*10*

அன்று பள்ளி முடிந்ததற்கான பெல் அடிக்கவும் அரட்டையடித்துக்கொண்டு மாணவர்கள் வெளியேற, கயல்விழி பேக்கை மாட்டிக்கொண்டு வகுப்பறையில் இருந்து மெதுவாக ஆசிரியர் அறை நோக்கி நடந்தாள். எதிர்ப்பட்ட நிலா இவளைக் கண்டதும் அப்படியே நிற்க, அவளை கூர்ந்து பார்த்த கயல்விழி உதடு சுழித்தபடி கடந்தாள்.

‘இந்த சிறுசு கூட மதிக்க மாட்டேங்குது. என்ன பொழப்புடா இது.’ விரக்தி பெருமூச்சு விட்டுக்கொண்டு நிலாவும் நகர்ந்து சென்றாள்.

ஆசிரியர் அறையில் ஓரிருவர் கிளம்பிச் சென்றிருக்க, சிலர் அப்போது தான் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். பள்ளி சீருடையில் தோள்பட்டையில் மாட்டியிருக்கும் பேக் இடையே கைவிட்டு அதை இழுத்து பிடித்தபடி வந்த கயல்விழியைக் கண்டு புன்னகைத்த சகஆசிரியர், “அப்பாவுக்கு கடைசி க்ளாஸ்னு நினைக்குறேன். உக்காரு வந்துடுவாங்க.” என்க, வேகமாக தலையாட்டிய கயல் தந்தை இருக்கை அருகே பேக்கை கழட்டி கீழே வைத்து அமர்ந்துகொண்டாள். 

ஒவ்வொருவராய் அந்த அறையிலிருந்து அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப, கன்னத்தில் கைவைத்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கயல். நேரம் சென்றதே ஒழிய சக்திவேலன் வந்தபாடில்லை. அறையே வெறிச்சென்று ஆகிவிட, எழுந்து வந்து வெளியே எட்டிப்பார்த்தாள். பள்ளி வாகனங்கள் கிளம்பியிருந்ததால் பெரிதாக கூட்டமில்லை. பள்ளி மைதானத்தில் மட்டும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர் அவ்வளவே.

வெறுமையாக இருந்த கட்டிடம் சிறுமியை அசைத்துப் பார்க்க, “அப்பா…” தன் அழைப்புக்கு வந்துவிட மாட்டாரா என்று வறண்ட தொண்டையில் மெலிதாக முனகினாள். 

‘இங்க இருக்கேன் பாப்பா…’ என்று எப்போதும் அவள் அழைப்புக்கு உடனே வந்துவிடும் அவன் குரல் இன்று வரவில்லை எனவும் சட்டென தொண்டை அடைத்து அழுகை வருவது போல் இருந்தது கயல்விழிக்கு. தந்தை அப்படியெல்லாம் தன்னை தனித்து விட்டு செல்லமாட்டார் வந்துவிடுவார் என்று முயன்று தன்னை திடமாக்கிகொண்டு மீண்டும் தந்தை இருக்கையில் சென்று அமர்ந்தது சிட்டு.

சில நொடிகளிலேயே அவன் இல்லாத சோர்வு ஆட்கொள்ள, வீட்டுப்பாடங்கள் எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தாள். அதில் சிறிது நேரம் சென்றது.

“இன்னும் வீட்டுக்கு போகலையா பாப்பா? ரூமை பூட்டனுமே.” என்ற குரல் கேட்டு மிரட்சியாக நிமிர்ந்து பார்த்தாள் கயல். பள்ளியை பராமரிக்கும் வேலையாள் நின்றிருந்தார்.

சக்திவேலனுடன் கயலை அடிக்கடி பார்த்திருப்பதால் அவருக்கு கயலை தெரிந்திருந்தது, “சார் எங்க பாப்பா?” என்ற கேள்விக்கு, 

“அப்பா இன்னும் வரலையே…” என்று பாவமாக எழுந்து நின்றாள் கயல்.

இது என்னடா சோதனை? எல்லா இடமும் பூட்டிவிட்டோமே அவர் எங்கேயும் இல்லையே என்று நினைத்துக்கொண்டவர் வெளியே வந்து பார்க்க, சற்று தொலைவில் கைப்பையுடன் வெளி கதவு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலா தெரிந்தாள். நிம்மதி மூச்சு விட்டவராய் வேக எட்டுக்கள் எடுத்து வைத்து, “ஏம்மா நிலா நில்லு. சக்திவேல் சாரை பாத்தியா நீ? அவர் பொண்ணு அவருக்காக ரூம்ல வெய்ட் பண்ணுது.” 

“நான் பாக்கலையே.” என்று புருவம் சுருக்கிப் பார்த்தாள் நிலா.

“ஸ்டாப் ரூம் பூட்டலாம்னு பாத்தா சார் பொண்ணு உக்காந்து எழுதிட்டு இருக்கு. இப்போதான் எல்லா க்ளாஸ் ரூமையும் பூட்டிட்டு வரேன். சாரை பாக்கலையே. என்ன பண்றது? பொம்புள புள்ள வேற தனியா விட்டு எப்படி போறது?” என்று அவர் புலம்ப,

“அவருக்கு போன் பண்ணி பாருங்க அண்ணா.” என்று நிலா யோசனை சொன்னாள்.

“அவர் நம்பர் இல்லையே…” என்று அவர் குழப்பமாய் பார்க்க, “அவர் பொண்ணுகிட்ட கேட்டுப்பாப்போம்.” என்ற நிலா அவருடன் ஆசிரியர் அறைக்குச் செல்ல, தந்தையைக் காணவில்லை என்று தவித்து நின்ற கயலைக் கண்டு உள்ளம் உருகிற்று நிலாவுக்கு.

அவளை நெருங்கி ஆதரவாய் மேலே சாய்த்துக்கொண்டவள், “பயந்துக்காத அப்பாவுக்கு போன் போடலாம். அப்பா நம்பர் தெரியுமா?” என்று கேட்கவும் சக்திவேலன் நம்பரை கூறினாள் கயல்.

உடனே அந்த எண்ணுக்கு அழைப்பு விடுக்க, அழைப்பு சென்றுகொண்டே இருந்ததே தவிர ஏற்கப்படவில்லை. 

“சார் எடுக்கலையே…”

“பாப்பா இங்க இருக்கும் போது சார் எங்கேயும் வெளில போயிருக்க மாட்டாரு. நீங்க இன்னொரு முறை தேடிப் பாருங்க அண்ணா. நான் இங்க துணைக்கு இருக்கேன்.” என்று நிலா சொல்லவும் அதுவும் சரிதான் என்றவராய் அவர் தேடச் சென்றார்.

“அப்பா உன்னை வெயிட் பண்ண சொல்லிட்டு போனாங்களா மா?”

“எப்போவும் க்ளாஸ் முடிச்சி இங்க வரப்போ அப்பா இருப்பாங்க. இன்னைக்கு க்ளாஸ் போயிருக்காங்க வருவாங்கனு அந்த சார் சொன்னாரு, ஆனா அப்பா இன்னும் வரல.” என்ற சிறுமியை அமரச்சொல்லி தண்ணீர் கொடுத்தாள் நிலா.

அதை வாங்க மறுத்த கயல், “என்கிட்டேயே இருக்கு.” என்று சொல்லி தன் பையிலிருந்த பாட்டிலில் இருந்து குடித்தாள். 

சமத்தாக தண்ணீர் குடித்தவள் அதை வைத்துவிட்டு வீட்டுப்பாடம் எழுத எடுத்த புத்தகங்களை மீண்டும் பையினுள் அடுக்க, “அப்பா நம்பர் இன்னொரு முறை சொல்றியா, நான் கூப்பிட்டு பாக்குறேன்.” என்று நிலா கேட்டாள்.

மீண்டுமொருமுறை அவள் அலைபேசி எண் சொல்லவும் நிலா தன் அலைபேசியில் இருந்து அழைத்தாள். பிசி என்று வர அழைப்பை துண்டித்தாள். இரண்டொரு நொடிகளில் அவன் எண்ணிலிருந்து அழைப்பு வர, பரபரப்பாக அழைப்பை ஏற்றாள் நிலா.

அவன் ஹலோ தான் சொல்லியிருப்பான், “சார் நான் நிலா, கயல்விழி இங்க ஸ்டாப் ரூம்ல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா…” படபடவென விஷயத்தை சொன்னாள் நிலா. ஏற்கனவே அவர்களை விட்டு தள்ளி இருக்கச் சொல்லி எச்சரிக்கை கொடுத்திருக்கிறான். அதை மீறி இப்படி அவள் அழைப்பது அவன் கோபத்தை தூண்டும் என்று காரணத்தை ஒப்பித்துவிட, விஷயம் ஏற்கனவே அவன் காதிற்கு சென்றிருக்கும் போல,

“இப்போதான் சொன்னாங்க. ரூம்ஸ் பூட்டணுமாம் நான் ஒரு இடத்துல மாட்டிக்கிட்டேன் பாப்பாவை வீட்ல டிராப் பண்ணிட முடியுமா?” என்று தணிவாய் வேண்டினான். 

இத்தனை இதமாய் இவனுக்கு பேசத் தெரியுமா என்று அதிர்ந்து மீண்டாள் நிலா.

“சார் நானா?”

“எனக்கு வேற ஆப்ஷன் இல்லை. உன்னை நம்பித்தான் அனுப்புறேன், என் பொண்ணுக்கு ஏதாவது ஆச்சு தொலைச்சிடுவேன்…” இப்போது மிரட்டலாய் அவன் குரல் வர, இவள் தணிந்தாள்.

“பத்திரமா நான் விட்டுடுறேன் சார்.”

வீட்டு விலாசத்தை சொல்லியவன், “கீழ் வீட்ல விட்டுரு. ஆட்டோல போங்க, நாளைக்கு ஆட்டோக்கான காசை கொடுத்துடுறேன்.” என்று சொல்ல, அனைத்திற்கும் சரி சரியென்றவள் அவன் வழிகாட்டலின் பேரில் கயல்விழியிடம் போனைக் கொடுத்தாள்.

“பாப்பா நிலா ஆன்ட்டியோட வீட்டுக்கு போடா… கீழ் வீட்டு அங்கிள் கூட இரு. அப்பா ஒரு இடத்துல மாட்டிக்கிட்டேன், வர ஒரு மணி நேரம் ஆகும். சப்போஸ் உனக்கு ஏதாவது தப்பா தோணுச்சுன்னா பேக்ல இருக்குற பெப்பர் ஸ்ப்ரே அடிச்சிடு. அப்பா சீக்கிரம் வந்துறேன்.” என்று பல அறிவுரைகள் வழங்கி அழைப்பை துண்டித்தான். 

“போலாமா?” என்று நிலா பார்க்க, கயல்விழி பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

இவர்கள் கிளம்பிய நேரம் அவனை தேடிச் சென்றவரும் வந்துவிட, சொல்லிக்கொண்டு கிளம்பினர். பள்ளி வாசலில் ஆட்டோவிற்காக காத்திருக்கும் சமயம் நிலாவின் அலைபேசி மீண்டும் ஒலித்தது. ஏதோ புதிதான எண் வர யோசனையுடன் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ நிலா, நான் சக்திவேலன் பேமிலி பிரெண்ட் சுவாதி. கயல் உங்களோட வரான்னு சொன்னாங்க. போன் அவகிட்ட கொடுக்க முடியுமா? கயல் பயந்துக்குவா நான் பேசிட்டே வரேன்.” என்று சுவாதி சொல்லவும், சக்திவேலன் தன்னை நம்பவில்லை என்ற நிதர்சனம் நடு மண்டையில் நச்சென்று இறங்கியது.   

சக்தியைத் தவிர தன்னை ஒருவரும் நம்பவில்லை என்ற விஷயம் ஒருவித தவிப்பை கொடுக்க, ஏமாற்றத்துடன் ஆட்டோ வரவும் கயலை ஆட்டோவில் ஏற்றி தானும் ஏறிக்கொண்டாள் நிலா. வீடு வரும் வரை அவர்களின் பேச்சு அலைபேசியில் தொடர, ஆட்டோவை விட்டு இறங்கியவள் கீழ் வீட்டு அழைப்பு மணியை அழுத்தப் போக, பெரிதாக பூட்டொன்று கேட்டில் தொங்கிக்கொண்டிருந்தது. இதென்ன அடுத்த சோதனை என்று கயலிடமிருந்து அலைபேசி வாங்கிய நிலா, “கீழ் வீடு பூட்டியிருக்கு மேடம். என்ன பண்ணட்டும்?”

“கயல் அப்பா வந்துடுவாங்க. அதுவரைக்கும் மாடி படில வெயிட் பண்ண முடியுமா?” 

வேறு வழியின்றி சரியென்று ஆட்டோவை அனுப்பிவிட்டாள் நிலா. அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்துவிட்டதாலும் சுவாதிக்கு வேலை இருப்பதாலும் சற்று நேரம் கழித்து அழைக்கிறேன் என்று அழைப்பை துண்டித்தாள் சுவாதி. கயலை ஒரு படியில் அமர்த்தி நிலாவும் அமர்ந்துகொண்டாள். வாய் கொடுத்தால் தானே வினையாகிறது இன்று வாயே திறக்க மாட்டேன் எனும் விதமாய் நிலா அமர்ந்திருக்க, மெல்ல அவள் கையை சுரண்டினாள் கயல்விழி.

“ஏதாவது வேணுமா?” 

“பாத்ரூம் போகணும்.” பாவமாய் பார்த்தாள் கயல்.

சோதனைக்கு இல்லையா ஒரு முடிவு என்று தலையில் கை வைத்துவிட்டாள் நிலா. கீழ் வீடு பூட்டியிருந்தது மேல் வீட்டின் சாவி சக்திவேலனிடம் இருக்கிறது இந்த பெண்ணை எங்கே அழைத்துச் செல்வது என்று யோசிக்க அவளுக்கு தெரிந்து ஒரே வழிதான் இருந்தது. சக்திவேலனுக்கு அழைத்து சொல்லிவிட்டு அந்த யோசனையை நிறைவேற்றலாம் என்று அழைக்க அவன் எடுக்கவில்லை.

“ஆன்ட்டி சீக்கிரம் போகணும்.” என்று கயல் வேறு துரிதப்படுத்த, காத்திருக்க அவகாசமின்றி எழுந்தவள், “என் வீட்டுக்கு போய்ட்டு வந்துரலாம். இங்க பக்கம்தான்.” என்று கயலை எழுப்பி அழைத்துக்கொண்டு நடக்க, சிறிது தூரத்திலேயே கயல் நெளிந்துகொண்டு வருவது போல் இருந்தது.

பெருமூச்சு விட்டவள் அவர்கள் தெருவிக்குள் நுழைந்ததும் கோடியில் இருக்கும் சாந்தி அக்கா வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் மத்தியில் இருக்கும் சக்தி வீட்டினுள் புகுந்தாள்.

அப்போதுதான் வீடு வந்திருந்த சக்தியும் முகத்தை துடைத்து பொட்டு வைத்து நிமிர, ஒரு சிறுமியுடன் உள்ளே நுழைந்த நிலாவை கேள்வியாய் பார்த்தாள் சக்தி. ஐந்து நிமிடம் என்று அவசரமாக அவளிடம் விரல் காட்டிய நிலா, கயலின் பையை வாங்கி வைத்துவிட்டு கழிப்பறை அழைத்துச் சென்று வந்தாள்.

“எங்க ஸ்கூலை வேலை பாக்குற சாரோட பொண்ணு அக்கா. சார் எங்கேயோ வெளில இருக்காங்க, வீட்டு சாவி அவர்கிட்டதான் இருக்கு. அவர் வர்றவரை அங்கதான் உக்காந்திருக்கலாம்னு பாத்தோம் அதுக்குள்ள பாப்பா பாத்ரூம் போனும் சொல்லவும் அவசரத்துக்கு இங்க அழைச்சிட்டு வந்தேன்.” என்று நிலா நீண்ட விளக்கம் கொடுக்கவும் சக்தியின் பார்வை அமைதியாய் நிற்கும் கயல்விழியிடம் சென்றது.

பள்ளிச் சீருடையில் இரட்டை சிண்டு போட்டு சோர்வாய் தெரிந்தாலும் பார்த்ததும் ஈர்த்துவிட்டாள் கயல்விழி. ஏனோ அச்சிறுமி மனதிற்கு நெருக்கமாக உணர, மலர்ந்த முகத்துடன் லேசாக கயல்விழி கன்னம் வருடினாள் சக்தி. 

“உன் பேர் என்ன பாப்பா?”

நிலாவை நிமிர்ந்து பார்த்தவள் பின் சக்தியைப் பார்த்து, “கயல்விழி.” என்று சொல்லி வெட்கம் கொண்டவளாக சற்று பின்னே நகர்ந்தாள். 

அந்த பெயர் அவளது அணுக்கள் அத்தனையும் உயிர்த்தெழச் செய்து புத்துணர்வைத் தூண்ட, பரபரப்பானவள், “சோர்வா தெரியுறியே எதுவும் சாப்புடுறீயா பாப்பா?” என்று பார்க்க, கயலின் தலை மறுப்பாய் ஆடியது.

“எனக்கு தோணவே இல்லை அக்கா. ஸ்கூல்லையே ரொம்ப நேரம் வெயிட் பண்ணா, மதிய சாப்பிட்டதா தான் இருக்கும். நான் ஏதாவது வாங்கிக் கொடுக்கிறேன்.” என்று திரும்பிய நிலாவை நிறுத்திய சக்தி வேகமாக உள்ளே சென்று வீட்டில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள். மதியம் வடித்த சோறு மட்டுமே இருந்தது. உச்சு கொட்டியவள் வெளியே வந்து சில பொருட்களை சொல்லி வாங்கி வரச்சொல்ல, நிலா கயலைப் பார்க்க, தலையை உலுக்கிக் கொண்ட சக்தி, “நீ பாப்பா கூட இரு. நான் ரவிகிட்ட சொல்லிக்கிறேன்.” என்று நிலாவை தடுத்து ரவிக்கு அழைப்பு விடுத்து விரைந்து பொருட்களை வாங்கி வரச்சொன்னாள்.

சக்தியின் தீவிரம் கண்டு, “அக்கா உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்க கிளம்புறோம். அவங்க அப்பா வந்துடுவாங்க.” 

“பத்தே நிமிஷம் நிலா. பாரு அந்த பாப்பா மூஞ்சு எப்படி வாடிக் கிடக்கு. காஞ்ச வயித்தோட அனுப்ப முடியுமா. நீ உக்காந்து விளையாடு, நான் பாத்துக்குறேன்.” என்று சொல்லிக்கொண்டே அடுப்பில் வெந்நீர் வைத்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் வந்த ரவி, சக்தி கேட்ட அனைத்தையும் கொடுத்துவிட்டு சிறுமியுடன் அமர்ந்திருந்த நிலாவை சந்தேகமாகப் பார்க்க, தானாக சென்று கயல்விழி பற்றி சொல்லியவள், “இப்படி முறைச்சு முறைச்சு பாத்தா பாப்பா பயந்துக்கும்.” என்று கொட்டும் வைக்க, அவளை முறைத்துக்கொண்டு வெளியேறினான் ரவி.

கூடத்தில் நின்று அந்த வீட்டை சுற்றிப் பார்த்த கயல், “வீட்டுக்கு போலாமா? அப்பா வந்துடுவாங்க.” என்று நிலாவைக் கேட்க, ஐந்து நிமிடம் என்றாள் நிலா. 

உதட்டை பிதுக்கிய கயல் வாசலைப் பார்த்துக்கொண்டு அமர்ந்தாள். அப்பாவிடம் எப்போது செல்வோம் என்ற அவஸ்தை அவள் உடல்மொழியில் வெளிப்பட்டது. அதை உணர்ந்தது போல் சக்தி செய்யும் வேலையில் வேகத்தை கூட்டி கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரில் கொஞ்சம் எடுத்து வடித்த சோறில் ஊற்றி குழைக்க, மீதி வெந்நீரில் வெல்லம் கரைந்து கொண்டிருந்தது. கட்டிகளாக கிடந்த வெல்லம் பாகாக மாற அதை குழைந்த சோறில் கலந்து கொதிக்க விட்டாள். இடையில் தேவையான அளவு ஏலக்காய், முந்திரி, நெய் சேர்த்து பதமாக இறக்கி சிறிய கிண்ணத்தில் போட்டு எடுத்து வந்தாள். 

வாசலை பார்த்தவண்ணம் பாவமாய் அமர்ந்திருந்த கயலை பார்த்து கனிவு பிறக்க, அவளருகே வந்தமர்ந்த சக்தி கிண்ணத்தை அவள் கண் முன்னே நீட்ட்டினாள்.

தன் முன் நீட்டுப்பட்டதை வாங்கிக்கொள்ள கூடாது என்று முடிவெடுத்திருந்த கயலின் பார்வை அந்த கிண்ணத்தில் அனிச்சையாக படியவும், விழிகள் ஆனந்தம் காட்டியது. அவளுக்கு பிடித்த பதார்த்தம்.

அன்னப்பிரசன்னத்தின் போது இந்த சர்க்கரைப்பொங்கலை தான் விரும்பி உண்டாளாம், அவள் அப்பா எப்போதோ சுவாதியிடம் சொன்ன நினைவு. அதன்பின் அடிக்கடி சுவாதி செய்து வந்து தருவாள். ஏனோ அவளுக்கு பிடித்த உணவாகினும் அவள் தந்தைக்கு சர்க்கரைப் பொங்கல் ஒழுங்காக செய்ய வராது. இன்று சக்தி ஆவி பறக்க அதை நீட்டவும் வாங்கி உண்ண கை துறுதுறுத்து நாவில் எச்சில் ஊறியது. தெரியாதவர்களிடன் பேசக்கூடாது, பழக்கூடாது, யார் என்ன கொடுத்தாலும் வாங்கி உண்ணக்கூடாது என்று சக்திவேலன் சொல்லியிருக்க, அவள் கை நீளவில்லை.

“சாப்புடு பாப்பா.” சக்தி புன்னகையுடன் கயல்விழியை ஊக்க, மறுப்பாக தலையசைத்தாள் கயல்.

“வெளில சாப்புட கூடாதுனு அம்மா சொல்லியிருக்காங்களா?” என்று சக்தி எதார்த்தமாக கேட்கவும் கயல்விழி பதில் சொல்லாமல் குனிந்துகொண்டாள். 

“அக்கா, அப்பா மட்டும்தான் இருக்காங்க.” நிலா இடைபுகுந்து சொல்ல, சக்தியின் முகம் வேதனை காட்டியது. கையிலிருந்த கிண்ணத்தை கீழே வைத்துவிட்டு கயல்விழியின் பிஞ்சு கரத்தை ஆதரவாக பிடித்துக்கொண்டு ஆதுரமாய் வருட, கயல்விழி எச்சில் கூட்டி விழுங்கினாள்.

பள்ளி முடித்தால் வீடு என்றே பழக்கப்பட்டவளுக்கு இதுபோன்று வெளி மனிதர்களிடம் தாயின் இழப்பை பகிரும் வாய்ப்புகள் இருந்ததே இல்லை. நிலாவிடம் ஒரு உந்துதலில் சொல்லிவிட்டாள் இப்போது சக்தி கேட்கவும் கண்கள் கலங்குவது போலிருந்தது கயல்விழிக்கு. தந்தை உடன் இல்லாதது வேறு அவளை தாக்கியது. குனிந்து தன்னை மறைத்துக்கொண்டாள்.

இந்த சிறிய வயதில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறாளே என்று நெஞ்சம் அடைத்த உணர்வை பின்தள்ளிய சக்தி கயல்விழியை தன் மீது சாய்த்துக்கொள்ள, உணர்ச்சி மிகுதியில் கயல்விழியின் விழிகள் நீர் சுரந்தன. துளி சத்தம் வராமல் கயல்விழி கண்களையும் கன்னத்தையும் துடைத்துக்கொண்டே இருந்தாள். அப்பாவிடம் சென்றுவிட வேண்டும்… அப்பா… அப்பா… என்று அவள் மனம் அரற்ற ஆரம்பிக்க, சக்தி அவளை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டவள் சர்க்கரை பொங்கலை ஸ்பூனில் எடுத்து ஊட்ட, இருந்த மனவுளைச்சலில் வாங்கக்கூடாது என்பதை மறந்து வாய் திறந்து வாங்கிகொண்டாள் கயல்.

இனிப்பும் நெய்யுமாய் நாவில் வழுக்கிக்கொண்டு அமிர்தமாய் அந்த பொங்கல் இறங்க, கயலின் வேதனை சுவடுகள் பின்சென்று உண்ணும் ஆர்வம் வந்துவிட்டது. சக்தி ஊட்ட ஊட்ட மேலும் இரண்டு வாய் வாங்கிக்கொண்டாள். காலியான வயிறு சற்று நிறையவும்தான் வெளியே பேசும் சத்தம் கேட்டது.

“யாரை கேட்டு இங்க அழைச்சிட்டு வந்த? துணைக்கு இருக்க சொன்னா இஷ்டத்துக்கு யார் வீட்டுக்கு வேணும்னாலும் அழைச்சிட்டு வந்துடுவியா… உன்கிட்ட உதவி எதிர்பார்த்தது என் தப்பு தான்…” என்று காரசாரமாக சக்திவேலன் கத்துவதை தொடர்ந்து, “கயல் கயல்…” என்று அவளை அழைப்பதும் காதில் விழ, சட்டென எழுந்த கயல்விழி, “அப்பா வந்துட்டாங்க.” என்று ஆர்ப்பாட்டமாக தன் பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். 

தடதடக்கும் மனதை நிறுத்த வழியறியாது சக்தியும் வேகமாக அவள் பின்னே செல்ல, உள்ளிருந்து ஓடிவந்த கயல்விழியை பாய்ந்து சென்று தூக்கிக்கொண்டான் சக்திவேலன்.

“சாரிடா பாப்பா…” என்று மகளிடம் மன்னிப்பு வேண்டி அவள் பட்டுக்கன்னத்தில் முத்தம் வைத்தவன் அவளை அணைத்துக்கொண்டு அனிச்சையாக நிமிர, அவர்களை பார்த்துக்கொண்டே அதிர்ந்து விரிந்த விழிகளோடு கண்களில் நீர் குளம்கட்ட நின்ற சக்தி தென்பட்டாள்.

கடற்கரையின் பின்மாலை நேர தென்றல் கூட நெஞ்சை அடைத்து மூச்சு முட்டுவதாய் இருக்க, இருவரின் இதழ்களும் இதயத்திற்கு இணையாக துடித்து, ஒன்றுபோல அவர்களின் நாவும் சுழன்று அழைத்தது.

“விழி…”

“அழகி…”