முஹூர்த்த நேரம் நெருங்கவும், பரபரப்பாக இருந்தது அந்தப் பெரிய கல்யாண மண்டபம். காரை பார்க் செய்து, பொறுமையாக உள்ளே நுழைந்தாள் வானதி. சரிகையில்லாத அடர் நீல பட்டுப்புடவை, மெல்லிய வைர அணிகலங்களுடன், மிதமாக அலங்காரம். ஆளுமையான தோற்றம். ஆர்பாட்டமில்லாத அமைதியான அழகு என்பார்கள் அவளைப் பார்ப்பவர்கள், கூர்மையான கண்களை நோக்கும் வரை. அந்தப் பார்வை, அனாவசியமாக ஒரு வார்த்தை பேச முடியாதபடி, எட்டி நிறுத்தும்.
இன்று அவளுடன் இளங்கலை படித்த நண்பனின் திருமணம். உடன் படித்த தோழிகள் எல்லோரும் குடும்பம், குழந்தை என்று இருக்க, இப்போது வரிசையாக நண்பர்கள் இல்லறத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் திருமணத்திற்கு இவள் சென்று கொண்டிருக்கிறாள். இன்னும் இவள்தான் யாரையும் அழைக்கவில்லை.
“ஹே… வானதி… வா வா… என்னடா இன்னும் காணலையேன்னு நினைச்சேன். “, நட்பு வட்டத்தில் ஒருவனான சித்துவின் அழைப்பில், புன்னகை சிந்தியபடியே சென்றவளை, “ நம்ம கேங் எல்லாம் அங்க இருக்காங்க. மாது இன்னும் கொஞ்ச நேரத்துல இல்லறத்துல சிக்கிடுவான், நாம அப்பறம் போய் அவனுக்கு ஆறுதல் சொல்லலாம்…”, அவள் பதில் எதிர்பாராது அழைத்துக்கொண்டு போனான் சித்து. கல்லூரிக் காலத்திலும் அவள் அப்படித்தான், எதிராளி பத்து வார்த்தை பேசினால், இவள் ஒரு வார்த்தை பதில் சொல்லுவாள். இவளையும் பேச வைக்கக்கூடியவள் ஸ்வேதா மட்டும்தான். அவளும் போய் சேர்ந்த பிறகு, இன்னும் வேறு யாருக்கும் அந்த கலை கைவரவில்லை.
நட்புக்கூட்டம் அவளை சுற்றிக்கொண்டது. அனைவரையும் பார்த்து, விசாரித்து முடிக்கையில் அட்சதை அரிசி கைக்கு வந்தது. மேடைக்கு அருகே சென்று ஓ என்று கத்தி கலாட்டாவாக பூவும் அரிசியும் தூவி புது மாப்பிள்ளை மாதவனை வாழ்த்தினார்கள்.
ஒரு வழியாய் திரும்பி இருக்கைக்கு வர, வானதியை தன் அருகில் அமர வைத்தான் ராஜீவ். கல்லூரிக் காலத்தில், ஸ்வேத்தாவைத் தாண்டி கொஞ்சம் இலகுவாக பேசுபவன் என்றால் அது ராஜீவ் மட்டும்தான். அதுவும் அவனும் பள்ளித் தோழன் என்பதால் தொடர்ந்து வந்த நட்பு.
“எப்படி இருக்க வானதி?”
“நீயே சொல்லு ? நான் எப்படி இருக்கேன்?”, வானதி கேள்வியே பதிலாய் கொடுத்தாள்.
“அழகா இருக்க. அதே இரும்பு கவசத்தோட.”, ராஜீவ் இடக்காகக் கூறினான்.
சின்ன சிரிப்போடே, “தாங்க்ஸ். வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க? வேலை ?”, என்று விசாரித்தாள்.
“நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற வானதி? “, ராஜீவ் மற்றவர்கள் யோசிப்பதை நேரடியாக உடைத்துக் கேட்டான்.
“ஹே… ராஜீவ்… நீயுமா? இதென்ன, கல்யாணம் பண்ணியே ஆகணுமா? தோணும் போது, வேணும் போது செய்யறோம், இல்ல செய்யாமலேயே போறோம். என்ன வந்துச்சு யாருக்கும்?”, மற்றவர்களை திட்டுவதைப் போலவே அவனையும் சேர்த்து திட்டினாள்.
மற்றவர்களாயிருந்தால், அத்துடன் நடையை கட்டியிருப்பார்கள்.ஆனால் அவள் குணம் தெரிந்த ராஜீவ்,
“நான் ஒருத்தன் கேட்டதுக்கே சலிச்சிக்கற ? எத்தனை பேர் உங்க அப்பா அம்மாவை கேட்டுகிட்டு இருப்பாங்க. ஏன் வானதி கல்யாணம் வேண்டாங்கற?”, ராஜீவின் அக்கறை அவன் முகத்தில் தெரிய, வானதியால் கோவிக்க முடியவில்லை.
“விடு ராஜீவ். எனக்கு பேசி அலுத்துப்போச்சு. வேற எதாச்சம் பேசலாம்.”. சலிப்பாய் வானதி கூறினாள்.
“உங்க அண்ணன் நேத்து பேசினார் எங்கிட்ட.”
“அண்ணனா? எதுக்கு? உன் நம்பர் அவருக்கு எப்படி தெரியும்?”, ஆச்சரியமாய்க் கேட்டாள்.
“சோஷியல் மீடியால இருந்து எடுத்திருப்பார். நான் கேட்டுக்கலை. அவர் உன்னை பத்தி பேசத்தான் கூப்பிட்டிருந்தார்.”, அவள் மேல் வைத்த பார்வை மாறாது பேசிக்கொண்டிருந்தான் ராஜீவ்.
“உனக்கு காலேஜ்ல எதாவது லவ் ஃபெயிலியரான்னு கேட்டார்.”
“வாட் ரப்பிஷ்? கடவுளே…அடங்க மாட்டாங்களா இவங்க? நாந்தான் ஒரு வாரம் டைம் கேட்டேனே.”, தலையை பிடித்துக்கொண்டாள்.
“நேத்து ஒரு வரன் வந்துச்சாமே? ‘பார்க்கக் கூட இல்லை. வேண்டாம்னு சண்டை. எங்ககிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறா. அதான் உங்கிட்ட கேட்கறேன் ராஜீவ். ஸ்வேதாக்கு அடுத்து உனக்குத்தான் அவளை நல்லாத் தெரியும்.’,னு கேட்டார். “
“நான் இல்லைன்னு சொன்னதைக்கூட மனுஷன் நம்பலை. துருவி துருவி கேட்டார். கடைசியா , ‘சரி அவ கூட பிஜி படிச்சவங்களை கேட்டுப் பார்க்கறேன்’,னு வெச்சிட்டார்.”, ராஜீவ் விலாவாரியாக சொல்லவும், தலை விண் விண்னென்று தெரித்தது வானதிக்கு.
நேற்று மாலை வீட்டில் பெரிய பஞ்சாயத்து ஓடியது. அவள் அண்ணன் வாசுவும் அண்ணி லக்ஷ்மியும் ஒரு வரன் பற்றிய விவரத்துடன் வந்திருந்தார்கள். அண்ணன் தனிக்குடித்தனம் செய்கிறான் வில்லிவாக்கத்தில். இவள் பெற்றோருடன் முகப்பேரில் வசிக்கிறாள்.
“கத்தார்ல ஏழு வருஷமா சாஃப்ட்வேர்ல வேலை பார்த்தார் மாப்பிள்ளை. இப்ப விப்ரோல ப்ராஜெக்ட் மானேஜரா வேலைக்கு சேர்ந்திருக்கார். அங்க இருந்தா யாரும் பொண்ணு தர மாட்டேங்கறாங்கன்னு இங்கையே வேலையை மாத்திக்கிட்டார். ஜாதகம் எல்லாம் நல்லா பொருந்தி வருது.”,இன்னும் அவர்களது குடும்பம் அது இதுவென்று சொல்லிக்கொண்டிருந்தான்.
“போட்டோ பாருமா.”, என்று அம்மா நீட்டவும்,
“ம்ச்… வேண்டாம்மா…பிடிக்கலை.”, என்றாள் வானதி.
“போட்டோவை பார்க்கக் கூட இல்லை. ஏன்…ஏன் பிடிக்கலை.”, அண்ணி வரிந்து கட்டி கேள்வி கேட்க, எரிச்சல் தலை தூக்கியது வானதிக்கு.
“இன்னிக்கு கல்யாணத்துக்காக காரியரை தூக்கி போட்டுட்டார். நாளைக்கு காரியருக்காக பொண்டாட்டியை தூக்கிப் போடுவார். அதான் பிடிக்கலை.”, கொஞ்சம் இளக்காரமாகவே கூறினாள் வானதி.
“இதெல்லாம் ஒரு காரணமா வானதி?”, வாசு கோபமாய்க் கேட்க, வானதியால் தோளைத்தான் குலுக்க முடிந்தது.
“அப்படியும்தான் வருஷக் கணக்கா காத்திருந்தாச்சு. முப்பது வயசாகப்போகுது உனக்கு. இன்னும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கற. வேற யாரையாச்சம் லவ் பண்றியான்னா, அதுவும் இல்லங்கற. என்னதான் உன் ப்ரச்சனை வானதி? எங்களால கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.”, வாசுவுக்கு கோபம் பொங்கியது.
“இருந்தாத்தான சொல்ல? ஒரு லவ்வும் இல்லை, ஒரு ப்ரச்சனையும் இல்லை. ஊர்ல முப்பது வயசுல கல்யாணமாகத பொண்ணு யாருமே இல்லையா? “, வானதியும் தன் எரிச்சலைக் காட்டினாள்.
“இருப்பாங்க, ஒன்னு ஜாதகத்துல தோஷம் இருக்கும், இல்லை கட்டி குடுக்க வசதி இருக்காது, இல்லை பார்க்க சுமாரா இருப்பாங்க, இப்படி எதாச்சம் ஒரு குறை இருக்கும். உனக்கு அப்படி எதுவும் இல்லை. அப்ப கேட்கத்தான செய்வாங்க ?”, வாசு அடுக்கினான்.
“அடுத்தவங்க கேட்கறாங்களேன்னு என்னால கல்யாண செஞ்சிக்க முடியாது அண்ணா. லீவ் மீ.“, பெற்றவர்களைப் பார்த்தாள் வானதி. இருவருமே அமைதியாக இருந்தார்கள். அவள் பக்கம் எதுவும் பேச வாய்ப்பில்லை என்று புரிந்துபோனது.
“எப்படி விட முடியும் வானதி? நாங்களும் ஒரு பொண்ணு வெச்சிருக்கோம். அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கணும்னா, அத்தைகாரி ஏன் கல்யாணம் செய்யலைன்னு கேட்பாங்க.”, லக்ஷ்மி இடைவெட்ட,
“ரித்திமாக்கு மூணு வயசுதான் ஆகுது அண்ணி. இன்னும் இருவது வருஷம் இருக்கு நீங்க அவளுக்கு மாப்பிள்ளை தேட. இப்பவே ஏன் கவலை படறீங்க?”, வானதிக்கு வேடிக்கையாக இருந்தது.
“சும்மாயிரு லக்ஷ்மி. “,வாசு அதிட்டியவன், “இன்னிக்கு நீ உருப்படியா ஒரு காரணம் சொல்லணும் வானதி. ஏன் கல்யாணம் வேண்டாம்? உன் கூட படிச்சவங்க எல்லாம் கல்யாணம் முடிச்சு குழந்தையும் வந்தாச்சு.”
“இதுக்கு நான் புதுசா சொல்ல ஒன்னுமேயில்லை அண்ணா. எனக்கு பண்ணிக்க தோணலை. அப்படி செஞ்சாலும் அது டைவர்ஸ்லதான் போய் முடியும். எதுக்கு இன்னொருத்தர் வாழ்க்கையை கெடுப்பானே. “, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி அலுத்துப்போன குரலில் கூறினாள் வானதி.
“அது எப்படி தீர்மானமா சொல்ற? ஏன் உனக்கு பொண்ணுங்களைத்தான் பிடிக்குமா? அதுனாலதான் வேண்டாங்கறியா?”, லக்ஷ்மி கேட்க,
“ஹ ?”, தான் கேட்டது நிஜம்தானா என்ற பார்வையில் அதிர்ந்து போய் வானதி பார்க்க,
“லக்ஷ்மி… ச்சி..என்ன பேசற? மூடு வாயை.”, வாசு கத்தினான். அவள் அன்னை பார்வதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“என் வாயை மூடுவீங்க? ஊர் வாயை என்ன செய்ய? எங்கிட்டயே கேட்டிருக்காங்க, ‘என்ன உன் நாத்தனார் அங்க சிங்கப்பூர்ல யாரோடவும் சேர்ந்து இருந்தாளா? அவன் அந்த ஊர்க்காரன்னு நீங்க பிரிச்சி கூட்டிட்டு வந்துட்டீங்களான்னு?’, எங்க போய் நான் முட்டிக்க ? “, லக்ஷ்மி அடங்க மறுத்துப் பேசிக்கொண்டே போகவும், கேட்க முடியாமல் காதைப் பொத்திக்கொண்டார் பார்வதி. இரும்பாய் அமர்ந்திருந்தார் அவள் தந்தை நாராயணன்.
அவள் அன்னையிடம் சென்று அணைத்துக்கொண்ட வானதி, “மா, அப்படியெல்லாம் எதுவுமே இல்லைமா. “, என்றவள், “அண்ணி, நீங்க பொழுது போறதுக்கு கதை படிப்பீங்கன்னு தெரியும், ஆனா அதுல படிச்சதெல்லாம் இங்க வந்து கொட்டாதீங்க ப்ளீஸ். வீணா அம்மாவை நோகடிக்காதீங்க.”, கண்டிப்புடன் கூறினாள்.
“உன் சம்பாத்தியத்துக்காகத்தான் உன்னை கட்டிக்குடுக்காம வெச்சிருக்கோம்னு கூடத்தான் பேசறாங்க. உனக்கு இஷ்டமில்லை, நீ கல்யாணம் செய்துக்கலை. நாங்க நம்பலாம். வேற யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. அதை பத்தி உனக்கென்னமா ? நீ பாட்டுக்கு இரு.எங்க காலம் வரைக்கும் உனக்கு துணையா இருப்போம். “, விரக்தியாய் நாராயணன் கூறியதைக் கேட்கவும், மனதை அறுத்தது வானதிக்கு.
“அப்பா?”, கண்ணில் கண்ணீர் மல்கியது.
“அப்பாதான். காலேஜ் முடிச்சதும், உனக்கு கல்யாணத்தை முடிசிருக்கணும். பொண்ணு ஆசைப்படறான்னு எம்.பி.ஏ படிக்க வெச்சி, வேலைக்கு போகணும்னா அனுப்பி, வெளி நாடு போகணும்னாலும் அனுப்பினேன் இல்லையா? இன்னிக்கு உனக்கு எல்லாம் தெரியும்னு தெளிவு வந்துடுச்சு. இனி புருஷன்னு ஒருத்தன் எதுக்குன்னு முடிவு பண்ணிட்ட. காலத்தே பயிர் செய்னு சொன்னதை பெத்த பாசத்துல மறந்ததுக்கு, எனக்கு தண்டனை.”
“அப்பா… அப்படியெல்லாம் இல்லைப்பா. “, சின்னக் குரலில் கூறினாலும், அவளுக்கே தெரிந்தது தன் பெற்றோரை இப்படி வருத்தப்பட வைப்பது பெரும் குற்றம் என்று, ஆனாலும் ஒப்பாத ஒரு விஷயத்திற்கு எப்படி தலையாட்டுவது? இடியாப்ப சிக்கல். தன் மனம் மாறும், மாறும் என்று காத்திருந்தாலும் ஒன்றும் நடப்பது போலத் தெரியவில்லை. தன்னைத் தேடி வந்த காதல் கோரிக்கைகளையும் நிராகரிக்கவே செய்தாள். அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இப்படி குடும்பமே சுற்றி நின்று கேட்டாலும், என்ன பதில் இருக்கிறது சொல்வதற்கு?