அன்று தீபாவளிப் பண்டிகை. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, சக்திவேலன் எழுவேனா என்று உறக்கத்தை தழுவியிருந்தான். அவன் அழகியும் விடுவேனா என்று தலை குளித்து துவட்டிய துண்டின் நுனியை மெலிதாக சுருட்டி அவன் செவி துவாரத்தில் விட்டு தீண்டினாள். உறக்கம் தடைபட முகம் சுழித்து செவி தீண்டுவதை தட்டிவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பி உறக்கத்தை தொடர, லேசாக அவன் புறம் சரிந்து நாசியின் துவாரத்தில் துண்டின் நுனியை வைத்து சீண்டினாள். இம்முறை கூச்சத்தில் சிலிர்த்து எழுந்தான் சக்திவேலன்.
“ஏய் என்னடி?” கண்கள் இன்னும் உறக்கத்திற்கு கெஞ்ச, இமை பிரிக்க சிரமப்பட்டவனை முடிந்தமட்டும் முறைத்த அவன் மனையாள்,
“தலை தீபாவளி அதுவுமா இப்படியா தூங்குறது?” என்கவும், கண்களை நன்றாக தேய்த்துக்கொண்டு அறையில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தான்.
அதிகாலை நான்கு பதினைந்து என்று காட்டியது. விழிகள் தெறிக்க அதிர்ந்தவன், “இவ்ளோ காலையில எழுந்து என்ன பண்ற நீ?” என்று கேட்டுக்கொண்டே அழகியைப் பார்க்க, அவள் தலைக்கு குளித்து விரித்துவிடப்பட்டிருந்த ஈர கூந்தலுடன் ஒரு நைட்டியில் நின்றாள்.
“சாமிக்கு நெய்வேத்தியம் செஞ்சு படச்சிட்டு புது துணி போடணும். வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றாள் அழகி.
“தூங்காம என்னடி இது?” என்று கடிந்துகொண்டே அவள் கையை பிடிக்கப்போக, அவனிடம் சிக்காமல் பின்னே நகர்ந்தவள், “நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வர முத தீபாவளி. எனக்கு உங்களோட கொண்டாடணும்னு ஆசையா இருக்கு.” என்று முகம் சுருக்கி கெஞ்சுதலாய் பார்க்க, மறுப்பேது அவனிடம்.
“உனக்குத்தான் மார்னிங் சிக்னஸ் இருக்குல்ல ஏன் இப்படி இழுத்து விட்டுட்டு இருக்க அழகி?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து போர்வை மடித்து மெத்தையை சரிசெய்தான்.
“இதையெல்லாம் நல்லா தூங்கி எழுந்து செஞ்சா ஆகாதாமாம்? இப்போவே செய்யணுமா?” மனைவிக்கு உதவ தயாராய் இருந்தாலும் பாதியில் உறக்கம் கலைந்த சுணக்கம் இருக்கவே செய்தது அவனிடம்.
“இதுவரைக்கும் ஆசுரமத்துல கிடைக்குற துணியை போட்டுட்டு கொஞ்சமா யாராவது டோனேட் பண்ற ஒரு பை கம்பிமத்தாப்பு, புஸ்வானத்தை நீ நான்னு போட்டி போட்டு வெடிச்சது எல்லாம் இப்போ ஏதோ கனவு மாதிரி இருக்கு. காலேஜ் சேர்ந்ததும் பார்ட் டைம் வேலை பார்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சப்போ ஆசுரமத்துல படிக்குற பசங்களுக்கு இன்னும் வசதியை மேம்படுத்தணும்னுதான் தோணுச்சு. எனக்குனு தனியா எதுவும் பண்ணிக்க தோணல. ஆனா இப்போ உங்ககூட எல்லாம் அனுபவிக்கனும் கொண்டாடணும்னு தோணுது.” உணர்ச்சி மிகுதியில் பேசிய அழகியை தோளோடு அணைத்து அவள் உச்சந்தலையில் தன் கன்னம் பதித்தான் சக்திவேலன்.
“என் அழகி ஆசைப்பட்டா அதுக்கு அப்பீலே கிடையாது. ஆனா நோ வெடி… சத்தத்துல பாப்பா பயந்துக்கும்.” என்று அவள் வயிற்றை லேசாக வருடிச் சொல்ல, கிளுக்கிச் சிரித்தவள் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு,
“வயித்துல இருக்க பாப்பா பயந்துக்குமா? சயின்ஸ் வாத்தியார் இங்க ரொம்ப வீக்கா இருக்காரே…” என்று அவன் தலையை சுட்டிக்காட்டிச் சொல்ல, அவளை மீண்டும் தன்னிடம் நெருக்கிக்கொண்டவன், “நீங்கதான் வீக் மேடம்… சட்டு சட்டுன்னு கேக்குற வெடி சத்துல உனக்கு தூக்கிப்போடும், அதை பாப்பாவும் பீல் பண்ணும். அதனால நோ வெடி. ஒன்லி மத்தாப்பு, சத்தமில்லாத வெடி மட்டும்தான்.” என்று கறார் பேசியவனிடம்,
“ரொம்பத்தான்… நாம வெடிக்க கூடாது சரி, பக்கத்து வீட்டுல வெடிக்குறவங்களை என்ன சொல்வீங்க சார்?” என்று அழகி புருவங்களை ஏற்றி இறக்க, அவளை விட்டு தள்ளிச் சென்று எதையோ எடுத்து வந்தவன் அவள் காதில் அந்த ஹெட்செட்டை நன்றாக பொருத்திவிட்டு பாடலை தேர்வு செய்து ஒலிக்கவிட்டான்.
“பாட்டு கேளுடி வரேன்…” துரித முத்தமொன்றை கொடுத்து நகர்ந்தவனை, “எண்ணெய் தேய்ச்சி குளிக்கணும்.” என்று நிறுத்தினாள் அழகி.
“நீ தேய்ச்சி விடுறியாடி…” விஷமம் கொப்பளித்தது அவன் கண்களில்.
பழிப்பு காண்பித்தவள், “ஆசைதான். பாத்ரூம்ல வச்சிருக்கேன், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.” என்று அவனை தள்ளாத குறையாக முதுகில் கைவைத்து நகர்த்தினாள்.
அவளை அதற்கு மேல் படுத்தாமல் குளித்து வந்தவன் அவளுக்கு உதவி, நிறைவாய் சுவாமி கும்பிட்டு, புத்தாடை உடுத்தி கொண்டாடியது நீங்கா நினைவுகளாக நினைவுப்பெட்டகத்தில் சேமிக்கப்பட்டிருக்க, இன்று பட்டன் தட்டியது போல் அது மேலெழும்பி வந்தது. தலையை உலுக்கிக்கொண்டே அருகில் உறங்கும் மகளைப் பார்த்தான்.
தீபாவளி விடுமுறை என்ற குதூகலத்தில் இரவு உறக்கம் வரவில்லை என அவனை ஒருவழி செய்துவிட்டே உறங்கினாள் கயல்விழி. வாஞ்சையாய் அவள் சிரம் வருடியவன் அன்றைய வேலையைப் பார்க்க எழுந்துவிட்டான்.
அவனுக்கு தெரிந்த சுலபமான இனிப்பு பலகாரம் செய்தவன் முறுக்கு, தட்டை போன்ற கார வகைகளை கடையில் வாங்கியிருந்தான். முன்பென்றால் அனைத்தும் சுவாதி வீட்டிலிருந்து வந்துவிடும். இப்போதுகூட கூரியர் செய்துவிடுகிறேன் என்று அவள் அழைத்து கேட்டாள்தான். கடையில் வாங்கிவிட்டேன் என்று இவன்தான் கழட்டிவிட்டான்.
காலை உணவையும் தயார் செய்து அனைத்தையும் எடுத்து வைத்தவன் கயல்விழியை எழுப்பிவிட, உற்சாகமாக எழுந்து கிளம்பினாள். அவனுக்கு தெரிந்த வகையில் படையில் போட்டு புத்தாடை உடுத்தி கொஞ்சம் மத்தாப்பு கொளுத்திவிட்டு மேலே வந்தார்கள்.
சக்திவேலன் ஓய்வாக அமர்ந்து கயல் தலையில் இருந்த சிறிய கிளிப்பை எடுத்துவிட்டு ஈரம் இருந்த முடியை உலர வைக்க, அவன் காலுக்கிடையில் நின்று அவன் தொடையில் கையூன்றிய கயல், “அப்பா எனக்கு ரோஸ் வேணும்.” என்று கேட்டவள் குனிந்து தன் உடையை பார்த்துவிட்டு, “பிங்க் ரோஸ் என் டிரெஸ் மேட்சா வேணும்.”
“வாங்கித் தரேன்டா… ஆனா பாப்பா தலையில ரோஸ் நிக்குமான்னு தெரியலையே…” என்றபடியே அவள் முடியை ஒற்றைக் கையில் சேர்த்துப்பிடித்து கூர்மையாகப் பார்த்தான்.
அழகியைப் போல அடர்த்தியான சிகைதான் என்றாலும் அவனால் சடை பின்னி பராமரிக்க முடியாத காரணத்தால் எப்போதும் கழுத்து தொடும் வரை மட்டும் வளர விடுவான். அதை தாண்டிவிட்டால் அழைத்துச் சென்று வெட்டிவிடுவான். இன்று மகள் பூ கேட்கவும் அது அவள் முடியில் நிற்குமா என்ற ஆராய்ச்சி அவன் விழிகளில்.
“அப்பா…”
“ம்ம்…”
“அப்பா…” அவன் இன்னும் அவள் முடியை அளந்து கொண்டிருக்க, காலை உதைத்தாள் கயல்.
“சொல்லு பாப்பா.” ஒருவழியாய் மகள் புறம் பார்வையை திருப்பினான் சக்திவேலன்.
“இங்க ஆஸ்ரமம் போறோமா அப்பா?”
“சாப்பிட்டு போவோம்டா…” என்றவன் மணியைப் பார்க்க, அது சிற்றுண்டி நேரம். அடுத்த வேலையை பார்க்க வேண்டுமா என்று சோம்பல் பிறக்க, தன்னை ஒட்டிக்கொண்டு அங்குமிங்கும் ஆடியபடி இருந்த மகள் கருத்தில் பதியவும் சோர்வு பின்சென்றது. பெருமூச்சுடன் கயல் தலைமுடியை ஒன்றாக வாரி ஹேர்பேண்டில் அடக்கிவிட்டு உணவு பரிமாறினான்.
தீபாவளிக் கொண்டாட்டமாக வகுப்பு தோழர், தோழிகள் என்ன திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள் என்று தந்தையிடம் பகிர்ந்துகொண்டே சிறு சிறு கவளங்களாய் உண்டு முடித்தாள் கயல். அவள் கைகழுவி வாய் துடைக்கும் போது சக்திவேலன் அலைபேசி அதிர, திரையில் சுவாதி பெயர் மின்னியது.
விலக நினைத்தாலும் தீபாவளியன்று தவிர்க்க முடியாது என்று உணர்ந்து அழைப்பை ஏற்றவன் வாழ்த்து பரிமாறிவிட்டு கயலிடம் அலைபேசியை நீட்டினான்.
சுவாதி அவர்களை வந்து பார்த்து சென்றபின் சக்திவேலனின் தூண்டுதலால் அவள் அழைக்கும் போதெல்லாம் அளவாக பேச முயன்ற கயல் இன்று தீபாவளி கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் கால் மணி நேரம் சென்றும் பேசிக்கொண்டிருந்தாள். சக்திவேலன் என்ன இனிப்பு செய்திருந்தான், எந்த நிறத்தில் உடுப்பு வாங்கிக்கொடுத்தான் என்பது தொடங்கி மத்தாப்பு கொளுத்தியது, தந்தையிடம் ரோஜா பூ கேட்டது, ஆஸ்ரமத்திற்கு செல்லவிருப்பது வரை அனைத்தையும் ஒப்புவித்தவள் செவிவழி அழைப்பை காணொளி அழைப்பாக மாற்றவும் ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்த்தவன் வெளியே கிளம்பவேண்டும் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான். கயல்விழி பாவமாய் தந்தையைப் பார்க்க,
“ஆஸ்ரமத்துல உள்ளவங்க கூட தீபாவளி கொண்டாட வேண்டாமா? இங்க நிறைய புது அக்கா, அண்ணா எல்லாம் இருப்பாங்க. கயல் பாப்பா எப்போ வருவான்னு அவங்க எதிர்பார்த்துட்டு இருப்பாங்க.” என்றதும் வேகமாக தலையாட்டி கிளம்பிவிட்டாள் கயல்விழி.
கயல் விவரம் அறியா வயது வரை வீட்டில்தான் அவர்கள் கொண்டாட்டங்கள் இருந்தது. என்று பள்ளியில் மற்ற பிள்ளைகளை பார்த்து வந்து கதை சொல்லத் துவங்கினாலோ அன்றிலிருந்து மகள் தனிமை உணரா வண்ணம் இதுபோன்று இல்லங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டாடத் துவங்கினான். இங்கு வந்த பின்பும் அருகில் இருக்கும் ஆஸ்ரமங்கள் குறித்து விசாரித்து வைத்திருந்தான். இன்றுதான் செல்ல நேரம் கிடைக்க முன்பே அங்கு அழைத்து சொல்லிவிட்டான் தாங்கள் வருவது குறித்து.
வீட்டில் வாங்கியிருந்த கம்பி மத்தாப்புகள் சிலவற்றை இரவுக்காக எடுத்து வைத்துவிட்டு மிச்சம் இருந்தவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பினர். செல்லும் வழியில் கயலுக்கு அவள் கேட்டது போல் ஒரு ரோஜா பூவும் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றான்.
“இங்க குட்டியா இருக்குல்ல அப்பா?” அவன் வண்டி நிறுத்திய ஆஸ்ரமம் இடம் கண்டு கயல் திரும்பிப் பார்த்துக் கேட்க, “இங்கேயும் பெரிய இடமெல்லாம் இருக்குடா. இன்னைக்கு இங்க வந்திருக்கோம்.” என்று சொல்லிக்கொண்டே கைபிடித்து உள்ளே நுழைந்தான்.
அவர்கள் கடலூரில் வழக்கமாக செல்லும் இடத்தைவிட இது கொஞ்சம் சிறிய அளவில் இருந்தது. சமீபமாக ஊர் விட்டு ஊர் வந்து இடம் மாறியிருப்பதால் செலவீனங்கள் அதிகரித்திருக்க, அவன் வசதிக்கு ஏற்ப பத்திலிருந்து பதினைந்து பேர் இருக்கும் இல்லத்தை தேர்வு செய்து வந்திருந்தான்.
இவர்கள் வந்தவுடன் வரவேற்ற உரிமையாளர் பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல, அனைவருக்கும் தாங்கள் வாங்கி வந்த பரிசுப்பொருட்களை கயல்விழியை விட்டு கொடுக்க வைத்தான். அடுத்த இரண்டு மணி நேரம் பிள்ளைகளோடு கொண்டாட்டமாய் கழிய, வீடு கிளம்ப வெளியே வரும் நேரம் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
“இன்னைக்கு மதிய சாப்பாடு அவங்கதான் ஸ்பான்சர்.” என்ற உரிமையாளர் ஆட்டோவிலிருந்து இறங்கியவர்களை வரவேற்க சென்றார். ஆட்டோவிலிருந்து கேரியர்கள் இறங்கியது.
இவன் வேலை முடிந்தது கிளம்பலாம் எனும் விதமாய் கயல் கையை பிடித்துக்கொண்டு நடக்க அப்போதுதான் ஆட்டோவிலிருந்து இறங்கிய நிலா இவர்களைக் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டாள்.
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது எப்படி அவனிடமிருந்து தப்பிப்பது என்று நிலா தவித்து விழிக்கும் போதே கண்கள் இடுங்க அவளை முறைத்தபடி நெருங்கியவன், “உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாத்தா போதும். தேவையில்லாத இடத்துல மூக்கை கொடுக்காதீங்க, மூக்கொடஞ்சி போயிடுவீங்க.” என்று மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் அடிக்குரலில் சீறினான்.
“சா… சார் அது தெரியாம… வேணும்னு நான் எதுவும் கேக்கல… அதுவா…” அவள் திணற,
“அதுவா இதுவான்னு நீங்க என்ன வேணா சொல்லுங்க. கேக்க நான் தயாரா இல்லை. என்னை விட்டும் என் பொண்ணை விட்டும் தள்ளி இருங்க. இல்லை முடியாதுன்னா நான் கம்ப்ளைண்ட் குடுக்க வேண்டியதாகிடும்.” என்று எச்சரிக்க, அவர்களை நெருங்கிய அந்த இல்லத்தின் உரிமையாளர்,
“மதிய சாப்பாடும் வந்துடுச்சு. நீங்களும் சாப்பிட்டு போங்களேன்.” என்று சக்திவேலனிடம் சொல்ல, அவர்கள் பேசட்டும் என்று நகர்ந்தாள் நிலா.
“வருஷா வருஷம் பண்டிகை நாள் எல்லாமே இவங்க சைட் ஸ்பான்சர்தான் சார். அவங்க பேரும் சக்திதான்.” என்று மேலும் தகவல் சொல்ல, சக்திவேலன் முகம் அதிருப்தி காட்டியது.
“வேலை இருக்கு மேம். நாங்க கிளம்புறோம்.” என்று அவன் விடைபெற முயல, அவன் முகம் கண்டே அவனை வற்புறுத்தாமல் இன்முகமாக உள்ளே நடந்து சென்றார் உரிமையாளர்.
“சாப்புட்டு போலாமே சார்…” என்று நிலா வாயை சும்மா வைத்துக்கொண்டு இல்லாமல் சொல்ல, இவன் முகம் இறுகியது. அவளை பொருட்டாய் மதியாமல் விறுவிறுவென கயலுடன் வெளியேற, இந்த ‘சக்தி’ என்ற பெயர் ஏன் எங்கு சென்றாலும் தன்னை துரத்துகிறது என்ற தீவிர சிந்தனையுடன் வண்டியை வீட்டிற்கு செலுத்தினான்.
அவன் சிந்தனையை ஆக்கிரமித்திருந்த சக்தியோ ராஜாவுடன் கவுன்சிலர் வீட்டு வெளி வராண்டாவில் அமர்ந்திருந்தாள்.
“எல்லா இடத்துக்கும் சாப்பாடு நேரத்துக்கு போய்டுச்சா?” என்ற சக்தியின் கேள்விக்கு,
“ரவிகிட்ட சொல்லியாச்சே அவன் பாத்துப்பான். கிளம்பும் போதே விசாரிச்சேன் எல்லா இடத்துக்கும் வண்டில கேரியர் ஏத்திட்டதா சொன்னாங்க.” என்று பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் ராஜா.
பண்டிகை காலங்களில் அவர்கள் பகுதியை சுற்றியிருக்கும் இல்லங்களில் பின்தங்கியிருப்பவைகளை கண்டறிந்து தங்களால் இயன்ற அளவு ஒரு வேலை உணவாவது ஏற்பாடு செய்துவிடுவர். மற்றைய நாட்களில் எங்கு தேவை இருக்கிறதோ அங்கு செய்வதும் உண்டு.
சிறிது நேரத்தில் இவர்கள் உள்ளே அழைக்கப்பட, “ரொம்ப பிசி ஆகிட்டீங்களே. உங்களை சந்திக்க காத்திருக்க வேண்டியிருக்கு.” என்று சொல்லிக்கொண்டே வாங்கி வந்திருந்த இனிப்புகளை கொடுத்துவிட்டு அமர்ந்தான் ராஜா. சக்தி அருகில் எப்போதும் போல அமைதியாய்.
“என்ன சக்தி போலீஸ் வீடு வரை வந்துட்டதா பசங்க சொல்றாங்க.” என்று ஆரம்பித்தார் கவுன்சிலர்.
“எப்படி அவங்க உள்ள வந்தாங்கனு உங்க பசங்க சொல்லலையா?” இடக்காய் கேட்டான் ராஜா.
“பேச்சு ஒன்னும் சரியில்லையே…” என்று கவுன்சிலர் தாடையைத் தடவ, நிலைமையை கையிலெடுத்தாள் சக்தி.
“இதுவரைக்கும் எந்த காக்கி சட்டையும் எங்க ஏரியாவுக்குள்ள நுழைஞ்சது இல்லை. இப்போ திடீர்னு சரக்கை தேடி வீட்டுக்கே போலீஸ் வர்றது, உங்க இடத்துல சரக்கை இறக்குனது எல்லாம் ஒன்னுக்கொன்னு தொடர்பு இருக்குற மாதிரி தெரியல…”
“என்னை சந்தேகப்படுறியா சக்தி? விஷயம் தெரிஞ்ச உடனேயே உங்களை பாத்து பேசணும்னு இருந்தேன். எங்க நான் பேச வந்து என் மூலமா நூல் புடிச்சிருவாங்களோனு அமைதியா இருந்தேன். இப்போ என் பக்கமே திருப்புறீங்களே…” என்றார் கவுன்சிலர் தன் பக்கம் தவறில்லை எனும் விதமாய்.
“உங்களை இல்லை ஆனா உங்க ஆளுங்க யாரும்?” என்று கூர்மையாக பார்த்தான் ராஜா.
“ச்சச்ச… என் பசங்களுக்கு உங்களை காட்டிக்கொடுத்து என்ன கிடைக்கப் போவுது? நானும் சக்தியும் வியாவாராம் பண்றோம்னு தெரிஞ்சே அவங்க ஏன் பண்ணப் போறாங்க.” அவர் ஆளுக்கு சாதகமாக பேசினார் கவுன்சிலர்.
“அப்போ எப்படி நியூஸ் வெளில போச்சு? இதுவரைக்கும் நாங்க வீட்ல வச்சுதான் ரொட்டேஷன் பண்ணோம் அப்போல்லாம் வராத போலீஸ் உங்க இடத்துக்கு மாத்துனதுக்கு அப்புறம் வருது. அப்போ உங்க மேல விரோதம் இருக்குற யாரோ உங்களை தட்டி வைக்க கூட இதை பண்ணி இருக்கலாம்ல. விசாரிங்க.” என்றாள் சக்தி.
“நான் பாக்குறேன். என் ஆளுங்களை இறங்கி பாக்க சொல்றேன்…” என்றவரை இடைமறித்த ராஜா,
“நாங்களே போலீஸ் வச்சி பாத்துட்டு இருக்கோம். நீங்க அந்த அமைச்சரை புடிங்க.”
“என்ன தம்பி இப்படி பட்டுனு அமைச்சர் வரைக்கும் போறீங்க…”
“கமிஷன் போச்சுல்ல, வாங்கி உள்ள வச்சிக்கிட்டாருல்ல… இதுபத்தி பேச ஏற்பாடு பண்ணுங்க.” என்றான் ராஜா கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற நோக்கத்துடன்.
கவுன்சிலர் சுதாரிப்புடன் அவர்களை கூர்மையாக பார்த்தார்.
“அடுத்து இதைவிட பெரிய சரக்கு இறக்குற மாதிரி இருக்கும். அப்போ கெடுபிடியும் அதிகம் இருக்கும். இப்போவே அமைச்சரை நேர்ல பாத்து ஒரு பழக்கம் ஏற்படுத்தி வச்சிக்கிறது நல்லது.” என்றாள் சக்தி.
கவுன்சிலர் யோசிப்பது போலிருக்க, ராஜாவை அர்த்தமாக பார்த்தாள் சக்தி. அவள் பார்வையின் அர்த்தம் உணர்ந்து தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து நீட்டினான். புருவம் சுருங்க அதை வாங்கிய கவுன்சிலர் பொட்டலத்தை பிரித்துப்பார்த்து அதிர்ந்து பின் அதிலிருந்து துளி எடுத்து நாசியில் வைத்து வாசம் இழுத்தவர் அதை அப்படியே விரலிடுக்கில் நுணுக்க, இன்னொன்றை நீட்டினான் ராஜா.
அந்த சிறிய பேப்பர் போன்றிருந்ததை வாங்கி விரித்து அதில் நுணுக்கிய தூளை வைத்தவர் சிகரட் ஒன்றையும் அக்கு வேறாக பிரித்து அதில் உள்ளவையும் எடுத்து இதோடு சேர்த்து சுருட்டி பத்தவைத்து உள்ளிழுத்து புகையை வெளியே விட, லேசாக குனிந்து மூக்கை மூடிக்கொண்டாள் சக்தி.
“ஷீலாவதி எப்படி?” என்ற ராஜாவின் கேள்விக்கு அபத்தமாக இதழ் வளைத்தவர், “அமைச்சரை பாக்க அப்பாயின்மென்ட் வாங்கிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புறேன்.” என்கவும், சக்தி நோக்கி வெற்றிப் பார்வை வீசினான் ராஜா.