மருமகளைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பார்வதி.ஊரில் இல்லாத பிள்ளையாக ஏன் இவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சரி அப்படித்தான் முடிவென்றால் அதை முழு மனதோடு செய்யலாம் அல்லவா? இப்படி புடவை, தாலி எடுக்கக்கூட வரவில்லை. வானதியிடமும் அவன் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. இவர்கள் மாப்பிள்ளையைப் பார்க்க அவன் வீட்டிற்கு சென்ற போது, வினோத் கடமைக்காக பத்து நிமிடம் அமர்ந்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு, வேலை இருப்பதாக  சென்றுவிட்டான். அவருக்குத்தான் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
சம்பூர்ணம் முகம் வாடினாரே தவிர, பதில் பேசவில்லை. இறுதியில், “அண்ணி, போய் உங்களுக்கு புடவை, ரித்திக்கு பாவாடை பாருங்க. “, என்று வானதிதான் அகற்றினாள்.
அடுத்து தாலி எடுக்க நகைக் கடைக்கு போகவும், அங்கேயும் வானதி, “தாலி இப்பவே செயின் வாங்கி கோர்த்துடலாம். மஞ்சள் கயிறுல கட்டறதல்லாம் வேண்டாம்.”, எனவும் பெரியவர்கள் அனைவருமே திகைத்துப் பார்த்தனர்.
“என்னமா சொல்ற ? ”, என்று சம்பூர்ணம் கேட்கவும், “ இல்ல ஆன்ட்டி இது அவருக்கும் ஈசியா இருக்கும். எப்படியும், இரண்டு மணி நேரத்துல கயிறை மாத்திட்டு செயின்ல கோர்க்கபோறீங்க. அதை முன்னாடியே செஞ்சிடலாம்.”
வினோத்தின் சித்தப்பா நெகிழ்ந்து, அவள் தலையில் கைவைத்து, “உன் தங்கமான குணத்துக்கு, நீ நல்லா இருப்பமா. எங்க பையன் குடுத்து வெச்சிருக்கணும் உன்னை கட்டிக்க.”, என்று ஆசீர்வதித்தார்.
பார்வதியோ நாராயணனோ ஒரு வார்த்தை பேசவில்லை. “எங்க சார்பா என்ன கோர்க்கணுமோ, அதையும் நீங்களே எடுத்துடுங்க, நான் பில் குடுத்துடறேன். “, என்று சொல்லி ஓரமாய் இருந்த நாற்காலிகளை தேடி சென்றார் நாராயணன்.
“நீயே எல்லாம் பார்த்துக்க வானதி.”, என்று ஒரு வார்த்தையோடு பார்வதியும் கணவனைப் பின் தொடர்ந்தார்.
அவர்கள் ஏமாற்றம் வானதிக்கு உள்ளூர வலித்தாலும், எதையும் முகத்தில் காட்டவில்லை. “அப்பா அம்மா வருத்தப்படறாங்களேம்மா. நாங்க வினோத் கிட்ட சொல்லிக்கறோம். தாலி கயிறுல கோர்த்துக்கலாம் வானதி.”, வினோத்தின் சித்தி கமலமும் சொல்ல, மறுப்பாக தலையசைத்தாள்.
“கொஞ்ச நேரத்துல சரியாகிடுவாங்கம்மா. நான் அப்பறமா சொல்லி புரிய வெச்சுக்கறேன்.”, என்று தாலிக் கொடியிருக்கும் பக்கம் சென்றாள்.
நல்ல வேளையாக அவள் அண்ணி குழந்தையை பாத்ரூம் விட செல்லவும், இதற்கு எந்த குத்தலும் வரவில்லை.
“நீ உனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கமா.”, சம்பூர்ணம் சொல்ல, “உங்க வழக்கம் எதுவோ அது மாதிரியே எடுத்துக்கலாம் ஆன்ட்டி. நீங்க சொல்லுங்க.”, என்றாள் வானதி.
“ஒத்தப்படையில இருக்கணும் தாலிக் கொடி. ஒன்பது பவுன்னா பரவாயில்லையா வானதி. இல்ல நீயும் ஆபிஸ் போகணும், மெல்லிசா போடணும்னா, பரவாயில்லை எடுத்துக்கமா.”, என்றார் சம்பூர்ணம். வானதி இவ்வளவு வளைந்து கொடுத்துப் போனதே அவருக்கு நிறைவு. ஸ்வேதா மூன்று பவுனில் மைனர் செயின் போல எடுத்த போது வினோத்தை முறைத்ததெல்லாம் மறந்து போனது அவருக்கு. ஆனால், அன்று உடனிருந்த வானதிக்குத் தெரியுமே. அவள் மறந்தாளில்லை.
அவர் விருப்பப்படியே ஒன்பது பவுனில் கொடியை தேர்ந்தெடுத்து, அதில் தாலி மற்ற உருப்படிகளை கோர்த்து வாங்கிக்கொண்டார்கள். அன்னையிடம் காட்டியபோதும், நல்லாயிருக்கு என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துவிட்டார். என்ன பேசினார்களோ அவள் பெற்றோர், அண்ணி லக்ஷ்மி கூட ஒரு வார்த்தை ஏறுமாறாக எதுவும் கூறவில்லை
“மங்கல்ய பூஜை எங்க வீட்ல செய்யறோம்மா.  தேதி பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன். அவசியம் வந்துடுங்க.”, என்று அப்போதே அழைப்பு விடுத்தார் கமலம்.
இரண்டு மூன்று நாட்களானது, பார்வதி மலையிறங்கி வர. பேசிப் பேசியே கரைத்திருந்தாள் அவரை.
கல்யாணத்திற்கு ஐந்து நாட்கள் முன்னர் எளிமையாக பந்தக்கால் விசேஷம். சம்பூர்ணம் தன் சொந்தங்களில் முக்கியமான ஐந்து பேரைக் கூட்டிவர, இவளின் அத்தை, பெரியம்மா, மாமி பாட்டி,அண்ணி என்று மொத்தமாக ஒன்பது பேர் கூடி விமரிசையாக செய்தனர். அவள் மட்டுமே பங்கு பெற வேண்டிய விசேஷமாதலால், அவள் அன்னையின் இஷட்டப்படியே விட்டுவிட்டாள் வானதி. ஆசை தீர அலங்கரித்து, அவளுக்கு நலங்கிட்டு, வந்தவர்களுக்கு புடவை வைத்துக் கொடுத்து என்று நிறைவாக முடிந்தது.
வீட்டிலிருந்து கோவிலிற்குக் கிளம்பலாம் என்று பூஜை அறைக்கு சென்று சேவிக்கச் சொன்னார்கள். கைகூப்பி வணங்கியவள், “நான் செய்யறது சரியா தப்பான்னு தெரியலை. நான் தேர்ந்தெடுத்திருக்கப் பாதையில் தைரியமா நடக்க எனக்கு துணையிருப்பா முருகா.”, என்று எளிமையாக வேண்டுதலை முடித்து, பெற்றோர், அண்ணன் அண்ணியிடம் ஆசி பெற்று, வண்டியில் ஏறினாள்.
கோவிலில் இவர்கள்தான் முதலில் இருந்தார்கள். ஐயருடன் பேசி ஏற்பாட்டை எல்லோரும் கவனிக்க, இவள் அண்ணன் மகள் ரித்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதுவும் இவள் புடவை நிறத்திலேயே பட்டுப் பாவாடை சட்டை அணிந்து, இவளைப் போலவே நெத்திச் சுட்டி, காசு மாலையுடன் அழகாக இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் வினோத் வீட்டிலிருந்து வந்துவிட்டார்கள். கோவில் வாசலில் பார்வதி ஆலம் சுற்றி மாப்பிள்ளையை வரவேற்க, அவன் உறவினர்கள் அழைத்து வந்தார்கள்.
உள்ளே நுழையும் வினோத்தைப் பார்த்து நின்றிருந்தாள் வானதி. முகம் இறுகி இருந்தான். மருந்துக்குக் கூட ஒரு சிரிப்பு இல்லை. அவன் நிலைமை எண்ணி வானதிக்குமே பரிதாபமாகத்தான் இருந்தது. வெள்ளை முழுக்கை காட்டன் சட்டை, கைகளை மடக்கி விட்டிருந்தான். கையில் வாட்ச், வெள்ளை பட்டு வேட்டி கட்டியிருந்தான். மாப்பிள்ளை என்பதற்கான தனி அடையாளம் எதுவுமில்லை. ஆனாலும் பார்ப்பவர் மீண்டும் ஒரு முறை பார்க்கும்படியான வசீகரம் இருந்தது. அவன் சொந்தங்கள் வரவும், அவர்களிடம் பேசத் திரும்பினான். இவள் இருக்கிறாளா என்ற துளி தேடல் பார்வையும் இல்லை. வாசு கவனித்து, இவள் அருகில் வந்தவன், “நிஜமா இந்த கல்யாணம் சரி வருமா வனும்மா? அவருக்கு உன்னை பிடிக்கற மாதிரி ஒரு சின்ன அறிகுறி கூட தெரியலை.”, வருத்தமாய்க் கேட்டான்.
“கல்யாணம் முடியற வரை அவருக்கு பழைய ஞாபகம் இருக்கத்தான செய்யும் அண்ணா. அவரை யாரும் வற்புறுத்தலை, அப்படி செய்யவும் முடியாது. இதெல்லாம் முடிச்சதும் நார்மலாகிடுவார். கொஞ்சம் டைம் குடுங்க அண்ணா.”, என்று வினோத்திற்கு பரிந்து பேசினாள்.
அவளை வினோதமாக பார்த்தவன், “நீ அவருக்காக பார்க்கற அளவு அவர் ஒன்னும் உன்னை கன்சிடர் பண்ற மாதிரியே தெரியலையே வானதி?”, என்று கிடுக்கிப்பிடி போட்டான்.
நல்ல வேளையாக யாரோ ஒருவர் வந்து ஐயர் அழைப்பதாக சொல்லவும், அந்த நேரம் பதில் சொல்வதிலிருந்து தப்பித்தாள்.
சன்னிதானத்தில் இருவரும் அருகருகே நிற்க, ஐயர், மந்திரங்கள ஓதி, தீபாராதனை காட்டி பின், முருகனின் பாதத்திலிருந்து இரண்டு மல்லி மாலைகளைக் கொண்டு வந்து கொடுத்தார் இருவரிடமும்.  அதுவரை கடவுளைப் பார்த்து நின்றவன், எதிர் புறம் நோக்க, அங்கே இருந்தவர்களைப் பார்த்து உறைந்து நின்றான்.
“மாலையை வாங்கிக்கோங்க….”, என்ற ஐயரின் குரலில் பார்வையைத் திருப்பி இயந்திரமாக வாங்கியவன் கண்கள் அவன் அன்னையைத் தேடியது.  அவர் சுமங்கலிகளை முன்னே விட்டு பின்னே நின்றிருந்தார்.
“ம்மா…”, மகன் அழைக்கவும் முன்னே வர, அவனைத்தான் பார்த்திருந்தாள் வானதி.
“இங்கயே, எங்க பக்கத்தில இருங்க. “, என்றவன், குனிந்து அவர் காதில், “எப்படிமா ஸ்வேதா அப்பா அம்மா இங்க?”, என்று முணு முணுத்தான்.
“வானதி போய் அழைப்பு வெச்சாப்பா. எங்கிட்ட சொல்லிட்டுத்தான் போனா. எல்லாம் அப்பறம் பேசலாம். இப்ப ஆக வேண்டியதைப் பாரு.”, அவசரமாக சொல்லிவிட்டு ஒரு எட்டு பின்னால் வந்தார்.
மந்திரங்கள் ஓதியபடியே மீண்டும் வந்த ஐயர், “மாலையை போடுங்க, பொண்ணு கழுத்துல. அடுத்து நீயும் போடுமா”, என்று சொல்ல, அவள் கழுத்தில் மாலையிட்டபடியே அவளை முறைத்தான். வானதி அவனைப் பார்க்கவேயில்லை. அவன் தோளைப் பார்த்தபடியே, அவன் கழுத்தில் சற்று எக்கி மாலையைப் போட்டாள்.
அதற்குள் மீண்டும் வழக்கமான மந்திர உச்சாடனங்களுடன் முருகன் பாதத்தில் இருந்த தாலிக் கொடியை தேங்காய், மஞ்சள் அரிசியுடன் இருந்த தாம்பாளத்தில் வைத்துக் கொண்டு வந்தவர் ஒரு பெண்மணியின் கையில் தந்தார். அவர் சுற்றத்தாரிடம் அதைக் காட்டி ஆசி பெற்று , அரிசி, பூவை ஆசீர்வதிக்க தந்துவிட்டு, மீண்டும் தாம்பாளத்தை ஐயரிடமே சேர்ப்பிக்க, ஒலிப்பெருக்கியின் நாதஸ்வர இசையில், ஐயர் கொடுத்த தாலியை வாங்கி வானதியின் கழுத்திலிட்டு திரும்பி கடவுளை நோக்கி நின்று கொண்டான்.
“சார்…சார்… ப்ளீஸ்…போட்டோ எடுக்கணும். கொஞ்சம் தாலியை பிடிச்சு போடறா மாதிரி பாருங்க சார், நீங்க ரொம்ப வேகமா போட்டீங்க…”, என்று போட்டோ கிராபர் சொல்லவும் அவரை முறைத்தான் வினோத்.
வானதியின் பெற்றோர் கூட சரியாக கவனிக்கவில்லை. ஓ முடிந்துவிட்டதா என்ற கதியில் போட்டோகிராபரின் குரல் கேட்டு சில அட்சதைகள் தூவப்பட்டன.
வாசு கடுப்பின் உச்சியில் இருந்தான்.  ‘இதுவா கல்யாணம்? என் தங்கைக்கு என்ன குறைச்சல் என்று இவ்வளவு திமிர் இவனுக்கு.’, உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தான். அது தெரியாமல், “ என்னங்க, பாப்பாவை குனிஞ்சு தூக்கிட்டு பார்க்கறதுக்குள்ள முடிஞ்சிருச்சு?”, என்று முனக, “ம்ம்… ரீ-ப்ளே போடுவாங்க பாரு.”, என்று மனைவியை எகிறினான்.
வினோத் போட்டோகிராபரை சட்டை செய்யவில்லை, ஐயர் கொண்டு வந்து கொடுத்த குங்குமத்தை இயந்திர கதியில் தாலியில் வைத்தவன், அவள் புறம் திரும்பி, நெற்றியில் பொட்டு வைத்தான்.
“தோள் சுத்தி கையை கொண்டுபோய் பொட்டு வெக்கணும்பா.”, என்ற ஐயரிடம், “வெச்சாச்சு. அடுத்து சொல்லுங்க.”, என்றான்.
அவனது குரலில், அதற்கடுத்து ஒன்றும் சொல்லாமல், “ பிரகாரம் சுத்தி வந்து, சுவாமியை சேவிச்சுக்கோங்க. கொடி கம்பத்தண்ட விழுந்து கும்பிடுங்க. பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கங்க. பிள்ளையார் சன்னிதி தாண்டி வர மண்டப வாசல்ல அம்மி இருக்கும். அங்க வெச்சு மெட்டி இருந்தா, பொண்ணுக்கு போட்டு விடுங்க. அவ்வளவுதான். பிரசாதம் தந்து விடறேன்.”, என்று ஒப்பித்துவிட்டு சுவாமியிடம் சென்றுவிட்டார்.
மெல்ல கூட்டம் வெளியில் செல்ல, வினோத்தின் சித்தப்பா, “வினோத் நீங்க இரண்டு பேரும் பிரகாரம் சுத்த போங்க. நான் எல்லாரையும் கொடி கம்பத்துகிட்ட நிக்க வெக்கறேன். எல்லாருக்குமா சேர்ந்து ஒரே வாட்டி ஆசீர்வாதம் வாங்கிக்கலாம். “
தலையாட்டியவன், முன்னே செல்ல, வானதி அவனோடு சென்றாள்.
“வானதி… மெட்டி…”, பார்வதி அவசரமாய்த் தர, நின்று வாங்கிக்கொண்டு திரும்ப, அதற்குள், நாலு எட்டு வைத்திருந்தான் அவளை விட்டு. கழுத்தில் இருந்த மாலை கைக்கு வந்திருந்தது.
வானதி வேக எட்டுக்கள் வைத்து வர, சம்பூர்ணம், “வினோத்…”, என்று கூப்பிடவும் நின்றான். அவன் அருகில் வந்தவர், முறைத்தபடியே, “ எல்லார் வாய்க்கும் அவலாகாதே… அவ கூட போ.”, என்று எச்சரித்தார்.
“எல்லாம் என்னைக் கேட்டு செய்யறேன்னு சொன்னியே… ஸ்வேதா அப்பா அம்மாவை இன்வைட் செய்ததை ஏன் சொல்லலை ? “, மென் குரலானாலும் சீற்றம் குறையாதிருந்தது.