*7*

வழக்கம் மாறாது நாட்கள் அதன்போக்கில் நகர, அப்பாவும் மகளும் அப்பள்ளியில் கச்சிதமாக பொருந்திவிட்டார்கள். வார விடுமுறை தினமான அன்று இருவரும் நன்றாக இழுத்துப் போர்த்தி உறங்கிக்கொண்டிருக்க, அழைப்பு மணி சத்தத்தில் கண் விழித்தான் சக்திவேலன். தன் மேல் கால் போட்டு உறங்கும் மகளை நகர்த்திவிட்டு எழுந்தவன் அணைவாய் தலையணை வைத்துவிட்டு கண்களை கசக்கிக்கொண்டே வந்து கதவைத் திறந்தான்.

“இன்னும் விடியலையா அப்பாவுக்கும் பொண்ணுக்கும்?” என்ற குரலில் நன்றாக நிமிர்ந்து பார்த்தவன் இதழ்கள் மெலிதாக விரிய, நகர்ந்து உள்ளே நுழைய வழிவிட்டவன், “மணி என்ன? இவ்ளோ காலையில கிளம்பி வந்திருக்க? எப்படி வந்த? வரேன்னு சொல்லவே இல்லை.” என்று கேட்டுக்கொண்டே அவன் கடிகாரத்தைப் பார்க்க, அது எட்டை தொட இருந்தது.

இவன் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் முன் எடுத்து வந்திருந்த பெரிய கட்டை பையை தூக்கி மேசையில் வைத்துவிட்டு திரும்பினாள் சுவாதி.

“ஏர்லி மார்னிங் டிரைன் இருந்துச்சு. அதுல வந்தேன். ஸ்டேஷனிலேந்து இங்க வர ஆட்டோ.” என்றவள் தான் எடுத்து வந்திருந்ததை கண்காட்டி,

“பொடி, ஊறுகாய், தொக்கு, முறுக்கு, சீடை எல்லாம் அம்மா கொடுத்து விட்டுருக்காங்க. எல்லாத்தையும் எடுத்து வச்சிடுறேன். மறக்காம ரெண்டு பேரும் சாப்பிடுங்க.” என்றவள் விழிகளை சுழற்றி வீட்டை அளவிட்டாள்.

“வீடு எல்லாம் செட் பண்ணிட்டீங்களா?”

“ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுல்ல. உட்காரு. பாப்பாவை எழுப்பி விடுறேன்.” என்று அவன் அறைக்குச் செல்ல, இவள் இயல்பாய் கிட்சன் எங்கு என்று தேடிச் சென்று, கொண்டு வந்த அனைத்தையும் வெளியே எடுத்து வைத்தாள்.

சில நொடிகளில் கூக்குரலோடு வந்த கயல் பாய்ந்து சென்று சுவாதியை கட்டிக்கொண்டாள்.

“சர்ப்ரைஸ் எப்படி?” கயலை தூக்கி ஒரு சுத்து சுத்தி கீழே இறக்கிவிட்ட சுவாதி, ஒரு மாத கதையை பேசத் துவங்க அத்தனை உற்சாகமாய் பதில் கொடுத்தாள் கயல்.

பேச்சுக்கு இடைவெளி விட்டால் எங்கு அந்த நாள் முடிந்துவிடுமோ எனும் அளவுக்கு இருவரும் வாயடிக்க, அதற்குள் குளித்து முடித்து வந்தவன் இருவரையும் பார்த்துவிட்டு அமைதியாய் கீழே சென்று பால் பாக்கெட் எடுத்து வந்து காபி கலந்தான்.

“வந்து ஒரு மாசம் ஆகப்போகுது இன்னும் பீச் கூட அழைச்சிட்டு போகலைனு கயல் பீல் பண்றா. இங்க பக்கத்துல தான இருக்கு. நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வரோம்.” என்று அவனைத் தொடர்ந்து வந்து கேட்டாள் சுவாதி. 

காய வைத்த பாலை கரண்டி கொண்டு கிண்டிக்கொண்டே திரும்பியவன், “இங்க உனக்கு பழக்கம் இல்லை. தனியா போக வேண்டாம். இன்னொரு நாள் நான் கூட்டிட்டு போயிக்கிறேன்.” 

“அவ ஆசையா கேக்குறா. நானும் வந்திருக்கேன். வேணும்னா இப்படி பண்ணலாமா துணைக்கு நீங்களும் வாங்க.” என்று கண்களைச் சுருக்கி கேட்டவள் லேசாக தலையைத் திருப்பி கயலைப் பார்த்து கண்சிமிட்ட, 

“அப்பா போலாம்.” என்று சிணுங்கினாள் கயல்விழி.

“கூட்டுக் களவாணிங்க… சாயங்காலமா போலாம். அதுவரைக்கும் ஏதாவது படம் பாருங்க.” என்றவன் கவனம் கொதித்து பொங்கக் காத்திருந்த பாலில் செல்ல அதன்புறம் திரும்பிவிட்டான். 

அவனின் முதுகை பார்த்துவிட்டு கயலை பார்த்த சுவாதியோ உதடு பிதுக்கி கயலுடன் சேர்ந்து டீவி முன் அமர்ந்தாள். ஏதோ கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குடிக்கக் கொடுத்தவன் தானும் ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு அமர்ந்தான். 

கார்ட்டூனில் வருவதை பார்த்து இருவரும் ஏதோ சிரித்து பேசிக்கொள்ள, அவர்களையே பார்த்து இருந்தவன் மனம் தவிப்பில் தத்தளித்தது. 

வெள்ளைக் காகம் பறக்கிறது என்றால் எங்கே என்று கேட்கும் வயதில் இருக்கும் மகள் தன்னுடன் நிறைவாய், சமத்தாய், அடம் கூட பிடிக்காது அத்தனை பாந்தமாய் சாமர்த்தியமாய் இருக்கிறாள் என்ற பிம்பத்தை அவ்வப்போது இந்த இருவர் கூட்டணி உடைத்துவிடும். இன்றோ அந்த பிம்பம் இனம் காணமுடியா அளவிற்கு சில்லுசில்லாய் உடைந்தது. ஒரு மாதம் கழித்து பார்க்கும் சுவாதியிடம் மகள் ஒட்டிக்கொண்ட விதமும் என்றுமில்லாதளவு விரிந்து மலர்ந்து இருக்கும் அவளது கள்ளம்கபடமில்லாத முகமும் அவர்கள் இழப்பை, இல்லாமையை வெளிச்சமிட்டு காட்டியது. 

அதிலும் தொலைக்காட்சியில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் அசைவுகளை அப்படியே சுவாதியிடம் செய்துகாட்டி மகிழ்ந்து, அதற்கு சுவாதி பாராட்டியதில் லேசாக வெட்கம் கொண்ட மகளை காணுகையில் உள்ளுக்குள் ஏதோ செய்தது. அவள் வயதுக்கு அவள் அவளாய் இல்லாமல் தனக்காக சேட்டை, சுட்டித்தனங்களை ஒதுக்கி வைத்து முதிர்ச்சியாய் நடக்கிறாளோ என்ற எண்ணம் அவனை அசைத்துப் பார்த்தது.

அவளுக்குள்ளும் ஏக்கங்கள் இருக்குமோ… இதுவரை வெளிக்காட்டியதில்லையே… தன்னிடம் எதுவும் தேவைக்கின்றி கேட்டதில்லையே… தனக்காக மகள் தன் ஏக்கங்களை மறைத்து வாழ்கிறாளோ என்ற சிந்தனையே அவன் நெஞ்சை அறுத்தது. என்னதான் தகப்பன் எல்லாமுமாய் இருந்து பார்த்துக்கொண்டாலும் மகளின் வாழ்க்கையில் தன்னைத் தாண்டிய உறவும் அவளுக்கு அவசியம் என்பதை உணர்ந்தவன் எதுவும் செய்ய முடியாத தன் கையாலாகாதனத்தை எண்ணி நொந்து, வாடி, வெதும்பினான்.

“அப்பா அப்பா இன்னைக்கு சுவாதி ஆன்ட்டி ப்ரேக்பாஸ்ட் பண்ணட்டும். அவங்க பூரி சூப்பரா பண்ணுவாங்க.” என்று மகள் கைப்பிடித்து குதிக்க, நடப்புக்கு வந்தவன், “அப்பா பண்ணித்தரேன். ஆன்டிக்கு டையர்டா இருக்கும்.”

“ம்கூம்… நீங்க சுடுறது புஸ்ஸுன்னு இருக்காது. ஆன்டி பண்ணா புஸ்ஸுன்னு இருக்கும். எனக்கு அதுதான் வேணும்.” என்று முகம் சுருக்கி, சிணுங்கி தலைமுடி இங்குமங்கும் அசைந்தாட தலையை உலுக்கினாள் கயல்விழி.

“எனக்கொன்னும் கஷ்டமில்லை. நான் பண்றேன்.” என்று எழுந்த சுவாதியை மறுப்பாய் பார்த்தவன், “எல்லாம்தான் நான் செஞ்சு தரேனே. இன்னைக்கு என்னமோ புதுசா பிடிவாதம் புடிக்குறா.”

“அங்க இருக்கிறப்போ அடிக்கடி நான் செஞ்சு எடுத்துட்டு வந்து கொடுப்பேன். அதனால அப்போ புடிவாதம் தேவைப்படல. இங்க உங்க சாப்பாடே சாப்புடுறதால ஒரு சேஞ்சுக்கு கேக்குறா. நான் செய்றேன், நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்று சொல்லிச் சென்றவளை அதற்கு மேல் ஒன்றும் சொல்ல இயலாது மகளை அழுத்தமாய் பார்த்தான். 

தந்தையின் அழுத்தமான பார்வையில் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த மகள் மிக மெலிதாய் அவளுக்கே கேட்காத குரலில் மன்னிப்பு வேண்டிவிட்டு சுவாதியிடமே சென்றாள். பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த சுவாதி கயல் வரவும் அவளிடம் பேசிக்கொண்டே உணவு தயாரிப்பில் இறங்க, இடையிடையே அத்தனை ஆர்வமாய் கயல் மாவை உருட்டிக் கொடுத்து தான் செய்வதாய் கூறி இப்படியும் அப்படியுமாய் பூரி தேய்த்துக் கொண்டிருந்தாள். 

இது அனைத்தையும் கூடத்தில் அமர்ந்தபடியே பார்த்துக்கொண்டிருந்த சக்திவேலனிடம் பெருமூச்சு. எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காது இருக்க நினைக்கிறானோ அதற்கு நேர்மாறாய் மகள் சுவாதி விஷயத்தில் இருப்பது எச்சரிக்கை உணர்வை தூண்டியது. அதுவும் இப்படி ஊர் மாறி வந்த பின்னும் இவர்களின் பிணைப்பு தொடர்வது ஒருபுறம் நிம்மதியாகவும் மறுபுறம் பீதியாகவும் அலைப்புறுவதை தவிர்க்கமுடியவில்லை அவனால்.

“பூரி ரெடி.” என்று தன் முன் குதித்த மகளை வாஞ்சையாய் வாரி அணைத்துக்கொண்டவன் எழவும் சுவாதி அனைத்தையும் அங்கிருக்கும் சிறு மேசையில் வைக்கவும் சரியாய் இருந்தது. 

அமைதியாய் உண்ண அமர்ந்தவன் மகளும் சுவாதியும் பேசிக்கொண்டே உண்பதை கவனித்துவிட்டு, “உனக்கெதுக்கு தேவையில்லாத அலைச்சல். இனி கயலை பாக்கணும்னா ஒரு வீடியோ கால் போடு சுவாதி.” என்க, 

“அதெல்லாம் நேர்ல பாக்குற மாதிரி வராதே.” என்றாள் சுவாதி இயல்பாய்.

இதற்கு மேல் இந்த விஷயத்தை பேசி சங்கடமான சூழலை உருவாக்க விரும்பாது அமைதியாகிவிட்டான். மதியத்திற்கு இவனே சமைக்க, சோர்வாக இருந்தவர்கள் தூங்கி வழிவதைக் கண்டு அவர்களை உறங்கச் சொல்ல கயலும் சுவாதியும் அதற்காகவே காத்திருந்தது போல் அறைக்குச் சென்று மெத்தையில் விழுந்தனர். இவனுக்குத்தான் அனைத்தும் நெருடலை கொடுத்தது. கடலூரில் இருந்தபோது இயல்பாய் தெரிந்த அவர்களின் அன்பு, அக்கறை, பிணைப்பு என்று அனைத்தும் இங்கு வந்தபின் அதிகரித்து இப்போது சற்று மிகையாய் செல்கிறதோ என்ற யோசனை.  

கடலூரில் இருந்த வீட்டில் இரண்டு அறைகள் உண்டு. கயலுடன் சுவாதி விளையாடும் நேரங்களில் படுக்கையறை இன்றி மற்றொரு அறையை பயன்படுத்திக்கொள்வார்கள். இங்கோ இருக்கும் ஒரே அறையில் அவர்கள் விளையாடி மெத்தையில் உறங்குவது அத்தனை உவப்பை கொடுக்கவில்லை சக்திவேலனுக்கு. தங்களின் கூட்டுக்குள் சுவாதி நுழைவது போன்றொரு பிம்பம். இதை வளரவிடக்கூடாது என்று தோன்றினாலும் மூவரின் மனம் நோகாமல் இதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்று அவனுக்கு புரியவில்லை. அபாய மணி அடித்து ஓய, யோசனையுடன் கூடத்தில் அமர்ந்துவிட்டவனுக்கு மாலை அவர்களை அழைத்துக்கொண்டு கடற்கரை செல்ல மனதே இல்லை.

கயல் பிடிவாதம் பிடிக்கவும் இந்த ஒருமுறை மட்டும் என்று கண்டித்தே கிளம்பினான். நடக்கும் தூரமே என்றாலும் ஒன்றாக செல்ல விருப்பமின்றி ஆட்டோ பிடித்து மகளையும் சுவாதியையும் அதில் அனுப்பி வைத்து பின்னே அவர்களை வண்டியில் தொடர்ந்தான்.

முன்மாலைப் பொழுதான அச்சமயம் சூரியக்கதிர்கள் சாய நேரம் பார்த்துக் கொண்டிருக்கையில் கண்களை கூசச் செய்யும் வெளிச்சத்தில் முகம் சுருங்கியது இருவருக்கும்.

“வெயில் குறையவும் வந்திருக்கலாம்.” என்ற சுவாதியை பார்க்காது எதிரே ஆர்ப்பரிக்கும் நீரைப் பார்த்தவண்ணம், “நேரத்தோட நீ ஊருக்கு கிளம்பணுங்குறது மறந்து போச்சா?” 

“போகனும்தான்.” என்றவளின் குரலே சோர்வை காட்டியது.

அதனை கவனித்தாலும் கண்டுகொள்ளாதவன் கயலை தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டு மெல்ல கரை தொடும் நீரில் கால் வைக்க, ஆழியின் ஆர்ப்பரிப்புக்கு இணையாய் கயலின் ஆர்பரிப்பும் ஆர்ப்பாட்டமும்.

கிளுக்கிச் சிரித்து, குதித்து, அலை கரை தொடும் போதெல்லாம் அதற்கு போக்குக்காட்டுவது போல் பின்னே ஓடி, அலை கடல் சேரும் போது அதை துரத்தி எட்டிப் பிடிக்க என கயலின் களிப்புக்கு பஞ்சமில்லை. இவர்களைப் போல சற்று தள்ளி நின்று சுவாதியும் நீரில் விளையாடினாள்.

“அப்பா இன்னும் உள்ள போனும்.” என்று கயல் சக்திவேலன் கைப்பிடித்து குதிக்க,

“அது சேஃப் இல்லை கயல்/பாப்பா.” என்றிருந்தனர் சுவாதியும் சக்திவேலனும் ஒரே நேரத்தில்.

மெலிதாய் அதிர்ந்த சுவாதி இயல்பாய் சக்திவேலன் முகம் பார்த்து சிரிக்க, அவன் அவள் பக்கம் கூட திரும்பவில்லை. குனிந்து கயல் உடையில் இருக்கும் மணலை தட்டிவிட்டு தன் கால்சட்டையையும் உதறிவிட்டு, “போலாம்.” என்றான்.

“அதுக்குள்ள போணுமா?” என்றனர் மற்ற இருவரும்.

“ஆன்ட்டி ஊருக்கு போகணும் கயல்.” மகளுக்கு மட்டும் பதில் கூறினான் சக்திவேலன்.

“இன்னும் ஒரு அரை மணி நேரம் இருந்துட்டு போறேன் அப்படி ஒன்னும் நேரமாகிடாது.” என்ற சுவாதியை நூல் பிடித்துக்கொண்டு கயல் குதித்தாள்.

“இந்த வெயில்ல எங்கேயும் உக்கார கூட முடியாது. பீச் வரணும்னு ஆசைப்பட்டீங்க கூட்டிட்டு வந்தாச்சு இன்னும் என்ன?” கண்டிப்புடன் வந்தது அவன் வார்த்தைகள். 

எப்போதும் ஒருவித இறுக்கத்தில் தேவைக்கின்றி பேசிடாதவன் மேல் சுவாதிக்கு பெரிதாக சந்தேகம் ஒன்றும் எழவில்லை. அவள் இயல்பாக இருக்க, இவன்தான் நொடிக்கு நொடி அவளை தங்களிடமிருந்து விலக்கி வைத்திட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தான். 

நின்றால் இவர்கள் பிடிவாதம் இன்னும் அதிகமாகும் என்று நினைத்தவன் பிடித்திருந்த மகளை இழுத்துக்கொண்டு நடக்க, சிணுங்கிக்கொண்டே சுவாதியை பார்த்தாள் கயல். அவளும் உதடு பிதுக்கி அவர்களை பின்தொடர்ந்தாள். 

கடற்கரை மணல் பகுதி விட்டு வெளியே சாலைக்கு வந்து ஆட்டோவிற்கு நிற்கும் வேளையில் வேகமாக இவர்களை நோக்கி நடந்து வந்தாள் நிலா. சக்திவேலன் அவளை கவனித்தாலும் கண்டுகொள்ளாதது போல் நிற்க, அவர்களை நெருங்கியவள்,

“ஹாய் சார் என்னை தெரியுதா?” என்று புன்னகை முகமாய் கேட்டாள். 

அருகில் வந்து பேசுபவளை தவிர்க்க முடியாமல், “ஸ்கூல்ல பாத்திருக்கேன். உங்க வீடு இங்கேயாமா?” என்று பொதுவாக கேட்டு வைத்தான் சக்திவேலன்.

“இங்கதான் சார்.” என்று பதில் கூறியவள் முகம் சட்டென சுருங்கி, “அதுக்கு முன்னாடி என்னை பார்த்த மாதிரி நியாபகம் இல்லையா சார்?” என்று கேட்க, இப்போது சக்திவேலன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்து நினைவு கூற முயன்றான்.