திருமணம் என முடிவாகி விட்ட போதும் பிரத்யேகமாக ஒரு பார்வை கூட உத்ராவை ஆதவன் பார்த்திருக்கவில்லை. தானாக சென்று பேசவும் இவளுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் எந்நேரமும் அவன் பற்றிய எண்ணங்கள்தான். இவ்வளவு தூரம் தன்னை தேடி வருவான் என எதிர்பார்த்திராதவள் வேகமாக தயாராகி ஆவலும் ஆசையுமாக பார்வையாளர்கள் அறைக்கு சென்றாள்.
கைகளை கோர்த்து பிரித்தவாறு தரையைப் பார்த்துக் கொண்டு ஒரு காலை தரையில் தட்டிக் கொண்டு பதட்டமாக அமர்ந்திருந்தான் ஆதவன். ‘என்னை முதல் முறையா தனியாக பார்க்க வந்ததால இப்படி டென்ஷன்ல இருக்காரோ?’ என நினைத்துக்கொண்டாள் உத்ரா.
தலை நிமிர்ந்த ஆதவன் உத்ராவை கண்டு விட்டு தடுமாற அவள் அழகாக முறுவல் செய்தாள். நெஞ்சுக்குள் குற்ற உணர்வு அலை போல எழ அவனால் சிரிக்க முடியவில்லை. அவனது இதய துடிப்பு அவனுக்கே கேட்டது.
‘இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சு பத்து நாள் கூட ஆகல, சொன்னா புரிஞ்சுப்பா, கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவா’ என அடிக்கடி அவனாக கூறிக் கொள்வதை இப்போதும் கூறிக் கொண்டான்.
“வாங்க அத்தான்!” என அவள் வரவேற்க மிக லேசாக தலையசைத்தான்.
நிமிடங்கள் சில கடந்தும் தன்னிடம் பேசாமல் ஒரு சிரிப்பு கூட இல்லாமல் இருப்பவனை குறித்து இந்த இடம் சௌகர்ய படவில்லை என்பதாக நினைத்தவள் அவனருகில் அமர்ந்திருந்த சுதாவை வேறு யாரோ என எண்ணினாள்.
தன்னை தேடி வந்திருப்பவனை தான்தான் உபசரிக்க வேண்டும் என முடிவு செய்தவள், “வந்து… இங்க பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு, நடந்தே போய்டலாம், அங்க போவோம் வாங்க” என அழைத்தாள்.
ஆதவன் எழ சுதாவும் அவனுடன் எழ குழப்பமாக பார்த்தாள் உத்ரா. ஆனாலும் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் முன்னே நடந்தாள்.
மூவரும் நடக்க உத்ராவுக்கு மனதில் எதுவோ உறுத்த கலக்கமாக ஆதவனை பார்த்துக் கொண்டே காபி ஷாப் உள்ளே நுழைந்தாள்.
உத்ராவுக்கு எதிரே ஆதவனும் சுதாவும் அமர்ந்தனர். ஆதவன் எப்படி ஆரம்பிப்பது என திணற, “சொல்லுங்க ஆதவன்” என சின்ன குரலில் சுதா சொல்லவும் உத்ராவுக்கு நெஞ்சம் தட தடக்க ஆரம்பித்தது.
துவக்கத்தில் திணறியவன் பின் சரளமாக பேசினான். அவன் சொன்னதை எல்லாம் கேட்ட உத்ராவுக்கு அடி வயிறு கலங்கிப் போக பீதியோடு அவனை பார்த்திருந்தாள்.
“எனக்கு வேற வழி தெரியலை உத்ரா, சத்தியமா உன்னை ஏமாத்தனும்னு நினைக்கல. ஏற்கனவே பிரியாவை உங்கண்ணன் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லவும் இப்படி சொன்னா ஒத்துப்பார்னு நினைச்சுதான் அப்படி சொல்லிட்டேன். கல்யாணம் முடிஞ்ச மறுநாளே உன்கிட்ட சொல்லிடலாம் நினைச்சா பிரியாவை திரும்ப காலேஜ் அனுப்புறேன்னு பாலன் சொன்னதுல நான் ஷாக் ஆகிட்டேன், நீயும் அன்னைக்கே கிளம்பிட்ட” ஆதவன் சொல்லிக் கொண்டிருக்க உத்ரா கண்கள் சிமிட்ட கூட மறந்து கேட்டிருந்தாள்.
“நம்ம கல்யாணம் நடந்தா சுதாவை ஏமாத்திட்ட மாதிரி மட்டுமில்லை நானும் ஏமாந்து போய்டுவேன். நீதான் ஹெல்ப் பண்ணனும், நீயே மேரேஜ் ஸ்டாப் பண்ணிட்டா பிரியா லைஃப்ல சிக்கல் வராது” என்ற ஆதவனை பார்த்தவள் இவன் முன் அழ மட்டும் செய்யக் கூடாது என வைராக்கியமாக நினைத்தாள்.
“பிரியா லைஃப் மட்டுமில்லை, உங்க அண்ணன் லைஃப் கூட பாதிக்காம இருக்கத்தான் ஹெல்ப் கேட்கிறோம். யாருக்கும் தெரியாம நாங்க மேரேஜ் பண்ணிக்கிறது பெரிய விஷயமில்லை, அப்படி செஞ்சா ஆதவன் துரோகம் செஞ்ச மாதிரி ஆகிடும், நீங்களே நிறுத்திட்டா யாருக்கும் பிராப்லம் வராது. ஆதவன் மேரேஜ் ஸ்டாப் பண்றதுக்கும் நீங்க பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. நீங்க நல்ல பொண்ணுன்னு ஆதவன் சொன்னார், அப்படித்தான் நடந்துப்பீங்கன்னு நம்புறேன்” என்றாள் சுதா.
அவள் பேசிய தொனி ஆதவனுக்கே பிடிக்கவில்லை. கண்டிக்கும் குரலில் “சுதா!” என்றவன், “கொஞ்ச நேரம் சைலன்ட்டா இரு” என்றான்.
அதில் முகத்தை சுருக்கிய சுதா, உத்ரா முன்பு தேவையில்லாமல் சண்டை போட பிடிக்காமல் அமைதியாகி விட்டாள்.
உத்ராவுக்கு தலை சுற்றும் நிலை. நடக்காது என நினைத்து முன்பிருந்த நிலை பரவாயில்லை, ஆனால் இப்போது நடக்கபோகிறது என உறுதியான பின்பு எத்தனை ஆசை கொண்டு கணவனாகவே இவனை மனதில் வரித்து திருமண நாளை ஆவலாக எதிர்நோக்கி கொண்டிருக்கிறாள்.
நேற்றைய தினம் கடை வீதிகளில் அலைந்து திரிந்து எத்தனை எத்தனை பரிசு பொருட்களை இவனுக்காக வாங்கியிருந்தாள்? ஒவ்வொன்றையும் இவனிடம் கொடுக்கையில் இவன் முகம் எப்படி மலரும் என கற்பனை செய்தாளே… இதோ கற்பனையில் கண்டிராத இன்னொரு முகம் கொண்ட ஆதவன் இப்படியா அணு குண்டு வீசுவான்?
அவர்கள் முன்னிலையில் தொய்வடைந்து போகாமல் தன் இத்தனை வருட அனுபவங்களை சக்தியாக ஒன்று திரட்டி தன்னை சமாளித்து நிமிர்ந்து அமர்ந்தாள் உத்ரா.
“உத்ரா நீங்க புரிஞ்சுக்கணும்…” என ஆரம்பித்த சுதாவை நோக்கி கை காட்டி அவளை நிறுத்தியவள், “ப்ளீஸ் நீங்க பேசாதீங்க, நான் இவர்கிட்டதான் கேட்டுட்டு இருக்கேன், இவர்தான் எனக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்” என கடின குரலில் கூறினாள்.
“சொல்லுங்க அத்தான், ஏன் இப்படி செஞ்சீங்க?” நிதானமான குரல் என்றாலும் அவள் பாதிக்க பட்டிருக்கிறாள் என்பது வெளிப் பட்டது.
உத்ராவின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்ட ஆதவன், “சாரி” என மெல்லிய குரலில் சொன்னான்.
“அண்ணா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டார், நான் சம்மதம் சொல்லித்தான் எல்லாம் செய்றார் அண்ணா, இப்போ போய் நான் என்ன ரீஸன் சொல்லி ஸ்டாப் பண்ண முடியும்? பிடிக்கல, மாட்டேன்னு நான் சொன்னா என்னென்ன பிரச்சனை வரும்னு தெரியலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள் உத்ரா.
“என்ன வரப் போகுது?” எரிச்சலாக கேட்டாள் சுதா.
“ரெண்டு குடும்பத்து பெரியவங்களுக்குள்ள மனஸ்தாபம் ஆகும், டேட் பிக்ஸ் ஆன அடுத்த நாள் இனிவிடேஷன் அடிச்சு அதுக்கு அடுத்த நாள்லேர்ந்து ஊரெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க, இப்போ கல்யாணம் நின்னா அண்ணனுக்கு அவமானம் ஆகும், என்னை பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க பேசிப்பாங்க?” சுதாவை பாராமல் ஆதவனை பார்த்தே கேட்டாள் உத்ரா.
ஆதவன் குற்ற உணர்விலும் உத்ரா கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் தர முடியாத இயலாமையிலும் மருக, “அது எல்லாத்தையும் விட மனசுல என்னை வச்சுகிட்டு உன்னை கல்யாணம் பண்ணினா மூணு பேர் லைஃப் வீணா போய்டும். புரியுதா?” என கோவமாக கேட்டாள் சுதா.
“நல்லா புரியுது, எனக்கு ஒண்ணும் யார் லைஃபையும் கெடுக்க ஆசையில்லை. போங்க போய் உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்துங்க” என சீறினாள் உத்ரா.
அவசர பட்டு விட்டோமே என தன்னை நொந்து கொண்ட சுதா, “சாரி சாரி உத்ரா. ப்ளீஸ் இவரே சொன்னா பிரியா லைஃப்க்கு பிராப்லம் வரும்னு இவர் பயப்படுறார். அதனாலதான்… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க உத்ரா” என கெஞ்சினாள்.
“என் அண்ணன் உங்களை மாதிரி சீப் கிடையாது. பிரியா எங்க வீட்டு மருமக, அவ எங்க வீட்ல நல்லா இருப்பா. என்னால மேரேஜ் நிறுத்த முடியாது, நான் நிறுத்தினா எங்க பக்கம் தப்புன்னு ஆகும், உங்க வீட்ல எல்லாருக்கும் என் அண்ணன் பதில் சொல்லணும், அந்த நிலைய அண்ணனுக்கு நான் தர மாட்டேன். நீங்கதான் நிறுத்தணும்” என்ற உத்ரா அதற்கு மேல் அங்கு இருந்தால் வெடித்து அழுது விடுவோமோ என பயந்து வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
ஆதவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, “புரிஞ்சுப்பா அப்படி இப்படின்னு சொன்னீங்க, இவ இப்படி ஹார்ஷா பேசிட்டு போறா?” பயமும் கோவமுமாக கேட்டாள் சுதா.
ஆதவன் அமைதியாகவே இருக்க, “கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா பிரியாவை கல்யாணம் பண்ணிக்க என் அண்ணனையே நான் கன்வின்ஸ் பண்ணியிருப்பேன், நீங்கதான் அவசர பட்டுட்டீங்க” என அவனையே குற்றம் சுமத்தினாள்.
“வாய மூடு. அப்படி கெஞ்சி கூத்தாடி ஒண்ணும் என் தங்கச்சிய யாரும் ஏத்துக்க தேவையில்லை. என் தங்கச்சி பத்தி பேசாத” கோவப்பட்டான்.
“ஓ அப்போ அந்த பாலன்கிட்ட மட்டும் கெஞ்சாம கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டீங்களா? அவன்கிட்ட சொன்ன மாதிரி எங்கப்பாகிட்டேயும் சொல்லியிருக்க வேண்டியதுதானே?”
“நீ ஓவரா பேசிட்டு போற சுதா. பிரியாவுக்கு மேரேஜ் முடிஞ்சு போச்சு. பாலன் என்னை விட வயசுல மூத்தவர், என் வீட்டு மாப்ள, மரியாதையா பேசு” என கடிந்து கொண்டவன், “இனி நடக்க வேண்டியது பத்தி மட்டும்தான் யோசிக்கணும்” என்றான்.
“என்ன யோசிக்கணும்? இந்த உத்ரா சொன்ன மாதிரி நீங்களே அவ அண்ணன்கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்துங்க”
“முட்டாளா நீ? கல்யாணம் பண்ணி அடுத்த நாளே இங்க சென்னைக்கு வந்திட்டா பிரியா. அவங்க வாழவே ஆரம்பிக்கல இன்னும். நான் ஏதாவது சொல்லப் போய் அவ லைஃப் பிரச்சனை ஆனா என்ன செய்றது?”
“அப்போ உங்களையே நினைச்சிட்டு இருக்க என் கதி?” கண்ணீருடன் சுதா கேட்க சுற்றம் பார்த்து விட்டு, “முதல்ல நார்மலா இரு. கிளம்பலாம் இங்கேர்ந்து. நான் யோசிச்சு வேற ஏதாவது செய்றேன்” என்றான்.
நம்பிக்கை வராமல் சுதா பார்த்துக் கொண்டிருக்க, “நீயும் சேர்ந்து என்னை டென்ஷன் பண்ணாத. உத்ராக்கு இப்போ ஷாக்கா இருக்கும். இவ்ளோ தூரம் சொன்னதுக்கு அப்புறமும் என்னை கல்யாணம் செய்ய ஒத்துப்பாளா? ரெண்டு நாள் கழிச்சு திரும்ப பேசி பார்க்கிறேன். கண்டிப்பா அவளே ஸ்டாப் பண்ணுவா” என சொல்லி அவளை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றான்.
கேப் எடுத்து அவளை அவளது சித்தி வீட்டில் விட்டு தங்கையை காண சென்றான். பிரியா எதிர்பார்க்கவே இல்லை. தன்னைதான் காண வந்திருக்கிறான் என நினைத்து மகிழ்ந்தவள் உத்ராவை வர சொல்வதாக சொல்ல வேண்டாம் என மறுத்தான்.
“ஏன் ண்ணா? அவ சந்தோஷ படுவா”
“சொன்னா கேளு. உனக்கு எப்படி போகுது, பாலன் நல்லா பேசுறாரா?” என விசாரித்தான்.