*14*

அனைத்தையும் விட்டுவிடலாம் என்று இலகுவாக சொல்லியிருந்தாலும் ரவி காவல் நிலையத்தில் இருக்கிறான் என்றதும் அப்படியே அனைத்தையும் விட்டுவிட முடியும் என்று தோன்றவில்லை சக்திக்கு. அதுவும் போதை பொருள் வழக்கில் கைதாகி இருப்பவனை முயன்றுதான் வெளியே எடுக்க வேண்டும். அதற்கு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சில பல காரியங்களை மீண்டும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஆக எதுவும் எளிதில்லை என்று புரிந்தது.

இதெல்லாம் தான் ஆரம்பித்த ஒன்றுதானே. உடன்பிறவா சகோதரனாய் தனக்காக வந்தவன்தானே அவன். இப்போதும் கூட அவளுக்காக அனைத்து பழியையும் ஏற்றுக்கொண்டு சிறைச்சாலை செல்லவும் தயங்காதவனை காக்கும் கடமை தனக்கிருக்கிறது என்பதை உணர்ந்தே ராஜாவிடம் பேச அவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டுக்கொண்டு அங்கு சென்றாள்.

ரவி வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவனது வீட்டில் அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான் ராஜா. 

“எப்படி இது நடந்துச்சு?” என்றுதான் அவன் வீட்டிற்குள் நுழைந்து கேட்டாள் சக்தி. 

அழைப்பை துண்டித்தவன் பதட்டத்துடன் சக்தியை நெருங்கி, “எஸ்.ஐ பாத்துட்டு கவுன்சிலர்கிட்ட பேசிட்டு குடோன்ல எவ்ளோ சரக்கு இருக்குனு பாக்க போனோம் சக்தி. ரவி உள்ள போய் பாக்குறேனு போனான், நான் பில்டங் வெளிய செக்கியூரிட்டி கிட்ட பேசிட்டு இருந்தேன். திடீர்னு எங்கிருந்துதான் வந்தாங்கனு தெரியல. கார்ல நாலு பேர் வந்து இறங்கி சோதனை போட்டு ரவியோட சேர்த்து மிச்சம் இருந்த சரக்கையும் கொண்டு போயிட்டாங்க.” என்றவன் அச்சத்தில் நெற்றியை நீவினான். 

காவல் உடையில் சிலரும் அதிகாரி தோரணையில் வந்திறங்கிய ஐந்தாறு பேரை கண்டதும் ராஜாவின் சர்வமும் ஆட்டம் கண்டது. அவர்கள் நல்ல நேரம் அவன் வெளியே நின்றுகொண்டதனால் அப்படியே பதுங்கிவிட்டான். அவனையும் சேர்த்து பிடித்திருந்தால் சக்தியை எளிதாக நெருங்குவது மட்டுமின்றி அவர்களின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கும். அனைத்தையும் முதலிலிருந்து துவங்குவது போல் ஆகியிருக்கும். அந்தபட்சத்தில் இவர்கள் தப்பிவிட்டார்கள் ரவி மாட்டிக்கொண்டான்.

தவறு செய்தால் தண்டனை என்ற ஐயமின்றி தவறு செய்து மாட்டினால்தானே தண்டனை என்ற கொள்கையில் அகல கால்வைத்து அதில் பாதி கிணறை தாண்டியும் இருக்க, இப்போது ரவி மாட்டியது அச்சுறுத்துவதாய் இருந்தது சக்திக்கு.

“எவ்ளோ சரக்கு புடிச்சிருக்காங்க?”

“கடைசி ரவுண்ட் ரொட்டேஷன் முடிஞ்சி கமிஷன் கொடுக்க வச்சிருந்த பத்து லட்சம் சரக்கு மாட்டியிருக்கு சக்தி.”

“எஸ்.ஐ கிட்ட பேசுனீங்களா? எந்த ஸ்டேஷன்ல வச்சிருக்காங்க?” என்று கேட்ட சக்திக்கும் கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது. எடுத்து வைத்த முதல் பெரிய அடியே இடறியது சற்று தடுமாற வைத்தது. 

“ரீஜினல் ஆபீஸ்ல வச்சி விசாரிக்குறாங்களாம். நாம நேரடியா இதுல இறங்க முடியாது அதான் நம்ம எம்.ஜி தெரு அண்ணாச்சிகிட்ட பேசிட்டு இருக்கேன். ரவி அவர் கடையில் வேலை பாக்குறாங்குற மாதிரி பேச சொல்லியிருக்கேன். போய் விசாரிச்சிட்டு தகவல் சொல்றேன்னு சொல்லி இருக்காரு.”

“கவுன்சிலர் என்ன சொல்றார்?” 

“அவரை போய் பாத்துட்டு வந்துருவோம்னுதான் உன்னை தேடுனேன் சக்தி.” என்ற ராஜாவை யோசனையுடன் ஏறிட்டவள்,

“அவர் இடத்துல வச்சுதான் சரக்கு எடுத்து ரவியை புடிச்சிருக்காங்க. அப்போ அவருக்கும் இது தலைவலிதான? அவர் தப்பிக்க நம்மள கைகாட்ட மாட்டாருனு என்ன நிச்சயம்?”

“அவருக்கு மட்டும்தான் கைகாமிக்க முடியுமா? நாமளும் காட்டுவோம்னு அவருக்கு புரிய வச்சா போதும் சக்தி.” என்றான் ராஜா.  

“புரியல..”

“அவர் சொல்லிதான் சரக்கு இறக்குனோம்னு ரவி வாக்குமூலம் கொடுத்தா அவர்தான் மாட்டுவாரு.”

“நம்மளோட சுயநலத்துக்காக தேவையில்லாம அவரை மாட்டிவிடனுமா?” என்ற சக்தியை புருவம் உயர்த்திப் பார்த்தவன், “நீ யோசிக்குற அளவுக்கு அவர் அவ்வளவு நல்லவரு எல்லாம் இல்லை சக்தி.”

“அதுக்கு நாம மாட்டிவிடணும்னு இல்லையே. நமக்கு தேவைனதும் அவர்கிட்ட இனிக்க இனிக்க பேசிட்டு இக்கட்டு வரும்போது அவரையே பலியாக்குறது எனக்கு சரியாபடல.” என்ற சக்தியை ஆழ்ந்து பார்த்த ராஜா,

“உன் குடும்பத்தை பாத்ததும் சரி தப்பு, பாவ புண்ணியம் எல்லாம் கணக்கு பாக்குறியா சக்தி?”

“எதை எதுக்கு முடிச்சி போடுறீங்க?” என்று முறைக்கவே செய்தாள் அவள்.

“சரியான விஷயத்தை செய்யக்கூட குறுக்கு வழில போக வேண்டிய சமூகத்துல இருக்கோம். இதுல சரி தப்புன்னு எதுவும் இல்லை, நம்மளோட இலக்கு சரியா இருந்தா போதும்னு சொன்ன சக்தி இன்னைக்கு இப்படி பேசுனா நான் வேற எப்படி சொல்றது?”

“இப்போ இருக்கிற பிரச்சனையை விட்டு தேவையில்லாததை பேசி என்ன ஆகப்போகுது?”

“எது தேவையில்லாதது? நீ திடீர்னு உன் கொள்கையை மாத்திகிட்டா எல்லாம் மாறிடனும்னு இல்லை சக்தி. எதுவும் மாறாது. மாறவும் விடமாட்டங்கன்னு தெரிஞ்சுதான் நாம இதுல இறங்கி இருக்கோம்.” என்று அழுத்தமாக சொன்னவனை ஆயாசமாக பார்த்தாள் சக்தி. கொஞ்சம் பிசகினாலும் தான் இதிலிருந்து விலகிவிடுவோம் என்பதை உணர்ந்து தன்னை தக்கவைக்க வார்த்தைக்கு வார்த்தை அவன் கொடுக்கும் அழுத்தங்கள் அவளை அழுத்துவது போல் இருந்தது. அந்த அழுத்தமே இதிலிருந்து விடுபட்டு வெளியேறிட வேண்டும் என்று எண்ணத்தை பலப்படுத்த கணவனின் பாராமுகமும் ராஜாவின் வார்த்தைகளும் அவளை அலைக்கழிக்க செய்தன.  

நெற்றியை தேய்த்துக்கொண்டே தரையில் அமர்ந்தவள், “இப்போ என்ன செய்யணுங்குறீங்க?” என்று ராஜாவை நிமிர்ந்து பார்க்க, 

“நீ அமைதியா இரு. நான் பாத்துக்குறேன். கொஞ்சம் பணம் கைமாத்துற மாதிரி வரும், அதெல்லாம் கணக்கு பாக்காத. அதோட ரவியை வெளிய எடுக்க கைமாறு எதுவும் செய்யுற மாதிரியும் வரலாம் எல்லாத்துக்கும் தயாரா இரு. இப்போ கவுன்சிலரை பாக்க போலாமா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார் கவுன்சிலர்.

“என்ன இப்படி ஆகிப்போச்சு? உங்களை நம்பித்தானே இதுல இறங்குனேன். கவனமா இருந்திருக்க வேண்டாமா? இப்படி நீங்க மாட்டுனதும் இல்லாம என் குடியையும் கூண்டுல ஏத்தி இருக்கீங்க. குடோன்ல சரக்கு வைக்குறதுக்கு முன்னாடி எத்தனை தடவை படிச்சி படிச்சி சொன்னேன். அப்போலாம் தலையாட்டிட்டு இப்படி என்னை இழுத்து விட்டிருக்கீங்க. குடோனை சீஸ் பண்ணிட்டாங்க, அடுத்து என்னை நோண்டுவாங்க. என் அரசியல் வாழ்க்கை, தொழில் எல்லாத்துக்கும் மூடுவிழா பண்ணியாச்சு. என்ன பதில் வச்சிருக்கீங்க இப்போ?” குதிகுதியென கொதித்துவிட்டார் மனிதர். 

“நீங்க முதல்ல உக்காருங்க.” என்ற ராஜா அங்கிருந்த நாற்காலி ஒன்றை எடுத்துப் போட, அதை அப்படியே காலால் உதைத்து விசிறியடிக்க, பட்டென எழுந்தாள் சக்தி.

“என் குடி மூழ்கி போச்சுன்னு கத்திட்டு இருக்கேன், சாவுகாசமா உக்காந்து விருந்து திங்க சொல்றியா?” என்ற உறுமலுடன் தொடர்ந்து,

“யார் கால்ல விழுவீங்களோ இல்லை யாருக்கு விளக்கு புடிப்பீங்களோ தெரியாது எனக்கோ, என் தொழிக்கோ, அரசியல் வாழ்க்கைக்கோ எந்த பிரச்சனையும் வரக்கூடாது.” என்று பேச, அவரின் வார்த்தை பிரயோகத்தில் முகம் சுழித்தாள் சக்தி.

இறுக்கமடைந்த ராஜாவின் முகமும், “உங்க கோபம் எனக்கு புரியுது அதுக்காக வார்த்தையை விடுறது சரியில்லை அண்ணே…”

“அப்படிதான்டா பேசுவேன். என்ன பண்ணுவீங்க? நீங்க பண்ணாததையா சொன்னேன்? உங்களோட ஒரு ஆள்தான் உள்ள மாட்டியிருக்கான் ஆனா என்னோட ஒட்டுமொத்த ராஜ்ஜியமும் இப்போ கத்திமுனையில இருக்கு. நான் மாட்டி ஏதாவது எசகுபிசகாச்சு அமைதியா இருக்க மாட்டேன் உங்களையும் சேர்த்து கூண்டோட தூக்கிடுவேன்.” என்று அவர்களை சுட்டிக்காட்டுவது போல் கைநீட்டி மிரட்ட, ராஜாவின் பொறுமை எல்லை மீற காத்திருந்தது. முயன்று இலக்கை கண்முன்னே கொண்டுவந்தவன் கவுன்சிலருடன் வந்திருந்த அவரது ஆளை பார்த்தான்.

“நீங்களாவது அண்ணனுக்கு அமைதியா எடுத்து சொல்லுங்க. பிரச்சனை அவருக்கு மட்டுங்குற மாதிரியே பேசுறது நல்லாயில்லை. தம்பியா கூடவே இருந்தவன் சிக்கியிருக்கான் நாங்களும் இதுலேந்து எப்படி மொத்தமா வெளில வர்றதுனுதான் யோசிச்சிட்டு இருக்கோம்.” என்று தன்மையாக பேசினான் ராஜா.

அதற்கு மாறாக கொதித்தார் கவுன்சிலர், “என்ன கிழிச்சீங்க? உங்க ஆளை ஏதாவது பண்ணி வெளிய எடுத்துடுவீங்க. ஆனா என் இடம்? நயமா பேசி என்னை இதுக்குள்ள கொண்டு வந்துட்டு இப்போ மொத்தமா உள்ள போக வைக்க பாக்குறீங்களா? தொலைச்சி கட்டிடுவேன் அம்புட்டு பேரையும்.” விரல் நீட்டி எச்சரித்தவரின் அச்சம் கணிக்கக்கூடியதாய் இருந்தது. ரவியை எப்படியும் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்று தெரியும் ஆனால் அவர் தொழில் செய்யும் இடம் ஒருமுறை கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தபின் அதை மீட்டு பழையபடி தொழில் தொடர்வது எல்லாம் உடனே சாத்தியமில்லை என்பதால் இழப்பு அவர்பக்கம் தான் அதிகம். அதனாலே இந்த கடினமெலாம். 

“இங்க இப்படி குதிச்சிட்டே இருந்தா ஒன்னும் பண்ண முடியாது. எங்க சைட் என்ன பண்ண முடியுமோ அதை பண்றோம். நீங்களும் உங்க சைட் மூவ் பண்ணுங்க.” என்றான் ராஜா.

சக்தி பார்வையாளராக இருக்க, அவள் புறம் பார்வை திருப்பிய கவுன்சிலர், “உன்னை நம்பித்தான் என் இடத்தை கொடுத்தேன் சக்தி. இப்படி நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? எனக்கு ஒரு பதிலை சொல்லு.” என்று கேட்கவும் ராஜாவை ஒரு பார்வை பார்த்த சக்தி கண்களை மூடித் திறந்து, “உங்களுக்கு பிரச்சனை வராம முடிச்சி கொடுக்குறேன்.”

“இதை சொல்றதுக்கு நான் இவ்ளோ கத்த வேண்டியதிருக்கு. உன்னை நம்பி தான் இப்போ போறேன்.” என்ற கவுன்சிலர் ராஜாவை முறைத்துவிட்டு சென்றார். 

அவர் நகர்ந்ததும் சக்தியின் முகம் இறுகியது, “இதைத்தான் சொன்னேன், அவரை பகைச்சுகிறது நல்லதுக்கு இல்லை. நாளைக்கே அவரால நம்ம ஆளுங்களுக்கு பிரச்சனை வரலாம். ஒருதடவை சந்தேக கரை படிஞ்சுதுன்னா அதை மறக்கடிக்குறது கஷ்டம்.” என்றவள் அங்குமிங்குமாய் வீட்டை இரண்டொரு நிமிடங்கள் அளந்தவள் முகம் சற்று வெளிச்சம் பெற, யோசனை கிடைத்த மகிழ்வில் ராஜாவிடம் வந்தவள், “அவர் குடோனை லீசுக்கு விட்ட மாதிரி ஒரு ஆளை புடிச்சி எழுதி வாங்குங்க. அந்த பேப்பர் காட்டி கவுன்சிலருக்கும் அங்க இருந்த பொருளுக்கும் சம்மந்தம் இல்லைனு அவரை வச்சி கேஸ் கொடுத்து அவர் பேரை கிளியர் பண்ணிடுங்க. லீசுக்கு எடுத்த ஆளு காணாம போயிட்டான்னு ஏதாவது கதை கட்டி நம்ம ஆளுங்க யாரும் மாட்டாம பாத்துக்கோங்க.”

“ஊர் அடிச்சி ஒலையில வச்ச அந்த கவுன்சிலர் என்னவோ நல்லவர் மாதிரி நீ அவருக்கு நியாயம் பாத்துட்டு இருக்க.” என்ற ராஜாவின் காட்டத்தை புறந்தள்ளியவள், “இப்போ நாம சண்டை கட்டுறதுதான் முக்கியமா?” என்று அழுத்தமாய் பார்க்க, “வந்து பேசிக்குறேன்.” என்று நகர்ந்துவிட்டான் ராஜா. 

அவன் சென்றவுடன் சக்தியும் கிளம்பி அவள் வீடு வந்துவிட, இங்குமங்குமாய் அவள் மனம் குழம்பி தவித்தது. இன்னும் சக்திவேலனும் விழியும் ஏன் பள்ளி செல்லவில்லை என்று தெரியவில்லை. பொறுமையாக பேசி சரிகட்டிவிடலாம் என்று எண்ணியதற்கு மாறாக சக்திவேலன் அவளை வீட்டினுள் கூட விடவில்லை என்ற உண்மை கசந்தது. இனி எப்படி பிரச்சனைகளை சமாளித்து அவனை அணுகுவது என்று புரியவில்லை. அனைத்தையும் விட்டுவிடலாம் என்றால் சூழ்நிலை அதற்கு ஒத்துவரும் போல் தெரியவில்லை. இன்னும் என்னனென்ன செய்ய வேண்டி வருமோ என்று நினைத்தாலே ஐயம் மேலோங்க, வெற்றிலை பெட்டியை திறந்து அவளுக்கு வேண்டியது போல் கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் பாக்கு சேர்த்து வாயில் அதக்கினாள். 

சிந்தை பின்னோக்கி செல்லப்பார்க்க, வாசலில் சத்தம் கேட்கவும் எழுந்து சென்று பார்த்தாள்.

“ரவியை பாக்கவே விடமாட்டேங்குறாங்க. வெளிய விடுறது எல்லாம் கஷ்டம்னு பேசிக்குறாங்க. மாமியா வூட்டுல அழுதே கரைஞ்சிட்டு இருக்கு. நீங்கதான் பாத்து பண்ணனும்.” என்று ரவி வீட்டிலிருந்து அவன் மச்சினன் வந்து நின்றிருந்தான்.

“ஆள் அனுப்பியிருக்கேன். ரவி சீக்கிரம் வீடு வந்துடுவான்.” என்றாள் சக்தி.

“உங்களை நம்பி தான் என் மாமியா அவனை அனுப்புச்சு. அவந்தான் அதுக்கு ஆதாரம். நீங்கதான் ரவியை கரை ஏத்தணும். கொஞ்சம் சீக்கிரம் வெளிய எடுத்துவிடுங்க.” என்றுவிட்டு சென்றான் அவன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ராஜாவிடமிருந்து அழைப்பு வந்தது, “உன் வீட்லேந்து எதுவும் கிடைக்கலைனதும் ஒரு வாரம் அங்கஇங்கனு தேடி பார்த்துட்டு நமக்கு ஷேடோ போட்டிருக்காங்க. அதான் நாங்க குடோன் போன நேரம் கரெக்ட்டா வந்து புடிச்சிருக்காங்க.”

“ஷேடோ போட்டிருக்காங்கன்னா உங்களை வேணும்னு தான் புடிக்காம வெளில நடமாட விட்டிருக்காங்க.” என்றாள் சக்தி கூர்மையாய்.

அவள் கூர்மையை மெச்சிக்கொண்டவன் பெருமூச்சுவிட்டு, “அடுத்த சரக்கு கப்பல்ல ரெடியா இருக்குனு தகவல் வந்திருக்கு. இருக்கிற நிலைமைக்கு அடக்கித்தான் வாசிக்கணும். இந்த முறை வேண்டாம்னு சொல்லிடவா?” 

“இந்த முறை தான் கடைசின்னு சொல்லி சரக்கை வெளிய எடுக்குற ஏற்பாடை பண்ணுங்க.”

“சக்தி.” இருக்கும் இடத்திலேயே அதிர்ந்து போய் நின்றான் ராஜா. எல்லாவற்றையும் தலை முழுகி கணவன் குடும்பம் என்று வாழ விரும்பிய சக்தி, போதை பொருள் தடுப்புக் குழுவின் கண்காணிப்பு மொத்தமும் தங்கள் புறம் இறுக்கமாகி இருக்கும் இப்படியொரு சூழலில் மீண்டும் சரக்கு எடுக்கலாம் என்று சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை.

“தெரிஞ்சிதான் பேசுறியா சக்தி நீ?”

“யோசிச்சு தான் சொல்றேன். இந்த முறை சரக்கை நம்ம இடத்துக்கு எடுத்துட்டு வராம வேற ஆளுக்கு கைமாத்தி விடுவோம்.”

“அதுல நமக்கு என்ன லாபம்? உன் பிளான் என்ன?” சக்தியின் எண்ணப்போக்கு புரியாது கேட்டான் ராஜா. 

“நம்மள காட்டிக்கொடுத்த அந்த விசுவாசி யாருனு கண்டுபிடிக்க இதுவும் ஒரு வழின்னு வச்சிக்கோங்களேன். இரையை போட்டு வலையில புடிக்கிறது. மத்ததை நேர்ல பேசிக்கலாம்.” என்று சக்தி அழைப்பை துண்டித்துவிட, குழப்பத்துடன் ரவி மற்றும் கவுன்சிலரின் குடோன் விவகாரத்தில் கவனம் செலுத்தினான் ராஜா.

நோவில் துவண்டு அசந்து உறங்கும் மகளின் நெற்றியில் கைவைத்து பார்க்க, சூடு மட்டுப்பட்டிருந்தது. காலை எழுந்தபோது சற்று அதிகரித்திருந்த உடல் சூட்டில் மனைவியின் மீதுதான் கோபம் கோபமாய் வந்தது சக்திவேலனுக்கு. அவளை பார்த்தப்பின்தான் சீராக சென்றுகொண்டிருந்த தங்களின் வாழ்க்கை திசை மாறி மகளின் உடல்நிலையில் சுணக்கம் என்று கோபம் வளர்த்துக்கொண்டான் சக்திவேலன். இயல்பான காலநிலை மாற்றத்தால் சளியும் காய்ச்சலும் வந்துள்ளது என்று மருத்துவர் சொன்னதை வாகாக மறந்து போனான். இப்போது கயல்விழிக்கு காய்ச்சல் விட்டிருக்க, நிம்மதி மூச்சு விட்டவன் தன்னை சுத்தப்படுத்துக்கொண்டு மதிய உணவு எடுக்க சென்றான். காலையே கயல்விழிக்கு ஏற்றது போல் ரசம் வைத்துவிட்டுதான் அவளோடு உறங்கினான். விழிக்கையில் அழகியின் விழிகளை எதிர்கொள்வோம் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் பேச பேச பழைய விஷயங்களோடு சேர்த்து தற்சமயம் அவளோடு ஒட்டி உறவாடும் கயமையும் அறமற்ற செயல்களும் அவனை இலகுவாக்க விடவில்லை. அதற்கு தூபம் போடும் விதமாய் மாலை அந்த அழைப்பு வந்தது.

தூறல் ஆரம்பித்திருக்க ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு கயல்விழியோடு அமர்ந்து புத்தகத்தில் இருக்கும் உருவங்களுக்கு நிறமடித்துக் கொண்டிருந்தான். அந்நேரம் அலைபேசி ஓசை எழுப்ப எடுத்துப்பார்த்தால் வீட்டின் உரிமையாளர். யோசனையுடன் அழைப்பை ஏற்க, மறுபக்கம் சொன்ன செய்தியில் மகிழ்வதா இல்லை வருந்துவதா என்று பிரித்தறிய முடியாத குழப்பம்.

விஷயம் இதுதான். சக்தி அவன் வீட்டுக் கதவை தட்டியது வெளியூரில் இருக்கும் வீட்டு உரிமையாளர் அலைபேசியை எட்டிவிட்டது. சுற்றி இருப்பவர்களுக்கு அவள் வரவு உவப்பானதாக இல்லை என்றும் சிலர் அவளது வருகையில் சற்று ஐயம் கொண்டிருப்பதாகவும் சொன்னார். மேலும் அவள் செய்யும் பஞ்சாயத்துகள், திரை மறைவு அடிதடிகள், மீன் கடை வைத்திருப்பது என்று சிலபலவற்றை எடுத்துக் கூறி இனி அவள் அவனை தேடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் வீட்டை காலி செய்துவிடுமாறு கூறினார். 

அதில் வீட்டை காலி செய்வது மட்டுமே அவனுக்கு சாதகமாய் இருந்தது. ஏனைய விஷயங்களோ அவளின் வருகை தேவையில்லாத பல கண்களை தங்கள் புறம் ஈர்த்து தங்களின் அமைதியான வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி, கல்லெறிய வசதியாக்கியது போல் தெரிந்தது.