ஊர் அடங்கி சாய்ந்த வேளையில் அவளெதிரே அமர்ந்திருந்தான் ராஜா. கண்களும் கன்னங்களும் உப்பி, நாசி சிவந்து, கலைந்த கோலமாய் இருந்தவள் அவளாகவே வாய் திறக்கட்டும் என்று அமைதியாய் இருந்தான். வழக்கமாக இது போன்ற பின்னிரவு நேரங்களில் அவள் வீட்டிற்கு வருவதை தவிர்த்து விடுபவன் இன்று ஒரு வேலை சம்மந்தமாக பேச வந்தபோது அவளின் உருக்குலைந்த நிலை கண்டு அங்கேயே அமர்ந்துவிட்டான். பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயம் எனில் அவளே சொல்வாள் என்று அமைதியாக அவளருகே உறுதுணையாக இருந்தான்.
அரவமின்றி இறங்கிய கண்ணீர் நிற்கமாட்டேன் என்று வீம்பு பிடிக்க, அதை துடைத்த வண்ணம் நிமிர்ந்து ராஜாவை பார்த்தாள் சக்தி.
“ஏதாவது சொல்லனுமா சக்தி?”
“நான் என்ன பண்றேன் எப்படி இருக்கேனு கூட கேக்கல. என்னை வெறுத்திருப்பாரா?” இதழ்கள் நடுக்கத்தின் ஊடே கரகரப்பாய் அவள் கேள்வி வந்து விழ, அவனுக்கு என்னவென்றே புரியவில்லை.
“சக்தி? என்னாச்சு?” மெல்ல பதட்டம் சூழ்ந்தது ராஜாவை. சக்தி இப்படியெல்லாம் உடைந்து போய் பார்த்து வருடங்கள் இருக்கும். இப்போது அவள் உறுதியை உடைக்கும் அளவுக்கு அப்படி என்ன ஆகிற்று என்று யோசித்தவனுக்கு பதில் கிடைப்பது போல் இருந்தது. சக்தி வாய்மொழியால் அதை உறுதிப்படுத்தினாள்.
“இங்கேயா?” அதிர்ந்து பார்த்தான் ராஜா. அவனுக்குள் பல யோசனைகள் அணிவகுத்தது.
மாலை கயல்விழியை நிலா அழைத்து வந்ததையும் சக்திவேலன் பின்னோடே தேடிக்கொண்டு வந்ததையும் சொன்னவள் தடுமாறும் விரல்களால் விழிநீரை துடைத்தாள்.
“உன்கிட்ட அவர் எதுவும் பேசலையா சக்தி?”
“பேசலையே? ஆனா நானும் பேசல… நிலா இருந்தா, விழிக்கும் என்னை அடையாளம் தெரியல… நான் என்ன பண்ண?” இயலாமையோடு அவள் கைவிரிக்க,
“பேசி அவங்க யாருனு நீ காட்டிக்காததும் நல்லதுதான் சக்தி.” என்று சொல்லி அவளை திகைக்க வைத்தான் ராஜா.
சக்திவேலனை கண்ட அதிர்வில் கைகள் கட்டப்பட்டு அவர்களிடம் எதுவும் பேசமுடியவில்லையே என்று அவள் கலங்கி தவிக்கும் வேளையில் அவன் இப்படி சொல்லவும் கோபம் வந்தது சக்திக்கு.
“இந்த தொழில்ல இறங்குறதுக்கு முன்னாடி இருந்த அழகுராணி இல்லை இப்போ நீ… நிழல் உலகம், நிஜ உலகம் ரெண்டுலையும் சக்தின்னு ஒரு அடையாளம் இருக்கு. அந்த அடையாளம் வெளில பெருமையா தைரியமா சொல்லிக்கிறது இல்லைனு உனக்கே தெரியும். யார் வேணும்னாலும் நம்மள கண்காணிச்சிட்டு இருக்கலாம். அப்படி நம்மள நோட்டம் விடுற ஆளுங்க கண்டிப்பா லேசுப்பட்டவங்களா இருக்க மாட்டாங்க. பழி பாவத்துக்கு அஞ்சாதவங்களா இருப்பாங்க.” அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு அவன் நிதர்சனம் பேச, கசப்பும் விரக்தியும் படர்ந்தது அவள் முகத்தில்.
“திரை மறைவுல நாம விக்குற சரக்கால பெரிய ஆளுங்களோட சகவாசம் இருக்குற மாதிரி ஒருசிலரோட கண்காணிப்பும் நம்மள தொடர்ந்துட்டு இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி உணர்ச்சிவசப்பட்டு காட்டிக்கொடுத்துடாத. வெளியுலக சக்தி இரத்த சொந்தம் யாருமில்லாத தனியாள். அவ அப்படி இருக்குறதாலதான் யாரையும் பிணையா வச்சி அவளை வளைக்க முடியாம அவளோட கோரிக்கைக்கு வியாபாரத்துக்கு எல்லாம் வளைஞ்சு கொடுத்து போறாங்க. அது எல்லாத்தையும் கெடுத்துகிட்டு உன்னோட புருஷன் புள்ளைக்கு ஆபத்தை நீயே விலை கொடுத்து வாங்கபோறியா?” என்று ராஜா மேலும் நடப்பை எடுத்துக்கூற, சக்தியின் கண்கள் இயலாமையில் மீண்டும் கசிந்தது.
“அவங்களை பாக்காத வரைக்கும் எப்படியோ இருந்துட்டேன். இப்போ பக்கத்துல இருக்காங்கனு தெரிஞ்சும் எப்படி எதுவும் தெரியாத மாதிரி இருக்குறது? என்னால முடியாது. யார் யாருக்கோ யோசிச்சு இங்க ஒருபக்கம் என்னால முடிஞ்ச நல்லது பண்ணிட்டு இருந்தா அங்க என் பொண்ணு நான் இருந்தும் தவிச்சிட்டு இருக்கா…” என்றவள் ஆழ மூச்செடுத்து வேகமாக தலையசைத்தவள், “இல்லை இதுக்கு மேல முடியாது. எனக்கு இது எதுவும் வேண்டாம்… என்னோட விழியும் என்னோட சக்தியும் போதும்…”
“ஏன் முடியாது… எங்கேயோ போய் புழைச்சிக்கிறோம். என் குடும்பம் என்கூட இருப்பாங்கல்ல… எம் பொண்ணு இழந்தது எல்லாத்தையும் நான் ஈடு செய்ய வேண்டாமா? அவர்… அவரையே நினைச்சிட்டு இருக்குற நான்? எனக்கு அவங்க வேணும்…”
“ம்ச்… அப்படி எங்கேயோ போய் புழைச்சிக்க முடியும்னு நம்பியிருந்தா உன் புருஷன் உன்னை விட்டிருக்கவே மாட்டாரு சக்தி. அப்போவே ஏத்துக்காதவர் இப்போ எப்படி வருவாருனு நினைக்குற?” என்று வலிக்க கேட்க,
“அதெல்லாம் வருவார்… எனக்காக வருவார்…” என்று சொல்லும்போதே அவள் விழிகள் அடுத்த சுற்று சுடுநீரை இறக்கி இருந்தது.
“அப்படி உன்கிட்ட வர எண்ணம் இருந்திருந்தா உன் பொண்ணுகிட்ட உன்னை பத்தி சொல்லி வளத்திருப்பாருல்ல… உன் பொண்ணுக்கு நீ யாருனு தெரில சக்தி. தெரிய வைக்கவும் உன் வீட்டுக்காரர் விருப்பப்படல. அவர் அப்படியே இருக்குற மாதிரிதான் தெரியுது. நீ அவசரப்பட்டு எதுவும் பண்ணி பிரச்சனையை இழுத்து விட்டுக்காத. பொறுமையா யோசி.” என்று அவன் பேச, அதிருப்தி காட்டியவள்,
“உங்களுக்கு என் தவிப்பு புரியல, விடுங்க. பந்தம் பாசம்னு பாதுகாப்பான கூட்டுக்குள்ள இருந்த அழகுராணி இல்லை இப்போ. எந்த சூழ்நிலையையும் சமாளிச்சு மேல வர தைரியமும் சாமர்த்தியமும் இந்த சக்திக்கு இருக்கு. என்னையும் பாத்துப்பேன் குடும்பத்தையும் விட்டுற மாட்டேன்.” என்று தீர்மானமாய் பேசியவளை மறுப்பாய் பார்த்தான் ராஜா.
“நீ எமோஷ்னலா முடிவெடுக்குற. அவசரப்படாம ஆற அமர உக்காந்து யோசி. முதல்ல உனக்குள்ள இருக்கிற அழகியை வெளில தள்ளிட்டு சக்தியா யோசி. அப்போ நீ என்ன முடிவெடுத்தாலும் நான் துணையா இருப்பேன் சக்தி.”
அவனின் அறிவுரைக்கு என் முடிவு இதுதான் என்பது போல் பார்த்தாள் சக்தி.
“தப்பு சக்தி. சக்திவேல் சாரை விடு. உன் பொண்ணோட பாதுகாப்பு பத்தி யோசி. உனக்கு ஒரு பொண்ணு இருக்குனு தெரிஞ்சா விழிக்கு என்ன ஆபத்து வேணும்னாலும் வரலாம்.” என்று மீண்டுமாய் சொல்லிப்பார்த்தான் ராஜா.
“எத்தனையோ பொண்ணுங்களை காப்பாத்தி நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்கேன். என் பொண்ணை விட்டுடுவேனா?” குரலில் கலக்கத்தோடு தீர்க்கமும் இருந்தது.
“சக்தி…” என்று அழுத்தமாய் அவன் அழைத்ததும் அவள் இதழ்கள் லேசாக வளைந்தது.
“இருக்குற நிலைமைக்கு சிரிப்பு வேண்டியிருக்கா உனக்கு?” என்றான் ராஜா கடுப்பாக.
“எல்லாரும் என்னை சக்தி சக்தினு கூப்பிடும் போது அவரே என்கூட இருக்கிறதா நினைச்சிப்பேன். இன்னைக்கு அவர் என்கிட்டவே இருக்காரு.” என்றவள் கண்களில் மத்தாப்பு வண்ணங்கள்.
“…”
“அப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்காரு. ஆனா கண்ணாடி ஒன்னு எக்ஸ்டரா வந்திருக்கு. கண்ணுல எதுவும் பிரச்சனை இருக்குமோ ஆனாலும் அவருக்கு அந்த கண்ணாடி நல்லா இருக்கு.” என்ற சக்தி அழகியாக மாறி அவளின் இணையை இரசிக்கும் பாவனை குடிகொண்டது.
“…”
“அங்கங்க முடி நரைக்க ஆரம்பிச்சிருக்கு.” என்றவள் இதழ்கள் அவனின் தற்கால நினைவில் புன்னகை புரிந்தது.
“…”
“அப்போ கொஞ்சம் பூசுனாப்புல இருப்பாரு. இப்போ ஜம்முனு இருக்காரு.”
“…”
“விழியை தனியா வளக்க சிரமப்பட்டிருப்பாங்கள்ள?”
“சக்தி… சக்தி… அவர் நினைச்சிருந்தா நீ அழகியாவே இருந்திருக்கலாம். ஆனா அவர் வேணாமுன்னுட்டார். அப்போ அவர் சொன்ன காரணமெல்லாம் இன்னும் அப்படியே தான் இருக்கு, சொல்லப்போனா இப்போதான் அவருக்கு பிடிக்காத விஷயத்தையே முழு நேர வேலையா செஞ்சிட்டு இருக்க. இப்போ மட்டும் எப்படி ஏத்துப்பாரு?” எங்கே சக்தி உணர்ச்சி மிகுதியில் முடிவெடுத்து அவளை சார்ந்தவர்களுக்கு அது பாதகம் ஆகிவிடுமோ என்ற ஐயத்தில் சக்தியை சமாதானப்படுத்த முயன்றான் ராஜா.
“அதுக்காக அப்படியே விடசொல்றீங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஆழ்ந்து சுவாசித்தவள், “அன்னைக்கு இருந்த சூழ்நிலையில அழகிக்கு என்ன செய்யுறது ஏது செய்யுறதுனு புரியாம ஏதோ பண்ணி இதோ இப்போ இப்படி சக்தியா மாறியிருக்கா. இந்த சக்திக்கு என்ன பண்ணனும்னு தெரியும். அதை அவருக்கு புரிய வைப்பேன். நீங்க கிளம்புங்க.” அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல் முகத்தை அழுந்த துடைத்து வாசல் நோக்கி அவனுக்கு கைகாட்ட, அவள் முடிவில் அதிருப்தி கொண்டவன் சொல்ல வந்ததை விடுத்து விருட்டென கிளம்பினான்.
அழுது வடிந்து அடுத்து என்ன என்று புரியாது இருந்தவளுக்கு அவனிடம் பேசிய பின் தெளிவு வந்திருக்க, எப்போது விடியும் என்று அந்நொடியிலிருந்தே காத்துக் கிடந்தாள்.
விடியலும் வந்தது கூடவே காவல்துறையினரும் அவள் வீட்டு வாசலை தட்டியிருந்தனர். பெரிதாக அதிர்வோ பதட்டமோ இன்றி அவர்களை எதிர்கொண்டவள் என்ன என்பதாய் பார்த்தாள்.
“இந்த தெருவுல நிறைய திருட்டு போகுதுனு புகார் கொடுத்திருக்கீங்க. விசாரிக்கணும்.” என்றனர் வந்திருந்த இரண்டு காவலர்கள்.
வீட்டு நிலைக்கதவை விட்டு வெளியே வந்தவள், “காணாம போச்சுன்னு புகார் கொடுத்த என்கிட்ட என்ன விசாரணை?” என்று கைகட்டி கேட்க, அந்த இரு காவலர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“உங்க கணக்கு எல்லாம் கரெக்ட்டா கொடுத்துடுறோம், ஆனாலும் எங்களுக்கு ஒன்னுன்னா நீங்க தள்ளி நின்னு வேடிக்கை பாக்குறது சரியா?” எனும்போதே, “க்காவ் என்னா பிரச்சனை?” என்று வந்துவிட்டான் ரவி.
“விசாரிக்கணுமாம்.” என்றாள் சக்தி அழுத்தமான குரலில். ரவி புருவம் சுருக்க,
“இங்க பாரு சக்தி உன்னை மீறி இந்த ஏரியாவுல திருட்டு போக வாய்ப்பே இல்லைனு ஒட்டுமொத்த பேருக்கும் தெரியும். ஆனா எதையோ மனசுல வச்சிக்கிட்டு கேஸ் கொடுத்திருக்கீங்க. அதை விசாரிக்காம நாங்க க்ளோஸ் பண்ண முடியாது. விசாரிச்சாலும் ஒன்னும் சிக்காது, எங்க நேரம் தான் வேஸ்ட். கேஸை நீயே வாபஸ் வாங்கிக்கோ.” என்றார் வந்திருந்த காவலர்.
“அதெப்படி விசாரிக்காம திருட்டு போகலைனு நீங்க சொல்லலாம்.” என்று துள்ளினான் ரவி.
“சக்தியை பத்தி தெரிஞ்சி சக்திக்காக பொறுமையா போய்ட்டு இருக்கோம். இடையில இப்படி குதிச்சா உள்ள தூக்கி போட்டிருவோம் பாத்துக்கோ.” என்று ரவிக்கு மிரட்டலும் வந்தது அவர்களிடமிருந்து.
“அவன் கேக்குறதுல என்ன தப்பு இருக்கு? நீங்கதான் கடமை கண்ணாயிரம்னு என் வீட்டையே சோதனை போட்டீங்கல்ல… இப்போ தொலைஞ்ச பொருளை கண்டுபிடிக்க வலிக்குதா?” என்று சக்தியும் அழுத்தமாய் கேட்டாள்.
“நம்ம எஸ்.பி பத்தி தெரிஞ்சும் இப்படி சொல்லலாமா நீ? ஏதோ ஷீலாவதி அதுஇதுனு அன்னைக்கு மேலிடத்துலேந்து சாருக்கு அழுத்தம் வரவும்தான் நார்காட்டிக் டிபார்ட்மென்ட் கூட சேர்ந்து நாங்களும் உன் வீட்டை சோதனை போடவேண்டியதா போச்சு. இங்க ஒன்னும் கிடைக்கலைனதும் எஸ்.பி சார் ‘என்னை மீறி என் ஏரியாவுல எதுவும் சட்டத்துக்கு புறம்பா நடக்காதுனு’ நல்லா கொடுத்து அனுப்பிச்சார். இப்படி நாங்க உன் பக்கம் இருக்குறப்போ எங்களையே அலைக்கழிக்கிறது நல்லா இருக்கா?” என்றுதான் பேரம் பேசிக்கொண்டிருந்தார் அந்த காவலர்கள்.
அவர்கள் கொடுத்த தகவலை கேட்டுத்தான் சக்தி கொஞ்சம் திகைத்தாள். சோதனை செய்ய வந்திருந்த அனைவரும் காவல் உடையில் இருந்த சிறப்பு பிரிவினர் என்று நினைத்திருக்க, வந்தது போதை தடுப்பு பிரிவிலிருந்த காவலர்கள் என்றதும் விஷயம் அவ்வளவு தூரம் கசிந்திருக்கிறதா என்றுதான் யோசித்தாள்.
“நார்காட்டிக்கா? அவங்க வர்ற வரைக்கும் நீங்க என்ன வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்களா? எங்களுக்கு சின்ன தகவல்கூட கொடுக்காம நேரா க்க்கா வூட்டுக்குள்ள புகுந்தாச்சு. மாசம் ஆனா எண்ணி காசு வாங்குறீங்கல்ல?” என்று ரவி எகிற, தகவல் அறிந்து ராஜா விரைந்து அவ்விடம் வந்து சமாதானம் செய்தான்.
“நார்கட்டிக்லேந்து எல்லாம் வருவாங்கனு எங்களுக்கே தெரியாது. திடீர்னு ஏரியா போலீஸ் சப்போர்ட் வேணும்னு நின்னுட்டாங்க. தொடர்ந்து ஒருவாரம் இருந்து கண்காணிச்சிட்டு தான் அமைதியாகி இருக்காங்க. அவங்க கண்காணிப்பு குறையவும்தான் நாங்க இங்க வந்து எல்லாம் சொல்லிட்டு இருக்கோம். நீ பாத்து பண்ணிவிடு சக்தி. இல்லை முடியாதுன்னா அதுக்கும் சரிதான். நாங்க எஸ்.பிகிட்ட சொல்லிடுறோம் நீங்க பேசிக்கோங்க.” என்ற காவலர்களையும் பேசி அனுப்பி வைத்தான் ராஜா.
அவர்கள் கிளம்பவும் யோசனையுடன் உள்ளே வந்தனர் மூவரும்.
“நான் சொன்னேன்ல நம்மள கண்காணிக்குறாங்க எதா இருந்தாலும் யோசிச்சு பண்ணனும்னு. இப்போவாச்சு புரியுதா சக்தி உனக்கு?” அமைதியை கலைத்து அழுத்தமாக கேட்டான் ராஜா.
“நான் கண்டுபுடிக்குறேன்… எல்லாம் அந்த புதுசா வந்த குட்டி சாத்தான் வேலையா தான் இருக்கும். இழுத்து நாலு சாத்துனா உண்மையை கொட்ட போறா…” என்று ரவி நிலாவை நாசுக்காய் சொல்ல,
“அவளை விடவே மாட்டியா நீ?” என்று அலுத்துக்கொண்டாள் சக்தி.
“அந்த பொண்ணை விட்டுட்டு உருப்படியா போய் எதையாவது கண்டுபுடி. கிளம்பு முதல்ல… நான் எஸ்.பியை பார்த்து பேசிக்குறேன்.” என்று ராஜா ரவியை அனுப்பிவைத்துவிட்டு சக்தியை அர்த்தமாய் பார்த்தான்.
“இன்னும் உன் முடிவு அப்படியே தான் இருக்கா சக்தி? இந்த போலீஸ், விசாரணை, நார்காட்டிக்ஸ் இதெல்லாம் பார்த்து வளரணுமா விழி?”
“நிறுத்திடலாம். எல்லாத்தியும் நிறுத்திடலாம்.” என்று சொல்லி அசராமல் அதிரடித்தாள் சக்தி.
சூரியன் கூட மேற்கில் உதிக்கலாம் ஆனால் சக்தியின் முடிவை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று திண்ணமாய் நம்பினான் ராஜா. காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த ஒருவழிப் பாதை அவர்களாக விரும்பி ஏற்றது இல்லை. சூழ்நிலை கைதியாய் ஒருமுறை அறியாது உள்நுழைந்து வெளியே வரமுடியாது வாழ்க்கை இழந்து, கடற்கரைக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் கலங்கி தொலைந்த பலருக்கு வெளிச்சமாக வளர்ந்து நிற்கிறார்கள் இந்த சக்தி கூட்டத்தினர்.