இன்று….
முகூர்த்தம் காலை 6 – 7.30 என்பதால், வைகறை 3 மணி அளவில் பனிமலரை எழுப்பிய அவளது அன்னை நெல்லைவடிவு அகம் நிறைந்த மந்தகாச புன்னகையுடன் அவளது முகத்தை திரிஷ்டி கழிப்பது போல் செய்தபடி, “ராஜாத்தி” என்றவர், “வெரசா கெளம்புடா தங்கம்.. இன்னும் ஒன்னர மணி நேரத்துல பொண்ணழைக்க மாப்பிள்ள வூட்டுல இருந்து வந்துருவாக” என்றார்.
அன்னைக்காக மட்டும் உதட்டின் ஓரம் சிறு மென்கீற்றை உதிர்த்தவள் எழுந்து அறையில் இருந்த குளியலறையினுள் சென்றாள்.
மகள் சென்றதும் அவ்வறையில் இருந்த கணவரின் புகைப்படத்தை பார்த்தவர், ‘ஏ மவராசா! போகும் போது நம்ம புள்ளையோட சிரிப்பையும் சந்தோசத்தையும் சேர்த்து எடுத்துட்டு போயிட்டிகளே! இனியாவது அவ வாழ்க்கையில வெளக்கேத்தி வைங்க.. ஒங்கல நம்பிதே இருக்கேன்’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டார்.
அதற்குள், “அத்தாச்சி!” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கவும்,
“தோ வாரேன்” என்று குரல் கொடுத்தவர் மகளுக்கு வேண்டிய ஆடை மற்றும் அணிகலங்களை எடுத்து வைத்துவிட்டு வேகமாக வெளியேறினார்.
அதன் பிறகு நிற்க நேரம் இல்லாமல் தான் சுழன்று கொண்டு இருந்தார்.
காலைகடன்களை முடித்து குளித்துவிட்டு வந்த பனிமலர் மேசை மீது இருந்த குளம்பியை(coffee) எடுத்துக் கொண்டு திறந்து இருந்த ஜன்னல் அருகே சென்றாள். நிலவொளியில் மெல்லிய தென்றலின் இசைக்கு ஏற்ப தென்னங்கீற்று அசைந்தாடிய காட்சி பார்க்கவே ரம்மியமாக இருந்தது. ஆனால் அது அவளது மனதை குளிர்விக்கவுமில்லை, பதியவுமில்லை. நிலவு மங்கையை வெறித்தபடி குளம்பியை பருகிய மங்கையவளின் மனதினுள் பல எண்ண அலைகள்….