*6*

“சக்தி கவுன்சிலரை போய் பாத்துட்டு வந்துடுவோமா?” காலை உணவு முடித்து ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளையில் ராஜா கேள்வியெழுப்ப, நெற்றி சுருக்கியவள், “எதுக்கு இப்போ?”

“உன் பிறந்தநாளுக்கு ஒரு அட்டனென்ஸை போட்டுட்டு வரணும்.”

“ம்ச்… நான் என்ன அரசியல்லையா குதிக்க போறேன், அவர் வீட்டுக்கு போய் கும்புடு போட?” என்று அலட்சியம் செய்தவளை மறுப்பாய் பார்த்த ராஜா,

“பெரிய இடத்து பழக்கம் வேணும்னா இதெல்லாம் செய்யணும் சக்தி. கூழை கும்புடு போட வேண்டாம், சும்மா ஒரு மரியாதைக்கு தலையை காமிச்சிட்டு வர்றது என்னைக்காவது உதவும்.”

ஓரிரு நொடி யோசித்து சரியென்றவள் நிதானித்து, “நாம சரியான வழில போறோமா?” என்று கேள்வியாய் பார்க்க,

“வேற வழி இருக்கானு நீயே சொல்லேன்.” என்று எதிர்கேள்வி எழுப்பினான் ராஜா.

புருவம் சுருக்கி சிந்தனைக்கு சென்று வந்தவள், “இதுதான் ஈஸியான வழி.”

“அப்போ இது சரியான வழிதான்.” என்று சமாதானம் செய்து கவுன்சிலர் வீட்டிற்கு கூட்டிச் சென்றான். 

கட்சியில் வளர்ந்து வரும் அந்த கவுன்சிலர் இந்த மூன்று வருடங்களாக அந்த பதவியில் இருக்கிறார். தன் முழு உழைப்பையும் போட்டு அரசியல் பாடம் கற்று சில பல பெரிய தலைகளை சந்தித்து பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதற்காகவே இவருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டனர் சக்தி அண்ட் கோ.

தற்சமயம் அவள் பிறந்தநாளை காரணம் காட்டி முதல் முறையாய் அவர் வீட்டு படி ஏற, உதவியாளர் அவர்களை வாசலில் இருந்த நாற்காலியில் காத்திருக்க சொல்லிவிட்டு வேகமாய் உள்ளே சென்று இவர்களின் வருகையை சொல்ல, வெள்ளை வேட்டி சரசரக்க ஆர்ப்பாட்டமாய் வெளியே வந்தார் கவுன்சிலர். 

“வராதவங்க வந்திருக்கீங்க. சந்தோஷம் சக்தி. வாங்க.” என்று வாசலின் முன்னறையில் இருக்கும் அவரது அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“சக்திக்கு பிறந்தநாள். அதான் பாத்து வாழ்த்து வாங்கிட்டு போலாம்னு வந்தோம்.” என்றான் ராஜா இருக்கையில் அமர்ந்து.

“சக்திக்கு இன்னைக்கு பொறந்தநாளுன்னு இந்த ஏரியாவுக்கே தெரியுமே.” என்றவர் சக்திக்கு வாழ்த்து தெரிவித்தார்.  வாங்கி வந்திருந்த இனிப்பு, பழங்களை சக்தி கொடுக்க, ராஜா கவுன்சிலருக்கு ஒரு சால்வை போர்த்தினான்.

“இதெல்லாம் எதுக்கு தம்பி?” என்று அவர் பெயருக்கு கேட்க,

“இப்போ நாம ஒன்னா தொழில் பண்றோம். இதுகூட இல்லைனா எப்படி?” என்று ராஜாவே பேச, அமைதியாக இருந்தாள் சக்தி. 

எப்போதும் இப்படித்தான். வெளியிடங்களில் தேவைக்கு மட்டுமே பேசுவாள் சக்தி மற்ற அனைத்தையும் ராஜா பார்த்துக்கொள்வான். வெளியிலிருந்து பார்ப்பதற்கு சக்தியின் கண்ணசைவுக்கு ராஜா செயல்படுவது போல் இருக்கும். உண்மைக்கும் அவளை அதிகம் வருத்தாது தானே அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் ராஜா. இன்றும் தேவையின்றி சக்தி பேசுவதை அவன் அனுமதிக்கவில்லை. மற்றவர் பார்வை கூட அவள் மீது வேறெந்த நோக்கத்திலும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக எதிர் இருப்பவரை தன் பேச்சினில் இழுத்துக்கொள்வான். அப்படி கவுன்சிலரை பேச்சில் இழுத்துக்கொண்டு பொதுவாக பேச, அவர்கள் குடிக்க குளிர்பானம் வந்தது. இருவரும் எடுத்துக்கொண்டனர்.

“அப்புறம் குடோன் எல்லாம் வசதியா இருக்கா?” என்று கேட்டார் கவுன்சிலர்.

“வசதிக்கு எந்த குறைவும் இல்லை. ஆனா கெடுபிடி இருக்கே. நைட் சரக்கை வெளில கொண்டு வர நேரம் ரோந்து வராங்க.” என்று வருத்தம் போல் சொன்னான் ராஜா.

“தினம் ஒரே நேரத்துல தான ரோந்து வராங்க. அவங்க போனதுக்கு அப்புறம் சரக்கை எடுத்துக்கோங்க.”

“இருந்தாலும் எச்சரிக்கை தேவைதான.” என்ற ராஜாவின் பேச்சுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவர், “நான் என்ன பண்ண முடியும்னு பாக்குறேன். அப்புறம்…” என்று அவர் இழுக்க, கேள்வியாய் பார்த்தனர் சக்தியும் ராஜாவும்.

“தயங்காம சொல்லுங்க.”

“நம்ம இடத்துல சரக்கு இருக்குறது அரசல்புரசலா மேலிடத்துக்கு தெரிஞ்சிடுச்சு. கொஞ்சம் கமிஷன் தட்டிவிடுற மாதிரி இருக்கும்.”

“என்ன நீங்களே இப்படி சொல்றீங்க? உங்களை நம்பித்தானே உங்க இடத்துல வச்சோம்.” என்று ராஜா அதிர்ந்தது போல் காட்டிக்கொண்டான். 

“இப்போ அந்த நம்பிக்கைக்கு என்ன பங்கம் வந்துடுச்சுங்குறேன். பத்து சி இறக்குனது அங்க இங்கனுன்னு தெரியாமையா இருக்கும். கொடுக்க வேண்டிய இடத்துல கொடுத்துதான நீங்களும் இறக்குறீங்க. அதுமாதிரி அதை வெளில விடுறதுக்கும் கொஞ்சம் சில்லறையை இறைக்கணும்.” என்ற கவுன்சிலர் பேச்சில் யோசனைக்கு சென்று வந்தவனாய், 

“சரி நீங்களே பாத்து சரிகட்டுங்க. கை கடிக்காம பாத்துக்கோங்க.” என்றான் ராஜா.

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். என் மருமவன் விஷயம் என்னாச்சு? யார் என்னன்னு தெரிஞ்சுதா?” என்று கவுன்சிலர் கேட்க, பெருமூச்சு விட்ட ராஜா,

“அந்த நார்த் பார்ட்டி சம்மந்தப்பட்டிருக்கான். நம்ம தம்பி கொஞ்சம் அப்படி இப்படினு இருப்பாரு போலையே?” என்று ராஜா இழுத்து நிறுத்தி கவுன்சிலர் முகம் பார்க்க,

“பெரிய இடத்துல இதெல்லாம் சகஜமில்லையா?” என்று நெளிந்தார் கவுன்சிலர்.

“அதுதான் ரொம்ப பெரிய இடத்துல கை வச்சுட்டாப்புல. அப்படியே தூக்கிட்டாங்க.”

“உங்களை முடிச்சிட்டு வர சொன்னா நீங்க இப்படி அலட்சியமா சொல்றீங்க.” கவுன்சிலர் குரல் கொஞ்சம் எகிறியது. 

“அவங்க பக்கம் நாம ஒரு அடி எடுத்து வச்சா நாம அவங்களை முடிக்கிறதுக்கு முன்னாடி அவங்க நம்மள முடிச்சிடுவாங்க பரவாயில்லையா?” என்று கேட்டு வேறு மாநிலத்தில் இருக்கும் ஒரு பெரும்புள்ளியை அவன் கைகாண்பிக்க, தலையில் கை வைத்துவிட்டார் கவுன்சிலர். அவன் கைகாட்டியவர் உயரம் அருகில் செல்லக்கூட தன்னால் முடியாது என்று புரிந்தது. அது தெரிந்ததுனாலேயே அவனாகவே ஒரு கதை புனைந்து அடித்துவிட்டான் ராஜா.

“ஒரு நாள் நாமளும் அவனுங்க இருக்குற உயரம் போவோம். அப்போ வச்சிக்கிறேன் கச்சேரியை.” என்று கவுன்சிலர் அடங்கிப் போக, இதழுக்குள் சிரித்துக்கொண்டனர் சக்தியும் ராஜாவும்.

“அப்போ நாங்க கிளம்புறோம்.” என்று கை கூப்பி இருவரும் எழ, அவரும் வழியனுப்ப எழுந்தவர், “தெரு முழுக்க ஜோரா விருந்து நடக்குது போலிருக்கே. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா வந்து ஆரம்பிச்சி வச்சிருப்பேனே.” என்று இடை சொருகினார் கவுன்சிலர்.

“எல்லாம் பசங்க பண்றது. எங்களுக்கே அழைப்பு மட்டுந்தான்.” என்று நயமாக சிரித்து விடைபெற்றனர். 

வீட்டிற்கு வந்ததும், “இவரை நம்பலாமா? மேலிடம் மேலிடம்ன்னு சொல்லி இவர் ஆட்டைய போட்டுற மாட்டாரே?” என்று சந்தேகமாக கேட்டாள் சக்தி.

“அரசியல்வாதியை முழுசா நம்புறது கடைஞ்செடுத்த முட்டாள்தனம் சக்தி. எப்படியும் மேலிடத்துக்கு விஷயம் போயிருக்கும். நமக்கு முன்னாடி இவர்தான் சிக்குவாரு. இவர் சிக்குனா தப்பிக்க மேல யார் கால்லையும் விழுவாரு. அது யாருனு தெரிஞ்சிகிட்டு நாமளும் பழக்கம் ஏற்படுத்திக்கணும்.” என்றான் ராஜா யோசனையாய்.

“கவனமா இருக்கணும். அவரை மீறி நாம மாட்டுனாலும் பலியாடா யாரையாவது வச்சுக்கணும்.” என்ற சக்தியை ஆமோதித்தவன், “அது அப்போ பாத்துக்கலாம் சக்தி. நம்ம ஊருல அயோக்கியனுங்களுக்கா பஞ்சம். எவனாவது சிக்குவான் உள்ள புடிச்சி போட்டுடலாம்.” 

“எவ்ளோ சரக்கு வெளில போயிருக்கு?” என்று சக்தி அடுத்த கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அக்கா என்று அழைப்பு கேட்கவும் சட்டென பேச்சை நிறுத்தினர் இருவரும்.

அழைப்பு வந்த திசை நோக்கி சக்தி பார்வையை செலுத்த, கையில் ஒரு டம்ளருடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள் நிலா. 

“என்ன நிலா?” 

“ஜூஸ் எடுத்துட்டு வந்திருக்கேன். குடிங்க அக்கா.” எடுத்து வந்திருந்ததை நீட்டினாள் நிலா.

“இதெல்லாம் நான் குடிக்க மாட்டேன் நிலா.” என்று சக்தி மறுக்க,

“உங்க பொறந்தநாள்னு இங்க இவ்ளோ பெரிய விருந்து நடக்குது ஆனா நீங்க ஒரு வாய் இங்க சாப்புடலை. இதையாவது குடிங்க.” என்று அழுத்தமாய் சொன்னாள் நிலா.

“கோவில்லையே சாப்பிட்டேன் நிலா. அதான் இங்க சாப்புடல.” 

“அவங்க பேசுனதை கேட்டேன். இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான் நீங்க விதவிதமா என்ன குடுத்தாலும் சாப்பிடுவீங்களாம். மத்த நாள் எல்லாம் பழைய சோறுதான் சாப்புடுறீங்கன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. அதுனால இந்த ஜூஸ் குடிங்க அக்கா. நானே போட்டு எடுத்துட்டு வந்தேன்.” என்று பிடிவாதமாய் நின்றாள்.

அவளையே யோசனையாய் பார்த்த ராஜா, “யார் பேசுவதை கேட்ட?” என்று கூர்மையாய் பார்க்க,

“அதான் அவங்க ரவி… சமைக்குற இடத்துல பேசிட்டு இருந்தாங்க.” என்று இழுத்தாள் நிலா.

“வச்சிட்டு போ.” என்றான் ராஜா.

சரியென்றவள் வைத்துவிட்டு கிளம்ப, நினைவு வந்தவளாய் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள். சக்தி கேள்வி தாங்கி பார்க்க,

“இன்னைக்கு சாந்தி அக்காவோட பழைய டிரெஸ் போட்டுகிட்டேன். என்னோடது ஒன்னுதான் இருக்கு.” என்று தயக்கமாய் பார்க்க, “உன் வீட்டுக்கு போக இன்னைக்கு ஒருத்தனும் இங்கிருந்து நகரமாட்டானுங்க. நீ சாந்தி அக்காவை கூட்டிட்டு போய் புது டிரெஸ் எடுத்துக்கோ.” என்ற சக்தி எழுந்து சென்று ஒரு டப்பியிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துவந்து நீட்டினாள்.

அதை வாங்கிக்கொள்ள தயக்கம் இருந்தாலும் தனக்கு வேறு வழியில்லை என்பதால் அந்த பணத்தை பெற்றுக்கொண்ட நிலா, “சம்பளம் வந்ததும் திருப்பி கொடுத்துடுறேன் அக்கா.” என்று சொல்லி செல்ல, வாஞ்சையாக பார்த்தாள் சக்தி. 

“நான் உங்களை பாக்குற மாதிரி அவ என்னை பாக்குறா…” என்று ராஜாவிடம் சொன்ன சக்தியின் குரலில் அத்தனை பெருமிதம். இதுவரை பலரை காப்பாற்றி அவர்கள் குடும்பத்துடன் சேர்த்திருந்தாலும் நிலாவை காணும் போது தன்னை போலவே அடுத்து என்ன என்ற தேடலுடன் அவள் இருப்பது புரிந்தது. அது ஒருவித பிணைப்பை கொடுக்க, மனதால் நெருக்கமாக உணர்ந்தாள்.

சக்தியின் பேச்சில் மெலிதாக சிரித்த ராஜா, “பித்து பிடிச்ச மாதிரி சுத்திட்டு இருந்த எனக்கும் நீதான் அர்த்தம் கொடுத்திருக்க சக்தி.”

“அது என் டயலாக்.” என்று முறைத்த சக்தி, “அன்னைக்கு நீங்க மட்டும் வரலைனா கண்டிப்பா செத்திருப்பேன்.” என்று தவித்து பதறியவளின் நினைவுகள் தன் மானத்தை காப்பாற்ற ஐயத்துடன் ஓடித்திரிந்த நிகழ்வுகளை புரட்டிப்பார்த்தது.

“ச்சு… நல்ல நாள் அதுவுமா எதுக்கு பழசை நினைக்குற. நீ வெளில வந்து செத்த நேரம் உக்காரு. ரவி பயலை அனுப்பிவிடுறேன். அப்புறம் எல்லாத்தையும் மறந்துடுவ…”

“மறக்கக்கூடியது எதுவும் என் வாழ்க்கையில நடக்கல.”

“மறக்கமுடியாதுனு எனக்கும் தெரியும். ஆனா இங்க உனக்காவே இருக்குறவங்களை நினைச்சிக்கோ.” எனும்போதே ரவி வந்துவிட்டான்.

“சொல்ல சொல்ல கேக்காம அந்த பொண்ணு உனக்கு ஜூஸ் எல்லாம் எடுத்துட்டு வருது. ரொம்பத்தான் இடம் கொடுக்குற நீ…” வந்ததும் வராததுமாக குதித்தான் ரவி.

“பொறாமைப்படுறியாடா நீ?” என்று ராஜா கேலியாய் சிரிக்க, தோள் குலுக்கி முறுக்கியவன், “ஏன் ஏன்… எனக்கென பொறாமை?” என்று சிலுப்ப, சத்தமாக சிரித்தாள் சக்தி.

“உனக்கு சிரிப்பா இருக்குல்ல என் பொழப்பு?” என்று சக்தியை முறைத்தான்.

“என்னடா முறைப்பு?” ராஜா அவன் தோளில் இடித்தான்.

“க்காவ்… நீ வா வந்து சமையல் எல்லாம் நல்லா வந்திருக்கானு டேஸ்ட் பாரு.” என்று நிற்க, ஜூஸ் எடுத்து பொறுமையாய் குடித்தாள் சக்தி.

“சக்தி வரும். நீ கிளம்பு.” என்று ராஜா சொல்ல, வரும் வரை இங்கேயே இருப்பேன் என்று அமர்ந்துவிட்டான் ரவி. 

இவனோட என்று சலிப்பாக பார்த்தான் ராஜா. 

“அடுத்த வருஷம் கொண்டாட்டத்தை எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிங்கடா. இந்த வருஷமே அந்த கவுன்சிலர் கூப்பிட்டிருந்தா வந்து துவங்கி வச்சிருப்பேனு பேச ஆரம்பிச்சிட்டாரு.” என்றாள் சக்தி.

உடனே மறுத்தான் ரவி, “அதெல்லாம் முடியாது. பெருசா பண்ணாதான் நிறைய பேருக்கு தெரியும். நிறைய வாழ்த்தும் வரும். நம்ம காசு போட்டு பண்றதுக்கு எதுக்கு அந்தாள் வந்து துவக்கி வைக்கணும். அடுத்த முறை பேசட்டும் நான் பாத்துக்கிறேன்.” 

“ரவி சொல்றதும் சரிதான். அவரை சமாளிச்சிக்கலாம். யாருக்கும் தொந்தரவு இல்லாம பண்றது மூலமா சக்திக்கு எல்லாரோட வாழ்த்தும் ஆசிர்வாதமும் கிடைக்கும். இன்னும் நிறைய நாள் ஆரோக்கியமா வாழனும் சக்தி.” என்ற ராஜாவின் பேச்சுக்கு மறு பேச்சில்லை சக்தியிடம்.

அன்றைய நாள் நன்றாகவே செல்ல, அடுத்தடுத்து வந்த நாட்களும் இயல்பாய் சென்றது. நிலா கொடுத்த விலாசத்திற்கு சென்று நேரே விசாரித்து அவளது உடைமைகளை எடுத்து வந்து தந்தான் ரவி. 

“இப்போவாச்சும் அந்த பொண்ணை சந்தேகப்படாத.” என்ற சக்தியிடம், “ரெண்டு அட்ரெஸ்ல அது சொன்ன மாதிரி சரியா இருந்தா எல்லாம் சரியாகிடுமா… அது கொடுத்த எல்லா அட்ரஸையும் விசாரிப்பேன்.” என்று முறுக்கினான் ரவி.

நீ என்னவோ பண்ணிக்கொள் என்று சக்தி நிலாவுக்கு ஜோதி பப்ளிக் ஸ்கூலில் வேலை வாங்கிக் கொடுத்திருந்தாள். நிலாவுக்கு அவ்விடம் பழகி தினம் தனியாக வேலைக்கு சென்று வருவது வரை முன்னேறி இருந்தாள். 

“அக்கா தினம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடுறேன். அதுக்கு அப்புறம் போர் அடிக்குது. உங்களுக்கு ஹெல்ப் ஏதாவது வேணும்னா சொல்லுங்க. நான் பண்றேன்.” என்று மாலை பள்ளி முடித்து வந்து சக்தி வீட்டு வாசலில் பொழுதை கழிக்கத் துவங்கியிருந்தாள் நிலா.

“என் க்காவுக்கு நீ என்ன உதவுறது? அவங்களுக்கு நாங்க இருக்கோம்.” என்று அவ்வப்போது ரவி முறுக்கியும் கொள்வான். 

“என்னை பத்தி என்னை கடத்துனவங்களை பத்தி கண்டுபுடிக்குறேனு சொன்னீங்க. என்னை கடத்துனது யாருனு தெரிஞ்சிடுச்சா?” என்று அவ்வப்போது பயத்தை ஒதுக்கி நிலாவும் அவனிடம் கேட்பதுண்டு. ஆனால் அதற்கு அவனிடம் பதில் இருப்பதில்லை.

“ஒருநாள் சிக்குவ அப்போ வச்சிக்குறேன்.” என்று சென்றுவிடுவான் அவன். 

ஆனால் சக்தி நிலாவிடம் எந்த வேலையும் வாங்கியது இல்லை. வீட்டில் இருந்தால் பொதுவாக பேசிக்கொண்டிருப்பாள். இல்லையென்றால் மீன் விற்கும் சந்தையில் சக்திக்கென்று ஒரு கடை இருக்கிறது அங்கு சென்றுவிடுவர் இருவரும். நாட்கள் ஒரே போல் சீராக செல்ல, அன்று பள்ளி நேரம் முடிந்து ஒரு ஆசிரியர் கூட்டம் இருந்தமையால் அங்கு சென்று அனைவருக்கும் டீ, வடை குடுத்து வெளியே வந்தவள் அங்கு ஓரமாய் தனியாய் அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியைக் கண்டு அவளிடம் சென்றாள் நிலா. 

“தனியா இருக்கீங்களே. இன்னும் வீட்டுக்கு போகலையாமா? யாருக்காவது வெய்ட் பண்றீங்களா?” 

“அப்பாக்கு மீட்டிங்.” என்று ஆசிரியர் கூட்டம் நடக்கும் அறையைக் காண்பித்தாள்.

ஓ என்றவள் சுற்றி முற்றி பார்க்க, பள்ளி முடிந்து மாணவர்கள் யாருமின்றி வளாகம் காலியாக, அமைதியாக இருந்தது. திரும்பி அச்சிறுமியை பார்க்க, அருகில் பேக்கை கழற்றி வைத்துவிட்டு கால்களை தொங்கவிட்டு ஆட்டியபடி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உங்க பேர் என்ன?”

“நீங்க இங்க ஒர்க் பண்றீங்களா?” என்று கண்கள் சுருக்கி கேட்டாள் அச்சிறுமி.

கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் தன்னை எதிர்கேள்வி கேட்பவளைக் கண்டு விவரம்தான் என்று நினைத்துக்கொண்ட நிலா, “நான் இங்க அசிஸ்டென்ட்.”

முயன்று அவளை நினைவு கூற முயன்று வெற்றி கண்டவளாய், “கயல்விழி.” என்று பெயர் சொல்லி இருந்தாள் கயல். 

கயல் பதில் சொல்லவும் புன்னகை உதிர்த்த நிலா, “அழகான பேர். என்னை அடையாளம் தெரியுதோ ஆராய்ச்சி பண்ணி பேர் சொல்றீங்களே?” என்று கேட்டுக்கொண்டே கயலுக்கு துணையாக அமர்ந்துகொண்டாள்.

“ஆமா உங்களை பாத்திருக்கேன்.” என்று கயல் சமத்தாய் பதில் சொல்ல,

“அப்பா டீச்சரா?” என்று பேச்சை வளர்த்தாள் நிலா.

“சயின்ஸ் டீச்சர்.”

“அப்பா பேர்?”

“சக்திவேலன்.” என்றதும் நிலா அவனை பார்த்திருக்கிறமோ என்று யோசிக்க,

“நீங்க எனக்காக இங்க இருக்கீங்களா?” என்று கேட்டிருந்தாள் கயல்.

“தனியா இருக்கீங்கல்ல. அப்பா வர வரைக்கும் நான் உங்களுக்கு துணைக்கு இருக்கேன். நீங்க எந்த க்ளாஸ்?” பேச்சினூடே பொதுவான தகவல்களை கேட்டுக்கொண்டிருக்கும் போதே அறையிலிருந்து ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வெளியே வர, எழுந்து நின்றாள் நிலா.

சில நொடிகளிலேயே வேகமாக கயலை நோக்கி வந்தான் சக்திவேலன். வந்தவன் கயல் அருகில் உதவியாளாக பள்ளியில் வேலை பார்க்கும் நிலா நிற்கவும் யோசனையாக பார்த்தான்.

அவனைக் கண்டு முதலில் அதிர்ந்த நிலா நொடி நேரத்தில் தன்னை இயல்பாக்கிக்கொண்டு, “பாப்பா தனியா இருந்தாங்க, அதான் துணைக்கு இருந்தேன் சார்.” என்று நிலாவே அவன் கேட்கும் முன் சொல்ல, அமைதியாய் தலையாட்டிக் கொண்டவன் கயல் கைபிடித்து அழைத்துச் சென்றான்.

செல்லும் அவனையே பார்த்து நின்ற நிலா ‘இவர் இங்கதான் இருக்காரா?” என்று யோசித்துக்கொண்டே நகர்ந்தாள்.