“என்னடி சொல்ற எப்போ ஆச்சு.. உன்கூட யாரு இருக்கா இப்போ.. அழாதடி தைரியமா இரு நான் உடனே கிளம்பி வரேன்..”
பதட்டமாக ஒலித்த தன் மனைவியின் குரலை கேட்டு வேகமாக தங்கள் அறைக்கு வந்தான் விவேக். அங்கு போனில் பேசிமுடித்திருந்த அவன் மனைவியோ அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த அதீத பதட்டமே சொல்லாமல் சொல்லியது என்னவோ பெரியதாய் நடக்கக் கூடாத நிகழ்வு நடந்துவிட்டதென.
“அம்மு என்னமா ஆச்சு, ஏன் இவ்ளோ பதட்டம். யாருக்கு என்ன ஆச்சு”
மனைவி அஞ்சனாவிடம் விவேக் கேட்க, மௌனமே பதிலாக வந்தது. அதுவும் அவன் முகத்தை பார்த்து எதையோ அசிங்கத்தை பார்த்ததைப்போல் முகத்தை வேறு சுழித்து வைத்தாள். இது எப்போதும் நடப்பதுதானே என நினைத்த விவேக், அவளிடம் அதைப்பற்றி மீண்டும் கேட்டான். ஆனால் இப்போதும் எதையும் பேசாத அஞ்சனா வேகவேகமாக பையை எடுத்துக் கொண்டு வெளியே அவள் வண்டியை நோக்கி வந்தாள்.
“ஏய் அம்மு இவ்ளோ டென்ஷனா நீ வண்டி எடுக்க வேணாம்மா. நான் உன்ன கொண்டு போய் விடுறேன். எங்க போகணும்னு மட்டும் சொல்லுமா”
அவன் பேசுவதை கண்டுக் கொள்ளாது அவன் மனைவி போனாலும், அவள் இருக்கும் பதட்டத்திற்கு அவளை தனியே அனுப்ப பயந்த விவேக் தானே அனுப்புவதாய் கூறினான். அவள் மீது வைத்திருந்த பாசத்தில் அவன் பேச, அதை சிறிதும் புரிந்துக் கொள்ளாது அவன் கையை வெடுக்கென தட்டிவிட்டாள் அஞ்சனா. ஆனால் அப்போதும் அதை கண்டுக்கொள்ளாத விவேக் மீண்டும் அவளை தானே அழைத்து செல்வதாய் சொல்ல, திரும்பி அவனை ஆனமட்டும் முறைத்து பார்த்தாள் அஞ்சனா.
“என் விஷயத்துல தலையிடாதன்னு உனக்கு ஒருதடவை சொன்னா புரியாது, ஏன் என்னோட உயிர வாங்குற. எனக்கு கைகால் எல்லாம் நல்லாதான் இருக்கு. எங்க போகனுமோ அங்க எனக்கு போக தெரியும், நீ உன் வேலைய மட்டும் பாரு…”
முகத்தில் அடித்ததை போல் பேசிய அவள், “வந்துட்டான் ரொம்பதான் அக்கறை இருக்க மாதிரி. எல்லாம் என் அப்பா அம்மாவ சொல்லனும் ஊருலையே என்னமோ இவன்தான் நல்லவன்னு சொல்லி என்ன கட்டி வச்சுட்டாங்க, ச்சே சரியான கருவாயன்”
தன் வண்டியை நோக்கி நகர்ந்தபடி அவனுக்கு கேட்க வேண்டும் என்றே சற்று சத்தமாக புலம்பியபடி சென்றாள் அஞ்சனா. அவள் மனதில் விவேக்கின் மீதிருக்கும் வெறுப்பு அவளுடைய வார்த்தைகளில் வெளிவந்து வாசலில் நின்றிருந்த விவேக்கை வெகுவாய் காயப்படுத்தியது.
இது எப்போதும் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், ஒவ்வொரு முறை அவள் காயப்படுத்தும் போது விவேக்குக்கு மனது ரணமாகிதான் போகும்.
விவேக் அஞ்சனா திருமணமாகி மூன்று மாதங்களே ஆன ஜோடி. விவேக்குக்கு தாய் தந்தை இல்லை, பள்ளி படிக்கும் போது ஒரு விபத்தில் அவனை விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு தனியாகத்தான் வளர்ந்தான். தனிமையில் யார் துணையும் இன்றி வளர்ந்த அவன், சூழ்நிலைக்காய் தன்னை பயன்படுத்தும் மனிதர்கள் பலரை கடந்து வந்துள்ளான். அந்த அனுபவமெல்லாம் சேர்ந்து அவனை சற்று கரடுமுரடான ஆண்மகனாய் மாற்றியது.
யார் அவனை பார்த்தாலும் பேசவதற்கு கொஞ்சம் தயங்கி நாலடி தள்ளி நிற்பதைப்போல் தன்னை மெறுகேற்றி கொண்டான்.
அஞ்சனாவை இவன் பெண் பார்க்க சென்றபோது அவளுக்கு இவனின் இந்த கரடுமுரடான முகம் பிடிக்கவில்லை. அதுவும் அவள் சிகப்பு நிறத்தில் இருக்க, அவனோ நல்ல திராவிட நிறத்தில் இருந்தது அவளின் பிடித்தமின்மையை வலுவாக்கியது.
அவள் பெற்றோர் விவேக்கின் நல்ல குணங்களில் பூரண திருப்தி கொண்டு இவன்தான் உனக்கு கணவன் என அஞ்சனாவிடம் சொன்னபோது வீட்டில் ஒரு ரணகளமே நடந்தது.
‘என்ன ரொம்ப போர்ஸ் பண்ணீங்க செத்து போயிடுவேன்’ என பலவிதமாக அஞ்சனா மிரட்டல் விடுத்தும் விவேக்கை தங்கள் மாப்பிள்ளையாக தேர்வு செய்தனர் அவள் பெற்றோர்.
அதுவே விவேக்கை வெறுக்க அஞ்சனாவுக்கு போதுமானதாய் அமைந்தது. அந்த கோபத்தோடு அவளின் திருமணம் நிகழ, “உன் கலர் என்ன மாப்பிள்ளை என்னடி இவ்ளோ கருப்பா இருக்காரு” என்று அங்கு வந்த அவள் தோழிகள் வேறு கிண்டல் செய்து சென்றுவிட்டனர்.
இதில் தன் தாய் தந்தை மீதிருந்த அஞ்சனாவின் கோபம், ‘எல்லாம் இவனால’ என விவேக்கின் மீது வெறுப்பாய் மாறியது.
திருமணம் முடியும் வரை அமைதியாய் இருந்த அஞ்சனா, அன்று முதல் இரவில் அவளின் வெறுப்பை எல்லாம் தன் வார்த்தைகளில் கொட்டி தீர்த்தாள்.
அவனின் நிறத்தை அவன் உருவத்தை குறித்து, அவள் நட்பு வட்டம் கிண்டல் செய்தது என அனைத்தையும் அவனிடம் தினமும் காட்ட ஆரம்பித்தாள். ஆனால் சிறு வயதில் இருந்து பெற்றோர் இல்லாது வளர்ந்த விவேக், ஒருநாள் எப்படியும் அவள் தன்னை புரிந்துக்கொண்டு அவன் இத்தனை வருடங்கள் இழந்த பாசத்தை எல்லாம் அவள் காட்டுவாள் என நம்பினான்.
எனவே அவள் என்ன பேசினாலும் பொறுத்துப்போக ஆரம்பித்தான். திருமணமாகி இதோ மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் அவளின் மனதில் இருந்த வெறுப்பு மட்டும் குறைந்தபாடில்லை. இன்றும் அதே கதையே நடந்திருக்க, தன் வண்டியை விரட்டிச் சென்ற மனைவியின் உருவம் தெருவை தான்டும் வரை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றான் விவேக்.
இங்கு அவ்வளவு அவசரமாக அஞ்சனா சென்றது ஒரு மருத்துவமனைக்கு. அவளுடன் வேலை பார்க்கும் தோழி ஒருத்தி அவள் கணவனுக்கு கார் விபத்து ஏற்பட்டுவிட்டது, உதவிக்கு யாரும் இல்லை என இவளை உதவிக்கு அழைத்திருந்தாள். அவளுக்கு உதவிடவே இவள் வேகமாக சென்றது.
“மதி”
அஞ்சனா அந்த பெண்ணை அழைத்தபடி அவள் தோளில் கையை வைக்க, ஓவென்று அழ ஆரம்பித்தாள் மதி.
“என்ன ஆச்சு மதி? இப்போ அவரு ஓகேவா? அழாதடி”
மூச்சு திணறும் அளவு அழுத மதியை ஒருவாறு தேற்றினாள் அஞ்சனா. மருத்துவர்கள் இன்னும் அந்த அறைக்குள் மதியின் கணவனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க மருத்துவரின் வருகைக்காக அவளோடு சேர்ந்து அஞ்சனாவும் காத்திருந்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த அறையின் கதவு திறக்கப்பட, ஒரு செவிலிப்பெண் வெளியே வந்து மதியை மருத்துவர் அழைப்பதாய் கூற, இருவரும் அறைக்குள்ளே சென்றனர்.
“டாக்டர் என் ஹஸ்பண்ட்க்கு ஒன்னும் இல்லையே” பதறிப்போய் மதி கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா அவருக்கு. கார்ல எறிஞ்ச தீப்பட்டு அங்கங்க சின்ன தீக்காயம் மட்டும்தான் இருக்கு. கால்ல சின்ன கிராக், கட்டுப்போட்டிருக்கோம் ஒன் ஆர் டூ மன்தில நார்மல் ஆகிருவாரு”
டாக்டர் மதிக்கு தைரியம் தந்து அந்த அறையை விட்டு வெளியேற, இப்போதுதான் அஞ்சனா கட்டிலில் படுத்திருந்த மதியின் கணவனை பார்த்தாள். பார்த்தவளுக்கு அவ்வளவு அதிர்ச்சி. மதி நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண், ஆபிசில் அவளை ஒருமுறை பார்க்கும் யாரும் மறுமுறை திரும்பி பார்க்காமல் போனதில்லை.
ஆனால் அவள் கணவன், கருமை நிறத்தில் அதுவும் அவன் முகத்தில் இருந்த தீக்காயத்தோடு பார்க்கவே மிகவும் கோரமாக தெரிந்தது அஞ்சன்விற்கு. அதை கூட விட்டுவிடலாம் அவனின் தோற்றத்தை வைத்து பார்த்தால் வயது எப்படியும் மதியை விட பத்து பனிரெண்டு அதிகமாய் இருப்பது போல் தோன்றியது.
அஞ்சனா அதிர்ந்து சிலையாய் இங்கு நின்ற நேரம், அங்கு கட்டிலில் கிடந்த தன் கணவனை அணைத்து அழுது கொண்டிருந்தாள் மதி. அவளை அணைத்து அவனும் அவள் காதில் ஆறுதலாக ஏதோ பேசிக்கொண்டிருக்க அவர்களை தொந்தரவு செய்யாமல் வெளியே சென்று அமர்ந்துவிட்டாள் அஞ்சனா.
மருந்தின் வீரியத்தில் மதியின் கணவன் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட, அஞ்சனாவை தேடி வந்தாள் மதி. சுவற்றை வெறித்தபடி யோசனையில் இருந்த அஞ்சனாவை காபி குடித்து வரலாம் என கேன்டீனுக்கு இழுத்து சென்றுவிட்டாள் மதி.
இவ்வளவு நேரம் அழுதிருந்தாலும், தன் கணவனை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் அவள் முகம் மிளிர்ந்தது.
“ஏன் மதி நான் ஒன்னு கேட்பேன் கோச்சிக்க மாட்டியே..” அஞ்சனா மெல்ல ஆரம்பிக்க மதியும் தலையசைத்தாள்.
“இல்ல நீ நல்லா கலரா அழகா இருக்க. ஆனா உன் ஹஸ்பண்ட் அவ்வளவு ஒன்னும் கலரும் இல்ல, வயசும் அதிகம் தெரியுராறு. நீ எதுக்குடி இவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட”
தயக்கமாய் கேட்டாலும் தன் மனதில் வந்ததில் இருந்து தோன்றிய சந்தேகத்தை மதியிடம் கேட்டுவிட்டாள் அஞ்சனா. அவள் கேள்வியில் கோபம் கொள்ளாத மதி, அஞ்சனாவை பார்த்து சின்ன சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.
“இதுதான் அஞ்சனா உன்கிட்ட எனக்கு புடிச்சது. மனசுல தோன்றதை அப்படியே பேசிருவ. இதுவரை என் புருஷனையும் என்னையும் சேர்த்து பாக்குறவங்க, முகத்துக்கு நேரா நல்லா பேசிட்டு முதுகுக்கு பின்னால கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் நான் கண்டுகிட்டதே இல்ல. ஏன் நீ சொல்றியே கலர், முகம் இது எதுவும் எனக்கு பெருசா தெரிஞ்சதும் இல்ல.
இவ்வளவு ஏன் எனக்கும் அவருக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசம்தான் அதுபத்தி எனக்கு கவலையும் இல்ல. ஏன் தெரியுமா அங்க இருக்காரே என் புருஷன், அவரு என் சொந்த தாய்மாமா. நான் ஸ்கூல் படிக்கும் போது என் அப்பாவ இழந்து, சொந்தகாரனுங்க சொத்தை எல்லாம் ஏமாத்தி புடுங்கினப்ப நானும் என் அம்மாவும் நடுத்தெருவுல நின்னோம்.
அப்ப நான் இருக்கேன்னு எங்களுக்கு தோள் குடுத்து தூக்கிவிட்டது என் மாமாதான். அதுபோக இருக்க கஷ்டத்துல பொம்பள புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு என் அம்மா என்னோட படிப்ப பாதிலையே நிறுத்த பாத்தாங்க. ஆனா பொம்பள புள்ளைக்கு தான் வாழ்க்கைல படிப்பு ரொம்ப முக்கியம்னு சொல்லி என்னை இஞ்சினியரிங் படிக்க வச்சதுகூட என் மாமாதான்.
இவ்வளவு ஏன்டி நான் இப்போ இவ்ளோ பெரிய வேலைல இருக்கலாம். ஆனா என் மாமா என்னவிட நிறைய படிச்சிருக்காரு, பெரிய போஸ்டிங்லதான் இருக்காரு. ஆனா வீட்டுல என்கூட தினமும் என்னோட வேலை பகிர்ந்து பாக்குறாரு. என்ன ராணி மாதிரி வச்சு தாங்குறாரு. இதைவிட ஒரு பொண்ணுக்கு என்னடி வேணும்.
இந்த கலர் உடம்பு எல்லாம் காலப்போக்குல மாறப்போறதுதான். அதை வச்சு நான் என்ன பண்ணப்போறேன். ஆனா என் மாமா என்மேல வச்சிருக்க லவ் இருக்கு பாரு, அது நான் செத்தாக்கூட இந்த உலகத்துல எங்க பேரை சொல்லும்டி”
மதி அவள் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டி தீர்க்க, அவளின் வார்த்தைகளை கேட்ட அஞ்சனாவிற்கு யாரோ தன்னை செருப்பால் அடித்ததைப்போல் இருந்தது. கொஞ்ச நேரம் அங்கு அமைதியே நிலவ
“சரி அஞ்சனா மாமா ரூம்ல தனியா இருப்பாரு நான் அங்க போறேன். அப்புறம் நான் கூப்ட உடனே எனக்கு துணைக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்டி. நீ போ இனிமே நான் பாத்துக்கிறேன், அதான் என் மாமா முழிச்சுட்டாருல்ல”
மதி முகம் முழுவதும் மகிழ்ச்சியில் நிரம்பியிருக்க, அஞ்சனாவிடம் சொல்லி கொண்டு வேகமாக அவள் கணவனின் அறைக்கு சென்றுவிட்டாள். மதி போவதை புரியாமல் பார்த்து இங்கு சிலையாய் அமர்ந்திருந்த அஞ்சனாவின் மனதிற்குள் பல நினைவுகள் காட்சிகளாக ஓடின.
திருமணமான முதல் நாளில் இருந்தே வெறுப்பை காட்டி, அதுவும் அவன் நிறம் மற்றும் உடலமைப்பை வைத்து இவள் பேசும் பேச்சுக்களுக்கு விவேக்கின் முகம் வேதனையில் சுருங்குவதை இப்போது நினைத்து பார்த்தாள் அஞ்சனா.
வாழ்வில் தாய் தந்தை என்ற உறவை இழந்து அன்புக்காக தன்னை மணம் முடித்த அவனுக்கு இதுவரை நாம் என்னென்ன கொடுமைகள் செய்திருக்கிறோம் என அவள் மனது அவளை திட்டி தீர்த்தது.
அவள் அரைகுறையாக செய்யும் சமையலை எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையோடு உண்ணும் அவன் முகம் கண்ணில் வந்து நிற்க, இப்போது இவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இவள் அசௌகரியமாக முகத்தை சுழித்தால் கூட ‘அம்மு என்னமா ஆச்சு, உடம்பு முடியலையா.. ஹாஸ்பிடல் போலாமா..” என பரிவாக கேட்கும் அந்த குரல் இப்போது அவள் காதுகளுக்குள் ஒலிப்பதைப்போல் இருந்தது.
காலை எழ நேரம் ஆனாலோ, மாலை வேலையிலிருந்து வர தாமதம் ஆனாலோ உணவை செய்து வைத்து சிரித்து நிற்கும் உருவம் அவள் கண்களுக்குள் வந்து நின்றது.
இவளால் முடியாத நாட்களில் இவள் துணிகளையும் சேர்த்து சிறிதும் முகம் சுணங்காது துவைக்கும் மடித்து வைக்கும் அந்த சிறிய உருவம், இப்போது அவள் மனதில் பெரியதாய் வளர்ந்து நின்றது.
இதுநாள் வரை ‘இவனுக்கு நான் கிடைச்சது அவனோட அதிஷ்டம். அதனால செஞ்சா என்ன’ என நினைத்த நினைப்பதெல்லாம் இப்போது அபத்தமாய் தெரிந்தது.
‘ஆண்டாவா! எவ்ளோ நல்ல மனுஷன என் வாழ்க்கை துணையா தந்திருக்க. இது தெரியாம இவ்ளோ நாள் அவரை கஷ்டப்படுத்திட்டனே’
மனதின் உள்ளே புழுங்கி தவித்த அஞ்சனா, இதுக்கு மேலையும் தாமதிக்காது அவள் கணவனை காண புறப்பட்டாள். வண்டியில் போகும் அந்த அரை மணிநேரமும் அவள் கணவனோடு இவள் வாழ்ந்த அந்த மூன்று மாத வாழ்க்கை அவளின் கண்முன்னால் வந்து சென்றது.
அவ்வளவு காதலை கண்களில் தாங்கி அவளை பார்க்கும் அந்த கண்கள் இப்போது அவளை குற்றம் சொல்வதைப் போல் தெரிந்தது. அந்த காதலுக்கு தான் தகுதியானவள் தானா என்று பெரிய சந்தேகம் அவள் மனதிற்குள் முளைக்க, அவனிடம் மன்னிப்பை யாசித்து எப்படியாவது அவன் காதலை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென உறுதியெடுத்து வண்டியை வேகமெடுத்தாள் அஞ்சனா.
காலையில் பதட்டத்துடன் சென்ற மனைவி இன்னும் வரவில்லையே என வீட்டு வாசலை பார்த்தபடி இங்கு அமர்ந்திருந்தான் விவேக். அவன் பொறுமையை மிகவும் சோதித்த அவன் மனைவியோ வீட்டிற்கு வருவதற்கு மதியம் ஆகிவிட்டது. அப்படி வந்த அவன் மனைவியின் அழுத தோற்றத்தை கண்டு விவேக் பதறி விட்டான்.
அழுதபடி வண்டியை நிறுத்திய அஞ்சனா வேகமாக உள்ளே வந்து விவேக்கை இறுக அணைத்துக் கொண்டு அழுக, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அம்மு என்னடா ஆச்சு.. ஏன்டா அழற”
என்ன ஆனதோ என பதறியபடி விவேக் கேட்க, அவனை அணைத்திருந்த அஞ்சனாவோ “சாரிங்க.. சாரி.. சாரி” என மன்னிப்பை ஜபமாக உச்சரித்தாள்.
“எதுக்குடா என்ட்ட சாரி கேக்குற.. என்னமா ஆச்சு. வரும்போதே பாத்தேன் ஒருமாதிரி இருந்த, எங்கையாவது விழுந்துட்டியா.. அடி எதுவும் பட்டிருக்கா.. அதுதான் அழறியா”
எப்போதும் அவனிடமிருந்து வரும் அதே பரிவான குரல் கேட்க, மேலும் உடைந்து அழுகைதான் கூடியது அஞ்சனாவிற்கு. ஒரு கட்டத்தில் அழுது முடித்தால்தான் அவள் வாயை திறப்பாள் என புரிந்து விவேக்கும் அவள் நிதானமாகும் வரை அமைதி காத்தான்.
அரை மணி நேரம் கழித்து அவள் அழுகை எல்லாம் நின்று நிதானமாக, இப்போது மீண்டும் என்ன நடந்தது என கேட்டான் விவேக். அவன் முகத்தை குற்றவுணர்வுடன் பார்த்த அஞ்சனா, மெல்ல தலையை குனிந்து கொண்டாள். எதுவோ நடந்திருக்கிறது. அந்த அதிர்வில் தன்னை கட்டிப்பிடித்து அழுதிருக்கிறாள். இப்போது தெளிந்து விட்டாள் இனி பழையபடி முகத்தை திருப்புவாள் என விவேக் மனதிற்குள் நினைத்து நிற்க, அதற்கு மாறாக மெல்ல பேசினாள் அஞ்சனா.
“விவேக் இத்தனை நாள் எதையும் புரிஞ்சுக்காம உங்கள நான் ரொம்ப காயப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிருங்க விவேக் நான் இனி இப்படி பண்ண மாட்டேன்.. சாரிங்க ரொம்ப ரொம்ப சாரி”
அவனை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் அழுக, விவேக்கோ ஆனந்தமாய் அதிர்ந்தான். காலையில் கூட தன்னிடம் முகம் கொடுத்து போசாமல் போன தன் மனைவி இப்போது எப்படி மாறினாள் என புரியாது போனது அவனுக்கு.
“என்னமா ஆச்சு”
அஞ்சனாவின் தலையை கோதியபடி ஆதூரமாக விவேக் கேட்டதில், அஞ்சனாவின் கண்களில் மீண்டும் தண்ணீர் கோர்த்துக் கொண்டது. கொஞ்சம் தன்னை நிதானித்து மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் சொன்னாள் அஞ்சனா.
“இவ்ளோ நாள் எதையோ முட்டாள்தனமா நெனைச்சுட்டு, உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டு இருந்திருக்கேன். ஆனா நீங்க நான் எது செஞ்சாலும் பொறுத்துப்போய், என்ன ஒரு சின்ன குழந்தை மாதிரி பாத்துக்கிட்டீங்க. எல்லாத்துக்கும் சேர்த்து ரொம்ப சாரி அண்ட் தேங்க்ஸ்”
சிறு பிள்ளை போல் மூக்கை உறிஞ்சியபடி அஞ்சனா பேசியதில் புன்னகை பூத்தான் விவேக். அவளிடம் அவனுக்கு பிடித்ததே இந்த சிறு பிள்ளைதனம்தானே.
அது இப்பவும் அவனுக்கு அவளின் மீது ஈர்ப்பை தர, அஞ்சனாவின் பளிங்கு முகத்தை கையில் ஏந்திக் கொண்டான் விவேக்.
“இங்க பாருடா அம்மு, அம்மா அப்பா இல்லாத எனக்கு முதல்முதல் சொந்தமா வந்தவ நீ. அதனால நீ எது பண்ணுனாலும் எனக்கு கோபமே வராதுமா. நீ என்னதான் என் மேல கோபமா இருந்தாலும் எனக்கு சாப்பாடு செய்யாம இருந்திருக்கியா, இல்ல சண்டை போட்டாவது என்கிட்ட பேசாம இருந்திருக்கியா. தனியா கிடந்த எனக்கு அதுவே எவ்ளோ சந்தோஷம் தரும் தெரியுமா”
விவேக் பேச பேச இன்னும் அழத அஞ்சனா, அவன் காதலை எண்ணி பூரித்துப்போனாள். எனவே இத்தனை நாள் அவள் கனவிலும் செய்ய நினைக்காத ஒன்றை இன்று செய்தாள்.
அவன் மார்பில் சாய்ந்திருந்தவள், நிமிர்ந்து அவனை பார்த்து “ஐ லவ் யூ விவேக்” என்று அழகாய் தன் காதலை சொல்லி எக்கி அவன் கண்ணத்தில் முத்தம் ஒன்றை வைக்க, ஆடிப்போனான் விவேக்.
அவன் மனைவி அவன் எதுவும் செய்யாமல் தானாகவே வந்து அவள் காதலை சொன்னதில் வானத்தில்தான் பறந்தான் விவேக்.
“ஐ லவ் யூ டூ அம்மு”
தானும் காதலை சொன்ன விவேக், தன் காதலியை மனைவியை தன்னோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டான்.
காதல் என்பது புறம் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என உணர்ந்துக்கொண்ட அஞ்சானவுக்கு, வாழ்வில் கோடி அள்ளி கொடுத்தாலும் கிடைக்காத அற்புதமான காதல் கை வந்து சேர்ந்திட்டது.
இத்தனை நாள் தனிமையை துணையாய் கொண்டிருந்த விவேக்குக்கு, தன் வாழ்வில் எதிர்ப்பார்த்த அவன் காதல் அவன் கைகளுக்குள் வாகாய் சாய்ந்திருந்தது. இனி வாழ்வு வசந்தம் என எண்ணி மகிழ்ந்த விவேகின் கண்களின் ஓரம் சிறு கண்ணீர் துளி வெளியே வந்தது அவன் காதல் வென்றுவிட்டதின் வெளிப்பாடாக.
இவர்கள் இருவரையும் அவர்கள் காதலோடு தன் கைக்குள் சேர்த்து அணைத்துக் கொண்டது அந்த காதல் தேவதையின் சிறகுகளும்.
-முற்றும்