எழுந்ததிலிருந்து அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டபடி பரபரப்பாய் அங்குமிங்குமாய் சுழன்று கொண்டிருந்தவளை நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் சக்திவேலன்.
“எதுக்கு இப்போ இப்படி பாத்துட்டு இருக்கீங்க? போய் வேற வேலை இருந்தா பாருங்க.” அவன் பார்வை வீச்சை பொறுக்க 7முடியாமல் சிணுங்கினாள் அழகி.
“நீங்க இப்படி என்னை விடாம பாத்துட்டு இருந்தா நான் எப்படி உங்களை சர்ப்ரைஸ் பண்றது?” என்று அழுவது போல் அவள் உதட்டை பிதுக்கி, நெற்றியை ஏற்றி இறக்க, பாய்ந்து வந்து பிதுங்கியிருந்த உதட்டில் முத்தம் வைத்தான் சக்திவேலன்.
“ம்கூம்… போங்க நீங்க…” அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் சிணுங்கிக்கொண்டே காலை தரையில் உதைத்தாள்.
“என்னடி வேணும் உனக்கு?”
“நான் சர்ப்ரைஸ் கொடுக்கணும்.”
“போன பிறந்தநாள் அப்போ எண்ணி எண்ணி பேசிட்டு இருந்த நீ, இந்த வருஷம் இதோ இப்படி என் கூடவே இருக்கியே அதுவே பெரிய சர்ப்ரைஸ்டி என் அழகி.” என்றவன் கரம் மென்மையாய் அவளை அணைத்தது.
“இதெல்லாம் ஒரு சர்ப்ரைஸா?” என்று நொடித்தவள் சிணுங்கலுடன் அவனைப் பார்த்தாள்.
திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதோடு அவர்களது மகவை வயிற்றில் சுமக்கும் செய்தி அறிந்து ஒரு வாரமே ஆனதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தனர் இருவரும். அவளின் உடல்நிலை கருதி பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம் என்று அவன் சொல்லியிருக்க, அதெப்படி என்று முரண்டினாள் அழகி.
“அதெல்லாம் கவனமா பத்திரமா இருப்பேன்.” என்றாள் படபடவென்று அவனை ஒத்துக்கொள்ள வைக்கவேண்டி.
“நீ மெனக்கெட்டு செய்யணும்னு எதுவும் இல்லைடி. என் பக்கத்துல இரு அதுவே எனக்கு போதும்.” என்றவனை மறுத்துப் பேச அவள் இதழ் பிரித்து நாவை சுழற்ற, மறுப்பாய் தலையசைத்தவன் பிரிந்த இதழில் விரல் வைத்தான் பேசாதே என்பது போல்.
“போன வாரமே பிறந்தநாள் பரிசு கொடுத்துட்ட சோ, இன்னைக்கு முழுக்க என் பக்கத்துலேயே என் கூடவே இருக்கணும். இந்த நாள் மட்டுமில்லை இனி வரப்போற எல்லா நாளுமே நீ என் கூட இரு அது போதும் அழகி.”
“உங்க கூட இல்லாம போற நாள்தான் என்னோட கடைசி நாளா இருக்கும்.” என்றவளை வன்மையாய் முற்றுகையிட்டு தண்டித்தது நினைவு வந்து நெஞ்சு அடைப்பது போலிருக்க, வேகமாக தண்ணீர் எடுத்து குடித்தான் சக்திவேலன்.
என்றுமில்லாமல் தன் சட்டையில் சிந்திக்கொண்டு தண்ணீர் குடிக்கும் தந்தையை புரியாது பார்த்து நின்றாள் கயல்விழி. மகளின் பார்வை தன்னில் ஆராய்வது போல் படிவதை கண்டுகொண்டவன் ஆழ மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.
கண்ணாடியை மேலேற்றி, “கிளம்பலாமா பாப்பா?” என்று கேட்டுக்கொண்டே இருவரது உணவுப் பையை எடுத்துக்கொண்டு தன்னுடைய பையையும் தோளில் மாட்ட,
“அப்பா உங்க சட்டை ஈரமாகிடுச்சு.” என்று நிறுத்தினாள் கயல்.
கயல் சொல்லவும் சட்டென தன்னை குனிந்து பார்த்தவன் நெற்றியை தேய்த்துக்கொண்டே பைகளை கீழே வைத்துவிட்டு சட்டை பொத்தான்களை கழட்டிக்கொண்டே அறைக்குச் செல்ல, “நானு நானு…” என்று பின்னோடே ஓடினாள் கயல்.
அவன் கப்போர்ட்டை திறக்கவும் அவனுக்கும் கப்போர்டுக்கும் இடையே புகுந்தவள் நுனி காலில் எம்பி நின்று எட்டிப்பார்த்து அடுக்கி இருந்த சட்டைகளில் ஒரு மெரூன் நிற சட்டையை காண்பித்து, “இது நல்லாயிருக்கு. இதை போட்டுக்கோங்க அப்பா.”
மகள் சுட்டிக்காட்டிய சட்டையை கையிலெடுத்த சக்திவேலன் இதழ்கள் நினைவுகளில் மெல்ல விரிந்தது.
கயல் பிறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அவனது அடுத்த பிறந்தநாள் வர, அழகியின் கவனம் மொத்தமும் கயல் புறம் இருந்தது. அன்றைய நாள் என்னவென்றே அவள் மறந்திருக்க, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே எழுந்தான் சக்திவேலன்.
“அப்பா எழுந்தாச்சுடா பட்டு. குட் மார்னிங் சொல்லுங்க.” என்று அவள் மகளிடம் பேசவும் ஆர்வமாய் திரும்பினான் சக்திவேலன்.
“ப்ரஷ் பண்ணிட்டு வாங்க. நான் காபி எடுத்துட்டு வரேன்.” என்று அவன் சிகையை லேசாக கலைத்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் வெளியேற, ஏமாற்றமாய் முகம் கழுவி வந்தான்.
“நைட் நல்லா தூங்குனீங்களா ரெண்டு பேரும்? ரெண்டு மூணு முறை பாப்பா சிணுங்குன மாதிரி இருந்துச்சே?” என்று கேட்டுக்கொண்டே பால் மணம் வீசும் மகளை உச்சி முகர்ந்து கொஞ்சிவிட்டே காபி வாங்கி பருகினான்.
“நாங்க பகல்ல கூட தூங்கிப்போம். உங்க தூக்கம் போச்சுன்னா அப்புறம் தூங்கிகிட்டே பாடம் எடுக்க வேண்டியதுதான். பாடம் கவனிக்குற நாங்க தூங்கி வழியறதுல ஒரு நியாயம் இருக்கு ஆனா பாடம் எடுக்குறவரே இங்க தூங்கி வழியுறாரே. அடடா மூணு புள்ளி ஆச்சர்யகுறின்னு ஸ்கூல் முழுக்க பேமேஸ் ஆகிடுவீங்க.” என்றவள் தலையில் பாய்ந்து சென்று ஒரு கொட்டு வைத்தான் சக்திவேலன்.
“டீச்சருனு நொடிக்கு ஒருமுறை நிரூபிக்குறீங்களே சார்.” என்று கேலி பேசி, உதடு சுழித்து, பழிப்பு காட்டி நகர, பின்னோடே சென்று அவளை அணைத்துப் பிடித்தவன் அவளிதழை கவ்வி முத்தம் வைத்து, “வாய் அதிகமாகிடுச்சு அழகிக்கு.”
“எல்லாம் இந்த அழகன் கொடுத்த ட்ரைனிங்.” என்றாள் அவளும் அசராது.
“எவ்வளவுன்னு சொல்லுங்க பெத்து கொடுத்துடுவோம்.” என்று இவள் கண்ணடிக்க, சத்தமாக சிரித்தவன் அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து, “சேட்டை கூடிப் போச்சு. பாத்துடி பொண்ணுக்கு ஈக்குவலா சேட்டையில இறங்கி என்னை திண்டாட வச்சிடாத…”
எழுந்த போதிருந்த ஏமாற்றம் மாறி கலகலப்பான மனநிலையுடன் அவன் குளித்துவிட்டு உடை எடுக்க, அதற்காகவே காத்திருந்தவள் அவன் எடுத்த சட்டையை பிடுங்கி வைத்துவிட்டு வேறொரு சட்டையை மகள் கையால் கொடுக்க வைத்தவள், “பிறந்தநாள் வாழ்த்துகள் விழி அப்பா. அம்மா, பொண்ணோட சின்ன கிப்ட்.” என்று சொல்ல, மறந்துவிட்டாள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நேரம் இப்படி பரிசை நீட்டினால் என்ன செய்வான். இன்பமாய் அதிர்ந்து அவளின் அந்த வாழ்த்துக்கே திக்குமுக்காடிப் போனான்.
மனைவி, மகள் இருவரையும் ஒரு சேர அணைத்து முத்தம் வைத்தவன் அந்த மெரூன் சட்டையை ஆசையுடன் போட்டுக்கொண்டான்.
பழைய எண்ணங்கள் பசுமையாய் நினைவடுக்கில் இருந்து இதம் தர, அந்த நினைவுகளோடே அதே மெரூன் சட்டையை அணிந்து கொண்டு அன்று போலவே இன்றும் மகளை தூக்கி முத்தம் வைக்க, தந்தையின் முகத்தை தன் பிஞ்சு கரங்களில் தாங்கிய கயல் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, “ஹாப்பி பர்த்டே அப்பா.” என்று கொஞ்சல் மொழி பேசினாள். தந்தையானவன் பதில் முத்தம் கொடுத்து அவளை கீழே இறக்கிவிட்டான்.
“இந்த சட்டை சூப்பரா இருக்கு அப்பா.” மனைவி போன்றே முகத்தை வைத்துக்கொண்டு பாராட்டும் மகளின் பாவனையில் என்ன முயன்றும் புத்தி எச்சரித்தும் அதற்கு அடுத்த வருட பிறந்தநாள் நினைவு வந்து இதமான நினைவுகளை நீக்கி கசப்பு படர்ந்தது. ஏனெனில் அவனது அடுத்த பிறந்தநாளுக்கு அவள் உடன் இல்லை.
தேவையற்ற நினைவுகள் அவனை ஆக்கிரமிக்க முயல, அதை துரத்த முயல்வது போல் தலையை உலுக்கி வெளியே வந்தான். கயலும் பின்தொடர்ந்து வந்து பையை மாட்டிக்கொண்டு தயாராய் இருக்க, வீட்டை பூட்டிவிட்டு விறுவிறுவென கீழே இறங்கினான்.
கயல் வண்டி அருகினில் நின்றுகொள்ள, ஒரு சிறிய பாக்கெட்டுடன் சதாசிவம் வந்தார்.
“என்ன சார்?”
“குப்பத்து தெருவுல ஒரு ரவுடி பொண்ணு இருக்கு. அதுக்கு பொறந்தநாளுன்னு எல்லார் வீட்டுக்கும் ஸ்வீட் பாக்கெட் போட்டிருக்காங்க. எனக்கு சுகர் இருக்கு, என் பையனுக்கும் இந்த ஸ்வீட் புடிக்காது. அதான் பாப்பாக்கு கொடுக்கலாம்னு வச்சிருந்தேன்.” என்று கயலிடம் அதை நீட்டப்போக,
“நாங்களும் சாப்பிட மாட்டோம் சார்.” என்று கை நீட்டி தடுத்தான் சக்திவேலன்.
“பாப்பாவும் சாப்பிடாதா? புடிக்காதா?” என்று அவர் கயலைப் பார்க்க, அவள் அனுமதி வேண்டி அப்பாவை பார்த்தாள்.
“சாப்பிடுவா ஆனா வேண்டாம்.” என்று வண்டியை கிளப்பப்போனான்.
“சரி நான் வேற யாருக்கும் கொடுத்துக்குறேன். அது ரவுடினாலும் ராங்கித்தனம் எல்லாம் பண்ணாது. நல்ல மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன்.”
“ரவுடில என்ன நல்ல மாதிரி? ரவுடினாலே கெட்ட மாதிரிதான் இதுல பொண்ணு வேற…” என்று அதிருப்தி காட்டி அவன் வண்டியை வெளியே எடுக்க,
“அதுவும் சரிதான். என்னதான் நல்ல மாதிரினாலும் உள்ளுக்குள்ள என்ன இருக்குனு நமக்கு என்ன தெரியும்? அது பேரும் சக்தி தான்.” என்றவரின் குரல் மெல்ல தேய்ந்து ஒலித்தது அவன் செவியில்.
வண்டியை கிளப்பி அவன் நகர்த்தியிருக்க, “அப்பா ரவுடினா யாரு?” என்று கேட்டிருந்தாள் கயல்.
“அவங்க பேட் பீப்பிள்ஸ். அன்னைக்கு காய்கறி வாங்கும் போது கத்தி சண்டை போட்டாங்களே அவங்ககிட்ட எல்லாம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணனும்.” என்று சொல்ல, அமைதியாய் கேட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் கயல்.
சற்று நேரத்தில் கூகிள் மேப்பின் உதவியுடன் அருகிலிருந்த கோவிலை அடைந்திருக்க, வண்டியை நிறுத்திவிட்டு சுவாமிக்கு கொஞ்சம் பூ மட்டும் வாங்கிக்கொண்டு கயல் கைபிடித்து உள்ளே சென்றான். பெரிதாக கூட்டமில்லை என்றாலும் பள்ளிக்கு நேரமாகிவிடும் என்பதால் வேகமாக தரிசனம் முடித்து பிரகாரம் சுற்றப்போக,
“இன்னைக்கு சக்தியக்கா பொறந்தநாளுனு பிரகாரத்துல சக்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், கேசரி, சுண்டல், புளியோதரை எல்லாம் தராங்க. இங்கேயே சாப்பாட்ட முடிச்சிடலாம் போலிருக்கு.” என்று பேசிக்கொண்டே இருவர் செல்ல, பிரகாரம் சுற்றுவதற்காக வைத்த அடியை அப்படியே திருப்பி வைத்து கோவிலுக்கு வெளியே வந்துவிட்டான்.
சக்தியின் பிறந்தநாள் என்று அவர்கள் பேசவுமே கிளம்பும் போது சதாசிவம் சொன்ன விஷயம்தான் நினைவு வந்திருக்க, அவர்கள் விநியோகிக்கும் திசை பக்கம் கூட செல்ல விரும்பவில்லை அவன். கயலுக்கு விவரம் தெரியாததால் அவனோடு அமைதியாய் வந்தாள்.
செல்லும் வழியில், “உனக்கு இந்த வீடு, ஸ்கூல் செட் ஆகிடுச்சா பாப்பா?” என்று சக்திவேலன் கேட்க, அழகாக விழி விரித்த கயல், “ஹான். அங்க மாதிரி இங்கேயும் நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்க அப்பா. விளையாடுறதுக்கு சுவாதி ஆன்டி தான் இல்லை.” ஆர்வமாய் துவங்கியவள் சோகமாய் முடித்தாள்.
“சரி, அப்பா போன் நம்பர் சொல்லு.” என்று கேட்டு அவளுக்கு நினைவிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டவன், “வீட்டு அட்ரஸ்?” என்று அடுத்து கேட்க, கயல் பழைய விலாசத்தை கூறினாள்.
“யார் கேட்டாலும் இப்போ இருக்குற வீட்டு அட்ரஸ் சொல்லணும் பாப்பா. எங்க சொல்லு?” என்று அவன் திருத்திக் கேட்கவும், தற்சமயம் இருக்கும் விலாசத்தை பிசகின்றி சொன்னாள்.
மறுபுறம் சக்தியின் பிறந்தநாளுக்கு பிரம்மாண்டமாய் தயாராகிக்கொண்டிருந்தது அந்த தெரு. ரவியின் மிரட்டலில் கண்ணீர் வழிய வழிய வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தவளை சந்தேக கண்ணோட்டத்துடனே கவனித்துக் கொண்டிருந்தான் ரவி. தோன்றும் நேரம் அருகில் வந்து அதட்டுபவனைக் கண்டு மிரண்டு எதுவும் சொல்ல பயந்து துப்பட்டா கொண்டு கண்களை துடித்துக்கொண்டே வெங்காயம் நறுக்கினாள் நிலா.
ஒரு கட்டத்தில் மூக்கிலிருந்தும் நீர் வழிந்து அதை துடைத்துக் கொண்டிருக்க, முகம் சுழித்தபடி அவளை நெருங்கிய ரவி, “அய்யய்ய ன்னாது இது? சுத்தம் எவ்வளவு விலைனு கேப்ப போலிருக்கு. முன்பின்ன காய் நறுக்கி சமைச்சிருக்கியா நீயி?” என்று கேட்க, கோபம் வந்துவிட்டது நிலாவுக்கு.
கத்தியை அப்படியே தூக்கி போட்டவள் எழுந்து விடுவிடுவென்று வெளியே நடக்க, எட்டி அவள் மணிக்கட்டை பிடித்து நிறுத்தியவன்,
“ந்ந்த… என்னா திமிரு இருந்தா இப்படி கிடாசிட்டு போவ நீயி. உன் ஊருல இருக்கவே வக்கில்லாம தான இங்க வந்திருக்க, இதுல ரோஷம் வருதோ?”
அவன் பிடி இரும்பின் கனத்தை ஒத்திருக்க, தன் கைகளை உருவ முயன்றவளாய், “விடுங்க என்னை.” என்று நின்ற இடத்திலிருந்தே துள்ளினாள்.
“ஒழுங்கா ன்னாதுக்கு சக்தியக்கா கிட்ட ஒட்டிக்க பாக்குறேனு சொல்லு வுட்டுடுறேன்.” என்று அவன் மீண்டும் மிரட்டலில் இறங்க, பதில் சற்று அதட்டலாய் வந்தது சக்தியிடமிருந்தே.
“என்ன பண்ணிட்டு இருக்க ரவி? விடு அவளை.” என்கவும் சட்டென அவள் கையை விட்டவன் முகம் திருப்பி நிற்க, நிலா ஓடிச்சென்று சக்தி பின் ஒளிந்துகொண்டாள்.
“நான் என்ன சொன்னா நீ என்ன பண்ணிட்டு இருக்க ரவி?” என்ற சக்தியின் கேள்விக்கு அவனிடமிருந்து பதில் இல்லை.
“என்னனு பாருங்க.” என்று ராஜாவிடம் கண்காண்பித்தாள்.
“என்னடா ரவி இதெல்லாம். சக்தி பேச்சுக்கு எதிர்பேச்சு பேச எப்போ கத்துகிட்ட நீ?” என்று ராஜா கேட்க, அவனிடம் முகத்தை காண்பித்த ரவி, “வெங்காயம் நறுக்க ஒரு கை குறைஞ்சிது. அதான் இழுத்தாந்தேன். என்ன இப்போ? சக்தி க்காகவுக்காக செய்யாதா?” என்று அவன் நிலாவைப் பார்த்தான்.
“எனக்கு இவ்ளோ நறுக்கி எல்லாம் பழக்கம் இல்லக்கா.” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே சொன்னாள் நிலா.
“பழக்கம் இல்லாத புள்ளைகிட்ட எதுக்கு வம்பு பண்ணிட்டு இருக்க. ஒரு கை தானே அதை நான் பண்றேன்.” என்று சக்தி உள்ளே செல்லவும், பதறி பின்னே ஓடினான் ரவி.
“க்காவ் இன்னைக்கு உன் புறந்தநாளு. ராணி மாதிரி நீ ஜம்முனு இருக்கணும். அதை வுட்டுட்டு ன்னா நீ… வெங்காயம் வெட்டி கண்ணுல தண்ணி வச்சிட்டு இருக்க போறீயா. அந்த புள்ளையை கூட்டிட்டு கிளம்பு நீ, நான் பாத்துக்குறேன்.” என்று உரிமையாக சொன்னான் ரவி.
ரவியை அழுத்தமாக பார்த்த சக்தி நிலா கைபிடித்து வெளியே செல்ல, ராஜாவும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அவர்களுடன் நடந்தான்.
“சக்தி மேல பாசம் ஜாஸ்தி அவனுக்கு.” என்று பொதுவாக நிலாவிடம் சொன்னான் ராஜா.
லேசாக தலையாட்டியவள், “அவங்களுக்கு என் மேல சந்தேகம். நான் தப்பு சொல்லல. விசாரிச்சு தெரிஞ்சிக்கட்டும். நான் முன்னாடி கொடுத்த அட்ரஸ்ல ஒரு வருஷமா தான் இருக்கோம். அதுக்கு முன்னாடி வேற வேற ஏரியாவுல இருந்திருக்கோம். நான் எல்லா அட்ரஸும் கொடுக்குறேன் நீங்க விசாரிச்சிக்கோங்க.”
“ஹேய் நீ எதுவும் சங்கடப்படாத.” சக்தி ஆதரவாய் கை பிடிக்க,
“இல்லை க்கா. அப்பா கிடைச்ச வேலை செய்வாரு. சில நாள் வேலை இருக்கும் பல நாள் இருக்காது. அதனால இருக்குற வீட்டுக்கு வாடகை ஏத்திட்டா மாறிடுவோம். நிலையான வருமானம் கிடையாது. ஏதோ மிச்சம் புடிச்சி ரெண்டு வேலையோ மூணு வேலையோ கஞ்சியோ சோறோ போடும் என் அம்மாவும் பாட்டியும்.” என்றவளைக் கண்டு பரிவு வந்தது சக்திக்கு.
“இங்க மூணு வேலை தாராளமா சாப்புடலாம் நீ.” என்ற சக்தியை நன்றியுடன் பார்த்த நிலா, “எனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணி தர முடியுமா அக்கா?”
“கண்டிப்பா பண்றேன்மா. இங்க உனக்கு எல்லாம் ஓகே வா?”
“எல்லாம் ஓகே அக்கா. அதான் நீங்க இருக்கீங்கல்ல.” என்று அத்தனை நம்பிக்கையை தைரியமாய் சொல்பவளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது சக்திக்கு. தோன்றிய கணம் பக்கவாட்டில் சற்று தள்ளி வந்த ராஜாவை பார்த்தவள், “இவளுக்கு ஒரு வேலை ரெடி பண்ணனும். பத்தாவது படிச்சிருக்கா.”