“எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிக்கறேன். ஒரு வாரம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா.”, தந்தை , தாய் முகம் காணச் சகியாமல் அப்போதைக்கு வாய்தா வாங்கினாள்.
இந்த அளவிற்கு ஒத்துக்கொண்டதே போறும் என்பதுபோல அப்போதைக்கு அமைதியானார்கள்.
“வானதி… வானதி ….சாப்பிட போலாம் வா.”, தோளைப் பிடித்து இழுக்கவும், நினைவுக்கு வந்தவள்,
“ஹா… ப்ரியா… சாரி..எதோ யோசனை. வா போகலாம். ராஜீவ் எங்க?”, கண்கள் நண்பனைத் தேடியது.
“பேசிகிட்டு இருந்தா…அப்படியே எதோ யோசிக்க ஆரம்பிச்சிட்டா. அதான் வந்துட்டேன். நீ அப்பறமா அவளை கூப்பிடுன்னு சொல்லிட்டுத்தான் போனான். அங்க இருக்காங்க பாரு.”, என்று ப்ரியா மேடையருகே கைகாட்டினாள்.
முயன்று மனதை சம நிலை படுத்தி, அவர்களுடன் சாப்பிடச் சென்றாள். முடித்து வெளியே வரும் பொழுது, சட்டென்று ஒரு வயதான பெண்மணி கையை பிடித்து நிறுத்தினார்.
“நீ… நீ ஸ்வேதாவோட ப்ரெண்டுதானே…ம்ம்…வானதி…வானதிதானே…”, அவர் கேட்கவும், சட்டென்று ஞாபகம் வந்தது வானதிக்கு. இவர் ஸ்வேதாவின் மாமியார், பூர்ணம்…சம்பூரணம். ஸ்வேதா அப்படித்தான் அவர் பெயரைக் கூறினாள் முதன் முதலில்.
புன்னகையுடன் ஆமோதித்தவள், “ஆமா ஆன்ட்டி, நான் வானதிதான். எப்படியிருக்கீங்க?”
“இருக்கேன்மா…” பெருமூச்சு விட்டவர், “ வா அப்படி உட்காரலாம். நீ சொல்லுமா, எப்படியிருக்க? கல்யாணமாகிருச்சா?”, என்று கையோடே அருகில் இருந்த நாற்காலிகளை நோக்கிப்போனார்.
‘சுத்தி சுத்தி இதையே கேளுங்க. ஆச்சுன்னா, அடுத்து குழந்தை எத்தனைம்பாங்க…’, என்று வழக்கம்போல உள்ளுக்குள் கடிந்தாலும், அதை முகம் வெளிக்காட்டவில்லை.
“நல்லாருக்கேன் ஆன்ட்டி. இல்ல இன்னும் கல்யாணம் செய்துக்கலை. செய்துக்க தோணலை.”, அவர் கேட்கும் முன்னரே அதையும் சேர்த்து சொன்னாள்.
அந்த தொனி பூரணத்திற்கு தெளிவாகக் கூறியது, கேள்விகள் அதற்கு மேல் வரக்கூடாது என்று. அவளைப் பார்த்தவர், “ எப்பமா சிங்கப்பூர்லர்ந்து வந்த? இங்க வேலை பார்க்கறியா?”, என்று கேட்டார்.
“வந்து இரண்டு வருஷமாச்சு ஆன்ட்டி. அம்மா, அப்பா தனியா இருக்கவும், சரின்னு அவங்க கூட இருக்கலாம்னு வந்துட்டேன். இங்க ஒரு கம்பனில ஜோனல் மானேஜரா இருக்கேன்.”, சற்று இலகுவாகப் பேசினாள்.
“இல்லை, அடுத்த ரெண்டு நாள்ல சிங்கப்பூர் கிளம்பிட்டேன். அங்க இருக்கும்போது ஸ்வேதா சென்னையில இருக்கா, அப்பறமா போன் செய்வான்னு என்னை நானே ஏமாதிக்க முடிஞ்சுது.”, வரண்ட ஒரு புன்னகை சிந்தினாள்.
“ம்ம்… எல்லாரையும் கலங்க வெச்சிட்டு அவ மட்டும் நிம்மதியா போயிட்டா. நீயாவது கொஞ்சம் மீண்டுட்ட. அவ அம்மா, என் பிள்ளை…ஹூம்ம்ம்ம்”, சோகமாக தலையசைத்தவர்,
“வீட்டுக்கு வாயேன் வானதி. கொஞ்ச நேரம் பேசிட்டு போ. இன்னிக்கு ஞாயித்துக்கிழமைதானே?”, என்று கேட்கவும், அவரைப் பார்த்து முடியாது என்று சொல்ல முடியவில்லை.
“சரி ஆன்ட்டி, சொல்லிட்டு கிளம்பி வரேன்.”, என்று வானதி சம்மதிக்கவும், சற்று மலர்ச்சியுடன், பூரணமும் விடைபெற எழுந்தார்.
அவர் ட்ரைவரை வீட்டுக்கு வர சொல்லி, வானதியுடன் காரில் ஏறிக்கொண்டார். “ பொண்னோட அப்பா, என் சின்னம்மா மகன். அதான் வந்தேன் இந்த கல்யாணத்துக்கு.” , என்று பொதுவாகப் பேசிக்கொண்டே வந்தார்.
“அதே வீடுதான ஆன்ட்டி?”, என்று வானதி கேட்கவும், “ஆமாம்மா. என் வீட்டுக்காரர் ஆசையா வாங்கின வீடு. நான் வித்துட சொன்னாலும், ஸ்வேதா வாழ்ந்த வீடும்மாங்கறான் புள்ள. அஞ்சு வருஷமாச்சு. ஆனாலும் போனவ கெட்டியா பிடிச்சு வெச்சிருக்கா அவனை.”, சம்பூரணத்தின் ஆதங்கம் குரலில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
வானதிக்குத் தெரியும் வினோத் ஸ்வேதா காதல். அவர்களில் முதல் சந்திப்பிலிருந்து பார்த்தவளாயிற்றே. இன்னமும் அவளை நினைத்துக்கொண்டிருக்கும் வினோத். கேட்டதும் நெகிழ்ச்சியாக இருந்தது.
அமைதியாக காரை அவர் வீட்டு வாசலில் நிறுத்தினாள். இரண்டு க்ரவுண்டில் , பங்களா டைப் வீடு. மைலாப்பூர், லஸ் இடையே அமைதியான இடத்திலிருந்தது.
ஸ்வேதா இருந்தபோது எப்படி இருந்ததோ, அதே போன்று இருந்தது. எந்த நிமிடமும், மாடிப்படியில் தடதடத்து ஓடி வருவாள் போல என்று அங்கேயே பார்க்கச் சொல்லியது மனம்.
இங்கே வந்தது தவறோ என்று தோன்றியது. இதோ அவள் அமர்ந்திருந்த இடத்தில்தான் ஸ்வேதாவின் உடலை கிடத்தியிருந்தார்கள். ஸ்வேதா ஆக்சிடென்ட் என்று போன் வந்தது, அடித்து பிடித்து ஹாஸ்பிட்டல் ஓடியது, என்னன்னவோ நினைவலைகள் முட்டி மோதியது.
வேலையாள் மோரை ட்ரேயில் எடுத்து வர, முன்னே வந்த சம்பூர்ணம் அவள் முகத்தினைப் பார்த்து, “ வானதி…”, என்று அதட்டலாய் ஒரு குரல் கொடுக்கவும், திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
அவளிடம் மோரைக் கொடுத்து, “இந்தா குடிம்மா.”, என்று தனக்கும் எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.
“போனவ போனவதான் வானதி. இருக்கவங்க நாம வாழ்ந்து முடிக்கணும் இல்லையா? நம்ம வாழ்க்கையை வாழாம இருக்க முடியாதும்மா. “, அவள் சற்று ஆசுவாசப்படவும், மெதுவாய்க் கூறினார்.
அவர் சொன்னதை ஆமோதித்தவள், “எங்க ஆன்ட்டி வினோத்?”, என்று கேட்டாள்.
“வெளிய போயிருக்கான். இப்ப H.O.Dயா இருக்கான் என்று புகழ் பெற்ற கல்லூரியைக் கூறினார். அவ போனதும், இரண்டு வருஷம் ஜெர்மனில படிக்கப்போனான். அப்பறம் டாக்ட்ரேட் வாங்கினான். திரும்பி இங்க வந்து இரண்டு வருஷமாகப்போகுது. மறுபடியும் ஒரு கல்யாணம் பண்ணிக்கடான்னா ஒத்துக்கவே மாட்டேங்கறான். என் பேரனை விட்டுட்டு போயிருந்தாக்கூட என் புள்ளை கொஞ்சம் மீண்டிருப்பான். அப்பவும் அன்னிக்கு அவ கிளம்பறச்ச நான் கேட்டேன். குழந்தை இருக்கட்டும் ஸ்வேதான்னு. என் பேச்சை கேட்கலை. நானே கூட்டிட்டு போறேன்னு போனவ மொத்தமா கூட்டிட்டு போயிட்டா. கூடவே எங்க சந்தோஷத்தையெல்லாம் வாரிகிட்டு போயிட்டா.”, கண்களில் பொங்கிய நீரை துடைத்தவரின் கைகளை ஆறுதலாய் பற்றிய வானதி,
“ஆன்ட்டி. எதிர்பாராம நடந்ததுக்கு யார் என்ன செய்ய முடியும் ? வருத்திக்காதீங்க ஆன்ட்டி.”, சமாதானப் படுத்தினாள்.
“ஹ்ம்ம்… உன்னை கூட்டிட்டு வந்துட்டு, நான் புலம்பறேன் பாரு. “, என்றவர்,
“அவளாலதான் நீயும் கல்யாணம் வேணாங்கறியா வானதி?”, என்று கேள்வியாய்ப் பார்த்தார்.
ஒருவகையில் அதுவும்தான், ஆனாலும், “இல்லை ஆன்ட்டி. பிடிக்கலை அவ்வளவுதான். “, என்று மறைத்தாள்.
“உங்களுக்கு என்னம்மா? ஒரே வார்த்தையில பிடிக்கலைன்னு சொல்லிடறீங்க. ஊர்ல எல்லாரும் பெத்தவங்களைத்தான கேட்கறாங்க? புள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செய்யலையான்னு என்னை கேட்காதவங்க இல்லை. ஆனா அந்த பேச்சை எடுத்தாலே கோவப்படறான். “, அவர் வேதனையைச் சொல்ல,
‘நேற்று அவள் தந்தை , இன்று இவரா’, என்று இருந்தது வானதிக்கு.
“ஊர்ல கேட்கறவங்க கேட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிருவாங்க ஆன்ட்டி. அதுக்காகவெல்லாம் கல்யாணம் செய்துக்க முடியுமா சொல்லுங்க?”, என்று வானதி அவள் ஆதங்கத்தைக் கூறினாள்.
“வாஸ்தவம்தான் வானதி. ஊருக்காக செய்ய வேணாம். ஆனா பெத்தவங்களுக்காகவாச்சம் செய்யலாமில்லை? உங்களை இப்படி ஒத்தையில பார்க்கறத்துக்கு எவ்வளவு வேதனையா இருக்கு எங்களுக்குன்னு புரியலையாமா? வயசான காலத்துல ஊவா முள்ளா குத்திக்கிட்டேயிருக்கு. நாமளும் போயிட்டா இந்த பிள்ளை ஒத்தையில நின்னுடுமேன்னு நினைச்சா தூக்கமே போயிடுது. படுக்க முடியாம எழுந்து வந்தா, என் புள்ளை தூங்காம புத்தகத்தை வெச்சிகிட்டு விட்டத்தை பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்குது. வயசு பிள்ளை, சந்தோஷமா வாழாம, போனவளை நினைச்சிகிட்டு வருத்திக்குதேன்னு மனசு நொந்துபோகுது.”, கேட்டவளின் கண்களும் நீர் கோர்த்தது.
“என் பிள்ளைக்காவது காரணம் இருக்கு. நீ ஏன் உங்க அப்பாம்மாக்கு இப்படி ஒரு வருத்தத்தை குடுக்கற வானதி?”
“அவங்க கஷ்டம் எனக்கும் புரியுது ஆன்ட்டி, ஒரு வாரம் டைம் கேட்டிருக்கேன். ஆனா என்ன சொல்லன்னுதான் எனக்கும் தெரியலை.”, பாவமாய் இருந்தது அவள் முகம் காண.
“இல்லம்மா. உன்னத்தான் நான் அப்ப பார்த்திருக்கேனே. உன் அமைதியான குணம் என் பிள்ளைக்கு அருமையா ஒத்துப்போயிருக்கும். ஆனா அவனுக்கு ஸ்வேதாவைத்தான் பிடிச்சிருந்தது. என்னவோ ஆண்டவன் போட்ட கணக்கு.”, அதற்கு மேல் சம்பூர்ணம் அதைத் தொடரவில்லை.
அவரிடம் விடைபெற்று, வீட்டிற்கு வந்த வானதிக்கு மனதிற்குள் என்னென்னவோ எண்ணங்கள் உழன்றுகொண்டிருந்தது. அன்று மாலை மறுபடியும் அவள் அண்ணன் வீட்டிற்கு வந்தான்.
“என்ன வானதி முடிவு செஞ்சிருக்க?”
“நான் ஒரு வாரம் டைம் கேட்டிருந்தேன் அண்ணா.”
“இத்தனை வருஷமா யோசிக்காததை இந்த ஒரு வாரத்தில என்ன யோசிக்கப்போற? அந்த மாப்பிள்ளை வீட்ல உன் போட்டோ பார்த்து ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. நாம அவரை பொதுவான ஒரு இடத்துல வெச்சி மீட் பண்ணலாம். நீ பாட்டுக்கு ஒரு பக்கம் யோசி. “, வாசு சொல்லவும்,
“இல்லைண்ணா. என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க. அங்க வெச்சு எதுவும் கேட்டா சங்கடமாகிரும். தேவையில்லாம எதுக்கு அவங்களை வர வெச்சு…”, வானதி மறுத்தாள்.
“அப்ப, இந்த வரன் வேண்டாம்னு நீ ஏற்கனவே முடிவு செய்துட்ட. அப்படித்தான? அப்பறம் எதுக்கு ஒரு வாரம் டைம்? எல்லாரையும் எதுக்கு ஆசை காட்டி மோசம் செய்யற ? அவமானப்படுத்தற?”, வாசு கோவப்பட்டான்.
“ஆமா. நீங்க, என் ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம், நான் யாரையாச்சம் லவ் பண்ணேனான்னு எனக்குத் தெரியாம போன் செய்து அவமானப்படுத்தறதைவிட நான் ஒன்னும் பெருசா செஞ்சிடலை.”, வானதிக்கும் கோவம் பொங்கியது.
பெற்றவர்கள் வேதனையுடன் பார்த்திருந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்தவளுக்கு சகிக்கவில்லை.
“அப்படியெல்லாம் இல்லை. நான்… நான் வினோத்தை கல்யாணம் பண்ணலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.”, ஒரு வேகத்தில் சொல்லிவிட்டவள், தான் சொல்லியதை உணர்ந்து அதிர்ந்தாள் என்றால், முதல் முறையாக யாரோ ஒருவனைப் பற்றி வானதி யோசிக்கிறாள் என்பதைக் கேட்டவர்கள் முகத்திலும் அதே அதிர்ச்சி.
“யாரு… யாரது வினோத் ?”, வாசு கேட்க, சம்பூர்ணத்தைப் போய்ப் பார்த்த விஷயத்தை அன்னையிடம் கூறியிருந்ததால் அவரால் உடனே யார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
“அது ஸ்வேதா… ஸ்வேதாவோட ஹஸ்பெண்ட்.”, சற்று தயங்கி கூறினாள் வானதி.
“என்னது? இரண்டாம் தாரமாவா? என்ன இல்லைன்னு இந்த முடிவு வானதி?”, வாசு பொங்கவும்,
“இரு வாசு… அவ பேசட்டும்.”, என்று மகனை அடக்கினார் நாராயணன்.
“நீ ஸ்வேதா மாமியாரை பார்த்துட்டு வந்தன்னுதானேமா சொன்ன? இது எப்ப நடந்துச்சு?”, அவள் தாய் கேட்கவும்…
“இல்லம்மா… பூர்ணம் ஆன்ட்டி பேச்சு வாக்குல சொன்னது, வினோத் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்றாருன்னு சொல்லிக்கிட்டு இருந்தபோது, இரண்டாம் தாரமா இல்லைன்னா, நானே உன்னை பொண்ணு கேட்டு வந்திருப்பேன்னு….. அதுலர்ந்துதான் யோசிச்சேன்….”, வானதி மென்று முழுங்கி பேசினாள்.
“எனக்கு இது சரியா படலைபா.”, என்று வாசு தந்தையிடம் கூறினான்.
“ஏன்டா…? “, பார்வதி கேட்க,
“நாம் நெருக்கறோம்னு, அவ வினோத்தை கைகாட்டறா போல. அவனும் கல்யாணம் வேண்டாங்கறான். இவ சரின்னதே, அவன் எப்படியும் வேண்டாம்னு சொல்லுவான்ற ஒரு எண்ணத்துலயோன்னு நினைக்கறேன். இத்தனை நாள் இல்லாம இப்ப திடீர்னு சொல்றா. அதுவும் அவனை பார்க்கலை. ஒன்னு நாம இரண்டாம் தாரம்னு வேண்டாம்னு சொல்லுவோம், இல்லை அவன் வேணாம்னு சொல்லுவான். எப்படியும் இவ எஸ்கேப் ஆகிடலாம்னு நினைக்கறா.”, வாசு சொல்ல, அப்படியும் இருக்குமோ என்று பட்டது மூவருக்குமே.
“சரி, அதையும் பார்த்துடுவோம். இரு அவ கிட்ட அந்தம்மா நம்பர் இருக்கான்னு கேட்கறேன். அந்த பிள்ளை நல்ல குணம்தான். பொண்டாட்டியை அவ சீமந்தமப்போ அப்படி பார்த்துக்கிட்டான். அவன்தான் அமையணும்னு இருந்தா, எனக்கு சரிதான். என் பொண்ணு கழுத்துலையும் தாலி ஏறணும்.”, முடிவாய் சொல்லியவர் மகளின் அறைக்குச் சென்றார்.