மலருடைய வீட்டை எழுதி தர முத்துலெட்சுமி பத்து லட்சம் வேண்டும் என்று கேட்க ., சிவாவிற்கு கோபம் வந்து விட”என்ன லந்து பண்ணிட்டு இருக்கீங்களா?? மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க.. இது சரிப்பட்டு வராது நான் கேஸ் போடுறேன்… உங்களை சந்தி சிரிக்க வச்சா தான் அடங்குவீங்களா?, மலருக்கு இந்த சொத்துல முழு உரிமையும் இருக்கு.அந்த ஒரு வீடு தானே போனா போகட்டும்.இந்த மொத்த சொத்தையும் அவ பேர் ல எழுதி வாங்குறேன் நீ வா பனி போகலாம்.கொஞ்சம் விட்டா ஓவரா ஆடிக்கிட்டு.” என்றவன் மலரின் கரம் பற்றிச் செல்ல முற்பட,

சங்கரன் இடையிட்டு “நான் அந்த வீட்டை வாங்கித் தரேன் மாப்ள, நீங்க பணம் எல்லாம் தர வேண்டாம்”என்றார்.

“எங்களுக்கு பேச்சு மாறி பழக்கம் இல்லை.நாங்க சொன்னபடி பணத்தை குடுத்தே வாங்கிக்கிறோம். நாளைய பின்ன ஓசியில என் பொண்டாட்டி வாழறான்னு யாரும் சொல்லிடக் கூடாது… நாளைக்கு வந்து கையெழுத்து போட்டு தந்தா நல்லது இல்லைனா அப்புறம் சட்டப்படி வாங்க வேண்டியது வரும்” என்று விட்டு வெளியேறினான்.

“உங்களை யார் உத்தரவாதம் கொடுக்க சொன்னது”என்று எகிறிய முத்துலெட்சுமிக்கு முதன் முறையாக அறை விழுந்தது சங்கரனிடமிருந்து.

“அடக்க ஒடுக்கமா பொம்பளையா வந்து கையெழுத்து போட்டு குடு. இல்ல எல்லா சொத்தையும் மலரு பேர்ல எழுதி வச்சுட்டு உங்களை நடுத்தெருவில் விட்ருவேன், அது என் மக…. அதுக்கு இருக்க உரிமை இங்க யார்க்கும் கிடையாது. இந்த முறை சாகறதா இருந்தா நீ சாவு.என் மகளை சாவடிக்க உனக்கு உரிமை கிடையாது…. அது வேற வீட்டு பிள்ளையாகிடுச்சு, அதுக்காக நான் பொறுத்த வரைக்கும் போதும்”என்று விட்டு போய் விட்டார்.

முத்துலெட்சுமிக்கு அடங்காத ஆத்திரம் வந்தது .

வடிவரசியிடம் திட்டி கொண்டு இருக்க அவளோ.,”நீ பேசாம வீட்டை எழுதி குடும்மா. சும்மா தேவை இல்லாம பிரச்சினை பண்ணிக்கிட்டு..”. என்றவள்,” சீக்கிரம் வளைகாப்பு போடுற வழியைப் பாரு.அப்படியே அவளையும் கூப்பிடு இல்லாட்டி என் புருஷன் என்னை அடிச்சே கொன்றுவான் “என்று பயந்தாள்.

“நீ ஏன் தான் இப்படி பயந்து சாகுறியோ?, இந்தா இப்ப வந்துட்டு போறாளே அவ பாரு அவனை எப்படி கைக்குள்ள போட்டு வச்சிருக்கான்னு நீயும் தான் இருக்கியே “என்றவரிடம்

” பேசாம போயிரு. உங்களால தான் எனக்கு இந்த வாழ்க்கை. வயித்துல மட்டும் இந்த புள்ள இல்லைனா எப்பவோ செத்து தொலைஞ்சிருப்பேன். அவங்கிட்ட அடி வாங்கி முடியல “என்றாள் கண்ணீருடன்.

பொன்னர் இதை கேட்டு விட்டு மனமுடைந்து போனவர்,  இதற்கு ஏதாவது ஒரு வழி தேட வேண்டும் என்று எண்ணியபடி மெதுவாக நடந்து மலரின் வீட்டிற்கு சென்றார்.

நடந்த அனைத்தையும் சிவா மலரிடம் கூறியவர்.,”அவளும் என் பேத்தி தான் யா… அவ ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும் போது அழுவறது சகிக்கவே முடியலை.ஏதாவது பண்ணி அந்த பயலை பிள்ளைய அடிக்க விடாம பார்த்துக்கணும் யா வயித்து பிள்ளதாச்சி வேற” என்றார் கவலையாக .

“விடு தாத்தா நான் இனிமே பார்த்துக்கிறேன் அவனுக்கு ஒரு காட்டு காட்டுனா சரியாப் போயிடும்”என்று பொன்னரை சமாதானம் செய்தான் சிவா.

வீரமலை வந்திருந்தவன் உளறி வைத்து விட்டான்.

“அவனுக்கு பெரிய மன்மதன் னு நெனப்பு மாப்ள.நம்ம பாப்பா கிட்ட கூட வம்பு பண்ணான் அப்புறம் நானும் வெற்றியும் தான் அடிச்சு வெரட்டி விட்டுட்டு “எனும் போதே தலையில் அடித்துக் கொண்டாள் பனிமலர்.

எத்தனை தடவை சைகை காட்டியும் புரிந்து கொள்ளாமல் நடந்ததை கூறியவனை வேறு என்ன செய்ய முடியும்…? வேறு வழியின்றி தலையில் தான் அடித்து கொண்டாள்.

இப்போது சிவாவின் கோபப்பார்வை மலரின் புறம் திரும்பியது.

“பெரியவங்க இதை பத்தி என் கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே…? என்ன அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டிங்களா…?? ம்ம்ம்… நடத்துங்க. ஒருத்தன் பைத்தியக்காரன் மாதிரி பின்னாடியே சுத்துறானே, அதனால நாம என்ன செஞ்சாலும் எதை மறைச்சாலும் கண்டுக்க மாட்டான்னு நீங்களா முடிவு பண்ணி மறைச்சுட்டிங்களா மேடம். சொல்லுங்க…!!” என்றவன் பார்வை அனலை கக்கியது.

“முதலில் விஷயம் என்னனு கேட்டுட்டு பேசு சக்தி “என்று விட்டு , “வீராண்ணே நீ போய் பாட்டனை விட்டுட்டு வா அப்புறம் பேசுவோம் “என்றவள் அமைதியாக நிற்க ,

பொன்னரை அழைத்து கொண்டு சென்றான் வீரமலை கண்களால் மலரிடம் மன்னிப்பு கேட்டபடியே .

“உள்ள வா சக்தி “என்றதும் .,”எதுக்கு எதுவும் தேவை இல்லை போ “என்று கடுப்படித்தான்.

“ப்ப்ச் வாங்கன்னு சொல்றேன் இல்ல”என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

“ப்ப்ச் கையை விடு டி கோவத்தை கிளப்பிக்கிட்டு “என்று எரிச்சலுடன் சொல்ல, அவளோ கையை விட்டு விட்டாள்.

“போ போடா போய் அவனை அடிச்சு கொன்னுட்டு வா. சும்மா சும்மா கோவப்பட்டுக்கிட்டு… ஒரு விஷயத்தை மறைக்கிறேன் அப்படின்னா ஏன் மறைச்சான்னு யோசிக்க மாட்டியா… ??”என்றாள் வேகமாக.

இன்னும் கோபம் குறையாமல் தான் அமர்ந்திருந்தான் சக்தி.

தன் கையால் அவனது தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவள்.,”நீ இருக்கிறதே பல்லாயிர கணக்கான மைல்களுக்கு அங்குட்டு உன் கிட்ட இங்க எனக்கு பாதுகாப்பு இல்லை னு சொன்னா நீ நிம்மதியா இருப்பியா…??  சொல்லு. அது மட்டுமில்லாமல் அவனைக் கொல்ல ஒரு நிமிஷம் போதுமா எனக்கு.அதை என்னால செய்ய முடியாதா…?? இல்ல போலீஸ்ல தான் பிடிச்சு கொடுக்க முடியாதா சொல்லு, அவனைப் பற்றி தெரியாம அந்த வடிவரசியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு அவரு. பிடிக்காட்டியும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பார்க்கணும் இல்லையா…!!  இப்பவும் நீ போய் அவனை எதுவும் செய்ய வேணாம்… வடிவரசி மாசமா இருக்கா… ஏதாவது ஒண்ணு னா அவளை தான் பேசுவாங்க அப்புறம் அந்த குழந்தை நிலைமை யோசிச்சு பாரு… “என்றாள் பொறுமையாக

“சரி சரி புரியுது, ஆனா நான் வந்ததும் சொல்லி இருக்க வேண்டியது தானே?”என்று மீண்டும் முறுக்கிக் கொள்ள மலர் சிரித்தபடி அவனது நெற்றியில் முத்தமிட்டு.,”சார் வந்தது நேத்து… அப்புறம் வந்ததிலிருந்து சார் எங்க பேச விட்டிங்க…?? ரொமான்ஸ் பண்ணவே நேரம் சரியா இருக்கு…நீ பேசவா விட்ட “என்று நொடித்துக் கொண்டாள்.

அவளை

அணைத்துக் கொண்டு சிரித்தவன் “சரி போ மன்னிச்சு விடுறேன்… இனி இப்படி பண்ணாத. அந்த நாய்க்கு ஒரு படம் காட்டினா தான் அடங்குவான் அடக்கி வைக்கலாம் விடு…”என்றான் கை முஷ்டியை இறுக்கியபடி.

கவனம், மிரட்டி மட்டும் வச்சா போதும்” என்று எச்சரித்தாள்.

அதை நாங்க பார்த்துக்கிறோம் டீச்சர்” என்றான் எள்ளலாக

“சரி நான் வயலுக்கு போறேன்… பருத்திக்கு மருந்து தெளிக்கணும்… கள்ளிப் பூச்சி விழுது…. “என்றபடி எழுந்து கொண்டாள்.

இங்கிருந்து நான் என்ன பண்றது வா சேர்ந்து போகலாம்” என்று எழுந்து கொண்டான்.

ஊர் சுத்த போகலையா…?”

உன்னை சுத்த தான் எனக்கு பிடிக்குது” குழைந்தான் அவளிடம்.

***********

சங்கரன் சொன்னபடியே முத்துலெட்சுமியை அழைத்து வந்து கையெழுத்து போட வைத்து மலர் பெயருக்கே வீட்டை மாற்றி கொடுத்தார்.

முத்துலெட்சுமி வாயை திறக்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தார்.

அந்த பத்திரத்தை பெறும் போது மலர் கண் கலங்க , அவளது கரத்தினை பற்றி அழைத்து வந்தவன், “சொன்னதை செஞ்சுட்டேன் பொண்டாட்டி…. இனிமே மாமா சொல்றதை கேட்டு சமத்தா இருக்கணும்… அப்புறம் வாழ்த்துக்கள் மலர் டீச்சர்”என்று சிரித்தான்.

“நம்ம வீட்டுக்கு போகலாம் சக்தி “என்றதும் மறுக்காமல் அழைத்து வந்திட, வீட்டினுள் நுழைந்ததுமே இறுக அணைத்துக் கொண்டாள்.

“தெரியலை.எனக்கு என்ன சொல்றது னு தெரியலை. நிஜமா என் மேல இவ்வளவு பாசம் வைக்க இத்தனை தூரம் பார்த்துக்க ஒருத்தன் வருவான்னு எனக்கு தெரியாது. உலகத்தையே ஜெயிச்ச மாதிரி இருக்கு. “என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

“எனக்கும் தெரியலையே …ஒரு வெட்டிப்பயனை இவ்வளவு தூரம் பொறுப்பா மாத்த ஒரு தேவதை வருவாள்னு எனக்கும் தெரியலையே … இதோ வந்துட்டா என்னை மாத்திட்டா… நானும் மாறிட்டேன்… “என்றான் சிரிப்புடன்.

“ம்ப்ச் நீ வெட்டிப்பையன் எல்லாம் இல்லை சமத்துப்பையன்…”

“அப்படியா… அப்போ சமத்துப்பையனுக்கு தேவையானதை கொடுத்துட்டு போங்க பார்க்கலாம்…”என்று கன்னத்தை காட்டிட  நாணமாய் புன்னகைத்தவளோ  இதழ்களில் முத்தமிட்டு சிகை கோதினாள்.

அவளின் செய்கையில் விழி விரித்தவனோ இடையோடு அணைத்துக் கொள்ள இதழொற்றல் நீண்டு கொண்டே சென்றது.

சற்று நேரத்தில் விலகியவள்  ,”தாங்க் யூ”

“தாங்க் யூ  இல்ல லவ் யூ… சொல்லு பார்ப்போம்…”என்று ரசித்து சிரித்தான்.

முன் சிகையை கலைத்து விட்டு,” வீட்டுக்கு போகலாம்” என்று வெளியே செல்ல மனைவியின் பின்னோடே சென்றான் சக்தி.

“அது வந்து நான்… “

“ம்ஹூம் இனி எதுவும் வந்து போய் இல்லை… இனிமே இந்த வீட்டுக்கு குடி வர்றது மட்டும் தான் நம்ம அடுத்த வேலையே… டீச்சர் போடுற சுக்குகாபியுடன் மிளகாய் பஜ்ஜியை டேஸ்ட் பண்ணிட்டு மழையை ரசிச்சுக்கிட்டு… அப்புறம் எனக்கு தெரியாம நான் வச்ச மிச்ச காபியை எடுத்து குடிக்கிற அழகை மறைந்திருந்து ரசிக்கிற நிமிஷம் எல்லாம் வேணும் கிடைக்குமா ??”என்றான் ஏகாந்தமாக.

“எல்லாம் கிடைக்கும்… “என்றாள். இதை எப்படி சொல்வது என்று அவள் நினைத்திருக்க அவனே மலர் இருந்த வீட்டிற்கு வந்துவிடலாம் என்று கூற நிறைவாய் உணர்ந்தாள் பனிமலர்.

நாட்கள் சிறகின்றி பறந்தது இந்த இளம் தம்பதியரைப் போல.