ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவன், “ஆல்ரைட்! இந்த தண்டனைக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா ஒரு வருஷத்துக்கு தான்” என்றான்.
“நானும் அதை தானே சொன்னேன்!”
மறுப்பாக தலை அசைத்தவன், “ஒருவேளை ஒரு வருஷம் கழிச்சு நீ என்னுடன் வாழ்ற முடிவை எடுக்கும் பட்சத்தில்…” என்று இழுத்து நிறுத்தி அவளை ஆழ்ந்து நோக்கினான்.
“அண்ணியா என் கடமையைச் செய்ய தவற மாட்டேன்.. ஆனா உங்க அம்மாவை என்னைக்குமே என்னால் ஏத்துக்க முடியாது” என்றாள் தீர்க்கமான குரலில்.
“பின்விளைவுகளை தெரிந்து தான் இந்த பந்தத்தில் நான் நுழைந்து இருக்கிறேன்”
“நல்லது”
“ஹ்ம்ம்” என்றவனின் பார்வை தங்கை மற்றும் தந்தையிடம் திரும்பியது.
மைத்ரேயி பரிதவிப்புடன் அண்ணனை நோக்க, அன்பரசு மகனின் நல்வாழ்விற்காக தனது துக்கத்தை தன்னுள் புதைத்து மென்னகைத்தபடி அவனது தலையில் ஆசிர்வதிப்பது போல் கை வைத்து, “நல்லா இருங்க” என்றவர், “விட்டு கொடுத்து போறதில் யாரும் தாழ்ந்து போறது இல்லை அபி.. மனைவி கிட்ட தோற்று, வாழ்க்கையில் ஜெயக்கலாம்.. வாழ்க்கைனு நான் சொல்றது உன் மனைவியுடனான நல்வாழ்வை தான்.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றபடி அவனது கன்னத்தை தட்டினார்.
அவரது கையை இரு கரங்கள் கொண்டு இறுக்கமாக பற்றியபடி இரு நொடிகள் அமைதியாக இருந்தவன் பின் மென்னகையுடன், “என் உடம்பில் உங்க ரத்தம் தான் அதிகம் ஓடுதுப்பா” என்றான்.
மகனின் மென்னகை பின் இருக்கும் வலியை உணர்ந்த அன்பரசு தானுமே வலியை மறைத்தபடி மென்னகைத்தார்.
“அண்ணா..” என்று தழதழத்த குரலில் கலங்கிய கண்களுடன் அழைத்த தங்கை பக்கம் திரும்பியவன் புன்னகையுடன் அவளது தலையை வருடியபடி, “ஒரு வருஷம் தானே! ஓடிடும்டா” என்றபோது அவளது கண்ணகளில் கண்ணீர் இறங்கியது.
மறுப்பாக தலையை ஆட்டியபடி கண்ணீரைத் துடைந்தவன், “உப்பை தின்றவன் தண்ணி குடித்து தான் ஆகணும்.. அம்மா செய்தது மன்னிக்க முடியாத தவறுடா.. அவங்க திருந்துவது போல் தெரியலை.. அப்போ, அதை நாம தானே சரி செய்யணும்! இதன் மூலம் உன் அண்ணிக்கு கொஞ்சமேனும் நிம்மதி கிடைக்கும்னா, நாம அதை தரது தானே சரி!
உன் அண்ணியோட இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது, ஆனா என் அன்பால் அவளோட வலியை குறைக்க முடியும், என் காதலால் அவளை இனிமையான சந்தோஷமான வாழ்வை வாழ வைக்க முடியும்.. ஒரு வருஷம் கழிச்சு அண்ணியோட தான் வருவேன்.. தைரியமா இரு.. நீ விரும்பியபடி சென்னை வேலைக்கு போ.. அப்பா உன் கூட வருவாங்க” என்றான்.
சற்றே தெளிந்தவள் தமையனை இறுக்கமாக கட்டிக் கொண்டு, “தன்க்யூ அண்ணா.. உங்க ரெண்டு பேர் வரவுக்காக, நானும் அப்பாவும் காத்துட்டு இருப்போம்” என்றவள், தமையனின் அணைப்பில் இருந்தபடியே மென்னகையுடன் பனிமலரைப் பார்த்து, “வந்துருங்க அண்ணி” என்றாள்.
பனிமலர் எந்த விதமான எதிர்விணையும் ஆற்றாமல் நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
மருமகளை நெருங்கிய அன்பரசு, “என் மௌனம் உன்னை ரொம்பவே காயப்படுத்தி, பெரிய இழப்பை கொடுத்துருச்சு” என்றவர் கையை கூப்பி, “என்னை மன்னிச்சிருமா” என்றார்.
“அரசு!” “அண்ணே!” என்று சுப்பையாவும் நெல்லைவடிவும் சிறிது பதறியபடி கண்டன குரலை எழப்ப,
பனிமலரோ அவரது கையை இறக்கியபடி, “இனி இந்த தப்பை செய்ய மாட்டீங்கனு நம்புறேன்.. உங்க மக வாழ்க்கைக்கு அது தான் நல்லதும் கூட” என்றாள்.
“நன்றிமா.. என்னை மன்னிக்கலைனாலும், அதை கடந்து வர முயற்சிக்கிற” என்றவர், “ஒன்னே ஒன்னு கேட்டுக்கிறேன்மா.. உடனே இல்லைனாலும், அபியை தனி மனிதனா பார்க்க முயற்சி செய்.. அது தான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது” என்றார்.
இப்பொழுதும் அவளிடம் சலனமற்ற பார்வை மட்டுமே.
“சரி.. நாங்க கிளம்புறோம்” என்ற அன்பரசு மகளுடன் கிளம்பினார். அன்பரசு வெளியே திடமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் உடைந்து தான் இருந்தார். மைத்ரேயி தவிப்பு கலந்த கனத்த மனதுடன் விடை பெற்றாலும் அண்ணன் மேல் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தான் கிளம்பினாள்.