“சக்திவேலன் அட்டெண்டென்ட் யாரும் இருக்கீங்களா?” செவிலியர் வந்து கேட்கவும் பதறி எழுந்தவள், “அவருக்கு ஒன்னுமில்லைல நல்லா இருக்காருல்ல?”

“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைம்மா. மத்ததை டாக்டர் சொல்வாங்க. போய் பாருங்க.” என்று மருத்துவர் அறைக்கு வழிகாட்டினார்.

படபடத்து கனத்திருக்கும் இதயத்தோடு கயல்விழியை தன்னுடன் இறுக்கிப் பிடித்தபடி மருத்துவரிடம் சென்றாள்.

“அவர் பழையபடி எழுந்து நடமாடனும்னா மூளையில ஒரு ஆப்ரேஷன் பண்ணனும். சீக்கிரம் பண்ணுனா நல்லது. வயசு இருக்கு, எந்த காம்ப்ளிகேஷனும் இல்லை சீக்கிரம் குணமாகிடுவாரு. ஆனா இங்க பண்ண முடியாது. அதுக்கான வசதி இங்க இல்லை. பே பண்ண வசதி இருக்கு சமாளிக்க முடியும்னா பிரைவேட்ல பாருங்க இல்லை சென்னை, பாண்டி ஜிப்மர் இதுமாதிரி எங்கேயும் பாருங்க.” என்றுவிட, அழகிக்கு ஒன்றும் புரியவில்லை.

விபத்து என்பதால் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அழகிக்கு அவன் திரும்பி வந்துவிட்டால் போதுமென்ற மனநிலையில் இருந்ததால் எதுவும் கருத்தில் பதியவில்லை. இப்போது மருத்துவர் இப்படி சொல்லவும் அடுத்து யோசிக்க வேண்டும் என்று புரிந்தது. மனதோடு சேர்ந்து உடலும் நடுங்கியது. சக்திவேலனுக்கு தூரத்து சொந்தங்கள் இருப்பது தெரியும் ஆனால் அவன் யாரிடமும் அளவளாவி சொந்தம் கொண்டாடி பார்த்ததில்லை அழகுராணி. அடுத்து யாரை அழைத்து யோசனை கேட்பது என்று எதுவும் விளங்காது தான் வளர்ந்த இல்லத்திற்கு அழைத்து அதன் நிர்வாகியிடம் பேசினாள். மருத்துவர் சொல்வதை பார்த்தால் சக்திவேலனை வேறிடத்திற்கு மாற்ற வேண்டியது கட்டாயம் என்பதை அவளுக்கு உணர்த்தி எங்கு அவளுக்கு வசதி என்று அவளையே கேட்டார்.

“ரெண்டு இடமும் எனக்கு தெரியாது சார்.”

“யார் மூலமாவது ஹெல்ப் கேட்க முடியுமான்னு பாக்குறேன்மா. குழந்தையை வச்சிக்கிட்டு உன்னால அலையவும் முடியாது.” என்றவர் விசாரித்து அழைப்பதாய் சொன்னார்.

தளர்ந்து தடுமாறி திணறிக்கொண்டிருந்தவள் தன்னை கடந்து சென்ற செவிலியரை அழைத்து தனியாரில் பார்த்தால் எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க லட்சங்கள் என்று பதில் வந்தது. அதை கேட்டு நெஞ்சில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் அழகுராணி. அவ்வளவு பணமெல்லாம் அவர்களிடம் இல்லை புரட்டவும் முடியாது என்று புரிந்தது. இருப்பது இரண்டே வழி ஒன்று சென்னை செல்ல வேண்டும் இல்லை பாண்டிச்சேரி செல்ல வேண்டும். குனிந்து கையிலிருக்கும் மகளை பார்த்தாள், சுற்றி இருக்கும் இடத்தை பார்த்தாள். அவர்கள் வீட்டிலிருந்து குறைந்தது அரைமணி நேர பயண தூரத்தில் இருக்கலாம் என்பது அவள் யூகம். தெரியாத ஊரில், தெரியாத இடத்தில் இப்படியா நடக்க வேண்டும் என்று வேதனை அவளை முழுதாய் ஆக்கிரமிக்கும் முன் கயல்விழி விழித்து அழுதாள்.

அவளின் சத்தத்தில் திடுக்கிட்டவளுக்கு தன் கன்னத்தின் பிசுபிசுப்பே அப்போதுதான் உரைத்தது. கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு குழந்தையை கழிவறை அழைத்து சென்று வந்தவள் வீட்டிலிருந்து கயலுக்காக எடுத்துவந்த உணவை ஊட்ட, வாங்க மாட்டேன் என்று அப்போதுதான் வீம்புக்கு நின்றாள் கயல்விழி.

“நீயும் ஏன்டி இப்படி பண்ற?” ஆற்றாமையோடு குழந்தையிடம் கெஞ்சும் வேளையில் ஐந்து நிமிடங்கள் சக்திவேலனை காண அனுமதி அளிக்கப்பட்டது.

உணவு டப்பியைக் கூட அப்படியே போட்டுவிட்டு கயல்விழியை தூக்கிக்கொண்டு அவனிருக்கும் அறைக்குச் சென்றாள். மருத்துவ உபகரணங்களோடு நெஞ்சுக்கூடு ஏறி இறங்க மயக்கத்தில் இருந்தான் சக்திவேலன். கண்களில் நீர் தழும்ப அவனருகே வந்தவள் அவன் கைகளை அழுந்தப் பற்றி, “என்னோட ஆதாரமே நீங்கதான. எழுந்து வாங்க ப்ளீஸ். நீங்க இல்லாம எனக்கு இங்க எதுவும் புரியல. தெரியல. என்னென்னமோ சொல்றாங்க டாக்டர், பயமா இருக்கு எனக்கு. நான் என்ன பண்ணுவேன். வாங்களேன், எனக்கும் பாப்பாவுக்கும் உங்களை தேடுது.” அவனை விட்டால் தான் தோள் சாயக்கூட ஆளின்றி தவிக்கும் தன் நிலையை அறவே வெறுத்தாள் அழகுராணி. 

கட்டிலில் படுத்திருக்கும் தந்தை தன்னை தூக்கவில்லை என்று கயல்விழி கைகளை அவனை நோக்கி நீட்டி அழத் துவங்கினாள்.

“இவ்ளோ சத்தம் கூடாது. வெளில வெய்ட் பண்ணுங்க.” என்று அங்கு இறுக்கம் காட்டப்பட, தன் கையறு நிலை எண்ணி விம்மி வெடித்து கிளம்பும் அழுகையை சுற்றம் உணர்ந்து தொண்டைக்குள் விழுங்கினாள்.

‘நீங்க இல்லைனா நாங்க இல்லை. வந்துடுங்க.’ அறையை விட்டு வெளியேறும் முன் அவனை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு வெளியேற, அடுத்தடுத்த நிகழ்வுகள் துரிதமாய் அரங்கேறியது.

அவள் இல்லத்தின் நிர்வாகி அவள் நிலையை எடுத்துச் சொல்லி ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசி அவளுக்கு தோதாக அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். விபத்து நடந்த மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு தேதி கொடுத்திருக்க, அதுவரை சக்திவேலன் மயக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தான். அந்த இல்லத்தின் நிர்வாகி அவளுக்கு துணையாக அனைத்தும் செய்ய, ஒருவாறு சமாளித்து வந்தவளுக்கு இடியாக வந்து இறங்கியது அடுத்த செய்தி.

மண்டையில் துளையிட்டு அறுவை சிகிச்சை நன்றாக முடிந்து ஒரு நாள் கடந்திருக்கும் மூளையில் இரத்தக்கசிவு என மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுக்கு உதவிய தொண்டு நிறுவனமோ முதல் சிகிச்சைக்கான செலவை ஒத்துக்கொண்டது போல் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் மீதியை நீங்கள்தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டுமென சொல்லிவிட்டார்கள். 

“இப்போ போய் வேற ஹாஸ்பிடலும் மாத்த முடியாது. பணம் ஏற்பாடு பண்ண பாருமா… நானும் என்னால ஆனதை பாக்குறேன்.” என்று அவளுக்கு உதவிய நிர்வாகி நம்பிக்கையின்றி பேச, சர்வமும் அடங்கியது அழகுராணிக்கு.

குழந்தையை வைத்துக்கொண்டு வங்கியில் இருந்த சேமிப்பு பணம் அனைத்தையும் எடுத்துவந்து கட்டிவிட்டாலும் அதை முன்பணமாக ஏற்றுக்கொண்டு மீதி பணத்தை சீக்கிரம் கட்டும்படி சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். கயல்விழி இருப்பதால் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைவதற்கும் அவ்வப்போது மருந்துகள் வாங்குவதற்கும் என்று அதுவொரு தனி செலவு ஆனது. 

மீதி தொகைக்கு என்ன செய்வது என்று வீட்டையே புரட்டிப் போட்டாலும் எதுவும் கிடைக்கவில்லை. தெரிந்த நண்பர்களுக்கு அழைத்துக் கேட்டாள். ஆயிரம், ஐயாயிரம் என்று அவர்களால் முடிந்த அளவு ஒன்றிரண்டு பேர் கொடுத்தார்கள். அதெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியாய் ஆனது. அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சக்திவேலன் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டான். மருந்துகள், ஊசிகள் என்று செலவு கைமீறியது. திக்கற்று நின்றாள். காதில் கழுத்தில் இருந்த பொட்டு தங்கமும் விற்றாயிற்று. அவளால் அப்படியும் சமாளிக்க முடியாது ஓய்ந்துபோனவளாய் மருத்துவமனை வளாகத்தின் வெளிப்பகுதியில் ஒரு ஓரமாய் அமர்ந்தாள். மடியில் கயல்விழி உறங்கிக் கொண்டிருந்தாள். சக்திவேலன் கண்விழித்துப் பார்த்ததோடு சரி மருந்தின் வீரியத்தில் மீண்டும் உறக்கத்திற்கு சென்றுவிட்டான். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் என்றார்கள். ஒரு வாரத்தில் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். அதற்குள் பணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

மீண்டும் உதவிய இல்ல நிர்வாகிக்கு அழைத்து பேசினாள். தானும் முயன்று கொண்டிருப்பதாக சொன்னாலும் அவர் பேச்சில் உறுதித்தன்மை இல்லை. அவர் இத்தனை தூரம் தனக்கு உதவியதே பெரிது என்று அமைதியாகிவிட்டாள். 

என்ன செய்ய என்ன செய்ய என்று யோசித்த வேளையில் அவளருகே யாரோ அமரும் அரவம் கேட்க, நடப்புக்கு வந்தவள் குனிந்து கயல்விழியை பார்த்தாள். உலகம் அறியாது கண்ணயர்ந்திருந்தாள். வளராது இது போலவே மழலை உலகில் இருந்திருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை. 

“விவரம் புரியாத குழந்தையாவே இருந்திருக்கலாம்ல?” என்ற குரலில் திரும்பிப் பார்க்க, பூசிய உடல்வாகில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இருந்தார்.

இவள் நெற்றி சுருக்கி பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துகொள்ள,

“என் கொழுந்தனார் மவ உண்டாகி கலைஞ்சி போச்சு. இங்கதான் மூணு நாள் இருக்கனும்னு சொல்லி இருக்காங்க. எதோ ஆப்ரேஷன் பண்ணனுமாம். இனி குழந்தை பொறக்காதுனு சொல்றாங்க. காசு கொட்டிக் கிடந்து என்ன பண்ண? ஆள வாரிசு இல்லை.” என்று அவர்பாட்டிற்கு புலம்ப, எழுந்து சென்றுவிடலாமா என்று பார்த்தாள் அழகுராணி. 

“நாந்தான் தத்து எடுக்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். இல்லைனா அவ புருஷனுக்கு இன்னொரு கல்யாணம்னு ஆரம்பிச்சிடுவாங்க. என்ன நான் சொல்றது?”

அவர் பேச்சை காதில் வாங்கிக்கொண்டது போல் காட்டிக்கொள்ளாமல் எழமுயன்றவளை திடுக்கிட வைத்தது அவரது அடுத்தடுத்த பேச்சுக்கள்.

“ரெண்டு நாளா நானும் உன்னை கவனிச்சேன்மா. ஒத்தையா இந்த புள்ளைய வச்சிகிட்டு நீயும் அலையோ அலைன்னு அலையுறதையும் பணம் கட்ட யாருகிட்டயோ பேசுறதையும் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்லவா?” என்றவரை இவள் யோசனையாக பார்க்க,

“உனக்கு தோதுபடும்னா உன் புள்ளையை எங்க குடும்பத்துக்கு தத்து கொடுத்துடு. ராணி மாதிரி வாழ்வா. பதிலுக்கு உன் புருஷன் செலவு எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்.”

“வாய் இருக்குனு என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்காதீங்க.” திடுக்கிட்டாலும் தெளிந்து கடுகடுத்தவள் கயல்விழியை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு எழுந்தாள்.

“அட இரும்மா. பட்டுனு கோச்சிக்குறியே. விவரமா இருக்க வேண்டாமா?” 

“மரியாதை அவ்வளவுதான். தனியா இருக்கவும் என்னவும் பேசலாம்னு நினைச்சீங்களா? இதுக்கு மேல ஏதாவது பேசுனீங்க போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடுவேன்.” என்று எச்சரித்துவிட்டு விறுவிறுவென நடக்க, அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்தவர், “உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். ஒரு ஐட்டத்தை மட்டும் நான் சொல்ற இடத்துல குடுத்துடு உன் எல்லா கஷ்டமும் இதோடு முடிஞ்சுடும். என்ன சொல்ற?” அவர் தூண்டில் போட்டுப் பார்க்க, சிக்கவில்லை அழகுராணி. 

முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றவள் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தாள். சக்திவேலன் கண்விழித்து ஓரிரு வார்த்தைகள் பேசினான். அவன் மீண்டு வருவதில் உணர்ச்சிப் பிழம்பாய் கண்ணீர் சிந்தி அணைத்துக்கொண்டார்கள் இருவரும். செலவு பற்றி அவன் கேட்க நினைத்தாலும், “இந்த நேரத்துல அதிகம் யோசிக்க கூடாதுனு சொல்லியிருக்காங்க. நீங்க எதையும் யோசிக்காதீங்க. டிரஸ்ட்டே எல்லா செலவையும் பார்த்துக்குறாங்க.” என்று சொல்லி சமாளித்தவளுக்கு பணத்தை எப்படி புரட்டப்போகிறோம் என்று புரியவே இல்லை.

அங்கு இங்கு என்று நண்பர்களிடம் வாங்கிய பணமும் காலியாகிவிட, மறுநாள் செலவுக்கே எதுவுமில்லை என்ற நிலையில் லட்சம் தொட்டு நிற்கும் மருத்துவமனை செலவை எப்படி ஈடுகட்டுவது என்ற வழியறியாது அரண்டிருந்தவளை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் அந்த பெண்மணி. தலை கனத்து வலித்தது. ஒரு காபி வாங்கி குடிக்கலாம் என்றால் அவனுக்கு மருந்து வாங்க பணம் பத்தாமல் போய்விடுமோ என்ற யோசனை. இப்படியே சென்றால் மகளுக்கு அத்தியாவசியமானது கூட வாங்க முடியாதோ என்று ஐயம் தொற்றிக்கொண்டது. யாருமற்ற தன் நிலை எண்ணி நூறாவது முறையாக வற்றாத ஜீவநதியாய் அவள் கண்கள் கண்ணீர் சுரந்தது. கண்களை துடைத்துக்கொண்டு நிமிர, அவளையே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பெண்மணியை அழகுராணியும் கவனித்தாள். மகளை தத்து கேட்டதை ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றாலும் வேறொரு யோசனையும் சொன்னாரே என்று அதை பற்றி யோசிக்க, அவரே அவளிடம் வந்தார்.