“எல்லாம் என்னைக் கேட்டு செய்யறேன்னு சொன்னியே… ஸ்வேதா அப்பா அம்மாவை இன்வைட் செய்ததை ஏன் சொல்லலை ? “, மெங்குரலானாலும் சீற்றம் குறையாதிருந்தது.
அவன் சீற்றத்தை அசராது பார்த்தவள், “அவங்க கிளம்பறதுக்குள்ள தெரியும்.”, என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர, பொங்கி வந்த எரிச்சலுடன் அவனும்  நடந்தான். 
அவர்கள் வருவதைப் புகைப்படம் எடுக்க எதிர் புறம் காமிராவுடன் வந்த போட்டோகிராபர், “சார், மேடம், சிரிச்ச படியே ஒரு போஸ்.  கோவில் கோபுரத்தோட பாக்கிரவுண்டல…”
“ போய், வந்தவங்களை போட்டோ எடுங்க. இங்க வந்து நொச்சு பண்ணாதீங்க. போங்க.”, என்று சீறினான்.
போடோகிராபர் முகம் போன போக்கைப் பார்த்து ஒரு புறம் சிரிப்பு வந்தாலும், ஸ்வேதாவுடன் சிரிப்பும் சந்தோஷமுமாக கல்யாணத்தன்றும், மாலை வரவேற்பின் முன்னரும் கிட்டதட்ட ஒரு மணி நேரம் விதவிதமாக புகைப்படம் எடுக்க அவன் போஸ் கொடுத்த காட்சிகள் வானதிக்கு கண்முன் ஓடியது.
எதையும் முகத்தில் காட்டாது கொடி கம்பத்தினருகே வந்து சேர்ந்த இருவரையும் ஆசீர்வாதப் படலமும், உறவினருடன் போட்டோவும் சூழ்ந்து கொண்டது.
இந்த முறை உஷாராக சிரிக்கச் சொல்லவில்லை அந்த போட்டோகிராபர். “அய்யோ பாவம் இந்த பொண்ணு.”, என்று அவள் மேல் ஒரு பரிதாபப் பார்வை பார்த்தவர், மட மடவென்று தன் வேலைகளை முடித்துக்கொண்டார்.
அவள் கையிலிருந்த மெட்டி பெட்டியை அவள் அண்ணி லக்ஷ்மி வாங்கும் போதுதான் ஞாபகமே வந்தது வானதிக்கு. “ஓ… நான் மறந்துட்டேன் அண்ணி. வீட்ல வெச்சு போட்டுக்கலாம். எங்கிட்டவே இருக்கட்டும்.”, என்று அதை தன்னிடமே வைத்துக்கொண்டாள்.
லக்ஷ்மி அவளை பார்த்து விழிப்பதைப் புறக்கணித்து, அவர்களிடம் சொல்லிக்கொள்ள வந்த விருந்தினர்களின் புறம் கவனத்தைத் திருப்பினாள்.
அவர்கள் பக்கத்து முக்கிய உறவுகளை நாராயணன் வந்து அறிமுகப்படுத்த, ஒரு கைகுலுக்கல், லேசான் தலையசைப்பு, இருக்கிறதா என்று தெரியாதபடியாக ஒரு புன்னகை என்ற வகையில் வந்திடாத உதடு நீட்டிப்பு. அந்த உடல் மொழியே அடுத்தவரை எந்த ஒரு பேச்சும் பேசாது தடுத்திட, “சாப்பிட போங்க “, “வந்ததுல ரொம்ப சந்தோஷம்.”, என்று வானதி சொல்லி விடை தரும்படியானது.
அவன் புற உறவுகள் வந்தபோதும் அதே கதைதான். பாரபட்சமில்லாமல் இருந்தான். அவர்களாக வானதியிடம் அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.அப்படி செய்யாதவர்களை வினோத் அறிமுகப்படுத்த முன்வரவில்லை.
கூட்டம் கலையும் நேரம், ஸ்வேதாவின் பெற்றோர் அருகே வந்தனர். ஸ்வேதாவின் தந்தை வினோத்தின் கைபிடித்து, “ ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. அவ போன துக்கம் கூட பழகிருச்சு, ஆனா அவளை நினைச்சு நீங்க ஒத்தையில் நிக்கறதைப் பார்த்து நாங்க வருந்தாத நாளே இல்லை. இன்னிக்குத்தான் அந்த பாரம் இறங்கியிருக்கு.”, என்று சொல்லும்போதே கரகரத்தது. ஸ்வேதாவின் தாயோ “வானதியை நீங்க கல்யாணம் செய்யப்போறதை கேட்டதும் எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. ஸ்வேதாவிட தங்கமான பொண்ணு. பத்து வயசில வானதியை கைபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, ‘மா… என் பெஸ்ட் ப்ரெண்ட் மான்னு’ இவளைக் காட்டினது நல்லா ஞாபகமிருக்கு. அப்பவே அமைதி, நல்ல குணம். சந்திராம்மான்னு பாசம் என் மேல. சீரும் சிறப்புமா வாழணும் நீங்க. ஸ்வேதாவே இன்னிக்கு சந்தோஷப்படுவா.”, கண்ணில் நீர் சுரக்க அவர் வாழ்த்தவும், “சந்த்ராம்மா…. அழக்கூடாது. அவர் என்னிக்கும் உங்க மாப்பிள்ளைதான். என்னால முடிஞ்ச அளவு நல்லா பார்த்துக்கறேன்.”, என்று வானதி கட்டிப் பிடித்து அவருக்கு ஆறுதல் சொல்லவும், சிரித்துக் கொண்டே கண்ணை துடைத்தவர், “ என் கூட விளையாட சீக்கிரம் ஒரு பேரனோ, பேத்தியோ குடுடா…”, என்று வானதியின் தலை வருடினார்.
கலவையான ஒரு உணர்வுடன் நின்றிருந்தான் வினோத். ஸ்வேதாவின் பெற்றோர் தன்னை கீழாக பார்ப்பார்கள் என்று நினைத்திருக்க, அவர்களும் அவன் அன்னையைப் போலவே அவன் தனிமையைப் பார்த்து தவித்திருக்கிறார்கள் என்பதே மலைப்பாக இருந்தது. இது தெரியாமல், திருமண சடங்கில் தன் கோபத்தைக் காட்டி வானதியை தண்டித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியது. மூஞ்சியை தூக்கி வெச்சிகிட்டு சுத்தப் போறாளோ என்று யோசிக்கையில், அவர்கள் குழந்தை பற்றி பேசியது காதில் விழ மேலும் சங்கடமாகியது. பிஞ்சு மகன் வம்சி ஞாபகத்தில் வந்தான்.
அவன் முகம் வாடுவதைப் பார்த்ததுமே சுதாரித்த வானதி, “நடக்கும் போது நடக்கும் சந்திராம்மா. இப்ப வாங்க போய் சாப்பிடலாம். ஸ்வேதாப்பா  சுகர் மாத்திரை போடணுமே, எடுத்துகிட்டு வந்தீங்களா?”, என்று விசாரித்தபடியே நகர்ந்தாள்.
மதிய சாப்பாடு பதினோரு மணிக்கெல்லாம் அந்த உயர்தர சைவ உணவகத்தில் குளிரூட்டப்பட்ட ப்ரத்யேகத் தனி அறையில் இவர்களுக்காகக் காத்திருந்தது. உணவு முடிந்து பெண் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அழகிய வேலைப்பாடுடன் இருந்த கல்யாணப் பையில் ஒரு வெள்ளி குங்குமச் சிமிழுடன் தேங்காய் பழம் என்று சிறப்பான வழியனுப்புதலுடன், வந்த விருந்தினர்கள் விடை பெற்றிருந்தனர்.
வானதிக்கும் வினோதிற்கும் இடையில் பெரிதாக ஒன்றும் பேச்சு வார்த்தை இல்லை. யாருடனுமே அவன் அதிகம் பேசவில்லை. அவன் சித்தப்பா, வாசு, நாராயணன் என்று இவர்கள் மூவருமே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்கள்.
ஒரு வழியாக பெண் வீட்டிற்கு வாசு, லக்ஷ்மியுடன் மணமக்களும் ஒரு காரில் வர, அப்போதும் அமைதிதான். வாசு பேச முற்பட்டாலும்,  ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பதிலாக வந்தது. வானதிதான் இடைப்பட்ட மௌனங்களை நிரப்ப வேண்டியிருந்தது.
ஆலம் சுற்றி மணமக்களை உள்ளே அழைத்தார் பார்வதி. வரவேற்பரையில் அமர்ந்த வினோத்திற்கு இந்த சூழலே அசௌகரியமாக இருந்தது. லக்ஷ்மியின் தாயார், “ பொண்ணு பிள்ளைக்கு பாலும் பழமும் தரணுமே லக்ஷ்மி. பால் காய்ச்சவா ?”, என்று கேட்க,
“மா… அதெல்லாம் பழசு. எல்லா பழமும் சேர்த்து, பால், கஸ்டர்ட் போட்டு ஃப்ரூட் சாலட் நேத்தே ரெடி பண்ணிட்டா வானதி. இப்ப அதுதான் ஸ்டைலு.”,  லக்ஷ்மி சொன்னதை கண்டு கொள்ளாமல், வானதியே  இரண்டு ஐஸ்க்ரீம் கிண்ணங்களில் சிறிதளவு  சாலட்டை போட்டு, முள்கரண்டியோடு ட்ரேவில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றாள்.
“இதென்னடி எல்லாம் புதுசா இருக்கு. தாலி என்னடான்னா செயின் மாறி கழுத்துல போட்டாங்க, மெட்டி போட்டுக்கல… “, என்று அந்தம்மா வாய் பிளக்க, “ஷ்… இரண்டாம் தாரம்தான, எல்லாம் இது போறும்னுட்டாராம் மாப்பிள்ளை. நீ இங்க வெச்சு இதெல்லாம் பேசாத…”, என்று அடக்கினாள்.
ஆலம் சுற்றி போட்டு வந்து கை கால் கழுவி வெளியே வந்த பார்வதி பார்த்தது, வானதி தங்கள் இருவருக்குமான பழத்தை எடுத்துக் கொண்டு வருவதைத்தான்.
“ஏன் வனும்மா. அண்ணிகிட்ட சொல்ல வேண்டியதுதான ? இல்ல, நான் வந்து தந்திருப்பேனே…”
“பரவாயில்லை மா… சாப்பிட்டா சம்ப்ரதாயம் முடிஞ்சுது.”, என்று சொல்ல, அவளையே பார்த்தவன், ஒரு வாய் ஃப்ரூட் கஸ்டர்ட்  சாப்பிட, அந்த மதிய நேர வெய்யிலுக்கு இதமான குளிர்ச்சியும் அளவான இனிப்புமாக இருந்தது.
பத்து நிமிடத்திற்கெல்லாம் வானதியைப் பார்த்தவன், “கிளம்பலாமா ? போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.”, என்று முணுமுணுத்தான்.
அவன் அசௌகரியமாக இருப்பதைப் பார்த்திருந்தவள், “ இங்க வேணா, என் ரூம்ல இருக்கீங்களா?”, என்றாள்.
“ஊஃப்”, என்று ஊதியவன், “ப்ளீஸ்… லெட்ஸ் கோ. இன்னொரு நாள் வரலாம்.”,என்று சொல்லவும், அதற்கு மேல எதுவும் பேசாதவள், “ சரி. கிளம்பலாம். நான் சொல்லிட்டு வரேன்.”, என்று எழுந்தாள்.
அவள் எதிர்பார்த்தபடியே  வீட்டில எல்லோருக்குமே இப்படி வந்தவுடன் கிளம்புவதா என்று சங்கடம். ஏதேதோ சொல்லி சமாளித்தாள். மறு வீடு வந்ததுக்கு மணமக்களுக்கு பட்டாடை வைத்துக் கொடுக்க, வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
வினோத் காரை எடுக்க செல்ல, “வனும்மா…”, வாசு வானதியை வாசலருகே நிறுத்தினான்.
“அண்ணா….”
“வனும்மா. இது நீயா இஷ்ட்டப்பட்டு அமைச்சிகிட்ட வாழ்க்கைதான். ஏன் இவர்னு எங்களுக்கு இன்னுமே புரியலை. உன் மேல வெச்சிருக்க நம்பிக்கையிலதான் சம்மதிச்சோம். ஆனாலும்ம், இது சரி வரலைன்னு உனக்குத் தோணினா, விலகி வர தயங்காதே. தப்பான முடிவு எடுத்துட்டேன்னு சொன்னா, பெத்தவங்க, மத்தவங்க  வருத்தப்படுவாங்களேன்னு யோசிக்காதே. நீ சின்ன பொண்ணுயில்லை, உன்னால சரி படுத்த முடியாட்டா, உன் தன்மானம் விட்டு இருக்கணும்னு அவசியமில்லை. நான் இருப்பேன் உன் பக்கம். புரிஞ்சுதா…..”, வாசு தலை வருடி கூறவும், வானதிக்கு கண்ணில் நீர் பெருகியது.
“தாங்க்ஸ்ண்ணா…. செத்தாலும் புருஷன் வீட்லதான் இருக்கணும் அதுதான் எங்களுக்கு கௌரவம்னு சொல்லாம, இப்படி எனக்கு ஒரு பாதுகாப்பு இருக்குன்னு சொன்னதுக்கு.”, கண்ணில் நீர் வழிந்தாலும், முக மலர்ந்த சிரிப்பினை உதிர்த்தாள் வானதி.
காரில் அமைதியாக வந்துகொண்டிருந்தார்கள் வானதியும் வினோத்தும். “என்ன சொன்னார் உங்க அண்ணன்? கொஞ்சம் எமோஷனலா இருந்த? “, மௌனத்தை கலைத்தான் வினோத்.
“அண்ணனுக்கு என் மேல எவ்வளவு பாசம்னு புரிய வெச்சார். கொஞ்ச வருஷமா நான் கல்யாணம் தள்ளிப் போடறேன்னு எங்கிட்ட கோவமாத்தான் இருந்தார். ஆனா, என் மேல அன்பு குறையலை.”, மகிழ்ச்சியாகவே கூறினாள்.
“அப்படி என்னதான் சொன்னார் ?”
“நான் எடுத்த முடிவு தப்புன்னு நினைச்சா, எப்ப வேணாலும் விலகி வந்துடு, தன்மானம் விட்டு இருக்க வேண்டிய அவசியமில்லைன்னார்.”
அதிர்ந்து அவளை நோக்கினான் வினோத். “ ஏன்…ஏன் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்? நீயும் அதுக்கு மறுத்து எதுவும் சொல்லலையா? உன்னை கீழா நடத்துவேனா நான்?”, கோவம் வந்தது வினோத்திற்கு.
அவன் புறம் திரும்பி தோளைக் குலுக்கியவள், “ம்ஹ்ம்ம்ம்… தெரியலை. ஒரு வேளை நீங்க இன்னிக்கு நடந்துகிட்ட விதத்துல அவருக்கு தோணியிருக்கலாம். நானும் எவ்வளவுதான் உங்களுக்குக்காக சப்பைகட்டு கட்ட? “, என்று கேட்டுவிட்டு திரும்பிக்கொண்டாள்.
முகம் கன்றிப்போனது வினோத்திற்கு. அவர்கள் பக்கமிருந்து யோசித்தால் தான் செய்தது அவமதிப்புப் போலத்தான் இருந்தது. “ நீ…. அது…. ஸ்வேதா அப்பா அம்மாவைப் பார்த்து…. நீ அவங்க வரப் போறதை ஏன் சொல்லலை ?”
“கேட்டா கண்டிப்பா நீங்க மறுத்திருப்பீங்க. அவங்களுக்கு இந்த கல்யாணம் நிம்மதியைக் கொடுக்கும்னு நான் சொன்னாலும் நீங்க நம்பியிருக்க மாட்டீங்க. உங்க கோவத்தைவிட அவங்க நிம்மதி பெருசா பட்டுச்சு. ஆனா, உங்க கோவம் இந்த ரூபத்துல வரும்னு நினைக்கலை. நிஜ கல்யாணமாயிருந்தா நான் ரொம்பவே ஃபீலாகியிருப்பேன். “, அவன் முகம் பார்த்து அவள் சொன்னது சுருக்கென்று தைத்தது. நல்ல வேளையாக சிக்னலில் கார் நின்றிருந்தது.
“இது நிஜ கல்யாணம்தான். ரிஜிஸ்டர்லயும் கையெழுத்து போட்டோமே.”
“ம்ம்… லீகலா நிஜம். நான் சொன்னது கல்யாண எதிர்பார்ப்பிருந்த ஒரு பொண்ணா இருந்தா, நீங்க கல்யாண புடவை எடுக்க வராதது, கல்யாணத்துல நான் அழகாயிருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லாதது, அட்லீஸ்ட் இருக்கேன்னான்னு கூட ஒரு பார்வை பார்க்காதது,இப்படி ஒரு மெட்டி கூட போடாம, கடனேன்னு ஒரு தாலியை கழுத்துல போட்டது, வந்த சொந்தங்ககிட்ட முகம் கொடுத்து பேசாதது, எங்க வீட்ல பத்தே நிமிஷத்துல கிளம்பினது எல்லாம் பார்த்து உடைஞ்சி போயிருப்பா. “ வானதி அடுக்க, அதைக் கேட்டவனுக்கு சற்று என்ன, ரொம்பவே அவமானமாக இருந்தது.
“என்னால அப்படியான எதிர்பார்ப்பெல்லாம் பூர்த்தி பண்ண முடியதுன்னுதான் நான் கல்யாணம்னு யோசிக்கவேயில்லை வானதி. அது உனக்கே தெரியும். பட் இன்னிக்கு நடந்தது… நான் வேணும்னு செய்யலை. அதுக்காக நீ முகத்தை தூக்கி வெச்சிகிட்டு இருக்காம… சகஜமா பேசறது …. தாங்க்ஸ்… அண்ட்…” என்று சாரியும் சொல்ல வந்தவனை இடைமறித்தவள்,
“நீங்க சாரி சொல்லணும்னு நான் எதிர்பார்க்கலை. அண்ட் முகத்தை தூக்கி வெச்சிகிட்டு எதிராளியை ஆயிரம் வாட்டி சாரி கேட்க வைக்கறது ஸ்வேதா ஸ்டைல். என்னோடதில்லை….”, என்று புன்னகையுடனே முடித்தாள்.
சிக்னல் மாறவும், வண்டியை எடுத்தவன், “ம்ம்ம்…..இரண்டு வரியில ஆளையே காலி பண்றதுதான் உன் ஸ்டைல்னு தெரியுது. இருந்தாலும் …. சாரி… திருத்திக்க ட்ரை பண்றேன்.”
“முடிஞ்சா பாருங்க. பொண்ணு வீட்டு ஆளுங்க எப்பவும் பொண்ணு நல்லா இருந்தா போறும்னுதான் நினைப்பாங்க. மாப்பிள்ளை மரியாதை குடுக்கலைன்னாலும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க… மாப்பிள்ளை முறுக்கு சீடைன்னு நினைச்சுகிட்டு ஒதுங்கிடுவாங்க. “ 
வானதி தோள் குலுக்கி இலகுவாகப் பேசினாலும், அவள் வருத்தப்படுகிறாள் என்பது புரிந்தது வினோத்திற்கு. சம்மந்தமேயில்லாமல் அவர்களை நோகடித்தது புரிந்தது. என்னவோ… ஒரு இறுக்கம். ஆனால் அது ஏன் இருக்க வேண்டும் ? வானதியை தோழியாக நினைத்தால், அவர்கள் தோழியின் உறவினர்கள். இதில் எதற்கு இறுக்கம்? சரி செய்ய வேண்டும் என்று நினைத்தான்.