வசந்தவள்ளியின் கணவன் இளமாறன் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட சிறிது நாட்கள் தந்தை வீட்டில் தங்கிவிட்டு போக வந்தாள் வசந்தவள்ளி. அப்படி வந்தவள் அங்கு வரகுணசுந்தரிக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து வயிறு புகைந்தாள்.

     அவள் அரண்மனையிலும் அவள் தான் ராணி. அங்கு அவளுக்கும் அதே ராஜமரியாதை தான் கிடைக்கின்றது என்பதை அவள் இப்போதும் உணரவில்லை. அவள் கணவன் வீட்டு ராஜ்ஜியத்தை விட தந்தையின் ராஜ்ஜியம் மிகப்பெரியது என்ற அவளின் எண்ணம் மட்டும் பெருகிக்கொண்டே வந்தது என்பது உண்மையே.

     இந்த எண்ணமே இனி தன்னால் மீண்டும் அந்த சிற்றரசிற்கு செல்ல முடியாது என்று ஒரு முடிவை எடுக்க வைத்தது. எனவே அவளின் தாய் நாச்சியாரை அணுகி சென்றாள்.

     “வா வசந்தா. உனக்கு இங்கு தங்குவதற்கு சூழல் அனைத்தும் சவுகரியமாக தானே இருக்கின்றது. குறை ஏதும் இல்லையே அம்மா?”

     மகள் தன்னை காண வரவும் அவளை அழைத்து மடியில் படுக்க வைத்தவாறு பரிவுடன் கேட்டார் நாச்சியார்.

     “எனக்கு இங்கு என்ன தாயே குறை தாய் தந்தை என தாங்கள் இருவரும் இருக்கும் வரை என் நம்பிக்கை என்னைவிட்டு எங்கும் போகாது தாயே” என்று ஆரம்பித்தாள்.

     “தாயே நான் மற்றுமொரு விஷயத்தை பற்றி தான் தங்களிடம் கருத்து கேட்க வந்தேன். அது… நான் மட்டும் என்றால் இதை பற்றி பேச வந்திருக்க மாட்டேன் இது என் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றியது” என்று தயங்க

     “பெற்ற தாயிடம் பேச என்ன தயக்கம் அம்மா உனக்கு என்ன அய்யமோ அதை என்னிடம் வினவலாம்” என உத்திரவாதம் தந்தார் அந்த அன்னை அவளின் எண்ணம் அறியாது‌.

     “அன்னையே என் பிள்ளைகள் இப்போது சிறு பிள்ளைகள். ஆனால் இன்னும் சிறிது நாட்களில் நன்கு வளர்ந்து விடுவார்கள்‌. இளந்திரையன் அந்த நகரின் அடுத்த அரசனும் கூட. ஆனால் அவன் வீரமாக வளர நிறைய கலைகள் பயில அந்த நகரில் அந்த அளவு வித்தை தெரிந்தவர்கள் என யாரும் இல்லை அன்னையே.

     என் கணவரும் மாண்டு போனார். அங்கே போனால் என் மனதும் ரணப்படும். எனவே அவர்கள் இருவரும் வளரும் வரை நாங்கள் இங்கு தடாகபுரியில் சில நாட்கள் தங்கலாமா” என அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட திட்டம் தீட்டி மெதுவாக காய் நகர்த்தினாள் வசந்தவள்ளி.

     பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மூத்த மகள் அதுவும் கணவனை இழந்து போய் தாய் வீட்டிற்கு வந்திருக்க அவள் கெஞ்சி கேட்ட விஷயத்தை முடியாது என்று மறுக்க மனம் இடம் தரவில்லை அந்த நல்ல தாய்க்கு.

     “சரி உன் விருப்பப்படி எத்துனை நாட்கள் வேண்டுமானாலும் இங்கு நீ இரு வசந்தா. என் பிள்ளைக்கும் பேரபிள்ளைகளுக்கும் இந்த அரண்மனையில் இருக்க இடமா இல்லை. உன் தந்தையிடமும் தமையனிடமும் கூறினால் உனக்கென தனியே ஒரு அரண்மனையே கட்டி தருவார்கள். இதற்கு எதற்கு இவ்வளவு தயக்கம் உனக்கு”

     நாச்சியார் சம்மதம் அளித்தது போல் அவள் கணவன் மற்றும் மகனிடமும் பேசி சம்மதம் பெற்றார். விபிஷவேந்தன் கூட உடனே சரி என்றிட “அது எப்படி சரி வரும்” என்று லிங்கவேந்தன் யோசித்தார்.

     “அவர்கள் நமது உடன்பிறந்தோர் பிள்ளைகள் அரசே. அவர்களின் நலனுக்காக இப்படி செய்வதில் ஒன்றும் தவறில்லை என்று எனக்கு தோன்றுகிறது அரசே!”

     யோசித்த அரசருக்கு வரகுணசுந்தரி இப்படி ஒரு யோசனை தர அதற்குபின் தான் அவர் ஒற்றுக் கொண்டார். அதற்கும் வசந்தவள்ளி ‘நான் என் அரண்மனையில் தங்க நீ சம்மதம் தரும் நிலை வந்துவிட்டதே’ என்று மனதிற்குள் குமைந்துதான் போனாள்.

     ஆனால் எதையும் வெளியே காட்டாது அமைதியாக மனதிற்குள் வைத்து கொண்டாள். அதற்கு மாறாக அவள் மனதில் இருந்த அனைத்து நஞ்சையும் அவள் மகன் இளந்திரையன் மனதில் இறக்கி வைத்தாள்.

     அங்கே ஆரம்பித்தது இளந்திரையனின் தவறான எண்ணங்கள் மற்றும் செயல்கள். வசந்தவள்ளியின் திட்டத்தின் முதல் படியாக இளந்திரையனும் இளவழுதியும் வாள் பயிற்சி பட்டறைக்கு அனுப்பட்டனர்.

     அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த தழலேந்தியோடு அவர்களும் இணைந்தனர்‌. முதலில் சிறிது நாட்கள் தங்களுடன் தங்கி இருக்கவே தன் அத்தையும் அவர் மகன்களும் வந்திருக்கின்றனர் என எண்ணியிருந்தான் தழலேந்தி.

     ஆனால் இனி இன்னும் சில வருடங்கள் இங்கு தான் என்று அவன் தந்தை அழைத்து கூறியிருக்க தனக்கு விளையாட இன்னும் இருவர் வந்துவிட்டனர் என்று மகிழ்ந்துதான் போனான் தழலேந்தி.

     இளந்திரையனும் இளவழுதியும் முதல் நாள் அந்த பட்டறைக்கு வரும் போது தழல் எப்போதும் போல் தடாகையுடன் விளையாடிக் கொண்டிருந்தான்‌. அன்றுதான் மற்ற இருவரும் முதன்முதலில் தடாகையை கண்டனர்.

     “யார் போயும் போயும் பெண் பிள்ளையை எல்லாம் பயிற்சி பட்டறைக்கு அழைத்து வந்தது”

     அவளை பார்த்த மாத்திரத்தில் இளந்திரையன் நினைத்தது இதுதான். ஆனால் பிறந்ததிலிருந்து தந்தையால் வளர்க்கப்பட்ட இளவழுதியோ அந்த சிறு பொண்ணை பார்த்ததில் மகிழ்ந்து போனான்.

     இளந்திரையனோ தழலேந்தியை தனியே பயிற்சிக்கு அழைக்க மாமன் மகன் தானே என அவனும் “குழல் நீ இந்த வாள் பிடித்து பயிற்சியை தொடர்ந்து செய். நான் இளந்திரையனோடு சிறிது நேரம் பயிற்சி எடுத்து வருகிறேன்” என்று கூறி சென்றான்.

     அதன்பின்னர் இளந்திரையன் தழலின் நேரத்தை எடுத்துக் கொள்ள தனியாக அமர்ந்திருந்தாள் தடாகை. இதை எல்லாம் பார்த்துதான் இருந்தான் இளவழுதி.

     ‘பாவம் சிறு பிள்ளை தனியாக அமர்ந்திருக்கிறாளே’ என்று தோன்ற அவளிடம் சென்றான் இளவழுதி.

     “ஏய் பாப்பா.. என்னை பார். நான் இளவழுதி, நீ யார்? உன் பெயர் என்ன?”

     இளவழுதியும் அவளிடம் விதவிதமாக கேட்டுப் பார்க்க ம்ஹூம் அசையவில்லையே தடாகை. ஏன் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இளவழுதியும் தன்னால் முடிந்த அளவு பேசி பார்க்க அவள் இளவழுதியை நெருங்கவிடவில்லை.

     தடாகையின் செய்கை ஒரு வித சுவாரசியத்தை தர அவளிடம் பேச இன்னும் ஆசையானது இளவழுதிக்கு. ஆனால் அது அன்று முடியவில்லை. அதேபோல் தழலையும் இளந்திரையன் அவனோடே வைத்துக் கொண்டான்.

     அடுத்த நாளும் விடிந்தது. காலை இளந்திரையனும் இளவழுதியும் வரும் நேரம் எப்போதும் போல் தழலும் தடாகையும் வாளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

     இன்றும் இளந்திரையன் தழலை இழுத்து சென்றுவிட தடாகை மீண்டும் தனித்துவிடப்பட்டாள். இளவழுதி மீண்டும் அவளிடம் பேசிப்பார்க்க அவனை சீண்டக்கூடவில்லை தடாகை.

     நாட்கள் இதேப்போல் கடக்க தழலேந்தியோ காலை சகோதரர்கள் இருவரும் வரும்வரை மட்டுமே தடாகையுடன் இருக்க அதற்குப்பின் அவன் நேரம் வெறித்தனமான பயிற்சி என்றானது.

     இதில் இளவழுதியின் வேலை கடந்து வந்த நாட்களில் மற்றவர்களை கவனிப்பதுதான்‌. அதில் அவன் கண்டுகொண்ட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது தடாகையின் திறமை.

     ஆம் அங்கே தளபதியின் கீழ் பயின்று வந்த தழலின் திறமை அவர்களை பார்த்து தானே விளையாட்டாய் வாள் சுற்றும் தடாகைக்கு அப்படியே இருந்தது. பின்னே இருக்காதா அப்பேர்ப்பட்ட தடாகபுரி படைதளபதியின் இரத்தம் அல்லவா தடாகை.

     அதனால் தான் என்னவோ யாரும் சொல்லி தராமலே அந்த வீரம் திறம் அனைத்தும் அவளிடம் காணப்பட்டது. இதை கவனித்த இளவழுதி இதை வைத்துதான் அவளிடம் பேசினான். அங்கு சென்ற இத்துனை நாளில் அவள் பெயர் தடாகை மற்றும் அவள் அந்நாட்டு தளபதியின் மகள் என்பதை தெரிந்தும் கொண்டான்.

     “தடாகை நீ வாள் வீசும் விதத்தை நான் கண்டேன். மிகவும் அற்புதமாக வாள் வீசுகிறாய். நான் இந்த பயிற்சிக்கு எல்லாம் மிகவும் புதியவன் எனக்கு வாள் வீச்சை கற்றுத்தருவாயா”

     பாவமாய் கேட்டு நின்ற இளவழுதியை ஒருமாதிரி பார்த்து வைத்த தடாகை எதுவும் கூறவில்லை. ஆனால் இளவழுதியும் விடவில்லை. அவன் தமையனும் தழலும் இல்லாமல் தனியே இவன் மட்டும் இருந்தது நல்ல சந்தர்ப்பமாய் அமைய

     அனுதினமும் தடாகையோடு பேசுவதை வழக்கமாக்கினான். தடாகையும் எவ்வளவு நாள் தான் தன் பின்னால் அழைந்து பேசும் இளவழுதியை ஒதுக்கி வைக்கமுடியும்‌. அவள் அவனிடம் பேசும் நாளும் வந்தது.

     ஒருநாள் என்றும் போல் வந்த இளவழுதி தடாகை இருக்கும் இடம் வந்து சேர்ந்தான். ஆனால் எதுவும் பேசாது தன்னுடைய வாளெடுத்து பயிற்சி எடுக்க துவங்கினான்.

     தான் பேசாது போனாலும் தானே எப்போதும் வந்து பேசும் இளவழுதி பேசாதது தடாகைக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அப்போதுதான் அவன் வாள் வீசுவதை கண்ட தடாகை அவன் தவறாக செய்கிறான் என்றுணர்ந்தாள்.

     எனவே மெல்ல எழுந்து அவன் புறம் வந்து “நீ தவறாக வாள் வீசுகிறாய்” என்றாள் மெதுவாக.

     “நானும் உன்னிடம் முன்னால் இருந்து வாள் வீச கற்பிக்க வேண்டினேன். நீதான் மறுத்துவிட்டாயே. பின்பு எனக்கெப்படி தெரியும்”

     சிறுபிள்ளையாய் இளவழுதி கோபித்துக் கொள்ள “சரி இனி நாம் நண்பர்கள். நாம் சேர்ந்து வாள் பயிற்சியில் ஈடுபடலாம். உனக்கு சம்மதமா இளவழுதி” என கேட்டாள்.

     “அப்பொழுது நாம் இனி நண்பர்களா தடாகை” ஆர்வமாக இளவழுதி கேட்க ஆம் என்று தலையசைத்தாள் தடாகை.

     “சரி இனி என்னை இளவழுதி என்று அழைக்காதே. வழுதி என்றே அழை நாம்தான் நண்பர்கள் ஆகிவிட்டோமே” என்றான் ஆர்வமாக இளவழுதி.

      “கண்டிப்பாக வழுதி” என்ற புன்னகைத்த தடாகைக்கு இத்துனை நாள் தழல் இல்லாத தனிமையை விலக்கினான் வழுதி. இருவருக்கும் ஓரிரு வயது மட்டுமே வித்தியாசம் இருக்க இருவரும் சில நாட்களில் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர்.

     இதை பார்த்த தழலேந்தி கூட “இனி நான் உன் நண்பன் இல்லையா குழல்? நீ இளவழுதியிடம் பேசுவதை போல் என்னிடம் இப்பொழுது எல்லாம் பேசமாட்டேன் என்கிறாய்” என சிறுபிள்ளையென கோபிக்க

     “நீயும் என் நண்பன் தான் தழல். ஆனால் நீயோ இளந்திரையனுடன் பயிற்சிக்கு சென்றுவிடுகிறாய்.‌ அப்பொழுது எல்லாம் என்னுடன் விளையாடுவது வழுதியே. அவனும் என்னுடைய நண்பனே தழல். அதற்காக என்னிடம் நீ கோபித்துக் கொள்ளாதே தழல்”

     தடாகை பாவமாக முகத்தை வைத்துக் கேக்க அதற்கு மேல் அந்த சிறுப்பிள்ளை கோபத்தையும் தழலால் இழுத்து பிடிக்க முடியவில்லை. எனவே சிரித்தபடியே இளவழுதியை பார்த்து

     “வழுதி குழல் உன் தோழி ஆகிவிட்டாள். எனவே நான் அவளோடு இல்லா நேரம் எல்லாம் நீதான் அவளுக்கு எப்போதும் உறுதுணையாக நிற்க வேண்டும். செய்வாயா?” என்றான்.

     ஏதோ தன்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை தந்ததை போல் “கண்டிப்பாக தழலேந்தி. நான் என் தோழியை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்” என்று வேகமாக தலையசைத்தான்.

     இப்படி இந்த மூவரும் ஒன்றாக அதை கண்ட இளந்திரையனுக்கு கடுப்பாக இருந்தது. அதுவும் அங்கிருந்த அனைவரும் தடாகைக்கு தரும் முக்கியத்துவத்தை கண்டு எல்லோரும் தனக்குத்தான் முன்னுரிமை தரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளந்திரையனுக்கு மனதிற்குள் ஏனென்றே சொல்லமுடியா ஆத்திரம் உருவானது.

     இளவரசர்கள்கள் தடாகை நால்வரும் வளர துவங்கினர். அவர்கள் வளர வளர வழுதிக்கும் தடாகைக்குமான நட்பு இன்னும் ஆழமானது‌. தழல் இப்பொழுது இவர்களிடம் அந்த அளவு நெருக்கமாக இல்லை. அவனை இருக்கவிடாது செய்தான் இளந்திரையன்.

     வசந்தவள்ளி வேறு அவன் தழலேந்தியை விட அனைத்திலும் முதலில் வரவேண்டும் என்று ஏற்றிவிட்டபடி இருந்தாள். எனவே இருவருக்குள் எப்போதும் போட்டிகள் உண்டு. அப்படி நடக்கும் போட்டியில் எப்போதும் ஏகபோகமாக வெற்றி பெறுவது தழலே.

     அதுவே அவன் மனதில் தழல் மேல் வண்ம உணர்வை தூண்டிவிட காரணமாய் போனது.

     என்னதான் பேசவில்லை என்றாலும் தழல் மனதில் வழுதி மற்றும் தடாகை மேல் இருந்த பாசம் மட்டும் அதிகரித்தே சென்றது. இவர்கள் இருவரும் விளையாடுவது செல்ல சண்டை போடுவது இதையெல்லாம் பார்த்து உள்ளூர மகிழ்ந்து தான் போவான்.

     இப்படி நாட்கள் செல்ல ஒருநாள் காலையில் எழுந்த தடாகை அவள் உடலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கண்டு பயந்து விட்டாள். ஆம் தடாகை பெரிய பெண்ணாகி இருந்தாள்.

     தாய் இருந்திருந்தால் இதை பற்றி முன்னரே சில விஷயங்களை அவர் கூறியிருப்பார். ஆனால் தாய் இல்லாது எப்போதும் பயிற்சி பட்டறையே கதி என கிடந்த தடாகைக்கு அவளுக்கு நடப்பது என்னவென்று புரியவில்லை. பயத்தில் அழுதபடி அவள் தந்தையை காண சென்றாள்.

     அவள் கூறியதை கேட்டு ஏதோ புரிந்தது கமலந்தனுக்கு. மனைவி இறந்து கிட்டதட்ட பதிநான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை மனைவி இல்லாத நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார் அந்த பாசமான தந்தை‌.