“வா வானதி. ஏன் அங்கையே நின்னுட்ட?”, அவளை முதலில் பார்த்த அவள் அன்னை உற்சாகமாக அழைத்தார்.
‘வேண்டாம்னா அம்மா இப்படி கூப்பிட மாட்டாங்களே.’, என்று யோசித்தவள், சம்பூர்ணத்தைப் பார்த்து, “ வாங்க…வாங்க ஆன்ட்டி. வந்து நேரமாச்சா?”
“இல்லைமா. இப்பதான் வந்தேன். நீ போய் முகம் அலம்பிட்டு வா. நான் இருக்கேன்.”, சம்பூர்ணமும் எந்த வருத்தமும் இல்லாமல் பேசவும், தான் கேட்டது சரிதானா என்று யோசித்தபடியே உள்ளே சென்றாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வானதி மீண்டும் வரவேற்பு அறைக்கு வர, சூடான காப்பியும், கேசரியும் வைத்தார் அவள் அன்னை பார்வதி.
“ஸ்வீட் சாப்பிடு வானதி. நீ என் பிள்ளைகிட்ட என்ன பேசினன்னு தெரியாது. ஆனா, இன்னிக்கு அவன் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டான்மா.”, சம்பூர்ணமே ஒரு வாய் அவளுக்கு ஊட்டிவிட்டார்.
“ஓஹ்…”, என்ற ஒற்றை சொல்லை மட்டுமே கூறியவள் வாய் முழுதும் கேசரியின் தித்திப்பு.புன்னகையோடே அவரிடமிருந்து தட்டை வாங்கியவள் அண்ணன் வாசு மட்டும் பெரிதாக மகிழ்ச்சியைக் காட்டாது அமர்ந்திருந்ததை பார்த்து தாயின் புறம் பார்வையைத் திருப்பினாள்.
பார்வதி சம்பூர்ணத்தைப் பார்க்க, “ வானதிமா… உன் கல்யாணம் எப்படி நடக்கணும்னு எதுவும் நீ யோசிச்சு வெச்சிருக்கியா?”, என்று கேட்டார் சம்பூர்ணம்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஆன்ட்டி. என்னாச்சு? “, வானதியின் உந்துதலில்,
“இல்லை வானதி…. வினோத் கல்யாணத்தை சிம்பிளா ஒரு கோவில்ல வெச்சிக்கலாம். பெருசா எதுவும் கூடாதுன்னு கண்டிஷன் போடறான். நீ வீட்டுக்கு ஒரே பொண்ணு, உங்க வீட்டுல உன் கல்யாணத்தை எப்படியெல்லாம் செய்யணும்னு நினைச்சிருக்காங்களோன்னு சொன்னா கூட பிடிவாதமா, இன்னொரு முறை மண்டபம் , மந்திரம்னு என்னால முடியவே முடியாதும்மாங்கறான்.”, வருத்தமான குரலில் சம்பூர்ணம் முடிக்கவும், ‘இவ்வளவுதானா’, என்று தோன்றியது வானதிக்கு.
“இது நான் எதிர்பார்த்ததுதான் ஆன்ட்டி. அவர் சொன்ன மாதிரியே கோவில்ல சிம்பிளா முடிச்சிக்கலாம்.”, வானதி கூறவும்,
“வேற வினையே வேண்டாம். உனக்கு என்னவோ குறை, அதான் காதும் காதும் வெச்ச மாதிரி முடிச்சிகிட்டாங்கன்னு, சொந்தக்காரங்களே பேசுவாங்க. இத்தனை நாள் பொறுத்தது இதுக்காகவா? நம்ம ஸ்டேடஸ்க்கு எவ்வளவு பெரிசா செய்யணும்?”
“அண்ணா… ப்ளீஸ். என் கல்யாணம் பத்தி அப்பா அம்மாக்கு நிறைய கனவு இருக்கும். எனக்கும் புரியுது. அதெல்லாம் விட, என் கல்யாணம் கூடி வரதே அவங்களுக்கு பெரிய நிம்மதி. அதே மாதிரி, ஸ்டேட்டஸ், ஆடம்பரத்துக்காக வினோத்தை கஷ்டப்படுத்தி எங்க கல்யாணம் நடக்கறதையும் நான் ஒத்துக்க மாட்டேன். ஒரு ட்ரீம் மாதிரி நடந்தது, ஸ்வேதாவோட அவர் கல்யாணம். ஒரு வாட்டிதான் அதெல்லாம். “, வானதி சொன்னதைக் கேட்டு சம்பூர்ணத்தின் கண்களில் கண்ணீர் பொங்கியது.
“அப்ப? ஓடிப் போய் கல்யாணம் செய்யற மாதிரி பத்து பேரோட கோவில்ல வெச்சி தாலி கட்டிக்கப் போறியா?”, வாசு பொங்க, அதுவரை அமைதியாக இருந்த நாராயணன், “வாசு…. போதும். வானதி கல்யாணம் அவ சொல்ற மாதிரிதான் நடக்கும். அவளை பேச விடு.”, என்று கண்டிப்புடன் கூறினார்.
“அப்பா…எனக்கு தெரியுதுபா. கோவில்ல முக்கியமான சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லி கல்யாணத்தை முடிச்சிக்கலாம். சாயந்திரம் ஒரு ஸ்டார் ஹோட்டல்ல ஒரு பார்ட்டி மாதிரி வெச்சிக்கலாம். இத்தனை நாள் கழிச்சி கல்யாணங்கறதுனால வேண்டுதல், அதனால கோவில்ல செய்யறோம்னு சொல்லிக்கலாம் எல்லார்கிட்டயும். அதே நேரம் பார்ட்டி மூலமா, உங்க ஸ்டேடஸ்சைக் காட்டின மாதிரியும் இருக்கும்.”, வானதி சொல்லவும், அவள் பெற்றோருக்கும் சற்று சமாதானமாகியது.
“அம்மாடி… நீயே கொஞ்சம் வினோத்கிட்ட பேசிடறயா? ரிசெப்ஷனுக்கும் முரண்டு பிடிப்பானோன்னு பயமா இருக்கு.”, சம்பூர்ணம் மெல்லய குரலில் வானதியிடம் வேண்டுகோள் வைக்க, அப்பாவும் மகனும் ஸ்டார் ஹோட்டல் எதெல்லாம் டேட் கேக்கலாம் என்று அலசிக்கொண்டிருந்தனர்.
“நான் பேசிக்கறேன் ஆன்ட்டி. ரிசெப்ஷன் இல்லை. இது சும்மா பார்ட்டி மாதிரிதான். மேடைல நிக்கற வேலையெல்லாம் கிடையாது. “, வானதி சொல்லவும், “நான் என்னத்தை கண்டேன். அவன் மனசறிஞ்சு நீ கோவில்ல செய்ய வளைஞ்சு போனதே சந்தோஷம்மா. மாலையும் கழுத்துமா நான் உங்களைப் பார்த்தா அதுவே எனக்குப் போறும்.”, சம்பூர்ணம் நன்றியோடு சொல்ல,
“நீங்க எங்க செஞ்சாலும் சம்மதம்தான்மா. “, என்று ஒரேடியாகக் கூறிவிட்டார் சம்பூர்ணம்.
“அம்மா… வடபழனி முருகன் கோவில்ல வெச்சுக்கலாம். எல்லாருக்கும் வந்து போக வசதியா இருக்கும். பக்கத்துலயே நல்ல ஹோட்டல் இருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்துக்கலாம். என்ன தேதின்னு பார்த்துட்டீங்களா?”, வானதியே முன்னெடுத்தாள்.
சம்பூர்ணம் “வைகாசியிலேயே வெச்சிடலாம்னு பார்க்கறேன்மா. “, என்றவர் இரண்டு மூன்று தேதிகள் கூற, தன் போனைப் பார்த்தவள், “வெள்ளிக்கிழமை ஜூன் நாலு, எனக்கு ஓக்கே.”, என்று நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏன் வானதி, ஆறாம் தேதி ஞாயிறு எல்லாருக்கும் வசதியா இருக்குமே…”, என்று வாசு கேட்க,
“சன்டே வேண்டாம்ண்ணா. நாம நெருக்கமானவங்களைத்தான கூப்பிடப்போறோம். மிஞ்சிப் போனா இரண்டு பக்கமும் சேர்ந்து ஒரு அம்பது பேரு. அன்னிக்கு சாயந்திரமே பார்ட்டி ஒரு ஏழரைக்கா வெச்சிக்கலாம். வேலை முடிச்சு எல்லாரும் வரலாம். “, வானதி கூறினாள். சம்பூர்ணத்திற்கு மட்டுமே புரிந்தது, வினோத் ஸ்வேதா கல்யாணம் நடந்தது ஒரு ஞாயிறு முகூர்த்தம். அதற்காகவே ஆவணியிலிருந்து கார்த்திகை மாதம் வரை தள்ளிப்போனது கல்யாணம். இந்தப் பெண் எவ்வளவு யோசிக்கிறாள் என்று மலைத்துப் போனார்.
மறுனாள் மதியம், அவள் அலுவலகம் அருகே ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தாள் வானதி, வினோத்தின் வருகையை எதிர்னோக்கி.
உள்ளே வந்தவன், குளிரூட்டப்பட்ட அந்த அறையின் சற்றே குறைந்த வெளிச்சத்தில் நிதானித்து, அவளை அடையாளம் கண்டு அருகே வந்தான். அன்று ஒரு உணவகத்தில் பார்த்து பேசியதுதான். கல்யாணத்திற்கான சம்மதம் அவன் அன்னை மூலம் வந்தது, அவனிடமிருந்து எதுவும் பேச்சில்லை. இன்று கூட, இங்கே சந்திப்பதாக ஒரு வாட்ஸப் மெசேஜ் மட்டுமே. அவள் சம்மதம் சொல்லவும், மேற்கொண்டு எதுவும் பேச்சில்லை.
அவள் பணியாளை அழைக்கவும், “ மினி மீல்ஸ்”, என்றான் வினோத். அதையே, “இரண்டு.”, என்று சுருக்கமாய் முடித்தாள் வானதி.
பாட்டிலைத் திறந்து, தண்ணீரை ஊற்றி அவன் புறம் டம்பளரை வைக்க, எடுத்து குடித்தவன், “தாங்க்ஸ். பட்…எதுக்கு நீ பாட்டுக்கு எதோ ஸ்டார் ஹோட்டல் பார்ட்டின்னு இழுத்து விட்டிருக்க? என்னை கேட்க மாட்டியா?”, எரிச்சலாகக் கேட்டான்.
உதடு கடித்தபடியே அவனை கூர்மையாய்ப் பார்த்தவள், “ இரண்டு வீட்டையும் சமாளிக்கணும்னா, நாம ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்து ஒன்னா சொல்லணும். நீங்க சம்மதம் உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு, கோவில்ல கல்யாணம்னு சொல்லிட்டீங்க. எனக்கு புரியுது. ஆனா எங்க அப்பா அம்மாவையும் நான் பார்க்கணும்.“,அவள் பேச, இடை வெட்டியவன்,
“ஓஹ்…அதனால நீ உன்னிஷ்டத்துக்கு சொல்லுவியோ?”
“என்னைப் பேச விட்டா என்ன சொல்ல வரேன்னு புரியும்.”, அமைதியாக வானதி சொல்லவும், அவர்கள் ஆர்டர் வரவும் சரியாக இருந்தது.
“நீங்க நினைக்கறது போல இல்லை. நான் ரிசப்ஷன் மாதிரி எதுவும் செய்யலை. இது ஒரு மீட் அண்ட் கரீட் மாதிரி, உங்க காலேஜ் ப்ரெஷ்ஷர்ஸ் பார்ட்டி மாதிரிதான் இருக்கும். ஸ்டெஜ்ல ஏறி நிக்க வேண்டாம். மாலை போட வேண்டாம். வந்த விருந்தாளிகளோட ஒரு அறிமுகம், போட்டோ ஒரு சில வார்த்தைன்னு பேசி சுத்தி வந்தா போறும். இது ஒரு ரூம்ல, இன்னொரு ரூம்ல ஒரு டிஜே வச்சு பார்ட்டி ஸாங்க்ஸ் போட்டுக்கலாம், வர ஃப்ரெண்ட்ஸ், யங் பீப்பள் எஞ்சாய் பண்ணுவாங்க. அப்பப்ப அங்க போயிட்டு வரலாம், டைம் ஓடிரும். பப்ஃபே சாப்பாடு. ஏழரைலர்ந்து மிஞ்சிப்போனா ஒரு பதினோரு மணி, முடிச்சிடலாம்.”, அவள் சொல்லச் சொல்ல சூடாக வந்தவன் சற்றி அமைதியானான்.
இதை எந்த வகையிலும் அவனது கல்யாண ரிசப்ஷனுடன் ஒப்பிட முடியாது. கிட்டதட்ட ஒரு ஆயிரம் பேர் வந்திருந்தார்கள். மேடை முழுதும் பூ அலங்காரம் தேவ லோகத்தைப் போல இருக்க, அதில் காதல் இளவரசனும் இளவரசியுமாக வினோத்தும் ஸ்வேதாவும் வீற்றிருந்தார்கள். புகழ் பெற்ற இசைக் குழு காதல் பாட்டுக்கள் பாட, சில பாட்டுக்களில இவர்களும் சேர்ந்து ஆட பின்னிரவு வரை களைகட்டியது ரிசப்செஷன்.
“ம்ம்.. அப்படின்னா சரி.”, அரை மனதாக சம்மதம் தெரிவித்தவன், சாப்பிடத் துவங்க,
“எனக்குப் புரியுது வினோத். நான் முடிஞ்ச வரை இதை சிம்பிளா முடிக்கறேன். எதுவும் உங்களை உறுத்தாத மாதிரி பார்த்துக்கறேன்.”, வானதி வாக்களிக்கவும்,
அடடா, இவளைப் போய் தப்பா நினைச்சிட்டோமே என்று வருந்தியவன், “சாரி வானதி. நான் …. எனிவே, என்னை புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி.”, என்று மன்னிப்பு கேட்டான்.
இருவரும் பொதுவாக பேசியபடி சாப்பிட, இந்த முறை, வினோத் பில்லைக் கொடுத்தான். “நாந்தானே உன்னை வரச்சொன்னேன். அப்ப நாந்தான் குடுக்கணும் ?”, என்று கேட்கவும், வானதி மறுத்து எதுவும் சொல்லவில்லை.
கிளம்பும்போது, “இனி உங்க டிசிஷன் எதுவும் எனக்கு ஒரு மெசேஜ் போட்டுடுங்க. நானும், எல்லா முடிவும் உங்ககிட்ட சொல்லிட்டு செய்யறேன்.”, என்று கேட்டாள் வானதி. சம்மதித்து விடை பெற்றான் வினோத்.
கல்யாணப் பொழுது இனிதாக விடிந்தது. அதிசயமாக வெய்யில் சுட்டெரிக்காமல், வானம் சற்று மூடினார்போல இருந்தது.
வீட்டில்தான் இருந்தாள் வானதி. ஒன்பது மணி முஹூர்த்தம். ஏழரை மணி போல கிளம்பித் தயாராக நின்றிருந்தாள். கோவிலில் வைத்து சேலை மாற்ற முடியாது என்று, நேரடியாக மூகூர்த்த சேலையையே அணிந்திருந்தாள். நேற்றே சுவாமியிடம் வைத்து பூஜை செய்து, அவளிடம் கொடுத்துவிட்டனர். சிகப்பு வண்ணப் பட்டுப்புடவையில் ஆரஞ்சு வண்ண பார்டர். முந்தானையில் மட்டும் நிறைய சரிகை வேலைப்பாடு. புடவைக் கரை எளிமையாக இருந்தது. காது, கழுத்து, கைகள் எங்கும் வைர அணிகலன்கள் மின்னியது, ஆனால் எதுவும் பெரிதாக உறுத்தும்படி இல்லை. இவள்தான் மணப்பெண் என்பதற்கு சான்றாக, ஒரு பொன் காசு மாலையும், நெத்தி சுட்டியும் இருந்தது.
கல்யாணப்புடவை எடுக்க இவள் பெற்றோர் மற்றும் அண்ணியுடன் செல்ல, சம்பூர்ணம் தன் கொழுந்தன் மனைவி சகிதம் வந்திருந்தார். வினோத் வரவில்லை. அவன் வருவான் என்று வானதி எதிர்பார்க்கவில்லை. ஸ்வேதாவிற்கு முகூர்த்தப்பட்டு எடுக்க அவன் வந்திருந்தான். இவளும்தான் இருந்தாள். கல்யாண ஜோடி யாரைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் பேசி சிரித்து, வெளிர் நீல நிறத்தில் டிசைனர் பட்டுப் புடவை தேர்ந்தெடுக்க, சம்பூர்ணம் அவர்கள் வழக்கம் சிகப்பு வர்ணத்தில் எடுக்க வேண்டும் என்று கூறினார். ஸ்வேதா, விடாப்பிடியாக அவளுக்குப் பிடித்ததைத்தான் எடுத்தாள். வினோத் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமாகப் போனது. சந்திராம்மாவுக்கும் ஸ்வேதா மேல் கடுப்பு. வானதிதான் சமாதானம் செய்ய வேண்டியதாகிப் போனது.
அந்த நினைவுகளை ஒதுக்கி வைத்து, பாரம்பரியப் பட்டுகள் மட்டும் விற்கும் கடையைத் தேர்ந்தெடுத்திருந்தாள். சிகப்புப் புடவைகளாக சம்பூர்ணம் சொல்லாமலேயே பார்த்தவள், இரண்டைக் கையில் எடுத்து ‘ஆன்ட்டி, இதுல எதுன்னாலும் எனக்கு ஓகேதான்.’, என்று அவரிடம் தரவும், சம்பூர்ணம் கண்களில் நீர் கோர்த்தது.
“இன்னும் பெரிய சரிகையோட கிராண்டா பாரேன்மா. “, என்று சற்று கரகரத்த குரலில் சொன்னார்.
“இல்லை ஆன்ட்டி. இதுன்னா, திரும்ப கட்ட முடியும். அதனாலதான்….”, அவரைப் பார்த்து புன்னகைக்கவும்,
“புகுந்த வீட்டுக்கு செலவில்லாம பார்த்துக்கறா எங்க வீட்டு பொண்ணு. மாப்பிள்ளை வந்து செலக்ட் செஞ்சிருந்தார்னா சந்தோஷமா பெரிய கரையோட எடுத்திருப்பா. கோவில்ல வெச்சு கல்யாணம் செய்யறதுக்கு இது போறாதுங்களா?”, நக்கலடித்தாள் வானதியின் அண்ணி லக்ஷ்மி.