Advertisement

அருணாசலம் “இல்ல மா, அப்படி சொல்லல உங்க அத்தை.. ஷண்முகம் எங்களுக்கு எப்போதும் முக்கியம் ம்மா. இத்தனை நாள் இல்லாமல், அந்த.. அவன் சங்கர் இப்போ பேசுறானேன்னு ஒரு ஆதங்கம் விசாலத்துக்கு. நீ மனசில் எடுக்காத ம்மா.” என்றார் சமாதனமாக, மனையாளை முறைத்துக் கொண்டே.

என்னமோ அசைக்க முடியாத அமைதி அங்கே. 

மீனாட்சி, தங்களின் அறைக்கு சென்றுவிட்டார். 

சிவகாமி பெரிய மகனிடம் “தம்பி, கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாமில்ல.. என்ன கஷ்ட்டமோ” என்றார்.

ஷண்முகம் “அம்மா, நான் தம்பிகிட்ட பேசலை ம்மா.. அவன் பையன்னு சொல்லி பேசினான் ம்மா.. ஒருமாதிரி எரிச்சல் பண்ணவே பேசினான்.. எனக்கு, ஆபீஸ் டென்ஷன்.. என்ன யோசிக்கன்னு தெரியலை. அதான்” என்றார் நடந்தவைகளை விளக்கும் எண்ணத்துடன்.

அருணாசலம்  “சிவகாமி, இத்தனை வருஷம் எங்க போயிருந்தான்.. அவன் போன் செய்ததும் எல்லோரும்.. உருகிடனுமோ. இவனுக்கு என்ன வேலையோ என்ன டென்ஷனோ.. பார்த்துக்கலாம்” என்றார்.

கிருபா, தன் அத்தை இருந்த அறைக்கு சென்றாள்.

கோகிலா “ஷண்முகம், நீ வா சாப்பிடு.. அப்புறம் பேசலாம்.. மீனாட்சியை கூப்பிட கிருபா போயிருக்கா.. சாப்பிடுங்க வாங்க” என்றார்.

கிருபா, அத்தையை சமாதானம் செய்து கூட்டி வந்தாள். கணவன் மனைவி இருவரையும் அமர வைத்து.. கோகிலா பரிமாறினார்.

கிருபா போன் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சற்று நேரம் சென்று, உண்டு முடித்து.. கடைக்கு கிளம்பிவிட்டாள். 

மாலையில் வக்கீல் வந்தார், தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் பதில் சொல்ல நாட்கள் இருக்கிறது. ஆனாலும், ஷண்முகம் ஊருக்கு செல்ல வேண்டும் நாளை இரவு. எனவே, முடிவெடுப்பதற்காக பேசிக் கொண்டிருந்தனர்.

கிருபா கடையிலிருந்து வந்தாள்.

தாத்தா, பேத்தியை அருகமர்த்திக் கொண்டார்.

பேச்சு வார்த்தை நடந்தது.. வக்கீல், ‘பேரன் கேட்பது தவறில்லை.. மகன் கேட்டிருந்தால்.. தட்டி கழிக்கலாம்.. காரணம் சொல்லலாம். பேரனுக்கு அனுபவிக்க முழு உரிமை உண்டு. சொல்ல போனால்.. ஏகபோக வாரிசு. நீங்களாக கொடுத்துவிட்டால்.. அத்தோடு நின்றுக் கொள்ளுவார்கள்.’ என சொன்னார்.

ஷண்முகம் கோவமாகிவிட்டார்  “அப்பா, வாரிசு சட்டம் எல்லாம் பெண்ணுக்கும் இருக்கு பா.. முழு உரிமையும்.. சம்பூர்ணாவிற்கும் இருக்கு. நானும் இருக்கேனே.. அப்படி எல்லாம் ஏக போக வாரிசு எல்லாம் கிடையாது” என்றார் காட்டமாக.

அருணாசலம் “டேய், சம்பூர்ணா, என் பேத்தின்னா.. கிருபாவிற்கும் உரிமை இருக்குடா.. இந்த பேத்திகளை விடவா.. அவனுக்கு உரிமை..” என்றார், மகன் மறந்ததை எடுத்துக் கொடுத்து.

கிருபாவிற்கு என்னமோ போலானது. ஏதும் சொல்லாமல் அமைதியானாள்.

ஷண்முகம் “பிள்ளையார்பட்டி கிட்ட இருக்கிற.. நாலு ஏக்கர் நிலத்தை கொடுத்திடுங்க.. அவ்வளவுதான் வேறு ஏதும் முடியாது அப்பா.. முடிச்சி விட்டுட்டுங்க” என்றார்.

வக்கீல் அதிருப்தியாய்.. பெரியவரை பார்த்தார்.

அருணாசலம்  யோசனையாகவே அமர்ந்திர்ந்தார்.

அருணாசலம் அமைதியாக இருப்பதை பார்த்து.. வக்கீல் “அதெப்படி சரியாகும். உங்கள் பையனுக்கு தெரியுமே எவ்வளவு சொத்து இருக்குன்னு.. அவன் பாகம் கேட்க்கிறான்.. உரிமையை கேட்க்கிறான். கோர்ட்டில் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்குன்னு விசாரணை வரும்.. அப்போது, அவனையும் ஒரு வாரிசாக சேர்க்க சொல்லுவார்கள்.  பாதகம் இல்லாமல் முடியனும்ன்னா.. முதலில்.. உங்கள் பேரனை அழைத்து பேசுங்கள். என்னவென கேளுங்கள்.. கொடுப்பதை வாங்கிக் கொண்டு போவது போல.. பேசி, சரி செய்யுங்க” என்றார்.

ஷண்முகம் “இவ்வளவுதான் அப்பா.. லிமிட். அவனை இங்கே எல்லாம் கூப்பிட்டு பேசறது.. எல்லாம் சரி வராது அப்பா.” என படபடத்தார்.

அருணாசலம் அமைதியாகவே இருந்தார்.

வக்கீல் “அப்படியும் செய்ங்க.. எல்லோரும் போவோம்.. நம்ம சார்பில் நாலு பேர் போவோம்.. என்ன ஐயா” என்றார்.

ஷண்முகம் முகம் சுழித்தார்.. யாரெல்லாம் வருவாங்க.. என கணக்கு போட்டார். சுதாரித்தாவர் “இல்ல, இங்கதான் நம்ம ஆளுங்க இருக்காங்க இங்கேயே வர சொல்லிடலாம்..  நீங்களே பேசிடுங்க அப்பா..” என்றார்.

கிருபாவிற்கு கோவம் தாத்தாவின் பெயரிலேயே கேஸ் கொடுத்திருக்காங்க என.. அதனால் “அதெப்படி மாமா தாத்தா போய் அவங்ககிட்ட பேச முடியும். தாத்தா பேரில் கேஸ் கொடுத்திருக்காங்க.. நீங்க பேசுங்க.. உங்களுக்கு எந்த நாள் ப்ரீயோ அப்போ வர சொல்லுங்க..” என்றாள்.

ஷண்முகம் தந்தையை பார்த்தார்.

அருணாசலம் “வக்கீல் நீங்களே பேசிடுங்க.. என்ன நிலவரம்ன்னு விசாரீங்க அப்படியே. திடீர்ன்னு என்ன பிரச்சனைன்னு கேளுங்க.. ஏதாவது பிசினஸ் லாஸ்.. உடம்பு முடியலையா என்ன ஏதுன்னு விசாரிங்க” என்றார் யோசனையாக.

ஷண்முகத்திற்கு முகமே மாறி போனது.

மீண்டும் அருணாசலம் “எது எப்படியோ.. பேசலாம். நம்ம கோவிலுக்கு வர சொல்லிடுங்க.. ஷண்முகம் அடுத்த மாசம் தானே உனக்கு லீவ்.. அப்போ தேதி சொல்லிடு..” என்றார்.

ஷண்முகம் “நான் போன் பண்ணறேன் சர்” என வக்கீலிடம் விடைபெற்று உள்ளே சென்றார்.

வக்கீல் “நானே பேசிடுறேன்.. இந்த நோட்டீஸ் கோப்பி என்கிட்டே இருக்கட்டும்.” என சொல்லி விடைபெற்று கிளம்பினார்.

கிருபா தாத்தாவோடு உள்ளே வந்தாள்.

சம்பூர்ணா, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. “அக்கா, ஈவ்னிங் என்கிட்டே சொல்லாமலே கடைக்கு கிளம்பிட்டியா” என கேட்டுக் கொண்டே அக்காவோடு அறைக்கு சென்றாள்.

இருவருக்கும் அரிதாகத்தான் நேரம் வாய்ப்பது எனவே, பேச தொடங்கினர்.

மறுநாள், காலையில் கிருபா பாட்டி, சம்பூர்ணா மூவரும் கோவிலுக்கு சென்று வந்தனர். இரவு, சண்முகம் குடும்பம் சென்னை கிளம்பினர்.

சண்முகம் இந்தமுறை வந்த கடைக்கு சென்றார் கிருபாவுடன். டயர் கடை மூடியே இருந்தது. தங்கள் கடையில் வேலை செய்யும் இரண்டு நபர்களோடு, அவரிடன் வீட்டிற்கே சென்று பேசி, வந்தார்.

அதில் அருணாசலம் கொஞ்சம் நிம்மதியானார்.

அடுத்தடுத்த நாட்கள் எப்போதும் போல கடந்தது.

சிவகாமி பாட்டியை சமாளிப்பதுதான் ஒரே பிரச்சனையாக இருந்தது. மகன் நினைவில் அடிக்கடி “அவனை பார்க்கணும்.. கோவலில் என்ன பார்ப்பது. வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்” என தன் கணவரும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

கிருபாவிடம் “நீ பேசினியா.. என் பையன் எப்படி இருக்கான்.. பேரன் எப்படி இருக்கான்.. போனில் போட்டோ காட்டு” என கேட்டு நச்சரித்தார். என்னமோ இவதான் பேசி, உறவை வளர்ப்பவள் போல.

அதுதொட்டு.. இந்த ஒருமாதமும் ஜெய்சங்கர் கதைதான் பாட்டி சொல்லி கொண்டிருந்தார். நல்லா படிப்பான். பெரிய்வனுக்குதான் டியூஷன் எல்லாம். இவனுக்கு அதெல்லாம் தேவையே இல்லை. ஸ்கூலில், போய் யாரை கேட்டாலும் ஜெய் பேரை சொன்னாலே போதும் எல்லோருக்கும் தெரியும். உங்க தாத்தா மாதிரி கொஞ்சம் சத்தமா பேசுவான்.  மற்றபடி குழந்தை அவன். யார் கஷ்ட்டபட்டாலும் தாங்காது. எனக்கு உடம்பு முடியலைன்னா, எனக்கு அடுபங்கறையில் வந்து உதவி செய்வான்.. எனக்கு கால் பிடித்து விடுவான். பாசமா இருப்பான்.. என்னமோ” என தொடர்ந்து அவரின் சின்ன வயது கதைகளை நிறைய பேசினார் கிருபாவிடம் பாட்டி. 

கிருபா பொறுமையாக கேட்டுக் கொள்ளுவாள். அவள் பிறந்ததிலிருந்து இந்த ஜெய் மாமாவை பார்த்ததில்லை. போட்டோவில்   பார்த்திருக்கிறாள்.

பாட்டியின் இந்த பேச்சுகளை, தாத்தா பலசமயம் ஏதும் சொல்லாமல் கடந்திடுவார். காலம் கடந்துவிட்டதே.. அதனாலோ என்னமோ முன்போல.. கோவமும் வேகமும் வருவதில்லை அவருக்கு. ஆனாலும், தன் மனைவியின் ஆதங்கம் புரிய.. உண்மையையும் சொல்லுவார் “அந்த மகனோ.. பேரனோ.. உன்னை பார்க்கனும்ன்னு சொல்லல, சொத்து கேட்க்கிறான். என்னமோ பையன் பேரன்னு உரிமை கொண்டாடிக்கிட்டு. உடம்பை கெடுத்துக்காமல்.. இரு. நம்ம பொண்ணும் பேத்தியும்தான் கஷ்ட்டபடுவாங்க” என அதட்டவும் செய்யவர்.

நாட்கள் கடந்தது.

இன்று,

அந்த தியாகீசனை சந்திக்க வீடே தயாராகிக் கொண்டிருந்தது. பாட்டி, காலையில் நேரமாக எழுந்து பூஜை முடித்து தயாராக நின்றார். அவர்களை, வக்கீல் வீட்டிற்கு வர சொல்லுவதாக ஏற்பாடு. 

சண்முகம் காலையில் வந்துவிட்டார்.. மீனாட்சி மட்டும் வந்திருந்தார். சம்பூர்ணாவிற்கு பள்ளி இருப்பதால்.. வரவில்லை. அருகில், அவளின் சித்தி வீட்டில் விட்டு வந்திருந்தனர் தம்பதி.  

சிவகாமி பாட்டி தாத்தாவோடு செல்லுவதற்காக காத்திருந்தார்.

அருணாசலம் திண்ணையில் அமர்ந்திருந்த பாட்டியின் அருகே வந்தார்.. “சாப்பிட்டியா.. சிவா” என்றார்.

மனையாள் கணவன் முகத்தையே பார்த்தார். இன்னும் உண்ணவில்லை என தலையசைத்தார்.

அருணாசலம் “நாங்க போய்ட்டு வரோம்” என்றார் தன்மையாக.

சிவகாமி கண்களில் நீர் கசிய சிறுபிள்ளையாக அமர்ந்திருந்தார்.

அருணாசலம் “சிவகாமி, நீ நினைப்பது போல இல்லை இது. நான் அப்போ கோவமாக இருந்தேன் எதோ சொல்லிட்டேன், சரி. இப்போ, நம்மை வந்து பார்த்திருக்கலாமில்ல.. அவன். நம்மிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கலாமில்ல.. அந்த ராஸ்கல். அதென்ன.. கோர்ட்டுக்கு போவது.. அதுவும் சின்ன பசங்களை வைத்து. அப்படி பட்டவன் முன்னாடி, உன்னை கொண்டு நிறுத்த சொல்றீயா நீ. ம்.. நீயே சொல்லு” என சொல்லி.. தன்னுடைய ஈசி நாற்காலியில் சாய்ந்துக் கொண்டார்.

கணவனின் பேச்சில் உள்ள சாரம் புரிய.. கண்கள் கலங்கி.. அமைதியானார் சிவகாமி. கணவனின் பேச்சை.. இப்படிதான் ஏற்றுக் கொள்வார், அது சரியெனும் பட்சத்தில்.

வீட்டு ஆண்கள் இருவரும்.. வக்கீல் டிரைவர் என நால்வருமாக கோவில் கிளம்பி சென்றனர் காலை ஒன்பது மணிக்கு.

கிருபா, எப்போதும் போல கடைக்கு சென்றாள்.

பனிரெண்டு மணிக்கு மேல்,  தாத்தாவிடமிருந்து பேத்திக்கு போன் வந்தது.. “அம்மாடி, நம்ம வீட்டு ரூட் மேப்.. எதோ இருக்காமே, அதை இந்த நம்பருக்கு அனுப்புடா ம்மா.” என்றார்.

பேத்தி “என்ன தாத்தா” என கேட்டாள். அவர் வீட்டுக்கு வழி ம்மா..’ எனவும் ஓ.. லொக்கேஷன் என புரிந்துக் கொண்டாள். ஆனாலும் தாத்தாவின் குரல் ஏன் இப்படி அமைதியா இருக்கு என எண்ணிக் கொண்டே வீட்டின் லொக்கேஷன் அனுப்பினாள். 

Advertisement