*11*

“அக்கா, இவங்க கயல் பாப்பாவோட அப்பா, எங்க ஸ்கூல்ல சயின்ஸ் டீச்சரா இருக்காங்க.” என்று நிலா சக்திவேலனை காண்பித்து சக்தியிடம் சொல்லியவள், “சார் இவங்கதான் என்னை காப்பாத்தி வேலையில் சேர்த்துவிட்டு இந்த நிலைமையில வச்சிருக்காங்க. சக்தி அக்கா.” என்று சக்திவேலனிடம் அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

இருவருக்குமே அவள் சொல்வது எதுவும் சிந்தையில் ஏறவில்லை. பல வருட பிரிவிற்கு பிறகு எதிரே நிற்கும் தங்கள் துணை பார்வை விட்டு மறைந்து விடக்கூடாது என்று கண்சிமிட்டவும் அஞ்சி இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருந்தனர். 

இவள் தான் என் உலகம், இவன் தான் இனி எல்லாமே என்று ஈருடல் ஓருயிராய் அன்பில் கரைந்து, காதலில் கசிந்துருகி, திகட்ட திகட்ட வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாய் அவர்களின் விழி… பத்து மாதம் சுமந்து அருமை பெருமையாய் பாசம் கொட்டி வளர்த்த தன் கயல்விழியை கண்ணெதிரே கண்டும் அவளுடன் நேரம் செலவழித்த போதிலும் அவளை இனம்காண முடியா தன் நிலை எண்ணி கழிவிரக்கம் பிறக்க, சக்தியின் விழிகளைத் தாண்டி சூடாய் இறங்கியது கண்ணீர். 

“அக்கா என்னாச்சு? கண்ணுல எதுவும் விழுந்துடுச்சா?” சக்தியின் கண்ணீரைப் பார்த்து நிலா துணுக்குற்றுக் கேட்க, நிதர்சனம் உணர்ந்தவள் கண்களை வேகமாக துடைத்துக்கொண்டான். சக்திவேலனும் அவளிடமிருந்து பார்வை விலக்கிக்கொண்டான்.

இத்தனை வருடங்கள் கழித்து தன் அழகியை பார்த்ததும் அப்படியே அவளை அள்ளி எடுத்து கட்டிக்கொள்ள துடித்தது மனம். கைகளில் மகள் இல்லையென்றால் அதைத்தான் செய்திருப்பானோ? மகள் இருக்கவும் அழகியின் பார்வைக்கு சரிக்கு சரியாய் இவனும் அதில் தொலைந்து போக, சக்தி கண்களை துடைத்து நிதானத்திற்கு வரவும் அவர்களுக்கிடையே இருக்கும் விரிசல் நினைவுக்கு வந்தது. உடன் அழையா விருந்தாளியாக அவளின் தற்சமய அடையாளமும் முதன்மையாய் அறிவை எட்டியது. 

அவ்வளவுதான் தன் இணையைக் கண்டதும் இளகி இளைப்பாற தயாராய் இருந்த உடல் அப்படியே இறுக்கமாக மாற, கயல்விழியை இறுக்கிக் கொண்டவன் விருட்டென அங்கிருந்து கிளம்பிவிட்டான். தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை ஆசையாய் கட்டிய மனைவியை திரும்பியும் பாராது மகளை பைக்கில் அமர்த்தி வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான் சக்திவேலன். அவன் அப்படி செல்வது கருத்தில் பதிந்தாலும் கண்டுகொண்டது போல் காட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றாள் சக்தி.

“அக்கா என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே நிலா அவளை பின்தொடர, குளியறைக்குள் புகுந்து கொண்டாள் சக்தி.

இரண்டு மூன்று முறை முகத்தில் நன்றாக நீர் அடித்து முகத்தை கழுவி வெளியே வந்தவள் முகத்தை நிலாவுக்கு காட்டாது புடவை முந்தானை கொண்டு துடைத்துக்கொண்டே, “காத்துல பக்கத்து வீட்டு குடிசை ஓலை வந்திருக்கும் போல… கண்ணு நல்லா உறுத்துது.” என்ன முயன்றும் குரலில் வெளிப்பட்ட கரகரப்பை அவளால் மறைக்க முடியவில்லை. 

நிலா அதையெல்லாம் கவனித்தது போல் தெரியவில்லை, சக்தியிடம் விரைந்தவள், “கண்ணை காமிங்க அக்கா நான் பாக்குறேன்.” என்று அவள் முகத்தை பற்றப் போக, விலகினாள் சக்தி.

“நான் பாத்துக்குறேன்மா. நீ போய் ரெஸ்ட் எடு.” என்று அவளை அனுப்பப்பார்த்தாள்.

“டாக்டர்கிட்ட வேணும்னா போலாமா அக்கா? எதுவும் ஆகிடப்போகுது.” என்று நிலா தவிப்பாய் நிற்க, அவளை அனுப்பும் பொருட்டு கண்களை அழுந்த துடைத்த சக்தி கண்களை நன்றாக விரித்து காண்பிப்பது போல் செய்து, “இப்போ நல்லாயிருக்கேன். நீ கிளம்புமா. ரவிகிட்ட ஒரு வேலை சொல்லியிருக்கேன் அவன் வந்துடுவான் இப்போ.” என்று சொல்ல, அதற்கு மேல் அங்கு நிற்பாளா நிலா.

நிலா வெளியேறிய நொடி வேகமாக சென்று கதவடைத்த சக்தி ஓய்ந்துபோனவளாய் கதவில் சாய்ந்து மடிந்து அமர்ந்தாள். மனதின் இறுக்கமும் வேதனையும் விழிகளின் வழியே கண்ணீரை வெளியேற்றி தன் புழுக்கத்தை குறைக்க முயன்றது. ஆனால் அது குறைவதற்கு பதிலாக அதிகரித்து நெஞ்சு அடைப்பது போலிருக்க வேகமாக ஓடிச்சென்று தண்ணீர் பருகினாள். உடையில் கொஞ்சம் தொண்டையில் கொஞ்சமென்று நடுங்கும் கரத்துடன் அவள் தண்ணீரை சாய்க்க, அது தொண்டையினுள் செல்லாமல் வெளியேறி கழுத்தை நனைத்து கீழிறங்கியது. நடுங்கும் கரத்திலிருந்து டம்பளரும் நழுவியது. 

உணர்ச்சி மிகுதியில் அமைதியாக இறங்கிய கண்ணீர் அரவம் கொண்டு விம்மலும் விக்கலுமாய் வெளிப்பட, கைகளால் வாயை பொற்றி தன்னை சமன்செய்ய முயன்றாள். இன்று அம்மா என்ற சொல்லுக்கே உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு  எப்படி அழுதாள் இதுபோல் எத்தனை நாட்கள், வருடங்கள் நான் இல்லாமல் என் குழந்தை எத்தனை தவித்திருப்பாள்… பெற்றவள் நான் உயிரோடு இருந்தும் என் பெண் தவிக்கிறாளே ஐயோ என்று மனம் அரற்றி கேவி அழுதவளை தேற்றுவார் யாருமில்லை. சிகை கலைந்து பொட்டு உதிர்ந்து சிலமணி நேரங்களில் ஒடிந்துபோன தோற்றம் கொண்டவளாய் ஒருகட்டத்தில் அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள் சக்தி… சக்திவேலனின் அழகி.

“அப்பா எங்க போயிருந்தீங்க? அங்க நான் மட்டும் தனியா இருந்தேன் பயந்துட்டேன்.” தந்தையின் மனம் புரியாது வண்டியை கிளப்பியவுடன் கேள்வி கேட்டிருந்தாள் கயல்.

முதலில் மகள் கேட்பது அவன் காதிலே விழவில்லை. அழகியை நேருக்கு நேர் பார்த்ததை இன்னுமே நம்பவியலாமல் அந்த நிகழ்வையே மனம் திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்து பார்த்தது.

“அப்பாபா…”   

மகள் இரண்டொரு முறை அழைத்தும் அவன் செவி சாய்க்கவில்லை. அனிச்சையாக வீடு வந்து இறங்கி வண்டியை நிறுத்திவிட்டு மாடியெறி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே வந்தவன் அப்படியே பொத்தென்று கீழே அமர, அவனையே விசித்திரமாக பார்த்தாள் கயல். இயல்பாய் செய்யும் அனைத்தையும் அவன் செய்தாலும் அவள் கேள்விக்கு என்றுமே மெளனம் பதிலாய் கிடைத்ததில்லை. இன்று தான் கேட்கும் கேள்விகள் தந்தையின் காதில் விழவில்லையோ என்று எண்ணிக்கொண்டே அவன் திறந்துவிட்ட கதவை அடைத்து அவனருகே சென்று மண்டியிட்டு அமர்ந்த கயல். தந்தையிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக அப்படியே அவன் மீது கயல் சாய்ந்துகொள்ள, கனவிலிருந்து விழிப்பவன் போல் திடுக்கிட்டவன் நிமிர்ந்து பார்த்தான். வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று ஆசுவாசம் பிறக்க, பெருமூச்செடுத்தவன் கயலை தூக்கி அப்படியே மடியில் அமர்த்திக்கொண்டான்.   

கயல் மீண்டும் அவன் ஏன் பள்ளியில் இல்லை என்று கேள்வி எழுப்ப மற்றொரு பள்ளி பெயரை சொன்னவன், “அங்க சயின்ஸ் எக்ஷிபிஷன் பாப்பா. வேற சார் போறதா இருந்துச்சு அவர் எமெர்ஜென்சினு மதியம் லீவ் எடுத்துட்டாரு. அதான் அப்பா போக வேண்டியதா போச்சு. சீக்கிரம் வந்துடலாம்னு பாத்தா டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்… உன்னை வெய்ட் பண்ண சொல்லலாம்னா யார் நம்பரும் அப்பாகிட்ட இல்லை.” என்றவன் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

அறிவியில் கண்காட்சி முடிந்து எத்தனை விரைந்து கிளம்பியும் அவனால் நேரத்திற்கு பள்ளிக்கு வரமுடியவில்லை. கயல் தனக்காக காத்திருப்பாளே, அங்கு ஒருவரையும் தெரியாதே, தனியாய் என்ன செய்வாளோ, யாரிடம் பார்க்கச் சொல்வது என்று தவித்த தவிப்பை அவன் மட்டுமே அறிவான். நிலாவும் பராமரிப்பாளரும் மகள் தனியாய் இருக்கிறாள் என்ன செய்வது என்று கேட்டு அழைக்கும் வரை அவன் இதயம் தப்பித்தப்பி துடித்தது. பிறகும் நிலாவை நம்பமுடியாமல் சுவாதியிடம் அழைத்துச் சொல்லி கயல் ஆட்டோவில் வீடு செல்லும் வரை அலைபேசி வாயிலாக பேச சொல்லியிருந்தான். அவன் பயந்தது போல் அசுர வேகத்தில் வீடு வந்து சேர்ந்தவனுக்கு வெறுமையாக இருந்த மாடி கிலியூட்டியது. சுதாரித்து நிலாவுக்கு அழைத்துக் கேட்டால் ஏதோ காரணம் சொல்லி வேறு வீட்டின் விலாசம் கொடுக்க, அங்கு தன் அழகியை காண்போம் என்று கற்பனை கூட செய்யவில்லை. 

அவள் நினைவிலேயே வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தவன் அவள் எங்கு எப்படி இருப்பாள் என்று பெரிதாக யோசித்தது இல்லை. எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று எண்ணியிருந்தான். இப்படி அவள் வசிக்கும் தெருவிற்கு அருகில் தானும் வசிக்க நேரிடும் என்றும் எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன என்று எண்ணம் வரவும் என்ன செய்துகொண்டிருக்கிறாள் அவள் என்று யோசனை அவள் பக்கம் சென்றது. 

எங்கு திரும்பினாலும் சக்தி சக்தி என்ற பேச்சுதானே இருக்கிறது. முதலில் அவள் எப்படி சக்தியானால்? என்ற கேள்விக்கு அவன் மனம் நொடியும் தாமதிக்காமல் பதில் உரைத்தது.

‘அவன் தான் சக்தி. அவளின் சக்தி. அவன் பெயரை அவளுக்கான அடையாளமாக கொண்டுள்ளாள். அவன் பிறந்தநாளை அவளுடையதாக கொண்டாடி இருக்கிறாள்.’ என்று ஒன்றோடு ஒன்று இணைத்து அவள் செயலுக்கான காரணம் புரியவுமே அவன் இதழ்கள் தன்னால் விரிந்தது. அவன் மீது அவள் கொண்டுள்ள காதலும் பற்றும் அவன் அறிந்ததே. அதில் அவனுக்கு கர்வமும் கூட. ஆனால் அந்த காதல் கூட பிரியம் கொண்டு பிரிந்திருப்பவர்களை பிணைத்து வைக்கவில்லை. பிரிவினையின் காரணம் அறிந்தவனோ உடல் விரைக்க நிமிர்ந்தான். கரத்தினில் புகுந்த மகள் அப்படியே உறக்கம் தழுவியிருக்க, கயல்விழியை தூக்கிச் சென்று அறையில் விட்டவன் அங்கேயே மெத்தையில் அமர்ந்து அந்த ஊருக்கு வந்தபின் சக்தி குறித்து செவி எட்டிய செய்தியை யோசித்து நினைவுக்கு கொண்டுவர முயன்றான்.

அதில் கீழ்வீட்டு சதாசிவம் அவளை ரெளடி என்றது சிந்தை எட்ட, பற்கள் அவன் அழுத்தத்தில் உடையாதது அதிசயம்தான். கூடவே ஆஸ்ரமத்தில் அவள் சார்பில் உணவு விநியோகித்தது, கோவிலில் பிரசாதம் வழங்கியது, வீட்டிற்கு வீடு பிறந்தநாள் பரிசாக இனிப்பு வழங்கியது என்று ஒவ்வொன்றாய் வரிசை கட்டி நினைவில் வந்து இறுதியாக ஒருநாள் மாலை அவள் வசிக்கும் தெருவில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதும் அதனைத் தொடர்ந்து அங்கு இருவர் பேசிச் சென்றதையும் நினைவு கூர்ந்தவன் வேகமாக அலைபேசியில் கூகிள் உதவியை நாடினான்.

ஷீலாவதி என்று அச்சிட்டதுமே அது தடை செய்யப்பட்ட ஒருவகையான போதை வஸ்து என்றும் கிலோ ஒன்றிலிருந்து ஒன்னரை லட்சம் வரை விற்பதாகவும் கொட்டை எழுத்தில் கட்டுரைகள் வந்து விழுந்தது. அதற்கு மேல் அதை பற்றி படிக்க விரும்பாதவனாய் அலைபேசியை மெத்தையில் வீசிவிட்டு கண்களை இறுக மூடி தன்னை நிலைப்படுத்த முயன்றான். நாடி நரம்புகள் அனைத்தும் கோபத்தில் புடைத்து நின்றது. 

வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் வேலையில் இருக்கும் தன்னை அவளது அடையாளமாக கொண்டு என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாள்? தனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று தெரிந்தும் எந்த தைரியத்தில் தன் பெயரையே அவளுடையதாக மாற்றி பெயருக்கே கலங்கம் ஏற்படுத்துகிறாள். கொஞ்சமும் மனசாட்சி உறுத்தவில்லையோ. தங்களின் வருமானத்தை முதன்மையாக கொண்டு அரசே விற்கும் மதுபானம் மூலம் எத்தனை குடும்பங்கள் சீரழிகிறது என்று கண்கொண்டு பார்க்கும் இவ்வேளையில் தடைவிதிக்கப்பட்ட போதை பொருட்கள் மூலம் கண்ணுக்கு தெரியாத எத்தனை உயிர்கள் பாழாய் போகும் என்ற யோசனை கொஞ்சமும் இல்லையோ. போதையை நாடி தங்களின் உடலை கெடுத்துக்கொள்வது ஒருபுறமென்றால் அதை எடுத்துக்கொண்டு உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாதவர்களால் இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் குளறுபடி குற்றங்களுக்கு இவளும் ஒரு காரணம் தானே. ஏன் இவளுக்கு இந்த வேண்டாத வேலை என்று குமைந்தவன் சக்தி என்றவளை வெறுத்தான். 

அவனுக்கு அவன் நினைவுகளில் வாழும் அழகி போதும் என்று முடிவெடுத்தான். அதற்கு இந்த சக்தியை விட்டு தள்ளி போக வேண்டும். இந்த பள்ளிக்கு மாற்றல் வாங்கி வந்து வெகு சில மாதங்களே ஆவதால் தற்சமயம் வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கி செல்வது சாத்தியமில்லை என்று புரிந்தது. வீட்டை மாற்றலாம் என்றால் பதினோரு மாதத்திற்கு போடப்பட்ட வாடகை ஒப்பந்தம் நினைவு வந்தது. ஒப்பந்தத்தை மீறினால் குறிப்பிட்ட தொகை பிடித்துக்கொள்வார்கள் என்ன செய்யலாம் என்று யோசித்தவன் இழப்பு நேர்ந்தாலும் பரவாயில்லை வீடு மாற வேண்டும் என்று முடிவெடுத்த பின்தான் இயல்பாக மூச்சுவிடவே முடிந்தது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்தவன் அலைபுரிதலை ஒதுக்கிவைக்க இனிய நினைவுகளில் முக்குளிக்க முயன்றான்.

அழகி…

அழகுராணி. அவள் பெயர். அவன் வாழ்க்கையை அழகாக்க வந்தவளாக அவளை கொண்டாடி தீர்த்தான் சக்திவேலனுள் இருந்த காதலன். அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்று அவன் அன்புக்கு ஈடுகொடுத்து வள்ளலாக மாறி மொத்த பிரியத்தையும் அவன் மீது கொட்டினாள்.

குடும்ப அமைப்பினுள் வளர்ந்து அவர்களை ஒருசேர விபத்தில் பறிகொடுத்து உறவுகளிடம் பெரிதாக ஒட்டாது தனித்து வாழ்ந்து வந்த சக்திவேலனுக்கு ஒரு தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவள் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த அழகி. அறிமுகம் ஆனபோது கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தாள் அவள். துவக்கத்தில் எதிர்ப்படும் நேரங்களில் லேசாக புன்னகைத்து நகர்ந்து விடுபர்களை காலம் தன் இழுப்பிற்கு இழுத்து வாழ்க்கையில் கோர்த்து விட்டிருந்தது. கரம் பிடித்த நாள் முதல் வாழ்க்கை இன்னும் இன்னும் ரம்மியமாய் மாறியிருக்க, கண்பட்டது போல் நிகழ்ந்தது அந்த விபத்து. அதன் பின்னான நினைவுகள் அணிவகுக்க, சக்தி கண்முன் வந்தாள். அதை நினைக்கவே விரும்பாதவன் போல் தலையை உலுக்கிக்கொண்டான் சக்திவேலன்.   

இனி அழகியை நினைத்தாலும் சக்தியாய் அவன் நினைவை ஆட்கொள்வாள் என்று புரிந்த நொடி சற்று காதல் குறைந்து அதிருப்தியும் ஒவ்வாமையும் உடன் வந்தது.