*15*

உறக்கம் கலைந்து எழ முனைகையில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த கயல்விழி மீது லேசாக கை பட்டுவிட, சட்டென தன் குட்டி இமைகளை பிரித்து  விழித்தவளோ சிணுங்கினாள். ஐயோ என்று நெற்றியில் கை வைத்து பதறிய அழகி அவளை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுத்துக்கொண்டே பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, சத்தத்தில் புரண்டு படுத்தான் சக்திவேலன்.

“அப்பா தூங்குறாங்கடா குட்டிமா. அழாதீங்க.” என்று சமாதானம் சொல்லிக்கொண்டே சிணுங்களிலிருந்து அழுகைக்கு தாவியிருந்த மகளுடன் எழுந்து வெளியே வந்தவள் கூடத்தில் அமர்ந்து பால் புகட்ட, அழுகை நிறுத்தி சமத்தாகிவிட்டாள் சின்ன சிட்டு.

மகள் அமைதியாகவும் புன்னகை தவழ்ந்தது அழகியிடத்தில். மொட்டையடித்து அப்போதுதான் வளரத் துவங்கிய பூனை முடிகளை கோதிவிட்டு, பிஞ்சு கைகளை வருடி அதில் சின்ன சின்ன முத்தங்கள் பதித்து என குழந்தையை ரசித்து, மனதில் சிலாகித்து இருந்தவளின் முதுகில் பலமாய் ஏதோ மோதுவது போலிருக்க, நொடி திடுக்கிட்டாலும் தெளிந்துவிட்டாள்.

“உங்க தூக்கம் கலைஞ்சிடும்னுதான் பாப்பாவை தூக்கிட்டு வெளிய வந்தேன். பின்னாடியே நீங்களும் வந்தாச்சு. லீவுதானே இன்னைக்கு தூங்கலாம்ல?” என்று கழுத்தை மட்டும் பக்கவாட்டில் திருப்பி கணவனை பார்வையால் தேடியபடி அழகி பேச, அவள் முகத்திற்கு அருகே அவள் தோள்பட்டையில் தலை சாய்த்து முகத்தை புரட்டினான் சக்திவேலன். 

அவனின் செயலில் அவளது மயிர்க்கால்கள் அனைத்தும் நிமிர்ந்து கூசி சிலிர்க்க, மகளை கருத்தில் கொண்டு அதிராமல் நெளிந்தவள், “என்னங்க? என்ன செய்றீங்க?” 

“பாப்பா வயிறு நிறையுற வரைக்கும் டிஸ்டர்ப் பண்ணாம அமைதியா இருடி அழகி.” என்று முணுமுணுத்து அவள் கழுத்தில் லேசாக இதழ் ஒற்றி தலை சாய்த்து கண் மூடினான்.

“கட்டில்ல நல்லா தூங்குனா என்னவாம்?”

“என் மெத்தையில நல்லாத்தான் தூங்குறேன்.” என்றான் பதிலுக்கு நாசியிலிருந்து சூடான மூச்சுக்காற்றை அவள் தேகத்தில் வெளியிட்டபடி. கரங்கள் மெல்ல அவளை சூழ்ந்துகொண்டது.

ஒரு கரம் அவள் இடை சுற்றிய போது அமைதியாக இருந்தவள் அவனது மற்றொரு கரம் அடுத்தபுறம் இருக்கும் குழந்தையின் தலையோடு சேர்த்து பிடிக்கப்போக, அவன் அழுந்த பிடிக்கப்போறானோ என்ற பதற்றத்தில்,

“ஐயோ பாப்பா…” என்று குழந்தையை சற்று மார்போடு அழுத்திப் பிடித்து தன்னையும் மீறி குரல் உயர்த்தியிருந்தாள் அழகி.

அவள் சத்தத்தில் அவன் துள்ளி நகர்ந்தான் என்றால் அவன் மகள் பயந்து ஓவென்று அழுகையை கூட்டினாள்.

“என்னடி நாந்தானே? கவனமா இருக்க மாட்டேனா” குரல் மனைவியிடமும் கரங்கள் அழும் குழந்தையிடமும் செல்ல, தன் உணவு தடைபட்ட எரிச்சலில் அவன் கையை தட்டிவிட்டாள் கயல்விழி.

“சமாதானப்படுத்து.” எனும்போதே கயல்விழியிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள் அழகி. சற்று நேரத்திற்கெல்லாம் அமைதியாகி அவள் மடியிலிருந்து இறங்கிய கயல்விழி எழுந்து நின்று தன் விழிகளை உருட்டி உருட்டி பார்த்தாள். அவள் பார்வை தன்னை நோக்கி வரவும் வேண்டுமென்றே சக்திவேலன் முகத்தை திருப்ப, ப்பா ப்பா என்று சிரிப்புடன் குதித்துக்கொண்டு அவனிடம் வந்தவள் கையசைத்து குரல் கொடுத்தது தூக்கு என்பது போல்.

“முடியாது போ… நான் தூக்குனப்போ கையை தட்டிவிட்டில நீ.” என்று தர்க்கம் புரிந்தான் தந்தை.

விடுவேனா என்று தகப்பனை அழைத்துக்கொண்டே கயல்விழி அவன் மீது விழுந்து வைக்க, ஆர்பாட்டத்துடன் அவளை வாரி அணைத்து கொஞ்சினான் சக்திவேலன். 

“அப்பாவும் பொண்ணும் சேந்துட்டா நான் கண்ணுக்கே தெரிய மாட்டேனே…” என்று அழகி ஒருபுறம் நொடிக்க, மகளுடன் பாய்ந்து வந்து மனைவியையும் கட்டிக்கொண்டான் சக்திவேலன்.

“எங்களோட ஆதாரமே நீதாண்டி.” என்ற வார்த்தைகளுடன் அவன் இதழ்கள் அவள் கன்னம் தீண்ட, தகப்பனை ஒத்து கயல்விழியும் அன்னையின் கன்னத்தை எச்சில் படுத்தினாள்.

“போதும் போதும்… ரெண்டு பேரும் விளையாடுங்க, எனக்கு வேலை இருக்கு.” என்று அழகி எழப்போக, அவளை இழுத்து அமர வைத்தவன் மகளை அவளிடம் கொடுத்து, “நான் வெளில சாப்பாடு வாங்கிட்டு வரேன். இன்னைக்கு உனக்கு ரெஸ்ட். ரூமுக்கு ஓடு.”

“பாப்பாவுக்கு வெளி சாப்பாடா?” என்று குழப்பமாய் பார்த்தாள் அழகி. இந்த சில மாதங்களாகத்தான் கயல்விழிக்கு திட உணவுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். பிறந்து இரண்டு வருடங்கள் கடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. இப்போதே வெளி உணவு கொடுக்க வேண்டுமா என்ற தயக்கம் அவளுக்கு.

“அவளுக்கு மட்டும் ரெண்டு இட்லி ஊத்திடுறேன். நீ எதுவும் செய்ய வேண்டாம்.”

“என்ன திடீர்னு?” கயல்விழி விளையாட அவள் பொம்மைகளை எடுத்து கொடுத்துக்கொண்டே கேள்வியை கணவனிடம் வைத்தாள் அழகி. சில நொடிகள் கடந்தும் பதில் வராது போக, கணவனை திரும்பிப் பார்த்தாள். அவளையே ஆதுரமாக பார்த்தபடி இருந்தான் சக்திவேலன்.

ஏனோ அவன் பார்வை வேறாய் பட, நெற்றி சுருங்க பார்த்தவள் கயல்விழியை தங்களின் அருகே அமர்த்திக்கொண்டு என்ன என்பது போல் சக்திவேலனை பார்த்தாள். இமைமூடி திறந்தவன் அவளை நெருங்கி அவள் தோளில் கையிட்டு தன் மீது சாய்த்துக்கொண்டு அவள் விரல்கள் ஒவ்வொன்றையும் வருடிக் கொடுத்து நீவிவிட்டான்.

“யார் துணையும் இல்லாம பாப்பாவை வளக்க எவ்வளவு மெனெக்கெடுறேனு எனக்கு தெரியும்டி அழகி. ஒரு நேரம் எனக்காக பொண்ணுக்காகனு பார்த்து பார்த்து செஞ்சாலும் உனக்குன்னு ஒரு ஸ்பேஸ் தேவைப்படுது. அடுத்த வேலை என்ன சாப்பாடு செய்யுறது, பாப்பாவுக்கு என்ன குடுக்குறதுனு யோசிக்காம ஒரு பொழுது ஓடிடாதான்னு கலைச்சி சோர்ந்து போய் உக்காரும் போதெல்லாம் உன் முகம் காட்டிக்கொடுக்குது. என்னால ஆன உதவியை செஞ்சாலும் உனக்கு அது போதலையோன்னு எனக்கு ஒரு எண்ணம். என்னமோ இன்னைக்கு சட்டுனு தோணுச்சு ஏன் ஒரு நாள் உன்னை உக்கார வச்சி நான் கவனிச்சிக்க கூடாதுனு.” என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் அழகி.

அவன் செய்வது இரண்டாம்பட்சம்தான் இப்போது அவன் சொன்னதே யானை பலம் வந்தது போலிருந்தது அழகிக்கு. உடல் தளர்ந்து சுவாசங்கள் எளிதாகி ஏதோ வயது குறைந்தது போல் துள்ளலாக உணர்ந்தது மனது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததோ, அவளை இழுத்து நெற்றியோடு நெற்றி முட்டி, நாசியொடு நாசி உரசி, பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் இதழ் உரசி விலக, “உன் முகத்துல தெரியுற பிரகாசத்துக்காகவே எல்லா வார கடைசியும் உன்னை உக்கார வச்சி கவனிக்கலாம் போலயே…” என்றான் சக்திவேலன் சிரியாது.

“இது நல்லாயிருக்கே.” என்றுதான் அவன் நெஞ்சில் சாய்ந்தாள் அழகி.

“எழுந்து போயி பல்லை விளக்கு முதல்ல.” என்று அவளை நகர்த்திவிட்டான் சக்திவேலன்.

“சார் விளக்கிட்டீங்களோ?”

“விளக்குவோம்… விளக்குவோம்.”

“இன்னைக்கு என்னை உக்கார வச்சி கவனிப்பேனு சொல்லி இருக்கீங்க. அதுனால நான் உக்காந்திருப்பேனாம், நீங்க எனக்கு பல் தேய்ச்சி விடுவீங்களாம்.” என்று பற்கள் தெரிய அவள் சிரிக்க,

“ஆசைபடலாம் பேராசைபடக்கூடாது. எழுந்து போடி.” என்று அவள் தோள் பிடித்து மெல்ல தள்ளிவிட, வேண்டுமென்றே அவன் மீது சாய்ந்தவள், “ரெண்டு தெத்து பல்லு லேசா வெளில தெரிஞ்சதுக்கு ஊருல இருக்குற எல்லா கடையும் அலசி ஆராய்ஞ்சு ப்ரெஷ் வாங்கிட்டு வந்து உங்க பொண்ணுக்கு மட்டும் பல் தேய்ச்சுவிட தெரிஞ்சுது பொண்டாடிக்கு தேய்ச்சுவிட கஷ்டமாமாம்? இருந்தாலும் பொண்ணை பெத்த இந்த அப்பாங்க தொல்லை தாங்க முடியல.” என்றவள் முகத்திற்கு நேரே விசுறுவது போல் கையை இடவலமாய் ஆட்ட, அங்குமிங்கும் அசைந்த அவள் கரத்தை பிடித்து இதழருகே கொண்டு போக, ஆர்வமாய் அவள் வீசும் பார்வை உணர்ந்து கடிப்பது போல் அவன் செய்ய விருட்டென கையை உருவிக்கொண்டவள் அறிவியல் வாத்தியாரை ரெண்டு மொத்து மொத்தினாள்.

விளையாடிக்கொண்டிருந்த கயல்விழியும் அழகியை பின்பற்றி எழுந்து வந்து சக்திவேலனை இரண்டடி போட, மகளை உறுத்து விழித்த அழகி,

“அப்பாவை அடிச்சா பிச்சிருவேண்டி.” என்று மிரட்ட, அழகியை நகர்த்திவிட்டு எழுந்தவன்,

“நீ பண்றதைதான் அவ பண்றா. கவனமா இரு. ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துக்கோ நான் ஃப்ரெஷ் ஆகி பாப்பாவை கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.” 

“எனக்கு பூரி வேணும்.” என்றாள் அழகி.

சிரிப்புடன் தலையசைத்தவன் சொன்னது போல் அன்றைய பொழுதில் வீட்டு வேலை அனைத்தையும் பார்த்து மனைவியையும் நன்றாக பார்த்துக்கொண்டான். அவன் செய்யட்டும் என்று இருக்காமல் அழகியும் உதவினாள். மாலை நேரம் சுண்ட காய்ச்சிய பாலில் காபி போட்டு எடுத்துவந்து கொடுக்க, ரசித்து ருசித்து குடித்து முடித்தவளோ வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டாள். அதன்படி குழந்தையை கிளப்பி தேவையானது அனைத்தையும் எடுத்துக்கொண்டு முதலில் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து சென்றனர். பெரிதாக கூட்டமில்லாததால் தரிசனம் முடித்து சிறிது அமர, கயல்விழி அங்குமிங்கும் ஓடியபடி இருந்தாள். கீழே விழுந்து விடுவாளோ, எங்கேனும் இடித்துக்கொள்வாளோ என்று அழகி நொடிக்கு நொடி பதறுவதை கண்டவன், “பீச் போலாமாடி? தண்ணிய பாத்துட்டு அமைதியா இருப்பா? மண்ணுல விளையாட விடலாம் கீழ விழுந்தாலும் அடிபடாது.”

“இங்கிருந்து தூரமேங்கே,”

“ஒரு மணி நேரம்தான. வண்டியில உன்னால உக்காரமுடியுமா சொல்லு.” என்று கேட்கவும் அவளுக்கும் ஆசையாய் இருந்தது. கயல்விழி உண்டாவதற்கு முன் திருமணம் ஆன புதிதில் சென்றது. ஒருமணி நேர பயணம்தானே இடையில் இளைப்பாறி சென்று வந்துவிடலாம், பெரிதாய் நேரமும் ஆகவில்லை என்று யோசித்து சரியென்று மண்டையை ஆட்ட, அவன் பைக் கடலூர் கடற்கரை நோக்கி சென்றது.

வேடிக்கை பார்த்தபடி சமத்தாய் வந்தாள் கயல். கடற்கரையிலும் துள்ளி விளையாடி, தண்ணீரில் கால் நனைத்து, மண்ணை அள்ளி போட்டு என குதூகலித்து அங்கிருந்து கிளப்பியது அக்குடும்பம். வீடு வரும் வழியில் கயலுக்கு தொடர் இருமல் வர, பயந்துவிட்டாள் அழகி.

“இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்க கூடாதோ?” விட்டால் அழுது விடுபவள் போல் அழகி பேச, வண்டியை ஓரமாய் நிறுத்தியவன் தண்ணீர் கொடுக்கச் சொல்லிப் பார்த்தான்.

கொஞ்சம் தான் குடித்திருப்பாள் அந்த பிளாஸ்கில் தண்ணீர் காலியாகிவிட்டது. கயலின் இருமலும் சற்று மட்டுப்பட்டிருந்தது ஆனால் முழுதாக குறைந்திருக்கவில்லை.

“பால் குடுத்து பாக்கறியா அழகி?”

“காலையில நைட் மட்டும்தான் பால் கொடுக்கிறேன். இப்போ குடிப்பாளான்னு தெரியல. அதோட இங்க எங்க கொடுக்கிறது?” என்று சுற்றத்தை கண் காண்பிக்க, சக்திவேலனும் சுற்றி முற்றி பார்த்தான். தள்ளி தள்ளி கொஞ்சம் கடைகள் இருந்தது. சிலது பூட்டியும் சிலது திறந்தும். வீடு அமைப்பில் எதுவும் இல்லை. எதிரே சற்று தள்ளி ஒரு டீக்கடை இருப்பது தெரிந்தது. விழிகள் பளிச்சிட மனைவியிடம் திரும்பியவன்,

“அங்க ஒரு டீக்கடை இருக்கு. நான் வெந்நீர் வாங்கிட்டு வரேன். அதுவரை இங்க நில்லு.” என்று பூட்டியிருந்த ஒரு கடையின் வெளி வராண்டாவில் நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து சென்றான்.

விரைந்து டீக்கடையில் சுடு நீரும் வாங்கிவிட்டு திரும்ப, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அசம்பாவிதம் நடந்தது. சீராக வந்தது போலிருந்த லாரி ஒன்று திடுமென கட்டுப்பாடின்றி அலங்கோலமாய் ஓடி அந்த டீக்கடையின் உள் புகுந்திருந்தது. அந்த கடையிலிருந்து வெளியே வந்த கணவனையே பார்த்து நின்ற அழகி மூச்சு விடவும் மறந்து அதிர்ந்து விழித்தாள். மூளை சற்று முன் நடந்த நிகழ்வை ஓட்டிப்பார்த்து நடப்புக்கு வர முயன்றது. தொண்டையை  எதுவோ ஒன்று அடைப்பது போல் இருக்க, நெஞ்சில் கைவைத்து இரண்டடி பின்நகர்ந்தாள்.

விபத்தை கவனித்த சிலர் பதறியடித்து கடை நோக்கி ஓட, அதில் ஒருவர் அழகியின் நிலை கண்டு, “யாருமா நீ? ஏன் இப்படி நிக்குற?” என்று கேட்டுவிட்டு அவள் பார்வை வெறிக்கும் திசை நோக்கி பார்க்க, “உனக்கு வேண்டப்பட்டவங்க இருக்காங்களா?” 

வார்த்தை வெளியே வராமல் சண்டித்தனம் செய்ய, வேக மூச்சுகள் எடுத்தவள் நடுங்கும் கரத்தால் கடையை காண்பித்து, “என் வீட்டுக்காரர் வெ…வெந்நீர் வாங்க போனாங்க…” என்கவுமே அவருக்கு புரிந்துவிட்டது.

கூட்டத்தில் துழாவி ஒரு பெண்ணை பிடித்தவர் அழகிக்கு துணையாய் அவளுடன் நிறுத்தி மருத்துவமனையில் சேர்க்கும் வரை உதவிவிட்டு சென்றார். அழகியின் விழிகள் வெற்றிடத்தை வெறித்து நிலைகுத்தி நிற்க, கயல்விழி அழுகை எல்லாம் கருத்தில் பதியவில்லை. துணைக்கு வந்த பெண்தான் அவளை உசுப்பி, அதட்டி, உருட்டி, தேற்றி, தெளிய வைத்து கிளம்பினார். நிதர்சனம் இதுதான் என்று உணர்ந்தபின் கன்னம் தாண்டி வழியும் கண்ணீருடன் மூடியிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஆபத்தான நிலையில் தந்தை சிகிச்சையில் இருப்பது அறியாது அமைதியாய் அழகி தோளில் உறங்கிக் கொண்டிருந்தாள் கயல்விழி.