*13*

வாசலை பார்ப்பதுமாய் ஓரமாய் இருக்கும் கூடையை பார்ப்பதுமாய் இருந்த சக்தியின் கவனத்தை காலடி சத்தம் கலைத்தது. நிமிர்ந்து பார்த்த சக்தி ஆசுவாசம் கொண்டவளாய் பெரிதாக புன்னகைத்து, “உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்மா. எனக்கு ஒரு உதவி ஆகணும் உன்னால.”

“காலையிலேயே போன் போட்டு கூப்புட்டிருக்கீங்க, உதவின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. என்னனு ஆடர் போடுங்க அக்கா.” என்று கேட்டவாறு அவளருகே வந்தாள் நிலா.

“நேத்தி பாப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீல்ல. சார் கூட வந்தாரே… அவங்க வீடு எங்கன்னு தெரியணும். பசங்களை விட்டு பாக்க சொல்லிடுவேன் ஆனா அது பாப்பாவுக்கு தொல்லையாகிடும்னு யோசிக்குறேன்.” என்று எதிர்பார்ப்பாய் நிலாவை பார்க்க, அவள் அசவுகரியமாய் விழித்து நின்றாள்.

துணுக்குற்ற சக்தி, “என்னாச்சுமா?”

“இல்லை அக்கா அது… சார் என் மேல ரொம்ப கோபமா இருக்காங்க. ஏற்கனவே அவங்களை விட்டு தள்ளி இருக்கணும்னு வார்ன் பண்ணாங்க. அதான் சொல்ல யோசனையா இருக்கு.” என்ற நிலாவுக்கே தன் பேச்சு அபத்தமாய் பட்டது. தான் சொல்லவில்லையென்றாலும் சக்தியே எளிதாய் கண்டுபிடிக்கும் வண்ணம் மிக அருகில் அடுத்த தெருவில் இருக்கிறது சக்திவேலன் வீடு. ஆனாலும் சக்திவேலனின் இறுகிய முகம் மனக்கண்ணில் மின்னி மறைய தயக்கமாய் நின்றாள் நிலா. 

ஓரிரு நொடி அமைதி காத்த சக்தி வெளியே எட்டிப்பார்த்துவிட்டு நிலாவிடம் பார்வை பதித்தவள், “விழி என் பொண்ணு. சில காரணத்தால நான் இங்க இப்படி இருக்கேன். நீ நேத்தி கூட்டிட்டு வரவும்தான் அவங்க இங்க இருக்காங்கனு தெரிஞ்சுது. ஸ்கூல்ல விழியை கொஞ்சம் பாத்துக்கமா. அவளுக்கு எதுனாலும் அவர்கிட்ட சொல்லிட்டு எனக்கும் உடனே சொல்லணும். அவளுக்கு நிழலா இருந்து பாத்துக்கோ. அதுக்காக அவளை தொந்தரவு எல்லாம் பண்ண வேண்டாம். உன்னை நம்பி இதை சொல்லியிருக்கேன் கவனமா இருக்கணும்.” என்று உண்மையை பட்டென்று உடைத்துவிட, திகைத்துப் பார்த்தாள் நிலா.

“அக்கா என்ன சொல்றீங்க. அது உங்க பொண்ணா?” என்றவள் குரல் உயர, கண்டிப்புடன் பார்த்த சக்தி, “விழிக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது நிலா. நீயா போய் அவகிட்ட தேவையில்லாததை பேசுறதையும் நான் விரும்பல. பார்வையால அவளை தொடர்ந்து பார்த்துக்கோ.” என்றதும் அவர்கள் வீட்டு விலாசத்தை தயங்காது பகிர்ந்தாள் நிலா.

“இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கணும். எங்கேயும் வெளில லீக் ஆகக்கூடாது. விழி அப்பாவுக்கு அதெல்லாம் புடிக்காது சரியா?” என்ற சக்தியின் அழுத்தத்துக்கு நிலாவின் தலை வேகமாக ஆடியது. 

“சரி கிளம்பு.” என்றதும் தலையசைத்து கிளம்பியவளை வழி மறிப்பது போல் வந்து நின்றான் ரவி.

அவனின் திடீர் வரவில் திடுக்கிட்டவள் இரண்டடி பின்னெடுத்து வைக்க, அவர்களை பார்த்த சக்தி தலையிலடித்துக்கொண்டாள்.

“சண்டை போடுறதுன்னா வெளில போய் போடுங்க. எனக்கு வேலை இருக்கு.” என்று துரத்துவதை போல் கையை வெளிப்புறம் நோக்கி வீச,

“அக்கா…” அழுகாத குறையாக முகத்தை சுருக்கி சக்தியை திரும்பி பாவமாய் பார்த்தாள் நிலா.

“இப்போ என்னா பண்ணிட்டேன்னு சீன் போடுற நீயி?” என்று ரவி முன்னே இரண்டடி வைத்து அவள் ஏற்படுத்திய தூரத்தை குறைக்க, சக்தி இன்று காக்க வரமாட்டாள் என்று புரிந்து ரவியின் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளிவிட்டு வெளியே ஓடினாள் நிலா.

“ஏய்…” அவள் செயலில் அதிர்ந்து நின்ற ரவி அவள் அழுத்தம் கொடுத்த தன் நெஞ்சுப் பகுதியை பார்த்துவிட்டு அவள் சென்ற திசையை நோக்க, பின்னிருந்து சக்தி சிரிப்பது செவி தீண்டவும் அவள் புறம் திரும்பி முறைத்தான்.

“நல்ல டேக்கா கொடுக்குற ஆளா புடிச்சிருக்க நீ…” 

“அவளை விடு. எனக்கு கொஞ்சம் சாமான் வேணும்.” என்று கொஞ்சம் பணத்தை அவனிடம் நீட்டியவள் மளிகை பட்டியலையும் கொடுக்க, அதை வாங்கி படித்துப் பார்த்தவன் கண்கள் விரிய நிமிர்ந்தான்.

“க்காவ்… ஒருவழியா இந்த பழைய சோறை மூட்டை கட்டிட்டு வகையா சமைச்சு சாப்பிட போறியா? நீ என்னாத்துக்கு கஷ்டப்படுற, என்னா வேணும்னு சொல்லு நம்ம தெருவுலேயே நல்லா சமைக்குற ஆளை புடிச்சு சுட சுட சமைச்சு வாங்கியாறேன்.”

“அதிகப்பிரசங்கிதனம் பண்ணாம போடா.” என்று அவன் கையை பிடித்து லேசாக தள்ள,

“எல்லாருக்கும் இன்னைக்கு என்னை தள்ளிவிடுறது தான் வேண்டுதலோ.” என்று முனகிக்கொண்டே வெளியேறினான் ரவி. 

அவன் சென்றதும் விரைந்து சமையலறை ஒதுக்கி வைத்தவள் காலையும் மதியமும் உண்ண வழக்கம் போல் அரிசி எடுத்து சோறு பொங்கி வைத்தாள். அரை மணி நேரம் கழித்து ஒரு பெரிய அட்டை பெட்டியில் மளிகை சாமான் அனைத்தையும் வாங்கி வந்து கொடுத்துவிட்டு சென்றான் ரவி. வேகமாக சிற்றுண்டியை முடித்துக்கொண்டவள் அனைத்தையும் சரி பார்த்து சமையலறையில் அடுக்கிவிட்டு நிமிர, யோசனையுடன் அவள்முன் நின்றான் ராஜா.

“ஏதேதோ புதுசு புதுசா நடக்குற மாதிரி இருக்கு?” என்று அவன் கேட்க, காதில் வாங்காதது போல் நகர்ந்த சக்தி, தன்னுடைய சிறிய அலைபேசியை எடுத்துக்கொண்டு கிளம்பலாம் என்பது போல் பார்க்க, “ அப்போ உன் முடிவுல மாற்றம் இல்லை?”

“இப்போ கிளம்புனா தான் மதியம் நேரமே வீட்டுக்கு வர முடியும். எனக்கு வேலை இருக்கு. நான் கடைக்கு போறேன் நீங்க எஸ்.ஐ பாத்து என்னனு விசாரிச்சிட்டு அப்படியே கவுன்சிலர் குடோன்ல எவ்வளவு சரக்கு இன்னும் இருக்குனு பாத்து எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடுங்க. இனி அவங்க குடோன் நமக்கு தேவையில்லைனு சொல்லிடுங்க.” அடுத்தடுத்து என்று பேசிக்கொண்டே வீட்டு சாவி எடுத்துக்கொண்டு வெளியே வர, ராஜாவும் வேறு வழியின்றி அவளை தொடர்ந்தான். 

வீட்டை பூட்டிவிட்டு ரவிக்கு அழைப்பு விடுக்க, அடுத்த சில நொடிகளில் ஆட்டோவுடன் வந்துவிட்டான் அவன். ராஜாவிடம் சொல்லிக்கொண்டு மீன்மார்கெட்டில் இருக்கும் அவளது கடைக்கு கிளம்பிவிட்டாள். செல்லும் அவளையே கவலையுடனும் யோசனையுடனும் பார்த்து நின்றான் ராஜா. அவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. இத்தனை வருடங்கள் அவர்கள் இருவரின் எண்ணங்களும் இலட்சியங்களும் நேர்க்கோட்டில் பயணப்பட, ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருந்தனர். இப்போது அவள் விலகிக்கொள்ளலாம் என்று சொல்லுகையில் தானும் விலகுவதா இல்லை இதை தொடர்வதா என்று யோசனையானான். 

அன்று கடைக்கு வந்தவர்களுக்கு தேவையானதை கொடுத்து பணம் பெற்று பரபரவென வேலையில் ஈடுபட்டிருந்தவள் அவ்வப்போது நேரத்தை பார்த்துக்கொண்டாள். மனம் நிலையாய் இல்லை, சக்திவேலனையும் கயல்விழியையும் சுற்றி சுற்றி வந்தது. வருடங்கள் ஐந்து ஆகிற்று அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருவேறு பாதையில் பயணிக்க துவங்கி. ஆனால் நேசம், அது அப்படியே இருக்கிறது என்று முந்தைய நாள் அவன் பார்வை கடத்திய செய்தியை இப்போது புரட்டிப்பார்த்து புன்னகைத்தாள் சக்தி. 

“இன்னைக்கு உன் முகம் வித்தியாசமா இருக்கே என்ன விஷயம் அக்கா?” என்று சுற்றி இருந்தவர்கள் கேட்டாயிற்று. தினம் பார்க்கும் அதே முகம்தான் என்று மதியம் வரை சமாளித்தாள். அதற்கு பிறகு நிலாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“இன்னைக்கு சாரும், கயலும் ஸ்கூலுக்கு வரலை அக்கா. இங்க விசாரிச்சேன், என்ன காரணம்னு பெருசா தெரியல. உடம்புக்கு எதுவும்னு நினைக்கிறேன்.” என்று அவள் சொன்ன பின் சக்தியின் கால் அங்கு நிற்கவே இல்லை. 

கடையில் வேலை பார்க்கும் பையனிடம் மொத்த வேலையையும் ஒப்படைத்துவிட்டு சற்று தள்ளி இருக்கும் சாலைக்கு வந்தவள் கடந்து சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள். சக்திவேலன் வீடு இருக்கும் தெருவை குறிப்பிட்டு அங்கு ஆட்டோவை செலுத்த சொல்ல, மனம் அவர்களை காணப்போகும் பதட்டம் கொண்டது. ஏன் இன்று இருவரும் பள்ளி செல்லவில்லை? உடலுக்கு ஏதாவது இருக்குமோ? நேற்றைக்கே கயல் அப்படி அலமலந்து போனாளே. அதனால் எதையாவது இழுத்துக்கொண்டாளோ? என்று தவித்தவள் தன் வருகையை அவன் எப்படி எடுத்துக்கொள்வான் என்று யோசியாமல் அவன் வீட்டு கதவை தட்டியிருந்தாள். 

இருவருக்கும் என்னவோ ஏதோவென்று தவித்த தவிப்பில் ஒன்றிரண்டு தலைகள் சக்திவேலன் வீட்டு மாடி ஏறும் அவளை யோசனையாய் பார்த்து கடந்து சென்றதை கவனிக்க தவறியிருந்தாள் சக்தி. அழைப்புமணி அடித்துவிட்டு படபடப்பாய் நின்றவளை சிறிது நேரம் காக்க வைத்தே கதவை திறந்தான் சக்திவேலன்.

ஓய்வில் இருக்கிறான் என்று கண்களில் மிச்சமிருக்கும் உறக்கமும் கலைந்து கிடக்கும் சிகையும் பறைசாற்றிட, “உங்க உடம்புக்கு எதுவும் இல்லையே? ஸ்கூல் போலையாம்?” என்று தவிப்பாய் கேட்டாள் சக்தி.

அவளை தன் வீட்டு வாயிலில் எதிர்பாராதவன் அதிர்ந்து நின்றது ஓரிரு நொடிகளே. மீண்டுகொண்டவன் அவளை தாண்டி சுற்றி முற்றி பார்வையை ஓட்டிவிட்டு, “எதுக்கு இங்க வந்த?” என்று கேட்டிட சப்பென்று ஆனது அவளுக்கு.

“உள்ள கூப்பிட மாட்டிங்களா? விழி எங்க? அவளுக்கு எதுவும் இல்லையே? ஸ்கூலுக்கு போயிருப்பீங்க, சாயந்தரம் நீங்க வீட்டுக்கு வர நேரம் உங்களுக்கும் பாப்பாவுக்கும் எதாவது செஞ்சி எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வரலைன்னு சொன்னாங்க. அதான் இப்போவே ஓடி வந்தேன். என்னாச்சு?” அவன் எதிர்ப்பை பெரிதுபடுத்தாது அவர்களின் நலம் வேண்டி நிற்க, அவள் அங்கு நிற்பதே அவனுக்கு உவப்பாய் இல்லை.

“கிளம்பு.” என்றான் தயவு தாட்சண்யமின்றி.

“ஏங்க” இம்முறை அவன் விழிகள் காட்டிய அந்நியத்தன்மையில் அதிர்ந்து பரிதவித்தவளாய் விழிகள் விரிய, அதில் கண்ணீர் ஊற்றெடுக்க நின்றாள்.

என்ன முயன்றும் அவளது கலங்கிய தோற்றம் கண்டு கலங்கும் மனதை கட்டுப்படுத்த முடியாது தணிந்தவன், “நீ எங்களை பாக்க வர்றதோ எங்களுக்கு ஏதாவது செய்ய ட்ரை பண்றதோ எதுவுமே ஒத்துவராது. புரிஞ்சிகிட்டு ஒதுங்கிடு.”

“இத்தனை வருஷம் ஒதுங்கித்தான இருந்தேன்.” 

“இனியும் அப்படியே இருந்துடு. நீ இங்க இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா இந்த ஊருக்கே வந்திருக்க மாட்டேன்.” என்ற அவன் சொற்கள் ஈட்டியாய் இறங்கி உள்ளத்தை பதம் பார்க்க, நிற்கவே தெம்பு இல்லாதவள் போல் இரும்பு கதவின் கம்பியில் சாய்ந்துகொண்டாள் சக்தி.

“என்னை தேடலையா உங்களுக்கு?” பலகீனமாய் வந்த அவள் கேள்வி அவனை தடுமாற செய்தது. அவளை தேடாமல் அவனது நாள் என்றும் முடிந்திருக்கிறதா என்ன? அவளின் இல்லாமையை ஏக்கமாக மாறவிடாமல் அவள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவன் அவன். எப்படி அவள் வாசத்தை தேடவில்லை, அதற்கு நொடிப்பொழுதும் ஏங்கவில்லை என்று சொல்வான். மெளனமாய் அவன் நிற்க, அதுவே அவன் மனதை அவளுக்கு உணர்த்தியது. 

“எல்லாத்தையும் விட்டுறேன். நீங்க, நான், விழி மூணு பேரும் பழையபடி சேர்ந்து இருக்கலாம். நீ… நீங்க இல்லாம இந்த அஞ்சு வருஷமும் எனக்கு நானே வேஷம் போட்டு வாழ்ந்துட்டேன். நான் நானா உங்ககிட்ட மட்டும்தான் இருக்க முடியும். எனக்கும் அழகி வேணும்.” நடுக்கத்திற்கு இடையே வந்த வார்த்தைகளுக்கு அவன் பதிலளிக்கும் முன் அவள் அங்கிருப்பதை தெரிந்துகொண்டு அவசரமாக மாடியேறி வந்தான் அவள் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

“இங்க இருக்கியா அக்கா… நம்ம ரவியை போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு. ராஜா அண்ணன் உன்னைத்தான் தேடிட்டு இருக்கு, சீக்கிரம் வா க்கா… ஏதோ ஷீலாவதியாம்… கவுன்சிலர் தான் நம்ம பக்கம் கையை காமிச்சிருப்பாருனு நம்ம பசங்க பேசிக்குறாங்க.” பதட்டமாய் அவன் கூற, அவளை அதிருப்தியாய் பார்த்த சக்திவேலனோ படாரென மரக்கதவை சாற்றிவிட்டான்.

அதன் சத்தத்தில் அதிர்ந்த சக்தி அப்படியே பிரம்மை பிடித்தது போல் சாற்றப்பட்ட கதவை வெறித்து நிற்க, “அக்கா…” என்றவனின் அழைப்பில் முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் சக்தி.