கண்களைப் பறிக்கும் வெளிப்பூச்சுகளின்றி இருப்பதை சற்று எடுத்துக்காட்டும் விதமாய் ஓரடுக்கு பவுடரும் கள்வனைக் கவரவென மான் விழிகளில் மைப்பூச்சிட்டு உடைக்கு ஏற்றார் போல் நெற்றியில் அரக்கு பொட்டிட்டு தேவதையென ஆட்டோவில் வந்திறங்கிய பாவையை விரிந்த புன்னகையோடு வரவேற்றான் அவன்.
உடுத்தியிருக்கும் உடையை விழி மொழியாலே சுட்டிக்காட்டி எதிர்பார்ப்புடன் அவனை அவள் ஏறிட, அவளை நெருங்கி விரல்கள் கோர்த்து பிணைத்துக்கொண்டவன், “என் அழகி இப்போவும் எப்போவும் அழகிதான்.” என்று வசீகரப் புன்னகையுடன் சொல்ல, சுற்றி பல கணைப்புகள் கேட்கவும் மெல்லிய சிணுங்கல் பெண்ணிடம்.
“போலாமா?” என்று கேட்டுக்கொண்டே அவளை முன்னோக்கி வழிநடத்தி தன்னுடன் அழைத்துச் செல்ல, பின்னோடு வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய் என்று அனைத்தையும் ஒரு பெரிய தட்டில் அடுக்கி அதோடு இரு மாலையும் திருமாங்கல்யமும் எடுத்து வந்தனர் அவர்களின் நட்புகள்.
பிரபலமான அந்த சிவன் கோவிலுள் நுழைந்ததும் முதன்மையான பிள்ளையாரை தரிசித்தவர்கள் கோவில் அலுவலகத்தில் அர்ச்சனைக்கும் திருமணத்திற்கும் தேவையான ரசீது மற்றும் ஆவணங்களை வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றனர். அன்று நிறைந்த சுபமுகூர்த்த தினம். இறைவனின் அனுக்கிரகமும் ஆசிர்வாதமும் வேண்டி பல திருமணங்கள் அன்று அங்கே அரங்கேறியது. இவர்களின் முறை வரும்வரை காத்திருக்க, அவனோ நொடிக்கொருமுறை அவளை திரும்பி பார்ப்பதுமாய் பின் தனக்குள் சிரித்துக்கொள்வதுமாய் இருந்தான்.
“இந்த நாளுக்காக எத்தனை நாள் என்னை சுத்தல்ல விட்டிருப்ப. இப்போ என்னோட அழகி எனக்கே எனக்கா ஆகப்போறா…”
“ஷ்ஷ்… ஏங்க நாம கோவில்ல இருக்கோம்.” என்றவளின் குரலுக்கு ஏற்ப பதட்டத்துடன் அவள் விழிகள் சுற்றத்தில் அலைந்தது. அவன் பேசியதை யாராவது கேட்டிருந்தால் என்று எனும்போதே வெட்கத்தில் முகம் வெம்மை பூசிக்கொண்டது.
“கேட்டா கேட்டுக்கட்டும்… யார் என்னை கேள்வி கேட்க முடியும்?” அவன் லேசாய் சிரிக்க, வெண்பற்கள் தெரிய கன்னக்கதுப்புகள் பொலிவுற அவன் சிரிக்கும் அழகில் தன்னை மறந்து ரசித்தவள் முன் சுடக்கிட்டவன், “கேடி அழகிடி நீ… யாராவது பாத்துடுவாங்கனு பயந்த மாதிரி நடிச்சிட்டு இப்போ நீயே வச்ச கண்ணு வாங்காம பார்த்து சைட் அடிச்சிட்டு இருக்க…”
மாட்டிக்கொண்டதில் கூச்சம் கொண்டவளாய், “ஐயோ!” என்று கண்களை மூடி நாக்கை கடித்தாள்.
“இந்த வெட்கம் எல்லாத்தையும் ராத்திரிக்கும் கொஞ்சம் மிச்சம் வச்சிக்கோடி என் அழகி.” என்று அவன் மெல்ல கிசுகிசுக்க, கோவிலில் வைத்து என்ன பேச்சு இது என்று முறைக்க முயன்று நாணம் பூசிக்கொண்டாள் அவன் அழகி.
மெல்லிய குரலில் கிசுகிசுக்கும் இருவரையும் கண்டும் காணாதது போல இருந்துகொண்டனர் சாட்சிக்கு என்று வந்த அவர்கள் நண்பர்கள்.
இவர்களுக்கு முன் இருந்தவர்கள் நகர்ந்துவிட, இவர்கள் தம்பதி சகிதமாய் சந்நிதியின் முன்னே சென்று நிற்க, அர்ச்சனை தட்டை வாங்கிச் சென்றார் ஐயர். அவனது வலப்பக்கமாய் அவன் அழகி அவனை ஒட்டினார் போல் நின்று கண்களை மூடி மும்மரமாக கடவுளுக்கு நன்றி நவிழ்ந்து கொண்டிருந்தாள்.
கற்பனையில் கூட நினைத்திராத ஒரு வாழ்க்கை வசந்தமாக அவள் முன் விரிந்திருக்க, இதைவிட வேறென்ன வேண்டும் இந்த வாழ்க்கைக்கு.
“அழகி.” என்ற அவனது மெல்லிய குரல் செவி தீண்டவும் பட்டென கண்களை திறந்தவள் அவன் புறம் திரும்ப, அவன் முன்னே பார்க்கும் படி கண்ணசைத்தான்.
அவன் பார்வையைத் தொடர்ந்தவள் எதிரில், “சாமியை வேண்டிட்டு இந்த மாலையை போட்டுக்கோங்க.” என்று மாலையை நீட்டியபடி நின்றார் ஐயர்.
பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்த்தவள் மாலையை வாங்கி அவன் கழுத்தில் போடப்போக,
“தாலி கட்டுனதுக்கு அப்புறம் அவர் கழுத்துல போட்டா போதும். இப்போ நீங்க போட்டுக்கோங்க.” என்றதும் மெல்லிய சிரிப்பலை எழுந்து அடங்கியது. கேலியில் விரல்கள் லேசாக நடுங்க, குனிந்து மாலையை தன் கழுத்தில் போட்டுக்கொண்டவள் நிமிரவே இல்லை.
“அவ்வளவு அவசரம் என் அழகிக்கு.” அப்போதும் அவளை சிவக்க வைத்தபடி இருந்தான் அந்த கள்வன்.
சில நொடிகளில் சுவாமி பாதத்தில் இருந்த மஞ்சள் தாலி மந்திரங்களின் பலன்களை தாங்கியவாறு அவன் கைக்கு வந்திருந்தது. கண்களை மூடி ஓர் நொடி நிதானித்தவன் அவள் புறம் கழுத்தை திருப்பி, “அழகி…” என்க,
அவனது உயிர் தீண்டும் அழைப்பில் நிமிர்ந்தவள் சம்மதமாக தலை அசைக்க, அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இருவரும் வாழ்க்கையின் இறுதி வரை ஒருவருக்கு ஒருவர் துணையிருப்போம் என்று உறுதி ஏற்றுக்கொண்டான்.
“குங்குமம் வச்சி விடுங்கோ…”
மோதிர விரல் நுனியில் கொஞ்சம் குங்குமம் எடுத்து அவள் கழுத்து சுற்றி நெற்றி வகுட்டில் வைத்துவிட, அவன் கையணைப்பில் இருந்தவள் நிமிர்ந்து பொங்கும் காதலுடன் அவனைப் பார்க்கும் அக்காட்சி அழகாக புகைப்படமாகியது.
“அப்பா… என்னோட ப்ளாண்ட் பேக் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க. நான் பத்திரமா என் லன்ச் பேக்ல வச்சி எடுத்துட்டு வந்துடுவேன்.” என்ற மகளின் குரலில் நடப்புக்கு வந்தவன் கையிலிருந்த புகைப்படத்தை அப்படியே முதுகுக்கு பின் எடுத்துச் சென்று மறைத்தான்.
“அப்பா…”
மூக்குக்கண்ணாடியை சரி செய்வது போல் நெற்றி நோக்கி அதை நகர்த்தியவன் “என்னடா?”
“என் ஸ்நேக் ப்ளாண்ட்டை பேக் பண்ண வேண்டாம்னு சுவாதி ஆன்ட்டிகிட்ட சொல்லுங்க.” என்று மகள் பிடிவாதமாய் நிற்க, அவள் உச்சியில் ஆதூரமாய் கைவைத்தவன்,
“நான் சொல்றேன். நீ போ.” என்று அனுப்பிவைத்தான்.
மகள் சென்றதும் மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை முன்னே கொண்டுவந்து ஒருமுறை மனதில் நிரப்பிக்கொண்டவன் அதை ஒரு புத்தகத்தின் இடையே வைத்து அதை அட்டைபெட்டியின் அடியில் வைத்துவிட்டான். அதன் மேல் வேறு புத்தகங்களையும் அடுக்கி பெட்டியை டேப் கொண்டு ஒட்டிவிட்டு நிமிர, வேறிடத்திற்கு மாற தயாராய் சாமான்கள் அனைத்தும் பெட்டிகளில் நிறைந்து அறையை நிறைத்திருந்தது.
பெருமூச்சோடு பார்வையை அறை முழுதும் சுழலவிட்டவன் அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமலும் கிளம்ப வேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்து கலவையான உணர்வுகளுடன் வெளியே வந்தான்.
வீட்டின் நுழைவறையிலும் பெட்டிகள் இருக்க, நடுநாயகமாய் அனைத்து பெட்டிகளிலும் மார்க்கர் பெண் கொண்டு அதில் என்னென்ன இருக்கிறது என்று எழுதிக் கொண்டிருந்தாள் சுவாதி.
“பாப்பாவோட ப்ளாண்ட்ட பேக் பண்ண வேண்டாம் சுவாதி. அவளே எடுத்துக்குறாளாம்.” என்றவனை ஏறிட்டு முறைத்தவள், “நீங்க அவளை பாப்பீங்கதான் ஆனா கயல் அவ கையில இருக்குற செடியை பாக்குறேனு சுத்தி இருக்கறதை கவனிக்காம நீங்க டீ குடிக்கும் போதோ இல்லை வேற எங்கேயாவது கவனம் வச்சிருக்கிறப்போ இவ எங்கேயாவது வழி தவறிட்டா… புது ஊருக்கு போறப்போ எதுக்கு இந்த ரிஸ்க் எல்லாம். நான் பத்திரமா பேக் பண்ணி ஏத்திவிடுறேன் அங்க வீட்டுக்கு போனதும் எடுத்து கொடுங்க.” என்றாள் சுவாதி முடிவாய்.
அவள் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்தமையால் உடனே ஒத்துக்கொண்டான், “நீ பேக் பண்ணிடு. நான் பாப்பாகிட்ட சொல்லிக்குறேன்.”
“அங்க அவளுக்கு எப்படி செட் ஆகுமோ என்னவோ தெரில. அவளை மிஸ் பண்ணுவேன்.” என்று பாவமாய் பார்த்த சுவாதிக்கு சிறிய புன்னகை அவனிடமிருந்து பதிலாய்.
“வேலை டென்ஷன்ல தினம் அவ ஸ்கூல்ல நடக்குறது எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்காம இருந்துடாதீங்க. சின்ன பொண்ணு பாத்து பக்குவமா பத்திரமா பாத்துக்கணும்.” என்றதற்கு அவனிடம் சிறிய தலையசைப்பு மட்டுமே.
“அப்புறம் போனதும் சமைக்க ஆரம்பிச்சிடாதீங்க.” என்றவள் வேகமாய் ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த நாட்காட்டியை பார்த்துவிட்டு, “இன்னைக்கு புதன். நாளைக்கு நைட் அங்க போயிடுவீங்க. வெள்ளிக்கிழமை நல்ல நாள்தான். காலையில ஆறு மணிக்குள்ள பால் காய்ச்சிட்டு ரொட்டின் ஸ்டார்ட் பண்ணிக்கோங்க.” என்றதற்கும் அவனிடம் தலையசைப்பு மட்டுமே.
“அதுக்கு அவசியம் இருக்காது. இத்தனை நாள் எப்படி இருந்தோமோ அப்படியே தான் இருக்க போறோம்… என்ன வேற ஊருல இருப்போம்.”
அடுத்து என்ன பேச என்று அவள் பார்க்க, “டைம் ஆகுது இருட்டுற முன்னாடி வீட்டுக்கு கிளம்பு.” என்று அவளை அவன் கிளப்பிவிட, சோர்வுடன் வீட்டிற்கு புறப்பட்டாள் சுவாதி.
அவள் கிளம்பியதும் கதவடைத்து வந்தவன் மாலையே வாங்கி வந்திருந்த இட்லி பொட்டலங்களை பிரித்து மகளுக்கு பிடித்த சட்னியை பரிமாறிவிட்டு அவளை அழைத்தான்.
“இந்த இட்லி குண்டு குண்டா இருக்குப்பா. நீ செய்யுறதுதான் நல்லா இருக்கும்.”
“சாமான் எல்லாமே பேக் பண்ணிட்டோம் பாப்பா. புது வீட்டுக்கு போனதும் அப்பா சமைச்சி தரேன். இப்போ இதை சாப்புடு.” என்று கயல்விழிக்கு ஒருவாய் ஊட்டிவிட, சமத்துக்குட்டியாய் அடுத்து அவளே உண்ண ஆரம்பித்தாள். மகளை கவனித்த வண்ணம் அவனும் உண்டுமுடித்து அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு தரையில் பாய்விரிக்க, தலையணையுடன் ஓடி வந்து படுத்தாள் கயல்விழி. மென்னகையுடன் மகளின் சிகை வருடிய தந்தை மெதுவாய் தட்டிக்கொடுக்க நிமிடத்தில் உறங்கிப்போனாள் சின்னவள். இவனுக்குத்தான் உறக்கம் பறிபோனது. மல்லாக்க படுத்தபடி விட்டதை வெறித்தான். உறக்கம் எப்போது தழுவியதோ அதுவரை அவன் எண்ணங்களை நிறைத்திருந்தாள் அவன் மனம் கொள்ளை கொண்ட அழகி.
மறுநாள் எதைப் பற்றியும் யோசிக்க நேரமின்றி வீட்டை காலி செய்து லாரியில் ஏற்றும் பணிகள் அவனை குழ்ந்துகொண்டது. மதியம் போல ஊரை விட்டு கிளம்பும் முன் நண்பர்களை பார்த்து வருகிறேன் என்று பள்ளிக்கு சென்றிருந்த கயல்விழியை அழைத்து வந்தாள் சுவாதி.
“உன் வேலையை விட்டுட்டு பாப்பாவை அழைச்சிட்டு வரணுமா? நான் சமாளிச்சிருப்பேன்.” என்று சொல்லிக்கொண்டே அவன் சுவாதியை நெருங்க, அமைதியாய் தந்தை புறம் சென்று நின்றுகொண்டாள் கயல்விழி.
“தனியா எப்படி எல்லாத்தையும் சமாளிப்பீங்க… கயல் மட்டும் இல்லை நானும் அவளை மிஸ் பண்ணுவேன்.” என்று மெல்லிய குரலில் சொன்னாள் சுவாதி.
“பாப்பாவுக்கு டிரெஸ் மாத்தி கிளப்பிவிடுறீயா. நான் எல்லாம் ஏத்திட்டாங்களான்னு பாத்துட்டு வரேன். இப்போ கிளம்புனா இருட்டுற முன்னாடி அங்க போயிடலாம்.” என்று சுவாதியுடன் மகளை அனுப்பிவிட்டு வெறுமையான வீட்டை ஒருமுறை சரிபார்த்தான். அனைத்தும் லாரியில் ஏற்றியாகிவிட்டது என்பதை உறுதி செய்துகொண்டவன் கொல்லைக் கதவை பூட்டிவிட்டு வர கயல்விழி தோளில் தன் ஸ்கூல் பை மாட்டிக்கொண்டு தயாராய் இருந்தாள்.
ம் என்றால் தண்ணீர் வந்துவிடும் என்றது அவள் விழிகள். விவரம் புரியத் தொடங்கியது முதலே இருந்த வீட்டை, ஓடியாடி விளையாடிய தெருவை, பழகிய நண்பர்களை விட்டு பிரிவது அப்பிஞ்சுக்கு கடினமாய் இருந்தது. ஆனால் தந்தைக்கு வேலை மாறுதல் வந்தபின் என்ன செய்ய முடியும். மாறித்தானே ஆகவேண்டும். புரிந்தாலும் ஏற்க மறுத்தது மனது.
மகளின் பிரிதுயர் உணர்ந்தவன் மறந்தும் மகளிடம் வாய் திறக்கவில்லை. அமைதியாய் அவளை தூக்கிக்கொள்ள, தந்தை தோளில் முகம் புதைத்துக்கொண்ட கயல்விழி அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
கிளம்பப்போகிறார்கள் என்று புரிந்ததும் தன் கையிலிருந்த பையை அவனிடம் நீட்டினாள் சுவாதி. என்ன என்பதுபோல் அவன் பார்க்க,
“கயலுக்கு வெளில வாங்குற இட்லி புடிக்கலைனு சொன்னா அதான் வீட்லேந்து இட்லி, சாம்பார் பேக் பண்ணி எடுத்துட்டு வந்தேன். நைட்டுக்கு வெளில வாங்க வேண்டும் இதையே சாப்பிட்டுக்கோங்க.” என்று சொல்ல, கண்டனமாய் பார்த்தான் அவன்.
அதையெல்லாம் அவள் கண்டுகொண்டது போல் தெரியவில்லை. பார்வை கயலிடம் இருந்தது. நேற்றே கயல் உணவு பிடிக்கவில்லை என்றதால் முரடு பிடிக்காமல் அதை வாங்கிக்கொண்டவன் வீட்டு சாவியை அவளிடம் ஒப்படைத்துவிட்டு சிறிய தலையசைப்புடன் காரில் ஏறிக்கொண்டான். கயலின் கண்ணீர் துளிகள் அருவியாய் மாறி அவன் தோளை சுட, ஆதரவாய் அவள் முதுகை தடவிக்கொடுத்தவன் அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
“கயல் புது இடத்துல அப்பாகிட்ட சொல்லாம எங்கேயும் போகக்கூடாது. யார் கூப்பிட்டாலும் உடனே விளையாட போகாம அப்பாகிட்ட கேட்டுட்டு போகணும். அடிக்கடி உன்னை பாக்க வரேன்.” என்று சுவாதி கார் கண்ணாடி வழியே சொல்ல, கயலின் அழுகை தேம்பலாய் மாறியது.
“அங்கேயும் உனக்கு பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க, பீச்சும் இருக்கு பாப்பா.” என்ற சமாதானம் எடுபடாமல் போக, மகளை தனக்குள் பொத்திக்கொண்டவன், “அப்பா இருக்கேன்ல…” என்று ஆதரவாய் அவள் முதுகை தேய்த்துவிட, அவளின் தேம்பலுடன் தொடங்கியது கடலூரிலிருந்து சென்னை நோக்கி அவர்களின் பயணம்.
செல்லும் அவர்களையே தொண்டை அடைக்கும் உணர்வோடு பார்த்து நின்றாள் சுவாதி.