதானே” என்றாள்.

ஈசன் தயங்கி தயங்கி “அந்த ஷண்முகம் அப்படிதானே சொல்றார்.” என சொல்ல..

தாத்தா இடைமறித்தார் “உன் பெரியப்பா அவன்.. மரியாதையாக கூப்பிடு” என்றார்.

ஈசன் அதை பொருளென கொள்ளவில்லை “அவரை எங்க அப்பா பார்த்தால்.. எப்படி பேஸ் செய்வார்.  எங்க அப்பா அப்படி என்ன தப்பு செய்தார்.. அவரெல்லாம் பேசுவது சரியா. எங்களுக்குன்னு ஒரு உரிமை வேணுமில்ல. நான் எப்படி அப்பாவை அங்கே கூட்டிக் கொண்டு வருது..” என்றான்.

தாத்தா அமைதியானார்.

கிருபா “ஆக, இதை சொத்து பிரச்சனையாகவே பார்க்குறீங்க.” என்றாள்.

ஈசன் “நீங்க ஏங்க எப்போதும் நடுவில் வரீங்க” என்றான் சட்டென.

தாத்தா அவ்வளவுதான் எழுந்து நின்றார் “டேய், என்ன பேசுற.. யார்கிட்ட பேசுற தெரியுமா..” என கர்ஜித்தார்.

அங்கே அருகில் இருந்தவர்கள் திரும்பி பார்த்தனர்.

கிருபா தாத்தாவை அமர வைத்தாள்..

ஈசன் இந்த பெருங்குரலை இவரிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை.. ஒருநிமிடம் அப்படியே நின்றான்.

கிருபா “தாத்தா, இதுகெல்லாம் நீங்க கோவப்பட கூடாது. நீங்க பொறுமையா பேசுங்க” என்றாள்.

தாத்தா அமைதியானார். பின் அவரே “நீ சொல்ல வந்ததை சொல்லும்மா” என்றார்.

கிருபா “அதான் அப்பாவுடைய நிம்மதியை விட.. சொத்து கொடுத்தால்தான் வருவேன்னு சொல்றீங்க.” என ஈசனை பார்க்க.. ஈசன் இன்னுமும் முறைத்தான். 

கிருபா நேர்பாவையாக பார்த்துக் கொண்டே “இது சரியா. நம்ம  தாத்தாவின் வருகை உங்களுக்கு பெருசா இல்லையா. தாத்தாவே  மகனை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்றாங்க.. அதைவிடவா.. அந்த பேப்பர்ஸ்.. உங்களுக்கு உரிமையை கொடுத்திடும். நம்ம தாத்தாவைதான் நீங்க சங்கடப்படுத்துறீங்க. தாத்தா வார்த்தையை விட எங்கள்.. சாரி.. நம்ம குடும்பத்தில் ஏதும் பெருசில்ல.. முதலில் சங்கர் மாமாதானே முக்கியம். அவரை பார்க்கலாம். அப்புறம் சொத்து பற்றி பேசிக்கலாம். என்ன தாத்தா..” என்றாள்.. முடிந்தது எனும் விதமாக.

தாத்தா அமோதிப்பதாய் “அதுதான் மா, நான் சொல்றதும். அதை நல்லா அழுத்தமா சொல்லு இந்த பிள்ளைக்கு. என்னமோ, அவன் பெரிய இவன்னு நினைச்சிகிட்டு.. இந்த பிள்ளை சங்கரை வைச்சி விளையாடிகிட்டு இருக்கு. கூட்டிட்டு போய்டலாப்பா.. கொஞ்சநாள் நம்ம கூட இருக்கட்டும் அவன்” என்றார்.. இறுதி வாக்கியங்களை பேரனை பார்த்து சொன்னார், தாத்தா.

ஈசன் “ அப்பா..க்கு.., ஏதும் அவர் மூலமாக..”  என தயங்கினான்..

தாத்தா.. பேரனை பார்த்தார் “உனக்கு அப்பன்னா.. எனக்கு மகன் டா.. போ.. அங்கே கூட்டி போக என்ன செய்யணுமோ செய்.. கேட்டு சொல்லு.. எல்லோரம் ஒன்றாகவே கிளம்பிடலாம் ஏன் ம்மா” என்றார் கடைசி வார்த்தையை கிருபாவை பார்த்து.

கிருபா “முதலில் ஹாஸ்ப்பிட்டலில் என்ன சொல்றாங்க பார்க்கலாம் தாத்தா.. அப்புறம் ஏதாவது ஏற்பாடு செய்யனும்ன்னுன்னா.. நான் போய் பார்த்துக்கிறேன். நீங்க பொறுமையாக வாங்க.” என்றாள். முகத்தில் எந்த கர்வமும் இல்லாமல்.. அதே இயல்பான தோன்றத்தில்.

ஈசன், கிருபா பெண்ணை புதிதாக பார்ப்பது போல பார்த்தான் அரைநொடிகள் அதிகமாக. என்னமோ அந்த முகம் அமைதி அவனை ஈர்த்தது சொல்லாமல் கொள்ளாமல்.

Advertisement