Advertisement

நஞ்சினாலான அமுதன்!

2

அருணாசல தாத்தாவின் சத்தம், உள்ளே உண்டு கொண்டிருந்த பாட்டிக்கு கேட்டுவிட்டது. தன் மகளிடம் “கோக்கிலா என்னடா, அப்பா சத்தம் போடுறாங்க.. அந்த கடைக்காரார் வந்திருக்காரா.. பாரு.. சண்முகத்துக்கு போன் பண்ணு” என்றார், கணவரின் டென்ஷன் குரலை கேட்டு.

கோகிலா “கிருபா இருக்காம்மா.. அவள் பார்த்துப்பா” என்றவர், தானும் உண்பதற்கு அமர்ந்தார்.. “கண்ணம்மா சாப்பிடு வா” என அழைத்துக் கொண்டு.

மீண்டும் சற்று நேரத்தில் சத்தம் அதிகமாகியது. உண்ணும் அறையிலிருந்து கொஞ்சம் நடந்து வந்துதான் திண்ணையை பார்க்க வேண்டும், அதனால், அவசரமாக கோகிலா உண்டு.. கைகழுவிக் கொண்டு திண்ணைக்கு வந்தார்.

கிருபா, ஷண்முகம் மாமாவிற்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தாள்.

தாத்தா, இன்னும் நடந்துக் கொண்டே இருந்தார்.. அமைதியாக இல்லை அவர்.

பாட்டியும் உண்டு முடித்து.. மெதுவாக திண்ணைக்கு வந்தார். 

கிருபா போன் பேசி முடித்து தாத்தாவை பார்த்து “தாத்தா அமைதியா உட்காருங்க, மாமா நாளைக்கு வந்திடுவார். ஒன்னும் பிரச்சனையில்லையாம். மாமா, சென்னையில் தானே அவர், அதான் தியாகீசன் இருக்காராம்.. நான் பார்த்துக்கிறேன்ன்னு சொல்றார் அமைதியாக இருங்க தாத்தா..” என்றவள் தாத்தாவை கைபிடித்து அமர வைத்தாள்.

பாட்டி என்னவென கண்ணால் கேட்க, கிருபா விவரம் சொன்னாள்.

பாட்டிக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.. மகனின் பெயர் கேட்டதும்.. “ஜெய் சொத்து கேட்க்கிறானா” என்றார் ஆச்சர்யமாக.

கிருபா சங்கடமாக “இல்ல பாட்டி, அவர் பையன் தியாகீசனாம். அவர் கேட்க்கிறார்” என்றாள்.

பாட்டி “ம், அவ்வளவு பெரிய பையனா.. என் பையனுக்கு. எப்படி இருக்கானோ.. எத்தனை வருஷம் ஆச்சு..  நல்லா இருக்கானா.. வருவானா.. இங்க” என்றார் பேத்தியிடம் ரகசியமாக.

கிருபாவிற்கு, ஷண்முகம் மாமாவிடம் பேசியதும் ஒரு உண்மை தெரிந்திருந்தது.. அதை மாமா தான் பேசிக் கொள்வதாக சொல்லவும்.. அமைதியாகினாள். இப்போது பாட்டி ஆசையாக கேட்கவும், என்ன சொல்லுவதென தெரியாமல் “தெரியலையே பாட்டி” என்றாள்.

பாட்டி இப்போது சத்தமாக “தாத்தாகிட்டதானே சொத்து கேட்கிறான்.. கொடுத்தால் போகுது.. வரட்டும்.. எப்படி இருப்பான், நான் கூட என்னமோ எதுவோ என நினைச்சேன்.. பையன் நல்லா இருக்கானாமா” என பேச பேச கண்கள் கலங்க தொடங்கிவிட்டது, அன்னைக்கு.

தாத்தா.. தன் மனைவியை பார்த்தார் அர்த்தமாக. மனையாள், கண்கலங்கி.. சந்தோஷத்தின் சாயலில் அமர்ந்திருந்தார். கணவனுக்கு புரிந்து போனது.. பிள்ளை ஞாபம் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 30 வருடமாக இருந்த தவிப்பு.. இப்போது வெடிக்க போகிறது.. என அமர்ந்திருந்தார்.

அருணாசலம்.. பையனை பற்றி பேசவும் தாத்தா..“பிள்ளையை எப்படி வளர்த்து வைச்சிருக்கான் பாரு.. இவன் கேட்க முடியாதுன்னு.. மகனை விட்டு கேட்க்க சொல்றானா.. இதில், அவனை நீ விசாரிக்கிற” என்றார்.

கிருபா.. “தாத்தா.. மாமா வரட்டும் தாத்தா, மாமா வேற சொல்றாங்க. வரட்டும், நீங்க அமைதியாக இருங்க தாத்தா. நைட் கிளம்பிடுவாங்க தாத்தா.. இதெல்லாம் சும்மா.. நோட்டீஸ்தான் பேசிக்கலாம்ன்னு சொல்லிட்டார் மாமா..” என்றாள்.

கண்ணம்மா தாத்தாக்கு டீ கொண்டுவந்து கொடுத்தார். 

கிருபா கடைக்கு கிளம்பினாள்.

தாத்தா யாரிமும் பேசாமல் அமைதியாக சென்று படுத்துக் கொண்டார்.

மறுநாள், காலையிலேயே ஷண்முகம் அவர் மனைவி மீனாட்சி, மகள் சம்பூர்ணா என மூவரும் வந்துவிட்டனர்.

சம்பூர்ணா, பதினோராம் வகுப்பு படிக்கிறாள். காலாண்டு விடுமுறை. சின்ன பெண் வந்ததும் உறங்க சென்றுவிட்டாள்.

கிருபா என்ன நடக்க போகிறதோ என முன்னமே குளித்து.. பூஜையை தானே செய்து முடித்து.. மாமா எப்போது வருவார் என எதிர்பாத்துக் கொண்டிருந்தாள். காரணம், வீட்டில் யாரும் தெரியாத ஒரு விஷயத்தை மாமா நேற்று இவளிடம் சொன்னார்.

தாத்தா பாட்டி இருவரும் தங்களின் அறையிலிருந்து வந்து அமர்ந்தனர். கிருபா கோகிலா மீனாட்சி  என ஐவரும் டிபன் நேரம் வருகிறது இன்னமும் சண்முகத்தை வெளியவே காணோமே என எண்ணிக் கொண்டு.. கிருபா கடையில் நடந்த விஷயங்களை மேலோட்டமாக சொல்ல.. மீனாட்சி, மகளின் பள்ளி படிப்பு என பேச கேட்டுக் கொண்டிருந்தனர், எல்லோரும். மனதெல்லாம் அந்த நோட்டீசில்தான் இருந்தது பெரியவர்கள் இருவருக்கும்.

சற்று நேரத்தில்.. கோகிலா தந்தைக்கு இட்லி சாம்பார் என பட்டாசாலைக்கே எடுத்து வந்து பரிமாறினார், மறுக்க முடியாமல் உண்டார், அருணாசலம்.

சரியாக தந்தை உண்டு முடிக்கவும் ஷண்முகம் வெளியே வந்தார். “அப்பா, கொஞ்சம் அலைச்சல்.. அதான் தூங்கிட்டேன்” என்றார் சமாதனாமாக.

அருணாசலம் உண்டு முடித்திருந்தார் “போங்க சாப்பிட்டு வாங்க எல்லோரும், கிருபா.. நீயும் சாப்பிடு ம்மா.. பட்டு எங்க..” என்றார் மருமகளிடம், சம்பூர்ணா வை விசாரித்தார்.

மீனாட்சி “தூங்கறா மாமா.. பரிட்சைக்கு கண்விழிச்சி படித்தாளாம்.. லீவில் பதினோரு மணிக்குதான் எழுவேன் வீம்புக்கு தூங்கறா” என்றார்.

அருணாசலம் சிரித்தார்.. “வீம்புதான் நம்ப குடும்பத்தில் எல்லோருக்கும்” என்றார்.

சிவகாமி “ஜெய் யும் அப்படிதான் வீம்புகாரன்.. எத்தனை வருஷம் என்னை பார்க்காமல் இருந்துட்டான்” என்றார்.

அருணாசலம் “ராஸ்கல் அப்படியே இருக்க வேண்டியதுதானே” என்றார்.

ஷண்முகம் “அப்பா, அவன் அப்படியேதான் இருக்கான்.” என்றவர் தந்தையின் அருகே அமர்ந்தார்.

ஷண்முகம் “அப்பா, ஒரு ஆறு ஏழு மாதம் முன்னாடி.. அவன் பையன் ஈசன் எனக்கு போன் பண்ணினான் ப்பா” என்றார், அசராமல் ஒரு இடியை இறுக்கினார் தாய் தந்தையரின் முன்.

சிவகாமி “என்ன ப்பா சொல்ற” என்றார். தந்தை அமைதியாக நிமிர்ந்து கூட பார்க்காமல் அழுத்தமாக அமர்ந்திருந்தார்.

ஷண்முகம் “அப்பா, எனக்கும் கோவம்தான்.. முதலில் நான் பேசவேயில்லை. தொடர்ந்து நாலுநாள் அழைத்தான். தொல்லை தாங்க முடியாமல் எடுத்து பேசினேன். அப்போ அவன் திமிராகதான் பேசினான்.. எங்க அப்பா, அப்படி என்ன தப்பு செய்தார்ன்னு வீட்டில் சேர்க்கலை நீங்க.. எங்க அம்மா, அப்படி உங்க காசு பணத்தின் மேல ஆசப்பட்டுதான் உங்க தம்பியை கல்யாணம் செய்துகிட்டாங்கன்னு சொல்லி அனுப்புனீங்களாம். என்றான்.’ எனக்கு கோவம் அப்பா. ‘டேய், உனக்கு என்ன தெரியும்.. இப்போது என்ன திடீர்ன்னு பேசற.. ஞாயம் கேட்க்கிறியா’அப்படின்னு சத்தம் போட்டு ‘எங்க குடும்பத்தில் அப்படி ஒருத்தன் இல்லை டா.. நீ தப்பாக யார்கிட்டவோ பேசிகிட்டு இருக்க.. எப்படி போனானோ அப்படியே இருக்க சொல்லு அவனை. இங்க யாரும் அவனை நினைக்கலை.. ஏங்கலை’ என சொல்லி போனை வைச்சிட்டேன்.” என்றார் கலக்கமான குரலில்.

சிவகாமி “என்னடா, தம்பி எப்படி இருக்கான்னு கூட கேட்க்கலையா நீயி.. உங்க அப்பா மாதிரி உன் மனசும் கல்லா போச்சாடா.. அதான் உங்களுக்கு தப்பாமல் பிறந்திருக்கான் ஒருத்தன்.. கேஸ் போட்டுட்டானில்ல.. இப்போ நீங்கதானே போய் பேசணும்” என முடிக்க கூட இல்லை.

தாத்தா இடைமறித்தார் “30 வருஷம் கழிச்சி.. சொத்து வேணும்ன்னு ஏன் கேட்க்கிறான். என்ன டா.. விசாரிச்சியா” என்றார் மகனை பார்த்து.

ஷண்முகம் விழித்தார்.

அருணாசலம் “நீயெல்லாம் சீனியர் இஞ்சினியர்.. கோவேர்மென்ட் வேலை.. சொல்லிக்காத..” என்றவர். அமைதியாக இருந்தார் சற்று நேரம்.

பின் எதோ யோசித்தார் ஷண்முகம் “அப்பா.. வக்கீலை கூப்பிடவா.. நாமும் பதில் அனுப்பிடலாம். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை ப்பா” என்றார்.

சிவகாமி “என்னான்னு அனுப்புவ.. எனக்கு நீ தம்பியில்லை.. எங்க அப்பாக்கு பையனில்லை.. அதனால், பேரனும் இல்லைன்னு அனுப்புவியா.. டேய்” என கணவனை பார்த்து அழ தொடங்கினார். எல்லோரிடத்திலும் அமைதி.

பின் கணவனை பார்த்து “இங்க பாருங்க.. என்னமோ தெரியலை, அவன் கேட்டுட்டான் கொடுத்திடனும்.. என்ன முடியுமோ கொடுங்க. அவன் லெட்டர் போடிருந்தாலே போதும்.. நீ பேசினதில்தான் எதோ இப்படி நடந்திருக்கு” என்றார் அன்னை ஆற்றாமையாக, பெரியமகனை பார்த்து.

மீனாட்சிக்கு, கணவனை சொல்லவும் என்னமோ போலாக.. “அத்தை.. இப்போ இவர் மேலதான்னு சொல்றீங்க. இவர் எப்படி பேசனும்ன்னு எதிர்பார்க்குறீங்க, எதை பற்றியும் கவலை படாமல்.. தன் வாழ்க்கைதான் முக்கியன்னு போனவர்.. இப்போ, நல்லவர் ஆகிட்டார். குடும்பத்திற்காக எல்லாத்தையும் தியாகம் செய்த இவர்.. கெட்டவர் ஆகிட்டார்” என்றாள் கோவமாக.

Advertisement