Advertisement

தவம் செய்யாத வரம் நீ…

வரம்.1

தொழில்துறையில் சிறந்து விளங்கினாலும், இன்றளவும் விவசாயத்தை உயிர்மூச்சாக கொண்டு அதை அழிய விடாமல் காத்து வரும் பகுதிகளில் ஒன்றான கொங்கு நாடு.

பேசும் வார்த்தைகளில் கூட ங்க… போட்டு மரியாதையாக பேசும் கொங்கு நாடான ஈரோட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பண்ணை வீட்டின் முன் வெள்ளனவே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு  முடித்துவிட்டு அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி  பொன்னியரசி.

மலைகொழுந்தார்க்கும்  பெருமாயிக்கும் பிறந்த அழகிய தேவதை., சிவகொழுந்தின்  செல்லத்தங்கை. அந்த பண்ணை வீட்டின் இளவரசி பொன்னியரசி.

“பொன்னி கோலம் போட்டு முடிச்சி போட்டினா இங்கன வெரசா வா…” என்ற அன்னையின் குரலைக்கேட்டு, “இதோ வரேனுங்ம்ம்…” என கூறிவிட்டு கோலமாவு டப்பாவை எடுத்துபோய் வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

“ஏனுங்ம்மா கூப்ட்டிங்க?”

“வெள்ளையன் பால் கறந்து முடிச்சிருப்பான் போய் வூட்டு செலவுக்கு பால் எடுத்துப் போட்டு வா பொன்னி.” என்றார் பெருமாயி.

“சரிங்ம்மா…” என்றவள் வீட்டிற்கு பின்புறம் இருந்த கட்டுத்தரைக்கு சென்றாள்.

அவளை பாத்ததும் கன்று போட்டு ஒரு மாதமே ஆன இளங்கன்று லஷ்மி  “ம்மா..” என கத்தியது.

அதனருகில் சென்று தலையை நீவி விட்டு  “அழகி பசிக்குதா?” என கேட்டாள்.

அவள் கேட்டதும் அந்த கன்றும் தலையை ஆட்டி ஆமாம் என்றது.(கிராமங்களில் உள்ள மக்கள் தான் வளர்க்கும் ஆடு, மாடுக்குக்கூட பேர் வைத்து அதை தன் வீட்டு ஆட்களை போல பாசம் காட்டி வளர்ப்பர். அந்த வாயில்லா ஜீவன்களும் மனதர்களைப்போல வஞ்சம், சூது, எதுவுமில்லாமல் தன் எஜமானனுக்கு அன்பை காட்டும்.)

பொன்னி அங்கிருந்த வெள்ளையனிடம் “வெள்ளையா இன்னைக்கு அழகிக்கு பால் விடலையா?” என்று கேட்டாள்.

“பால் கறக்கரப்ப விட்டேனுங் அம்மணி.”

“நாளைல இருந்து கன்னுகுட்டிக்கு பால் அதிகமா விடு வெள்ளையா… அது குடிக்கறது போக மிச்சத்த கறந்து வை போதும்.”

“சரிங்க அம்மணி.”

“சரி சரி மசமசனு நிக்காம வெரசா வேலைய முடி.” என்றவள்,

அங்கிருந்த பால் கேனில் இருந்த பாலை  பாத்திரத்தில் ஊற்றிக்கொண்டு வீட்டினுள் செல்லும் போது “அம்மா…” வெளியே இருந்து வந்த குரல்கேட்டு பாலை எடுத்துக்கொண்டே  வீட்டின் முன் வாசலுக்கு சென்றாள்.

“ஏனுங் சின்ன அம்மணி பண்ணையார் இல்லைங்லா?”

 “வயல்ல கருது அறுக்க ஆள் வந்துருக்குனு அப்பா அங்கன போயிட்டாருங் ண்ணா…” என்றவள்

அவரின் முகம் வாடிருப்பதை கண்டதும் “ஏனுங்ண்ணா எதாவது முக்கியமான வேலையா அப்பாவ பார்க்க வந்திங்ளா?” என்று கேட்டாள்.

“இல்லைங்க அம்மணி வீட்ல பொஞ்சாதிக்கு உடம்புக்கு முடியல… அதான் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போக பண்ணையார் கிட்ட கொஞ்சம் காசு கேட்ருந்தேன்… காலைல வா தரேனு சொன்னாரு. அதான் வாங்கிபோட்டு போலாம்னு வந்தேனுங்க.”

“இங்கனையே இருங்க ண்ணா. இதோ வரேன்.” என கூறிவிட்டு வீட்டினுள் சென்று பாலை சமையலறையில் வைத்துவிட்டு அங்கிருந்த அன்னையிடம்,  “அம்மா ரங்கண்ணே வூட்டுக்காரிக்கு உடம்புக்கு முடியலையாம் ஹாஸ்பிட்டல் போக  காசு வேணும்னு வந்துருக்கு.” என்றாள்.

“நேத்தே உன்ர அப்பா அவரு வருவாரு காசு குடுனு குடுத்தாரு. அத சாமி படத்துக்கிட்ட வச்சிருக்கேன் அத எடுத்து போய் குடுத்துடு பொன்னி.”

“சரிங்கம்மா…” பொன்னி வெளிவரும் போது கையில் சில ஆயிரங்கள் இருந்தன.

“இந்தாங்க ண்ணா…”

“ரொம்ப நன்றிங்க அம்மணி… அப்பா வந்தா சொல்லிடுங்க. நா போயிட்டு வரேனுங்க அம்மணி.” என்று கூறிவிட்டு அவர் கிளம்பினார்.

அப்போது வீட்டிற்கு வந்த அவளுடைய அப்பத்தா “ஏம் புள்ள பொன்னி ஆரது வந்துட்டு போறது?” என்றார்.

“ரங்கன் அப்பத்தா! பொஞ்சாதிக்கு மேலுக்கு முடியலையாம் அதா காசு வாங்கிப்போட்டு போறாங்க.”

“சரி. எனக்கு கொஞ்சம் நீசத்தண்ணி கொண்டுவா புள்ள களப்பா இருக்கு.” என்றவாறே திண்ணையில் கிடந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தார்.

“இதோ கொண்டு வரேனுங்க அப்பத்தா..” என்றவள் உள்ளே சென்று நீச்த்தண்ணிய கொண்டுவந்து அப்பத்தாவிடம்  கொடுத்தாள்.

அதை வாங்கி குடித்து முடித்தவர் “ஏங் கண்ணு உன்ர அண்ணங்காரன் இன்னும் எந்திரிக்கலையா?? பொழுது வெடியப்போகுது இன்னும் என்ன தூக்கம் வேண்டிகிடக்கு அவனபோய் எழுப்பு புள்ள வயலுக்கு போவட்டும்.” என்றவர்

“குடியானவன் வயித்துல பொறந்துபோட்டு சூரியன் உச்சிக்கு வர வரைலும் தூங்குனாவா வெளங்க போகுது.” என திட்டிக்கொண்டிருந்தார்.

“ஏனுங்க அப்பத்தா எப்ப பார்த்தாலும் அண்ணன  திட்டிட்டே இருக்கிங்க. அண்ணா ராத்திரி களத்துமேட்ல இருந்து வரதுக்கே பாதி சாமம் ஆகிபோச்சு.” அண்ணனுக்காக பரிந்து பேசினாள்.

“சரி சரி ஏங்கூட வாயளந்துகிட்டு நிக்காம அவன போய் எழுப்பு கண்ணு.”

“சரிங்க அப்பத்தா…” வீட்டின் முற்றத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த தன் அண்ணன் சிவகொழுந்தை எழுப்பினாள்.

“இன்னும் செத்த நேரம் டா குட்டிமா…” என கூறிவிட்டு திரும்பி படுத்தான்.

“எழுந்திரிங்க ண்ணா… இல்லைனா அப்பத்தா திட்டிட்டே இருக்கும்.” என்றதும்,

 எழுந்து உட்கார்ந்த சிவகொழுந்து தங்கையிடம் “வெரசா ஒரு டம்ளர் டீ கொண்டுவா டா குடிச்சிபோட்டு களத்துமேட்டுக்கு போவோணும்…” என்றான்.

“நான் கொண்டு வரேன் அதுக்குள்ள நீங்க பல் விளக்கிட்டு வாங்க.” என கூறிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

பல் விளக்கிவிட்டு முகத்தை துடைத்துக்கொண்டே வந்த அண்ணனிடம்  ‘டீ’ யை கொடுத்தாள்.

சிவகொழுந்து டீயை குடித்து முடித்ததும் தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு தனது வயலுக்கு சென்றான்.

தென்னந்தோப்பு, மாந்தோப்பு, வாழைத்தோப்பு ஒருபுறமும் விளைந்த நெற்கதிர் வயல்கள் ஒருபுறமும், மஞ்சள், கரும்பு, பருத்தி, சோளம்  அனைத்தும் காற்றில் அசைந்தாடும் அழகை பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக  மலைகொழுந்தார் வயல்கள் இருந்தன.

களத்துமேட்டில் தனது புல்லட்டை நிறுத்திவிட்டு தனது தந்தையிடம் சென்றான் சிவக்கொழுந்து.

மலைக்கொழுந்து வயலில் ஆட்களுடன் நெல் அறுப்பதை பார்த்து வேகமாக அவரிடம் சென்று “ஏனுங்கப்பா இதலா நீங்க செய்யறிங்க? அறுவால என்ரகிட்ட குடுங்க நான் அறுக்கறேன் நீங்க வயலவிட்டு மேலேறுங்க.” என்றவன் அவர் கையில் இருந்த அரிவாளை வாங்கி அறுக்க ஆரம்பித்தான்.

“உடந்தைபட்டவன் பாக்கலைனா பயிர் ஒரு முழம்கட்டைனு பழமொழியே இருக்கு கண்ணு. கரைல நிக்காம நாமலும் ஆளுங்களோட வயல்ல இறங்கி செஞ்சா அவங்களுக்கும் கொஞ்சம் வெரசா அறுத்துப்போட்டு வருவாங்கல அதான் நானும் அறுக்கறேன்.” என்றவர்,

  “ஏங்கண்ணு  இன்னும் கொஞ்சநேரம் தூங்கி எந்திரிச்சி  வந்துருக்கலாம்ல நேத்து ராத்திரி களத்துமேட்ல இருந்து வூட்டுக்கு வாரதுக்கே பாதிச்சாமம் ஆகிபோச்சு இப்பவும் வெள்ளனவே வயலுக்கு வந்துப்போட்ட…” என்றார்.

“இம்புட்டு வயசான நீங்களே உழைக்கும் போது நான் வூட்ல படுத்துருந்தா நல்லாவா இருக்கும்ங்கப்பா.” என்றான். இன்று இப்படி அப்பா மேல் இவ்வளவு மரியாதை வைத்திருப்பவன் பின்னாளில்  அவரிடம் பேசக்கூட பிடிக்காமல் அவரை வெறுத்து ஒதுக்குவான் என்பதை அறியாமல் போனான்.

 கதுரு அறுத்துக் கொண்டிருந்த ஒரு அப்பத்தா, “ஏய்யா சிவக்கொழுந்து காலேசு போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிபோட்டு வந்து இப்படி எங்களோட வெயில்ல காஞ்சி கெடக்கரையே ராசா…” என்றார்.

“ஏனுங்க அப்பத்தா எல்லாரும் வெளிய வேலைக்கு போயிட்டா ஆரு ஆத்தா விவசாயத்த பாக்கறது. வெளியூர்க்கு வேலைக்கு போனா கை நிறைய பணம் சம்பாதிக்கலாம் ஆனா மனநிம்மதி போயிடுமே ஆத்தா… இப்ப பாருங்க ஊருக்கே சோறுபோடற வேலை பாக்கறேனு ஒரு சந்தோசம் இருக்குல…”

“ஓ மனசுக்கு நீ நல்லாருக்கோனும் ராசா…”  என கன்னத்த வழித்து நெற்றிமுறித்தார்.

மகன்  பேசுவதை மனதில்  பூரிப்புடன் பாத்துக் கொண்டிருந்தார் மலைக்கொழுந்து பண்ணையார்.

“பொன்னி  மாரிமுத்தண்ணே வீட்டு பசுமாடு கன்னு போட முடியலையாம். நா அங்க போறேன்  நீ உன்ர அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சோத்த கொண்டு போய்க் குடுத்துடு.” என்றுவிட்டு கிளம்பிவிட்டார் அவளுடைய அம்மா.

பொன்னியும் அவளது தோழி ஆனந்தியும்  காலை சாப்பாட்டை தூக்குவாளியில் போட்டு எடுத்துக்கொண்டு வரப்பில் நடந்து வந்தார்கள்.

அவர்களை பார்த்த மலைக்கொழுந்து “ஏங்கண்ணு நீ வந்த? வூட்டல உன்ற ஆத்தா என்ன பண்றா அவ வரவேண்டியது தானே?” என்றார்.

“மாரிமுத்து அண்ணாவோட பசுமாடு கண்ணு போட முடியாம கிடக்குதுன்னு அம்மா அவங்க வூட்டுக்கு  மருத்துவம் பாக்க போயிருக்குங்கப்பா.”

“சரி கண்ணு… வெயில் நிக்காத போய் தென்னமரத்து நிழல்ல உட்கோரு. நானும் உன்ர அண்ணனும் இந்த வயல அறுத்து முடிச்சிபோட்டு வாரோம்.”

“ஏனுங் மாமா உங்களுக்கு உங்க மக மட்டும்தே கண்ணுக்கு தெரியுதுங்லா??? நாங்களும் இங்கனதே நிக்கறோம்.. எங்களுக்கும் வெயிலடிக்குது.. என்னமோ உங்க மக மட்டும்தே இளவரசி மாதிரி வெயில்ல நிக்காதனு சொல்றிங்க!!!” ஆனந்தி தன் மாமனிடம் வம்பிழுத்தாள்.

ஆனந்தியின் அம்மா மலைக்கொழுந்தார்க்கு சித்தப்பா மகள் ஆவார். கணவனை இழந்து தன் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டார். சிவக்கொழுத்துக்கு ஆனந்தி என சிறு வயதிலே பேசிவிட்டதால் ஆனந்தி தன் மாமனை உரிமையாகவே கலாய்ப்பாள்.

“இல்லை மருமகளே… என்ற மக இளவரசினா நீ என்ற வீட்டுக்கு வரப்போற மகாலஷ்மி மருமகளே!” என மருமகளை சமாதானப்படுத்தினார்.

“நீங்க தான் வாயிக்கு வாய் மருமகங்றிங்க… உங்க மகன்  நா வந்ததுல இருந்து என்ன நிமிந்துக்கூட பாக்கலையே மாமா?” என்றதும்,

பொன்னி “ஆனந்தி அப்பாகிட்ட போய் என்னடி பேசிட்டு இருக்க கம்முனு இருடி…” என கண்டித்தாள்.

“ம்க்கும்… உன்ர அண்ணன சொல்லிட்டா போதுமே வரிஞ்சி கட்டிட்டு வந்துருவியே…”

ஆனந்தி பேசுவதை கண்டுக்கொள்ளாமல் “அப்பா வாங்க சாப்டலாம்..” என்றாள்.

“நீ போ கண்ணு  வாரேன் அம்மணி..” என்றவர் சிறிது நேரம் கழித்து ஆட்களை சாப்ட போக சொல்லி விட்டு மகனுடன் வந்தவர் அங்கிருந்த பம்புசெட்டில் கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு சாப்பிட அமர்ந்தனர்.

பொன்னி இருவருக்கு தட்டில் சாதத்தை போட்டு குழம்பு ஊத்தி குடுத்தாள்.

மலைக்கொழுந்தார் சாப்பாட்டை பினைந்து முதல் உருண்டையை பொன்னிக்கு ஊட்டிவிட்டாரு. அதேபோல் சிவக்கொழுந்தும் தனது சாப்பாட்டையும் பொன்னிக்கு ஊட்டிவிட்டான்.

அவர்களுக்கு அருகில் தன் தாயுடன் உட்கார்ந்திருந்த ஆனந்தி, “பேத்திக்கு ஊட்ட வேண்டிய வயசுல மகளுக்கு ஊட்டிகிட்டு இருக்கிங்ளே மாமா?” என மீண்டும் கலாய்த்தாள்.

“பேத்தி வந்தாலும் முதல் உருண்டை என்ர மகளுக்கு தான் மருமகளே…” என்றார். பின்னாலில் இவரே   “இனி என்ர கண்முன்னாடி வந்துடாத…” என கூறி மகளை வீட்டை விட்டு அனுப்பி வைப்பார் என்பது தெரியாமல் போனார்.

“அதையும் பாக்கத்தானே போறோம் மாமா…”

“ம்ம் பாரு மருமகளே.. .” என்றவர் “மருமகளே என்ன குழம்பு வாசம் இங்கன வரைலும் மணக்குது?” என்று கேட்டார்.

“நெத்திலி கருவாட்டுக் குழம்புங்க மாமா…”

“மாமனுக்கு கருவாட்டுக் குழம்பு இல்லையா மருமகளே?”

“உங்களுக்கு இல்லாமைங்ளா மாமா…  இந்தாங் மாமா சாப்புட்போட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க…” என குழம்பை மாமனுக்கும் மாமன் மகனுக்கும் ஊற்றினாள்.

சாப்பிட்ட மலைக்கொழுந்தார் “அப்படியே உன்ர அப்பத்தா கைமனம் மருமகளே…” என்றார்.

“ஏனுங் மாமா நீங்க தான் நல்லாருக்குனு சொல்றிங்க… உங்க மகன் ஒரு வார்த்தையும் சொல்லலையே?” என்றவள்,

சிவக்கொழுந்துவிடம் “அத்தான் குழம்பு எப்படி இருக்கு?” என்றாள்.

“ம்ம்.. நல்லாருக்கு.” அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் சாப்பிட்டு கொண்டே பதில் கூறினான்.

“அய்யோடா… என்ற அத்தான் வாயில இருந்து முத்து உதிர்ந்துருச்சு…” அவள் கலாய்த்ததும்,

பொன்னி “ஏன்டி என்ற அண்ணன்கிட்ட ஒரண்ட இழுக்கலைனா உனக்கு பொழுது போகாதா???” என்றாள்.

“ம்க்கும் உன்ர அண்ணன ஒரண்ட இழுக்கறத தவிர எங்களுக்கு வேற வேலை இல்லை பாரு!”

சாப்பிட்டு முடித்ததும் “கண்ணு நீ  வூட்டுக்கு போ…” என்றார் மலைக்கொழுந்து.

“சரிங்கப்பா…” என்றவள்,

 “ஏ வாடி போலாம்.” என்றவாறே ஆனந்தியுடன் கிளம்பினாள்.

“பொன்னி மாந்தோப்புக்கு போயிட்டு போலாம்டி.” ஆனந்தி கேட்டதும்

“சரி…”  பொன்னியும் ஒத்துக்கொண்டதும் இருவரும்  பேசிக்கொண்டே சென்றனர்.

மாந்தோப்பு வந்ததும் தூக்குபோசியை வைத்துவிட்டு கீழே கிடந்த கல்லை எடுத்து குறிபார்த்து மாங்காயை அடித்தாள் ஆனந்தி.

கீழே விழுந்த மாங்காயை எடுத்து துடைத்து அங்கிருந்த கல்லில் உடைத்து பொன்னியிடம் ஒரு துண்டை குடுத்துவிட்டு தானும் சாப்பிட்டவள் “மரத்துல இருந்து முத்துன காயாபாத்து  பறிச்சி சாப்டறதே ஒரு தனிசுகம்ல பொன்னி…” என்றவள்,

தான் சொல்வதை கவனிக்காமல்  பொன்னி வேறு யோசனையில் இருப்பதை பார்த்து விட்டு பொன்னி யின் தலையின் “நங்..” என கொட்டினாள்..

“ஆ..ஆ..”  தலையை தேய்த்துக்கொண்டே “ஏன்டி எருமை கொட்டுன?” கோபமாக கேட்டாள்.

“அம்மணி எந்தக் கோட்டைய பிடிக்கற மாதிரி கனவு கண்டுகிட்டு இருந்திங்க?”

“எந்தக் கோட்டையையும் பிடிக்க போகலை… நீ பேசாம வா வெரசா வூட்டுக்கு போவோம்…”

“எதோ இருக்கு… ஆனா எங்கிட்ட சொல்லாம மறைக்குறடி.”

“அப்படிலாம் ஒன்னும் இல்லை ஆனந்தி…”

“மாமா உனக்கு கண்ணாலம் பண்ண மாப்பிள்ளை பாக்கறத எல்லாம் எதாவது ஒரு நொட்டை சொல்லி தட்டிக் கழிச்சிட்டு இருக்கையாம். அத்தை நேத்து வூட்ல வந்து பொலம்பிகிட்டு இருந்துச்சு… இன்னுமா அவன நீ மறக்கல?”

“எப்படி ஆனந்தி மறக்கறது… சின்னவயசுல இருந்தே மனசுல ஆழமா பதிச்சிவச்சத திடீர்னு மறந்துருனு சொன்னா எப்படி முடியும். அப்படி நா மறந்து தான் ஆகனும்னா அதுக்கு நா உசுர விடனும்.” என கலங்கிய குரலில் கூறினாள்.

“என்ன டி லூசு மாதிரி பேசற? செவுள்ல ஒன்னு விட்டேனா  பல்லு அத்தனையும் கொட்டி போயிடும். சாகராலாம் நீ செத்துட்டா மாமாவும் அத்தையும் நிம்மதியா இருந்துருவாங்ளா???”

“வேற என்ன டி பண்ண சொல்ற மனசுல ஒருத்தன வச்சிப்போட்டு இன்னொருத்தன கட்டிகிட்டு அவனுக்கு துரோகம் பண்ண சொல்றியா?”

“நா அப்படி சொல்லல பொன்னி…” இருவரும் பேசிக்கொண்டே ஊருக்குள் வந்தனர்.

“ஆனந்தி! நீ ஊட்டுக்கு போ… நா அப்பறமா வாரேன்…” அவள் கூறியதும்,

ஆனந்தி “நீ எங்க போறேனு எனக்கு தெரியும். நானும் உங்கூட வாரேன் வா…”

அந்த கிராமத்தில் மலைக்கொழுந்தார்க்கு இணையாக வசதி படைத்த இன்னொரு வீடு என்றால் அது மலைக்கொழுந்தாரின் தங்கை வீடு.

பொன்னி சிறு வயதாக இருக்கும்போதே அத்தையும் அத்தை கணவரும் இறந்து விட அவருடைய பங்காளிகள் சொத்துக்காக அண்ணனின் மகனை தங்களுடையே வைத்துக்கொண்டனர்.

மலைக்கொழுந்தார்க்கு தங்கை மகனை அவர்களுடன் விட மனமில்லாமல் ஊர் பஞ்சாயத்தில் மருமகனை தன்னுடன் அனுப்ப கூறி கேட்டார்.

ஊரார் முன்னிலையில் அவர்  சொத்துக்காக தான் எங்க அண்ணன் மகனை கூட்டி செல்ல ஆசைபடுகிறார் என அசிங்கபடுத்தி விடவும் அப்பிரச்சனை இரு சாரரும் அடி தடி வரை சென்று விட்டது. அதிலிருந்து மலைக்கொழுந்தார் அவர்களுடைய உறவையே முறித்துக்கொண்டார்.

அவர்கள் உள்ளே வரும்போதே செல்லப்பன் வெளியில் செல்வதற்காக கிளம்பி வந்தார்.

“என்ன மருமகளே! இன்னைக்கு தான் இந்த மாமன் வூடு உனக்கு நியாபகம் வந்ததா???”

பொன்னி மெதுவாக “எனக்கு நியாபகம் இருக்கு உங்களுக்குத்தான் இது அண்ணன் வூடுங்றது மறந்துபோய் உங்களோட தா தோண ஆரம்பிச்சி ரொம்ப காலம் ஆகுது.” என முனுமுனுத்தாள்.

“என்ன மருமகளே சொல்றது ஒன்னும் வெளங்களையே…”

‘உங்களுக்கு என்னைக்கு வெளங்கிருக்கு இன்னைக்கு வெளங்கறதுக்கு’ என மனதில் நினைத்துக்கொண்டு “அத்தை எங்கனு கேட்டேனுங்க மாமா…” என்றாள்.

“உன்ர அத்தை அடுப்பங்கறைல தான் மகனுக்கு புடிச்ச சோளப்பனியாரம் சுட்டுட்டு இருக்கா… நீ போய் சாப்புட்போட்டு என்ர மாப்பிள்ளைக்கும் கொண்டுபோய் குடு மருமகளே.” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் ஆனந்தி “ஏன்டி பொன்னி உன்ர மாமனுக்கு உம்மேல அம்புட்டு பாசமா?” என்று கேட்டாள்.

“அடி போ டி நீ வேற… அந்தாளுக்கு ஏம்மேல எந்த பாசமும் இல்லை… எல்லாம் என்ர அப்பாகிட்ட இருக்கு சொத்துமேல தான் ஆசை. அத அடையறதுக்கு தான் என்னை அந்தாளு மகனுக்கு கட்டிவைக்க துடிக்கறாரு…”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த செல்லப்பனின் மகன் மாரியப்பன் இருவரையும் பார்த்து  வழிந்தவாறே  “ஏனுங்க அம்மணி எப்படி இருக்க? எங்க வூட்டுபக்கமே ஆளக்காணாம்?” என கேட்டான்.

மாரியப்பன் பெற்றோர்களுக்கு ஒரேவாரிசு. அதுவும் ஆண்பிள்ளை என்பதால் அளவுக்கு அதிகமாக செல்லங்குடுத்து வளர்த்ததால் உதவாக்கரையாகி மது, மாது, சூது அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தான். அவனின் இந்த தீய பழகங்களால் அவனுக்கு வெளிய யாரும் பெண்குடுக்க முன்வராததால் செல்லப்பன் இந்த வூரில் தன்னைவிட செல்வாக்கு மிக்க மலைக்கொழுந்தாரின் மகள் பொன்னியரசியை கட்டி வைத்து விட்டால் சொத்துக்கு சொத்தும் வரும் என்ற மகனுக்கும் குடும்பமும் ஆயிடும் என கனவுகோட்டை கட்டிக்கொண்டிருகிறார்.

“ம்ம்… நீ இருப்பனுதா வரல…” என முகத்தில் அடித்தால் போல் பதில் குடுத்தாள்.

ஆனால் அதில் துளியும் பாதிக்கப்படாதவனாக சிரித்துக் கொண்டே “எப்பப்பாரு அம்மணிக்கு லொள்ளுதான்.” என்றான்.

“லொள்ளும் இல்லை கொள்ளும் இல்லை மொத வழிய விடு…” என கோபமாக கூறிவிட்டு அவனை தாண்டி சென்றாள்.

“போ போ எங்க போயிடப்போற என்னைக்கு இருந்தாலும் இந்த மாமன்கிட்டதா வந்தாகனும் அப்ப வச்சிக்குறேன்டி…” என மெல்ல முனகினான்.

வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டுதொழுவத்திற்கு சென்றனர். அங்கு அந்த கொட்டகையின் ஓரத்தில்  குண்டாவில் உள்ள பழையசோற்றை அள்ளி சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை பார்த்தும் கண்கள் கலங்கியவாறு நின்றுவிட்டாள்.

Advertisement