அத்தியாயம் – 5
படுக்கை அலங்காரத்தைப் பார்த்து எரிச்சலானவன்,
“உங்க அண்ணனா?”, என்று கேட்டான், உள்ளே நுழைந்தபடியே.
“வாய்ப்பே இல்லை. கண்டிப்பா செய்திருக்க மாட்டான். அவனும் தான நம்மோட எல்லாரையும் வழியனுப்பி வெச்சிகிட்டு இருந்தான்?”, வானதி கேட்கவும், கோட்டை கழட்டியவன் ஒரு நொடி விரைத்து,
“அஃப் கோர்ஸ்… அந்த ஹாஃப் பாயில் வேலையாத்தான் இருக்கும்.”, பல்லைக் கடித்தபடி போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தவன், மறுமுனை பேசியதும்,
“டேய்…பக்கி, பன்னாடை… குறை பிரசவத்துல பொறந்தவனே…”என்று ஆரம்பித்து அடுத்த இரண்டு நிமிடம் தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் கோர்த்து ஒரு அர்ச்சனை ஆலாபனை செய்ய, அதைக் கேட்டு அதிர்ந்தவள், சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.
கைப்பேசியை ஸ்பீக்கரில் போட்டு, மேசையில் வைத்த வினோத்தும் அவள் அருகே அமர்ந்து அர்ச்சனையைத் தொடர, “டேய்… மூச்சு வாங்கிட்டு திட்டுடா… ஒரு ஆர்ட்டின் போட்டு அம்பு விட்டது ஒரு குத்தமாடா?”, பரிதாபமாக சங்கரின் குரல் கைபேசியில் வர, பொங்கி வந்த சிரிப்பை கைக்கொண்டு பொத்தினாள் வானதி.
“அம்பு… அம்பு வேற …சொங்கிப் பயலே… “, என்று மறுபடி வினோத் எகிற… “டேய்… டேய்… நைட்டு பன்னெண்டு மணிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்டா… காலையில திட்டு… ஒரு நல்லெண்ணத்துல….”
“அடி செருப்பால… உன் குருவி மூளைக்கு எதுக்கு வேலை குடுக்கற ? கையில இப்ப சிக்கின….”, என்று வினோத் மீண்டும் தொடர,
“மச்சி… பாட்டெரி காலியாகுதுடா……”, என்று இழுத்தபடியே சங்கர் போனை வைத்துவிட்டான். சத்தமில்லாமல் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்தவள், இப்போது தடையின்றி சிரிக்க ஆரம்பித்தாள். அவள் சிரிப்பைப் பார்த்தவன், தானும் சிரிக்க, “ எப்படி வினோத்…. எல்லா கெட்ட வார்த்தையும் இப்படி பாமாலையா கோர்த்து திட்டினீங்க?”, என்று சொல்லி மீண்டும் சிரிக்கத் தொடங்கினாள்.
தானா இப்படி பேசியது என்று லேசாய் தலையை ஆட்டியவன், முடியைக் கோதிக்கொண்டு, சாய்ந்து அமர்ந்தான். “தெரியலை… ரொம்ப நாள் ஆச்சி …இப்படி பேசி… காலேஜ் டைம்ல பேசினதுதான்…. இப்ப இந்த பாட்டுக்கெல்லாம் டான்ஸ் ஆடி அந்த டைமுக்கே போகவும்… இதுவும் வந்துடுச்சு போல….”, சற்று வெட்கப்பட்டு குனிந்து…”சாரி… உன் எதிர்க்க பேசியிருக்கக் கூடாது….”, என்று தோள் குலுக்கினான்.
“ஏன்… நீங்க பேசின ஒன்னு இரண்டு வார்த்தை தவிர மத்ததெல்லாம் நான் கேட்டதுதான். எனக்காகவெல்லாம் சென்சார் பண்ண வேண்டாம்… பாவம், சங்கர் அண்ணா… காதுல ரத்தம் வந்திருக்கும் இன்னேரம்…”, சொல்லும்போதே மீண்டும் சிரிப்பு தொற்றியது.
“காலேஜ்லயும் இப்படித்தான் எதாவது கிறுக்குத்தனமா செய்துட்டு வாங்கி கட்டுவான். அப்படியே தொடருது….”,என்று பேசியபடியே ஷூவைக் கழட்டினான். ஏனோ இப்படி சேர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது மனதுக்கும் இலகுவாக இருந்தது. எப்படி இந்த இரவைக் கழிக்கப் போகிறோமோ என்று நேற்று இரவு சஞ்சலப்பட்டு வருத்திக்கொண்டிருந்ததை யோசித்துக்கொண்டிருந்தான்.
“நான் முதல்ல குளிச்சிட்டு வரட்டுமா? பூவெல்லாம் தட்டிப் போட்டுட்டேன். நீங்க படுக்கையை கொஞ்சம் பிரிச்சி போடுங்க. இது ட்வின் பெட்தான். உங்க ஃப்ரெண்டு சேர்த்து போட்டிருக்கார்.”, சிரிப்போடே அவன் சிந்தனையைக் கலைத்தாள்.
“ஆஹ்… நீ போ. நான் பார்த்துக்கறேன்.”, அவளை அனுப்பி படுக்கையைப் பிரித்துப் போட்டான்.
அவள் வந்து, இவன் சென்று திரும்புவதற்குள், ஒரு படுக்கையில் வானதி உறங்கிப் போயிருந்தாள். இந்த சில வருடங்கள் தனிமையிலேயே இருந்தவனுக்கு, ஏனோ இன்னொரு ஜீவன் அருகாமையில் இருப்பதே சற்று ஆறுதலாக இருந்தது.
“ஓய் பொண்டாட்டி…. உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் எனக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆகிருவா போல.  நீ எப்பவும் சொல்லுவியே, அவளோட இருந்தா ரிலாக்ஸா இருக்கும்னு… இப்ப கொஞ்சம் புரியுது. உன் ஃப்ரெண்டு ரொம்ப நிதானம். உன்னை மாதிரி பட பட பட்டாசுக்கு இவதான் சரி.”, மானசீகமாக மனைவி ஸ்வேதாவுடன் எப்போதும் பேசுவது போலவே பேசியபடியே உறங்கிப் போனான்.
காலையில் அவள் சோப்பின் வாசனைதான் அவனை எழுப்பியது. என்ன வாசனை என்று புருவம் சுருக்கியபடியே கண் விழித்தவன் கண்டது தலையை உலர்த்திக்கொண்டிருந்த வானதியைத்தான்.
இப்போது என்ன செய்ய என்று யோசனையாய்ப் பார்த்திருந்தவனை தற்செயலாய் பார்ப்பதுபோல் பார்த்தவள், “ ஹாய்… குட் மார்னிங். பாத்ரூம் காலிதான். நீங்க போகலாம்.”, என்றாள் ஒரு புன்னகையோடே. மீண்டும் தலை காய வைக்க அவள் திரும்ப, எந்த ஒரு தர்ம சங்கடமும் இல்லாமல், வினோத்தும் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
வந்ததும் கூட, இயல்பாய் ஒரு நட்போடு காலை டிபன் பற்றி, செக்கவுட் டைம் என்று பேசியபடி வானதி இருக்க, வினோத்திற்கும் இயல்பாக இருக்க முடிந்தது. அவன் படுக்கையில் முழித்துக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தவள்,  ‘ஓஹ்… சாருக்கு மறுபடியும் சங்கடமாகிருச்சு போல… ‘, என்று நினைத்து அதை மாற்றும் பொருட்டு சாதாரணமாகப் பேசவும், இதோ…இப்போது மீண்டும் தன் கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தான்.
மதிய உணவிற்கு வினோத்தும் வானதியும் அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அதன் பின்னர் சம்பூரணத்தின் கிராமமான சந்தவாசலுக்கு கிளம்பினர். திருவண்ணாமலை போகும் வழியில் இருக்கும் ஒரு அழகிய கிராமம். அன்று இரவு, அவர்களின் குல தெய்வத்திற்கு பூசை, விருந்து. சம்பூர்ணத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி.  ஸ்வேதா கல்யாணம் முடிந்த கையோடு தேனிலவுக்குக் கிளம்பிவிட்டாள். அதன் பின்னரும் இதோ, அதோ என்று சாக்கு சொல்லி, அதன் பின்னர் அவள் கரு உண்டானதால் பிரயாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு வழியாக பிள்ளை பிறந்து, ஐந்தாம் மாதம்தான் முதல் முறையாக ஊருக்கு வந்தாள்.  அதுவும் ஒரு மணி நேரம், குழந்தைக்கு புது இடம், ஏ.சி இல்லாது இருக்க மாட்டான் என்று பூசை முடிந்ததும், இரவோடு இரவாக கிளம்பிவிட்டார்கள்.
வானதியிடம் கேட்ட போது, அவள்தான் சனி சென்று ஞாயிறு மாலை திரும்பினால், திங்கள் வினோத்திற்கு கல்லூரி செல்ல வசதியாக இருக்கும் என்று ஏற்பாட்டை செய்யச் சொன்னாள். இதோ, அனைவரும் கிளம்பிவிட்டார்கள். உடன் அவர்களது சித்தப்பா, சித்தி. அனைவரும் ஒரே காரில் செல்லவும் பயணம் கலகலப்பாகவே இருந்தது. கவனமாக அவன் சித்தப்பாவை முன்னிருக்கையில் வினோத்துடன் கோர்த்துவிட்டு, இவள் இரு மாமியார்களுடன் அமர்ந்து கொண்டாள்.
சந்தவாசல் பெயரைப்போலவே மிக அழகாக பசுமையோடு இருந்தது. அவர்கள் பூர்வீக வீட்டில்தான் சம்பூர்ணம் இருந்தார். காடு கழனிகளை குத்தகைக்கு விட்டு, மாடு கன்று என்று ஆட்களை வைத்து பார்த்துக்கொண்டு பொழுதை நிறைத்துக்கொண்டார். இரண்டு கட்டு வீடு, கிராமத்து பாணியில் திண்ணை, தூண், ஊஞ்சல், முற்றம் என்று அழகாக இருந்தது.
“ஓஹ்… ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அத்தை கிராமமும், வீடும். இப்ப புரியுது, இதை விட்டுட்டு அங்க சென்னையில ஏன் நீங்க தங்கறதில்லைன்னு.”, வீட்டை சுற்றி வந்த வானதி மகிழ்ச்சியாக சொல்லவும், சம்பூர்ணத்திற்கு பெருமை தாளவில்லை.
“அதுக்கென்ன கண்ணு, எப்பல்லாம் லீவு கிடைக்குதோ நீங்க இரண்டு பேரும் வந்துடுங்க.”, பெரிய புன்னகையுடன் மகனைப் பார்க்க, அவன் தலையசைப்பை மட்டுமே தந்துவிட்டு, சிறு புன்னகையுடன் அவன் அறைக்குச் சென்றான்.
அம்மா மகனுக்கு மனத்தாங்கலே ஸ்வேதாவும் இங்கே வரவில்லை, அவனையும் வர விடவில்லை என்பதே. அவளிருந்த வரை, சம்பூர்ணம்தான் சென்னை வந்து மகன், பேரனைப் பார்ப்பார். ஸ்வேதாவிற்கு இங்கே பிடிக்கவில்லை. என்னவோ கிராமம் என்றாலே சிட்டி பெண்ணான அவளுக்கு ஒரு அலர்ஜி. ஓரிரு முறை சொல்லிப் பார்த்தவன், அதன் பின்னர் அவளை வற்புறுத்தவில்லை.
வானதி இப்படி சொல்லியது அவனுக்கு ஆச்சரியமே. இவளும் சென்னையில் பிறந்து வளர்ந்தவள்தானே, எப்படி பிடிப்பதாய் கூறுகிறாள்? ஒரு வேளை, அம்மாவிற்காகவா? இல்லை சும்மா முகஸ்துதிக்காகவா என்று பலவித யோசனைகள் ஓடினாலும், எதுவும் காண்பித்துக்கொள்ளவில்லை.
சற்று நேரத்திற்கெல்லாம், வானதி வந்து எழுப்பவும், பத்து நிமிடத்தில் அசந்து தூங்கியது தெரிந்து எழுந்து அமர்ந்தான்.
“என்ன… வண்டி ஓட்டினது டயர்டாகிட்டீங்களா?  கொஞ்சம்   முகம் அலம்பி, ரெடியானா காபி குடிச்சிட்டு கிளம்பலாம். ஆறு மணிக்கு அபிஷேகம் ஆரம்பிக்குமாம். நாங்க முதல்ல போறோம். நீங்க அரை மணியில வந்துடுவீங்களாம். அத்தை சொன்னாங்க. “, பட்டுப் புடவையில் இருந்தவள் தகவல் சொன்னாள்.
கோவிலில் பூஜை முடிந்து, மண்டபத்தில் விருந்து ஓடிக்கொண்டிருந்தது. கிராமத்துப் பெண்கள், சிறுவர்கள் என்று அவளை சுற்றி இருப்பவர்களோடு சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
திரும்ப வீட்டிற்கு கார் வேண்டாம், இரண்டு தெருதானே, நடந்தே செல்லலாம் என்று நடக்கையில்,
“இங்க பூச்சி பாம்பு இருக்கும்னு உனக்கு பயமில்லையா? நீ பாட்டுக்கு நடந்து வர? “, வினோத் கேட்கவும்,
“ஏன், சென்னையில கூடத்தான் இருக்கும், அதுக்காக யாரும் இராத்திரி வெளிய வரதில்லையா என்ன? கூட நான் நிறைய ட்ரெக்கிங் போவேன் அதுனால பழக்கம்தான். “, வானதி சொன்னாள்.
“ஓஹ்… இங்க இருக்கவங்க கூட நல்லா பேசற? எப்படி ? “, அடுத்த கேள்வி வினோத்திடமிருந்து வரவும், நின்று அவனைப் பார்த்தாள். நிலவொளியிலும், அந்தத் தெருவிற்கு என்றிருந்த ஒற்றை விளக்கொளியில் மங்கலாகத்தான் தெரிந்தான்.
“இவங்களும் மனுஷங்கதான? எங்கிட்ட ஆசையா வந்து பேசினாங்க. நானும் பேசினேன். ஏன்? பேசக்கூடாதா ?”
“இல்ல… அது …. உனக்கு ….”
“ஷ்… நான் ஸ்வேதாக்கு ஃப்ரெண்டுதான், அதனால ஸ்வேதாவோட குணாதசியமெல்லாம் எங்கிட்டவும் இருக்கும்னு எப்படி நினைக்கறீங்க?”, அவள் உற்று நோக்கும் பார்வையை தவிர்த்தவன், மீண்டும் நடையைத் தொடர்ந்தபடி,
“இல்லை… அப்படி நினைக்கலை…”
“வினோத்… நீங்க வெளிப்படையாவே பேசலாம். ஸ்வேதாக்குத்தான் பூச்சின்னாலே அலர்ஜி, கிராமத்துல இருக்கவங்க என்னவோ அழுக்கானவங்கன்னு ஒரு நினைப்பு. கொஞ்சம் கீழா பார்ப்பா. எனக்கும் அவளுக்கும் முட்டிகறதே, அப்பப்ப அவகிட்ட வர அந்த ‘நான் உசத்தி’ங்கற குணம்தான். “
“எல்லாரும் எல்லாவிதத்துலயும் பெர்ஃபெக்டா இருக்க முடியாது. அவகிட்ட நிறைய நல்ல குணமும் இருக்கு.”, ஸ்வேதாவை குறை சொல்லுவதைத் தாங்க முடியாது அவளுக்காக பேசினான் வினோத்.