*8*

வாக்கு கொடுத்தது போல் மாலை பள்ளி முடித்து வீடு வந்து வயிற்றை கவனித்து உடை மாற்றி கயல்விழியை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான் சக்திவேலன். மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியது. சிலிர்க்க வைக்கும் தென்றலின்றி மனதை இலகுவாக்கும் காற்றாய் தேகம் உரசிச் செல்ல, ஆங்காங்கு மக்கள் கூட்டம். 

கடலூரில் கடற்கரை இருந்தாலும் அவர்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவு. ஆக, எப்போதாவது வருடத்திற்கு ஒருமுறை வரும் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறையில் மட்டுமே அழைத்துச் செல்வான். இங்கோ பால்கனியில் நின்றாலே கடற்காற்று உடல் தழுவிச் சென்று பார்வைக்கு விருந்தாக இருக்க, கயல் ஒருமாதம் அமைதியாய் இருந்ததே சக்திவேலனுக்கு யோசித்துதான். அது சுவாதி வந்ததும் தகர்ந்துவிட இன்று பள்ளியில் நடந்தவற்றை சொல்லிக்கொண்டே மணலில் கால் புதைய நடந்த கயலிடம் அத்தனை உற்சாகம்.

சக்திவேலன் கைப்பிடியில் இருந்தாலும் குதித்துக்கொண்டே அவனை சுற்றி சுற்றி வந்து தண்ணீரில் விளையாடியவள் ஒருகட்டத்தில் சோர்ந்து அவன் கால் கட்டிக்கொண்டு சாய, அணைத்தவாக்கிலேயே மகளுடன் சற்று தள்ளி ஈரமில்லாத இடத்தில் அமர்ந்தான்.

“கொஞ்சம் தண்ணீ குடி பாப்பா.” என்று கையோடு எடுத்து வந்திருந்த பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுக்க, வேடிக்கை பார்த்துக்கொண்டே சப்பி குடித்தாள் கயல். ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசமாகட்டும் என்று அமைதி காத்தவன் கயல் இயல்புக்கு வரவும், “இப்போ ஹாப்பியா பாப்பா?”  

தந்தையின் முகம் பார்த்த கயலின் தலை இங்குமங்குமாய் அசைந்தாடியது, “நாளைக்கு என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேனே… அப்புறம் சுவாதி ஆன்ட்டிகிட்ட…” எனும் போதே,

“ஆன்ட்டிக்கு நிறைய வேலையாம் பாப்பா. நீ அடிக்கடி அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது.” என்று இடைபுகுந்தான் சக்திவேலன்.

தந்தை அப்படி சொல்லவும் கயல் முகம் கறுத்து பின் இயல்பாகியது.

“ஆன்ட்டி என் கூடவே இருந்தா அவங்க பிஸியா இருக்கும் போது தொல்லை பண்ண மாட்டேன்… அவங்க இருந்தா ஹாப்பியா இருக்கும்ல. நான் ஹாப்பியா இருந்தா அம்மாவுக்கும் புடிக்கும்ல அப்பா?” என்று கேட்ட மகளை திடுக்கிட்டுப் பார்த்தான் சக்திவேலன்.

இதுவரை அம்மா என்ற வார்த்தை அவர்களுக்குள் வந்ததே இல்லை. வெளியுலகம் பார்த்த பின் மகள் கேட்டால் பதில் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவனிடம் கயல் கேட்டிருக்கவே இல்லை. அதற்காக கயல்விழி அம்மாவை தேடவே இல்லை என்றில்லை. பள்ளி சேர்ந்த சிறிது காலத்திலேயே என் அம்மா எங்கே என்று கேட்டிருந்தாள் சுவாதியிடம். 

‘எல்லாரும் அம்மா அப்பா கூடதான் இருக்காங்க. அம்மா தான் டிரெஸ் பண்ணிவிட்டு சாப்பாடு ஊட்டிவிடுவாங்களாம். எனக்கு அப்பா தானே எல்லாம் பண்றாங்க. ஏன் அம்மா பண்ணல? ஏன் அம்மா எங்க கூட இல்லை? எங்க இருக்காங்க? என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேக்குறாங்க?’ சக்திவேலன் அவர்கள் பள்ளி குழுமத்தின் தலைமையிடத்தில் ஆலோசனை கூட்டமென்று வெளியூர் சென்றிருந்த நாளொன்றில் தன்னை அழைக்க வந்த சுவாதியிடம் கயல் கேட்டிருக்க, அவள் வாயடைத்து போனாள். 

‘ஆன்ட்டி என் அம்மா எங்க?’ என்று தன் கைபிடித்து கேட்கும் சிறுமியிடம் சொல்வதறியாது அவள் திணற, ‘உங்க அப்பா சாமிகிட்ட போயிட்ட மாதிரி என் அம்மாவும் சாமிகிட்ட போயிட்டாங்களா?’ என்று கயலாகவே யூகித்து கேட்க, தலையசைப்பதை தவிர வேறு பதில் தெரியவில்லை சுவாதிக்கு. கயல்விழியும் நிதர்சனம் புரிந்து அதன்பின் கேட்கவில்லை. இந்த விஷயம் சக்திவேலனுக்கு தெரியாமலேயே போக, இப்போது முதல்முறையாய் தாயைப் பற்றிய பேச்சு வரவும் ஒருவித அதிர்வில் இருந்தான் அவன். 

“எனக்கு புடிச்சதெல்லாம் அம்மா உங்ககிட்ட சொல்லி செய்ய வைப்பாங்களாம். நேத்தி மாதிரி சுவாதி ஆன்ட்டி என்கூடவே இருந்தா சூப்பரா இருக்கும்ல அப்பா? அவங்களை நம்மகூடவே வச்சிக்கலாம், ப்ளீஸ் அப்பா…” என்று மகள் கெஞ்சியத்தில் ஆடிப்போனான் சக்திவேலன்.

பேச்சே வரவில்லை. என்ன கேட்டுவிட்டாள்… மகள் மனதில் இப்படியொரு எண்ணம் எப்படி வந்தது? புரிந்துதான் கேட்கிறாளா? இல்லையில்லை… தலையை உலுக்கிக்கொண்டவன் கண்ணெதிரே இருக்கும் ஆழிக்கு இணையாய் ஆர்ப்பரிக்கும் மனதை அடக்க முயன்றான். தன்னை எதிர்பார்ப்புடன் நோக்கும் மகளை காணக் காண அதிவேக விரைவு இரயில் சரேலென தன்மேலேறி சென்றது போல் தடதடக்க, மகள் கையிலிருந்த பாட்டிலை வாங்கி கொஞ்சம் தண்ணீர் அருந்திய பின்புதான் நிதானம் வந்தது. 

“அவங்க நம்ம கூடியே இருக்க முடியாது பாப்பா. இனி இப்படியெல்லாம் பேசாத.”

“அப்பா…” சிணுங்கிய மகளுக்கு அன்று என்ன ஆனதோ, “ப்ளீஸ் அப்பா. அவங்களை கூப்புடுங்க.”

“கயல் அப்பா சொல்றேன்ல… நீ அப்பா கூட இருக்குற மாதிரி சுவாதி அவங்க அம்மா கூட தான் இருப்பாங்க. இங்க எல்லாம் இருக்க மாட்டாங்க.” என்று பொறுமையாக எடுத்துச் சொல்ல முயன்றான்.

“ஏன் மாட்டாங்க. நான் சொன்னா இருப்பாங்க. நான் கூப்பிடுறேன்.”

“இனி நீ அவங்ககூட பேசவே கூடாது.” என தடாலடியில் இருங்க, கயலின் மான் விழிகளில் நீர் சுரந்தது.

“நீங்க பேட் அப்பா. எப்போவும் நீங்க சொல்றதை நான் கேக்குறேன்ல, நீங்க மட்டும் நான் சொல்றதை கேக்கவே மாட்டேங்குறீங்க.” 

“கயல்…”

“அந்த ஆன்ட்டி சொன்னாங்க எனக்கு புடிச்சது எல்லாம் அம்மா உங்ககிட்ட சொல்லி செய்ய வைப்பாங்கனு. இப்போ நீங்க செய்ய மாட்டேன்னு சொல்றீங்க. அம்மா உங்ககிட்ட சொல்லலையா?”

“எந்த ஆன்ட்டி? என்ன சொன்னாங்க?” மகளை அத்தனை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்க்க, யார் வந்து பிஞ்சு மனதை கலைத்துவிட்டது என்று கோபம் அவன் மூக்கின் மேல் வந்து நின்றது.

“நேத்தி இங்க பாத்தோமே… ஸ்கூல்ல கூட இருக்காங்களே.” பெயர் தெரியாததால் நேற்று சந்தித்ததை அடையாளமாக கூறி அவர்கள் எப்போது பேசினார்கள் என்றும் சொல்ல, பல்லைக் கடித்தவன், “தெரியாதவங்க கூட பேசக்கூடாதுனு அப்பா சொல்லிருக்கேன்ல.”

“அவங்களை உங்களுக்கும் தெரியுமே அப்பா, நீங்ககூட பேசுனீங்களே.” என்றாள் சிறுமி சாமர்த்தியமாய். 

“வேலை பாக்குறவங்க கூட பேசுறது சும்மா ஒரு மரியாதைக்காக. அதுக்காக அவங்க கூட க்ளோசா பழகணும் இல்லை பாப்பா.”

“அவங்களும் சுவாதி ஆன்ட்டி மாதிரி நல்லா பேசுறாங்க.” என்ற மகளை ஆயாசமாக பார்த்தான் சக்திவேலன். இத்தனை வருடம் இல்லாது இதென்ன சோதனை என்று மனதில் புலம்பிக்கொண்டே மகளை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டவன் பாதுகாப்பு விஷயங்களை எடுத்துக்கூறி தேவையின்றி யாரிடமும் பழகக்கூடாது என்றான். தந்தையின் பேச்சில் சுணங்கினாலும் கேட்டுக்கொண்டாள் கயல்விழி. 

“என்கிட்ட சொன்ன மாதிரி சுவாதி ஆன்ட்டி கிட்ட சொல்லக்கூடாது. பாப்பா கூட இருக்க முடியலைன்னு பீல் பண்ணுவாங்க. ஆன்ட்டியோட அம்மாவும் பாவம்தான… அப்பாவுக்கு கயல் குட்டி இல்லாம இருக்க முடியுமா?” என்று கேள்வியாய் பார்க்க கயல்விழி இல்லை எனும்விதமாய் வேகமாக தலையசைத்தாள்.

“அதேமாதிரி தான் ஆன்ட்டியோட அம்மாவுக்கும். சுவாதியை விட்டு அவங்க அம்மாவால இருக்க முடியாது. அவங்களுக்கும் வேலை இருக்கும்ல. நாம டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. பாப்பாக்கு என்ன வேணும்னு அப்பாகிட்ட சொல்லுங்க அப்பா எல்லாம் பண்ணித்தரேன்.” என்று பொறுமையாகவே சொல்ல, சோகமாக தந்தை தோளில் சாய்ந்து கழுத்தை கட்டிக்கொண்டாள் கயல். 

மகளின் ஏமாற்றம் உணர்ந்த சக்திவேலனும் தன் நிலையை எண்ணி நொந்து வெதும்ப, அவன் அழகியின் மேல் கோபம் கோபமாய் வந்தது. தங்களை இந்த நிலைமையில் நிறுத்திவிட்டாளே என்ற ஆற்றாமையோடு மகளை இறுக அணைத்துக்கொண்டு எழுந்தான். கீழே கிடந்த பையை குனிந்து எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு சாலையை நோக்கி செல்ல, அங்கு பரபரப்பாய் இருந்தது. 

சாலையில் இரண்டு போலீஸ் வாகனங்கள் வேறு நிற்க, இவன் நடை தடைபட்டது. ஏதோ பிரச்சனை என்று புரிந்தது. அப்படியே திரும்பி வந்தவழியே கடற்கரை மணலில் அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு செல்வோமா என்று அவன் யோசிக்கையிலேயே காவலர்கள் கும்பலாய் ஒன்றிரண்டு வீட்டிலிருந்து வெளிவந்து தங்களின் வாகனங்களில் ஏறி சைரனை அலறவிட்டு கிளம்பினர். அவர்கள் பார்வை விட்டு மறையவும் இவன் நடையைத் தொடர, மீண்டும் அவ்விடத்தில் சலசலப்பு. இவன் பார்வை வட்டத்தை விட்டு சற்று தள்ளித்தான் என்றாலும் பார்வை அங்கு தானாய் சென்றது.

கூட்டத்தின் ஒரு பகுதியில் அந்த நிலாவிடம் சிலர் எகிறிக்கொண்டு இருப்பது தெரிய சற்று மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் ஏறியது. கயலை தன் தோளில் இன்னும் அழுத்திக்கொண்டவன் நிலாவை கடுப்புடன் பார்க்க, அந்த கூட்டத்தில் அடிதடி சலசலப்பும் தெரிய, அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை சக்திவேலன். விறுவிறுவென தன் வண்டியில் மகளை அமர வைத்து வண்டியில் சாவியை போட்டான்.

“என்னவாம் போலீஸ் வந்து சக்தி அக்கா வூட்டை சோதனை போட்டுட்டு போவுது? மீனு வியாவாரம் பண்ற தெருவுல என்னத்தை புடிக்க வந்தாங்களாம்?”

“என்னமோ ஷீலாவதியாம். ஒன்னும் புரியல. ஒரு மனுசி நல்லது பண்ணிடக்கூடாது உடனே புடிக்க வந்துடுவானுங்க.”

“அவங்க நமக்கு நல்லது பண்ணாங்க சரி, அது எல்லாருக்கும் நல்லதா இருக்குமுன்னு ஆருக்கு தெரியும். கூட இருக்குறவனுங்களே எவன் கை காலையாவது உடைச்சு போட்டு உள்ள போறவனுங்க தான. என்னமோ ஷீலாவதின்னியே… ஏதோ பொண்ணு மேட்டர் மாதிரி இருக்கே. கை வச்சிருப்பானுவோளா இருக்கும். அதான் சக்தியே போட்டு அடிச்சிட்டு இருக்கு.” என்று இருவர் தங்களுக்குள் சத்தமாய் அவனருகே பேசிச் செல்ல, அங்கிருக்கும் சூழ்நிலையே உவப்பாய் இல்லை அவனுக்கு.

“அடுத்த தடவை நாம வேற பீச் போலாம் பாப்பா. நீ சொன்ன அந்த பொண்ணு அங்க சண்டை போட்டுட்டு இருக்கு, போலீஸ் கூட வந்துட்டு போறாங்க. இனி நீ அவங்ககூட பேசாத பாப்பா.” என்று சொல்லியே திரும்பியும் பாராது மகளை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

சலசலப்பின் நடுவே கையை உதறியபடி இருந்த சக்தியின் அருகே நின்றாள் நிலா. 

“அந்த பக்கம் போன போலீஸ் திரும்ப இந்த பக்கம் வரணும்னு அடிச்சிக்கிட்டு இருக்கீங்களாடா?” என்ற ராஜாவின் சத்தத்திற்கு ஒவ்வொருவரும் முகத்தை தூக்கி வைத்து நின்றனர்.

“இதுவரைக்கும் ஒரு போலீஸ் நம்ம இடத்துக்கு வந்திருக்குமா? இன்னைக்கு இப்படி ஒரு கும்பலே இறங்கியிருக்குன்னா யார் காரணம் இவளா தான் இருக்கும்…” என்று நிலாவிடம் மீண்டும் எகிறிச் சென்றான் ரவி.

நிலா பயத்தில் கண்களை இறுக மூடி சக்தியின் பின் ஒளிந்து கொள்ள, பாய்ந்து வந்த ரவியின் நெஞ்சில் கைவைத்து தடுத்தாள் சக்தி.

“அவளை சந்தேகப்படுறேனு ரோட்டுல வச்சி என்ன பண்ணிட்டு இருக்கேனு புரியுதா? கோவத்தை விட்டு நல்லா கண்ணை முழிச்சி பாருடா.” என்று கத்தியவள் நிலாவை கைபிடித்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் சக்தி.

“அக்கா நான் எதுவும் பண்ணல. போலீஸ் எதுக்கு இங்க வந்தாங்கன்னு எதுவும் எனக்குத் தெரியாது. எப்படியோ சீரழிஞ்சி போயிருக்க வேண்டிய என்னைய இங்க தைரியமா நடமாட வச்சிருக்கீங்க. புது வாழ்க்கை குடுத்திருக்கீங்க. நான் எதுவும் பண்ணல அக்கா. நீங்களும் எதுவும் பண்ணி இருக்க மாட்டீங்க அப்புறம் ஏன் போலீஸ் வந்துச்சுனு புரியலை அக்கா…” என்று இமைகளுக்குள் நிறைந்துவிட்ட உவப்பு நீருடன் நிலா பாவமாய் கூற, அவள் தோள் தட்டிய சக்தி அவளை அமரச் சொல்லி கைகாட்டினாள்.

“கண்ணை தொட…” என்கவும் வேகவேகமாக துப்பட்டா கொண்டு கண்களை அழுந்தத் துடைத்தாள் நிலா.

“இந்த இடம் உன்னை மாதிரி நிறைய பேரை வாழ வச்சிருக்கு. அது சிலர் கண்ணை உறுத்துது. அதான் கும்பலா வந்து தேடிட்டு போறாங்க. நீ ஒன்னும் கவலைபட்டுக்காத.”

“என்னக்கா சொல்றீங்க?” மருண்ட விழிகளுடன் நிலா நிமிர்ந்து அமர்ந்து பார்க்க, விரக்தி புன்னகை உதிர்த்த சக்தி, “இந்த உலகத்துல பொண்ணுங்களை சதை பிண்டமாவும், மோகத்தை மூர்க்கமா தீத்துக்குறதுக்கான பொம்மையாவும் பாக்குறவங்க நிறைய பேர் இருக்காங்கமா. அவங்க பெரிய நெட்ஒர்க், அதுல மாட்டி அவங்களுக்கு இரையானவங்க நிறைய பேர் எங்க கூண்டுல சிக்கி பாதுகாப்பா வெவ்வேறு இடத்துல இருக்காங்க. அவங்களை தேடி பெரிய முதலைங்க அப்பப்போ எங்களை கண்காணிப்பாங்க. இந்த முறை வீட்டுக்கே வந்திருக்காங்க அவ்வளவுதான். நீ பயப்படாத…” 

சக்தி இயல்பாய் கூறுவது போலிருக்க, நிலாவுக்கு கிலி பிடித்துக்கொண்டது. அது அவள் முகத்திலும் தெரிந்திருக்கும் போல, “நீ போய் நேரமே சாப்பிட்டு ரெஸ்ட் எடு. சாந்தி அக்கா உனக்காக காத்திருப்பாங்க. வா நானே கொண்டு வந்து விடுறேன்.” என்று சக்தி எழுந்துகொள்ள, பட்டென எழுந்த நிலாவும்,

“இல்லையில்லை வேண்டாம் அக்கா… நா… நானே போயிக்கிறேன். நீங்க பாருங்க.” என்று கிளம்பியிருந்தாள் நிலா.

அவள் வெளியேறவும் சீறிக்கொண்டு உள்ளே வந்தான் ரவி.

“அவளை தலைமேல தூக்கி வைக்காத க்காவ்… உன்னையே மிதிச்சிடுவா.” 

“வேற எவனோ நமக்குள்ள ஊடுருவி உளவு பாத்திருக்கான். அவனை மேய விட்டுட்டு இவ பின்னாடி சுத்தி மழுங்கிட்டு இருக்கியா நீ…” அவனுக்கு சற்றும் குறையாத சீற்றத்துடன் பாய்ந்தாள் சக்தியும். 

“ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்களா கொஞ்சம். இது சத்தம் போடுற நேரமில்லை. பதுங்கி வேவு பாக்குறவனை நம்ம வலையில சிக்க வைக்க வேண்டிய நேரம். வந்தவங்களுக்கு எப்படி ஷீலாவதி தெரிஞ்சுது, அதுவும் கரெக்ட்டா நம்ம இடத்துக்கு வந்திருக்காங்க. இந்த முறை கவுன்சிலர் இடத்துல இறக்குனதுனால தப்பிச்சோம் இல்லைனா… அதை யோசிங்க முதல்ல…” ராஜா அவர்களை நேர் பாதையில் சிந்திக்க வைக்கும் பொருட்டு பேச, அது நன்கு வேலை செய்தது.

கருவிழியை ஒருமுறை சுழற்றிய ரவி வேகமாக வெளியே சென்று நான்கு பக்கமும் பார்த்துவிட்டு உள்ளே வந்தும் வீட்டை சுற்றிப் பார்த்தான். பெயருக்கு ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே உள்ள வீடு சக்தி தங்கியிருக்கும் வீடு. அந்த ஜன்னல் கதவு மூடப்பட்டு ஒருபாதியை பழைய பீரோ ஒன்று அடைத்திருக்க, மீதி பாதியில் காலண்டர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

ரவி பார்வையின் கோணம் உணர்ந்த சக்தி, “இங்கனு சொல்ல முடியாது ரவி. நம்ம போற வர இடமெல்லாம் பாலோ பண்ணி கூட கண்டுபுடிச்சிருக்கலாம்.”

“அப்டீன்னா கவுன்சிலர் இடத்தையும் கண்டுபுடிச்சிருக்க வாய்ப்பிருக்கே. நானும் ராஜா அண்ணனும் அங்க போய்ட்டு வந்தோமே?” என்று ரவி சந்தேகமாய் கேட்டான்.

“அவன் சொல்றதுலையும் உண்மை இருக்கு சக்தி. நம்மளை பாலோ பண்ணி இருந்தா அந்த இடத்தையே கண்டுபுடிச்சிருக்கலாம்.” என்றான் ராஜாவும்.

“அப்போ கவுன்சிலரே இப்படி பண்ணியிக்கலாம்ல? எங்க நாம அவரை மீறி பெரியாளாகிடுவோம்னு தட்டி வைக்க நினைச்சிருக்கலாம்.” என்றாள் சக்தி யோசனையாய்.

“ஒருவேளை இன்னைக்கு நம்ம மாட்டிருந்தா அவரையும் உள்ள இழுத்து விடுவோம்னு அவருக்கு தெரியாமலையா நம்ம மேல கை வைக்க இறங்கியிருப்பாரு?” இப்போது ரவி யோசனையானான்.

“கமிஷன் அதிகம் வாங்கக்கூட இப்படி பண்ணலாம்.” என்றான் ராஜா.

“ம்ச்… நாம ஏதோ தப்பான கோணத்துல யோசிக்குறோம். கவுன்சிலர் நம்மள தட்டி வைக்க நினைச்சிருந்தா இவ்ளோ போலீஸ் எப்படி திடீர்னு இறங்கிருப்பாங்க? அவருக்கு அவ்ளோ பவர் இருக்கா என்ன?” என்று சக்தி கேள்வியாய் பார்க்க,

“ஒன்னு கவுன்சிலருக்கு மேல மந்திரியா இருக்குறவங்க நம்மளை தட்டி வைக்க நினைக்கலாம். ஆனா அதுக்குமே வாய்ப்பு கம்மி. நம்ம இப்போதான் கொஞ்சம் பெரிய அளவுல சரக்கு இறக்கி ரொடேசன் விட்டிருக்கோம். அதுக்குள்ள மந்திரி கண்ணுலபடுறது எல்லாம் சான்ஸ் கம்மி.” என்றான் ராஜாவும் யோசித்தவண்ணம்.

தலையை உலுக்கிய சக்தி, “இனி நாம எடுத்து வைக்குற அடி எல்லாம் ரொம்ப கவனமா இருக்கனும். நாளைக்கே நம்ம தெருவுல வண்டி திருடு போகுது, பெட்ரோல் திருடுறாங்க அப்படி இப்படினு நாலு காரணம் தேத்தி போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு ரெண்டு தெருக்கோடி, பக்கத்து வீட்டு வாசல்லைன்னு ஒரு மூணு நாலு கேமரா வைக்க ஏற்பாடு பண்ணு. இங்க யாராவது உளவு பாக்குறாங்களானு கண்டுபுடிச்சிடலாம்.” 

“வீட்ல கேமரா வைக்குறது ஓகே… கம்பளைண்ட் எதுக்கு க்காவ்?” என்று கேள்வியாய் பார்த்தான் ரவி.

“இன்னைக்கு அவங்களா உள்ள வந்தாங்க இனி நம்ம கவனத்துல நமக்காக விசாரிக்க உள்ள வந்து போகன்னு இருக்கட்டும். அப்போதான் எந்த கருப்பு ஆடு அவங்களுக்கு போட்டுக் கொடுத்துதுனு கண்டுபுடிக்க வசதியா இருக்கும்.” என்ற சக்தி வெற்றிலை மடித்து நாவிடுக்கில் தள்ளி சுழற்றினாள்.