கல்யாணம் முடிந்து இரு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. வானதியும் வினோத்தும் ஒரே வீட்டில் இருக்கும் இரு நண்பர்கள் போல இருந்து கொண்டார்கள். வானதி அலுவலகத்திலிருந்து வந்ததும், மலர் இரவு சமையலை முடித்து, எழு மணி போல, செல்லுமாறு பார்த்துக்கொண்டாள். ராஜினாமா கடிதத்தை அலுவலகத்தில் கொடுத்திருந்தாள். இரண்டு மாத நோட்டீஸ் என்பதால், இந்த இரண்டு மாதம் செல்ல வேண்டியிருந்தது.
இரவு இவர்கள் தனித் தனி ரூமில் படுத்துக்கொள்வது இவர்கள் மட்டுமே அறிந்தது. முன்பு பேசியது போலவே, ஒரு படுக்கையறையை, இவள் ஆபிஸ் என்று சொல்லியிருந்தாள். அதனோடே இருந்த பாத்ரூம் இவளுடையதாகியது. பேச்சு வாக்கில், இருவரும் காலையில் சீக்கிரம் கிளம்ப இது வசதி என்பது போல மலரிடம் சொல்லியிருந்தாள். எப்படியும் மலருக்கு சம்பூரணத்திடமிருந்து விசாரணை இருக்கும் என்று தெரியும்.
வானதி அவள் அறையில் கட்டிலில் அமர்ந்தபடியே போனை நோண்டிக்கொண்டிருக்க, “போலாமா வானதி?”,வாசலருகே கல்லூரிக்கு செல்ல கிளம்பி நின்றான் வினோத். பார்மல் உடையில் கம்பீரமாக இருந்தான். அவளுமே எளிமையாக ஒரு சல்வாரில் பாந்தமாக இருந்தாள். ஆனால் இருவரின் பார்வையும் மரியாதையாகவே இருந்தது. உடை பற்றியோ, தோற்றம் பற்றியோ ஒரு வார்த்தை பேசவில்லை.
“ம்ம்…போலாம்,”, தன் கைப்பையை எடுத்தவள் அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனோடு ஒன்றாக கீழே இறங்கினாள். அவனுமே அவன் அறையில் கவனமாக படுக்கையை சரி செய்துவிட்டுத்தான் வெளியே வருவான். சுத்தம் செய்ய வரும் மலரின் பார்வைக்கு அனைத்தும் அதன் இடத்தில் இருக்கும்.
அப்போதுதான் தன் தவறு புரிய, ஒரு அசட்டு சிரிப்புடன், ஒற்றைக் கையை திருப்பினான், அவளிடம் மன்னிப்பு வேண்டுவதாக. வானதியும் அவன் செய்கையில் தலையசைத்து புன்னகைத்து, “ நேத்தே சொன்னார், நான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேங்க்கா. அதான், என்னை நம்பாம சாரே நேரடியா சொல்லிட்டார். மாத்திடுங்க. இனிமே சனிக்கிழமையானா மாத்திருங்க.”, என்று சேர்த்து, வீட்டுப் பொறுப்பு என்னதுதான் என்னும் விதமாக முடிக்கவும், இவர்களின் இந்த கண் ஜாடைகளைப் பார்த்து பூரித்துப் போன மலரும் சந்தோஷமாக தலையாட்டிச் சென்றார். வானதிக்கும் வினோத்திற்கு மட்டுமே தெரியும், வானதி அந்த அறை வாசலைத்தாண்டி உள்ளே சென்றதில்லை என்று.
அன்று மதியம் ஒன்னு இரண்டு பிட்டு சேர்த்து, ஒரு கவிதையாக சம்பூர்ணத்திடம் விவரித்தார் மலர்.
“நீங்க இங்க இருந்து பார்க்கணும்மா. இப்பல்லாம் தம்பி பொறுமையா சின்னம்மா கூட பேசி சிரிச்சு அரை மணி ஆகிடுது காலை டிபன் முடிக்க. முன்ன மாதிரி போனைப் பார்த்துகிட்டு அஞ்சு நிமிஷத்துல எதையோ தின்னேன்னு பேர் பண்ணிட்டு போறதில்லை.”
“ம்ம்…நான் வந்து உட்கார்ந்தா, இப்படி ஃப்ரீயா இருக்க மாட்டாங்க மலரு. நீ சொல்றது கேட்டே எனக்கு திருப்திதான். இதுக்குத்தான ஆசைப்பட்டேன்”, என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார்.
சம்பூர்ணத்திடம் வானதியும் அடிக்கடி பேசுவாள். அப்படி ஒரு முறை பேசும் போது, “ஏன் கண்ணு… உன் உடுப்பெல்லாம் ஏன் உங்க அறையில வெக்காம தனியா வெச்சிருக்கியாம் ?”, என்று வினவினார்.
ஒரு நொடி தடுமாறினாலும், “ எல்லா விஷயமும் உங்களுக்கு வந்துடுதா அத்தை ? ஆபிஸ் போறதுனால நிறைய ட்ரெஸ் இருக்கு. அவர் கப்போர்ட்ல இடமில்லை. அதான் இன்னொரு ரூம்ல வெச்சிருக்கேன். இல்லைன்னா அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்னு பிரிச்சு வெக்கணும். இங்கையும், அங்கையுமா தேடணும். இதில என்ன அத்தை இருக்கு ?”, சாதரணம்போல கூறினாள் வானதி.
“ஏன்மா… ஒரு பக்கம்தான் வினோத் உடுப்பு இருக்கும். இன்னொரு பக்கம் இருக்க பெரிய அலமாரி நீ எடுத்துக்கலையா? ஸ்வேதா வெச்சிருந்த துணி மணியை விடவா நீ வெச்சிருக்கப் போற ?”
இப்போது முழித்தாள் வானதி. “அது… அது பூட்டியிருந்தது அத்தை. நான் இவரை கேட்கலை. இந்த ரூம்ல நான் அடுக்கிக்கறேன்ன்னு சொன்னப்போ அவர் ஒன்னும் சொல்லலை. “
“அப்போ… நான் அவ்ளோ சொல்லியும் இன்னும் அவ உடுப்பெல்லாம் அவன் குடுக்காமத்தான் வெச்சிருக்கானா ? என் தப்புதான். அந்த போட்டோவை எடுத்த போதே அலமாரியையும் காலி செஞ்சிருக்கணும். நீ …நீ மனசுல எதுவும் வெச்சிக்காதம்மா. நான் அவன் கிட்ட பேசறேன். என்ன நினைச்சிட்டு இருக்கான்….”, ஒரு பக்கம் சம்பூர்ணம் பொரிய, ‘அச்சோ…அவரை மாட்டிவிட்டுட்டோமே…’, என்று இந்தப் பக்கம் தலையில் கைவைத்தாள்.
அவரிடம் ஒரு வழியாக பேசி வைத்ததும், சுருக்கமாக அவனை மாட்டி விட்ட செய்தியை வாட்ஸப்பில் தட்டிவிட்டு, சமாளிங்க. சாரி என்று அனுப்பியிருந்தாள்.
அவன் பார்த்ததற்கான அறிகுறி மட்டும் காட்டியது. பதில் இல்லை. அன்று மாலை வீடு திரும்பியதும், அவனை பார்த்தாள். முகத்திலிருந்து ஒன்றும் தெரியவில்லை. அவனோடே மாடிக்கு சென்றவள், அறை வாசலில் வைத்து,
“என்ன… அத்தை போன் செய்யலையா ?”, என்று அவளாகவே கேட்டாள்.
“ஹ்ம்ம்…. அதான் கொளுத்திப் போட்டியே… சம்பூர்ணம் எப்படி வெடிக்காம இருக்கும்?”, நக்கலாக பதிலளித்தான்.
“அய்யோ… ரொம்ப திட்டினாங்களா? அது சாதாரணமாத்தான் பேசிகிட்டு இருந்தோம். திடீர்னு இது பத்தி கேட்கவும், எனக்கு என்ன சொல்றதுன்னு சட்டுனு தோணலை. உங்க ரூம்ல ஸ்வேதாவோட அலமாரி எனக்கு சரியா ஞாபகமும் இல்லை.”
“ஹ்ம்ம்… உள்ள ரூமுக்கு வா. எது எங்க இருக்குன்னு பார்த்துக்கோ. திரும்பவும் மாட்டாதே. என்னையும் மாட்டி விடாத. அவ அலமாரி அப்படியேதான் இருக்கும்னு நான் சொல்லவும், எங்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”, ஒரு பெருமூச்சுடன் அறைக்குள் சென்றான்.
‘அச்சோ… இப்ப இதை எப்படி சரி செய்ய?’, என்று யோசித்தவள் கல்யாணம் முடித்து, முதல் முறையாக அவன் அறைக்குள் நுழைந்தாள். முன்பொரு முறை ஸ்வேதாவுடன் பார்த்திருந்த அறையை இப்போது மீண்டும் சுற்றிப் பார்த்தாள்.
படுக்கையின் நேர் எதிரே, வினோத் ஸ்வேதாவின் நிச்சயத்தின் போது எடுத்த போட்டோ காணவில்லை. சுவர் காலியாக இருந்தது. அவள் கண் போன திசை பார்த்தவன், “ அம்மா பெட்டை மாத்தினாங்க. போட்டோவை எடுத்துட்டாங்க. ஆனா நான் அந்த சுவரை பார்க்கும்போது அந்த போட்டோதான் தெரியுது. என் ஞாபகத்தை எப்படி அவங்க அழிக்க முடியும் ?”, ஒரு உதட்டு சுழிப்புடன் கேட்டவன், மறு பக்கம் கை வீசி,
“இது ஸ்வேதா கப்போர்ட். அவளோட, வம்சியோட ட்ரெஸ் எல்லாம் இருக்கும். அதை நான் எடுக்க விடலை. பூட்டித்தான் வெச்சிருக்கேன். எப்பவாச்சம் காத்து போக திறந்து வைப்பேன். இன்னமும் அதை திறந்தா, அவள் வாசம் இருக்கும். அதை எடுக்க அம்மாவை அப்ப நான் விடலை. எல்லாத்தையும் அனாதை அசிரமத்துக்கு குடுக்க சொன்னாங்க. சரின்னேன், செய்யலை.”, தோளை குலுக்கினான். இதுதான், இப்படித்தான் என்பது போல இருந்தது அவன் உடல் மொழி.
ஐந்து வருடம் கழித்தும், இப்படி வாசம் பிடித்து அவள் நினைவில் வாழும் கணவன் பெற என்ன தவம் செய்தாளோ ஸ்வேதா. உடனிருந்து வாழத்தான் குடுத்து வைக்கவில்லை என்று நினைத்து வருந்தினாள் வானதி.
“சாரி…. நான் அத்தைகிட்ட பேசறேன். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு புரிய வெச்சா, சரியாகிருவாங்க. “, வருத்தமாய் வானதி சொல்லவும்,
“ஹே… அப்பப்ப அவங்க எங்கிட்ட கோச்சிகிறது வாடிக்கைதான். முடிஞ்சா பேசு. இல்லைன்னாலும் நாலஞ்சு நாள் கழிச்சு நான் பேசினா பேசுவாங்க.”, என்று சமாதானம் சொல்லவும், தலையசைத்து, “சரி, நான் என் ரூம்ல இருக்கேன். நீங்க கீழ போகும் போது சொல்லுங்க.”, என்று விடை பெற்றாள்.
ஏனோ அந்த அறையில் இருப்பதே என்னவோ ஸ்வேதாவிற்கு துரோகம் செய்வது போல் இருந்தது. ‘எதுக்கு இப்படி ஒரு எண்ணம். சாதாரணமாத்தான பேசிகிட்டு இருந்தோம்.’, என்று அவளே கேட்டுக்கொண்டாள்.
அவள் அறையிலிருந்து சம்பூரணத்திற்கு அழைத்தாள்.
“அத்தை…என்ன இது, அவர் கிட்ட சண்டை போட்டிருக்கீங்க ? ஒரே சோக கீதம் வாசிக்கறார் உங்க பிள்ளை.”, விளையாட்டாகவே ஆரம்பித்தாள்.
“ம்ம்… அதே சோகத்தோட அவ துணிமணியெல்லாம் காலி செய்ய சொல்லு.”, காரமாய் வந்தது மாமியாரின் குரல்.
அதில் புருவம் உயர்த்தி, உதட்டை பிதுக்கியவள், “ அத்த… ரோம் நகரை ஒரே நாள்ல கட்டலைன்னு ஆங்கிலத்துல ஒரு சொலவடை இருக்கு. உங்க பிள்ளையும் அப்படித்தான். நான் வந்த உடனே ஸ்வேதா நினைபெல்லாம் அழிச்சிடணும்னு எப்படி சொல்ல முடியும் அவர்கிட்ட ? இப்ப அவ துணிமணி இருந்தா என்ன குறைஞ்சி போச்சு ? கவலைப் படாதீங்க, அவ புடவையைக் கட்டி பிடிச்சிகிட்டு தூங்கலை அவர். அதுக்கு நான் சாட்சி.”, ஒரு ப்ஃளோவில் பேசிக்கொண்டே நிமிர்ந்தவள் கண்டது, வாசலில் கைகட்டி அவளைப் பார்த்துக்கொண்டிருந்த வினோத்தைத்தான். ‘அச்சோ… கேட்டுகிட்டு இருந்தாரா!’, என்று நினைத்து அவனைப் பார்த்து முழிக்க, உள்ளே நுழைந்து அவள் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தவன், “பூம்மா… உங்க மருமகளுக்கே பிரச்சனையில்லை. போறுமா? அவ சாட்சியைக் கேட்டப்பறமாச்சம் எங்கிட்ட பேசறது ?”, சின்ன சிரிப்புடன் கேட்கவும்,
“போடா போக்கிரி. எங்கிட்ட பேசறதுக்கு உன் பொண்டாட்டியை தூது அனுப்பறியா ? ஆனாலும் கண்ணு, அவ அனுசரிச்சு போறாங்கறதுக்காக ரொம்ப அடம் பிடிக்காத. அவ மனசு கோணாம நடந்துக்கோ. சரியா ராசா ?”, சம்பூர்ணம் சமாதானமாகி அறிவுரை வழங்க, “ஹான் ஹான்… இந்தா நீங்களே மிச்சத்தை பேசி முடிங்க. நான் கீழ போறேன் சாப்பிட.”, மீண்டும் அவள் கைப்பேசியைக் குடுத்துவிட்டு, அவள் தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு செல்ல, வாயைப் பிளந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வானதி.