“ஹே…. ஈசி. நான் இல்லைன்னு சொல்லவேயில்லை. அவளைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன?  நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். மத்தபடி உங்க மனைவியை குறை சொல்லவேயில்லை. அப்படி சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோங்க.”, காதைப் பிடித்து வானதி சிரிக்கவும், வினோத் ஒரு லேசான சிரிப்போடு தலையசைத்தான்.
“இங்க சூர்யோதயம் நல்லா இருக்குமாமே? நாளைக்கு காலையில கூட்டிட்டு போக ஒரு அக்கா வரதா சொன்னாங்க. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்.”, வானதி பேச்சை மாற்றவும்,
“ஏன்…என்னை கேட்க வேண்டியதுதான? நானே கூட்டிட்டு போயிருப்பேனே.”, வினோத் கேட்டான்.
“இல்லை உங்க தூக்கத்தை எதுக்கு கெடுப்பானே. நீங்க நிறைய வாட்டி பார்த்திருப்பீங்க. அவங்க வயலுக்கு தண்ணி பாச்ச போவாங்களாம் அந்த நேரம். அதான்…..”, அவன் முகம் சற்று இறுக்கமானது, வீட்டு வாசலில் இருந்து வந்த வெளிச்சத்தில் தெரியவும், வானதியின் குரல் தேய்ந்தது.
“என் கிராமத்தை உனக்கு சுத்தி காட்றதுல எனக்கு ஒரு சிரமும் இல்லை. ஆனா உனக்கு தனியா பார்த்துக்கணும்னா, எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. அம்மா கேட்டா நீயே சமாளிச்சுக்கோ.”, என்று சொன்னவன், அவளை முந்திக்கொண்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
‘ஹ்ம்ம்… சரியான தொட்டா சிணுங்கி… நல்லதுக்கே காலமில்லை. ஆனாலும் ஒரு பாயிண்ட் கரெக்ட். அத்தையை சமாளிக்கணும். தாய்ப் பாச ப்ராக்கெட்டைப் போடுவோம். அதை மிஞ்ச ஆயுதமில்லை.”, என்று முடிவெடுத்தவள், அவன் திரும்ப வண்டியோட்ட வேண்டும், மறுனாள் கல்லூரி செல்ல வேண்டும், அதனால் காலையில் தூங்க வேண்டும் என்று அடுக்கடுக்காக கதை சொல்லி, பின் அவர்கள் அறைக்கு வந்தாள்.
இரவு உடையை எடுத்துச் சென்று, பின் கட்டிலிருந்த குளியலைறையில் எளிமையான காட்டன் நைட்டி மாற்றி உள்ளே வந்தவளைப் பார்த்தவன், “ எப்படி படுக்கறது? “, என்று கேட்டான்.
“நான் கீழ படுத்துக்கறேன். டென்ட்ல தரையில் தூங்கி பழக்கம்தான் எனக்கு. ஒரு  போர்வையும் தலைகாணியும் குடுங்க போறும்.”, எளிதாக தீர்வு கூற,
“ம்ம்…இல்லை, நான் வேணா… “
“நோ ஃபார்மாலிடீஸ். நீங்க மேலயே படுங்க. காலையில எழுந்து போறதுக்கும் இதுதான் வசதி. அத்தைகிட்டயும் உங்களுக்கு தூக்கம் வேணும்னு கதை சொல்லி சம்மதிக்க வெச்சிட்டேன். உங்களை ஒன்னும் கேட்க மாட்டாங்க. “, பேசக்கொண்டே விடிவிளக்கைப் போட்டு லைட்டை அணைத்த வானதி தரையில் படுக்கவும் வினோத்திற்குத்தான் சங்கடமாக இருந்தது.
காலை எட்டு மணி போல் எழுந்தவன், சோம்பலாய் வெளியில் வர, அவனுக்காகவே காத்திருந்தது போல சம்பூர்ணம், “மருமக சரியாத்தான் சொல்லியிருக்கு. என்னடா, இவ்வளவு நேரம் தூங்கிட்ட ?”, என்று விசாரித்தார்.
காலை உணவருந்த வினோத் குளித்து முடித்து வரவும், வானதி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவள் முகமே மலர்ந்து இருந்தது. கழுத்தில் ஒரு காமெரா, கையில் செல்போன் சகிதம் வந்தாள்.
“ரொம்ப ரொம்ப அழகா இருந்துச்சு அத்தை. நிறைய  போட்டோ எடுத்தேன்.”, என்று சந்தோஷமாக சொல்லிய மருமகளை வாஞ்சையாக தலை கோதியவர், “ சரி, பசியா இருப்ப, டிபன் சாப்பிட வா.”, என்று அழைத்தார்.
“ஓஹ்… இல்ல…கோமதிக்கா நீராகாரம் குடுத்தாங்க. அதைக் குடிக்கவும்தான் தெம்பா வீட்டுக்கு வர முடிஞ்சிச்சு…”, பேசிக்கொண்டே சம்பூர்ணத்துடன் செல்ல, இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த வினோத்தான், “இந்த நெருக்கத்தைத்தான் அம்மா எதிர்பார்த்திருப்பாங்க ஸ்வேதாகிட்ட. இப்படி சகஜமா பழகவும், அம்மாக்குதான் எவ்வளவு சந்தோஷம் ? வானதியை கல்யாணம்  செய்ய எடுத்த முடிவு கரெக்ட்தான். ஸ்வேதா செல்லம்…நீதான் அனுப்பினியா உன் பெஸ்டியை ? என்னையும் அம்மாவையும் பார்த்துக்க ?”, மனதுக்குள் பேசிக்கொண்டிருந்தவனை,
“என் போட்டோஸ் பார்க்கறீங்களா ? “, எனக் கேட்டு காமெராவை நீட்டினாள் வானதி.
‘இப்ப வேண்டாம்னு சொன்னா வருத்தப்படுவா…ரெண்டு நிமிஷம் பாருடா…’, என்று நினைத்துக்கொண்டே, கையில் வாங்கி, அசிரத்தையாக ஆரம்பித்தவன், கண்ட இரண்டு மூன்று புகைப்படங்களிலேயே, அவள் இக்கலையில் தேர்ந்தவள் என்று புரிந்து நிமிர்ந்து பார்த்தான், இம்முறை கொஞ்சம் ஆச்சரியம் கலந்த மரியாதையுடன்.
“என்ன …. சும்மா பார்த்ததை கிளிக் பண்ணிருப்பேன்னுதான நினைச்சீங்க? ஹா ஹா…அப்படித்தான், ஆனாலும் கொஞ்சம் வித்தியாசமா. இன்னும் இரண்டு மூணு ஃபில்டர் எடுத்துகிட்டு வந்திருந்தா, இன்னும்கூட நல்லா வந்திருக்கும். கொஞ்சம் என் ஐபோனிலும் எடுத்தேன்… ஆனா எடுத்துட்டு அப்பறம் சாஃப்ட்வேர் கொண்டு அட்ஜஸ்ட் பண்றது சாலஞ்ச் இல்லை. லைட் அண்ட் ஷாடோ ரியல்லா வெச்சி நாமளே விளையாடணும்.”, உற்சாகமாக கையை வீசிப் பேசிக்கொண்டிருந்த வானதியைத்தான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“இது… டெக்னிகலா எனக்கு பெருசா தெரியாது. ஆனா பார்க்கும்போதே தெரியுது, உனக்கு நல்ல திறமை இருக்கு.  உன் பொழுதுபோக்கு இதுதானா? “, வினோத் கேட்க,
“ம்ம்…இதுவரை ஹாபியாத்தான் இருந்தது. ஆனா இப்ப இதுல கொஞ்சம் ஃபோகஸ் செய்யலாம்னு இருக்கேன்.  பேசாம வேலையை விட்டுடட்டுமா?”, வானதி மழை வருமா என்ற வகையில் இப்படிக் கேட்க, வினோத் விழித்தான்.
“ஏன்… இப்பத்தான ப்ரமோஷன் கூட வந்துச்சு? உனக்கு பிடிச்சுதான வேலை பார்க்கற ?”
“ம்ப்ச்… பிடிச்சு எல்லாம் வேலை பார்க்கலை. எனக்கு இது போர் அடிச்சிருச்சு. ஆனா , வேலையை விட்டு வீட்ல இருந்தா, கல்யாணத்துக்கு இன்னும் ப்ரஷர் அதிகமாகுமேன்ற பயத்துலதான் வேலைக்கு போயிட்டிருந்தேன்.”, தோளைக் குலுக்கியவள்,
“பட்… நீங்க வொர்ரி பண்ண வேண்டாம். நான் சிங்கப்பூர்ல சம்பாரிச்ச காசுல இங்க அப்பா ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கார். அதுல வாடகை இருவத்தஞ்சாயிரம் வருது. என்னோட சேவிங்க்ஸ், இன்வெஸ்ட்மென்ட்ஸ் இருக்கு. மாசம் உங்களுக்கு என் பங்கு பணம் குடுத்துடுவேன்.”
இதைக் கேட்டு முகம் இறுகியவன், “ நான் கேட்டேனா?  நீ எந்த காசும் எனக்குத் தர வேணாம். உன் அக்கவுண்ட் நம்பர் குடு, நான் உன் செலவுக்கு பணம் போடறேன்.”, என்றான்.
“ஹே… இப்ப எதுக்கு கோவம் ? நம்ம டீல் மறந்துட்டீங்களா? உங்க வீட்ல நான்  சும்மா உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். மனைவி போஸ்ட்டுங்கறது ஊருக்குத்தான். நமக்கு இதுல எந்த கன்ஃபூஷனும் இருக்கக் கூடாது. ம்ம்ம்… ஒன்னு செய்வோம். மலர் அக்காக்கு சம்பளம் பதினஞ்சாயிரம்தான? அத்தை சொன்னாங்க. அதை இனிமே நான் குடுத்துக்கறேன்.  வீட்டு செலவுக்கு நீங்க எப்பவும் போல பார்த்துக்கோங்க. சரியா?”
இப்படி சொல்பவளிடம் வினோத்தால மறுத்துப் பேச முடியவில்லை. அதை அவளிடமும் கூறவும், கலகலத்துச் சிரித்தாள். “நீங்க என்ன சொல்வீங்கன்னு யோசிச்சு முன்னாடியே பதில் ரெடி செஞ்சிருந்தேன். “
உள்ளே அடுக்களையிலிருந்து, வேலை செய்யும் காமாட்சி கூடத்திற்கு வர, சம்பூர்ணம் தடுத்து நிறுத்தினார். “ஏண்டி இவளே… புள்ளையும் மருமகளும் அங்க பேசி சிரிச்சிகிட்டு இருக்காங்க. இப்ப எதுக்கு அங்க போற ? போ, கொல்ல பக்கமா சுத்திகிட்டு போ…”, என்று விரட்டி விட்டார். அவர்களின் பேச்சை கேட்டிருந்தால் முகத்தின் சிரிப்பை தொலைத்திருப்பார். நல்ல வேளை கேட்கவில்லை.
வெளியே, பேச்சு சற்று திசை மாறியிருந்தது.
“ஏன் உனக்கு வேலை பிடிக்கலை? இதுக்கான படிப்புதான படிச்ச? பிடிச்சுதான எடுத்த?”, வினோத் கேட்டுக்கொண்டிருந்தான்.
“அட நீங்க வேற… நான் விஸ்காம் படிக்கணும்னுதான் நினைச்சிருந்தேன். எல்லாம் ஸ்வேதா செஞ்ச அடாவடி. எங்க அம்மாகிட்ட இதை படிச்சா மீடியாலதான் வேலை பார்க்கணும், அது இதுன்னு போட்டுக் குடுத்துட்டா. பி.காம் படிச்சு, எதாவது பாங்க் பரீட்சசை எழுதினோமா, வேலையில சேர்ந்தா, நீங்க கல்யாண்ம் பண்ண வசதியா இருக்கும் ஆன்ட்டின்னு நல்லா ஏத்தி விட்டுட்டா. அப்பறம் என்னை எங்க பேச விட்டாங்க. அவளே எங்க ரெண்டு பேருக்கும் அப்ளிகேஷன் போட்டு காலேஜ் ஃபீஸ் கட்டுன அப்பறம்தான் ஸ்வேதா புயல் கரை சேர்ந்துச்சு.”, வானதி விவரிக்க, வினோத்தால் எளிதாக கற்பனை செய்ய முடிந்தது. ஸ்வேதா அப்படித்தான், இது நல்லது என்று முடிவெடுத்துவிட்டால எதிராளியின் ஆசையெல்லாம் கருத்திலேயே பதியாது.
அரைப் புன்னகையோடே அவள் சொல்வதை தலையாட்டி ஆமோதித்தவன், “ ஆனா M.B.A வும் படிச்சயே ?”
“ம்ம்… அதுவும் அப்படித்தான். பி..காம் முடிக்கவும், மேல படிக்கணும், இது பத்தாதுன்னு சொன்னேன். நான் ஃபைனான்ஸ் படிக்கலாம்னு சொன்னா, அதுல நிறைய கணக்கு வருது, என்னால முடியாது, HR  பண்ணலாம்னு ஒரு பஞ்சாயத்தை கூட்டினா. முடியவே முடியாதுன்னு நான் அடம் பிடிக்கவும், உனக்கும் வேணாம்  எனக்கும் வேணாம்னு ஆப்ரேஷன்ஸ் மானேஜ்மென்ட் எடுத்தோம்.”, தோளைக் குலுக்கி ‘என் நேரம்’, என்பதுபோல பார்க்க, வினோத்திற்கு  குழப்பம்.
“ஏன் வானதி, நீ உனக்கு பிடிச்சதும், ஸ்வேதா அவளுக்கு பிடிச்சதும் படிக்க வேண்டியதுதான. இரண்டு பேரும் எப்படியும் ஒரே காலேஜ்லதான படிச்சிருப்பீங்க ?”
“அப்பறம் அவளுக்கு யார் சொல்லித்தருவாங்க? நாங்க இரண்டு பேரும் ஒண்ணா எடுத்தா, அம்மணி க்ளாஸ்ல பெருசா கவனிக்க வேணாம், கட் அடிக்கலாம். பரீட்சைக்கு எப்படியும் நான் அவளுக்கு சொல்லித் தந்துடுவேன்னு தைரியம்.” வானதி சொல்லவும், ஸ்வேதாவுக்கு  இப்படியும் ஒரு தோழியா? அவள் குறைகள் தெரிந்தும், அவளுக்காக வளைந்து கொடுத்து பார்த்துக்கொள்பவள். இதுவரையிலும், அவன் மட்டுமே ஸ்வேதாவிற்காக அவள் நலனுக்காக வளைந்து கொடுத்துப் போனவன் என்று நினைத்துக்கொண்டிருந்தான்.
வானதியின் மேல் லேசாக பாசம் வந்ததோ?