பெய்ஜ் கலர் சீனோஸ் பாண்ட், காலரில்லாத வெளிர் நீல சட்டையும், மேலே கரு  நீல ப்ளேசரும், காலில் காஷுவல் ப்ரௌன் ஷூஸ் அணிந்து படு ஸ்டைலாக இருந்தான் வினோத். அதற்கான அவன் எந்த ஒரு மெனக்கெடலும் செய்யவில்லை என்பதால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.  ஒரு விழாவிற்கு செல்லும் தோற்றம். இவந்தான் விழா நாயகன் என்று எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் அவனது ஆளுமையான தோற்றமே அவனை நாயகனாகக் காண்பித்தது.
ஒரு கரும் பச்சை, கோல்ட் காம்பினேஷனில், ரோஜாப்பூக்கள் நெய்த டஷர் பனாரசி பட்டுப்புடவையில், மிதமாக ஒப்பனையில் மிளிர்ந்தாள் வானதி. அலை அலையாக முதுகில் பரவியிருந்தது அவள் கூந்தல். அப்படி அலையை தருவிக்க ஒரு மணி நேரமானது என்பது அதைப் பற்றிய நுண்ணறிவு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும். வினோத்திற்கு தெரியவில்லை. பச்சை மரகதமும் வைரமும் சேர்ந்த மெல்லிய ஆபரணம் கை, கழுத்து, காது என்று நிறைந்திருந்தது. அந்த மஞ்சள் விளக்கொளியில் நான் உயர்சாதிக் கல்லாக்கும் என்று அனைத்தும் பளபளத்து பறைசாற்றிக்கொண்டிருந்தது.
இருவர் கழுத்திலும் மாலைகள் இல்லை. அப்படியே அறையை வலம் வந்து அறிந்தவர் தெரிந்தவர்களிடம் பேசிக்கொண்டும் , அறிமுகப் படுத்திக்கொண்டும் இருந்தனர்.  முயன்று அவன் இவள் பக்கத்து சொந்தங்களிடம் பேசுவது அவளுக்கும் புரிந்தது. தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பெற்றவர்களின் முகமே அவர்களது நிம்மதியை வானதிக்கு காட்டியது.
கிடைத்த ஒரு சில நிமிட தனிமையில், “ தாங்க்ஸ்… கொஞ்சம் நீங்க இலகுவா இருக்கவும், அப்பா, அண்ணா எல்லாருமே கொஞ்சம் ஹாப்பியா இருக்காங்க. “, என்று கூறினாள்.
“நீ எங்க அம்மாகிட்டயும் எங்க சொந்தங்ககிட்டயும் நல்லா பழகறதை பார்த்தேன். என் மேல இருந்த வருத்தத்தை  நீ அவங்க கிட்ட காட்டலை. அதுவே எனக்கு பாடமாத்தான் இருந்தது. என்னால ஆன ப்ராயசித்தம்.”, உதடு துறுத்தி தோளைக் குலுக்கினான் ஒரு அரை சிரிப்போடு.
“டேய்… கங்க்ராட்ஸ்டா…. வந்தவங்களை கவனிக்காம நீயென்ன தனியா பேசிகிட்டு இருக்க ?”, தோளைத் தட்டி ஆர்பாட்டமாக கட்டிப் பிடித்தான் சங்கர்.
“ஹே… வாடா மச்சான்…. “, மலர்ந்த புன்னகையோடு கட்டிப் பிடித்த வினோத், அவன் பின்னே அமைதியான புன்னகையுடன், நாங்கு வயது மகளோடு நிற்கும் சங்கரின் மனைவியையும் வரவேற்று, “புனிதா… நல்லாருக்கியாமா ? ஹாய் தங்கம்…”, என்று குழந்தையின் கன்னத்தை தட்டினான்.
வானதியின்புறம் திரும்பி, “என் ஃப்ரெண்ட் கௌரிசங்கர். அவன் மனைவி புனிதா.”, என்று அறிமுகப் படுத்த,
“ம்ம்…  பார்த்திருக்கேன் ஒன்னு ரெண்டு வாட்டி…. பேர்தான் தெரியலை. உங்க கூடவே இன்னும் இரண்டு ஃப்ரெண்டு இருப்பாங்களே….”, வானதி நெற்றி சுருக்கவும்,
“ஆமா… கௌதம் வந்துகிட்டு இருக்கான். சாம் ஆபிஸ் விஷயமா டெல்லில இருக்கான், வர முடியலை. பரவாயில்லையே… ஞாபகம் வெச்சிருக்கியேமா..”, சங்கர் ஆச்சரியமாக கேட்டான்.
“ஸ்வேதா கல்யாணத்துல என்ன அட்டகாசம் பண்ணீங்கண்ணா நீங்கல்லாம். “, புன்னகையோடு வானதி கேட்கவும், சங்கர் கண் விரிய ஒரு திகைத்த பார்வை பார்த்தான் வினோத்தை. நண்பர்கள் எப்போதேனும் ஒன்று சேரும் போது, ஸ்வேதா டாபிக்கே வராமல் பார்த்துக்கொள்வார்கள். இவள் என்னடாவென்றால் அசராமல் பேசுகிறாள்.
கண்கள் சற்று மங்கினாலும், சங்கரின் தோளணைத்தவன், வானதியின் கவனம் புனிதா, குழந்தை மேலிருக்கும் நேரம், “ எனக்கு மனைவின்னா ஸ்வேதா அவளுக்கு பெஸ்ட் ஃப்ரெண்டுடா…. “,என கூறவும், தலையை நாலா பக்கமும் ஆட்டி வைத்தான் சங்கர்.
“அண்ணா… நீங்க பக்கத்து பார்ட்டி ஹாலுக்கு போங்க. அங்கதான் டி.ஜே இருக்கார். பாட்டு, டான்ஸ் களை கட்டும். இங்க வர வேண்டியவங்க எல்லாரும் வந்தாச்சுன்னா, நாங்களும் அங்கே வரோம்.”, என்று வானதி அனுப்பிவைத்தாள்.
மேலும் அரை மணி நேரம் இருந்தவர்கள், பார்ட்டி ரூமிற்கு செல்ல, பாட்டு பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. நண்பர்கள், கசின்ஸ் என இளவட்டங்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
“எங்க காலேஜ் ஃப்ரெஷ்சர்ஸ் பார்ட்டியே தோத்துடும் போலவே… “, என்று ஆச்சரியப் பட்டான் வினோத்.
 “ மச்சான்…உனக்காகத்தான் வெயிட்டிங்…. வா வா…”, வினோத்தின் நண்பர்கள் சங்கரும் , கௌதமும் ஓடி வந்து அவனை இழுத்துக்கொண்டு போனார்கள். டி.ஜே சட்டென்று பாட்டை மாற்றினார்.
“மச்சி… நம்ம காலேஜ்ல கல்சரல்ல ஆடினோமே… அதே ஸ்டெப்பு …ஆடலாம் வா….”, என்று முடிக்கவும் ….”அட்ராட்ரா நாக்க முக்க…”, பாட்டு அதிர்ந்தது.
கவலைகளற்ற இனிமையான கல்லூரிக் காலம் ஞாபகம் வரவும்…. உள்ளுக்குள் குதூகலம் பிறக்க, மூவரும் ஆட…அவர்களுக்கு இடம் விட்டு எல்லோரும் கைதட்டி உற்சாகப் படுத்தினார்கள்.  மற்ற இருவரும் மூச்சு வாங்க விலகிவிட்டாலும், அத்தனை வேகத்துக்கும் கடைசி வரை ஈடு கொடுத்து இறங்கிக் குத்தியது வினோத் மட்டுமே. பார்த்துக்கொண்டிருந்த வானதிக்கு ஆச்சரியம். ‘ஓஹ்… குத்து டான்ஸ் எல்லாம் ஆடுவாரா?’,  ஸ்வேதா கல்யாணத்தில் ஆடியது நளினமான   நடனம் , அதுவும் அவளோடு மட்டுமே சேர்ந்த ஆடிய டூயட் பாடல்கள்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவளது கல்லூரித் தோழிகள், “ ஹே… என்ன அவங்கதான் ஆடுவாங்களா…. நீ வா வானதி… நம்ம காலேஜ்ல கூடத்தான் நாம ஆடினோம்…”, டி.ஜே அடுத்த பாட்டை மணமகளுக்காக என்று அறிவித்து பாடல் இசை ஒலிக்கவும்……”ஓஹ்”, என்ற சத்தத்துடன் வானதியின் கல்லூரிக் கூட்டம் அவளை சூழ்ந்தது.
“மஞ்சனத்தி மரத்துகட்ட…” சில்லாக்ஸ் பாட்டு அதிரவும்… அவளும் ஆட ஆரம்பித்தாள்.  ஸ்வேதாவும், ராஜீவும் அன்று ஆடினார்கள், இவள் மற்ற தோழிகளுடன் க்ரூப்பில் இருப்பாள். ராஜீவ் இன்று லாவகமாக அவளை சுற்றி வந்து ஆடுவது போலவும்..தோழிகள் மத்தியில் அவள் ஆடுவதுமாக மாற்றவும், அதுவும் கைத்தட்டல்களை அள்ளியது.
வாசு உள்ளே வரவும், அவர்களது மகிழ்ச்சி அவனுக்கும் உற்சாகத்தை தந்தது. அவனின் வயதொத்த கசின்ஸ் இழுத்து வந்திருந்தார்கள் அவனை. வானதியின் பாட்டு முடிந்ததும், அவள் வினோத்தின்புறம் செல்ல… “செம்ம…”, என்று கைதட்டியபடியே பாராட்டினான். வியர்த்திருந்ததில், கோட்டைக் கழட்டி கையில் வைத்திருக்க, காற்றுக்கு இரண்டு பொத்தாங்களும் அவிழ்ந்திருந்தது. கேசம் சற்றே கலைந்து, ஆட்டம் அளித்த பூரிப்பில் கன்னம் சற்றே சிவந்து, கண்ணில் பழைய உற்சாகம் தெரிய, ஒரு நொடி விழி விரித்துப் பார்த்தவள், ‘இது…இதைத்தான் கொண்டு வரணும் அவர்கிட்ட….”, என்று நினைத்துக்கொண்டாள்.
அதற்குள், “மன்மத ராசா…”, ஒலிக்க, திரும்பிய வினோத் கண்ணில் பட்டது வாசுவும் இன்னும் சிலரும் ஆடுவதுதான்.
“அட… அண்ணா…”, வானதி கைதட்டி ஆர்பரித்தாள்.
“வா மச்சான்…”, சங்கர் வினோத்தை இழுத்து விட… சில நொடிகள் வாசுவும் வினோத்தும் இணைந்து ஆடினார்கள்.
“சாப்பிட கூட்டிட்டு போக வந்தேன்… உங்களைப் பார்த்து நானும் ஆடிகிட்டு இருக்கேன்.  வாங்க வினோத்…”, புன்னகையோடே வாசு அழைக்க, பேசுவது கேட்கவில்லை என்றாலும் வானதியின் முகத்திலும் ஒரு நிறைவான புன்னகை.
உணவுக்கு இடைவெளி என்று அறிவிக்கவும், எல்லோருமே பஃபேக்கு படையெடுக்க, வானதி அவன் நண்பர்கள் உடனிருக்குமாறு பார்த்துக்கொண்டாள்.
“அவசியம் இரண்டு பேரும் வீட்டுக்கு வரணும் தங்கச்சி… டேய் …கூட்டிட்டு வா. சாம், கௌதம் ஃபாமிலி, எல்லாருமா சேர்ந்து ஒரு லன்ச் நம்ம வீட்ல…  சரியா”, சங்கர் கேட்கவும், அவளைத்தான் பார்த்தான் வினோத்.
“கண்டிப்பாண்ணா… நீங்க எல்லார் வசதியையும் கேட்டுட்டு சொல்லுங்க…எப்பன்னாலும் ஓக்கேதான்.”, உற்சாகமாக பேசியவளின் பதிலைக் கண்டு, சங்கருக்கும், கௌதமிற்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு.
ஸ்வேதாவை திருமணம் செய்த பின், வினோத்தை முன்போல இவர்களிடம் அவ்வளவாக பழகவிடவில்லை அவள்.  கல்யாண விருந்தே கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு அப்பறம்தான் வர ஒத்துக்கொண்டாள், வந்தும் ஒரு ஒட்டாத் தன்மையோடே இருந்தாள். வானதி அதுபோலில்லாது, அலட்டாமல் பழகுவதே இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“இனியாவது, வினோத்துக்கு நல்ல வாழ்க்கை அமையணும் மச்சான். வானதி நல்ல டைப்பா இருக்கு. நல்லா பழகுதுடா…”, சங்கர் கௌதமிடம் கூற,
“டேய்…. அவன் காதுல விழப்போகுதுடா… அடக்கி வாசி. ரொம்ப நாள் கழிச்சு காலேஜ்ல பார்த்த வினோத்த இன்னிக்கு பார்த்தேண்டா… இது நிலைக்கணும்.”, கௌதம் பதிலுக்கு முணுமுணுத்தான்.
அந்தப் பக்கம், வாசு புது மண ஜோடியிடம் வந்தவன், “ வனுமா.. உன் ரூமும் காலி செஞ்சிடலாம்தான ? ரூமை ரிட்டர்ன் செஞ்சிட்டா, உன்னை உங்க வீட்ல விட்டுட்டு நாங்க கிளம்புவோம்.”, என்று கேட்டான்.
“ம்ம்… அண்ணா… என் ஒரு ரூம் இருக்கட்டுமே. நாங்க இங்கயே இருந்துட்டு, நாளைக்கு வரோம். எப்படியும் நாளைக்கு காலை வரைக்கும் இருக்குதான ? மத்த ரெண்டு ரூம்  குடுத்துடுங்க.”, வினோத்தின் புறம் பாராது வாசுவிடம் கூறினாள்.
“ஓஹ்.. அப்படியா?  சரிம்மா… அது மாதிரியே செஞ்சிடலாம். வினோத், உங்க திங்க்ஸ் வானதி ரூம்ல வெச்சிட சொல்றேன். கூட யாரும் அனுப்புங்களேன். ஷிஃப்ட் செய்ய…”, அவளிடம் ஆரம்பித்து வினோத்திடம் முடித்தான்.
இந்த திடீர் ப்ளானைக் கேட்டு முழித்த வினோத்… “சரி… சங்கரை கூட்டிட்டு போங்க. எல்லாம் பாக் பண்ணித்தான் இருக்கும். “, சங்கரை வாசுவுடன் அனுப்பி வைத்தவன், “ ஒன்னும் எங்கிட்ட சொல்ல மாட்டியா? நீயே ப்ளான் பண்ற?”, வானதியைப் பார்த்து மெங்குரலில் கடிக்கவும்,
“சாரி… இன்னிக்கு வீட்டுக்கு போறதைவிட இது பெட்டரா தோணுச்சு. கண்காணிக்க ஆள் இருக்காது…. இப்ப அண்ணா கேட்கவும்தான் எனக்குமே பட்டுது. இல்லைன்னா முன்னாடியே கேட்டிருப்பேன். ஏன் வேணாமா? சொல்லுங்க, உங்க வீட்டுக்கே போறதுனாலும் போலாம்.”
“இல்லை… ஐடியா நல்லாத்தான் இருக்கு. அம்மாகிட்ட சொல்லணும் அவங்களை பத்திரமா அனுப்பணும். அது மட்டும்தான்.”, அவள் முடிவின் சிறப்பை உணர்ந்து வினோத்தும் தலையசைக்க, அதற்கான பொறுப்பையும் வானதியே ஏற்றுக்கொண்டாள்.
ஒரு வழியாக எல்லோரையும் அனுப்பி, இவர்கள் அறையை அடைய நள்ளிரவு ஆனது. உள்ளே முதலில் நுழைந்த வானதி, “அடக் கொடுமையே…”, என்று சொல்லவும், பின்னே வந்த வினோத்தும்…” எந்த லூசு பண்ண வேலையிது…?”, என்று எகிறினான்.
ஒன்றுமில்லை…  படுக்கையில், ரோஜா இதழ்களால் இதயம் போல் வடிவம் செய்யப்பட்டு, அதில் ஒரு அம்பு வேறு துளைத்திருந்தது. தலையணை மேல் இரண்டு சாக்லேட் பார்கள். பக்கத்து சைட் டேபிளில், வாசனை மெழுகுவர்த்தி நறுமணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது !