“சரி கோவப்படாத” என்றவரின் போன் ஒலிக்க, தனபாலன்.

“பேரன் வந்துவிட்டானா?” என்று கேட்டு கொண்டவர், மகள் அடித்ததை சொல்லிவிட்டார்.

“பானு என் மகனை அடிச்சாளா?” என்று தயாளன் குரல் கோவத்தில் உயர்ந்தது.

மீனலோக்ஷ்னி குடிக்க தண்ணீர் கொண்டு வந்தவள், அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.

இறுகி போய் நின்ற வில்வநாதனை நெருங்கிய தந்தை, “என்ன வில்வா. தாத்தா என்னமோ சொல்றார். அம்மாவோட சண்டையாமே” என்று படபடத்தார்.

“அவங்க என் அம்மாவா என்னை அடிக்கலை. உங்க பொண்டாட்டியா தான் என்னை அடிச்சாங்க” என்றான் மகன்.

“நீங்க சொல்லியிருக்கீங்க என் மேல கை வைக்க கூடாதுன்னு. அப்படியும் அவங்க என்னை அடிச்சிட்டாங்க. எல்லாம் உங்களால தான். நீங்க உங்களை மட்டும் பார்த்து தனியே வந்ததால தான் அவங்க என்னை இப்படி பண்றாங்க” என்று முழு மூச்சாக அம்மா மேல் புகார் வாசித்தான் மகன்.

‘இந்த வயசுக்கு அடியா?’ பெண் கண்களை உருட்டி அவனை பார்த்தாள்.

‘கண்டிப்பா இவர் எதாவது பேசியிருப்பார். அதான் ஆன்ட்டி ஒன்னு வைச்சிருப்பாங்க. உனக்கு ஆவணும்டா’ என்பது போல் மனதுக்குள் குதுகலித்து கொண்டாள்.

தயாளன், “நான் பானுவை என்னன்னு கேட்கிறேன். இதென்ன வளர்ந்த பிள்ளை மேல கை  வைக்கிறது?” என்று முகம் மாறிப்போனது தந்தைக்கு.

“ஐஸ் ஏதும் வைச்சியா?” என்று மகனின் கன்னத்தை பார்க்க,

“அந்தளவு எல்லாம் ஒன்னும் இல்லை மாமா” என்று பெண் ஆர்வத்தில் சொல்லிவிட்டாள்.

வில்வநாதன் அப்பாவிடம் இறக்கி வைக்கவும் நிதானத்திற்கு வந்திருந்தவன், அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டதில், “என்ன எதிர்பார்த்த நீ, என் கன்னம் பண்ணு மாதிரி வீங்கணும்ன்னா?” என்று அவளை காய்ச்ச ஆரம்பித்துவிட்டான்.

“நான், நான் ஏன் அப்படி எதிர்பார்க்க போறேன்? சும்மா, மாமா கேட்டதுக்கு” என்று திணற,

“மாமாவா? அவர் உனக்கு சார். ப்ரொபெஸர்கிட்ட இப்படி தான் பேசுவியா?” என்று அவளிடம் குதித்தான்.

மீனலோக்ஷ்னி, “அவர் தான் சொன்னார்” என்று முனங்க,

“நான் தான் வில்வா சொன்னேன். அறிவழகன் பொண்ணு. சின்னதுல இருந்தே கூப்பிட்டு பழக்கம். காலேஜ் இல்லாத நேரத்துல கூப்பிட சொன்னேன்” என்றார் தயாளன்.

“இப்போவும் அவ உங்க ஸ்டூடன்ட் தான்”

“ஆனா நான் டியூட்டில இல்லையே” தந்தை சொல்ல,

“உங்க மகன் எப்போவும் ஆன் டியூட்டி மாமா” என்றுவிட்டாள் மீனலோக்ஷ்னி.

“ஆமா, நான் அப்படி தான்.  உன்னை பார்த்தா ரொம்ப சந்தோஷபடுற மாதிரியே இருக்கு” என்று கைகளை கட்டி கொண்டு கேட்டான்.

“இல்லையே. நான், எனக்கென்ன சந்தோசம்?” பாவமாக முகம் வைத்து சமாளிக்க, வில்வநாதனுக்கு அவளை நம்பத்தான் முடியவில்லை.

இடையில் தயாளன் மனம் ஆறாமல், மனைவிக்கு அழைத்துவிட்டார். பானுமதியும் கணவரின் அழைப்பை எதிர்பார்த்திருந்தார் போல.

“சொல்லுங்க” என்றார் உள்ளே போன குரலில்.

“வில்வாவை அடிச்சியா?” என்று கோவமாக கேட்க, மகன் தந்தை அருகில் சென்று நின்று கொண்டான்.

மீனலோக்ஷ்னிக்கு அங்கு நிற்க கூடாது என்று தெரிகிறது. ஆனாலும் நகர தான் மனமில்லை. அவன் அடி வாங்கிய ஆர்வத்தில் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

“அவன் என்ன பேசினான்னு உங்களுக்கு தெரியாது” மனைவியும் மகன் மேல் புகார் வாசிக்க,

“அவன் என்னவேணா பேசட்டும். அதுக்காக வளர்ந்த பிள்ளையை அடிக்கிறது என்ன பழக்கம்”

“அடிச்சதை மட்டும் சொன்னவன், ஏன் அடிச்சேன்னு சொன்னானா? அவன்கிட்ட முதல்ல காரணம் கேளுங்க”

“அதை அப்பறம் நான் கேட்டுக்கிறேன், இனி என்னவா இருந்தாலும் என் மகன் மேல் நீ கை வைக்க கூடாது. என்ன நினைச்சிட்டிருக்க நீ? நான் தள்ளி இருக்கேன்னு இப்படி எல்லாம் பண்ணுவியா?” என்று மனைவியை பேச, மகனுக்கு முகம் நன்றாகவே தெளிய ஆரம்பித்தது.

“ப்ளீஸ்ங்க. அந்த நல்லவன் நம்மளை பேசுறான். உங்களை, என்னை” என்று சொல்ல கூட முடியாமல் நிறுத்த,

“நம்மளை பேசினா பேசிட்டு போகட்டும், இப்போ என்ன? நம்ம புள்ளைக்கு இல்லாத உரிமையா?”

“என்ன பேசுறீங்க நீங்க? அவனுக்கென்ன உரிமை இருக்கு” பானுமதிக்கும் கோவம் வந்தது.

“அவன் நம்மளை ஏன் டிவோர்ஸ் பண்ணலைன்னு கேட்கிறான், அவனுக்கு போய் வரிஞ்சு கட்டிட்டு வரீங்க” என்று பொரிந்துவிட்டார்.

தயாளனும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். “டிவோர்ஸ் பண்ண கேட்டானா” என்றபடி மகனை திரும்பி பார்க்க,

மீனலோக்ஷ்னி வாய் மேல் கை வைத்துவிட்டாள். அப்பா, அம்மாக்கே இப்படியா? நல்லா வருவ மேன் நீ?

இருவரின் பார்வையையும் எதிர்கொண்டவன், ‘ஆமா கேட்டேன். அதுக்கென்ன இப்போ’ என்பது போல் நின்றான்.

தயாளனுக்கு அப்போதும் மகனை விட முடியாது. “சரி, இப்போ என்ன, கேட்டா பதில் சொல்லு. கை வைக்கிறது எதுக்கு?” என்றார்.

வில்வநாதன் ஜோராக பேண்ட் பேக்கெட்டில் கை விட்டு கொண்டான். என் அப்பா என்ற பெருமை பார்வை வேறு.

“எனக்கு தெரியும் நீங்க உங்க ரத்தத்துக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு” என்று பானுமதி நொந்து போக,

“உடனே டவுன் ஆகாத. நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன். நைட் போன் பண்றேன்” என்றவர், மகனின் விடாத பார்வையில், “பானு, இதான் லாஸ்ட் வார்னிங். இனி அவன் மேல உன் கை பட்டுச்சு” என்று மிரட்ட,

“முன்னாடியே நீங்க வார்ன் பண்ணியிருக்கீங்க. அப்படியும் அவங்க என்னை  அடிச்சுட்டாங்க” என்றான் மகன் எடுத்து கொடுத்து.

“அது ரொம்ப வருஷம் ஆகியிருக்கும் இல்லை. அம்மா மறந்திருப்பா. இப்போ ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன் இனி இப்படி பண்ண மாட்டா. என்ன பானு?” என்று மனைவியிடம் கேட்க,

பானுமதி வாய் திறக்க வேண்டுமே. அவரின் அனல் மூச்சு கணவரின் காதை சுட்டது.

“சரி வைக்கிறேன். நீ மகன் வீட்டுக்கு வந்ததும் அவன்கிட்ட பேசு” என்று வைத்தார்.

வில்வநாதன் அப்போதுதான் மீனலோக்ஷ்னி கையில் இருந்த தண்ணீரை வாங்கி முழு பாட்டிலையும் காலி செய்தான்.

“மாமா நான் காபி எடுத்துட்டு வரேன்” என்று பெண் உள்ளே செல்ல,

“அம்மாகிட்ட நீ இப்படி பேசியிருக்க கூடாது வில்வா” என்றார் தயாளன் கண்டிப்புடன்.

அவரின் புருவ நெருப்பில், வார்த்தையின் அழுத்தத்தில் வில்வநாதன் எங்கோ பார்த்தான்.

“அப்பாவா, அம்மாவா எங்க மேல உனக்கு முழு உரிமை இருக்கு. இல்லைன்னு சொல்லலை. ஆனா அதையும் தாண்டி நாங்க தனி மனுஷங்க. எங்களுக்கான உறவு வேற, அதுக்கான வரைமுறை வேற. பானுவும், நானும் எப்படின்றதை உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாதுடா”

“உன் அம்மாவா மட்டும் தான் அவளை உனக்கு தெரியும். என் மனைவியா அவ எப்படின்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நீ சொன்ன அந்த டிவோர்ஸ்ங்கிற வார்த்தை அவளை எந்தளவு வேதனைபடுத்தும்ன்ற ஐடியா கூட உனக்கு இருக்காது. என் விஷயத்துல அவ ரொம்ப சென்சிடிவ்”

“தெரிஞ்சும் அவங்களை விட்டு ஏன் பிரிஞ்சிங்க” மகன் நிதானமாக அவர் முகம் பார்த்து கேட்டான்.

“சொல்லுங்க. எல்லாரையும் விட, மகனை விட, அப்பா, அம்மாவை விட உங்க விஷயத்துல அவங்க ரொம்ப சென்ஸிட்டிவ்ன்னு தெரிஞ்சும் ஏன் அவங்களை தள்ளி வைக்கணும்?”

தயாளன் அமைதியாக நிற்க, “என் அம்மாக்கு தண்டனை கொடுக்கணும்ங்கிறது தான் உங்க தீர்ப்பா?” என்று கேட்க,

“என்ன பேசுற வில்வா. தண்டனைன்னு எல்லாம் சொல்லாதடா” என்றார் தயாளன்.

“சொல்ல கூடாது. ஆனா செய்யலாம் இல்லை. தினம் தினம் அவங்க தப்பை உணர வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா அவங்களை கொள்ளலாம் இல்லை”

“வில்வா” என்று அதட்டினார் தயாளன்.

“இல்லை. நான் ஜஸ்ட் கேட்டேன். எனக்கு தான் உங்க தனிப்பட்ட விஷயத்துல மூக்கை நுழைக்கிற உரிமை இல்லையே” என்று தோள் குலுக்கினான் மகன்.

“என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி நடந்துகிற? நீ இதெல்லாம் பேச மாட்டியே? திடீர்ன்னு என்ன?”

“தெரியலை” என்றான்.

“மே பி இத்தனை வருஷம் ஆகிடுச்சு, நீங்க நான் கூப்பிட்டதும் என்னோட வந்திடுவீங்கன்னு நினைச்சுட்டேன் போல. பட் நான் மறந்துட்டேன், என்ன இருந்தாலும் நீங்க என்னோட டாடி இல்லை”

“வில்வா” என்று தந்தை நெருங்க, வேண்டாம் என்று தலையாட்டி தள்ளி நின்றவன்,

“அம்மாகிட்ட நான் அப்படி பேசியிருக்க கூடாது. எனக்கும் தெரியும். ரொம்ப மரியாதை குறைவா நடந்துக்கிட்டேன். அவங்ககிட்ட மன்னிப்பு கேட்பேன். உங்ககிட்டேயும் கேட்டுக்கிறேன்” என,

“வில்வா. என்னடா”

“உங்க விஷயத்துல நான் அதே வயசுல நின்னுட்டேன் போல. மத்த எல்லாத்திலும் வளர்ந்துட்டேன். பாருங்க உங்களை விட ஹையிட் ஆகிட்டேன். படிச்சு முடிச்சுட்டேன். பிஸ்னஸ் ரன் பண்றேன். ஆனா நீங்கன்னு வரும் போது ரொம்ப மோசமா, சின்ன பிள்ளை தனமா. பாருங்க இப்போவும் உங்களை தேடித்தான். காட்! ஐ ஹேட் திஸ். எனக்கு பிடிக்கலை. ஆனா என்னால செய்யாமலும் இருக்க முடியலை” என்று தலையை பிடித்து கொண்டான்.

தயாளனுக்கு மொத்தமும் பதறிப்போனது. மகன் இன்னமும் அப்படியே இருக்கிறானா? அவனின் அந்த அழுத்தம் தீராதா?

மீனலோக்ஷ்னி கையில் காபியுடன் வந்தவள், அவனின் பேச்சில் செயலில் ஒருமாதிரி அரண்டு போனாள்.

தயாளன் அவனை நெருங்க முடியாமல் நிற்க, “கா, காபி எடுத்து வந்திருக்கேன்” என்று கொஞ்சம் சத்தமாக சொல்லி அவர்களை நெருங்கினாள்.

“ஹேய் மீனா பொண்ணு. கொடு.  எங்க தலை வெடிச்சிடுமோன்னு பயந்துட்டேன்” என்றவன், இரு கோப்பையையும் நொடியில் காலி செய்துவிட்டான்.

“ஓகே. நான் கிளம்புறேன். அகைன் நீங்க ப்ரூப் பண்ணிட்டீங்க. அப்பா என்னைக்கும் அப்பா தான். மகன் என்னைக்கும் மகன் தான்’னு. தேங்க்ஸ் டாட்” என்று சலியூட் அடித்தவன், கிளம்பிவிட்டான்.