“உங்களை கேட்காம நான் சொல்லியிருக்கக் கூடாது. அது புரியுது எனக்கும். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நானுமே அப்பறம்தான் யோசிச்சேன். எல்லா வகையிலும் இது சரி வரும்னு தோணுச்சு. அஃப்கோர்ஸ், நமக்கு கொஞ்சம் சங்கடம் இருக்கும் தொடக்கத்துல, ஆனா நம்ம பெத்தவங்களுக்கு இது தர சந்தோஷத்துக்காக, பரவாயில்லை சமாளிக்கலாம்னு தோணுச்சு.”, அவள் மீண்டும் பொறுமையாக சொல்லவும், அவள் கூற்றை தட்ட முடியவில்லை வினோத்தால்.
அவள் சொல்லும்போதே, அவனுக்கும் புரிந்தது. வேறு ஒருத்தியை மணமுடித்தால், அவள் எதிர்பார்ப்பிற்கு தன்னால் இருக்க முடியாது. வானதிக்கு ஸ்வேதாவையும் அவனையும் நன்றாகவே தெரியும். அவளுக்கு என்ன பிரச்சனை என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் இவ்வளவு யோசித்திருப்பவள் இப்படி ஒரு முடிவினை சாதாரணமாக எடுத்திருக்க மாட்டாள் என்றும் தோன்றியது.
“நான் கொஞ்சம் யோசிக்கணும் வானதி. இரண்டு நாள்ல சொல்றேன். நீயும் யோசி. எப்ப வேணும்னாலும் பிரியலாம்தான். பட் அது இன்னும் வேதனை குடுக்கும் நம்மை பெத்தவங்களுக்கு. என்ன ஒன்னு, நாமளும் முயற்சி செஞ்சோம்னு இருக்கும். அட்லீஸ்ட், இப்ப இருக்கற குற்ற உணர்ச்சி இருக்காது…..  தெரியலை….. நான் இது வேண்டவே வேண்டாம்னுதான் வந்தேன். இப்ப நீ சொன்னது நான் கன்சிடர் பண்றேன். யோசிச்சு சொல்றேன்.”, அவன் கூறியதை ஒரு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டாள் வானதி.
வெயிட்டரிடம் கைகாட்ட, பில் தொகையை செலுத்த அவள் கார்ட்டை எடுத்து வைத்தாள். வினோத் பார்க்கவும், “இது நான் உங்களை கூப்பிட்டது. நாந்தான் பே பண்ணனும்.”, என்றாள்.
வீட்டிற்கு வினோத் வரும்போதே, ஹாலில் அவன் வரவை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்தார் சம்பூர்ணம்.
“சாப்டீங்களாம்மா?”, என்று கேட்டு அவர் அருகில் அமரவும்,
“இல்லைப்பா. நீ வானதியை பார்த்தியா? என்ன சொன்னா?”, நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
லேசாக புன்னகைத்தவன், “நானும் சாப்பிடலை. எடுத்து வைங்க. பார்த்து பேசிட்டுதான் வரேன். ஃப்ரெஷாகிட்டு வந்து சொல்றேன்.”, என்று எழுந்தான் வினோத்.
அதைக் கேட்ட சம்பூரணத்தின் முகம் விழுந்துவிட்டது. “அவ கூட சாப்பிடலையா? போனதும் வேண்டாம்னு வந்துட்டியா வினோத்?”, அவர் குரலே கம்மியது.
“அம்மா… சூப்பும் ஸ்டார்ட்டரும் சாப்பிட்டேன்.  அரை மணி நேரத்துக்கு மேல பேசினோம். வேண்டாம்னு எல்லாம் சொல்லலைமா….”, அவன் தாய் கரைவது பிடிக்காமல் சொல்லவும்,
“அப்போ…அப்போ சரின்னு சொல்லிட்டியா ? உனக்கு ஓக்கேவாடா?”, முகமே மலர்ந்து, அவ்வளவு எதிர்பார்ப்புடன் கேட்கவும் வினோத்திற்கு மனம் வலித்தது. ‘சரின்னு சொல்லிட்டேனான்னு நினைக்கும்போதே அம்மா முகம் இப்படி ப்ரகாசமாகுதே…ஆண்டவா என்ன செய்ய…?’ என்று யோசித்தாலும், “ எதுவும் முடிவு செய்யலைமா. இன்னிக்குதானே பேசியிருக்கோம். யோசிக்கணும். “, என்று பொதுவாக சொல்லிவிட்டு மாடியேறினான்.
மகன் சொல்வதை எந்த வகையில் எடுத்துக்கொள்வது என்று புரியாமல் முழித்தார் சம்பூர்ணம். சமையல் செய்யும் மலரை எடுத்து வைக்க சொல்லிவிட்டு, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவர், மகனை எதிர்னோக்கியிருந்தார்.
வந்தவனுக்கு இட்லியும் கார சட்னியும் பறிமாரியவர், “நீ அங்க சாப்பிட்டு வருவன்னு வெறும் இட்லிதான் செய்ய சொன்னேன் மலரை. இப்ப தோசையும், தேங்காய் சட்னியும் செய்யறா. இதை சாப்பிடு முதல்ல.”, என்றவர் தனக்கும் வைத்துக்கொண்டு அமர்ந்தார்.
வினோத்தை சற்று நேரம் சாப்பிட விட்டவர், “நீ என்ன சொன்னன்னு எனக்கு புரியலை வினோத். என்ன முடிவு செய்திருக்க?”, என்று பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டார்.
மலர் வந்து தோசை சட்னி வைத்துவிட்டு போகும் வரை அமைதியாக இருந்தவன், “ எதுவும் இன்னும் முடிவு செய்யலைமா. என்னால இதை ஏத்துக்க முடியுமான்னு யோசிக்கணும். ஒரு இரண்டு நாள் டைம் கேட்டிருக்கேன். வானதியையும் யோசிக்க சொல்லிருக்கேன்.“, சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மகனையே வெறித்தார் சம்பூர்ணம்.
“வினோத்… போனவளை நினைச்சு இருக்கற உங்கம்மாவை கொஞ்ச கொஞ்சமா சாவடிக்கறன்னும் யோசிப்பா. மத்த பொண்ணுங்க ஸ்வேதா மேல நீ வெச்சிருக்க அன்பை புரிஞ்சிக்காம உன்னை நோகடிச்சிடுவாங்களோங்கற பயத்துலதான் நீ வேண்டாம்னு சொல்லவும் நான் வற்புறுத்தலை. ஆனா வானதி அப்படியில்லை. உங்க ரெண்டு பேரையும் பத்தி நல்லா தெரிஞ்சவ. அவளே உன்னை கல்யாணம் செய்ய சரின்னதும் மனசுக்கு அவ்வளவு இதமா இருந்துச்சு. கடவுள் என் வேண்டுதலுக்கெல்லாம் பதிலா வானதியை அன்னிக்கு என் கண்ல காட்டியிருக்கார்னுதான் நினைச்சிக்கிட்டேன்.  அப்பவே அமைதியான பக்குவமான பொண்ணு. இப்ப இன்னுமே பக்குவம் வந்திருக்கு. உனக்கு நல்லா பொருந்தி வருவான்னு என் அனுபவம் சொல்லுது.
நீ சின்ன பிள்ளையில்லை. மெத்த படிச்சவன். நல்ல முடிவா சொல்லுவன்னு ரொம்ப நம்பிக்கையா இருக்கேன் வினோத்.”, கண்கள் நீர் கோர்க்க தன் கோரிக்கையை மகனிடம் வைத்தவர், எழுந்து சென்றுவிட்டார்.
பெற்றவளின் துயரம் மகனையும் தாக்கியது. வாழ்க்கையில் அவனைத் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லை என்று அவனுக்காகவே இருந்த அன்னை தன் கடைசி காலத்தில் கேட்பதெல்லாம் மன நிம்மதிதான். ‘மகனாக அதைக் கூட உன்னால் தர முடியாதா? அவ்வளவு சுயனலமாக மாறிவிட்டாயா ?’, என்று அவன் மனசாட்சி கேட்டதற்கு இம்முறை பதில் இல்லை. இது வரை, ‘இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவதற்கு பதிலாக சுயனலமாக இருந்துவிட்டுப் போகிறேன்.’,என்ற வாதம் இன்று எடுபடவில்லை.
வானதி உலகம் தெரியாத சின்ன பெண்ணில்லை.மணமுடித்தால், வாழ்க்கையை எப்படி கொண்டு போக வேண்டும் என்று யோசித்து அவனின் எல்லா கேள்விக்கும் பொருத்தமான பதிலைத்தான் கூறினாள்.
படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தவன், ’ இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?’ என்று யோசித்துக்கொண்டிருந்தான். வினோத்திற்கும் தெரியும், எத்தனையோவிதமான காரணங்களுக்கெல்லாம் திருமணம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வறட்டு கவுரவத்திற்காக, சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று, சொத்திற்காக, அந்தஸ்திற்காக, வீட்டின் பெரிய தலை சாகும்முன் பேத்தி அல்லது பேரன் கல்யாணத்தைப் பார்த்துவிட்டு போகவேண்டும் என்பதற்காக, இப்படி அடுக்கடுக்கான காரணங்கள் தோன்றவும், இவர்களின் திருமணத்திற்கான காரணம் பெரிதாக வித்தியாசப்படவில்லை. சில வருடங்கள் கழித்து, பிள்ளைகள் வந்ததும், பல கணவன் மனைவி ஓரே வீட்டில் தனித் தனியாகத்தான் இருக்கிறார்கள்.  இவர்களைப் பொறுத்த வரை, ஆரம்பத்திலேயே. அவ்வளவுதான்.
‘ வேண்டாம்.’. என்று சொன்னால் நிச்சயம் தாய் மனதை விட்டுவிடுவார். அவரை அப்படி நோகடிக்கவும் மனது வரவில்லை. தலையை சற்றே நிமிர்த்து எதிரே மாட்டியிருந்த பெரிய படத்தை பார்த்தான். அதில் ஸ்வேதாவும் அவனும் நிச்சயத்தன்று காதலில் மூழ்கிக் களித்து ஒருவரை ஒருவர் பார்வையாலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்தனர்.
‘இன்னொருத்தியை நான் அம்மா நிம்மதிக்காக கல்யாணம் செய்ய ஒத்துக்கிவியாடி செல்லம்? கண்டிப்பா மாட்ட, ஆனா அது உன் பெஸ்டின்னாலாவது பொறுத்துக்குவியா? பெத்தவங்க மன நிம்மதிக்காக ஒரு பொம்மை கல்யாணம். செய்யவா கண்ணா…முடியுமா என்னால?’, மானசீகமாக மனைவியோடு பேசியவன் அப்படியே தூங்கிப்போனான்.
இரண்டு நாட்கள் கழித்து, சம்பூர்ணம் வானதியின் வீட்டில் அமர்ந்திருந்தார். ஒரு தர்ம சங்கடமான மௌனம் நிலவியது.
“நீங்க சொல்றது நியாயமேயில்லைமா? என்னதான் வானதி சொல்லி நாங்க வந்து கேட்டோம்னாலும், இப்படி சொல்லலாமா?”, வாசுதான் மௌனத்தைக் கலைத்தான்.
சற்று நெளிந்தார் சம்பூர்ணம். “ எனக்கு உங்க வருத்தம் புரியுது. இப்படி சொல்லுவான் வினோத்துன்னு நானும் நினைக்கலை. என்னால முடிஞ்ச வரை அவங்கிட்ட எடுத்துச் சொன்னேன். ஆனாலும் கேட்கலை. பிடிவாதமா இருக்கான். அதான்…. வானதிகிட்ட ….எப்படி சொல்றதுன்னு….”
அப்போதுதான் அலுவலகத்திலிருந்து உள்ளே நுழைந்த வானதி அவர் பேசியதைக் கேட்டு இறுகிப்போய் நின்றாள். ‘ஓ… அப்போ வேண்டாம்னு சொல்லிட்டாரா.’, மனதோரம் வலித்தது.