“தளபதி அவர்களே!”

     ஒரு குரல் வீட்டின் வெளியே கேட்க இவ்வளவு நேரம் தாழ்ந்திருந்த தலையை நிமிர்த்தி பார்த்தார் தளபதி கமலந்தன். அவர் முகத்திலிருந்த உணர்வே சொல்லாமல் சொல்லியது அவர் மனதின் மிகப் பெரிய சோகத்தை.

     “யாரது” சுரத்தே இல்லாமல் கேட்டவர் மெதுவாக எழுந்து வெளியே வந்தார். அங்கே நின்றிருந்தான் தளபதியின் முக்கிய காவலாளி ஒருவன். அவன் முகமும் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

     வாடி போய்தான் காணப்பட்டது‌. ஏதோ சொல்ல வந்தவன் ஒருமுறை தன் தொண்டையை செறுமி விட்டு தொடர்ந்தான்.

     “தளபதி அவர்களுக்கு என் வணக்கம்! நேற்று இரவு சிறையில் இருந்து காணமல் போன தடாகை தேவியாரை இளந்திரையன் சிறை பிடித்துவிட்டதாக தகவல் வந்தது தளபதியாரே. நாளை காலை தேவியாரின் வழக்கு அரச சபையில் நடக்கப்போகிறது என அரசர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அதில் தாங்களும் கலந்து கொண்டே ஆக வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்”

     ஒரே மூச்சாக தனக்கு இடப்பட்ட செய்தியை உரிய இடத்தில் சென்று சேர்க்கும் பணியை முடித்துவிட்டு மெதுவாக நகர்ந்து விட்டான் அந்த காவலன்.

     காவலாளி சொன்ன செய்தியை கேட்டு உயிர் போகும் வலியை உணர்ந்த கமலந்தன் தட்டுத்தடுமாறி மெதுவாக தன் அறையினுள் சென்று சேர்ந்தார். அவர் மனம் எல்லாம் பதறி துடித்தது.

     பின்னே இருக்காதா பிடிபட்டதாய் காவலாளி சொல்லி சென்ற தடாகைக்குழலி அவர் தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே ஒரு செல்வமகள் அல்லவோ. சில மணி துளிகள் முன்னரே தடாகை பதுங்கி பதுங்கி தப்பி செல்வதை கண்கூடாக பார்த்து வந்து

     ‘என் வீரமும் உன் விவேகமும் வாய்க்க பெற்றவள் நம் செல்வமகள் பூங்கொடி. அவள் எப்படியும் தப்பி சென்று விடுவாள். என் அருகில் இல்லை என்றாலும் எங்கோ உயிருடன் இருந்தால் போதும்’

     என என்றோ இறந்துப் போன தன் மனைவியிடம் மானசீகமாக எண்ணியபடி அமர்ந்திருந்தார். பாவம் அவர் எங்கனம் அறிவார் எவ்வளவு வீரம் விவேகம் இருந்தும் வஞ்சக மக்களின் முன் தோற்று போய் பிடிபட்டு வந்துக் கொண்டிருக்கிறாள் அவர் மகள் என.

     இப்போது மாட்டிக் கொண்டாளே என்றும் நாளை அரசவை கூடி அவர் மகளை நடுவில் நிற்க வைத்து விசாரிக்க போகிறார்கள் என்றும் எண்ணும் போதே பெற்ற மனம் பதறி துடித்தது. அவ்வளவு பெரிய நாட்டின் தளபதியாக பல போர்களை நடத்தி வெற்றிக் கொடிநாட்டி வந்த தளபதி இப்போது தன் மகளை நினைத்து கண்ணீர் விடுத்தார்.

     விடிந்தால் என்ன ஆகப்போகிறதோ என்ற பயத்தோடே கண்ணீரோடு விழித்திருந்தது அந்த பாசமுள்ள தந்தை உள்ளம்.

     இங்கே அரண்மனைக்குள்ளும் அதே நிலைதான். அந்த அரண்மனையில் இருந்த வேலையாட்கள் முதல் அரசன் லிங்கவேந்தன் அரசி வரகுணசுந்தரி வரை அனைவருக்கும் அது தூங்கா இரவாகி போனது.

     “அரசே! தாங்கள் இன்னும் தூங்கவில்லையா?”

     நிலவு மாடத்தில் தூங்காது அமர்ந்திருந்த லிங்கவேந்தனை கண்டு கேட்ட வரகுணசுந்தரியை பார்த்த அரசர் மெல்லிய பெருமூச்சு விட்டார்.

     “ஏன் என உனக்கு தெரியாதா தேவி?” என்று கேட்ட அரசரின் குரலிலும் வருத்தமே.

     “புரிகிறது அரசே! நாம் கண் பார்க்க வளர்ந்த பிள்ளை தடாகை. தாயில்லா பிள்ளையென நாம் அவளுக்கு அவ்வளவு அன்பை தந்து வளர்த்துள்ளோம். மனசு பதற செய்கிறது அரசே!

     அப்புறம் அது.. மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை தங்களிடம் கேட்கிறேன் என எண்ணாதீர்கள் அரசே! ஆனால் என்னால் கேட்காமலும் இருக்க முடியவில்லை.

     அது… தாங்களும் நம்புகிறீர்களா நம் தடாகை நம் நாட்டிற்கு இவ்வளவு பெரிய துரோகத்தை செய்திருப்பாள் என்று”

     வரகுணசுந்தரி தயக்கமாக கேட்டு நிறுத்த அரசரும் திரும்பி தன் அரசியை பார்த்து மெல்ல புன்னகைத்தவர்

     “தடாகை தவறு செய்தால் என்று அந்த ஆண்டவரே வந்து கூறினாலும் என்னால் நம்ப முடியாது தேவி. ஆனால் அவளுக்கு எதிராகவே அனைத்து சாட்சியங்களும் உள்ளன. எனவேதான் நாளை விசாரணை நடந்தால் குழலிக்கு ஆபத்து நேருமென நேற்று இரவு சிறை காவலை கூட குறைத்து வைத்தேன்.

     அவள் வெளியேற நல் சூழலை ஏற்படுத்தி கொடுத்தேன்‌. விடிவதற்குள் நம் தடாகை இந்த தடாகபுரி நகரை விட்டு வெகு தூரம் சென்றிருப்பாள் என நிம்மதி கொண்டேன். ஆனால் இளந்திரையன் அவளை இடையிலே பிடித்து வருவான் என நானும் எதிர்ப்பார்க்கவில்லை தேவி.

     அதைவிட நாளை என் வாயாலே அந்த பிள்ளைக்கு அநீதியான ஒரு தீர்ப்பை தந்து விடுவேனோ என மனது பதறுகிறது தேவி”

     லிங்கவேந்தனும் வேதனையுடன் கூற வரகுணசுந்தரிக்கே தன் கணவரின் செயலை நினைத்து பெருமையாக இருந்தது‌. ஆனால் என்ன செய்து என்ன பயன் அவர்கள் அன்பு பிள்ளை தடாகை பிடிபட்டு விட்டாளே.

     இனி தங்களால் எதுவும் செய்ய இயலாது என எண்ணி கலங்கி தவித்தாள் அரசி. இந்த நேரம் பார்த்து அவர்களின் புதல்வன் இளவரசன் தழலேந்தி உடன் இல்லையே என வருத்தம் கொண்டாள்.

     “சரி அதற்காக இந்த இரவு நேரத்தில் நிலவு மாடத்தின் குளிரில் அமர்ந்து தங்கள் உடலை கெடுத்து கொள்ளாதீர்கள் அரசே. இனி நாம் செய்ய எதுவும் இல்லை. கடவுள் மீது அனைத்து பாரத்தையும் போட்டு விட்டு உள்ளே வாருங்கள்”

     பேசி முடித்து இருவரும் அவர்கள் அறைக்கு சென்று படுத்தனர். ஆனால் அடுத்த நாள் என்ன நிகழப்போகிறதோ என்று நடுங்கிய நெஞ்சத்துடனே இருந்தனர்.

     இங்கே இளந்திரையனால் இழுத்து வரப்பட்ட தடாகையோ மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டாள்‌. இப்போது மயக்கம் நன்றாக தெளிந்துவிட தன்னை சுற்றி ஒருமுறை பார்த்தாள்.

     காட்டில் மயங்கி விழுந்தவள் தற்போது எங்கிருந்து தப்பி சென்றாலோ அதே சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டிருந்தாள். அவள் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தால் அவளின் சிறிய புதல்வன்தான் அழுதுக் கொண்டிருந்தான்.

     பதறியடித்து எழுந்த தடாகை அந்த சிறு மொட்டை அலுங்காது குலுங்காது தூக்கி அணைத்து கொண்டாள். விடிந்தால் அவள் வாழ்வு எப்படி மாறப்போகிறதோ என நினைக்கும் போது கூட அவள் மனம் பதறவில்லை.

     அதற்கு மாறாக அவளின் பிள்ளையின் வாழ்வு அதன்பின் என்னவாகுமோ என்று எண்ணும் போதுதான் மனது பதறி துடித்தது. ‘ஆனால் இனி என்ன செய்வது. நடப்பது நடக்கட்டும்’ என்ற விரக்தி மனநிலையை அடைந்த தடாகை ஏதுமில்லா சூன்யத்தை வெறிக்கலானாள்.

     இங்கு இளந்திரையனோ எதையோ சாதித்த வெற்றி களிப்பில் மிதந்து கொண்டிருந்தான்.

     “தடாகை… தடாகை… இப்படி வந்து என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டாயே. இனி அந்த அரசன் என் மாமன் லிங்கவேந்தன் என்ன கடவுளே நினைத்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது.

     ஏனெனில் இந்த இளந்திரையன் இம்முறை உன்மேல் சுமத்திய பழி அப்படிபட்டது”

     வெறிப் பிடித்த மிருகம் போல கத்தி சிரித்த இளந்திரையன் அவன் கையில் இருந்த கோப்பை மதுவை அப்படியே வாயில் சரித்தான்.

     இப்படி ஒவ்வொரு நபரின் எண்ணங்களும் ஒவ்வொரு விதமாக இருக்க யாருக்கும் காத்திருக்காமல் அடுத்த நாளும் பிரகாசமாக விடிந்தது. ஆனால் தடாகைக்கு மட்டும் அது கடைசி நாளாக இருந்துவிடுமோ என்ற அச்சம் அங்கிருந்தோருக்கு இல்லாமல் இல்லை.

     அதே மனநிலையோடு ஒவ்வொருவராக அந்த விசாலமான அரசவையில் வந்து கூடினர். அந்த அவையின் நடுவில் கை விலங்கு பூட்டப்பட்ட நிலையில் நின்றிருந்தாள் தடாகை. அதை பார்த்த தளபதி கமலந்தனுக்கு கண்கள் கலங்கியேவிட்டது.

     தான் பெற்ற மகளை இப்படி ஒரு நிலையில் கண்டும் எதுவும் செய்யமுடியாத தன் நிலையை அறவே வெறுத்தார் மனிதர். ஆனால் இதை பார்த்து கர்வமாக சிரித்து நின்றான் இளந்திரையன் அருகில் அவன் அன்னை வசந்தவள்ளியோடு.

     இப்போது அரசர் அரசி வருகைக்காக அனைவரும் சிறிது நேரம் காத்திருக்க அவரும் அரசி வரகுணசுந்தரியோடு வந்து சேர்ந்தார்.

     “அரசர் வாழ்க! அரசி வாழ்க! தடாகபுரி ராஜ்ஜியம் நீடூழி வாழ்க!”

     அரசர் அவர் கையை உயர்த்திய உடன் கேட்ட குரல்கள் அனைத்தும் அடங்கியது.

     “இன்று இந்த அவை எதற்கு கூட்டப்பட்டது. அதன் சாராம்சம் என்ன? அமைச்சரே என்ன ஏது என்று சபைக்கு எடுத்து கூறுங்கள்” அரசர் குரல் கேட்டபின் சலசலவென்று கேட்ட சத்தங்கள் குறைந்து அமைதி நிலவியது. அந்த அமைச்சரும் பேச துவங்கினார்.

     “மன்னர் பெருமான் லிங்கவேந்தருக்கும் அரசி அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!” என்று அவர்களை வணங்கி விட்டு சபையை பார்த்தார்.

     “சபைக்கு என் வணக்கம். இங்கே இன்று கூட்டப்பட்ட இந்த சபையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. நம் தடாகபுரி தலைமை தளபதியின் மகள் தடாகைக்குழலி நம் நாட்டின் எதிரி நாட்டு மன்னனான ரகுநந்த பூபாலனுக்கு ராஜ ரகசியங்களை பகிர்ந்து விட்டதாக வழக்கு. மேலும் இந்த அரண்மனையில் யாரும் அறியா வண்ணம் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார் என்றும் வசந்தவள்ளி தேவியாரின் மகன் இளவரசர் இளந்திரையன் இந்த வழக்கை தொடுத்துள்ளார்”

     அமைச்சர் கூறி முடித்தவுடன் அரசர் அழைக்கும் முன்னரே வந்து அனைவரையும் வணங்கி நின்றான் இளந்திரையன். அதை கண்ட அந்த அவையில் இருந்த பலர் முகத்தை சுழித்தனர்.

     அங்கே இருந்தவர்களுக்கு தடாகை பற்றியும் இளந்திரையன் பற்றியும் நன்றாக தெரியுமே. அவன் குணம் அறிந்தும் தடாகைக்கு தங்களால் ஏதும் செய்யமுடியாமல் போனதே என வருந்தி நின்றனர்.

     “இளந்திரையா எதற்காய் தடாகைமேல் இவ்வளவு பெரிய பழியை சுமத்தி இருக்கிறாய். நீ சுமத்திய பழிச் சொற்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றனவா‌? இல்லையெனில் ஒரு பெண்ணின் மீது பொய் பழி சுமத்தப்பட்டதற்கு உனக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” அரசர் கூற்றை கேட்ட இளந்திரையன்

     “அரசர் அரசிக்கு என் பணிவான வணக்கங்கள். இங்கே நின்றிருக்கும் நம் தளபதி மகள் தடாகைதான் நம் ராஜாங்க ரகசியத்தை பகிர்ந்துவிட்டாள் என்பது என் கருத்து” என பேசிமுடிக்கும் முன்

     “இவ்வளவு உறுதியாக ஒரு பெண்ணின் மீது பழி போடும் முன் தகுந்த சாட்சியங்களை காட்டு இளந்திரையா” மன்னர் சற்று கடுமையே காட்டினார்.

     அதன்பின் அங்கே சில மணி நேரம் நிகழ்ந்த விவாதத்தில் இளந்திரையன் அவன் நினைத்ததை சாதித்தான். ஆம் நடந்த எல்லா தவறுக்கும் காரணம் தடாகைதான் என்று சாதித்தான். நீதிக்கு எதிரான ஒரு பெரிய யுத்தமே நடந்து முடிந்து கடைசியில் அநீதி வென்று கர்வம் கொண்டது.

     அவன் பேசிய பேச்சில் அரசியின் கண்களே கலங்கி போய் இருக்க அரசரோ கோபத்தில் பல்லை கடித்தபடி அமர்ந்திருந்தார்.

     அவன் பேசிய பேச்சில் கொதித்து போன தளபதி “என் மகள் தூய்மையான தங்கமடா. அவளை இப்படி எல்லாம் பேசிய வாய் இருக்கும் சிரசை உன் உடலில் இருந்து தனியே நீக்கி போடுகிறேன் பார்” என வீராவேசத்துடன் பேசி அவர் வாளை உருவி முன்னேற அவரை பின்னிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி வைக்க படாதபாடுபட்டனர்.

     தடாகையோ அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் அதே கர்வத்துடன் நீ சாட்சியங்களை காட்டினால் நீ கூறிய அனைத்தும் உண்மை ஆகிவிடுமா? நான் தவறானவள் ஆகிவிடுவேனா? என்று ஒரு பார்வை பார்த்து சபையில் நிமிர்ந்து நின்றாள்.

     அது அங்கிருந்த அனைவருக்கும் நன்றாக புரிந்து தான் இருந்தது. ஆனால் கமலந்தனை போல் இல்லையென்று சொல்லத்தான் வாய்ப்பு அமையாது போனது.

     அனைத்தையும் பார்த்த அரசர் லிங்கவேந்தன் குரலை செறுமி சபையை ஒற்றை பார்வையில் அடக்கிவிட்டு அரண்மனை ராஜகுரு மகிஷந்தனை நோக்கி

     “ராஜகுரு அவர்களே இங்கு நடந்ததை தாங்களும் பார்த்தீர்கள். இதற்கு ஒரு நல்ல முடிவை கூறுங்கள்” என நிறுத்தினார்.

     ராஜகுரு மகிஷந்தன் ஒரு பெருமூச்சை விட்டு “அரசர் லிங்கவேந்தனுக்கு என் வணக்கங்கள். தடாகபுரி நாட்டின் சட்ட திட்டங்களை பற்றி தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. அரசராக இருந்தாலும் இந்த நாட்டின் ராஜ துரோகியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பட்சத்தில் உயரிய தண்டனையான மரண தண்டனை என்பதே விதிக்கப்படும்”

     இவ்வாறு கூறிய ராஜகுருவுக்கே மனது பிசைய அமைதியாக அமர்ந்து விட்டார். கேட்ட மற்றவர்களுக்கும் மனது பதறி விட அரசர் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறாரோ என படபடக்கும் இதயத்தோடு பார்த்தனர்.

     “இங்கு நடந்த விவாதங்களையும் சந்தர்ப்ப சாட்சியங்கள் கூறியதையும் நன்கு கேட்டு ஆராய்ந்தோம்‌. இம்மண்ணிற்கு துரோகம் இழைத்தது சாதா குடிகளோ அல்லது கோமகன் நானோ தவறு தவறாகவே கருதப்படும். எனவே தடாகைக்குழலி செய்தது இந்த நாட்டிற்கு துரோகம் என கருதப்பட்டு தண்டனையாக மரண தண்டனையை விதித்து தீர்ப்பை வழங்குகிறேன்”

     அரசர் கூறி முடித்த பின்னரும் அமைதி நிலவ அங்கே கேட்டது என்னவோ தளபதியின் அழுகை சத்தம் மட்டுமே.

     தீர்ப்பு வழங்கிய சிறிது நேரத்திலே அதை நடத்தி காட்டும் பொருட்டு அனைத்தையும் தயார் செய்துவிட்டான் இளந்திரையன். அரண்மனையில் தண்டணை வழங்கும் இடம் முழுவதும் இப்போது மக்கள் சூழ்ந்திருக்க அதன் நடுவே தடாகை தண்டனைக்கு தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டாள்.

     அவள் தலையோ எப்போதும் போல் நிமிர்ந்திருக்க கண்களோ கடைசியாக இத்தனை வருடம் அவளின் எல்லாமுமாக இருந்த ஆருயிர் தந்தையையும் அவள் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையையும் பார்த்து விட்டு மூடிக் கொண்டன.

     தடாகைக்கு தூக்கு போடப்பட அவள் கால்கள் துடித்து நின்று போக.. எல்லாம் முடிந்த நேரம் அவசரமாக வந்து சேர்ந்தான் இளவரசன் சேந்தன் தழலேந்தி. ஆனால் அவன் வந்து சேர்ந்த நேரம் அனைத்தும் அவன் கை மீறி போயிருந்தது‌. எல்லாம் முடிந்து அங்கு கேட்டது என்னவோ பலரின் அழுகுரல்களையே.