Advertisement

நஞ்சினாலான அமுதன்!

5

அடுத்த இரண்டுநாட்கள் சென்னையில் மருத்துவமனைக்கு தாத்தாவும் கிருபாவும் காலையில் கிளம்பி வந்தனர். மாலையில் பாட்டியும் கோக்கிலாவும் வந்து சேர்ந்தனர். நாலுபேர் சேர்ந்தார் போல இருந்தால்.. மருத்துவமனையின் விதிமுறையை மதித்தனர்.

கோக்கிலா உணவு கொடுத்து விடுவார். கிருபா “சங்கர் மாமாக்கு மட்டும் கொடும்மா.. ஈசன் சாப்பிடமாட்டார், என்னால் கம்பல் செய்ய முடியாது.” என சொல்லிவிட்டே உண்வு எடுத்து சென்றாள்.

அன்று கிளபுகிறார்கள் தாத்தாவும்  கிருபாவும் ஊருக்கு. எனவே, நேரமாக வந்தனர் இருவரும் மருத்துவமனைக்கு.

சங்கர், கிருபாவிடம் பிரியமாகவே இருந்தார்.. என்ன அடிகடி “கிருபா.. உங்க அப்பாவை நான் பார்த்ததேயில்லை ம்மா” என வருந்தினார். 

கிருபாவும் தன் போனில் இருந்த போட்டோவை காட்டுவாள்.. இன்றும் அப்படியே சங்கர் சொல்ல.. கிருபா நேற்று போல போட்டோ காட்டினாள்.. கூடவே “எனக்கும் அப்பா பற்றி தெரியவே இல்லை மாமா.. நானும் அன்லக்கிதான். நீங்களாவது வாய்விட்டு சொல்லிட்டீங்க.. எனக்கு அப்படி கூட ஏதும் அமையலை மாமா” என மனது வருத்தத்தில் உண்மையை பேசிவிட்டாள் பெண்.

சங்கருக்கு புரியும்.. ஆனால்,  இரண்டு நொடிக்கு மேல ஏதும் மூளையில் நிற்காது இப்போதெல்லாம். எனவே, பெண் பேசி முடித்ததும்.. அவரும் ஆறுதலாக “தாத்தா இருக்காரே ம்மா.. உன்னை எப்படி கூடவே கூட்டிட்டு போறார் பாரு. நல்லா பார்த்துப்பார் டா. என் அப்பா எங்களைவிட, உன்மேலதான்  அதிக பாசம் காட்டுறார்.” என்றார், அர்த்தமாக பார்த்து.

கிருபாக்கு உண்மையாகவே அதிர்ச்சியானது.. “மாமா” என்றார் அதே குரலில்.

சங்கர் “இன்னிக்கு ஃப்ரைடே தானே, சஹானா.. வந்திடுவா நாளைக்கு காலையில். நீ அவள்கிட்ட பேசு” என்றார்.. போனையே பார்த்துக் கொண்டு.

கிருபாவிற்கு சங்கடமாக போனது.. தந்தை பிள்ளையை தேடுகிறார் என. அப்போதுதான் அவளுக்கு தோன்றியது ஏன் சஹானா வரவில்லை என.

மாமாவிற்கு உணவு கொடுத்து முடித்ததும்.. வெளியே வந்தாள். ஈசனை அழைப்பதற்கு.. மாத்திரைகள் கொடுக்க அழைக்க வந்தாள்.

தாத்தா வெளியேதான் அமர்ந்திருந்தார். ஈசன், அவரோடு அமர்ந்திருந்தான். அதிகம் இருவரும் பேசுவதில்லை. ஈசனுக்கு, இன்னமும் குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. அப்பாவிற்கு கேன்சர் முழுவதும் பரவிவிட்டது. எவ்வளவு தூரம் அது பரவி இருக்கிறது என துல்லியமாக பரிசோதிக்கதான்.. மருத்துவர்கள் நேற்று முடியாது என சொல்லிவிட்டனர். அப்படி ஒரு பரிசோதனையை எடுக்கும் அளவிற்கு அவரின்  உடல் தயாராக இல்லை.. மேலும், இன்னும் சில வாரங்கள்தான் அவரின் வாழ்நாள் எனவும் சொல்லிவிட்டனர். வீட்டிற்கு அழைத்து போவதென்றாலும் சரி என மருத்துவர்கள் நேற்று சொல்லிவிட்டனர். அதில் ஈசன்.. என்ன செய்வதென தெரியாமல் குழம்பியிருந்தான்.

கிருபா வெளியே வரவும்.. ஈசன் தன்போல உள்ளே சென்றான். 

ஈசனிடம் சங்கர் “இன்னும் எவ்வளோநாள் இங்கேயே இருக்கணும் ஈசா..” என்றார்.

ஈசன் முகம் இன்னும் இறுகி போனது. ஆனாலும் முகத்தில் லேசாக புன்னகையை கொண்டு வந்தான்.. “என்ன ப்பா.. உடம்பு முழுதாக க்யூர் ஆக வேண்டாமா.. நீங்க சரியா தூங்கி.. சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கத்தான் இந்த டைம். டேக் ரெஸ்ட் ப்பா..” என்றான்.. வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு.

கிருபா, தாத்தாவிற்கு தண்ணீர் எடுக்க உள்ளே வந்தவள் காதுகளில் அவனின் பதில் கேட்டது.

சங்கர் “என்னமோ என்கிட்டே இருந்து மறைக்கிறீயா ஈசா” என்றார்.

ஈசன் அரண்டு போனான்.

சங்கர் “ஏன் டா.. அப்பாக்கு என்ன டா..” என்றார். ஈசன் ஸ்தம்பித்தான்.

கிருபா, ஈசனின் மௌனம் பார்த்து.. மாமாவிடம்  பதில் சொன்னாள் “மாமா அப்படி எல்லாம் இல்லை மாமா.. உங்களுக்கு ஒண்ணுமில்லை. நீங்க ரெஸ்ட் எடுத்தால் சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்.. ஈசன் சொல்லுங்க” என்றாள்.

ஈசன் முறைத்தான் “எங்க அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான், அவளை முறைத்துக் கொண்டே.

கிருபா “பேசுங்க” என்றவள், முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு நின்றாள்.

சங்கர் பார்த்துக் கொண்டிருந்தவர் “டேய்..” என மகனை அதட்டியவர்.

கிருபாவை பார்த்து “அவன் எப்போவாது இப்படி பேசிடுவான் ம்மா, மத்தபடி நல்ல பையன்” என்றார்.

கிருபா “மாமா.. தாத்தா தண்ணீர் கேட்டார். கொடுத்துட்டு வரேன்” என வெளியே சென்றாள்.

சங்கர், மகனிடம் “ஏன் டா.. என் தவறையெல்லாம் மன்னிச்சு.. இப்போதான் என்னை பார்க்க வந்திருக்காங்க. அந்த பொண்ணு தாத்தாக்கு துணையா வந்திருக்கு. நான் துணையாக இருந்திருக்கணும். அது இருக்கு. நீ அந்த பொண்ணுகிட்ட.. இப்படி முகத்தை காட்டுற. சஹானாவை வர சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு” என்றார்.

ஈசன் “அப்பா.. வேலை இருக்கே அப்பா.. கண்டிப்பா வர சொல்றேன்” என சமாளித்தான். சற்று நேரம் தந்தையோடு அமர்ந்து பேசி அவரை சமாதானப்படுத்தினான். அவர் உறங்கியதும் வெளியே வந்தான்.

தாத்தா, உள்ளே வந்து சற்று நேரம் மகனுக்கு துணையாக அமரலாம் என  வந்தார்.

ஈசன் வந்து அமர்ந்தான்.

கிருபா அமர்ந்தே இருந்தாள் பேசவில்லை.

சற்று நேரம் சென்று நினைவு வந்தவளாக “உங்ககிட்ட இதை கேட்க கூடாதுன்னுதான் எனக்கு எண்ணம். ஆனால், மாமாவை பார்க்க ரொம்ப கஷ்ட்டமா இருக்கு.. உங்களுக்கு தங்கச்சி இருக்காங்களாமே. அவங்களை ரொம்ப தேடுறார்.. ஏன் அவங்க வரலை.” என்றாள்.

ஈசன்க்கு, கோவமோ கோவம்.. என்ன இது எல்லா இடத்திலும் இவள் ஏன் பேசுகிறாள் என கோவம் “வேலை இருக்குல்ல.. உங்களை மாதிரி ராஜபோக வாழ்கை எங்களுக்கு இல்லையே.. அவளும் வந்து உட்கார்ந்துகிட்டா.. எப்படி இதெல்லாம்” என செலவு குறித்து சைகை செய்தான்.

கிருபா இப்பொழுதும் தன்மையாக.. பணத்திற்காக இப்படி செய்கிறார்கள் என எண்ணி “அதெல்லாம் நாம பார்த்துக்கலாம். தாத்தா பார்த்துப்பார். நீங்க உங்க தங்கச்சிகிட்ட சொல்லுங்க.. அப்படி எப்படிங்க வேலை பார்க்க முடியும்” என்றாள்.

ஈசன் அமைதியாகவே இருந்தான்.

கிருபாவிற்கு சந்தேகம் வந்தது.. “உங்க தங்கச்சிக்கு தெரியுமா” என்றாள்.

ஈசன் தலை கோதிக் கொண்டே எழுந்தான்.

கிருபா, அவனின் அமைதியை பார்த்து இன்னும் சந்தேகமாக “எங்க போறீங்க.. நில்லுங்க.” என்றாள்.

ஈசனுக்கு அவனை யாரும் கேள்வி கேட்க்க கூடாது என நினைப்பவன்.. இப்போது கிருபா, அதுவும் பிடிக்காத வீட்டு பெண்.. நில்லுங்க என சொல்லவும் ஒரு மாதிரி மரியாதை குறைவாக தோன்றிவிட்டது ஈசனுக்கு. அதனால் எழுந்தவன் எரிச்சலாக பார்த்துக் கொண்டு, அசால்ட்டாக நின்றான். 

கிருபா “உங்க அப்பாவை பற்றி உண்மையை சொல்லிட்டீங்களா.. தெரியுமா அவங்களுக்கு..” என்றாள்.

ஈசன்க்கு உண்மையாகவே வலித்தது அந்த நொடி, சமாளிப்பாக  “எதுக்குங்க.. அவளும் கஷ்ட்டபடவா” என்றான்.. 

கிருபா “அப்போ நீங்க, அவங்ககிட்ட ஏதும் சொல்லையா” என்றாள்.

ஈசன்க்கு,தவறை ஒத்துக் கொள்ள முடியவில்லை.. “என்ன.. ரொம்ப அட்வான்டேஜ் எடுக்கிறீங்க. நான் மேனேஜ் செய்துக்கிறேன்” என்றான் வெட்டிய குரலில். சொல்லியவன் போன் எடுத்தான்.

கிருபாக்கு, கோவம் வந்தது.. எழுந்து நின்றாள் “அப்படியே விஷமா பேசுறீங்க. ஏங்க, அவங்க அப்பா உடல்நிலையை அவங்ககிட்ட சொல்லாமல் இருப்பது நல்லாவா இருக்கு. அதற்கு அண்ணாவோ தம்பியாவோ இருந்தாலும் ரைட்ஸ் இல்லைங்க. உங்க அப்பா ரொம்ப அவங்களை தேடுறாங்க..” என்றாள்.

ஈசனுக்கு அப்பாவின் தேடலை விட.. தங்கையிடம் எப்படி சொல்லுவது இதையெல்லாம்.. என்ற எண்ணமே பூதாகரமாக இருந்தது. இப்படி கிருபா பேசவும் எரிச்சல் வர.. “ஏங்க உங்களுக்கு என்னங்க பிரச்சனை.. எங்க அப்பாங்க.. என் தங்கச்சி.. நான் பார்த்துக்கிறேன். நீங்க வந்தோமா பார்த்தோமான்னு கிளம்புங்க.. எல்லோருக்கும் நல்லவராகுற வேலையை என்கிட்டே காட்டாதீங்க” என்றான்.

கிருபாக்கு என்னமோ மாதிரி ஆனது. இவனிடம் பேச கூடாது என மனது சொன்னது. ஆனால், இப்படி மாமா.. பெண்ணின் வரவை எதிபார்த்து நிற்கும் போது.. நாம் அதை செய்ய வேண்டாமா.. என ஒரு எண்ணத்தில் கேட்டுவிட்டாள். இப்போது வாங்கியும் கட்டிக் கொண்டாள். முகம் வாட அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

ஈசன் சட்டென நகர்ந்து சென்றுவிட்டான்.

தாத்தா உள்ளே அப்படியே சற்று நேரம் படுத்துக் கொண்டார் போல.. வெளியே வரவில்லை.

ஈசன் காலை உணவு உண்பதற்காக சென்றான். வக்கீல் தோழனுக்கு அழைத்து பேசினான். அதன் பின் தனக்கு அழைத்த நண்பர்களிடம் பதில் சொல்லி பேசிக் கொண்டிருந்தான்.

கிருபாவிற்குதான் நேரம் கடத்துவதே பெரும்பாடாக இருந்தது. ஓடி ஓடி வேலை செய்தே பழக்கப்பட்டவள் ஒரே இடத்தில் இந்த இரண்டு மணிநேரத்தை கடத்துவதற்கு சிரமப்பட்டால்.

சங்கர் எழுந்துக் கொண்டார் போல.. தாத்தாவும் சங்கரும் பேசிக் கொண்டிருந்தனர்.

Advertisement